Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் ஒடுக்கப்பட்ட தமிழ்தேசியத்தில் உருவான ஒடுக்கும் தேசியம், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் ஜனநாயக கோரிக்கையை எப்படி மறுத்தது?

ஒடுக்கப்பட்ட தமிழ்தேசியத்தில் உருவான ஒடுக்கும் தேசியம், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் ஜனநாயக கோரிக்கையை எப்படி மறுத்தது?

  • PDF

இதை செய்தது, சொந்த தமிழ் தேசிய இனத்தில் இருந்த எதிர்புரட்சி அரசியல் தான். அது கையாண்ட வழி, சூழ்ச்சிகரமானது. முதலில் அது செய்தது என்ன? ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் கோரிக்கைகளை தான் ஏற்றுக் கொள்வதாக காட்டிக்கொண்டது. இப்படி அந்த மக்கள் தமது சொந்தக் கோரிக்கையுடன் ஒரு தேசியத்துக்காக அணிதிரளா வண்ணம் தடுத்தது. இதன் மூலம் ஒடுக்கும் தமிழ் தேசியத்தின் தேவைக்கு ஏற்ப, அவர்களை ஒடுக்கியது தான் எமது தேசிய வரலாறாகும்.

 

இப்படி இரண்டு வழிகளில், இதை அக்கம் பக்கமாவே இந்த எதிர்புரட்சி அரசியலைச் செய்தது.


1. ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக கூறி, அதை தனக்குள் வைத்து திரித்து ஒடுக்கியது.

 

2. ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் கோரிக்கையை சுயமாக தனித்துவமாக எழுந்த போதெல்லாம் அதை வன்முறை மூலம் ஒடுக்கியது.

 

இந்த இரண்டு வழியையும் அனைத்து (பெரிய) இயக்கங்களும் செய்தன. சமூக விடுதலை, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு முதல் சோசலிசம் வரை இவர்கள் தாராளமாகவே கதைத்தனர். கட்டுரைகள் முதல் அரசியல் அறிக்கைள் என அனைத்தையும் வெளியிட்டனர். 

 

இடதுசாரியம் முதல் வலதுசாரியம் வரை, தனக்கும் ஒரு கலவைக் கோட்பாடாக கலந்து தேசியத்தை திரித்தனர். வலதுசாரியத்தை பேணவும், அணிகளை ஏமாற்றி திரட்டவும், சமூக முரண்பாடுகளை ஒடுக்கவும், இவர்களுக்கு இடதுசாரிய வேஷம் உதவியது. புலிகள் முதல் ஈ.பி.ஆர்.எல.;எவ் வரை வலதுசாரியத்தை அமுல்படுத்துவதற்கு, இடதுசாரியத்தை பண்பளவில் வேறுபட பயன்படுத்திக் கொண்டனர். இதைத் தவிர எந்த வேறுபாடும், அரசியல் ரீதியாக இவர்களிடையே கிடையாது. இன்று இவர்கள் எல்லோரும் தான், ஒரே குரலில் மக்கள் போராட்டம் சாத்தியமில்லை என்கின்றனர். சொல்லும் காரணம் தான் வேறுபடுகின்றது. புலி அல்லது அரசை, இதில் ஏதோவொன்றை ஆதரிப்பது தான், நடைமுறைச் சாத்தியமான தீர்வு என்கின்றனர்.

 

தமிழ்மக்கள் தமக்கிடையிலான சமூக முரண்பாடுகளை களைவதற்கு எதிராகவே, உண்மையில் இந்த தேசிய இயக்கங்கள் ஆயுதமேந்தின. இன்றும் தமிழ்மக்கள் தமக்கிடையிலான முரண்பாடுகளையும், தப்பபிராயங்களை நீக்கப் போராடுவதற்கு எதிராகவே தமது ஆயுதத்தை நீட்டி வைத்துள்ளனர். இப்படி புலி முதல் புலியெதிர்ப்பு வரை, தமது எதிர்ப்புரட்சி அரசியல் செய்கின்றனர். உண்மையில் இந்த எதிர்ப்புரட்சிக்காகவே, அவர்கள் அன்றும் இன்றும் ஆயுதமேந்தி நிற்கின்றனர். அவர்கள் பேசும் தேசியம், ஜனநாயகம் எல்லாம் இதற்காகத்தான். சாதாரணமாக உழைத்து வாழும் மக்களுக்கு எந்த அரசியல் உரிமையையும் வழங்கிவிடக் கூடாது என்பதே, இவர்களின் அரசியல். இதை யாரும் மறுக்க முடியாது.

 

சாதாரணமான வாழ்வுசார் ஜனநாயக கோசங்களை தீர்ப்பதற்கு எதிராக, இயக்கங்கள் தமது கோமணத்தைக் உயர்த்திக் காட்டியபடி ஆயுதமேந்தின. இப்படித்தான் தேசிய போராட்டம் திரிக்கப்பட்டது. மக்களின் ஜனநாயகத்துக்கான போராட்டம், புலியாகவும் புலி எதிர்ப்பு அரச சார்பாகவும் திரிக்கப்பட்டது. இன்று இப்படித் தான், இதற்குள் தான் உள்ளது. இயல்பாகவே இதற்கு எதிரான போராட்டம் எழுந்தது. ஆனால் இவை திட்டமிட்டு கொன்றது போல், மூடிமறைக்கப்படுகின்றது.


பி.இரயாகரன்
05.07.2008


தொடரும்

 

Last Updated on Wednesday, 16 July 2008 19:19