Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் யானைகளின் புத்திசாலித்தனம்

யானைகளின் புத்திசாலித்தனம்

  • PDF

மனிதனை விலங்கினங்களில் ஒன்றாகவே அறிவியல் பார்க்கிறது. சிந்திக்கத் தெரிந்த விலங்கு அல்லது மற்ற விலங்கினங்களுக்கு இல்லாத ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு உள்ள விலங்கு மனிதன் என்கிறது அறிவியல். மனிதனின் தோற்றத்திற்கு அல்லது மனிதன் எப்படி உருவானான் என்பதற்கு பல்வேறு கதைகளும், காரணங்களும் பல்வேறு சமயங்களால் கூறப்படுகின்றன. ஆனால் அறிவியல் சொல்வது, பரிணாம வளர்ச்சியின் அங்கமே மனிதன் என்பதாகும். ஒற்றை செல்லாக உருவான உயிரினம் பல கோடி ஆண்டுகால பரிணாம வளர்ச்சியில் பல்வேறு உயிரினங்களைக் கொண்ட மாபெரும் உயிரினக் குடும்பமாக மாறியுள்ளது. இந்த பரிணாம வளர்ச்சியின் அங்கமாக பல உயிரினங்கள் மறைந்தும் போயுள்ளன அதாவது அப்படி ஒரு உயிரினம் இருந்தது என்பதை அறிவியலர்களும், ஆய்வாளர்களும் சொல்லிக் கேட்பது மட்டுமே இப்போது சாத்தியம். நல்லது-அல்லது, நன்மை-தீமை, இனியது-இன்னாதது என்ற அளவில் பயன்படும் பகுத்தறிவு இன்றைக்கு மனிதர்களாகிய நமக்குள்ளே யார் பெரியவன் யார் சிறியவன் என்று கருத்து மோதல்களும், பகுத்தறிவு என்ற ஆறாவது அறிவு இல்லாத விலங்குகளில் காணமுடியாத மாண்பற்ற செயல்களும் நிகழ்ந்துகொண்டிருப்பதற்கு காரணமா என்ற எண்ணத்தையும், கேள்வியையும் எழுப்புகிறது.ஆமாம் மனிதனின் வரிசைப்படுத்தலில், புரிதலில் அதி புத்திசாலியான விலங்கினம் மனிதனே ஆனால் அந்த பகுத்தறிவுத் திறனை மனிதன் ஒழுங்காக பயன்படுத்துகிறானா?

 

இந்த ரீதியில் நமது சிந்தனைகள் ஒரு பக்கம் உலகில் நிகழும் யதார்த்தங்களை நினைத்து கரிசனைகொண்டிருக்க, மறு பக்கத்தில் புத்திசாலித்தனம் என்பது நமக்கு மட்டும் இல்லை, வேறு சில விலங்கினங்களுக்கும் உள்ளது என்பதை அறிவியல் ஆய்வுகள் எண்பித்துகொண்டுள்ளன. ஆனாலும் பாருங்கள் புத்திசாலித்தனம் என்றால் என்ன, அதன் அளவீட்டு முறை என்ன என்பதை பற்றிய தெளிவு அவசியம். பகுத்து அறியும் திறன் என்பது மனிதனின் புத்திசாலித்தனத்தின் அடிப்படைக்கு சமம் என்ற அளவில் பார்த்தால் சிம்பன்ஸி குரங்கினங்களும், டால்பின்களும், யானைகளும் புத்திசாலித்தனம் கொண்டவை என்று கூறலாம். இதை நான் சொல்லவில்லை நேயர்களே, அறிவியலர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் கூறுகின்றன.

 

அமெரிக்காவின் நியு யார்க நகரின் பிராங்க்ஸ் பகுதியில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் உள்ள ஆசிய பெண் யானை ஒன்றின் பெயர் ஹாப்பி. மகிழ்ச்சி என்பதன் ஆங்கில வார்த்தையை பெயராக அழைக்கப்படும் இந்த பெண் யானைக்கு என்னை விட ஒரு வயது கூடுதல், 34. இந்த பெண் யானைதான் அன்மையில் சில ஆய்வாளர்களுக்கு ஹிப்போபொ பொடாமஸ், ரைனாசரஸ் ஆகியவை உள்ளடங்கிய பேச்சிடெர்ம்ஸ் அதாவது முரட்டுத்தோல் கொண்ட விலங்கின வகைகளில் ஒன்றான யானைகளுக்கு தங்களைத் தாங்களே அறிந்துகொள்ளும், மற்றவற்றிலிருந்து வேறுபாட்டை அறிந்துகொள்ளும் திறன் உள்ளது என்பதை நிரூபித்தது. விளக்கமாக சொன்னால், பெரும்பாலான விலங்கினங்கள் கண்ணாடியின் முன் நிற்கவைத்தால், எதிரே தெரியும் பிம்பம் வேறு ஒரு விலங்கு என்றே எண்ணுகின்றன, அதற்கு ஏற்றவாறே அவற்றின் நடவடிக்கைகளும் அமைகின்றன. ஆனால் இந்த ஹாப்பி யானை கண்ணாடியின் முன் நிற்கும்போது, எதிரில் தெரியும் பிம்பம் தான் என்பதை உணர்ந்து, பொதுவாக மற்ற யானைகளைக் கண்டால் செய்யும் சில குழுமக் செயல்பாடுகளைச் செய்யாமல் இருப்பதைக் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது தான் யார் என்பது யானைகளால் உணர்ந்துகொள்ளமுடியும், தான் யார், தனக்கு அருகில் நிற்பது யார், தான் என்பதற்கும், பிறர் என்பதற்குமான வேறுபாடு என்ன இவற்றை பகுத்து அறியும் திறன் யானைகளுக்கு உண்டு என்பது தெளிவாகியுள்ளது. நமது பழைய தமிழ் நூல்களில் நாம் படித்திருப்போம் யானையை போன்ற புத்திசாலித்தனம் என்று. தேவர் பிலிம்ஸின் சில திரைப்படங்கள் உட்பட என சில திரைப்படங்களில் யானையின் புத்தி கூர்மையை கண்டிருப்போம் ஆனால் அறிவியல் ரீதியில் இவை தற்போது நிரூபிக்க பட்டிருப்பது ஒரு வகையில் மகிழ்ச்சியே.

 

இந்த ஹாப்பி என்ற யானை மற்றவற்றிலிருந்து தன்னை வேறுபடுத்தி உணர்ந்துகொண்டுள்ளமை, சுய விழிப்புணர்வு என்பது பொதுவில் மனிதர்களிடமும், சிம்பன்ஸி குரங்குகளிடமும், குறிப்பிட்ட அளவில் டால்பின்களிடமும் காணப்படுகிற அம்சமாகும். இந்த தன்னை அறிந்துகொள்ளும் தன்மையில் யானைகளின் சமூக அல்லது குழும நடவடிக்கைகளின் குழப்பமான அமைவு ஒருவேளை அமைந்திருக்கலாம் அல்லது அவற்றின் பிறர் நலம் நாடும் தன்மை மற்றும் பிறர் துயரை தானே அடைந்ததாக உணரும் தன்மை ஆகியவற்றோடு இந்த தன்னை அறிந்துகொள்ளும் தன்மைக்கு தொடர்பிருக்கலாம் என்கிறார் இந்த ஹாப்பி யானை உள்ள பிராங்க்ஸ் விலங்கியல் பூங்காவை நிர்வகிக்கும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் ஆய்வாளரான டயானா ரெய்ஸ் கூறுகிறார்.

 

2005ம் ஆண்டில் நடந்த ஒரு சோதனையின் போது, 8 க்கு 8 அடி கண்ணாடியின் முன்பாக நிறுத்தப்பட்டபோது, தனது பிம்பத்தை கூர்ந்து கவனித்த இந்த ஹாப்பி யானை, அதன் கண்களுக்கு மேல் குறிக்கப்பட்ட எக்ஸ் என்ற அடையாளத்தை தனது தும்பிக்கையால் பல முறை தடவிப் பார்த்தது. கண்ணாடியில் தனது பிம்பத்தை பார்க்காமால் தனது கண்களுக்கு மேல் எக்ஸ் அடையாளம் குறிக்கப்பட்டதை யானையால் பார்க்க முடியாது என்பதும், அதை பார்த்து அடையாளம் தெரிந்து தனது கண்களுக்கு மேல் உள்ள அடையாளத்தை கண்ணாடியில் பார்த்தபடியே தடவியது என்பதும், இந்த யானையின் சுய உணர்தலை எண்பிக்கின்றன என்பது தெளிவு. மேக்ஸின் என்ற மற்றொரு யானை, கண்ணாடியின் முன் நிற்க வைக்கப்பட்டபோது, தனது தும்பிக்கையால் வாயின் உள்ளே தடவிப்பார்த்தது. மேலும் தனது ஒரு காதை கண்ணாடியை நோக்கி தனது தும்பிக்கையால் நீட்டித்து பார்த்தது, காதை சோதிப்பது போன்ற பாவனையில். இந்த நடவடிக்கைகள் எல்லாம் கண்ணாடியின் முன் நிற்கவைக்கும்போது மட்டுமே இந்த யானைகள் செய்வதை ஆய்வாளர்கள் கவனித்தனர்.

 

இந்த கண்ணாடியின் முன்பாக நிற்க வைத்து, முகத்தில் ஏதேனும் அடையாளம் வரைந்து அதை விலங்குகள் கண்டுபிடிக்கும் சோதனையை 1970ல் கார்டன் காலப் என்பவர் உருவாக்கினார். இவர் முதலில் சிம்பன்ஸி குரங்குகளிடம் இந்த சோதனையை நடத்தினார். தனது சோதனையின் முடிவுகள் உறுதியானவை என்பதோடு ஆர்வத்தை தூண்டுபவை என்று குறிப்பிட்ட கார்டன் காலப், இந்த சோதனையை யானைகளிடமும், டால்ஃபின்களிமும் நடத்தவேண்டும் என்று குறிப்பிட்டார். ஆக அவர் அன்று சொன்னதை மற்ற ஆய்வாளர்கள் செய்து பார்த்து, சிம்பன்ஸியை போல் யானைகளும் தங்களை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்தி உணர்ந்துகொள்ளும் திறன் கொண்டவை எனக் கண்டறிந்துள்ளனர்.

 

யானைகள், சிம்பன்ஸிகளை விடுங்கள். நாம் கூட கண்ணாடியின் முன் நின்றால் எப்படியெல்லாம் மாறுகிறோம். நம் நாட்டு பெண்மணிகள் மட்டுமல்ல, இளமை ஊஞ்சலாடும் இளம் தலைமுறையினர்கூட கண்ணாடியின் முன் நின்று தலைகோதி, தலையை சீவி, மீண்டும் தலை ஒழுங்கை கலைத்து மறுபடி ஒழுங்கு செய்து என்று சுய உணர்தலை அனுபவித்துக் கொண்டுதான் உள்ளனர்.

 

http://tamil.cri.cn/1/2006/11/06/ This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it