Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் பணம் அலுக்கவில்லை பகட்டு அலுத்துவிட்டது - குபேர வர்க்கத்தின் இரகசியச் செல்வம்

பணம் அலுக்கவில்லை பகட்டு அலுத்துவிட்டது - குபேர வர்க்கத்தின் இரகசியச் செல்வம்

  • PDF

 வரலாறு காணாத அளவில் உணவு முதலான அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டிருக்கிறது. கேமரூன், எகிப்து,  இந்தோனேசியா, செனகல், ஹைதி உள்ளிட்ட பல நாடுகளில் உணவுக் கலகங்கள் வெடிக்கின்றன. உணவுப் பொருட்களை விலை கொடுத்து வாங்க முடியாமல், தங்களது பிள்ளைகளுக்குச் சோறிட வழியில்லாமல் மக்கள் பரிதவிக்கிறார்கள். ஹைதி நாட்டில், மக்கள் களிமண்ணால் ரொட்டிகள் செய்து தின்று பசியாறுகிறார்கள். இந்தியாவில் பணவீக்கம் இரண்டு இலக்கங்களை தொட்டிருக்கிறது. உலக வங்கியின் தலைவர் ராபர்ட் ஜோலிக், மேலும் 33 நாடுகளில் கலகங்களும் கொந்தளிப்புகளும் வெடிக்கும் எனக் கவலை தெரிவிக்கிறார்.


 உலக முதலாளித்துவத்தின் உச்சாணிக் கொம்பில் நின்று கொண்டிருக்கும் கோமகன்களும், கோமகள்களும் கூட மாற்றுகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். 380 மில்லியன் டாலர்கள் சொத்துடைய சியோன் ஜான் காம்ப்ஸ் எனும் அமெரிக்க கோடீசுவரர், தான் நகைகளாலும், பணத்தாலும் மதிப்பிடப்படுவதை விரும்பவில்லை, "தான் அவற்றையெல்லாம் விட உயர்ந்தவன்' என்பது அவரது கருத்து. எனவே, தனது 29–வது பிறந்த நாள் விழாவுக்கு குஸ்ஸி, வெர்சாஸ், சியோன் ஜான் ஆகிய உலகத்தின் தலைசிறந்த ஆடை அலங்கார நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை மட்டுமே விருந்தினர்கள் அணிந்து வரவேண்டும் எனக் கட்டளையிட்டார் சியோன்.


 பண்டங்களின் முத்திரைகளால் தனது விருந்தினர்களைக் கூட அடையாளம் காணும் கண்ணியவான்கள் பண்டங்களைக் கடந்து தமது சாரத்தைத் தேடும் ஞானத் தேடலில் மூழ்கத் தொடங்கி விட்டார்களாம். இதனைச் சுட்டிக் காட்டும் அமெரிக்க ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை, தற்போது உலகக் கோடீசுவரர்கள், பகட்டிலிருந்து விடுபட்டு, மேலும் மேலும் "அடக்கமாக', அந்தரங்கமாக, தங்களது செல்வத்தை அனுபவிப்பதை நோக்கி நகர்ந்து வருவதாகக் குறிப்பிடுகிறது.  இதனை "இரகசியச் செல்வம்' எனப் பெயரிட்டு அழைக்கிறது, அப்பத்திரிக்கை. நுகர்பொருள் மோகத்திலிருந்து விடுபட்டு, பற்றற்ற நிலைக்கு முதலாளித்துவம் நகர்ந்து கொண்டிருக்கிறதோ?


 ராபர்ட் ஜான்ஸ்டன் எனும் பிரிட்டிஷ் முதலாளி இதற்கு பதிலளிக்கிறார். "நீங்கள் உயர்ந்த வட்டாரங்களில் பழகுபவராக இருந்தால், நீங்கள் உங்களது நண்பர்களோடு இருக்கிறீர்கள். அங்கே பகட்டாக வெளிக்காட்டிக் கொள்ளத் தேவையில்லை. இது உண்மையில் ரசனைக்குத் திரும்பப் போவதாகும். ரசிக்கத் தகுந்த பொருட்களை நீங்கள் கண்டறியத்தக்கவராக இருந்தால், நீங்கள் அதனைத்தான் அணிந்து கொள்வீர்கள். சுருக்கமாகச் சொன்னால், ரசனையின் மட்டம் உயர, உயர ஆரவாரம் அடங்கி விடும்.''  ஆக, ரசனையின் உயர்வில் உலக முதலாளித்துவ மேட்டிக்குடியினரின் சொகுசும், நுகர்வும் மேலும் மேலும் நுட்பமானதாகவும், அந்தரங்கமானதாகவும் மாறி வருவதாக அமெரிக்கப் பத்திரிக்கைகள் வர்ணிக்கின்றன.


 பெரும் பணக்காரர்களின் நுகர்பொருட்கள் துலக்கமாக கண்களை உறுத்துவதாக இருந்த நிலையிலிருந்து மாறி, "ரசிக்கத்தக்க பொருட்களை கண்டறியத்தக்க' தகுதி படைத்தவர்களால் மட்டுமே கண்டுணரத் தக்கதாகி விட்டதாம். உதாரணமாக, வழக்கமான  ரோலக்ஸ் கைக்கடிகாரங்களை விடவும், 5,07,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள, சிக்கலான, நுட்பமான வடிவமைப்பு கொண்ட வாக்கெரான் கான்ஸ்டாண்டினின் கைக்கடிகாரங்களுக்குதான் இப்பொழுது மவுசு அதிகம். ரோலக்ஸ் கைக்கடிகாரம் பர்மா பஜாரில் விற்கும் பத்து ரூபாய் எலெக்ட்ரானிக் கடிகாரமல்ல. அதுவே, பல இலட்சங்கள் பெறுமானமுள்ளது. எனினும், அதை அணிவதில் புதுமை ஏதும் இல்லையாம்.


 அதுபோல, வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப தயாரிக்கப்படும் 7000 டாலர் பெறுமானமுள்ள பிரத்தியேகக் கோட்டுகளின் ஓரத்தில் அலங்காரத்திற்கென வெறுமனே வைக்கப்படும் பட்டன், அது வழக்கமான ஆலைகளிலிருந்து தயாரிக்கப்படவில்லை என்பதைப் புலப்படுத்தும் சின்னமாகக் காட்சியளிக்கிறது.


 காதலைச் சொல்லிடும் வழி, தங்கம், வைரம், வைடூரியம் எனப் பரிணாம வளர்ச்சியுற்று  கடைசியில் இப்போது புத்தகம் என்று ஆகிவிட்டது. ஆச்சரியமாக இல்லை?


 அர்ஜென்டினாவைச் சேர்ந்த நிறுவனமொன்று "எனது சிறப்புப் புத்தகம்' என்றொரு நிறுவனத்தைத் துவங்கியுள்ளது. அங்கே 1,00,000 டாலர் கட்டினால் போதும். ஒருவரது வாழ்க்கையின் முக்கியமான தருணங்கள், அந்தரங்கக் கடிதங்கள், புகைப்படங்கள், குணாதிசயங்கள் என அனைத்து விவரங்களையும் திரட்டி, அவரது வாழ்க்கை வரலாறை அந்நிறுவனமே ஆள் வைத்து எழுதித் தந்து விடும். சம்பந்தப்பட்ட நபருக்கே நீங்கள் இதனைப் பரிசாகவும் அளிக்க முடியும்.


 இப்படித்தான் சமீபத்தில் ஒரு நிதிமூலதன அதிபரின் மனைவி தன்னுடைய கணவனின் வரலாற்றை ஆள் வைத்து எழுதி அவருடைய வாழ்க்கை வரலாற்றை அவருக்கே பிறந்தநாள் பரிசாக அளித்தாராம்.  கணவர் நெகிழ்ச்சியில் கண்கலங்கி விட்டாராம்.  "இதனை விடவும் அந்தரங்கமான ஒன்றை நீங்கள் கற்பனை செய்ய முடியுமா? உண்மையான சொகுசு (டூததுதணூதூ) என்பது இதுதான்' என்கிறார், நியூயார்க்கிலுள்ள மேட்டுக்குடி நுகர்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த மில்டன் பெட்ராசா.


 நட்சத்திர விடுதிகள் இந்த மேன்மக்களை இப்போது கவருவதில்லை. உறுப்பினர்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாகச் சேவை செய்யக் கூடிய உணவகங்கள், சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள், பொழுது போக்கு நிகழ்வுகளையே மேட்டுக்குடியினர் இப்பொழுது விரும்புகிறார்கள். வழக்கம் போல விலை உயர்ந்த கடைகளில் சென்று நகைகளை வாங்குவதை விடவும், ஆர்டரின் பேரில் பிரத்தியேகமாக நகைகளை வடிவமைக்கும் பாரிசின் ஜார் நிறுவனத்தில் அப்பாயிண்மெண்ட் பெறுவதற்கு அவர்கள் கடும் முயற்சி செய்கிறார்கள். அந்த அப்பாயின்ட்மென்ட் எவ்வளவு பெரிய கோடீசுவரரானாலும், ஒரு நாளில் கிடைத்து விடக் கூடியதல்ல. இன்றோ, நாளையோ எப்போது வேண்டுமானாலும் கிடைக்கலாம்.


 உல்லாச ஓய்வு இல்லங்களால் பெரும் பணக்காரர்களுக்கு பிரத்தியேகமாக அனுப்பப்படும் அழைப்பிதழ்களைப் பெற்று, அங்கே முன் கூட்டித் தெரிவிக்கப்படாத நிகழ்வுகளில் பங்கேற்க ஆசைப்படுகிறார்கள். அந்த நிகழ்வு ராக் பாடகர்களின் இசை நிகழ்ச்சியாகவோ, நோபல் அறிஞர்களின் உரையாகவோ இருக்கலாம். இந்த எதிர்பாராத தன்மையின் வியப்பும், கிளுகிளுப்பும் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. இவ்வாறு அடக்கமாகவும், அந்தரங்கமாகவுமே தங்களது நேரத்தை, நுகர்வு நடவடிக்கையை மேட்டுக்குடியினர் கழிக்கிறார்கள்.


 உலகின் மிகச்சிறந்த, அதிக விலை மதிப்புள்ள தயாரிப்புகள் எனச் சொல்லப்படும் பொருட்களை விடவும், அதிகம் பெயர் பெறாத, ஆனால், தங்களது ரசனை, விருப்பங்களுக்கேற்ப தயாரிக்கப்படும் பொருட்களைத்தான் மேட்டுக்குடி வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். இது ஒரு பெரிய ரசனைமாற்றம் என நுகர்வுத் தொழில் நிபுணர்கள் புல்லரிக்கிறார்கள். இதற்கான காரணத்தையும் அவர்களே எடுத்தியம்புகிறார்கள்.


 உலகின் எந்த மூலையிலிருந்தும் எந்தப் பொருளை வேண்டுமானாலும் இணையத்தில் வாங்கி விட முடியும் என்ற நிலையில், குவியும் எல்லாப் பொருட்களையும் எல்லாப் பணக்காரர்களும் வாங்கி விட முடிகிற நிலையில், இங்கே தனித்துவமானது எது? "நான் யார்', "எனக்கு மட்டுமே உரியது எது?' என்ற தேடலில் தனக்கென பிரத்தியேகமானதைத் தயாரிக்கச் செய்து வாங்குவதில்தான் தனது ரசனையும், சொகுசும் உயர்ந்த தளத்திற்குச் செல்வதாகவும், தம்மை வெளிப்படுத்தி கொள்வதாகவும் மேட்டுக்குடியினர் கருத துவங்கியுள்ளார்களாம். 


 வழக்கமான நுகர்பொருட்களில் புதிய தலைமுறையைச் சேர்ந்த மேட்டுக்குடி நுகர்வோர்கள் அலுப்படைந்து விட்டதாக  ஹெச்.எஸ்.பி.சி சேவை அதிகாரி ஆண்டோன் பெல்ஜே கூறுகிறார். ஆனால், சொகுசுப் பொருட்களின் நுகர்வு குறைந்துபோய் விடவில்லை. மாறாக கோடீசுவர புதிய தலைமுறை நிறைய எதிர்பார்க்கிறதாம். மேலும், தமது ரசனைக்கும், விருப்பத்துக்கும் ஏற்ற பொருளை என்ன விலை கொடுத்தும் வாங்கத் தயாராகவும் இருக்கிறது. எனவே, தமது முந்தைய தலைமுறை மேட்டுக்குடி நுகர்வோர்களை விடவும் இவர்கள் ஆண்டுக்கு 16,000 டாலர் அதிகமாகச் செலவிடுவதாகவும் குறிப்பிடுகிறார்.


 ஆடை அலங்கார பேஷன் ஷோக்கள் உயர்ந்த ரசனைக்குரிய பொருட்களையும், தள்ளுபடி விலைப் பொருட்களையும் ஒரு சேரக் காட்டுவதால் அவை தமது உயர்குடித் தன்மையை இழக்கின்றனவாம். உயர் ரசனைப் பொருட்களை ஊடகங்கள் உலகத்துக்கே காட்டி விடுவதால் அவை அந்தரங்கத் தன்மையையும் இழந்து விடுகின்றனவாம். எனவே, மேட்டுக்குடியினர் தற்பொழுது தமக்கான பிரத்தியேகமான பேஷன் ஷோக்களைத் தமது வீடுகளிலேயே நடத்திக் கொள்ளத் தொடங்கி விட்டனர்.


 இலண்டனைச் சேர்ந்த சேவை நிறுவனமொன்று, உறுப்பினர்கள் மட்டுமே தங்கக் கூடிய பிரத்தியேக ஹோட்டல்களைக் கட்டி வருகிறது. இந்த ஹோட்டல்களில் வாடிக்கையாளர்கள் வரவேற்பறைக்கு சென்று தாங்கள் வந்திருப்பதாகக் கூட தெரிவிக்கத் தேவையில்லை. வாசலில் உள்ள தானியங்கிக் கருவியில் ஒரு கார்டை காட்டினாலே போதும், அவர்களைத் தனிப்பட்ட முறையில் வரவேற்க பணியாட்கள் வந்து விடுவார்கள். இணையத் தளங்களிலும் அழைப்பின் பேரில் மட்டுமே உறுப்பினராகக் கூடிய, மேட்டுக்குடியினர் மட்டுமே உறுப்பினராகத்தக்க தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


 மில்டன் பெட்ராசா இப்போக்கினைச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறார். "வசதி படைத்தவர்கள் இப்போது வலை உலகத்திலும் சரி, நிஜ உலகத்திலும் சரி, தமக்கான தனிப்பட்ட, அந்தரங்கமான குழுக்களிலேயே வாழ விரும்புகிறார்கள். மேட்டுக்குடியினர் தமது அந்தரங்கமாக "இனத்தவரோடு' மட்டுமே இருக்க விரும்புகிறார்கள். எனவே, அவர்களுக்கு சேவை செய்வதற்காகவே உயர்வர்க்க ரசனை, பண்புகளை அறிந்த பணியாளர்கள் குடிசைத்தொழில் பண்டங்களைப் போல தயாரிக்கப்படுகின்றனர்.


 வித்தியாசமானதை விரும்பும் உயர்குடி வாடிக்கையாளர்களின் மனமறிந்து சேவை செய்யும் விதத்தில் தமது உத்திகளை நிறுவனங்கள் வகுக்கின்றன. இவ்வாழ்க்கை முறையில் நன்கு பழகிய மேட்டுக்குடியினரே  புதிய நுகர்பொருட்களை சந்தையில் அறிமுகமும் செய்கின்றனர். ஆடை, அலங்கார நிறுவனங்கள், சேவை நிறுவனங்களையும் துவக்குகின்றனர்.


 மேன்மக்களே மேன்மக்களுக்கு சேவை செய்யும் இப்போக்கு வளர்ந்து கொண்டேதான் செல்லும் எனத் தெரிவிக்கின்றனர். எனவே, அந்தரங்கத்தைத் தேடும் முதலாளிகளின் தேவைக்கேற்ப, அவர்களது மனதை "டச்' பண்ணுவதாக சேவையும் மாறி வருகிறது. கண்டங்களைத் தாண்டி ஓய்வு இல்லங்களைத் தேடிப் பறக்கும் மேட்டுக்குடி வாடிக்கையாளர்கள் பிளாஸ்மா டிவிக்களையோ, சொகுசு அறைகளையோ பெரிதாக நினைப்பதில்லை.


 மாறாக, உல்லாச ஓய்வு இல்லங்களிலிருந்து திரும்பிச் செல்கையில் அவர்களது கார்களில் உள்ளூர் மலர்களை வைத்து வழியனுப்புவது, பில்லுடன் அவர்களது விருப்பத்திற்குகந்த உணவைத் தயார் செய்யும் முறையையும் இணைத்துத் தருவது – இது போன்ற சின்னச் சின்ன விசயங்கள்தான் அவர்களது இதயங்களைக் கொள்ளை கொண்டு விடுகிறதாம்.


 ஸாவின் எனும் மேட்டுக்குடி ஓட்டல் நிறுவன முதலாளி, ""இது உடைமை உணர்ச்சிக்கு மாறாக இருத்தலின் உணர்ச்சியாகும்'' எனத் தெரிவிக்கிறார். இவ்வாறு பஞ்சு மெத்தையில் புரண்டவாறு இருத்தலை தேடியலைந்து, யதார்த்த உலகத்தில் கிடைக்காததாலோ என்னவோ, "இரண்டாம் வாழ்க்கை' எனும் இணையதள விளையாட்டில் மேட்டுக்குடியினர் இறங்குகிறார்கள்.


 செயற்கையான உலகமான இந்த விளையாட்டில், அந்த உலகத்திற்கென தனி நாணயம் உள்ளது. அங்கே நகைகள், ஆடைகள், அணிகலன்கள், அசையாச் சொத்துக்கள் என எல்லாப் பொருட்களையும் வாங்கவோ, விற்கவோ முடியும். அந்த இணையத் தளத்தில் அவர்களது ரசனைக்கேற்ற பொருட்களை நிறுவனங்கள் விளம்பரப் படுத்துகின்றன; காட்சிக்கு வைக்கின்றன. இந்த செயற்கை நுகர்வு உலகத்தில் அவர்களது இருத்தலின் தேடல் தொடர்கிறது.


 நடுத்தர வர்க்கத்தை "உட்கார்–வாயை மூடு, வாங்கு' (ண்டிt ஞச்ஞிடு, ண்டதt தணீ ச்ணஞீ ண்டணிணீ) எனக் கட்டளையிடுகிறது நுகர்வுத் தொழில். விளம்பரங்களின் வழியாக நுகர்பொருட்களால் கட்டமைக்கப்பட்ட ஆளுமைகளை முன்வைத்து செயற்கைத் தேவைகளை உருவாக்குகிறது. ஆனால், சொத்து சேரச் சேர நுகர்பொருளை மென்மேலும் சொந்தமாக்கிக் கொள்வது தனது ஆளுமையை அடையாளம் காண்பது என்ற நிலை அவர்களுக்கு அலுப்பூட்டுகிறது. எனவே, தனக்கான பிரத்தியேகமான நுகர்பொருளைத் தேடும் ரசனையை நோக்கித் தாவுகிறது கோடீசுவர வர்க்கம்.


 பொருட்களின் நுகர்வில் நிகழ்ந்துள்ள இந்த ரசனை மாற்றம், அந்தரங்கமானதை தேடும் ஆன்மீகத் தேடல், முதலாளிகளின் மூளையில் தானாகவே உதித்து விடவில்லை. இது சியோன் ஜானைப் போன்றவர்களின் சாரத்தின் தேடலில் உருவான சிந்தனைப் பாய்ச்சலல்ல. மாறாக, கடந்த சில ஆண்டுகளில் உலக முதலாளித்துவத்தின் செல்வம் மென்மேலும் மிகப்பெரிய அளவில் திரண்டதன் விளைவும், வெளிப்பாடாகவுமே இந்த ரசனை மாற்றத்தின் ரசவாதம் நிகழ்ந்திருக்கிறது.


 2006 மெரில் லின்ச் உலக வளங்கள் அறிக்கையின்படி, தற்பொழுது 8.7 மில்லியன் கோடீசுவரர்கள் உள்ளனர். பத்தாண்டுகளுக்கு முன்பு 16.6 டிரில்லியன் டாலர்களை கொண்டிருந்த உலக முதலாளித்துவத்தின் சொத்து மதிப்பு, தற்பொழுது 33.3 டிரில்லியன் டாலர்களாக அதிகரித்திருக்கிறது.


 உற்பத்தியை நிர்வாக மேலாண்மை சம்பளச் சிப்பந்திகள் கவனித்துக் கொள்கிறார்கள். தொழில்நுட்பப் புரட்சி உலகின் எந்த மூலையிலிருந்தும் லேப்டாப்பில் வேலைகளை முடித்து விடுகிறது. நிதி மூலதனத்தின் பகாசுர வளர்ச்சியும், ஊக வாணிகத்தின் கொள்ளை லாபமும், தொழிலாளிகளின் "தொல்லையின்றி' சம்பாதிக்கும் கோடீசுவரர்களை உருவாக்கியிருக்கிறது.


 ஏங்கெல்ஸ் தமது நூலொன்றில் குறிப்பிடுவதைப் போல, இலாபத்தைச் சுருட்டிக் கொள்வதும், ஊக வாணிப சந்தையில் சூதாடுவதையும் தவிர முதலாளிகளுக்கு சமூக வேலை எதுவும் இல்லாமல் அற்று போய் விட்டது. மற்றொருபுறம், சேவை நிறுவனங்கள், ஆடை அலங்கார நிறுவனங்கள், அழகு சாதனங்கள், சொகுசு, உல்லாசக் கேளிக்கைகளை ஒருங்கிணைக்கும் நிறுவனங்கள் ஆண்டுக்கு 8 சதவீதம் வளர்ந்து வருகின்றன. இணையம் மூலமாகவும், விளம்பரங்கள் மூலமாகவும் பொருட்களும், சேவைகளும் குவிகின்றன. 


 விளைவு, அளவின்றி பண்டங்களை நுகர்ந்து சலித்த கோமான்களுக்கு, அபரிமிதம் அலுப்பைத் தருகிறது. சலித்துப் போன மனம் தனது சாரத்தைத் தேடுகிறது. பண்டங்களின் முத்திரைகளைத் தாண்டிச் செல்வதற்கான ஆவல் ஊற்றெடுக்கிறது. உலக மக்களின் வயிற்றிலடித்து உருவான சொத்து உல்லாசத்தில் கழிந்தும் கூட போதாமை உருவாகிறது. இன்னும் இன்னும் என சந்தையின் விரிவகற்சியைப் போல நுகர்தலும் புத்துணர்வைத் தேடுகிறது.


 எதையும் விலை கொடுத்து வாங்க முடிந்த நிலையில், மென்மேலும் சொகுசையும், தனித்தன்மையையும், இரசனையையும் தேடுவதன் மூலம் "தனது சாரத்தை' கண்டறிய முயல்கிறது. இறுதியில் தனக்கு மட்டுமேயான, மிகவும் பிரத்தியேகமான நுகர்பொருளில்தான் இந்த வர்க்கம் தனது சாரத்தைக் கண்டுபிடிக்க முடிகிறது.


 முதலாளி இப்போது மன்னனாகி விட்டான். இந்த ஆண்டைகளின் சலிப்புணர்வை நீக்கி, புதுமை உணர்வைத் தர அடிமைச்சேவை நிறுவனங்கள் தமது மூளையை கசக்குகின்றன. இந்த சாரத் தேடலின் துணை விளைவாக, நிலப்பிரபுக்களைப் போலவே வள்ளல்களாக அவதாரமெடுப்பதும், ஆளுக்கொரு அறக்கட்டளை துவங்குவதும் நிகழ்கின்றது. இதற்கு கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு எனப் பெயரும் சூட்டப்படுகின்றது.


 வங்காளத்தின் ஒரு புறத்தில் சிங்கூரில் விவசாயிகளைத் தமது நிலங்களிலிருந்தும், வாழ்க்கையிலிருந்தும் பிய்த்தெறிந்து விட்டு,  ஆயிரக்கணக்கான நிலங்களை அடிமாட்டு விலைக்கு வளைத்துப் போடும் டாடா, இன்னொரு புறத்தில் புற்றுநோய் மருத்துவமனை கட்டுகிறார். பில்கேட்ஸ் கோடிக்கணக்கில் எய்ட்ஸ் ஒழிப்புக்கு நன்கொடை வழங்குகிறார். கொள்ளையடித்தது எவ்வளவு, கொடுத்தது எவ்வளவு எனக் கணக்கு பார்க்க முடியுமா? கணக்கு பார்த்தால் முதலாளிகள் புண்பட்டு விட மாட்டார்களா?


 தொழிலாளிகளின் சட்டப்பூர்வ உரிமைகளைக் கடுகளவும் மதிக்காத முதலாளிகளை நோக்கி சுண்டு விரலைக் கூட நீட்டாத அரசு, அவர்கள் பொற்காசுகளை வீசியெறிவதற்காகக் கைகூப்பிக் கெஞ்சுகிறது. சாரத் தேடலில் சிக்கிய சீமான்கள், மக்களிடையே நிறுவனத்தை பிரபலமாக்கவும், வரி ஏய்ப்புகளுக்காகவும் சில இலட்சங்களை வீசியெறிகின்றனர். உடனடியாக அதனை உச்சிமோந்து கொண்டாடி, புகழ் மாலைகள் சொரியப்படுகின்றன.


 ஆயினும், ஊதிப் பெருக்கக்கப்படும் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வின் மூலம் 2007 நிதியாண்டில், இந்தியாவிலுள்ள 500 பெரிய நிறுவனங்களின் கல்லாப் பெட்டியிலிருந்து கசிந்த தொகை வெறும் 2000 கோடி மட்டுமே. இது வருந்தத்தக்கது என ஆளும் வர்க்கமும், தன்னார்வக் குழுக்களும் அலுத்துக் கொள்கின்றன.


 தனது சாரத்தின் தேடலில் முதலாளித்துவ வர்க்கம் ஒருபோதும் கண்டறிய முடியாத பேருண்மை இதுதான்; அது அழுகும் வர்க்கமாகி விட்டது. சமூகத்தை ஆள்வதற்கு மட்டுமல்ல, உற்பத்திக்கும், சமூகத்திற்கும் தேவையற்றதொரு வர்க்கமாகி விட்டது.


 விதவிதமாக நுகர்வதையே தனது வாழ்க்கை முறையாகக் கொண்டு, சமூகத்தின் செல்வங்களை ஊதாரித்தனமாகச் செலவிடுவதையே தனது அன்றாட நடவடிக்கையாகக் கொண்டு வாழும், இவ்வர்க்கத்தின் ரசனை மாற்றமான அந்தரங்கத் தேடல் உயர்ந்த தளத்தை நோக்கி செல்வதையல்ல, மாறாக பின்னோக்கி மகாராஜாக்களுக்கும், மகாராணிகளுக்குமான  அந்தப்புர காலத்தை நோக்கி செல்வதையே காட்டுகிறது.


 தனக்கான அந்தரங்கத்தையும், தனித்துவத்தையும் வெளிக்காட்டும் பொருட்களாக தான் கருதும் ஊதாரிப் பொருட்களின் மூலம் தனது இருத்தலின் அர்த்தத்தையும், நியாயத்தையும் தனக்கே வழங்கி திருப்தியுற முயல்கிறது.


 இவ்வாறு செல்வம் திரளும் ஒரு முனையில்  இருத்தலின் தேடல், புதிய புதிய நுகர்பொருட்களையும், நுகர்வு முறைகளையும் உருவாக்கி ரசிப்பதாகவே இருக்கிறது. மற்றொரு முனையிலும் கூட இருத்தலின் தேடல் புதிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கத் தான் செய்கிறது ஹைதி நாட்டின் களிமண் ரொட்டிகளைப் போல!


 மக்சீம் கார்க்கியின் "தாய்' நாவலில், உழைத்து உழைத்து ஓடாகிப் போன, சாவின் விளிம்பில் நிற்கும் சவேலி  என்னும் ஆலைத் தொழிலாளி, தனது முதலாளி குறித்து, குலை நடுக்கும் இருமலோடு,  தாயிடம் கூறுவான். "அவர்கள் ஏன் மக்களை வேலையால் சாகடிக்கிறார்கள்? ஒரு மனிதனின் வாழ்நாளை அவர்கள் ஏன் கொள்ளையிட்டு பறிக்கிறார்கள்? என்னை வேலையைக் கொடுத்தே கொன்று விட்ட அந்த மனிதன் என்னுடைய வாழ்க்கையின் ரத்தத்தைக் கொண்டு தன் வைப்பாட்டியைக் களிப்பூட்டினான். என்னுடைய ரத்தத்தைக் கொண்டு அவன் அவளுக்கு தங்கத்தாலான மூத்திரச் சட்டியை வாங்கிக் கொடுத்தான் ! சவேலியின் ரத்தம் இன்னமும் கொதித்துக் கொண்டுதானிக்கிறது.


· வானன்

Last Updated on Monday, 21 July 2008 05:18