Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் தரகு வேலையே தேசிய அரசியல் : அணுசக்தி ஒப்பந்ததின் பின்னே இந்தியத் தரகு முதலாளிகளின் நலனும் ஒளிந்திருக்கிறது என்பதைப் புட்டு வைத்துவிட்டார், அமர்சிங்.

தரகு வேலையே தேசிய அரசியல் : அணுசக்தி ஒப்பந்ததின் பின்னே இந்தியத் தரகு முதலாளிகளின் நலனும் ஒளிந்திருக்கிறது என்பதைப் புட்டு வைத்துவிட்டார், அமர்சிங்.

  • PDF

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற உடனேயே மன்மோகன் சிங்கை நாடாளுமன்றத்தில் பலர் கைகுலுக்கிப் பாராட்டித் தள்ளினார்கள். ""டைம்ஸ் நவ்'' ஆங்கிலச் செய்தித் தொலைக்காட்சி ""சிங் இஸ் கிங்'' என்ற தலைப்புப் பாடலை ஆரவாரத்துடன் ஒளிபரப்பியது. சூழ்நிலையின் தாக்கத்தால், தானே ஒரு மிகப்பெரும் தலைவர் என்ற மாயை கூட மன்மோகன் சிங்கிற்குத் தோன்றியிருக்கலாம். ஆனாலும் அனல் பறக்கும் விவாதம் நடந்த இந்த நாடாளுமன்றக் கூத்துக்களுக்குப் பின்னால், அதன் முக்கியமான சூத்திரதாரிகள் இருவர் புன்னகைத்துக் கொண்டிருப்பது மன்மோகன் சிங்கிற்கும், ஏன் எதிர்க்கட்சிகளுக்கும் கூடத் தெரியும்.

 

அவர்கள்தான் அமெரிக்காவால் ஆசீர்வதிக்கப்பட்ட அம்பானிகள்! அண்ணன் முகேஷ் அம்பானியும், தம்பி அனில் அம்பானியும்தான். செத்துப்போன பெரிய அம்பானியின் சுவடுகளில் அரசியலைக் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள். திருபாய் அம்பானி சட்டங்களை ஏமாற்றித் தொழிலை விரிவு படுத்தினார். இந்திரா, ராஜீவ் முதலான தலைவர்களுக்குத் தேர்தல் நிதியை அள்ளிக் கொடுத்து ஆதாயம் அடைந்தார். பத்திரிகைகள் மற்றும் அதிகார வர்க்கத்தை ஊழல்படுத்திக் காரியங்களைச் சாதித்துக் கொண்டார். அன்றாவது திருபாயின் மோச டிகளை ""மோசடிகள்'' என்று கூற முடிந்தது. இன்று அப்படி யாரும் அழைப்பதில்லை என்பதால், இளைய அம்பானிகளின் தொழில் துறை அயோக்கியத்தனங்களுக்கு அளவில்லை.


இந்தியாவை அடிமைப்படுத்தும் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு கொசு கடிப்பதைப் போல சில இடையூறுகள் ஏற்படுவதைக் கண்ட அமெரிக்க அரசும், பன்னாட்டு முதலாளிகளும் அதைத் தீர்த்து வைக்குமாறு அனில் அம்பானியிடம் கட்டளையிட்டனர். அணுசக்தி ஒப்பந்தம் அமுலுக்கு வரும்போது தனியாரும் அணுசக்தி துறையில் நுழையலாம் என்ற நிலை இருப்பதால், தானும் அதில் முதலீடு செய்யலாம் என்று அனில் அம்பானி ஏற்கெனவே திட்டமிட்டிருந்தார். இதனால் அமெரிக்க ஆண்டவர்கள் இட்ட கட்டளையைச் சிரமேற்கொண்டு நிறைவேற்ற அனில் அம்பானி இறங்கினார். காங்கிரசுக் கட்சியுடன் எலியும் பூனையுமாய் இருந்த சமாஜ்வாதி கட்சியிடம் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களைச் சரிக்கட்டினால் ஒப்பந்தம் நிறைவேறுவது உறுதி என்பதால், இக்கட்சியின் பொதுச்செயலரும் இந்திய அரசியலின் மாபெரும் தரகரும் அனில் அம்பானியின் நெருங்கிய நண்பருமான அமர்சிங், அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கினார். அமர்சிங்கிடமும் இந்த வேலையை நேரடியாக முடித்துத் தருமாறு அமெரிக்க அரசு கூறியிருந்தது.


இவையெல்லாம் கிசுகிசு செய்தியில்லை. இம்மாதம் டெல்லியில் அமெரிக்கத் தூதர் அளித்த விருந்தில் அமர்சிங் கலந்து கொண்டதும் அவரை தூதர் பாராட்டியதும் பத்திரிகையில் வெளிவந்த உண்மைச் செய்திகள். அனில் அம்பானியின் விருப்பத்திற்காக, ஒரு அரசியல் கட்சி தனது அரசியல் நிலைப்பாட்டை திடீரென்று மாற்றிக் கொள்ள முடியுமா என்று நீங்கள் கேட்கலாம். மக்களிடம் அரசியல் பேசி, அணிதிரட்டி, வசூல் செய்து கட்சி நடத்துவது எல்லாம் அந்தக்காலம். இப்போது பெரும் நிறுவனங்கள் விளம்பரம் செய்து தமது முத்திரைப் பொருட்களை விற்பது போல, அரசியல் கட்சிகளும் ""கார்ப்பரேட்'' நிறுவனங்களைப் போலச் செயல்பட்டு அரசியலை விற்பனை செய்கின்றன. சமாஜ்வாதி கட்சியின் கட்டமைப்பைப் பார்த்தாலே இதைப் புரிந்து கொள்ளலாம்.


சாதி, உள்ளூர் ரீதியான செல்வாக்கிற்கு முலயம் சிங் யாதவ்; சினிமாக் கவர்ச்சியின் செல்வாக்கை அறுவடை செய்வதற்கு அமிதாப்பச்சன், ஜெய பிரதா, ராஜ் பப்பர்; பணத்தை அள்ளிக் கொடுத்துப் பதிலுக்கு தொழிற்துறை சலுகைகளைப் பெறுவதற்கு அனில் அம்பானி, சஹாரா நிறுவன முதலாளிகள்; இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து மற்றவர்களிடம் பேசி அரசியல் முடிவெடுப்பதற்குத் தரகர் அமர் சிங் இவைதான் சமாஜ்வாதி கட்சியின் உள் கட்டமைப்பு. இந்தக் கட்டமைப்பில்தான் ஒரு சுப முகூர்த்தத்தில் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தையும் காங்கிரசுக் கூட்டணி அரசையும் ஆதரிப்பதாக அறிக்கை வெளியிட்டார்கள். இதுநாள் வரை ஒப்பந்தத்தை எதிர்ப்பதாகக் கூறியவர்கள் இப்படி திடீர் பல்டி அடித்தது குறித்து சி.பி.எம்.இன் பிரகாஷ் காரத் புலம்பி வருந்தினார். தேச நலனுக்காக இப்படி முடிவை மேற்கொண்டதாக தெரிவித்த அமர் சிங், இதுநாள் வரை அணுசக்தி ஒப்பந்தத்தை தவறாகப் புரிந்து கொண்டதாகவும் தெரிவித்தார். பிரகாஷ் காரத் சரியாக வகுப்பெடுக்கவில்லை போலும்.


பொதுவில் அமெரிக்க ஒப்பந்தத்தை முசுலீம் மக்கள் எதிர்ப்பதால், முன்னாள் அரசவைக் கோமாளி அப்துல் கலாமைச் சந்தித்து அணு மின்சாரம் குறித்த அறிவை அரைமணி நேரத்தில் அமர் சிங் பெற்றார். வெளியில் ஒரு நல்ல முசுலீம் இந்த ஒப்பந்தத்தை ஆதரிப்பதால், ஏனைய முசுலீம் மக்களும் ஆதரிப்பார்கள் என்றும் கூறினார். இப்படி வெளிவேஷம் பக்காவாகத் தயாரானதும், உண்மை வேடம் வெளிவந்தது.


இதன்படி, அனில் அம்பானிக்கான கோரிக்கைகள் அமர் சிங் வாய் வழியாக காங்கிரசு அரசுக்கு மிரட்டல் தொனியில் விடப்பட்டன. ஏற்கெனவே அம்பானி சகோதரர்கள் சொத்துப் பிரிப்பதில் அடித்துக் கொண்டிருந்தனர். இந்தியாவின் தேசிய உற்பத்தியில் ஐந்து சதவீதப் பங்களிக்கும் ரிலையன்சு நிறுவனத்தில் இப்படியெல்லாம் நடக்கலாமா என்று பத்திரிகைகள் அங்கலாய்த்தன. சகோதரர்கள் ஒருவர் மீது ஒருவர் வாரியிறைத்த ஊழல் உண்மைகளை விசாரிக்க மாட்டோம் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்திருந்தார். அம்பானி என்றால் அத்தனை பயம்.


இது போக, பிரிந்ததற்குப் பிறகும் அண்ணன்தம்பி சண்டை முடியவில்லை. கோதாவரி படுகையில் முகேஷ் அம்பானி அபகரித்திருக்கும் இயற்கை எரிவாயு, அனில் அம்பானிக்குச் சரியான விலையில் கிடைக்கவில்லை. மேலும், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம் தென்னாப்பிரிக்காவின் எம்.டி.என். நிறுவனத்தை வாங்குவதாக இருந்தது. இதற்கும் முகேஷ் அம்பானி இடையூறாக இருந்தார். அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றும் சாக்கில் அண்ணனுக்குப் பாடம் கற்பிக்க நினைத்த அனில், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டார்.


உலகில் எண்ணெய் விலை ஏறும்போதெல்லாம் உள்நாட்டில் எடுக்கும் எண்ணெய்க்கும் அதே விலை வைத்து ஏற்றுமதி செய்து கொள்ளை இலாபம் பார்க்கும் முகேசின் ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் ஏற்றுமதிச் சலுகையை ரத்து செய்யவேண்டும்; மேலும், அந்த நிறுவனத்தின் இலாபத்திற்கு உயர் வரி விதிக்க வேண்டும்; அம்பானி சகோதரர்களுக்கிடையே உள்ள பிரச்சினைகளை பிரதமர் தலையிட்டுத் தீர்க்கவேண்டும் என்றெல்லாம் அமர் சிங் பேசினார். இப்படி எதிர்மறைக் கோரிக்கைகள் மட்டுமல்ல; நேர்மறையில் அனில் அம்பானிக்குத் தேவையான சலுகைகளும் கோரப்பட்டன. அதில் முக்கியமானது, செல்பேசிக்கு அளிக்கப்படும் ரேடியோ அலை எனப்படும் ஸ்பெக்ட்ரமுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பது. இவற்றுக்கும் நாட்டின் நலனுக்கும், ஏன் அணுசக்தி ஒப்பந்தத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை.


ஆக, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்ததிற்கான அரசியல் நடவடிக்கைகள் எல்லாம் அம்பானிகளை மையம் கொண்டு இயங்கின. இதற்கெல்லாம் முகேஷ் அம்பானி ஒன்றும் அசந்து விடவில்லை. ஒருநாள் நிதானமாக பிரதமரைப் பார்த்துப் பிரச்சினைகளைப் பேசினார். தானும் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிப்பதாகவும், தன் பங்கிற்கும் எம்.பி.க்களின் ஆதரவைத் திரட்டுவதாகவும் இந்த முதலாளி பேசினார். குறிப்பாக, சிவசேனா உறுப்பினர்களை வாக்கெடுப்புக்கு ஆதரவாக மாற்றுவதாக வாக்களித்தார். பதிலுக்கு, அனில் அம்பானியின் கோரிக்கைகள் மறுக்கப்படவேண்டும் என்றும் கோரினார். வாக்கெடுப்பின் போது, தம்பியின் சார்பாக சமாஜ்வாதி கட்சியினரும் உதிரிக் கட்சியினரும் வாக்களித்தனர் என்றால், அண்ணன் சார்பாக பா.ஜ.க. கூட்டணியில் பத்து பேர் மாறி வாக்களித்தனர். இப்படி இருவரும் தங்கள் செல்வாக்கை இந்திய அரசியலில் மீண்டுமொருமுறை நிரூபித்தார்கள்.


இறுதியில், இந்திய அரசே இரண்டு அம்பானிகளுக்கும் சலுகைகளை வழங்கிச் சமாளித்தது. முக்கியமாக, அணுசக்தி ஒப்பந்தத்தை எல்லாத் தரகு முதலாளிகளும் ஆதரிக்கிறார்கள் என்பதால் அவர்களிடையே பிளவில்லை. அதனால், அம்பானிகளின் தனிப்பட்ட பிளவு அரசியல் பிளவாக மாறவில்லை. அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் அரசு மட்டுமல்ல; அம்பானிகளும் வென்றார்கள்.
அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக இரண்டு முதலாளிகள் இப்படி விளையாடி அரசாங்கத்தையும், அரசியல் கட்சிகளையும் தங்களுக்குக் கீழ்ப்படிய வைக்க முடியுமெனும்போது, அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது அமெரிக்கா நம்நாட்டை என்னவெல்லாம் செய்யும்?


· இளம்பிறை

Last Updated on Friday, 15 August 2008 05:54