Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் அலுக்கோசுகளின் தலைமையில் நடத்த முனைந்த கும்மமேளம்

அலுக்கோசுகளின் தலைமையில் நடத்த முனைந்த கும்மமேளம்

  • PDF

புலிகளின் கைதுக்கான காரணமும், இதை எதிர்த்து போராடுவதற்கான முரண்பாடு, ஜனநாயக விரோதத் தன்மை கொண்டவை. இதை புலிப் பசை கொண்டு யாராலும் ஒட்ட வைக்கமுடியாது.

 

 

மந்தைகளாக வாழும் மக்களையே தமது புல்லுருவித்தனத்துக்கு ஏற்ப எமாற்றி, அலுக்கோசுகள் நடத்த முனைந்தது ஒரு விலாசப் போராட்டம், அதன் கருவிலேயே கருகி மடிந்தது. புலிகள் பாரிசில் நடத்துகின்ற தொடர்ச்சியான குற்றங்களுக்காக கைதானதைத் தொடர்ந்து, அந்த செயல்களை நியாயப்படுத்த புலிகள் முனைந்தனர். இதை மூடிமறைத்தபடி பொலிஸ் அனுமதி பெற்ற ஒரு சட்டப்படியான போராட்டம், பின்னால் தடை செய்யப்பட்டது. போராடுவதற்காக வழங்கப்பட்ட இந்த ஜனநாயக உரிமையை கூட, சட்டவிரோதமாக்கப்பட்டதன் விளைவே தடையாக மாறியது. எல்லாவற்றையும் சிறுபிள்ளைத்தனமாகவே புலிமயமாக்கி கேவலப்படுத்தப்பட்டது. இப்படி தமது தூக்கு தண்டனைக்காக தமது கயிற்றை தூக்கிக் கொண்டு திரிந்தவர்கள், தமது சொந்த பிணத்தையும் காவிக்கொண்டு ஊர்வலம் செல்லவைத்தது.

 

தமிழ் மக்களை மந்தைகளாக மாற்றி, அவர்களை ஏமாற்றி புலுடாவிட்டு அரங்கேற்றும் அலுகோசுத்தனங்களை, பிரஞ்சு அரசின் சட்டப்படியான போராட்ட அரங்கிலும் புலிகள் நகைச்சுவையாகவே அரங்கேற்ற முனைந்தனர். இதன் விளைவு இது போன்ற எதிர்கால முயற்சிகள் அனைத்துக்கும் வேட்டு வைத்துவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த போராட்டம் தடை செய்யப்பட்ட நிலையில், அதை கைவிடுவதாக முதலில் அறிவித்தவர்கள், பின் சட்டவிரோதமாக நடத்தபோவதாக தட்டுத்தடுமாறி கூறியவர்கள், அதையும் கூட செய்யமுடியாது அதை சொந்த தூக்கில் மாட்டினர்.

 

சுய சிந்தனையற்ற மந்தைகள் தாம், ஏன் எதற்காக போராடுகின்றோம் என்று தெரியாத ஒரு நிலையில் சட்டவிரோத ஊர்வலத்தை நோக்கிச் சென்றவர்களை, பொலிசார் திருப்பி அனுப்பிய போது அமைதியான மந்தையாகவே மீண்டனர். சிலர் வேறு ஒரு இடத்தில் கூடிய போதும், போராட்டத்தை அத்துமீற முடியாது, தடைசெய்யப்பட்ட அதே சட்ட நிலைக்குள் நின்று கொண்டனர். இப்படி சட்டவிரோத போராட்டத்துக்கு அழைத்துச் சென்றவர்கள் அதை அத்துமீறாது, மீண்டும் அலுக்கோசுகளால் காட்டிக்கொடுக்கப்பட்டது.

 

தனிப்பட்ட மனிதர்கள் மீதான சட்டவிரோத செயலுக்காக கைது செய்யப்பட்டவர்களின் குற்றத்தை சரி என்று நியாயப்படுத்த கூடிய மந்தைகளுக்கு, தாம் எதற்காக கூடியுள்ளோம் என்பது கூட உள்ளடக்க ரீதியாக தெரியாது என்பது தான் இதில் வேடிக்கை.

 

இதில் பத்திரிகையாளர் சந்திப்பு அதை விடக் கேவலம். தமிழிலேயே தமது பிரச்சனை என்ன என்று சொல்லத் தெரியாது கையெழுத்து வாங்கும் கிளிப்பிள்ளை அலுக்கோசுகள், பிரஞ்சு மக்களுக்கு எதைத் தான் விளங்கப்படுத்த முடியும்? குற்றச்சாட்டுகள் புலிகளின் அரசியலுடன் பின்னிப்பிணைந்தவை. பாதிக்கப்பட்டவர்கள் சட்டப்படியாக நீதியை கோரும் உரிமையை, எப்படி எந்த வழியால் அலுக்கோசுகளால் தர்க்கிக்க முடியும். பேரினவாதம் தமிழ் மக்களுக்கு இழைக்கும் கொடுமைகளை காட்டி, புலிகள் இங்கு அடாவடித்தனத்தில் செயல்படுவதை எப்படி தான் நியாயப்படுத்த முடியும். இப்படி தப்புத்தப்பாகவே ஒரு போராட்டத்தை இழிவுபடுத்தி வழி நடத்துவது, ஐரோப்பிய சமூகம் புலிப் பாசிசத்தின் மறுபக்கத்தில் உள்ள தார்மீக உண்மையை தேடும் ஒரு புதிய நிலையை உருவாக்கியுள்ளது.

 

பாரிசில் புலிகளின் கைது ஏற்படுத்திய தாக்கத்தைவிடவும், இந்த வீங்கி வெம்பிய அலுகோசுகளின் தலைமையில் நடத்த முனைந்த போராட்டம், புலிகளுக்கு மிகப் பெரிய பாரிய பின்னடைவாகும். அனுமதி பெற்ற சட்ட வரம்பைக் கூட புரியாதவர்கள், அனைத்தையும் சட்டவிரோhதமாகவே தட்டி சுருட்டி வாழ்பவர்களால், ஒரு நாளும் மக்களுக்காக ஒரு போராட்டத்தை வழிநடத்தவே முடியாது.

 

புலிகள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் கைதுக்கான அதிகாரத்தை கொண்டிருந்தவர்கள், சட்ட நுணுக்கத்துடன் அதன் சட்ட எல்லையின் அடிப்படையில் இதை அணுகியிருந்தனர். கைது செய்யப்பட்டவர்கள் இயங்கியதாக கூறிய சட்டபூர்வமான அமைப்பை, அவர்கள் தடைசெய்யாதது மட்டுமின்றி அதை இயங்கவும் கூட அனுமதித்து இருந்தனர். இந்த சட்ட எல்லையின் விரிந்த ஜனநாயகத்தைக் கூட புரிந்துகொண்டு அதை வழிநடத்த தெரியாத அலுக்கோசுகள், அனைத்தையும் சட்டவிரோதமாகவே அணுகினர். திகதி குறிக்கப்பட்ட சட்டப்படியான போராட்டம், சட்டவிரோத செயலால் தடை (இது தவறு என்றால் நட்ட ஈடுகோரி நீதிமன்றம் செல்ல முடியும்) செய்யப்பட்டது. பின் அதை மீறிய போராட்டம் என்ற கோமளித்தனம், ஐரோப்பிய ஜனநாயக உரிமையை பயன்படுத்த தெரியாத முட்டாள்களிள் அலுக்கோசுத்தனமாகவே அரங்கேறியது. இதன் மூலம் பாரிய ஒரு பின்னடைவை நிகழ்காலத்திலும், எதிர்காலத்தில் உருவாக்கும் வண்ணம் இச்செயல்பாடுகள் நடந்தேறியுள்ளது.

 

உண்மையில் இந்த ஊர்வலத்துக்கு வழங்கிய சட்ட அனுமதியைக் கூட, சட்டவிரோத செயலுக்கூடாக சட்ட விரோதமாக்கினர். இதன் மூலம் ஊர்வலத்தை ஆதரித்தவர்கள் வெளியிட்ட சட்டவிரோத தன்மையைக் கூட, தண்டனைக்குள்ளாகும் எல்லைக்குள் தான் இது தடை செயப்பட்டது.

 

ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை எப்படி நடத்துவது என்று தெரியாதவர்கள் ஒருபுறம், அதை வைத்து வர்த்தகம் செய்யும் புல்லுருவிகள் மறுபுறம். மக்களின் விடுதலைப் போராட்டம் என்பது, சிலர் தின்று தீர்க்கும் விவகாரமாகிவிட்டது. தமது சொந்த வக்கிரங்களை வெளிப்படுத்தும் விவகாரமாக்கியதன் விளைவு, மீண்டும் மீண்டும் மக்களின் முகத்தில் ஒங்கி அறைகின்றது.

 

எல்லாம் அந்த ஏகப்பிரதிநிதி என்ற புலிமயமாக்கலுக்குள் சிந்தித்து, அதற்குள் உயிர்பிக்க முனையும் போது, நியாயமான அடிப்படையான போராட்டங்கள் கூட நடத்த முடியாத எல்லைக்குள் தலைகுப்புற வீழ்த்தி விடுகின்றனர். தமிழ் மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் அது பாசிசம் என்னும் தொழுநோய்க்குள்ளாகி, எந்த மருத்துவமும் இன்றி அழுகி நாற்றமெடுகின்றது. அன்றாடம் தமிழ் இனம் தனது மரணத்துள் சிதைகின்றது. ஒரு இனத்தின் தலைவிதி இப்படி குறுகிய வக்கிரம் கொண்ட அலுக்கோசுகளின் துணையுடன், தூக்கு மேடைக்கு இட்டுச் செல்லுகின்றது.

 

பாரிஸ் அலுக்கோசும், அதன் எடுபிடிகளும் பாய் விரித்து நடத்திய நாடகம், பிரஞ்சு தமிழ் சமூகத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கி உள்ளது. பல தமிழ் கடைகள் தாம் விரும்பி பணம் கொடுத்ததாக அவர்கள் நிர்ப்பந்தம் ஊடாக பெற்றுக்கொண்ட கடிதங்கள் முதல், அதன் பின்னால் பல பொது அமைப்புகளின் பெயரை பயன்படுத்தியது வரை எண்ணில் அடங்காதவை. இதன் மூலம் தமிழ் சமூகத்தின் எதிர்கால நடவடிக்கையையே அலுக்கோசுகள் கட்டாயப்படுத்தி நலமடித்துள்ளனர்.

 

இந்த செயல்பாடுகள் பின்னணியில்

 

1. புலிக்கு பணம் கொடுத்தல் சட்டப்படி குற்றம். இது கூட தெரியாதவர்கள் நாங்கள் விரும்பித்தான் பணம் கொடுத்தோம் என்று கையெழுத்து வாங்கியது, அவர்களின் வர்த்தக முயற்சிகளை எதிர் காலத்தில் முடக்குவதாகும்.

 

2. .பணம் கொடுத்தோம் என்று எழுதிக்கொடுத்த ஒருவர், சட்டப்படி அதை வரிக்குள் உள்ளடக்கியிருக்கவில்லை என்றால் கடுமையான வரிப்பிரச்சனைகள் எதிர் கொள்ளவேண்டும்.

 

3. இந்த கைதைத் தொடர்ந்து தமிழ் கடைகள் மேலான திடீர் சோதனைகள் முதல், விசா இல்லாது வேலை செய்த பலர் கைது செய்யப்பட்டனர். இவையெல்லாம் பலவிதமான குற்றசாட்டை புலிகளுடன் வர்த்தக அமைப்பை சம்பந்தப்படுத்த போதுமானது. விரும்பியே பணம் கொடுத்தோம் என்று எழுதிக்கொடுத்தவர்கள், தமது கடையில் விசா அற்றவர்களை வைத்து வேலை செய்வித்தனர் என்றால், அந்தப் பணம் புலிக்கு செல்லுகின்றது என்ற சோடிக்க போதுமான காரணமாகிவிடும். புலிகள் தான் இப்படியான நபர்களை கொண்டு செய்விப்பதாகவும், இலங்கையில் இருந்து ஆட்களை கொண்டு வருவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் ஆச்சரியப்படுதற்கல்ல. அண்மைக்காலமாக உண்டியல் முறை தான் ஆட்களை கடத்த உதவுகின்றது என்ற காரணங்களை முன்வைத்து, அவை தொடர்ச்சியாக முடக்கப்படுவது போன்றதே இவையும்.

 

4. விசாவற்ற, வாழ வழியற்றவர்களின் வயிற்றில், இந்த அலுக்கோசுகள் வீரம் பேசி (எதற்கும் உருப்படாத, செல்லுபடியாகாத கையெழுத்துகளை வாங்கி) மண்ணை அள்ளி போட்டுள்ளனர்.

 

4. பொது அமைப்புகளை வலிந்தும், மறைமுக நிர்ப்பந்தம் கொடுத்தும், அதன் அமைப்பு விதிக்கு மாறாக, இதற்குள் இழுத்துவிட்டதன் மூலம் அவற்றுக்கு இந்த அலுக்கோசுகள் நலமடித்துள்ளனர். அவற்றின் மீதான தடைகள் முதல் சட்ட சிக்கல்கள் வரை இதை சாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழ் மக்களுக்காக செயல்படும் ஒரு சில சுயாதீனமான எஞ்சிய அமைப்புகளையும், அவை செய்த அற்பசொற்ப உதவிகளையும் கூட தடுக்கின்ற வகையில், இங்கும் அங்குமாக ஒரு நெருக்கடி உருவாக்கப்பட்டுள்ளது.

 

5. தடை செய்யப்பட்ட புலிகள் மீதான விடையத்தை எளிய புலிச் சமன்பாடாக்கி அடிவாங்கியதன் மூலம், தமிழ் மக்களின் நியாயமான போராட்டம் கூட காட்டிக் கொடுக்கப்பட்டது. நியாயமான போராட்டத்தைக் கூட மக்கள் ஆதரிக்க முடியாத ஒரு நெருக்கடியை, தமிழ் சமூகத்தின் முன் உருவாக்கியுள்ளனர்.

 

6. இந்த அலுக்கோசுகளின் கோமாளித்தனம் பிரான்சை மட்டுமல்ல, புலம்பெயர் நாடுகள் எங்கும் அவலமாகவே எதிராக பிரதிபலிக்கும்.

 

7. இதன் விளைவுகளை தனிப்பட்ட நபர்கள் அன்றாட வாழ்வின் கூறுகளில் சந்திப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

 

தவறான ஒரு தமிழ் தலைமையால் விடுதலைப் போராட்டம் சிதைக்கப்பட்டு அது சந்திக்கின்ற சுய நெருக்கடியை, அலுக்கோசுகளின் அலுகோசுத்தனம் மேலும் பலமடங்காக்கியுள்ளது. இந்த கோமாளிக் கூத்தின் பின்னான விளைவு தமிழ் மக்களுக்கு எதிரானது. தொடர்ச்சியான பின்விளைவையும், புலம்பெயர் நாடுகளில் ஒரு புதிய நெருக்கடியையும் இது தோற்றுவித்துள்ளது.

பி.இரயாகரன்
10.04.2007 

Last Updated on Saturday, 19 April 2008 06:24