Thu05092024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் பிரபாகரன் எவ்வளவு உருக்கமாக உரையாற்றினாலும்... இது மக்களை ஏமாற்றும் காலம்.

பிரபாகரன் எவ்வளவு உருக்கமாக உரையாற்றினாலும்... இது மக்களை ஏமாற்றும் காலம்.

  • PDF

து மக்களை ஏமாற்றும் காலம்.மக்களின் உரிமைகளைச் சொல்லியே அரசியல் இலாபம் பெறும் கட்சி அரசியலானது என்றும் மக்கள் நலன் சார்ந்த ஜனநாயக அடிப்படைப் பெறுமானத்தை மதிப்பதுகிடையாது.இன்றைய அரசியல் சமூகத்தின் அதீத அவநம்பிக்கையை உண்டுபண்ணியபடி காலத்துக்குக் காலம் மிதமான பொய்யுரைப்புகளை மக்கள்-சமூக வெளிக்குள் கொட்டி நடைமுறைப் பிரச்சனைகளைப் பின் தள்ளுகிறது.இங்கே நாம் கட்சி-தலைவர் என்றபடி கருத்தாடுவதும், அல்லது அத்தகைய அமைப்புத் தலைமை வாதத்துக்குள் நமது கருத்து நிலையைக் காவு கொடுத்து, மக்கள் நலன்களைப் பலியாக்கும் பொறுப்பைக் கட்சிகளிடம் ஒப்படைக்கின்றோம்.

 

ஒரு இனத்தின் நலனை முன்வைத்து,அந்த இனத்தின் உயிராதார உரிமைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டமென்பது அந்த மக்களின் நலனைத் தழுவிய நோக்கத்திலிருந்தே முன்னெடுக்கப்பட வேண்டும்.ஆனால் பழைய அரசியல் கட்சிகள்,அதன் தலைவர்கள் தமது கட்சி நலனை முதன்மைப்படுத்தி அதையே மக்களின் அபிலாசையென்னும் சொற் சிலம்பத்தால் ஏமாற்ற முனைதல், இன்றைய இலங்கையரசியலில் மிக இலகுவாக நடைபெறுகிறது.

 

தமிழ்பேசும் மக்கள் தமது சமூக முரண்பாட்டை பல் வகைப் போராட்ட நெறியாண்மைக்குள் பரிசோதித்துப் பார்த்த பின்பு,மீளவும் பழைய பரிசோதனைப் பாணி அரசியல் சழற்சிக்குள் தள்ளிவிடப்படும் ஒரு இருண்ட அரசியல் வியூகத்தைப் பழைய அரசியல் பெரிச்சாளிகள் அந்நிய அரசியல்-பொருளியல் ஆர்வங்களின் துணையுடன் திட்டமிட்டுச் செயற்படுத்தும்போது,அதை வெறுமனவே பார்வையாளர்களாக நாம் எதிர்கொள்ள முடியாது.நமது வாழ்வையும் நமது அரசியல் அபிலாசைகளையும் இந்தியாவும்,அமெரிக்காவும் தீர்மானிக்க முடியாது. தமிழ்பேசும் மக்களிடமிருந்து அத்தகைய அரசியல் எதிர்பார்ப்பு எழும் இருண்ட அரசியல் வறுமை என்றைக்கும் நிலைத்திருப்பதற்கானவொரு வியூகத்தை கட்சி அரசியலானது நமக்குக் காலாகாலமாகத் தந்துவிடத் துடிக்கிறது.இதைச் செம்மையாகச் செய்வதற்கான கருத்தியல் மேலாதிகத்தை உருவாக்கும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த இந்திய-அந்நிய ஆர்வங்கள் எமது மக்களின் உரிமைகளைத் திட்டமிட்டு அழித்தும்,தமது விருப்புறுதிகளை-பொருளாதார மற்றும் அரசியல் இலாபங்களை எமக்கான உரிமையாகவும்,எதிர்கால அரசியல் தெரிவாகவும் முன்வைக்கின்றன.இவை முன்னெப்போதையும்விட பன்மடங்கு அரசியல் குழிபறிப்புடைய ஈனத்தனமான செயற்பாடாகும்.

 

எங்கள் மக்களுக்குள் நிலவும் பாரிய அரசியல் இயலாமையை தமது வெற்றிக்கான அரும்பாகப் பயன் படுத்தும் இந்திய விருப்பு,இலங்கைக்குள் இந்திய நிலைமைகளைத் தோற்றுவிக்கப் படாத பாடு படுகிறது.அதற்காக ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவாநந்தா,கருணா-பிள்ளையான் குழு மற்றும் குறுங்குழுக்கள்போன்ற அரசியல் அநாதைகளைப் பயன்படுத்தும் இன்றைய அரசியலானது மிகவும் சூழ்ச்சிமிக்க பரப்புரைகளை நமக்குள் விதைக்கின்றன.இவை இலண்டனையும்,பாரிசையும் மையப்படுத்தித் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பற்பல வெடிப்புக்களைச் செய்து வருகிறார்கள். இதுள் ரீ.பீ.சீ.வானொலியின் பங்கு முதன்மையானது.இந்த வானொலி புலம் பெயர்ந்த மக்களின் தோள்களில் இருந்தபடி இந்திய நிதியில் எம்மை வேட்டையாட இலங்கைச் சிங்கள இராணுவத்துக்கு ஆட்காட்டி வருகிறது.இதைப் புலிகளின் அராஜகத்தைச் சொல்லியே ஒப்பேற்றி வருகிறது.மக்களுக்கும் புலிகளுக்குமான முரண்பாடு ஜனநாயக மறுப்போடும்,அராஜகச் செயற்பாட்டிலும் மையங் கொள்கிறது.இதைக் கடக்காத புலிகள் மக்களின் உரிமையை வென்றுவிட முடியாது.இத்தகைச் செயற்பாடு தொடரும்போது அந்நியர்கள் எம் மக்களின் நலனைத் தமது முகமூடியாக்கி நம் மக்களின் உரிமையைக் குழிதோண்டிப் புதைப்பதற்குப் புலிகளே பாத்திரமாகிறார்கள்.

இந்த இலட்சணத்தில் பிரபாகரன் எவ்வளவு உருக்கமாக உரையாற்றினாலும் மக்கள் உரிமையைப் பெறமுடியாது.புலிகள் தமது அந்நிய நட்பைப் பிரிசீலித்துப் புரட்சிகரமான முறையில் போராட்டச் செல் நெறியை வகுத்தாகவேண்டும்.வெளி நாடுகளிலுள்ள தமிழ்ப் பெரும் முதலாளிகளின் நட்புக்காக நமது மக்களின் நியாயமான உரிமைகளை மறுத்தொதுக்கிப் பாசிச அமைப்பாக இறுகிச் செல்ல முடியாது.இதைப் புலிகளின் தலைவர் சுய விமர்சனஞ் செய்தேயாகவேண்டும்.தமிழ் பேசும் மக்களின் சராசரித்தனமான அறிவு பிரபாகரனின் உரைக்காக மட்டுமல்ல உண்மையான செயற்பாட்டுக்காவும் கிடந்து மாய்கிறது."பிரபாகரன் இல்லையென்றால் நமக்கு விடிவில்லை" எனும் உணர்வே மக்களிடம் இப்போது ஓங்கியிருக்கும்போது,அதை நாசம் செய்து அந்நியர்களுக்கு அடிமையாய் இருப்பதில் புலிகளின் தியாகமும் மக்களின் உயிருமே பாழடிக்கப்படுகிறது.

 

நமது மக்களின் துயரம் மிக்க போராட்ட வரலாறானது தியாகத்தாலும்,கொலைகளாலும்,பொருளிழப்பாலும் நிறைந்த மிகக் கடினமான போராட்ட வாழ்வாகும்.எம்மை வேரோடு சாய்ப்பதற்கான பல்வகை அரசியல்-போராட்ட வியூகங்களை இலங்கையரசும்,இந்திய மற்றும் அமெரிக்க நலன்களும் திட்டமிட்டுப் பயன்படுத்தி வருகின்றன.இத்தகைய தரணங்களுக்கிசைவாகப் பயன்படுத்தப்படும் தமிழ் அரசியல் வாதிகள் எப்போதுமே தமிழ்பேசும் மக்களை ஒட்டச் சுரண்டித் தமது அற்ப ஆசைகளைத் தீர்த்துக்கொண்டிருப்பவர்கள்.இவர்கள்தாம் நம்மைத் தமிழக ஓட்டுக்கட்சிகளையும்,இந்திய மத்திய அரசையும் நம்பும்படி வற்புறுத்துபவர்கள்.இது நம்மை இந்தியத் துரோகத்தால் ஏமாற்ற முனையும் செயல்.நாம் மூடர்களாகக் கடமையாற்ற முடியாது.ஒவ்வொரு மாவீரர் தினத்திலும் பாரிய உயிர் அழிவுகூடிச் செல்கிறது.எங்கள் குழந்தைகள் தேசத்துக்காய்ச் செத்து மடிகிறார்கள்.இதை எவரெவர் பயன்படுத்தித் தமது வளங்களைப் பெருக்கிறார்களோ அவர்கள் தமிழ் பேசும் மக்களின் உண்மையான பிரச்சனைகளைப் புரிந்து தம்மைச் சுய விமர்சனஞ் செய்து மக்களைப் புரட்சிகரமான முறையில் திரட்டி எமது விடுதலையை வென்றெடுத்தாக வேண்டும்.

இந்த இழி அரசியல்வாதிகளால் ஒரு தலைமுறையைப் பலி கொடுத்த இலங்கைத் தேசத்துத் தமிழ்பேசும் மக்கள், வரலாற்றில் அரசியல் தோல்வியை மடமையான முறையில் சந்திக்க முடியாது.இங்கே தமிழ் பேசும் உழைக்கும் மக்கள் தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கும் உணர்வில் கட்டுண்டு கிடப்பினும் நமது எதிரிகளை இனம் கண்டு போராட்டத்தைச் சீரிய முறையில் செய்தாக வேண்டும்.இதற்கான அனைத்து வளங்களையும் கேட்டு நிற்கும் புலிகள் முதலில் தம்மைச் சுயவிமர்சனஞ் செய்து மக்கள் படையணியாகத் தம்மைக் கட்டியாகவேண்டும்.வெறும் இராணுவவாதத்தைத் தவிர்த்து ஓடுக்கப்படும் தமிழ் பேசும் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளின் பிராதான முரண்பாட்டில் கவனஞ் செலுத்தியாக வேண்டும்.இதைச் செய்யாதவரை திரு.பிராபாகரனின் கோரிக்கையில் எந்த அர்த்தமுமில்லை.தமிழ் பேசும் மக்களுக்குள் நிலவும் அராஜகங்கள் அட்டூழியங்கள் நிறறுத்தப்பட்டு அவர்களைப் பார்வையாளரென்று தொடர்ந்திருத்தி வைக்காமல் போராட்டத்தோடு இணைப்பதும், அவசியம்!

 

எமது மக்களின் உயிரிழப்புகளுக்குக் காரணம் தேடிப் புதுப்புது வியூகங்களை நம் எதிரிகள் எமக்குள் கொட்டி எம்மைத் தமது நலன்களைக்காக்கும் ஜந்திரங்களாக்கி, அரசியல் அநாதையாக்கும் பணிக்கு ஆனந்த சங்கரிபோன்ற அரசியல் வாதிகள் பக்கப்பலமாகச் செயற்படுவது மிகவும் கண்டிக்கத் தக்கது.இது மக்களைப் பழையபடி விலங்கிட்டு அவர்களது உரிமைகளை அந்நிய சக்திகளுக்கு ஏலமிடும் பாரிய சமூகவிரோதச் செயற்பாடாகும்.

இன்று நமக்குள் நிலவும் ஜனநாயகப் பற்றாக் குறையை மிகைப்படுத்தி நமது மக்களுக்கு இந்தத் தேவையே அவசியமென்றும,; அதை இலங்கை அரசுடன் உடன்பாட்டுக்குப்போய் தீர்த்துக்கொள்ள முடியுமென்றும் கூறப்படும் ஆசை வார்த்தைகள் பொய்யானவை.தென்னிலங்கையின் ஜனநாயகச் சூழலானது தமிழ் மக்களின் நிலையிலிருந்து எந்த வகையிலும் முன்னேறியது கிடையாது.இந்த இலங்கை அரசியலைத் தீர்மானிக்கும் உலக அரசுகள் எமது நாட்டில் நிரந்தரமானவொரு அரசியல்-பொருளியல் மற்றும் சமூக முன்னேற்றத்தையும், சுய உறுதிப்பாடுகளையும் எட்டுவதற்கு என்றும் விருப்புடையனவாக இருக்கவில்லை.இவர்கள் எமது வாழ்வை தமது அரசியல் நலனிலிருந்து தீர்மானிக்க முனைகிறார்கள்.

 

இதனால்-
"இந்தியா தராது","இந்தியாவிடாது",
"அமெரிக்கா விரும்பாது",
"ஐரோப்பா ஏற்காது"

 

என்று பயனை பாடிக் கொள்ளும் கருத்தியலை எமக்குள் வலுவாகத் திணித்து நம்மை அவர்கள் வழிக்குத் தயார்ப்படுத்தி வருகிறார்கள்.இதற்காகவே பல மில்லியன் டொலர்களைச் செலவு செய்து பாரிய பரப்புரைகளை நமக்குள் கொட்டுகிறார்கள். இங்கே ரீ.பீ.சீ.வானொலியும் கருணாவும்,கே.ரீ.இராஜசிங்கமும் எமது மக்களின் முதுகில் குத்தியே தமது எஜமான விசுவாசத்தைச் செய்கிறார்கள்.இதற்குப் புலம் பெயர்ந்த மக்களின்மீது அவ்வளவு கரிசனையாம்.கேட்கப் புல்லாரிக்குது.மக்களை நரவேட்டையாடியது புலிகள் மட்டுமல்ல மற்றைய இயக்கங்களும்தாம்!இதை மக்களுக்குப் புதிதாகச் சொல்வதற்கில்லை.ஆனால்,புலிகளின் அடிமட்டத் தியாகிகளின் அற்புதாமான உயிர்களை உலை வைத்தபடி நமது அரசியல் அந்நியர்களுக்கு வால் பிடிக்க முடியாது.


எனவே, புலிகள் தமது போராட்டப்பாதையில் மக்களை இணைப்பதற்கான முதற்படி அவர்களுக்கு ஜனநாயகத்தைக் கொடுத்து அவர்களைச் சுயமாகச் செயற்பட அநுமதித்தாகவேண்டும். நாம் இன்னும் விடு பேயர்களாய் இருந்து, இவர்களிடம் மடிப் பிச்சை எடுக்கும் அரசியல்-சமூக உளவியலைத் தீர்மானிக்க எமக்குள் பற்பல வியூகங்கள் மலிந்துருவாக்கப்படுகிறது.இதைத் தடுப்பதற்கான ஒரே வழி மக்களைச் சுயமாகச் செயற்பட அநுமதிப்பதும்,அவர்களது எழிச்சியைக் கூர்மைப்படுத்துவதும் கூடவே மக்களைச் சார்ந்து புரட்சிகரமாக இயங்குவதுமே.புலிகள் இனியும் அந்நியர்களுக்குச் சேவர்களா அல்லது மக்களின் புரட்சிப்படையா என்பதை அடுத்த மாவீரர் தினத்தில் நாம் அறிய முடியும்.


இன்றைய அந்நிய ஆர்வங்கள்,
"ஜனநாயகம்,
யுத்த நிறுத்தம்,
சிறுவர்களைப் படையில் இணைப்பது,
கட்டாய வரி வசூலிப்பு,
கொலைகள்,
மானுடவுரிமை!"

என்ற கோசங்களுக்கூடாய் நம்மை வந்து முற்றுகையிடுகிறது.

 

உண்மையில் நமக்குள் இந்தமுரண்பாடுகள் நிலவுகிறது.புலிகளின் அதீதமான மக்கள் விரோதப் போக்கானது,மாவீரர்களின் தியாகத்தாலும்,அவர்களின் இழப்புகளாலும் மனத்தில் சகஜமானவொரு செயலாக நியாயம் பெறுகிறது.இது தப்பு.நாம் மக்களின் குழந்தைகளே.எங்கள் பெற்றோர்களை வதைத்து எவரது உரிமைக்காகப் போராடுகிறோம்?

 

நமது சமுதாயத்துக்குள் இத்தகைய முரண்பாடுகள் மலிந்துவிட்டென.எனினும், இதைத் தூக்கி நிறுத்தும் அரசியலானது மக்கள் நலனிலிருந்து மக்களே தீர்மானிப்பதாய் இருக்கவேண்டும்.ஆனால், இப்போது நிலவும் இந்தக் கோசங்களுக்குள் மறைந்திருக்கும் அந்நிய ஆர்வங்கள் நம்மை நன்றாக ஏமாற்றிவிடத் தடியாய்த் துடிக்கின்றன.இந்தத் துடிப்பை புளட் ஜெகநாதன் மற்றும் ரீ.பீ.சீ. அதிபர் இராமராஜன் போன்றவரிடம் மிகுதியாகக் காண முடியும்.

 

யுத்தத்தின் மூலம் நமது ஆன்ம வலுவை உடைத்தெறிந்துவிட்டு,நம்மை நாதியில்லாத அகதிகளாக்கிவிட்டு,நமக்கு அன்றாடம் இயல்பான வாழ்வே அவசியமெனும் மனநிலையைத் தோற்றி, நமது உரிமைகளைக் காயடிக்கும் இலங்கை-இந்திய அரசிலானது மிகவும் கொடிய உள்நோக்கமுடைய அரசியல் குழிப்பறிப்பாகும்.இது பேசும் இத்தகைய "மர்ம மக்கள் நலனானது" நம்மைக் காலாகாலத்துக்கு அடிமைகளாகக் கட்டிப்போடும் தந்திரத்தோடு உறவுடையது.

 

எனவே இதை உடைத்தெறிவதற்கான ஒரே வழி:

 

புலிகளுக்கும் மக்களுக்குமுள்ள மேற்காணும் முரண்பாட்டை தீர்ப்பதே.இதைப் புலிகள் செய்யும் போது,மக்கள் சுய எழிச்சி கொள்வதும்,தமது நலன்களைத் தாமே "தமது நோக்கு நிலையிலிருந்து" முன்வைப்பதும்,போராடுவதும் நிகழும்.எந்த அந்நிய சக்தியாவது புலிகளை அழிக்க முனையும்போது மக்கள் புலிகளை நிபந்தனையின்றி ஆதரிப்பதும் தவிர்க்க முடியாது நிகழும்.அதுதாம் நமது நிலைப்பாடும்.மக்களைத் தவிர்த்த எந்த அரணும் போராளிகளைக் காக்க முடியாது.மக்கள் தம்மைத் தாமே முன்னிறுத்தும் பாரிய வரலாற்றுப்பணி இப்போது நம் முன் இருக்கிறது.இதைத் தடுக்கும் அரசியல் சூழ்ச்சியானது புலிகளுக்கும் மக்களுக்குமான ஜனநாயக முரண்பாடாகக் கட்டி வளர்க்கப்படுகிறது.இதைப் புலிகளே பிரித்தறிந்து நிவர்த்திசெய்யாதவரைப் புலிகளின் போராட்டச் செல் நெறி மக்களையும்,அவர்களது உரிமையையும் வென்றெடுக்க முடியாது.

 

ப.வி.ஸ்ரீரங்கன்