Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் மின்னணு கழிவுகள்

மின்னணு கழிவுகள்

  • PDF

"சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான். சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பை மேடுதான்" என்று ஒரு திரைப்படப்பாடல் ஒன்று உண்டு. பொதுவாக நாம் இந்த பாடலில் வரும் முதல் பகுதியை சரியாகவே புரிந்துகொண்டிருக்கிறோம். நம் வீடு சுத்தமாக இருக்கவேண்டும் என்பதில் நாம் நிச்சயம் கவனம் செலுத்துகிறோம். மற்றபடி தெருக்க சுத்தமாக இருப்பது, பொது இடங்களை சுத்தமாக இருக்க நம்மால் இயன்றதை செய்ய முடிகிறதோ இல்லையோ, நம் பங்குக்கு நாமும் குப்பையாக்காமல் இருக்கவேண்டும் என்பதை இப்படி யாராவது சொல்லும்போது மட்டும், ஆமாம் சரிதான் என்று நமக்கு நாமே கூறிக்கொள்கிறோம். வெளியே நாளந்த வாழ்க்கையின் நடைமுறை குழப்படிகளையும், பொது பொறுப்புணர்வில்லா சக மனிதர்களையும் பார்த்தும், அட அரசாங்கமே, மாநகராட்சியே கண்டுகொள்ளாமல் இருக்கிறது பொறுப்பில்லாமல் இருக்கிறது, இது நாம என்ன செஞ்சிட போறோம் என்று கடந்து போகும் முகங்களில் ஒன்றாக நாமும் மறைந்துவிடுகிறோம். பொதுச் சுகாதாராம், சுத்தம் இவற்றை பற்றிய பரப்புரை முயற்சியா என்ற சந்தேகம் உங்களுக்கு வேண்டாம். நவீன யுகத்தின் முன்னேறிய வளர்ச்சியின் பக்க விளைவுகளில் ஒன்றை இன்று நாம் அறிந்துகொள்வோம்.

 

"பறவையைக் கண்டான் விமானம் படைத்தான், பாயும் மீனில் படகினைக் கண்டான்" என்று கவிஞர் கண்ணதாசன் பாடியது போல், மனித இனம் வேட்டையாடி விலங்கினமாய் திரிந்த காலம் முதல் நாகரீக வளர்ச்சியுற்று இன்றைக்கு வேற்று கிரகத்தில் குடியேறும் வழிகளை சிந்திக்கும் நிலை வரையில் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்துள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்றைக்கு பட்டிதொட்டியெல்லாம் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள், செல்லிடபேசிகள். அந்த வகையில் நுகர்வுக்கலாச்சாரம் கோடிகளில் புரளும் கோபாலையும், தெருக்கோடியில் காய்கறி விற்கும் கோவிந்தசாமியையும் சமமாக்கியுள்ளது. இருவரது கைகளிலும் இன்றைக்கு செல்லிடபேசி. மனமிகிழ்ச்சி, பொழுதுபோக்கு, வேலைபளு குறைத்தல் என நமது எல்லா தேவைகளுக்கும் இன்றைக்கு அதற்கானா சாதனங்கள் என்று வசதிகளும், வாய்ப்புகளும் நமக்கு கூடியுள்ளன. ஆனால் இந்த வசதிகளின் பக்க விளைவாய் ஒரு பெரிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. அதை மின்னணு கழிவுகள் அல்லது குப்பைகள் என்று கூறுகின்றனர்.

தொலைக்காட்சி பெட்டி, சலவை எந்திரம், குளிர்பதனப்பட்டி, குளிரூட்டி, செல்லிடபேசி, என இன்றைக்கு மின்னணு பொருட்களும், மின் கருவிகளும் இன்றைக்கு நம் வாழ்வில் முக்கியத் தேவைகளாகிவிட்டன. இப்படி நாம் பயன்படுத்தும் பொருட்கள் நமக்கு இனிமேல் தேவையில்லை என்று எண்ணி ஒதுக்கும்போது அது மின்னணு அல்லது மின் குப்பையாக, கழிவாக மாறுகிறது. வளரும் நாடுகளில் பயன்படுத்தப்படும் இத்தகைய கருவிகள் பொதுவாக மக்களால் அவ்வளவு எளிதில் கழிவுகளாக ஒதுக்கப்படுவதில்லை. நொந்து நூலாகி போகும் வரை பயன்படுத்தும் வழமைதான் பொதுவில் காணப்படுகின்றன என்ற எண்ணம் இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். வளரும் நாடுகளில் இன்றைக்கு இந்த மின்னணு கழுவுகள் அதிகமாகிக்கொண்டிருக்கின்றன. அந்த நாடுகளின் மக்கள் பயன்படுத்தி ஒதுக்கும் கழிவுகள் மட்டுமல்லாது, முன்னேறிய வளர்ந்த நாடுகளின் இத்தகைய மின்னணு கழிவுகளும் வளரும் நாடுகளில் வந்து குவிகின்றன. அட இதென்ன வம்பா போச்சு என்கிறீர்களா? ஆமாம் வம்பாய்தான் போனது. மின்னணு கழிவுகள் இன்றைக்கு சுற்றுச்சூழலுக்கும், மக்களுக்கும் ஏற்படுத்தும் பாதிப்புகளை சொல்ல ஆரம்பித்தால் நமக்கு மின்னணு பொருட்களைக் கண்டாலே ஷாக் அடிக்கும்.

 


மின்னணு குப்பைகளும், கழிவுகளும் விடுக்கும் அச்சுறுத்தல் மனித குலத்துக்கு எதிராக ஏற்கனவே திரும்பிய இயற்கையை மேலும் ஊறுபடுத்தி கோபமூட்டி, அதற்காக தண்டனையும் வாங்கித் தரக்கூடியவை. சரி இந்த குப்பைகளின் தன்மையையும், அவற்றின் அச்சுறுத்தலையும் புரிந்துகொள்ள அவை எப்படி வளரும் நாடுகளுக்கு வந்து சேர்கின்றன என்பதை அறிந்துகொள்வோம். இன்றைக்கு வளர்ந்த நாடுகள் அல்லது மேலை நாடுகளின் மின்னணு குப்பைகளில் 90 விழுக்காடு வந்து சேரும் இடம் எது தெரியுமா? வளரும் நாடுகளுக்கு சவாலி விடும் வேகத்தில் வளர்ந்துகொண்டிருக்கும் பொருளாதராத்தை கொண்ட சீனாதான் அந்த இடம். சீனாவில் ஆண்டுக்கு 150 மில்லியன் தொலைக்காட்சி பெட்டிகள், குளிரூட்டிகள், குளிர்பதனபெட்டிகள், சலவை இயந்திரங்கள் மற்ரும் கணிப்பொறிகள் கழிவுகளாக்கப்படுகின்றன. இப்படி வீட்டு பயன்பாட்டு மின் கருவிகள், மின்னணு சாதனங்கள்தான் மின்னணுக்கழிவுகளில் பெரும்பான்மையிடம் பிடிப்பவை. மேலை நாடுகளின் இத்தகைய வீட்டு பயன்பாட்டு பொருட்கள் கழிவாக்கப்பட்டால் அவற்றில் 80 விழுக்காடு பெரிய பெரிய பெட்டகங்களின் மூலம் ஆசியவுக்கு வந்து சேர்கின்றன. அதில் 90 விழுக்காடு சீனாவுக்கு வந்தடைகிறது. இப்படி வந்து குவியும் மின் கழிவுகளில் 10 விழுக்காடு மட்டுமே மறுசுழற்சிக்காக பயன்படுத்துகின்றன. மற்ற குப்பைகள் எங்கே? என்ன ஆகிறது?

"பழைய இரும்பு பித்தளைக்கு பேரீச்சம் பழம்"  என்று கூவியழைக்கும் குரல் உங்கள் நினைவுக்கு வந்தால் உங்களுக்கு என் பாராட்டுக்கள். பழைய பொருட்களை, கழிவுகளை சேகரிக்கும் நம்ம ஊரு பழைய காகித, இரும்பு வாங்கும் கடைகளை போன்ற ஆனால்அதன் அளவும், கையாளும் தன்மையும் வேறுபட்ட தனிநபர்களின் கடைகள் அல்லது சிறிய அளவு ஆலைகளதான் இந்த மின்னணு கழிவுகளின் பெரும்பகுதியின் சேருமிடங்களாகின்றன.

 


இத்தைகைய சிறிய அளவு ஆலைகள் மற்றும் தனிநபர்கள், இந்த குப்பைகளில் உள்ள சில இயந்திரங்களை ஒன்றேல் மீண்டும் பயன்படுத்தும் தட்டி ஒட்டி முடுக்கி சீர்படுத்தி கிராமப்புறங்களில் விற்கின்றனர். அல்லது இந்த சாதனங்களில் உள்ள உலோகங்களை எடுப்பதற்காக அவற்றை உடைத்து, நொறுக்கி, உருக்கிவிடுகின்றனர்.


எந்த வித உரிமமும், அனுமதியும் பெறாமல் இப்படி மின்னணு கழிவுகளை, குப்பைகளை கையோள்வோரின் எண்ணிக்கை சீனாவில் 10 மில்லியன் என்று ஒரு தகவல். இந்த மின்னணு பொருட்களில் சிறிய அளவில் உள்ள ஈயம், பாதரசம், பொன் முதலிய உலோகங்களை பெறவென அமிலம் மூலமான ரசாயண வழிமுறைகள் அல்லது எளிய வழிமுறையாக நெருப்பிலிட்டு உருக்குவது என்று ஈடுபடும்போது வெளியேறும் நச்சுவாயுக்களும், நச்சுக்கழிவுகளும் சுற்றுப்புறத்தின் காற்றையும் நீர்நிலைகளையும் மாசுபடுத்துகின்றன, நஞ்சாக்குகின்றன. பெரும்பாலான இத்தகு ஆலைகள் கிராமப்புறங்கள், சிறு நகரங்களின் ஒதுக்குப்புறங்களில் உள்ளதால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதோடு, அங்கேயுள்ள சுற்றுச்சூழலின் அங்கம்மான வயல்கள், பயிர்கள், கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன. சீனாவின் குவாங்துங் மாநிலத்தில் ஷாந்தூ என்ற பகுதியில் அமைந்த ஒரு மின்னணு கழிவுகளை கையாளும் ஆலை ஒன்றின் நச்சுக்கழிவு வெளியேற்றத்தால் அங்கேயிருந்த நீர்நிலைகள் மாசுபட, 30 கிலோமீட்டருக்கு அப்பாலிருந்து குடிநீரை வரவழைக்கவேண்டிய நிலைல்க்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.


ஆக இந்த மின்னணு கழிவுகளை சரிவரக் கையாளும் வழிமுறைகளும், அதற்கான சட்டரீதியான உறுதியும் வளரும் நாடுகளில் அவசியமாகின்றன. உலக வெப்ப ஏறல் என்பதைக் கேட்டாலே கொஞ்சம் திகிலடிக்கத் துவங்கியுள்ள காலக்கட்டத்தில் இந்த மின்னணு கழிவுகள், எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதுபோலல்லவா கையாளப்படுகின்றன. உலகம் போகிற போக்கில் இன்னும் என்னென்ன கொடுமைகளோ, மனிதகுலத்துக்கு என்னென்ன சவால்களோ?

 

http://tamil.cri.cn/1/2007/02/12/64@48713_2.htm