Language Selection

ப.வி.ஸ்ரீரங்கன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ன்று, எழுதக்கூடியளவுக்கு ஒரு மரணம் என்னைத் தூண்டுகின்றது.கடந்த இரு கிழமைகளாக வைத்தியசாலையில் நான்.எனது தொண்டையில் அறுவைச் சிகிச்சை மூலமாக ஒருவித நோயைக் கட்டுப்படுத்திய பின் மீளவும் எழுதக்கூடிய நிலையில் நான் இல்லாதிருப்பினும்,இந்த மரணம் மிகவும் பாதிப்பைத் தருகிறது.

 


கடந்த 09.12.2006 இல் எனது கிராமத்தின் அதியற்புதக் கவிஞன்,சு.வி.என்ற சு.வில்வரெத்தினம் அவர்கள் அற்ப வயதில் காலமாகியுள்ளார்.இவரின் இழப்பானது ஈழத்துத் தமிழ் இலக்கியவுலகுக்கு மிகவும் ஈடுசெய்ய முடியாத இழப்பென்பது எனது கருத்து.தேசத்தில் எத்தனையோ கொடுமைகள் நிகழ்ந்துவிட்டன!இந்தக் கொடுமைகள் எல்லாம் எழுத்தில் வரமுடியாதளவுக்குக் காரணகாரியங்கள் மலிவுற்றுக் கிடக்கின்றன.இத்தகைய இடருக்குள்ளிருந்துகொண்டு-நெற்றிக்கு நேரே நிமிர்ந்து நிற்கும் துப்பாக்கியைத் தரிசித்தபடியே தமது குரலைப் பதிவிடவேண்டிய ஈழத்துச் சூழ்நிலையில், எவரொருவர் உருப்படியாக எழுதமுடியும்?எனினும் சு.வி. தன் அகத்தைப் பற்றவைத்துக்கொண்டு இந்தச் சூழலைத் தரிசித்திருக்கிறார்.அவரது படைப்புகள்மீதான விமர்சனங்களுக்கப்பால் அவர் மனித அவலங்களைப் பாடிய பாங்கு அளப்பெரியது.நம்பிக்கையையே அவர் மூலதனமாக்கியிருக்கிறார்.படைப்பின் உறுதிபோலவே நம்பிக்கையால் கட்டப்பட்ட வலுவான அத்திவாரமாக அவர் வாழ்ந்தும் இருக்கிறார்!-மறைந்தும் போய்விட்டார்!!


எங்கள் கிராமத்தின்(தீவின்) இடப்பெயர்வே ஈழத்தின் அனைத்து இடப்பெயர்வுகளுக்கும்,வலிகளுக்கும் முன்பாக நிகழ்தது(1991).சூரியக் கதிர் நடவடிக்கைக்குப் பின்பான யாழ் இடப்பெயர்வைக் குறித்துப் பற்பல ஒப்பாரிகள்,பரப்புரைகள் இடம்பெற்றளவுக்குத் தீவக இடப்பெயர்வு முக்கியம் பெறவில்லை.தீவகத்தில் வாழ்ந்த நாற்பதினாயிரம் மக்களும் தமது வாழ்விடங்களை-வளங்களைவிட்டு அகதியாகி இடம்பெயர்ந்த வலியானது சொல்லித் தீரக்கூடியதல்ல!


1996 இல் இடம் பெற்ற வலிகாமம் இடப்பெயர்வை"வலிகாமத்தின் முற்றத்திலிருந்து எம்மைக் குடியெழுப்பிக் கலைத்த..."(சூரியக்கதிர்,புலிகளின் வெளியீடு-பக்கம்:12.)என்று மிகவும் உணர்வு ப+ர்வமாகக் கருத்தாடுகின்ற புலிகளின் பரப்புரைகள் இந்தத் தீவின் இடப் பெயர்வைக் குண்டி மண்ணைத் தட்டியது போல"தீவுப்பகுதி எமக்கு கேந்திர முக்கியமற்ற பகுதி"என்றார்கள்.இவர்கள் தமது வளங்களைத் இந்தத் தீவுக்கூட்டங்களுடாகப் பெற்றுவிட்டு,அந்த மக்களை அம்போவென்று தவிக்கவிட்டுத் தமது வளங்களோடு ஓடித் தப்பியபோது, தீவுப்பகுதி மக்களின் அவலம் தொடர்கதையாகியது.கையில் கிடைத்ததோடு உயிரைக் கையில் பிடித்தபடி எனது உறவுகள் யாழ் மண்ணை நோக்கி அராலித்துறைய+டாக நடந்து-தரவைக்கடலைக் கடக்கும்போது, இராணுவத்தால் கொன்றழிக்கப்பட்டுத் தப்பியவர்கள், யாழ் பெரு நகரில் தெருவெங்கும் அலைந்தார்கள்.


இந்த மக்களின் மண்ணில் விளைந்து கிடந்தவற்றை இராணுவத்தோடு சேர்ந்து கொள்ளையடித்தவன் இன்று மந்திரியாகச் சிங்களப் பாராளுமன்றத்தில் இருக்கிறான்!தீவுப்பகுதி மக்களின் புகையிலையையும்,மிளகாயையும்,வெங்காயத்தையும் அவர்களின் வீட்டுக் கதவுகளை உடைத்துப் பாரிய பெட்டிகளாகச் செய்து, அவற்றை அதற்குளிட்டுக் கொழும்புக்குக் கடத்திப் பெரும் பணத்தைச் சம்பாதித்தான் டக்ளஸ் தேவானந்தா!ஆனால் அந்தப் பயிர்களைத் தமது குருதியால் விளைவித்த மக்களோ யாழ் மண்ணில் நாடோடிகளாக அலைந்தார்கள்-ஒரு சோற்றுப் பருக்கைக்குப் பேயாய் அடிபட்டார்கள்!


இந்தச் சோகத்தைச் சொன்னவன் அந்த மண் பெற்றெடுத்த புதல்வன் சு.வில்வரெத்தினம் மட்டுமே!

 

"சொல்லித்தானாக வேண்டும்
தத்தெடுப்பாரின்றி தனித்துப் போய்விட்ட எம் தீவுகளைப்பற்றி.

சஞ்சீவி மலையை அனுமன் காவிச்செல்கையில்
கடலிடைச்சிந்திய துண்டங்களாம்
இத்தீவுகளைக் கவனியாமலேக
கரைசேராத் திட்டுகளாய் தனித்திருந்தழுதனவாம்.

கைவிடப்பட்ட துண்டங்களை கரைசேர்க்க யாருமில்லை.
சஞ்சீவிமலையினின்றும் தூரித்த தீவுகளானோம் நாம்.

சஞ்சீவி மலையின் துண்டங்கள் நம் தீவுகள் என்றால்
விண்ணெழுந்து ராவணனைப் பொருதிய ஜடாயுவின்
துண்டாடப்பட்ட இறக்கைகளாய் நாம்

வெட்டுண்டோம்; வீழ்ந்தோம்
கடல்வெளித் தனித்தலைகிற மிதவைகளாய்
எக்கரையுமற்று எற்றுப்படுகின்றோம்.
ஆயினும்
வீழுமுன் விண்ணெழுந்து பொருதிய ஞாபகம்
வெட்டுண்ட இறக்கைகளுக்கு இல்லையெனலாமோ?

சஞ்சீவி மூலிக்காற்றே வா
வெட்டுண்ட இறக்கைகளுக்கு உணர்வின் தைலமிடு
எழுந்து பறந்ததாக வேண்டும்
எம் முந்தைப் புலம் நோக்கி
வெட்டுண்டு வீழுமுன் வீடிருந்த உச்சிப்புலம் அது.

இறந்தாரை எழுப்பும் சஞ்சீவி கொணர
அனுமனும் இங்கில்லை.
இராமர்அணையும் கடலுள் அமிழ்ந்தாச்சு
எம்முயிர்த்துவமே சஞ்சீவியாக
எழுந்து பறந்தாகத்தான் வேண்டும். "-(19.09.94, காற்றுவழிக்கிராமம் )என்று,எமது வதைகளைச் சொல்வதற்குத் அந்தத் தீவு பெற்றெடுத்த புதல்வனால் மட்டுமே முடிந்தது!

காற்றடிக்கலாம்,மழை சோவெனக் கொட்டலாம்,மண் விளைவதற்கு மனிதர்கள் இருந்தாக வேண்டும்.அதுபோலவே நாட்டில் அனைத்தும் நிகழலாம்-கிராமத்தில் குடிகளே அழியலாம்.அந்த வலியைச் சொல்வதற்கு அந்த மண்ணில் தப்பியவொரு உயிர் இருந்தேயாகவேண்டும்.எங்கள் மண்ணைப் பாடுவதற்கு இனியாருமில்லை!எங்களிடமிருந்தவொரு பாட்டுக்குயில் பறந்து,காத தூரம் போய்விட்டது.நமக்கென்றொரு வலியிருக்கிறது.அதைக் குறித்துப் பேசுவதற்கு வ.ஐ.ச.ஜெயபாலன்களால் முடிவதில்லை.ஆனாலும் நமது வலியை அதன் உண்மைத் தனத்தோடு சொல்லும் கொரிலாக்களையும் இந்த மண்பெற்றெடுத்துப் பாக்கியம் செய்தே இருக்கிறது.குறைந்த பட்சமாவது நம் வலியைப் பேசிய இந்தச் சு.வி. என்ற தீவுமகன் என் மனத்திலிருந்து நீங்கா அமரனாக நிலைத்தே இருப்பதற்காகக் காற்று வழி எனது கிராமத்தைப் பகிர்ந்து,ஒதுங்கியுள்ளான்.

"முற்றங்கள் பெருக்கும் ஓசைலயம்
பாத்திரங்களோடு தேய்படும் வளையல் ஒலி,
ஆச்சி, அப்பு, அம்மோயென
அன்பொழுகும் குரல்கள்-
ஒன்றையுமே காணோம்.

என்ன நடந்தது?
ஏனிந்தக் கிராமம் குரலிழந்து போயிற்று?
திகைத்து நின்றது காற்று
தேரடியில் துயின்ற சிறுவன்
திருவிழாச் சந்தடி கலைத்திருந்தமை கண்டு
மலங்க விழித்தது போல." -காற்றுவழிக்கிராமம்

"பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்பது போல நமது மண்ணை இராணுவத்திடம் பறிகொடுத்துவிட்டு,எங்கள் உறவுகள் நாயாய் அலைந்தபோது,நமது சோகம் சொல்ல எந்தவொரு ஊடகங்களும் முன்வரவில்லை!பெட்டிச் செய்திகளோடு பாம்பாய்ப் படுத்துறங்கிய கொடுமையை நாம் அறிவோம்.புலிகளின் பரப்புரையில் தீவின் இடப்பெயர்வு முக்கியமற்றவொரு விஷயமாகவே இருந்தது! இந்தப் பொழுதில்தாம்
சு.வி. தன் ஆன்மாவை வருத்திப் பாடுகிறான்.

"நீரறிவீரோ
என் நெஞ்சிலும்
கூடு கட்டி வாழும் குருவிகட்கு வாசலுண்டு
கூடிழந்து போனவரின்
நேசம் விட்டுப் போகாத நெஞ்சகத்தில் சோகமுண்டு
நீரறிய மாட்டீர்.

நீரறிதல் கூடுமெனில்
கோடைவழிப் போக்கில்
குளிர்த்தி வற்றிப்போன எங்கள் வாழ்நிலையின் சோகத்தை
எம்மவரைக் கண்டு இயம்புதல் கூடுமோ?
சற்றெமக்கு இரங்குங்கள்
நாளை நாளையெனக் காத்திருந்த நம்பிக்கை
முளைகருகிப் போகுமுன்னே வரவுண்டோ கேளுங்கள்".-காற்றுவழிக்கிராமம் .

இங்கேதாம் இந்த ஓரவஞ்சனையைக் கண்டு,கொதித்தெழும் சு.வி.,மக்களின் மனதைத் தனது பாடல்களுக்கூடாகக் காட்டி இந்தவுலகத்திடம் நியாயம் கோருகிறான்.அவன் கண்டடைந்த உண்மையானது,நம்மைக் கருவறுத்த அரசியல் சூழ்ச்சிகள் எங்கள் கிராமத்தையும் மக்களையும் நடாற்றில்விட்டுத் தப்பித்து விட்டதென்பதே!

இது கொடுமை!

நம் கிராமத்தின் முதுகெலும்பை உடைத்துத் தேசியம் பேசியவர்கள்,தேடுவாரற்று யாழ் மண்ணில் அலைந்த தீவாரைக் கண்டும் காணாததுபோல அரசியல் செய்தார்கள்.இந்த நல்ல மனிதர்களின் நரித்தனமான விடுதலைப் பண்ணுகள் எல்லாம் வலிகமத்தைச் சுற்றியே வந்தவை.அவை மருந்துக்கும் தீவுப்பகுதியைப் பாடியதில்லை.அந்த மண்ணை முடிந்தளவுக்குத் தமது வளர்ச்சிக்குப் பயன்படுத்திய அமைப்புகளெல்லாம் இறுதியில் அந்த மண்ணை இராணுவத்தோடு சேர்ந்து கொள்ளையடித்துக் கற்பழித்தார்கள்!இது வரலாறு.

"இன்று மாலையும்
படையினன் ஒருவன் வீசிச்செல்கிறான்
உடைத்தபெட்டகம் ஒன்றின்
ஒடிந்தகாலை.

கிராமதேவதையின் அணிகலன்கள் யாவுமே
களவாடப்பட்டு விட்டன.
ஒற்றைச்சிலம்பும் இவள் உடைமையாயில்லை.
பறிபோயின
பேச்சொலியும், கைவளையோசை வீச்சு நடையும்
பிறைநுதற் திலகமும்
அந்நியன் கைப்பட்டழிந்ததெனவாயிற்று.

சந்திவிருட்சங்களின் கீழே
இவளின் இதயஒளிர்வாய விளக்குகள் எரிவதில்லை
குந்தியிருந்தழுகிறாள் குமையும் இருள் நடுவே.

வல்லிருளின் ஆட்சி,
வழிப்போக்கிலும் இருள்தான்
வாழ்விடங்கள் எங்கும் இருள்.

பில்லிசூனியத்தில் பீடழிந்தனவாய் மனைகள்
எங்காவது ஓர் இடுக்கிடை
எட்டிப் பார்க்கின்ற ஆவிகள் போல
வாழ்வுறிஞ்சப்பட்ட வற்றல்மனிதர். "-காற்றுவழிக்கிராமம்

நம் தீவுமகள் திராணியற்றுக் கிடக்கிறாள்.அவளைத் தினம் புணரும் அந்த மகளின் புதல்வர்களே,அவளின் இன்றைய நிலைக்கும் காரணமானவர்கள்.எனது வீடும்,தோட்டமும்,துரவும் காடாகிவிட்டது.பெரு மரங்கள் வளர்ந்து, அனைத்துப் பகுதியும் காடுகளான பின்பும்,அந்த மண்ணை மறக்க முடியாது தவித்திருக்கும் ஒரு ஆன்மாவை எனது உடல் கொண்டிருக்கிறது.நிலத்தின் அனைத்துப் பரப்புகளிலும் புதைவெடிகள் கொட்டப்பட்டுத் தீவின் எந்தப் பகுதியும் மனித நடமாட்டத்துக்குத் தோதான பகுதியாகவின்றித் திருடர்களின்-காடேறிகளின்-பேய்களின் கூடாரமாக மாற்றப்பட்ட பெருங்கொடுமையைச் சொன்ன எங்கள் சு.வி. என்ற தீவின் பாட்டுக் குயில் பாடையில் போனது பற்றி நான் நொந்து கொள்வது,எனது கிராமத்தை எண்ணிக் கொள்வதற்காவும் இருக்கலாம்.

மனித வாழ்வின் ஒவ்வொரு பக்கமும் போராட்டம் நிகழ்ந்தபடியே இருக்கிறது.அது வாழ்வுக்கும்,வளர்வுக்குமாகப் பற்றிப்படர்ந்து தொடர்கதையாகிறது.இந்தத் தொடர்கதையில் ஒரு பாத்திரத்தைச் சு.வி. ஏற்றிருந்தார்.அவர் மனித வாழ்வின் ஒவ்வொரு திசையையும் கூர்ந்து கவனித்திருக்கிறார்.தனது மக்களினதும்,ஊரினதும் மகத்துவத்தை வேட்கையாகக் கொண்டு,பாட்டுக் கட்டியவர்.ஒரு கிராமத்தின் அழிவைப் படைப்பாக்கி, அதை அமர இலக்கியமாக்குவது அவரது நோக்காக என்றும் இருந்ததில்லை.மாறாகத் தனது கிராமத்தின் அழுகோலத்தை-அக்கிராமம் கற்பழிக்கப்பட்ட ஈனத்தனத்தை உலகறியச் செய்வதும்,அதற்காக நியாயம் கேட்பதும் அவரது பாரிய மனிதவிருப்பாக இருந்தது.

எங்களுரின் இதயம் எப்பவோ நின்று விட்டது.

அந்த இதயத்தை மீளவும் இயக்குவதற்குப் பாடுபட்ட இந்த மாபெரும் தீவு மைந்தன், தன் அமரகாவியத்தால் மடைதிறந்து என்றும் பேசுகிறான்,அந்தக் கிராமத்தின் நோய்களுக்கு மருந்திடும்படி விண்ணப்பித்தபடி...

"உற்றதுயர் சொல்லியழ
உரத்துப் பேச
ஒரு மனுவில்லாத் தனிக்காட்டில்
சிறகொடுக்கி குரலொடுக்கி
சீவியத்தைச்சிறைப்படுத்தி
பாடாய்ப்படுத்துகிற பாழும் மனத்தோடு போராடி
கிழிந்துபோன வாழ்வின்
இக்கரை நகலாய் நாங்கள்

எங்களதைப்போலவேதான் உங்களதும்
உங்களதைப்போலவேதான் எங்களதும்

யுத்தமுனைகளால் கிழிக்கப்பட்டு
குருதிப் பிசுக்கேறிப்போன வாழ்வின்பக்கங்களில்
எழுதப்படுமா ஒரு நற்செய்தி?

தெளிவற்றதாயிருக்கும் உங்கள் கடிதத்தின் வாசகங்கள்
மீண்டும் ஒருமுறை குரல்வழியாய் நடுங்குகின்றன.

எல்லாமே தெளிவற்றிருக்கிறது
ஆயினும்
ஒரு தீக்குச்சி உரசலின்
சிறு நம்பிக்கைத் துளியில் தெரியவரும் நற்செய்திக்காய்
காத்திருத்தல் மட்டும் தொடரும்."-காற்றுவழிக்கிராமம்

எங்களுக்குத் தெரியும் இன்றைய யுத்தங்களின் நோக்கங்கள் என்னவென்று.

நேற்றைய நிகழ்வுக்கு முந்த நாள் இட்ட தீ காரணமானது.
இன்றைய காட்டுத்தீக்கு நேற்றைய வினை காரணமாகிறது.
இன்றைய சூழ்ச்சி நாளை என்னத்தை எமக்களிக்குமென்பதை நாமறிவோம்!

எனினும், நமது வாழ்வின் விருப்புகள் வலியவொரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கானதாகவிருக்குமென்று நாம் பகற்கனவு காண்பதற்கில்லை.


இந்தவிடத்தில்தாம் வெறும் நம்பிக்கை மனித இருப்பின் ஒரு சாட்சியாகப் படர்கிறது.அந்த நம்பிக்கையப் பாடியதுதாம் சு.வி.யின் மகத்தான படைப்பாற்றலாகும்.நம்பிக்கையற்ற எந்த நோக்கமும் வெற்றி பெற்றதல்ல.நம்புவோம் நாம் இன்னும் மனிதர்கள்தாமென.

ப.வி.ஸ்ரீரங்கன்
19.12.2006

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது