Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் தொந்தரவுகளின் அரசியல் (கற்றது: தமிழ் எம்.ஏ:படம் குறித்த விமர்சனம்) ----படம் பார்த்தவர்களுக்கு மட்டும்-----

தொந்தரவுகளின் அரசியல் (கற்றது: தமிழ் எம்.ஏ:படம் குறித்த விமர்சனம்) ----படம் பார்த்தவர்களுக்கு மட்டும்-----

  • PDF

கற்றது தமிழ் - தமிழ் எம்.ஏ.,எனும் தமிழ்ச்சினிமாவனது பிரபாகர் எனும் பெயர் கொண்ட, 26 வருடங்கள் வாழ்ந்து தானாகவே இறந்து போகிற ஒரு தமிழ் முதுகலைப்பட்டதாரி இளைஞன் எதிர் கொள்ளும் பிரச்சனைகளையும், அடையும் பாதிப்புகளையும், பற்றியதாகும். அதாவது பிரபாகர், தன் கதையைத் தானே சொல்லும் சுயசரிதைதான் ‘கற்றது தமிழ்’

 

பிரபாகர் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கிறான். அதனால், பாதிப்படைகிறான். அவ்வாறு பாதிப்படையும் போது சில காரியங்களைச் செய்கிறான். அவைகளில் பிறமனிதர்களின் உயிரைப் பறிப்பதும் ஒன்று. தான் செய்கிற காரியங்கள் குறித்து வருத்தமும் கவலையும் கொண்டாலும், அவைகளைப் ‘பாவம்’ என நினைத்தாலும். அச்செயல்களைக் குற்றம் என்று அவன் அக்கறை கொள்வதில்லை. இவ்வாறு தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளினால் பாதிப்புகளைச் சந்திக்கும் பிரபாகருக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இன்னொரு காரியமும் செய்ய வேண்டியதாகிறது. அது அவனது உயிரை விடுவதுதான். அதையும் அவன் செய்கிறான்.

 

படத்தின் கதையை இங்கு விவரிக்கப் போவதில்லை. படம் பார்க்காதவர்களுக்குப் புரிகிறது போல விமர்சனத்தையும் எழுதப்போவதில்லை. தலைப்பில் சொல்லியிருந்தாலும் கூட இன்னுமொரு முறையும் சொல்லி விடலாம். இவ்விமர்சனம் படம் பார்த்தவர்களுக்கு மட்டுமே!

 

தமிழ் சினிமா இதுவரையிலும் பேசி வந்திருக்கிற பிரச்சனைகளில் சமகாலப்பிரச்சனைகள்சிலவற்றைக் குறித்து முதன் முறையாகவும், காத்திரமாகவும் பேசியிருக்கும் படமாக கற்றது தமிழ் அமைந்திருக்கிறது. வெகுசன சினிமாக்களின் தயாரிப்பு மட்டத்தில் வைத்துப் பார்க்கையில்படத்தின், ‘துணிச்சல்’ மிகவும் பாராட்டுப் பெறும் அம்சமாக விளங்குகிறது. பாராட்டுகள்! தொழில் நுட்பரீதியாக சில விமர்சனங்கள் இருப்பினும், பல அம்சங்கள் பாராட்டக் கூடியதாக இருக்கிறது. படத்தின் முதிர்ச்சிக்கு இவைகளும் பக்க பலமாக நிற்கின்றன.

 

இப்படம் தரும் தொந்தரவையும் தாண்டி எழும்புகிற சில கேள்விகள்தான் இந்த விமர்சனம் எழுதுவதற்கான அடிப்படை. ஆனால் அதற்கான பதில்களைப் படத்தில் மட்டும் தான் தேட வேண்டுமா? வெளியிலும் தேடலாமா? என்கிற கேள்வி எப்போதும் எழுப்பப்பட்டு வருகிற சூழலில்; இருக்கிறோம். ஒரு சில நேரங்களில் படைப்பாளியிடம் கேட்பதற்கும் சில கேள்விகள் இருக்கத்தான் செய்கின்றன. படம் தன்னளவில் சில கேள்விகளுக்கு மௌனம் சாதிக்கும் போது நாம் படைப்பாளியிடமும் கேள்வி கேட்க வேண்டியதாகி விடுகிறது. வெளியில் தேடிப் பார்க்கவும் வேண்;டியதாகிறது. ‘பிரதி செத்துவிட்டது’ எனும் போக்குகளும் இருக்கின்றன. எனவே இதைச் சற்ற விவரிக்க வேண்டும்.

1

ஒரு படைப்பாளி தனது படைப்பை நிறைவு செய்கிறார்.அப்படைப்பு பல்வேறு கட்டங்களைத் தாண்டி பார்வையாளர்களிடம் வந்து சேருகிறது. பார்வையாளர்கள் படைப்பை அணுகும் போது, அப்படைப்பின் தன்மை காரணமாக அவர்களுக்கும் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அப்போது, பார்வையாளர்களும் அப்படைப்பு குறித்து எதிர்வினையாற்ற வேண்டியதாகிறது. இந்த எதிர்வினைகளை படைப்பாளி அங்கீகரித்துக் கொண்டும் பதிலளிக்க மறுக்கலாம், அல்லது அங்கீகரித்துக் கொண்டு விரிவான விளக்கம் கொடுக்கலாம், அல்லது தனக்கு உகந்தவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு தனக்குப் பாதகமானவற்றின் மீது கோபம் கொள்ளலாம். அல்லது அங்கீகரிக்காமல் மௌனம் சாதிக்கலாம், நிகழ்வு தகவுகளில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இவற்றில் எந்த ஒரு நிலைப்பாட்டினை படைப்பாளி எடுத்தாலும், அது அந்தப் படைப்பாளியின் சமூகப் பொறுப்பு என்கிற தன்மையைப் பொறுத்து அமையக் கூடியதாகி விடுகிறது. மேலும், ஒரு படைப்பானது சமூகத்தின் காத்திரமான தளங்களைத் தொடும்போது அதற்கான எதிர்வினை கூட பல்வேறு விதங்களிலும் காத்திரமாகத் தான் இருக்கமுடியும்.

 

பிரபாகர் எம்.ஏ., தன்னைப் பற்றியும் தனது நடவடிக்கைகளைப் பற்றியும் பேசி, அதை யுவான்சுவாங் என்கிற ஒரு ஒளிப்பதிவாளரைக் கொண்டு வீடியோ கேமிராவில் பதிவு செய்கிறான்.

 

இவ்வாறு பேசும்போது அவன் சொல்லும் ஒரு கருத்து, பிரபாகரின் ஒட்டு மொத்த சிந்தனைப் போக்கையும், கருத்துச்சார்பையும். வெளிக்கொண்டு வந்து விடுகிறது. அதனால், பிரபாகரது நடவடிக்கைகளைக் கொண்டு அவனது போக்குகள் குறித்;த தத்துவ ஆராய்ச்சியினைச் செய்ய வேண்டிய அவசியமில்லாமல் போய்விடுகிறது. பிரபாகர் கூறும் கருத்து அல்லது பேசும் வசனம் இதுதான்.

 

கதைக்குத்தான் காரணம், லொட்டு லொசுக்கெல்லாம் வேணும் நெஜத்தில காரணமும் தேவையில்ல, தர்க்கமும் தேவையில்ல. (There is no logic and no reason for real life).

 

படத்தில் சுட்டிக்காட்டப்படும் பல்வேறு பிரச்சனைகளைப் பற்றிய பிரபாகரின் அணுகுமுறைக்கு ஆதாரமாக இருப்பது இந்தக் கருத்துதான். பிரபாகரின் சமூகக் கண்ணோட்டம் துவங்குவதும் இந்தப் புள்ளியில்தான்.

 

யதார்த்திற்கு காரணமும் தேவையில்லை, தர்க்கமும் தேவையில்லை இங்கு தேவையில்லை என்பது கூட யதார்த்தத்திற்கு காரணமும், தர்க்கமும் இல்லை என்கிற விதமாகத்தான் வெளிப்படுகிறது. no logic, no reason என்றுதான் வருகிறது. not necessary எனச் சொல்வதில்லை

 

இவ்;வாறு பிரபாகரால் சொல்லப்படும கருத்திற்கு முன்னோடிகள் பலர் உண்டு. இரண்டு முக்கியமானவர்களைப் பார்ப்போம். ஒருவர் அகிராகுரோசேவா (ரஷோமான்) அப்புறம் ஆல்பெர் காம்யு (அந்நியன்) ஒருவரை மட்டும் விளக்கலாம். அகிரா. இவரது ரஷோமான் திரைப்படம் மிகவும் உச்சிமோந்து பாராட்டப்படுகிற திரைப்படம். படத்தின் தொழில் நுட்பம் கதை சொல்லும் உத்தியின் சிறப்புத் தன்மை இன்றும் பாராட்டப் பெறும் உலக சினிமாவாக இருந்து கொண்டிருக்கிறது.

 

2

 

ஒரு கொலை குறித்த பல்வேறு நபர்களின் கண்ணோட்டம் விவரிக்கப்படுவது தான் படம். (ள.பாலச்சந்தர் இயக்கி, சிவாஜி நடித்த ‘அந்தநாள்’ படத்தினை இதோடு ஒப்பிட்;டாலும் அந்த நாள் மாறுபட்டது) இந்தப் பல்வேறு கண்ணோட்டங்களும் யதார்த்தத்தில் இருக்கின்றன. அவைகள் எல்லாமே அக்கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளவர்களின் உண்மைகளாகவே இருக்கின்றன. ஆக பல்வேறு உண்மைகள் இருக்கின்றன. எனவே இறுதி உண்மை என்று எதுவுமே இல்லை, இதுதான் அகிராவின் தத்துவ விசார முடிவு.(At last there is no true)

 

இதே போலத்தான் காம்யூவின் “தற்செயல் என்பதின் உண்மை” என்பதும் இருக்கிறது. பிரபாகர் எம்.ஏ கூட யதார்த்திற்கு காரணமும் இல்லை என்கிறான். அகிராவும் சரி காம்யூவும் சரி, பிரபாகரும் சரி ஓரே கருத்துத் தளத்தில் தான் நிற்கிறார்கள்.

 

இந்தக் கருத்துத் தளம் மார்க்சியத் தத்துவத்தில் கருத்து முதல்வாதம் (Idealism) என சுட்டப்படுகிறது. இந்தக் கருத்து முதல்வாதத்திற்கு எதிரான தத்துவம் பொருள் முதல்வாதம் (Materialism) ஆகும். மார்க்சீயம் என்பது பொருள் முதல்வாதத் தத்துவம். பொருள் முதல்வாதிகள், கருத்து முதல்வாதிகளுக்கு எதிரான போராட்;டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இருப்பினும், மதம், கடவுள் நம்பிக்கை, தலைவிதித் தத்துவம் போன்ற உழைப்பைச் சுரண்டுகிற ஆளும் வர்க்கத்தினரின் அடிப்படை விவகாரங்களுக்கான தத்துவத் தலைமையிடமாக கருத்து முதல்வாதம் இருப்பதால் அதுவே செல்வாக்கு மிக்கதாக இருந்து வருகிறது அதற்கு எதிரான போரும் தொடர்கிறது.

 

ஐடியலிசத்தில் ஊறியவர்கள் அதைத் தவிர வேறொன்றுமில்லை என்கிற முடிவில் திடமாக இருப்பார்கள் உண்மை, யதார்த்தம், லட்சியம் என்றெல்லாம் ஆணித்தரமாகப் பேசுவது நகைப்பிற்குரியதாகவும், அறியாமையின் பாற்பட்டதாகவும் தோன்றும். அவர்கள் மெட்டீரியலிசத்தை உணராத வரை மாறவே மாட்டார்கள். ஐடியலிசத்தை சரியானது என்றெண்ணி மாயாஜாலக் கற்பனைகளிலேயே மூழ்கியிருப்பார்கள்.

 

ஆனால் பொருள் முதல்வாதிகள் இதைக் கடுமையாக மறுக்க வேண்டியிருக்கிறது.பிரபாகரின் பேச்சிலிருந்தும், நடவடிக்கைகளிலிருந்தும். சிலவற்றை எடுத்துக் கொண்டு பேசுவோம். இங்கு நலம் எடுத்துக் கொண்டு பேசுவது பிரபாகரின் விதிவிலக்கான செயல்பாடுகளை அல்ல. அவனுடைய ஒட்டு மொத்த நடவடிக்கைகளின் பிரதிபலிப்பாகயிருக்கும் சிலவற்றையே எடுத்துக் கொள்கிறோம்.

 

1.மானம் போனது யாரால்?

பிரபாகரின் தற்கொலைக்குத் தூண்டுதல் எது? போலீஸ் ஸ்டேஷனில் ஜட்டியோடு அமர வைத்த பின்னரும் எப்படி உயிரோடு இருப்பது என்கிற சிந்தனை. சற்று நேரத்திற்கு முன்பாகத்தான். மாணவர்களுக்கு ‘மானம்; நீப்பின்’ எனும் குறளை விளக்கியிருந்தான்.

 

சேச்சியின் மீதான போலீஸ்காரனின் காமம் தான் பிரபாகர் போலீஸ் ஸ்டேஷன் போவதற்கான அடிப்படை. ஆனால் இது பிரபாகருக்குக் கடைசிவரை தெரியாது. பொது இடத்தில் சிகரெட் பிடித்தல் என்கிற செயலைத் தவறாக தன்மீது சுமத்தி போலீஸ் தன்னை அவமானப் படுத்தியது என்றுதான் பிரபாகர் நினைத்துக் கொண்டிருக்கிறான். படத்தின் இறுதியில் தான் இப்படியானதற்கு; காரணம் இவன் தான் என்று போலீசைப் போட்டுத் தள்ளும் பிரபாகருக்கு போலீஸ் ஏன் அப்படி நடந்து கொண்டது என்பதைப் பற்றி யோசிக்கவே இல்லை.

 

பிரபாகருக்கு போலீஸ் சந்திர சேகரின் காமக் கொழுப்புதான் அடிப்படை. ஆனால் அதுவும் இல்லாமலும் போலீசால் அவமானப் படுத்தப்படுபவர்கள் அவமானப் படுத்தப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். அதற்குக் காரணம், திமிர்தான். அந்தத் திமிருக்கும் காரணம் உண்டு அது, சட்ட பூர்வமான ரௌடிக் கும்பல் என்பது தான். இந்தத் திமிர் அந்தத் துறைக்கு ஊட்டி வளர்க்கப் படுகிறது. ஆக அடிப்படை போலீஸ்திமிர்.

 

ஆனால் பிரபாகர் இதையெல்லாம் யோசிக்காதது பரிதாபதமானது அச்சங்காடு வனப்பகுதிகளில் யாரேனும் குட்டி பிரபாகரைப் பார்த்தால் உடனே அவனைக் ‘கற்றது தமிழ்’ பார்க்கச் சொல்லுங்கள் எதிர்காலத்தில் சில விசயங்களில் அவன் தெளிவாக நடந்து கொள்ள அது உதவும்.

 

தான் போலீசினால் அவமானப் படுத்தப்பட்ட ‘காரியத்திற்கான’ உண்மையான காரணத்தை அறியாத பிரபாகர் தன்னை போலீசு பிடித்தது தற்செயல் என்றுதான் நினைக்கிறான். “அந்நியனைப் போல” அவன் வேண்டுமானால் அப்படி நினைக்கலாம். ஆனால் பார்வையாளர்களும், இயக்குநரும் அப்படி நினைக்க முடியுமா? முடியாது? ஏனென்றால் பிரபாகர் கைது செய்யப்படுவதற்கான காரணமும் நமக்குத் தெரியும். அக்காரணத்தின் உள்ளே ஊடாடிக் கொண்டிருக்கின்ற இன்ஸ்பெக்டர் சந்திர சேகரின் காம அரிப்பிற்கான அழைப்பும், அதற்கு டீக்கடை சேச்சியின் மறுப்புமான தர்க்கமும் தெரியும்.சேச்சி – போலீசின் தொடர்பு இல்லாமல் போனாலும் கூட பொதுஇடத்தில் சிகரெட் பிடிக்கக் கூடாது எனும் சட்டம் இருக்கிறதே?சட்டமே இருக்கிறது பிறகு லாஜிக் இல்லாமல் இருக்குமா?

 

2. காரியத்திற்கான காரணம் எது?

 

பிரபாகர் தன்னுடைய செயல்களை நியாயப்படுத்தவில்லை என்று சொல்கிறான். ஆனால் ஆனந்தியைப் பெண்கள் விடுதியில் சேர்த்து விட்டு பாவத்திற்கு பரிகாரமாக ஏதாவது செய்ய வேண்டுமென்று எண்ணும் போதுதான் இப்படிப்பட்ட வீடியோ பதிவினைச் செய்கிறான். பாவம், பரிகாரம் என்பதெல்லாம் காரண தர்க்கங்களுக்கு உட்படாததா என்ன?

 

சரி, நியாயப்படுத்த விரும்பாதவன் பேசுவானா? பிரபாகர் தன்னுடைய கதையை மக்களுக்குச் சொல்ல வேண்டிய காரணம் என்ன? அதைப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து பதிவு செய்து சன்டிவியில் கொண்டு போய்க் கொடுக்;க வேண்டிய காரணம் என்ன?

 

இந்தக்காரணம் தெரியாத கேள்விகளுக்கும் கண்டிப்பாக பிரபாகரிடத்தில் பதில் இருக்கும் ஆக,காரணம் இருக்கிறது. அதனால்தான் பிரபாகர் இப்படியெல்லாம் செய்கிறான். ஆனால் காரணமும் தர்க்கமும் தேவையில்லை என்ற சொல்லி தப்பித்து விடுகிறான். காரணம் இருக்கிறது என்பதை இறுதியில் போலீஸ் சுற்றி வளைத்துச் சுடும் போதாவது உணர்ந்திருக்க வேண்டும் உணராமல் போயிருந்தால் அது பரிதாபத்திற்குரியதே!

 

4

 

3.அமரிக்காவிலிருந்து சென்னைக்கு!

 

பிரபாகருடன் கல்லூரியில் computer science படித்தவன் ரங்கன். அமெரிக்கா போய் அமெரிக்காரியை ‘வுட்பி’யாக்கிக் கொண்டு வந்திருந்தும் “நாமம்” என்கிற தனது கலாச்சாரத்தை வழுவாமல் கடைப்பிடிப்பதோடு, தமிழ் படித்திருப்பதால் பெண்களை அப்படித்தான் வெறித்துப் பார்ப்பான் என்று திமிராகச் சொல்பவன். அவனது அலுவலத்திற்குப் பிரபாகர் போயிருக்கும் போது சில பிரச்சனைகள் வருகின்றன. முதலில் ரங்கனின் சம்பளம் 2லட்சம் இதைக் கேட்டதும் பிரபாகர் அதிர்ந்து போகிறான். சென்னையில் கூட 2லட்சம் சம்;பளமாக வாங்குகிறார்கள் என்பதையும் அவர்களில் தன்னோடு ஓரே அறையில் தங்கியிருந்த தன்னால் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கப் பட்டவனும் கூட இருப்பான் என்பதையும் பிரபாகரால் செரித்துக் கொள்ள முடியவில்லை. தொந்தரவடைகிறான். முதலாளியைப் பார்த்துக் காரணம் கேட்கத் துடிக்கிறான். ஆனால் முதலாளி அமரிக்காக்காரர். மேலும், அதிர்ச்சி முதலாளி அமரிக்கா. அலுவலகம் சென்னையில், கொடுக்கும் சம்பளம் 2லட்சம் பிரபாகரால் தாங்க முடியவில்லை. கூடுதலாக ரங்கனைவிட அதிகமாக 1லட்சம் அதாவது 3லட்சம் சம்பளம் வாங்கும் பெண், தனது மேல்;சட்டைப் பனியனில் “தைரிய மிருந்தால் என்னைத் தொடு” எனப் பொருள் தருகிற ஆங்கில வாசகங்கiளைப் பொறித்திருக்கிறாள். அது அவளின் இஷ்டம் என்கிறான் ரங்கன் ஆனால் தமிழில் இப்படி எழுதிக்கொண்டு தெருவில் போக முடியுமா எனக் கேட்கிறான் பிரபாகர். “தைரியமிருந்தால்” எனும் சொல் பிரபாகரைத் தொந்தரவு செய்கிறது. கட்டுப்படுத்த முடியாமல் போய் பனியன் வாசகங்களின் படியே தைரியமாக நடக்கிறான். ரங்கனால் அடித்து விரட்டப்படுகிறான். பிரபாகரும் தான் செய்தது தவறு என்று தனது கைகளைச் சுவற்றிலும் மேசையிலும் ஓங்கி அறைந்து தண்டனை கொடுத்துக் கொள்கிறான்.

 

பல்வேறு கூறுகளைக் கொண்டது இக்காட்சி ஆனால் பிரச்சனை ஒன்றுதான் அது அமரிக்கமோகமும், அடிமைத்தனமும் அதற்கான எதிர்ப்பும் தான் பிரபாகருக்கு ஏற்படும் தொந்தரவு அவனில் இருந்து உருவானதல்ல. அப்படி உருவாகவும் முடியாது ரங்கன். அந்தப்பெண் அமரிக்கக் கம்பெனி, அமரிக்க முதலாளி, அமரிக்க மோகம், அமரிக்க அடிமைத்தனம் இவைகள் தான் பிரபாகருக்கு தொந்தரவு ஏற்படுத்தியவைகள். ஆனால் இதையும் பிரபாகரால் புரிந்து கொள்ளவே முடியவில்லை எனவே தான் தனது கைகளைத் தண்டித்துக் கொள்கிறான்.

 

படத்தின் இறுதியில் சன்டிவியில் பிரபாகரின் செய்திவந்த பிறகு நடக்கும் கருத்துக் கேட்டலில் “un buttened me” எனும் வாசகங்களை அணிந்து கொண்டுள்ள பெண், “எப்படிப் போட்டாலும் பார்ப்பாங்க” என்று சொல்கிறாள். பிரபாகரின் செயலுக்கான எதிர்ப்பைக் காட்டும் கருத்தைப் பதிவு செய்கிறது படம்.

 

ஆனால் இப்படிச் சொல்லுகிற அந்தப் பெண் “பட்டனில்லாமல் என்னை ஆக்கு” எனப் பனியன் போட்டுள்ள பெண் எப்படிப்பட்;ட வாசகங்களை அணிந்து கொண்டிருக்க வேண்டும்? எப்படிப் போட்டாலும் பார்ப்பான் என்றால், “பார்க்கிறாயா? செருப்பால் அடிப்பேன்”- என்று எதிர்ப்புக் குரலைத் தானே எழுதியிருக்க வேண்டும். அதை விடுத்து, திறந்துகொள் என்று எழுதுவது, யாருக்கு ஆதரவானது?; பார்ப்பவன்களுக்கு ஆதரவானது தானே!

 

5

 

“ஓட்டுப்போடாதே! புரட்சிசெய்! “என்றோ, “இந்து என்று சொல்லாதே! பார்ப்பான் பின்னே செல்லாதே!” என்றோ பனியணிந்தால் போலீசு கழட்டச் சொல்லும் தெரியுமா?

 

4. மெல்லத் தமிழினிச் சாகும்!

 

B.P.Oவில் வேலை பார்க்கும் கௌசிக்கைச் சந்திக்கும் காட்சி. B.P.O வில் வேலை பார்ப்பவர் களைத் தவிர ஏனைய எல்லோராலும் பாராட்டப் படுகிற காட்சி

 

போதையில் சாலையோரத்தில் வாந்தியெடுத்து நடைபாதையில் அமர்ந்திருக்கையில் ஒருகார் சேறடித்துவிட்டுச் செல்கிறது. ஆத்திரமடைந்த பிரபாகர் கல்லைத் தூக்கிக் காரின் மீது போட முயல்கையில் பின்னால் வரும் ஒருகார் ஒலியெழுப்ப திரும்பி அந்தக்காரின் முன்புறக் கண்ணாடியில் அந்த முண்டுக்கல்லைப் போட்டு உடைக்கிறான். உள்ளிருப்பவனை வெளியே இழுத்து ஏண்டா சேறடித்தாய்! என்று அவன்மீது சேற்றினைத் தடவ அவன் அந்தக் கார் எனச் சொல்லவும் நிதானமாகி சற்று விலகிப் போய்நிற்கிறான். தனது தவறை உணர்கிறான். தன்னுள் சுனாமியைப் போன்று சுழன்று வீசிக் கொண்டிருக்கிற எண்ணங்களை வடித்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது. அஞ்சு நிமிசம் பேசிவிட்டுப் போகலாம் வா! என கூப்பிடுகிறான் ஏற்கனவே மிரண்டு போன அவன், தனது பர்ஸ் செல்போன் ஆகியவவைகளை கார்பேனட்டில் வைத்து என்னைவிட்டு விடுங்கள் எனக் கெஞ்சுகிறான். தன்னைத் தவறாகப் புரிந்து கொண்;டதன் காரணமாய் கோபமடைந்து அவனைப் பிடித்து இழுத்து அருகிலுள்ள மூடியிருக்கும் கடைக் கதவினில் தள்ளிவிட்டு விட்டு அமர்ந்து பேசுகிறான்.

 

சம்பளம் 8,000 ரூபாய் சொந்தப் பெயர் கௌசிக் வேலையின் போது தாமஸ் B.P.O பித்தலாட்டங்கள் அம்பலமாகின்றன.டைட்டல்பார்க், இன்ஃபர்மேசன் டெக்னாலஜி, B.P.O கால்சென்டர் மாயத்தோற்றங்களாய் உதிர்ந்து விழுகின்றன. அமரிக்க நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் கௌசிக் பிரபாகர் சொல்லும் பாரதியின் கவிதையைத் தமிழ் மாதிரி இருக்கு என்கிறான்

 

2000வருடத்தமிழ் பேசும் எனக்கு 2000 ரூபாய் சம்பளம் 25 வருடத்திற்கு முன் வந்த கம்ப்யூட்டர் படிப்பிற்கு 8 ஆயிரம் சம்பளம் பாரதியின் கவிதையைத் தமிழ் மாதிரி இருக்கு எனக் கூறும் தமிழன்.

 

தமிழை விருப்பத்தோடு எடுத்துப் படித்த ஒரு தமிழ் முதுகலைப்பட்டதாரி இளைஞனுக்கு ஏற்பட வேண்டிய, ஆதங்கம்,ஆற்றாமை, தவிப்பு, அவலம்,கோபம், எரிச்சல்,துயரம், கழிவிரக்கம், வலி, வேதனை, இன்னும் எல்லா உணர்ச்சிகளும் குழறிக் கொந்தளிக்கும் காட்சி. தமிழ்ச்தேசிய உணர்வு மிகுந்தவர்களை மிக நெருங்குகிற காட்சியும் கூட.

 

இந்தக்காட்சி தமிழ்ப்படத்தின் காட்சிதான் ஆனால் இந்தப் பிரச்சனை தமிழுக்கு மட்;டுமேயான பிரச்சனையல்ல. தங்களுடைய வியாபாரங்களுக்கு ஊழியும் புரிய ஏதுவாக, குறைந்த கூலியில் கொத்தடிமைகளைப் பெறுவதற்காக, தாய்மொழிக் கல்வியைப் புறந்தள்ளி விட்டு அமரிக்க மோகத்தையும், ஆங்கில மோகத்தையும் ஊட்டி வளர்க்கும் கல்விமுறையைத் திறந்துவிட்ட புதிய கல்விக் கொள்கையால் பாதிக்கப்பட்டுப்போயுள்ள இந்தியாவின் அனைத்து தேசிய இனங்களுக்கு மான பிரச்சனை.

 

6

 

தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்திய குஜராத்தி, ஓரியா, இந்தி உள்ளிட்ட எந்த மொழியில் இந்தக்காட்சி மாற்றப்பட்;டாலும் பார்வையாளர்களின் ஆதரவினையும், கைதட்டல்களையும் பெறும் காட்சியாகவே இருக்கும் பாரதியாரின் இடம் மட்டும் மாறும்;. படத்தின் மையப்பிரச்சனை தமிழ்படிப்பதினால் ஏற்படுவது அல்ல. நான்கூட இரண்டு குறளைச் சொல்லி வாத்தியார் வேல பாத்து பொழச்சுக்குவேன் என பிரபாகர் ஓரிடத்தில் சொல்லித்தான் வைக்கிறான். ஆனாலும் தமிழ் படித்ததினால் பிரபாகருக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு புதிய கல்விக் கொள்கைதான் காரணம் ஆனால் இதைப் பிரபாகரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

 

5.பாத்ரூம் பைத்தியங்கள்

 

26 வயது பெண்ணைச் சந்திக்காத பிரச்சனை தமிழ் படித்தவர் என்பதால் ஒழுக்கத்தை உயிரினும் ஓம்பி வாழுகிறார். 26 என்ன சாகும் வரையிலும் - பெண்னையே சந்திக்காதவர்களும் இருக்கிறார்கள். இது சமூகத்தின் பிரச்சினையாக உள்ளது. இதற்கு என்ன செய்வது? பிரபாகர் சுட்டுத் தள்ளுகிறான் கடற்கரையில் அமர்ந்திருக்கும் ஜோடிகளைக் கண்டதும் வெறுப்பினால் சுட்டுத் தள்ளுகிறான். அல்லது தொந்தரவால் சுட்டுத்தள்ளுகிறான். இது சரியா? அதே கடற்கரையில் ஆனந்தியும் பிரபாகரும் அமர்ந்திருந்தக் கூடாதா? இருக்கலாம்.ஆனாலும் நான் சுடுவேன். ஏனென்றால் அது என்னைத் தொந்தரவு செய்கிறது என்கிறான்.

 

பரத்தையை ஐந்து நிமிட டிபனாகச் சாப்பிடும் சக அறைவாசி. தமிழ்க் கடிதம் கொடுத்தே ‘டேக்ஆப்’ செய்ய வைக்கும் நடைபாதைப் பழ வியாபாரியான இன்னுமொரு சக அறைவாசி. இப்படிப்பட்ட வாய்ப்புகள் கண்முன்னே விரிந்து கிடந்தும் பிரபாகர் அவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யவில்லை. காரணம் என்ன? வேறென்ன ஆனந்திதான்?

 

ஏழுவயதிலிருந்து தன்னோடு இணைத்துக் கொண்டிருக்கும் ஆனந்தியின் நினைவுகள் இருக்கையில் பிரபாகருக்கு ஏன் பாலியல் தொந்தரவு வருகிறது. ஏன் வரக்கூடாதா? வரலாம்,வரும்! “தைரியமிருந்தால் என்னைத் தொடு”, “பட்டனில்லாமல் என்னை ஆக்கு”- போன்ற வாசகங்கள் கண்முன் வருகையில் வரத்தான் செய்யும். பிரபாகருக்கான பிரச்சனை உடலியலில் உள்ளது. பனியன் வாசகங்களுக்கான பிரச்சனை அமரிக்க மோகத்திலுள்ளது. அமரிக்க அடிமைத் தனத்திலுள்ளது.

 

ஒன்று ஆனந்தியின் நினைவுகளோடு பிரபாகர் ஐக்கியமாகி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அல்லது, குறிஞ்சித்திணையின் வழி ஒழுகியிருக்க வேண்டும். அதை விடுத்து சுடுவது ஏன்? பிரச்சனையைப் பிரபாகரால் புரிந்து கொள்ள முடியவில்லை, என்பது தான் காரணம்.

 

6.துப்பற்றவனின் துயரம்

 

பிரபாகர் பேசும் விசயங்களில் முக்கியமானது சென்னையின் வர்க்க முரண்பாடு.சென்னையில் இரண்டே இரண்டுபேர்கள் உள்ளனர். (சென்னையில் மட்டும்தானா?) (Spenter plaza, Sathyam theatre, ATM center) -ஸ்பென்சர் பிளாசா, த்யம் தியேட்டர், ஏ.டி.எம்.சென்டர் இவைகளுக்கு உள்ளே ஒருவர் இருக்கிறார். இன்னொருவர் இவைகளுக்கு வெளியே இருக்கிறார் (இவரை நம்மாளு என பிரபாகர் சொல்கிறான்) சார்! சார்! சார்! என்று கூவிக் கூவி விற்பனை செய்தே சாகிறவர்.

 

(டிகிரி வாங்கினால் ஊரிலுள்ள ஒரு மாகாணி புறம்போக்கு நிலத்தை விவசாயம் செய்ய கடன் வாங்கலாம் என்பதால் எளிதானது என்ற அடிப்படையில் தமிழ் படிக்கவந்த முருகன், பிரபாகரின் வகுப்பு நண்பன். பிரபாகரை விட அதிக சதவீத மதிப்பெண்கள் எடுத்தவர். ஓடும் ரெயிலில் ‘கீர்;;;;;;;;;;சீப்’ விற்கிறார். முருகன் விவசாயம் செய்யவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. ஏனென்றால் கடன்வாங்கி அவன் விவசாயம் செய்திருந்தால் அப்போதே அவன் தற்கொலை தான் செய்திருப்பான். கடந்த சில ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் மட்டும் 14,000 பேர். விவசாயிகளைக் கொல்லும் தேசம், உருப்படுமா?

 

உலகமயத்திற்குப் பிறகான தமிழ் சினிமாவில் இந்தப் பிரச்சனையை வெளிப்படுத்திய முதல்படம் இதுவாகத்தானிருக்கும் என்று நினைக்கிறேன். நாகரீகக் கோமாளியில் கூட விவசாயிகள் பிரச்சனை மட்டுமே சொல்லப்பட்டிருந்தது.

 

அதுவரையில் நமுத்துக் கொண்டிருந்த பார்வையாளர்களையும் கூட சிந்தனைக்குள் தள்ளும் காட்சி. அதிரடியான கைதட்டல்களையும் கூட இக்காட்சி பெறுகிறது. ஆனால் இறுதித் தீர்வு என்ன? பிரபாகர் இதில் கையை விரிக்கிறான்?

 

இதற்கான தீர்வு என்ன என்று எனக்கு தெரியல இதையாரிடம் கேட்பது தெரியல, சி.எம்.மிடமா? பி.எம்.மிடமா? நிதியமைச்சரிடமா? இல்ல, அமரிக்க ஜனாதிபதி புஷ்ஷிடமா? தெரியல. அமரிக்காவுக்கு ஒரு ISD கால் போட்டுப் பேச ஒரு தமிழ் வாத்தியாருக்குத் துப்பில்ல–என்கிறான் பிரபாகர்.ஆனால் ஒரு பீஸாவுக்காவும், ஷ_விற்காகவும், கொலை நடக்கலாம் சென்னை அப்படிப்பட்ட அபாயத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. என்கிற எச்சரிக்கையை மக்களுக்குச் சொல்லி முடிக்கிறான்.

 

யாரிடம் கேட்பது என்று பிரபாகர் சொல்லும் வரிசையைப் பார்த்தால் தீர்வு எங்கிருக்கிறது என்பதை ஓரளவாவது பிரபாகர் உணர்ந்திருக்கக் கூடும் என்றே தெரிகிறது. அதைப் பல்வேறு காரணங்களுக்காக மறைத்திருக்கவும் கூடும்.சன்டிவியில் ஒளிபரப்ப மாட்டார்கள் என்பதும் கூடஅதில் ஒரு காரணமாக இருக்கலாம். நாம் படத்திற்கு உள்ளேயே போவோம்.

 

தற்செயலாகச் சுட்டுத்தள்ளுவார்கள் ஆனால், திட்டமிட்டுச் சுடமாட்டார்கள் தற்செயலாகச் சுடுவது கொலையல்ல விபத்து. திட்டமிட்டுச் சுடுவதுதான் கொலை. இருந்தாலும் இந்த டுழபiஉ. (பிரபாகருக்கு டழபiஉ இல்லாவிட்டாலும் கற்றது தமிழுக்கு இருக்கிறதே!) போதுமானதாக அல்லது நிறைவானதாக இல்லாததால், சிவபாணம் சாப்பிட்டு, கடவுளாகி, சிவனாகி, அழித்தல் தொழிலைச் செய்து, அதுகுற்றமுமில்லை என்று தாண்டவமும் ஆடவேண்டியிருக்கிறது. (உபயம்.கஞ்சா) படத்தில் இடைச் செருகலாக இந்தப் பாடலும் கருத்தும் வருகிறது. அதாவது நான் கடவுள் என்றால், நான் செய்யும் கொலையானது குற்;றமாகாது என்பது இதன் கருத்து. படத்தில் இந்தப் பாடல் காட்சிதவிர வேறு எந்த இடத்திலும் இந்தக் கருத்துரு துளியும் எட்டிப் பார்ப்பதில்லை எனவே இதற்கான அவசியம் என்ன?

 

‘நான் கடவுள்’என்கிற படம் தயாரிப்பிலிருக்கிறது. அந்தப் படம் காசியில் சாமியார்களிடையேயும் எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தின் நாயகளின் தோற்றமும், சூழலும் ஏனோ நமக்கு நினைவுக்கு வருகிறது. நான் கடவுள், அவ்வளவு தானா? 8

பிரபாகருக்கு எதுவெல்லாம் தொந்தரவு செய்கிறது?

 

1. மானமிழந்தபின்னும் உயிரோடிருப்பது-தொந்தரவு

2. 2லட்ச ரூபாய் சம்பளம்-தொந்தரவு

3. தைரியமிருந்தால் என்னைத் தொடு-தொந்தரவு

4. தமிழறியாதவனுக்கு சம்பளம் 8ஆயிரம்-தொந்தரவு

5. கடற்கரையில் ஆண் பெண் ஜோடிகள்-தொந்தரவு

 

இது போன்ற தொந்;தரவுகள் ஏகப்பட்;டது. பிரபாகருக்கு “டிஸ்டர்ப் ஆகுதடா” என நகம் கடிக்கிறான்.

 

“தொந்தரவு செய்கிறது” என்பது முழுமையான ஒரு பிரச்சனையல்ல. அது ஒரு பிரச்சனையினால் விளைகின்றவற்றில் ஒரு பகுதி மட்டுமே. இதை மட்டுமே எடுத்துக்கொள்வதென்பது பிரச்சனையை முழுமையாக வெளிப்படுத்தி விடுவதாகவும் ஆகாது, முழுமையாகப் பதிவு செய்வதாகவும் ஆகாது.

 

தொந்தரவு செய்பவைகளைப் பற்றிய முழுமை என்ன என்பதை அறியாமல், ஆராயமல், தொந்தரவிற்கான மிகச் சரியான எதிர்வினை ஆற்ற முடியாது.

 

அப்படியல்லாமல், வெறும் தொந்தரவிற்காக மட்டும் எதிர்வினையாற்றினால் காக்கை குருவிகள் போல சக மனிதர்களையும் சுடுவதில்தான் போய் முடியும்.

 

பிரபாகருக்கு ஏற்படும் தொந்தரவுகளும் அதனால் அவனுக்கு உண்டாகும் கோபமும் அவனுக்கு மட்டுமே ஏற்படும் தனித்த ஒன்றா? இல்லை. படிப்பறிவில்லாத, அறியாமையில் உழலும் மக்கள் கூட தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளினால் தொந்தரவடைகிறார்கள். அதனால் கோபப்படுகிறார்கள். கோபம் அதிகமாகி, ‘வெட்டித் தள்ளனும்’, ‘சுட்டுப்பொசுக்கணும்’ என்றெல்லாம் சொல்கிறார்கள். இது அப்போதைய உணர்வின் தற்காலிக நிலைதான். படிப்பறிவில்லாத, சமூகப் புரிதல் இல்லாத மக்களுக்கு உள்ள அதே கோபம்தான், தான் “டொக்கன்” அல்ல என்று அழுத்தமாகச் சொல்லிக் கொள்ளும் பிரபாகருக்கும் வருகிறது. இந்தக் கோபம் தேவையற்றதல்ல, தேவையானது தான். ஆனால் இந்தக் கோபம் தீர்வல்ல. ஆனால் தனக்குத் தீர்வு என்னவென்று தெரியவில்லை என்று சொல்லும் பிரபாகர் பல நேரங்களில் ஏதோ ஒரு தீர்வை நோக்கியே முன்நகர்கிறான். அப்போதும் அவன் தவறானதையே தீர்வு என நம்புகிறான் என்பதற்கான விளக்கங்கள் நிறைய உள்ளன.

 

“நான் கூட ஏதோ 2குறளச் சொல்லி வாத்தியார் வேலபாத்து பொழச்சுக்குவேன் சார்”- இது ஒன்று.

 

எனக்கு ரெண்டாயிரம் பத்தல என்று சொல்லல எனக்கு வறுமை, பசி என்றெல்லாம் சொல்லல- இது ஒன்று.

 

ஏன் இவ்வாறு இருக்கிறது? எல்லாவற்றையும் தற்செயல் என்று சிந்திக்கும் முனையிலிருந்து தான் இவ்வாறு இருக்கிறது.

 

B.P.Oதற்செயலா? பனியன் வாசகங்கள தற்செயலா? தமிழுக்கு அவமரியாதை தற்செயலா? சம்பளம் 2லட்சம் தற்செயலா? 5நிமிட டிபன் தற்செயலா? டேக்ஆஃப் தற்செயலா?- இல்லை இவை எதுவுமே தற்செயல் இல்லை. எல்லாம் திட்டமிட்டு நடைபெறுவதுதான் மனிதர் நோக மனிதர்வாழும்-படித்த பிரபாகர், கஞ்சி குடிப்பதிற் இல்லார் அதன் காரண்கள் தானென்ற அறிவுமிலார்-என்பதைப் படிக்காதது தற்செயலா?

 

பிரபாகர் சொல்லுகிற எனக்கு 2,000 பத்தலன்னு சொல்ல-என்கிறவைகளும் கூட தற்செயல் அல்ல. முன்னரே திட்டமிடப் பட்டது தான். 1.அமரிக்க ஏகாதிபத்தியத்தின் தன்மை- அது மூன்றாம் உலக நாடுகளைச் சுரண்டுவதற்காக மேற்கொண்டுள்ள நாடகங்கள் மற்றும் நடவடிக்கைகள்- கம்யூனிச எதிர்ப்பு-தனியார் மயம் - தாராளமயம் - உலகமயம் - சர்வதேச நிதியம் - உலகவங்கி உலகவர்;த்தகக் கழகம் - 1994ல் இந்தியா கையெழுத்திட்டு ஏற்றுக் கொண்ட அடிமைச் சாசனமான காட், டங்கல் ஒப்பந்தம் -இவைகளின் அடிவருடிகளாக உள்ள இந்திய ஆட்சியாளர்கள்-மொத்தத்தில் மறுகாலனியாக்கம்

 

2. இந்த மறுகாலனியாதிக்கத்தை எதிர்த்து போராடுவதற்குப் பதிலாக,குட்டி முதலாளித்துவ கையாலாகததனத்தின் அராஜக வாதம் - இதுவும் அந்த மறுகாலனியாக்கத்திற்கு மறைமுகமான ஆதரவுதான்-கற்றது தமிழின் கடைசி மூச்சு இதுதான்.

 

பிரபாகரால் ஒரு போதும், சமூகப் பிரச்சனைகளுக்கு மட்டுமல்ல, அவனது சொந்தப் பிரச்சனைகளுக்கும் கூட சரியான தீர்வைச் சொல்லமுடியாது. காரணம் அவன் கருத்து முதல்வாதி. அடிப்படையில் கருத்து முதல்வாதம் உருவாக்குகிற சிக்கல்களைக் கருத்து முதல்வாதத்தால் தீர்க்கவே முடியாது. தீர்வு தெரியல என்றும் நியாயப் படுத்த விரும்பவில்லை என்றும் கூறி தன்னை வித்தியாசப் பட்டவனாகக் காட்டிக் கொள்ள மட்டுமே எண்ணுகிற தொந்தரவுகளை மட்டுமே விரும்புகின்ற அராஜக வாதிகளால் பிரச்சனைகளைத் தீர்;க்கவே முடியாது.

 

தொந்தரவுகளுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்னவென்றால்,அது குட்டி முதலாளித்துவ அராஜக அறிவுஜீவிகளின் கையாலாகாததனத்தின் அரசியல்தான்.

ஆனால் நமக்குத் தேவைப்படுவதோ, மறுகாலனியாக்கத்திற்கு எதிரான புரட்சிகர எழுச்சியும் அதற்காகப் போராடும் இயக்கங்களும் தான்?

 

குருசாமி மயில்வாகனன்,

17-டீ காளிமுத்தன் தெரு,

சிவகங்கை -630 561

E-Mail This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it