Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

அராஜகம் எந்த தளத்திலும் எப்படியும் அனுமதிக்க முடியாதது.

  • PDF

சில சுயாதீனமான மாற்றுக் கருத்து விவாத இணையத் தளங்களை குழப்பும் வகையில், சில அநாகரிகமான அராஜக செயல்பாடுகள் நடந்துள்ளன. அதில் தமிழரங்க இணையத்தில் இருந்த எனது சில கட்டுரைகளை அப்படியே பிரதி பண்ணி இணைப்பதன் மூலம்,

 அதன் சுயாதீனமான செயல்பாட்டை தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாதவை.

 

எமது சமூகத்தில் சுயாதீனமான விவாத முறைமை அழிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் சிறு கருக்களை கூட அழிக்க நினைப்பது மிகவும் மோசமானது. விவாதத்தளம் எவ்வளவு பின்தங்கியதாகவும், எமது கருத்துக்கு ஏற்புடையதாக இல்லாமலும் கூட இருக்கலாம்;. ஆனால் அறிவின் வளர்ச்சி, குறைந்த பட்சம் சரியாகவோ பிழையாகவோ விவாதிக்கும் பண்பிலும் வாசிக்கும் பண்பிலும் தங்கியுள்ளது.

 

எனது பல கட்டுரைகளை சிலர் இவ் இணையங்களில் உட்புகுத்துவதன் மூலம் அதன் செயல் தளத்தை அழிக்க முனைவது கண்டிக்கத்தக்கது. அதுவும் வேறு ஒருவரின் பெயரில். இவை ஏற்றுக் கொள்ள முடியாதவை. அதுவும் புலிகளை விமர்சிக்கும் எனது கட்டுரைகளை மட்டும் தெரிவு செய்து இப்படி ஒட்டுவது மிக மோசமானது. புலியெதிர்ப்பாளர்களையே நான் கடந்த காலத்தில் அதிகமாக விமர்ச்சித்து வந்துள்ளேன். அந்த அரசியல் பதத்தையே நான் தான் முதன் முதலில் பயன்படுத்தியவன் கூட.

 

இந்த நிலையில் பெடியள் ஆராயாது ஒரு குற்றச்சாட்டை என் மீது அள்ளிக் கொட்டியுள்ளனர். எனது இணையத் தளத்தில் இந்த விடையத்தை ஆராயாது, அதை என்மீது குற்றச்சாட்டாக சுமத்த முனைவது அபத்தமானது. உள்ளடகத்தை சரியாக கவனிக்கத் தவறியதன் விளைவு அது. குறித்த இந்த இறுதிக் கட்டுரை 25.6.2005 இணையத்தில் போடப்பட்டது. அதில் சித்திரவதை முகாமில் இருந்து தப்பிய தூக்கு மேடைக் கைதியின் நினைவுகள் அழிவதில்லை|| என்ற இரயாகரன் எழுதி வெளிவராத நூலில் இருந்து, சமகால முக்கியத்துவம் கருதி இப்பகுதி தரப்படுகின்றன|| என நானே எழுதி வெளியிட்;டுள்ளேன்;. இந்த வரியை கொண்டே, இணையத்தில் ஒட்டுபவர் எழுதியதாக கருதி பெடியள் என் மீது குற்றம் சாட்டி தூற்ற முனைவது அபத்தம். கொஞ்சம் எனது இணையத்தில் கட்டுரையின் அடிப்பகுதி வரை சென்று பார்த்திருக்கலாம்.

 

இப்படி தவறான பெயரில் ஒட்டுபவரை கண்டுபிடித்ததாக கூறி அதை அவசரமாக இணையத்தில போட்டது மிகவம் அபத்தமானவை. இப்படி கடந்த காலத்தில் பல கொலைகள் கூட நடந்துள்ளது. ஒரு தவறான அனுமானத்தின் பெயரில் கூட பல கொலைகளை எமது தேசியம் போட்டு தள்ளியுள்ளது. நிதானமாக விடையத்தை அணுகி இதை பரிசீலிக்க முனைவது நல்லது.

 

சிறியளவில் கூட இந்த மாதிரியான விவாதங்களை நான் மனப்பூர்வமாகவே வரவேற்கின்றோன். அதேநேரம், அதில் கலந்து கொள்வதை நான் தவிர்த்து வந்துள்ளேன். நாங்கள் அங்கு விவாதிக்கமுற்பட்டால், புதிதாக சிந்திக்கத் தொடங்குபவர்களின் சுயாதீன வளர்ச்சியே கணிசமாக பாதிக்கும் என்பதால்; நாம் வாசிப்பதற்கு அப்பால் பங்கு பற்றுவதில்லை. இது பற்றி மற்றைய இணைய ஆசிரியரான சிறிரங்கனுக்கு குறிப்பிட்டு முன்பே கடிதம் எழுதியுள்ளேன்.

 

இந்த நிலையில் எனது இணையத்தில் இருந்து எடுத்து மற்றைய இணையத்தில் ஒட்டும் நபரிடம் ஒரு பகிரங்க வேண்டுகோளை விடுகின்றேன். தயவு செய்து அப்படிச் செய்யாதீர்கள். உங்களை நீங்கள் சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டுகின்றேன். நீங்கள் கடந்தகாலத்தில் இந்த போராட்டத்தின் அராஜகத்தால் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம்;. அதை இப்படி எதிர் கொள்வது ஆரோக்கியமானது அல்ல. பழிக்குபழி என்றோ அல்லது இதை எல்லோரும் வாசிக்க வேண்டும் என்றோ நீங்கள் விரும்பினால், தயவு செய்து இந்த வழியை கையாள வேண்டாம். அதில் எனது கட்டுரையை பாவிக்க வேண்டாம். அவர்களுடன் விவாதிக்கும் ஒரு நல்ல ஆரோக்கியமான நட்புறவான முறையைக் கையாளவும்.

 

மாறாக இந்த இணைப்பை அவர்களுக்கு நட்புறவுடன் அறிமுகப்படுத்தலாம்;. அல்லது மாற்று வழிகளில் ஜனநாயகபூர்வமாக இதை அறிமுகம் செய்யலாம்;. தயவு செய்து தொடர்ந்தும் இப்படி இயங்காதீர்கள். இந்த வழி எமது தேசிய விடுதலையில் ஆயுதம் ஏந்தியோரின் மக்கள் விரோத வழியாகும்.

 

இப்படி இயங்குவது கூட ஜனநாயக விரோதமானதே. தனிமனிதர்கள் செய்யும் செயல்கள் ஒரு சமூகத்தைக் கூட அழித்துவிடும்;. தனிமனிதன் சமூக போக்கில் அவர்களை வென்று எடுக்கும் வகையில், உங்கள் செயல்களை மாற்ற முனையவும்.

 

இதற்கான எனது கடுமையான உழைப்பும், வாழ்வே இதுவாகி விட்ட நிலையில், தனிமனிதனாக போராடும் எனது முயற்சியை சிதைக்கும் வகையில் இவை உள்ளது. இதற்கு பதிலளிக்கவும், நான் எழுத எடுத்துக் கொண்ட நேரம் முதல் இந்த சிறுபிள்ளைத்தனமான செயல்கள் மிகவும் மனச்சோர்வை எனக்கு தரக் கூடியதாக உள்ளது.

 

தயவு செய்து மக்களை நேசியுங்கள். அவர்களில் இருந்து உலகத்தை புரிந்து கொள்ள முனையுங்கள்;. எங்களுக்கு பிடிக்காதவையை அழித்துவிடும், எமது தமிழ் தேசிய மரபு சார்ந்து வக்கரித்துள்ள அழித்தொழிப்பு கொள்கை அவசியமற்றவை.



பெயர் மாற்றக் கும்பல் பிடிபட்டது.


ஸ்ரீரங்கனின் பதிவில் பெடியன்களின் பெயரைப் பயன்படுத்தி பின்னூட்டமிடப்படுகிறது. அது தீவிர புலியெதிர்ப்பு வாதமாக இருக்கிறது. எதையும் எழுதிவிட்டுப்போங்கள். ஆனால் ஏன் எமது பெயரைப் பயன்படுத்திப் பின்னூட்டமிட வேண்டும்? இதிலிருந்து ஒன்று தெளிவாகப் புலனாகிறது. அதை சகல வலைப்பதிவருக்கும் தெரிவிக்கிறோம்.
அப்பின்னூட்டம் வெளிவராத இராயகரனின் புத்தகத்திலிருந்து எடுத்துப்போடப்படுவதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே அப்பின்னூட்டம் இராயகரன் கும்பலினால் அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்களினால் தான் போடப்பட்டிருக்க வேண்டும். இந்த கேடு கெட்ட செயலைச் செய்வது புலியெதிப்பு என்பதை மட்டுமே மனப்பாடமாகக்கொண்ட ஒரு கும்பல் என்பது தெளிவு. எம் பதிவிலும் அவர்கள் பின்னூட்டங்கள் இட்டுள்ளார்கள். இப்போது எம் பெயரைப் பாவித்து இப்பின்னூட்டம் ஸ்ரீரங்கனின் பதிவில் போடப்பட்டுள்ளது.


டோண்டு மற்றும் சிலரின் பெயர்களில் பின்னூட்டமிட்டவர்களும் இவர்களே என நாம் சந்தேகிக்கும் நிலையுள்ளது. புலியெதிர்ப்பை மட்டுமே கருத்தாக்கமாகக் கொண்ட மனநோய் பிடித்த அக்கும்பலே டோண்டு போன்றவர்களின் பெயர்களிலும் பின்னூட்டமிட்டு இவ்வளவு மன உளைச்சலுக்கும் காரணமாயிருந்தது என்பதை நாம் புரிந்து கொண்டுள்ளோம். மற்ற வலைப்பதிவாளர்களும் யார் பிறர் பெயரில் பின்னூட்டமிடும் அந்த அநாமத்து என்பதை இனங்கண்டுகொள்ள ஸ்ரீரங்கனின் பதிவில் பெடியன்களின் பெயரில் பின்னூட்டமிட்டுள்ளதை வைத்துப் புரிந்து கொள்ள முடியும்.


பெடியன்கள் பதிவில் எழுதும் நாம் அந்தப்பெயர்களில் எந்த வலைப்பதிவிலும் பின்னூட்டமிடுவதில்லையென்பதை ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளோம். ஆகவே பெடியன்கள் பெயரில் எந்தப் பதிவில் பின்னூட்டமிடப்பட்டாலும் அது போலியானதே.இராயகரனுடனோ அவர் சார்ந்த குழுவுடனோ அறிமுகமிருப்பவர்கள், (ஸ்ரீரங்கனுக்கு இருக்குமென்று நினைக்கிறோம்.) இந்தப் பின்னூட்ட விசயத்தைத் தெளிவுபடுத்தலாம். வெளிவராத ஒரு புத்தகத்திலிருந்து பத்திகள் பின்னூட்டமாக இடப்படுகிறதென்றால் எப்படி கருத முடியும்?
இதற்குச் சரியான தீர்வு கிடைக்காத வரை இணையத்தில் புலியெதிர்ப்பைச் செய்யும் குறிப்பிட்ட ஒரு கும்பலின் (அவர்களின் மொழியில் சொன்னால்தான் புரியும்) வேலைதான் இந்த பெயர் மாறாட்டம் என்றுதான் நாம் (மற்ற வலைப்பதிவாளர்களும்) நினைக்க வேண்டிய நிலையிலுள்ளோம். எனவே முகமூடி கிழிந்தபின்னும் இந்த வேலை செய்யவேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
-உம்மாண்டி-

 

(இக்கட்டுரையின் அடியில் காணப்படும் குற்றச்சாட்டுக்கான பதிலாகவும் வேண்டுகோளாகவும் தொடர்புடையவர்கள் கவனத்துக்கு இதனைக் கொண்டு வருகின்றோம். அடிப்பகுதியையும் வாசிப்பது பதிலைப் புரிந்து கொள்ள உதவும்)

பி.இரயாகரன்
27.6.2005

 

Last Updated on Friday, 18 April 2008 19:33