Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் கிழக்கு இலங்கை நாட்டுப்புறப் பாடல்களில் ஆணாதிக்கம்

கிழக்கு இலங்கை நாட்டுப்புறப் பாடல்களில் ஆணாதிக்கம்

  • PDF

சரிநிகர்

 


நாட்டுப்புறப் பாடல்கள் ஒருபுறத்தில் பெண்ணின் அவலத்தைப் பிரதிபலிக்கும் போது, மறுதளத்தில் ஆணாதிக்க வக்கிரம் வெளிப்படுவது ஆணாதிக்கச் சமூக எதார்த்தமாக இருக்கின்றது. கிழக்கிலங்கையில் நடைமுறையில் இருக்கும் பல்வேறு நாட்டுப்புறப் பாடல் வகைகளில், கிராமியக் கவிகள் பெண் பற்றிய பலவிதமான தகவல்களைத் தருகின்றது. அதில் இருந்து பெண்ணை ஆராய்வோம்.


''குத்துமுலக் காறியெண்டு
கொடுத்துவச்சேன்நாலுபணம்
சாஞ்சமுலக்காறியெண்டா
தந்திடுகா என்பணத்தை"11


இங்கு பெண் குழந்தைக்குப் பால் கொடுக்கும் இயற்கை உறுப்பு ஆணாதிக்கப் பாலியல் கண்ணோட்டத்தில் கொச்சைப்படுத்தியே ஆணினால் வெளிப்படுத்தப்படுகின்றது. ஆணின் கனவு பாலியல் பண்பாட்டில் பெண்ணை நம்பவைக்கும் போக்கில், அவளின் இளமை மீது, கன்னியின் முலை மீது கொடுத்த பணத்தை மீளப் பெறும் கண்ணோட்டத்தில், ஆணின் வக்கிரமான பாலியல் நோக்கம் முலையின் சோர்வினூடாக முடிந்தவுடன் கேலிசெய்து வெளிப்படுகின்றது. கன்னியின் மார்பின் மீதான பாலியல் தேவை முடிந்ததைப் பறைசாற்றி, சாஞ்ச மார்பின் மீது அவதூறு பொழியப்படுகின்றது. இதனூடாக அவளை வேசியாக, கற்பிழந்தவளாக, பாலியல் ரீதியில் அதற்குத் தகுதியற்றவள் என்பதையே, ஆணாதிக்கப் பாலியல் உறுப்பு கண்ணோட்டத்தில் இருந்து இது வெளிப்படுகின்றது. இதற்குப் பெண் பதிலளிக்கத் தவறவில்லை.


''நீயொரு வல்லக்காரனெண்டு
வாங்கிவச்சேன்
உன்பணத்தை!
கோழித் தத்துவக்காரா
கொண்டுபோடா உன்பணத்தை"11


— என்ற பாடல் வரிகள் ஊடாக ஆணின் ஆணாதிக்க வீறாப்பைப் பெண் கேலி செய்கின்றாள். ஆணின் ஆண்மையைச் சிறுமைபடுத்தி அலட்சியப்படுத்துகின்றாள். ஆணாதிக்கப் பொருட்களைத் தூக்கியெறிந்து தனது சுதந்திரமான நேர்மையைப் பறைசாற்றுகின்றாள்;. பெண் மார்பின் மீதான கண்ணோட்டத்தில் இருந்து மாறுகின்ற ஆணாதிக்க உணர்வைச் சார்ந்து, பெண் அவன் உணர்வின் ஆண்மையைக் கிண்டல் செய்து சவால்விடுகின்றாள்.


ஆண்கள் பெண்கள் பற்றிய ஆணாதிக்கக் கண்ணோட்ட வருணிப்புகள் வக்கிரத்தில் ஊற்று எடுப்பதை நாட்டுப்புறப் பாடல்கள் காட்டுகின்றன. அதைப் பார்ப்போம்.


''தேமல் முலையும் தேனினிக்கும்
வௌ;வுதடும்
வாழை உடலும் என்னை
வாட்டுதடி நித்திரையில்"11


''இஞ்சி மணங்கா புள்ள
இலுமிச்சம் வேர் மணங்கா
மஞ்சள் மணங்காபுள்ள
பால்மணங்கா உன் சோடிமுல"11


''கொச்சில் பழத்தைக்
குறுக்காலை வெட்டினாற் போல
பச்சவடச் சேலை உண்டபால்
முலைக்க ஏற்றதுதான்."11
''கண்டு வம்பில் பூநிறத்தாள்


கவரிபுள்ள மாங்குயிலாள்
அரும்பு முகைப்பூ முலையாள்
மச்சி ஆசனத்தில் நித்திரையோ"11


— என்ற பாடல் வரிகள், பெண்ணின் மார்பை ஆணாதிக்கச் சமுதாயக் கண்ணோட்டத்தில் ஏற்படுகின்ற உணர்வில் வருணிக்கப்படுகின்றது. சாதாரணமாகப் பல்வேறு நடைமுறை சார்ந்த வாழ்க்கையில் பெண்களை இதுபோன்ற அடைமொழி மூலம் அடையாளப்படுத்துவதின் ஊடாக, பெண்ணைச் சிறுமைப்படுத்தி உறுப்பின் ஊடாகவே தமது உணர்ச்சிகளை ஆண் வெளிப்படுத்துகின்றான். இங்கு ஆண் பெண்ணைக் காதலித்தாலும் சரி, தனது அன்பை வெளிப்படுத்தினாலும் சரி, பெண்ணின் உறுப்பு சார்ந்தே முதன்மைப்படுகின்றது. இது பாலியல் வக்கிரத்தின் உச்சமாகும்;. இங்கு ஆணின் உணர்ச்சிகள் பெண்ணின் உறுப்பு சார்ந்து பிரதிபலிக்கும் போது, அதன் இயற்கைச் சிதைவுகளை ஆண் தாங்கி கொள்ள முடியாது போகின்றான். இதனால் பெண் மிகவும் கீழான நிலைக்கு இயற்கையின் மாற்றம் சார்ந்து உதைக்கப்படுவது எதார்த்தமாக உள்ளது. இதில் இருந்தே பெண்ணின் மார்பை முதன்மைபடுத்திய விளம்பரங்கள், அழகுபடுத்தல்கள், கவர்ச்சி காட்டல்கள், ஆணாதிக்கப் பண்பாட்டுக் கலாச்சாரம் சார்ந்து ஆண் பெண்ணின் வெளிப்பாடாகின்றது. இது போல் பெண்ணின் தொடை சார்ந்து வெளிப்படும் ஆணாதிக்க உணர்ச்சிகளை கீழே வரும் பாடலில் இருந்து பார்ப்போம்.


''ஆடு துடையிலே அன்பான
மேனியிலே, கட்டு
வருத்தமொன்று என்ர
கண்மணிக்குச் சொல்லிடுங்க"11


''அரிஞ்சரிஞ்சி நிலவெறிக்க
அவளிருந்து பாயிழைக்க
துண்டுடுத்துத் துடைதெரிய
துடரமனம் தூண்டுதல்லா"11


''இடுப்பு சிறுத்தபொட்ட இரு
துடையும் நொந்து போட்ட
கொக்கிச்சான் பொட்ட உனக்கு
கோபமென்ன என்னோட"11


— என்று பெண்களின் உறுப்பு சார்ந்து வெளிப்படுத்தும் பாலியல் வேட்கையை அடிப்படையாகக் கொண்டே, பெண்ணின் ஒழுக்கம் கூட மறுதளத்தில் வரையறுக்கப்படுகின்றது. ஒரு பெண்ணைக் கற்பழிக்கின்ற போது பெண்ணின் நடத்தை, போட்டிருக்கும் உடுப்பு, இருந்து பழகியமுறை, உறுப்புகளின் நிலை என்ற வழியில் தான் ஆணாதிக்க நீதிமன்றங்கள் பெண், ஆணாதிக்க ஒழுக்கத்தை மீறியதாகக் காட்டிக் குற்றவாளியாக்குகின்றது. பெண் பாலியலைத் தூண்டுவதாகவும், அதற்கான நிலையைப் பெண்ணின் உறுப்புகள், நடத்தைகள் ஊக்குவித்ததாகப் புகழ்பெற்ற ஆணாதிக்கத் தீர்ப்புகள் எதார்த்தமாக எம்முன் கிடக்கின்றது.


இங்கு பெண்ணைச் சொந்தப் புருஷன் அணுகினாலும், காதலன் அணுகினாலும், இந்த இடைநீக்கல் ஊடாகவே அணுகுவதன் உள்ளடக்கம்தான், ஆணாதிக்கப் பாலியல் வக்கிரமாகும். இதில் இருந்துதான் இன்றைய சினிமா உலகில், பெண் குறித்த பாடல்கள் பகிடிகள் எல்லாம் வக்கரித்தே பிறப்பதைக் காண்கின்றோம். இந்துமதம் முதல் இஸ்லாம் மதம் வரை பெண்ணை மூடி வளர்க்கும் முறையும் சரி, மூடிப் போடும் உடுப்பும் சரி, வீட்டில் அடைத்து வைத்திருக்கும் முறையும் சரி இவையெல்லாம் இந்த ஆணாதிக்க வக்கிரத்தின் மறுபிரதிபலிப்புதான். இன்றைய திரைப்பட உலகம் வெளிப்படுத்தும் பாடல்கள், பகிடிகள், காட்சிகள் எல்லாம், இந்த ஆணாதிக்க வக்கிரத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆணாதிக்கச் சமூகத்துக்குத் தீனியிடுகின்றது. இந்த ஆணாதிக்க வக்கிரத்தில் இருந்து பெண் தனது பாலியல் தேவையை வெளிப்படுத்தும் முறையைப் பார்ப்போம்.


''வாழைக் குலையிருக்க வாள்
மயிலாள் நானிருக்க, சேனையிலே
நெய்யிருக்கா நாம் சேர்வது
எக்காலம்"11


— என்று பெண் பாடும்போது ஆணாதிக்க வக்கிரத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதில் இருந்து இந்தப் பாலியல் தேவை வெளிப்படுத்தப்படுகின்றது. பெண் தன்னை அழகுபடுத்தும் போது, ஆணாதிக்க உலகியல் கண்ணோட்டத்தில், அதன் தேவையின் அடிப்படையில் தன்னை வெளிப்படுத்துவதைக் காணமுடியும். பெண் இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் வாழும் போது, அதன் வெளிப்பாடுகளும், உணர்ச்சிகளும் அடிப்படையான ஆணாதிக்க உள்ளடக்கமாகும். பெண் ஆணாதிக்கச் சமூகத்தின் ஒரு பிரதிநிதியே. சமூக இயங்கியலின் தேவைகளை, உணர்ச்சிகளை ஆணாதிக்கச் சமூகப் பண்பாட்டுக் கலாச்சார எல்லைக்குள் ப+ர்த்தி செய்தபடிதான், பெண்ணினால் வாழமுடிகின்றது, தீர்க்கமுடியும் என்பதையே இந்தப் பாடல் காட்டுகின்றது. விருப்பம் எங்கிருந்து வெளிப்படுகின்றது எனப் பார்ப்போம்.


''ஒண்டுக்கும் இல்ல கண்டே
உன்னை விரும்புவது
தங்கம் பதிச்ச தாள்விளக்கக்
காணவெண்டு"11


ஏன் விரும்புவது? என்ற கேள்விக்கு உடல் உறுப்பு சார்ந்து பிரதிபலிப்பதையே இது காட்டுகின்றது. உறுப்பு சார்ந்த விருப்பம் ஆணாதிக்கச் சமூகத்தின் ஓர் ஊடகமாகவே உள்ளது. ஆதி சமுதாயத்தில் உறுப்பு சார்ந்த விருப்பம் நிகழ்ந்ததில்லை. உறுப்பு சார்ந்த விருப்பம் ஆணாதிக்க அமைப்பின் தனிச்சொத்துரிமை வடிவில் திணிக்கப்பட்டது. பெண் மீதான திருப்தியுறாத ஆண், வக்கிரமான மொழியில் திருப்தியடைகின்றான். அதைப் பார்ப்போம்.


''ஒப்பாரக் கள்ளி உனக்களித்து
காசிபணம் - தோப்பாரு வெட்டயில
ஒரு தோப்பு வேண்டிப்
போட்டுடுவன்"


— என்று பெண் மீதான பாலியல் வக்கிரமொழியூடாக, ஆண் தனது உடல் ரீதியான பாலியல் திருப்தியின்மையை மொழியியல் ஊடாக அடைகின்றான். இங்கு பெண் கொச்சைப்படுத்தப்படுகின்றாள். இதற்குப் பெண் எதிர்த்து பதிலளிப்பதைப் பார்ப்போம்.


''மச்சானே பிச்சைக்கண்ணா
மதிரோட பூத்த கண்ணா-
சுள்ளி பொறுக்கி வாடா உன் சூத்தில
குத்துறன்"


— என்று பெண் கூறும் போது ஆணின் வக்கிரத்தைப் பெண் கேலிசெய்கின்றாள். பொதுவாகக் கள்ள உறவுகளில் மிகச் சுதந்திரமாக வெளிப்படுத்தும் இந்தப் பாடல் வரிகள் அதிகமான பாலியல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றது. அவற்றை அப்பட்டமாக வக்கரித்து பேசவும், கேலி செய்யவும் கூடிய சுதந்திரம், ஆணாதிக்க அமைப்பின் சொந்த முகத்தைத் தோலுரிக்கின்றது. ஆணாதிக்க அமைப்பில் கிடைக்கும் இடைநீக்கல்களிலான பாலியல் சுதந்திரம், கள்ள உறவுகளில் திருப்தியுறும் போது, அங்கு ஆணாதிக்க அமைப்பின் உச்சக்கட்ட வக்கிரமான பாலியல் அப்பட்டமான மொழியாகின்றது. இதைத்தான் மேலுள்ள பாடல் வரிகள் எமக்குக் காட்டுகின்றன. பெண் மீதான பாலியல் நடத்தையில் ஆணின் உறவுமுறை மிக மோசமான மிருகத்தன்மை கொண்டவை. அதைப் பெண் தனது பாடல் மூலம் வெளிப்படுத்தத் தயங்கவில்லை.


''கல்லாத்து ஓடையிலேயே கறுவல்
என்னும் ஒருமுதள
மல்லாத்திப்போட்டு உண்ட
மணிக்குடலத் தின்னுதுகா"11


— என்று ஆணின் உறவு முதலைக்கு ஒப்பாகக் கூறிப் பெண் புலம்புகின்றாள். இங்கு விரும்பிய உறவிலும் கூட பெண் மீதான உடல் வலிமையை மீறிய பலாத்காரம் நிகழ்வதையே காட்டுகின்றது. பெண் விரும்புவதைத் தாண்டி ஆணின் மிருகப் பசி பெண்ணைச் சூறையாடும் வன்முறையைக் காட்டுகின்றது. ஆணாதிக்க வக்கிரமான உணர்வுகள், உணர்ச்சிகள் நடைமுறை ரீதியான, பயன்பாட்டில் பெண்ணைப் பிழிந்து எடுப்பதை நிபந்தனையாக்கின்றது. அதுதான் ஆணின் திருப்தியாகும். இதுதான் பெண்ணின் வேதனையாகும்;. இந்த வேதனையும், திருப்தியும் பெண் மீதான வன்முறையாகின்றது. இது பாலியல் ரீதியாகவும், உடல்ரீதியாகவும் அமைகின்றது. ஒரு முதலையின் கொடூரமான கொல்லுதலை ஒத்த, ஆணின் நடத்தையையே பெண் சொல்லிப் புலம்புகின்றாள். இங்கு அவள் மீதான கற்பழிப்பாக இருந்தாலும் சரி, இல்லாது இருந்தாலும் சரி, இதன் விளைவு பொதுத் தன்மையானது. ஆண்கள் பெண்களை வீட்டில் அடக்கி ஆள்வதை எப்படி வெளிப்படுத்துகின்றனர்? எனப் பார்ப்போம்.


''கடப்பைக் கடந்து காலெடுத்து
வச்சயெண்டால்
இடுப்பை ஒடிச்சு வேலி
இலுப்பையின் கீழ்
போட்டுடுவேன்"11


''வாசல் கண்டு வழிகண்டு
போனியெண்டால் வேசைமகளே
உன்னை வெட்டிடுவேன் இரண்டு
துண்டாய்"11


— என்று ஆணின் அதிகாரம்; மனைவி, மகள், தாய் என்ற எல்லைகடந்த வன்முறையாக, மிரட்டலாக வெளிப்படும் வடிவமே இவை. ஆணாதிக்கக் கற்புக் கோட்பாட்டில் பெண்கள் உரிமையற்ற ஜடமாக, ஆணின் அடிமையாக வாழும் வாழ்க்;கை ஆணின் அதிகாரத்துக்கு உட்பட்டதே. வீட்டுக்கு வெளியில் பெண் செல்வது பாலியல் ரீதியாகப் புணரத்தான் என்ற அர்த்தத்தில், பெண்ணின் கற்புரிமையை ஆணாதிக்கம் வேசைத்தனமாக்குகின்றது. ஆணாதிக்கப் பார்வை சார்ந்த மொழி வன்முறைகள், இந்தச் சமுதாயத்தின் ஜனநாயகமாக இருப்பதன் வெளிப்பாடுதான் இவை. இது மீறப்படமுடியாத, கேள்விக்குட்பட முடியாத, மறுப்புக் கூறமுடியாத ஆணாதிக்க ஒழுக்கமாகும். பெண்களைக் காணும் இடமெல்லாம் பெண்ணின் பெண் உறுப்புகள் சார்ந்து, ஆண்கள் மொழியியல் ரீதியாகக் கொச்சைப்படுத்துவதும், வக்கிரமாகக் கூறி இரசிப்பதும் என எல்லையற்ற மொழியியல் வன்முறையைக் கையாள்வது ஆணாதிக்க எதார்த்தமாக உள்ளது. இதை எப்படி ஆண்கள் காண்கின்றனர்? எனப் பார்ப்போம்.


''மார்பளவு தண்ணியிலே மன்னி
மன்னிப் போற பொண்ணே
மார்பில் இருக்கும் மாதுளங்காய்
என்னவிலை?"11


— என்று பெண் குழந்தைக்குப் பால் கொடுக்கின்ற இயற்கை உறுப்புகளை விலை பேசுகின்ற, கோருகின்ற பண்பாடு, எல்லாவற்றையும் மூலதனமாக்கிப் பார்க்கும் ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமையின் விளைவாகும். பெண்களின் உறுப்பினூடாகப் பெண்ணை அணுகுவதும், உறுப்பின் இயற்கை தேர்வை வக்கரித்து அணுகுவதும், அதில் இருந்து புதிய விளைவுகளை ஜனநாயகமாக்குவதும் என தனிச்சொத்துரிமை பண்பாடு வழிகாட்டுகின்றது. இந்த வக்கரித்த ஆணின் பார்வைக்கு, பெண் அவ்விடத்திலேயே பதிலளிப்பதைப் பார்ப்போம்.


''மாதுளங் காயுமில்லை மருக்காலம்
பிஞ்சுமில்லை
பாலன் பசியாறும் பால்
முலையடா சண்டாளா"11


— என்று பெண் எதிர்த்து, தனது உடல் சார்ந்த கற்புரிமையைக் கொச்சைப்படுத்துவதைக் கண்டு, சினம் கொண்டு ஆணாதிக்க வக்கிரத்தை எள்ளி நகையாடுகின்றாள். ஆணாதிக்கக் கற்புக் கோட்பாட்டில் பெண் உறுப்புகள் ஆணின் பாதுகாப்பு பெற்ற பாலியல் பண்டமே. அதை இரசிக்க, நுகர துடிக்கும் ஆணாதிக்கச் சமூகத் தன்மையில், பெண்ணின் ஆத்திரம் சார்ந்த எதிர்ப்பு இயல்பான இயற்கையானது.


கிராமப்புறத்தில் பெண்கள் இயல்பாகவே ஆண்கள் முன்னிலையிலேயே, தமது மார்பு மூலம் குழந்தைக்குப் பால் ஊட்டும் தன்மை, எந்த நாகரிகப் பண்பாட்டுத் தளத்திலும் சாத்தியமில்லை. கிராமப்புறத்தில் பெண்ணின் மார்பு ஆணாதிக்கத்தின் வக்கிரமான பாலியல் ஊடகமாக இருப்பதில்லை. நாகரிக உலகில் பெண்ணின் மார்பு பாலியல் ஊடகமாக இருப்பதன் காரணமாக, பெண் மார்பை மூடிப் பாதுகாக்கும் தன்மை ஏற்படுகின்றது. அதாவது பெண் தனது கற்புரிமையைப் பாதுகாக்க (இணைமணத்தில்) ஆணைத் தெரிவு செய்தது போல், பெண் தனது மார்பை மூடி பாதுகாக்க வேண்டிய அளவுக்கு, ஆணாதிக்க நாகரிகம் வக்கரித்துப் போய் உள்ளது.


இங்கு ~சண்டாளா| என்ற வார்த்தை சாதிய ரீதியாகக் கையாளப்படும் இழிவுச் சொல்லாகும்;. சாதாரண மக்கள் மொழியியலில் இதைச் சொல்லுகின்ற போது, சாதிப் பண்பாட்டில் வெளிப்படுகின்றது என்ற விமர்சனம் தெளிவானது. இது போன்று பெண்கள் குறித்து, தூற்றப் பயன்படும் ஆணாதிக்கத்தின் கோர முகத்தைச் சுட்டி நிற்கின்றது. மிகக் கேவலமான சொற்பிரயோகங்களால் எதிரியான ஆண்களைப் பெண்ணின் நிலைக்குத் தாழ்த்தி, பெண்ணுக்கு ஒப்ப ஆணை இழிவுபடுத்தும் போது, அதாவது பெண்ணையும் முரண்பட்ட ஆணையும் ஒரே நிலைக்குக் கொண்டுவந்து இழிவுபடுத்துவது, ஆணாதிக்கத்தின் உச்சக் கொப்பழிப்பாக இருக்கின்றது. பெண்களை ஆணாதிக்கம் கொண்டு தாக்கும் போதும், திட்டும் போதும், இந்த தூற்றல் தான் அதன் பொது மொழியாகின்றது. இந்த மொழிப் பிரயோகம் ஆணாதிக்கச் சமூக வடிவத்தில் இருந்தே பயன்படுத்துகின்றனர். மொழியியல் ரீதியாகப் பிற்போக்கு ஆணாதிக்கத்தைப் பிரதிபலிக்கின்றது. ஆனால் கிழக்கிலங்கை நாட்டுப்புறப் பாடலில் வரும் சாதியச் சொல் ஆணாதிக்கத்தை இழிவாட, பெண் பயன்படுத்தும் போது, சாதிய அடிப்படையில் பிற்போக்காகவும், ஆணாதிக்க அடிப்படையில் முற்போக்காகவும் உள்ளது.


''போட்டா வரம்பாலே புறாமேஞ்சி
போறதுபோல்
நாட்டாருக்கெல்லாம்
நடைவரம்போ என்சடலம்"11


— என்று பெண் மீதான ஆண்களின் காமப் பயன்பாட்டை, பலாத்காரத்தைச் சொல்லி அதைத் தனது ஆற்றாமையில் எதிர்த்துத் தூற்றுகின்றாள். மக்கள் உற்பத்தியில் ஈடுபடும் போது புறாக்கள், அதைத் தன் விருப்பப்படி திண்டு தீர்ப்பதை எப்படி உழைப்பாளியால் சகித்துக் கொள்ள முடியாதோ அதையொத்து, தனது உடலை மேயும் ஆணாதிக்க அற்ப ஆண்களின் கொடூரத்தை, வெளிப்படுத்தி எதிர்ப்பதன் மூலம் ஆறுதல் அடைகின்றாள். தனது உடலை இறந்த உடலுக்குச் சமமாக உவமைப்படுத்தும் பெண், ஆணாதிக்கம் எப்படி பெண்களை உணர்ச்சியற்ற சதைப் பிண்டங்களாகப் பாலியலில் பயன்படுத்துகின்றது என்பதைத் தோலுரித்துக் காட்டுகின்றாள்;. பொருளாதார ரீதியாகவோ அல்லது வேறு காரணத்தாலோ, பெண்கள் ஊரில் உள்ள ஆண்களின் வைப்பாட்டியாகச் சீரழிக்கப்படுகின்ற ஆணாதிக்கச் சமூக அந்தஸ்த்தில், பெண்ணின் உடல் உயிரற்ற உணர்ச்சியற்ற சடலமாகிவிடுவதை, தனது உள்ளக் குமுறல் ஊடாக வெளிப்படுத்தும் பாடல் ஆணாதிக்கச் சமூகத்தை வேருடன் தோலுரிக்கின்றது. இதை மேலும் பெண்கள் எப்படி கவிபாடுகின்றனர்? என ஆராய்வோம்.


''வண்ணார கல்லோ வடகத்திய
காளைமாடோ
சாராயக் குத்தகையோ மச்சான்
தவறணையோ என் ஊடு"11


— என்று பெண் கேட்கின்ற போது, ஆணாதிக்க ஆண்கள் தனது உடல் மீது குத்தகையாக அணுகும் போது அந்தச் சுதந்திரத்தின் மீது தனது எதிர்ப்பை எழுப்புகின்றாள். வண்ணான் தோய்க்கும் கல் பொதுவானது. வடகத்தைக் காளை மாட்டை யாரும் வண்டியில் பூட்டலாம். சாராயத் தவறணையில் யாரும் குடிக்கலாம். அது போல் என் உடலுமா? என்ற அடிப்படையான கேள்வியை, நடைமுறை வாழ்க்கை சார்ந்து எதார்த்தமாகப் பெண் எழுப்பும் போது, அங்கு பெண் தனது கற்புரிமை மீது தனது உரிமையை மீளக் கோருகின்றாள்; தன்னைப் பொது விபச்சாரத் தளத்தில் போவோர் வருவோர் சதையாக அணுகிச் சுவைத்துச் செல்லும் போது, பெண் தனது உரிமையை உடல் சார்ந்த சொந்த உணர்ச்சியைத் தக்கவைத்து மீளக் கோருகின்றாள். இந்த நிலைக்கு ஆணாதிக்கச் சமூகம் இட்டுச் சென்ற சமூகக் காரணியை மறைமுகமாகக் கேள்விகேட்டு, தனது உரிமையை முன்வைத்து, ஆணாதிக்கத்தை அதன் ஜனநாயக விரோதத்தைக் கேள்விகேட்டு அதை எதிர்த்து நிற்கின்றாள்.

இலக்கம் 149-இல், எஸ். சந்திரசேகரம் எழுதிய ''கிராமியக் கவிகளும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும்" என்ற கட்டுரையில் இருந்து பாடல் வரிகளை எடுத்து இந்தக் கட்டுரையை எழுத முனைகின்றேன்.