Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் அன்னிய தலையீடு எதார்த்தமாகின்றது

அன்னிய தலையீடு எதார்த்தமாகின்றது

  • PDF

இலங்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒரு அன்னிய தலையீட்டை நோக்கி வேகமாக முன்னேறுகின்றது. ஒரு தேசத்தின் இறைமை மேலும் இழிந்து போவதை இது துரிதமாக்கும். இனப்பிரச்சனை இருப்பதை மறுப்பவர்களும், இருப்பதை ஏற்றுக்கொண்டு ஒரு அரசியல் தீர்வுக்கு வரமறுப்பவர்கள் என, இரு தரப்பினரினதும் செயற்பாடுகள் தான்,

அன்னிய தலையீட்டுக்கான உந்துவிசையாக உள்ளது. இலங்கை மக்கள் மேலான புதிய ஒரு ஒடுக்குமுறையுடன் கூடிய அன்னீய தலையீட்டுக்கு, இவை கால் கோளாகின்றது.

 

இந்த அன்னிய தலையீடு இனப்பிரச்சனை உண்டு என்பதை ஏற்றுக்கொண்டு, அதற்கு ஒரு தீர்வையும் உடனடியாக கோருகின்றது. அதேநேரம் இதன் அடிப்படையில் சமாதானம் அல்ல. இராணுவ வழிகளில் புலியை அழிப்பதையும் அடிப்படையாகக் கொண்ட உள்ளடகத்தில் தான் நடைபெறுகின்றது. இதில் இருந்து புலிகள் தப்பிப் பிழைக்க முடியாது. இந்த நிலைமையே இலங்கை தொடர்பான இன்றைய சர்வதேச நிகழ்ச்சியாக, ஒரு அழுத்தமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

 

புலிகள் இன்றைய வடிவில் தொடர்ந்தும் இருக்கமுடியாது. புலியின் அழிவு அரசியல் மற்றும் இராணுவ வழிகளில், தீர்க்கமானதாக மாறுகின்றது. மக்களில் இருந்து அன்னியமான மக்கள் விரோத புலிச் செயற்பாடுகளே அவர்களை அழித்துவிடும். அதாவது அன்னிய தலையீட்டுக்கு முன்னால் முற்றாக அவர்களை துடைத்தெறிந்துவிடும்.

 

பொதுவான இன்றைய இந்த நிலைமையை மாற்றி அமைக்க கூடிய நிலையில் மக்கள் இல்லை. மக்கள் தமது சொந்த தலையீட்டை நடத்தக் கூடிய எந்த ஒரு அரசியல் செயற்பாடும் இன்று கிடையாது. மக்களுக்கு எதிரான மக்கள் விரோத செய்லபாட்டுக் களமே வீங்கி வெம்புகின்றது. இந்த நிலையில் மக்கள் இந்த யுத்த அவலத்தில் இருந்து தப்பிப் பிழைக்க, அன்னீய தலையீட்டை ஆதரிக்கின்ற ஒரு கருத்து நிலையையே, அவர்கள் மாற்றுத் தீர்வாக கருதுகின்றனர். இதை திட்டமிட்டு அன்னிய சக்திகள் தமது எடுபிடிகள் மூலம் உருவாக்கியும் வருகின்றனர்.

 

புலித் தலைவர் புலம்பிக் காட்டும் பேரினவாதம்

 

புலித் தலைவர் பிரபாகரன் தனது 'மாவீரர்" செய்தியில், பேரினவாதத்தின் கடந்தகால நிகழ்கால போக்கை பற்றி குறிப்பிடுகின்றார். இலங்கை வரலாற்றில் இதை மீள மீள சொல்லி அரசியல் செய்கின்ற தொடர்ச்சியில், இது மறுபடியம் சொல்லப்படுகின்றது. இதை இன்று மீளச் சொல்வதன் மூலம் நிலைமையை விளக்கிவிட முடியாது.

 

பேரினவாதத்தின் கடந்தகால நிகழ்கால போக்கை தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் நன்கு அறிவர். ஏன் புலிகள் தமது எதிரியாக கருதும், அரசுடன் உள்ள கூலிக் குழுக்களும் இதை நன்கு அறிவர். சிங்கள பேரினவாதிகளும் கூட இதை கொள்கை அளவில் ஒத்துக்கொள்கின்றனர். புலித் தலைவர் அதை மீளச் சொல்லுகின்றார் என்றால், இது புலிகளின் அரசியல் அனாதையாகிய வங்குரோத்தின் மொத்த விளைவாகும்.

 

நேர்மையாக மக்களுக்கு சொல்லக் கூடிய எந்தச் செய்தியும் புலிகளிடம் கிடையாது. ஒரு அரசியல் பேச்சு வார்த்தையை வெற்றிகரமாக நடத்தமுடியாத நிலையில், பேரினவாதத்தை பழையபாணியில் மீள ஓப்புவித்து ஒப்பு பாடவேண்டிய நிலை உருவாகின்றது. அமைதி சமாதானம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றிய, கடந்த ஜந்து வருடத்தில் பேரினவாதம் பேரினவாதமாகவே இருக்க, அதை நடைமுறையில் அம்பலப்படுத்த முடியாத நிலை புலிக்கு உருவானது.

 

பேரினவாதிகள் தமிழ் மக்களுக்கு பிரச்சனை உண்டு, அது தீர்க்கப்பட வேண்டும் என்று கூறிய படி, அதை தீர்க்காமலேயே புலிகளை முழுமையாக தனிமைப்படுத்தி அம்பலப்படுத்தியுள்ளனர். வெற்றிகரமான இந்த பேரினவாதத்தின் வெற்றிக்கு முழுப்பொறுப்பும் புலிகளைச் சாரும். நிரந்தரமான ஒரு சமாதான தீர்வை கோருவதில் இருந்தும் புலிகள் தனிமைப்பட்டுள்ள நிலையில், பேரினவாதம் புலிக்கு வெளியில் தீர்வை வைக்கவுள்ளது. அவர்கள் முன்வைக்கும் இந்த தீர்வு மூலம், புலிகளை தனிமைப்படுத்தும் அடுத்தகட்ட நகர்வை நோக்கி பேரினவாதம் வேகமாக வெற்றிகரமாக நகருகின்றது.

 

இப்படி புலிகள் குறுகிக் கூனி வருகின்றனர். புலிகளோ பேச்சுவார்த்தை என்ற பெயரில், தனது பாசிச மாபியாத்தனத்தில் கவனத்தை குவித்து, அதற்குள் தான் அனைத்தையும் மையப்படுத்தினர். 1995 இல் சந்திரிகா அரசு நிரந்தர தீர்வு பற்றி பேசக் கோரிய போதும், புலிகள் அன்று முதல் அதை நிராகரித்தே வந்தனர். இப்படி தமது பாசிச மாபியாத்தனத்தை பேச்சுவார்த்தை மேசையில் வைத்து, அதில் இருந்து தனிமைப்பட்ட நிலையில் கடந்தகாலம் பற்றி மீளப் புலம்பவது புலிகளின் வரலாறாகும். ஒரு இனப்பிரச்சனை உண்டு என்பதை சொல்லளவில் வைத்துக்கொண்டு, பாசிச மாபியாத்தனத்தை பேரப் பொருளாக்கிய போது, பேரினவாதத்துக்கு அவை சாதகமான அரசியல் அம்சமாகியது.

 

மக்கள் இயல்பாக வெறுத்து ஒதுக்கும் பாசிச மாபியாத்தனத்தை ஆதாரமாகக் கொண்டு, புலிகளை தமிழ் மக்கள் மத்தியில் இருந்து பேரினவாதம் அன்னியப்படுத்தினர். தமிழ் மக்களுக்கும் புலிக்கும் உள்ள உறவில், இந்த பாசிச மாபியாத்தனம் தீர்க்கமான ஒரு முரண்பாட்டை நிரந்தரமாகிவிட்டது. தமிழ் மக்களின் முன் புலிகள் நீட்டியுள்ள துப்பாக்கிகள், மக்களை உறைநிலையில் ஜடமாக்கிய போதும், உணர்வு ரீதியாக புலிக்கு எதிரான ஒரு மாற்றை மக்கள் எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். இந்த நிலையை பேரினவாதம் புலியைக் கொண்டே வெற்றிகரமாக தயாரித்துவிட்டது. இவை புகைந்து கொண்டு இருக்கின்றது. இவை புலிகளையே எரிக்கும் ஒரு காட்டுத் தீயாக, மற்றொரு பிற்போக்கின் பின்னால் மக்கள் சென்றுவிடும் உணர்வுள்ள உறை நிலையிலும், நிலைமை கனன்று கொண்டு இருக்கின்றது.

 

இதை இன்று தடுப்பது இனபிரச்சனைக்கான ஒரு தீர்வு தான். இனப்பிரச்சனைக்கு பேரினவாதம் தீர்வு வைப்பதன் மூலம், சர்வதேசம் வரையிலான எதிர்வினை உண்டு. இந்த தயாரிப்பையே பேரினவாதம் செய்கின்றது. இந்த வகையில் அடுத்த கட்டத்தை நோக்கி புலிகள் இன்றி நிரந்தரமான தீர்வை வைக்க முனைகின்றது. நிரந்தரமான அரசியல் தீர்வுக்கு எதிரான புலிகளின், வாலை இதன் மூலம் ஓட்ட நறுக்கவுள்ளது. நிரந்தர தீர்வு தமிழ் மக்களின் பிரச்சனையை தீhப்பதற்காக அல்ல, புலியை இல்லாது ஒழிப்பதற்காகும். அதற்கு தீர்வு தான் நெம்புகோல். இந்த நெம்புகோலை பேரினவாதத்துக்கு எதிராக பயன்படுத்தவும் முடியும். ஆனால் அதை புலிகள் நிரந்தரமாக பேரினவாத அரசிடம் தாரைவார்த்து விட்டு முன்னால் நின்ற தீர்வை நோக்கி நகர்வதை தடுத்து நிறுத்த தமது முதுகை முன் நிறுத்துகின்றனர்.

 

புலிக்கும் அரசுக்கும் இடையில் அரசியல் பிரச்சனை என்ற வகையில், இன முரண்பாடு மையமானது. இந்த விடையத்தை பற்றி பேசாத, பேச மறுக்கின்ற பேச்சுவார்த்தையையே வலிந்து புலிகள் இட்டுச்சென்றனர். இதற்குள் தான் அனைவரினதும் எதிர்கால அரசியலும் தீர்மானமாகின்றது. யார் இந்த பிரச்சனையை நேர்மையாக தீர்க்க முனைகின்றனரோ, அவர்கள் வெற்றிகரமான பேச்சுவார்த்தையை நடத்த முடியும். இதை புலிகள் எப்போதும் மறுத்து வந்ததுடன், இதற்கு நேர்ரெதிரான நிலையில் மக்களின் முதுகில் குத்தி பிழைக்க முனைகின்றனர். பேரினவாதம் புலிகளைப் பயன்படுத்தி, புலியின் கோரிக்கைக்குள் தன்னை நிலைப்படுத்தி, இதில் இருந்து சாதாரணமான மக்கள் முன் அம்பலமாகாது விலகி நிற்கின்றது. புலிகளின் பாசிச மாபியாக் கோரிக்கையைக் கொண்டே, அவாகளை தமிழ் மக்கள் மத்தியில் இருந்து அம்பலமாக்குகின்றனர்.

 

புலிகள் இதில் இருந்து தப்ப யுத்தத்தை நோக்கி ஓடுகினார். இந்த நிலையிலும், இன்றும் இந்த பேரினவாதம் அம்பலப்படாத வகையில் தொடர்ந்து இருப்பது தான் அதன் சூக்குமம். இதற்கான முழுப்பொறுப்பும் புலிகளைச் சாரும். ஒரு யுத்தத்தின் நியாயத்தன்மை என்பது, நாம் நியாயமாக நடப்பதில் தங்கியுள்ளது. நியாயமற்ற வகையில் நாம் நடந்து கொண்ட, ஒரு நியாயமான யுத்தத்தின் அவசியத்தை வலியுறுத்த முடியாது.

 

ஒரு யுத்தத்தின் நியாயத்தை யுத்த பிரதேசத்தில் வாழும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எதிராக யுத்தம் செய்பவன் பக்கத்தில் உள்ள மக்கள், தம் பக்கத்தில் யுத்தத்தின் நியாயமற்ற தன்மையை இனம் கண்டு அதற்கு எதிராக இருக்க வேண்டும். இதில் எதையும் புலியால் ஏற்படுத்த முடியாது.

 

தமிழ்மக்கள் அமைதியான ஒரு நிரந்தரமான தீர்வை நோக்கிய சமாதானம் என்பதே அவர்களின் மையமான கோரிக்கை. இதை புலிகள் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றனர். இதைப் பேசவே மறுக்கின்றனர். பேரினவாதத்தை பேசி அம்பலப்படுத்த முடியாத வரை, அது பேரினவாதத்துக்கு தொடர்ச்சியாகவே சாதகமானது. புலிகள் இன்றி ஒரு நிரந்தர தீர்வை அரசு நிறை செய்ய முனைவதன் மூலம், தமிழ் மக்களின் பிரச்சனையில் தீர்க்கமான ஒரு அரசியல் அதிரடி மாற்றத்தை உருவாக்க முனைகின்றது. இதை அரசு வெற்றிகரமாக வைத்தால், புலியின் அழிவு நிர்ணயமாவது தொடங்கிவிடும்.

 

எந்தத் தீர்வையும் இணங்க வைக்கும் புலிகள்

 

இதை பேரினவாதம் செய்கின்றனரா? புலிகள் செய்கின்றனரா? புலிகளைச் சார்ந்து நின்று பேரினவாதம் செய்கின்றது என்பதே உண்மை. பேரினவாதிகள் அனைவரும் தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தோ, அல்லது தீர்வை முன்வைத்தோ அரசியல் செய்தது கிடையாது. கட்சி மற்றும் அரசியல் செயற்பாட்டில் இதை செய்யத் தவறுகின்ற போது, தமது கட்சிக் கொள்கையில் இதை முன்வைக்காத போது, அவர்கள் அனைவரும் பேரினவாதிகள் தான். இது எதார்த்தமான உண்மை.

 

புலிகள் ஒரு பாசிச மாபியா இயக்கமாக இருக்கின்றார்கள் என்பதால், இது பொய்யாகிவிடாது. புலிகள் சுயநலம் கொண்ட மக்கள் விரோதிகள் என்பதால் பேரினவாதம் அற்றதாகிவிடாது. பேரினவாதம் தனது கட்சி திட்டங்களில், தமிழ் மக்களின் பிரச்சனைக்குரிய ஒரு தீர்வை முன்வைப்பதில்லை. ஆனால் இனவாத திட்டத்தை கட்சியில் வைத்து, அதை அரசியலாகவே செய்து வருகின்றனர். இந்த வகையில் கடந்த 60 வருட வரலாற்றில் அமைதி மற்றும் யுத்தகாலத்திலும் எந்த தீர்வையும் அவர்கள் நேர்மையாக முன்வைத்தது கிடையாது.

 

இந்த உண்மையை புரிந்துகொண்ட எம் சமூகத்தின் முன், புலித்தலைவர் மீண்டும் அதை ஓப்புக்கு புலம்பி, அ, ஆ அரிவரிப் பாடம் என்று தொடங்குவது வேடிக்கையானது. துப்பாக்கி மேல் சயனித்து கிடந்த அவர், இப்ப தான் அரசியல் படிக்கின்றாரோ தெரியவில்லை. உண்மையில் இதை தலையில் தூக்கி அப்பிக் வைத்து கொண்டாடும் போது, தமிழ்மக்களின் அரசியலற்ற அறிவற்ற மலட்டுத் தன்மையை இது பறைசாற்றுகின்றது. மறுபக்கத்தில் தமிழ் மக்களுக்கு இதை நினைவூட்ட வேண்டிய துப்பாக்கியமான நிலையில், தமிழ் மக்கள் வேறு ஒரு உலகத்திலா வாழ்கின்றனர்!.

 

இப்படி நாம் சொல்வதால் தமிழ் மக்களுக்கு இந்த உண்மை தெரியாது என்பதல்ல. தெரிந்து என்னதான் செய்வது. அதற்காக புலிகளின் பின்னால் ஒடிவிடவும் மாட்டார்கள். புலிகள் ஒரு மக்கள் இயக்கமாக இருந்தால், புலிக்கு உள்ள அதே ஜனநாயகம் மக்களுக்கும் இருக்க வேண்டும். மக்கள் எதைப்பற்றியும் சுதந்திரமாக விவாதிக்க, பங்கேற்க, தலையிட, மறுக்க உரிமை இருக்கவேண்டும். அது தான் மக்கள் இயக்கம்.

 

இந்த வகையிலும் புலிகள் ஒரு மக்கள் இயக்கமல்ல என்ற வகையில், புலிகளின் துப்பாக்கி முன்னிலையில் மக்களை மந்தைகளாக வைத்துக் கொண்டு, மந்தைக்கு உபதேசம் செய்வதால் மந்தைகள் புலிகளாகிவிடாது. மந்தை மந்தைக் குணத்துடன், அங்குமிங்கும் மந்தையாகத்தான் மேயும்.

 

புலிகளின் பாசிச மாபியா நிலை தான், மக்களை இந்த நிலைக்கு தள்ளியது. இந்த மக்கள், யுத்த சூழலில் யுத்தத்தில் இருந்து, தன்னை முற்றாக ஒதுக்கியே வாழ்கின்றனர். எப்படியும் இதில் இருந்து மீளவே முனைகின்றனர். புலிகள் பலவந்தமாக தம் பின்னால் கொண்டு செல்ல முயன்றாலும் சரி, இராணுவம் தன்னை சார்ந்து வாழக் கோரினாலும் சரி, மக்கள் தம் பாட்டில் தம் பிரச்சனையுடன் இருக்கவே முனைகின்றனர். உதாரணமாக வடக்கில் அன்றாடம் நடக்கும் இன்றைய கொலைகளில் 90 சதவீதமானவை இராணுவமே செய்கின்றது. அன்றைய கொலைகளில் 99 சதவீதமானவை புலிகள் செய்தனர்.

 

மக்களை பொறுத்த வரையில் இதை இட்டு அச்சமோ, பீதியோ கிடையாது. மக்கள் இன்று கொல்லப்படுவர்களை புலிகளாக புலி ஆதரவாளராகவே கருதுகின்றனர். துரதிஸ்டவசமான உண்மை என்ற போதும், மக்களின் நிலை இப்படித்தான் உள்ளது. எனக்கு புலியுடன் தொடர்பு இல்லை என்றால், எனக்கு பிரச்சனையில்லை என்ற வகையில், மக்கள் இதை எதிர் கொள்கின்றனர்.

 

இதே நிலைதான் புலிகள் புலியல்லாதவரை கொன்ற போதும் நிலவியது. இன்று வரை கொல்லுபவன் மாறுகின்ற போது மக்கள் மனநிலையில் மாற்றமில்லை. இந்த மக்கள் தமது பாட்டில் தமது வேலையாக உள்ளனர். இந்த மக்கள் எந்தத் தீர்வையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு உட்பட்டுள்ளனர்.

 

தீர்வும் அன்னிய தலையீடும்

 

சர்வதேச சமூகத்தின் தீவிர தலையீடு, தமிழ் மக்களுக்கான தீர்வுடன் அரங்கேறும். நிரந்தர தீர்வை பேசவோ ஏற்கவோ மறுக்கும் புலிக்கு எதிராகவே, அது அரங்கேறும். புலிகள் நிரந்தர தீர்வை பேச மறுக்கின்ற நிலையில், அரசின் ஒரு தலைப்பட்சமான தீர்வை அன்னிய சக்திகள் உடனடியாக கோருகின்றது.

 

அரசின் தீர்வு அன்னிய தலையீட்டின் நிர்ப்பந்தத்துடன் தான் உருவாகின்றது. இலங்கை அரசு அதை விரும்பி முன்வைக்கவில்லை. இந்தியா உள்ளிட அனைத்து மேற்கத்தைய நாடுகளும், உடனடியாக அரசின் ஒருதலைப்பட்சமான தீர்வை மையப்படுத்தி கடுமையான முடிவுகளை எடுக்கின்றது. கடந்தகால அன்னியர்களின் முயற்சிகளின் அனைத்துத் தொடர்ச்சியான தோல்வியின் பின்னுள்ள சூக்குமம், தீர்வுடன் தொடர்புடையதாகவே உள்ளது.

 

புலிகள் பயங்கரவாத இயக்கமாக தடை செய்த நிலையில், அதை அமுல்படுத்தாத ஒரு நெகிழ்ச்சிப் போக்கை கையாள்விலும் இந்த தீர்வு தான் தடையாகவுள்ளது. தமிழ் மக்கள் வேறு, புலிகள் வேறு என்று அன்னிய சக்திகள் பகிரங்கமாக அரசுக்கு கூறத் தொடங்கியுள்ளது. தமிழ் மக்களையும் புலியையும் நிரந்தரமாக பிரிக்கின்ற வகையில், தீர்வு தான் தீர்க்கமாக பங்காற்றும். இதை ஏகாதிபத்தியம் தெளிவாக தெளிவுபடுத்துகின்றது.

 

இந்த வகையில் தான் தீர்வு நோக்கி பேரினவாத கட்சிகளின் இணைப்பை சர்வதேச சக்திகள் உருவாக்கின. இந்த வகையில் சர்வதேச ரீதியாக தொடர்ச்சியான பல நிர்பந்தத்தை ஏற்படுத்துகின்றது. பேரினவாதத்துக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள், தீர்மானங்கள் அனைத்தும் இதற்குள் உள்ளடங்கியதே.

 

பேரினவாதம் உலகமயமாதல் அமைப்பில் ஒரு அங்கம் என்ற வகையில், அவர்களால் இந்த தீர்வு அரங்கில் விரைவில் வெளிக் கொண்டு வரவுள்ளது. அது புலிகள் அல்லாத வகையில் முன்வைக்கப்படும் போது, புலிகளின் எதிர்காலம் முடிவுக்கு வரும்.

 

இந்த வகையில் புலிகள் அல்லாத தரப்பு உற்சாகம் ஊட்டப்படுகின்றது. ஆனந்தசங்கரி போன்ற மக்கள் விரோதப் பொறுக்கிகளை ஊக்குவிக்க அதை விரிவாக்க பணப் பரிசுகள் அள்ளி வழங்கப்படுகின்றது. மக்களுக்கு எதிராக எங்கும் ஒரு வலைப்பின்னல் கட்டமைக்கப்படுகின்றது.

 

தன்னார்வக் குழுக்கள் மிக வேகமாக பெரும் பணத்துடன் செயற்படுகின்றன. யுத்தத்தை எதிராக நிறுத்தி, மதவாத கிறிஸ்துவ பிரிவுகள் தீவிர பிரச்சாரத்தை செய்கின்றன. எங்கும் எதிலும் ஒரு இறுக்கமான முடிவை நோக்கி நிலைமை நகருகின்றது.

மக்களின் உரிமைகளை மறுத்து, புலிகளின் பாசிச

 மாபியாத்தனத்தை சாதகமாக கொண்டு அனைத்தும் அரங்கேறுகின்றன. இந்த நிலைமையை நாம் புரிந்து எதிர்வினையாற்ற வேண்டிய காலத்தில் நாம் வாழ்கின்றோம்.

பி.இரயாகரன்
03.12.2006

Last Updated on Friday, 18 April 2008 20:56