Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் 'நடைமுறைச் சாத்தியமான" தீர்வுகள்

'நடைமுறைச் சாத்தியமான" தீர்வுகள்

  • PDF

"நடைமுறைச் சாத்தியமான" ஒன்றைக் கோருகின்ற அரசியல் நியாயவாதங்கள் அடிக்கடி பலராலும் முன்வைக்கப்படுகின்றது. தமது எதிர்வாதங்களின் போதும், புலி மற்றும் புலியெதிர்ப்புத் தளத்தில் இருந்து, இவை வைக்கப்படுகின்றது.

 

'நடைமுறைச் சாத்தியமான" தீர்வு என்று புலிகள், புலியை ஆதரிக்கக் கோருகின்றனர். தமிழீழத்தை அடைதலே சாத்தியமான ஒரே தீர்வு என்கின்றனர். புலியெதிர்ப்போ அரசை ஆதரிப்பது தான் 'நடைமுறைச் சாத்தியமான" 'ஜனநாயக" தீர்வு என்கின்றனர். அதாவது புலியை ஒழித்தல் தான் சாத்தியமான தீர்வு என்கின்றனர். இவர்கள் இப்படிக் கோருவது இதுவல்ல என்று, மாற்றை யாரும் இதற்கு எதிராக வைக்க முடியாது. 

தமிழ் மக்களின் தேசிய உரிமையை மறுப்பதும், ஜனநாயக உரிமையை மறுப்பதும், இதற்குள்  உள்ள அரசியல் சாரம். இது சாத்தியமல்ல என்கின்றனர். இவற்றை மறுத்து தீர்வு காணுதல் தான் 'நடைமுறைச் சாத்தியமான" தீர்வு என்கின்றனர். மக்களின் உரிமையை மறுப்பது தான் 'நடைமுறைச் சாத்தியமான" தீர்வுகள் என்கின்றனர்.

 

இப்படி இதற்குள் தான் அரசியல் வாதங்கள், தூற்றல்கள், படுகொலைகள் என அனைத்தும் அரங்கேறுகின்றது. இந்த 'நடைமுறைச் சாத்தியமான" தீர்வுகளின் பெயரில் தான், படுகொலைகள், கடத்தல்கள் முதல் யுத்தத்தில் பலியிடல் வரை அனைத்தும் தொடர்ந்து  அரங்கேறுகின்றது. இந்த அரசியலை ஆதரிக்கின்ற அனைவரும், இதன் மூலம் இழைக்கின்ற மொத்த குற்றங்களுக்கு உடந்தையானவர்கள் தான்.

 

இப்படி முடிவின்றி நீண்டகாலமாக இந்த அரசியல் தான் 'நடைமுறைச் சாத்தியமான" தாக கூறிக்கொண்டு, மக்களுக்கு எதிரான 'தேசியத்தையும்" 'ஜனநாயகத்தையும்" ஆதரித்து அரங்கேற்றுகின்றனர். நாம் மட்டும்தான், இதற்கு வெளியில், இதற்கு எதிராக நீண்டகாலமாக, எதிர் வினையாற்றி வருகின்றோம்.

 

'நடைமுறைச் சாத்தியமான" தீர்வுகள் என்று அவர்கள் கூறும் 'தமிழீழம்", 'ஜனநாயகமும்" எப்படி மக்களின் பிரச்சனைக்கு தீர்வுகளாகும்? இது எப்படி மக்களுக்கு ஒரு விடுதலையை வழங்குகின்றது.? எதைத்தான் பெற்றுக்கொடுக்கப் போகின்றனர்? அன்றாடம் தாய்மையின் கருவறைகளை வெட்டியெறியும், படுகொலை அரசியலைத் தான் இவர்கள் தமது சொந்த தீர்வுகளாக அரங்கேற்றுகின்றனர்.

 

நீங்கள் நம்புவது போல் புலித் 'தமிழீழம்", கிடைத்தால், மக்களுக்கு என்ன கிடைக்கும்? அதைச் சொல்லுங்கள். நீங்கள் நம்புவது போல் புலியெதிர்ப்பு 'ஜனநாயகமும்" கிடைத்தால், மக்களுக்கு என்ன தான் கிடைக்கும்? எவனாவது இதை சொல்லி, நேர்மையாக அரசியல் செய்கின்றானா! சொல்லுங்கள். 

 

தமிழ் மக்கள் கோரும் ஜனநாயக கோரிக்கைள், இரண்டு பிரதான இந்த அரசியல் போக்கிலும் மறுக்கப்படுகின்றது. மக்களை எட்டி உதைத்தபடி தான் 'நடைமுறைச் சாத்தியமான" தீர்வுகள் என்று, தமது படுகொலை அரசியல் நடத்தைகளை முன் வைக்கின்றனர். புலி, புலியெதிர்ப்பு படுகொலைகள் மூலம், அரசியல் தீர்வைக் காண முனைகின்றனர். இதைத்தான் புலியும், புலியெதிர்ப்பும் 'நடைமுறைச் சாத்தியமான" தாகக் கூறி ஆதரிக்கின்றனர்.

 

இவர்களின் அரசியல் என்பது, மக்களின் ஜனநாயக உரிமைகள் முதல் தேசிய உரிமைகள் வரை மறுதலிப்பதை அடிப்படையாக கொண்டது. இந்த மறுதலிப்பைத் தான் அவர்கள்  'நடைமுறைச் சாத்தியமான" ஒரே தீர்வுகள் என்கின்றனர்.  

 

மக்களுக்காக போராடுதல், மக்களை அணிதிரட்டிப் போராடுதல் என்பன, நடைமுறை சாத்தியமற்றது என்பதே, இவர்கள் சொல்லாமல் சொல்ல வரும் மக்கள் விரோத அரசியலாகும். இதற்கு எதிராக, நாம் மட்டுமே மக்களுக்காக போராடுதல், மக்களை அணிதிரட்டிப் போராடுதலை முன்னிறுத்தி, அதை அரசியலாக முன்வைக்கின்றோம். இதை மறுப்பவர்கள் என்ன சொல்லுகின்றனர். மக்களின் அடிப்படை உரிமைகளை அங்கீகரித்து, அந்த உரிமைக்காக போராடுவது 'நடைமுறைச் சாத்தியமான" ஒரு தீர்வுகளல்ல என்கின்றனர். 

 

இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் புலி மற்றும் புலியெதிர்ப்பு படுகொலை அரசியலை அனைவரும் ஆதரிப்பது தான், 'நடைமுறைச் சாத்தியமான" தீர்வு என்கின்றனர். இதுதான் தமிழ் மக்களின் விடுதலைக்கான ஒரே பாதை என்கின்றனர். இப்படி இந்த படுகொலை அரசியலை ஆதரிப்பது தான், புலி மற்றும் புலியெதிர்ப்பு அரசியலாகின்றது.

 

இன்று புலியெதிர்ப்பு ஆதரவு பெற்ற அரசும், புலிகளும் செய்கின்ற படுகொலைகளை, நாம் மட்டுமே தனித்து ஆரம்பம் முதலே எதிர்த்து வருகின்றோம். நாம் ஒன்றுடன் ஒன்று சாராது, மக்கள் விரோதத்தை அரசியலாக கொண்ட இவ் இரண்டையும் தொடர்ச்சியாக எதிர்க்கின்றோம். இதனால் எம்மை புலியென்கின்றனர் புலியெதிர்ப்பு அணிகள். அரச கைக்கூலிகள் என்கின்றனர் புலிகள். இப்படித் தான் நாம் முத்திரை குற்றி தூற்றப்படுகின்றோம். 

 

நாங்கள் கோருவது மக்களின் அடிப்படை உரிமைகளை. அவர்கள் தமக்காக போராடும் உரிமையை. இதை மறுக்கின்ற புலியெதிர்ப்பு ஆதரவு பெற்ற அரசும் – புலியும், 'நடைமுறைச் சாத்தியமான" தீர்வுகளாக வைப்பதோ, மக்களின் அடிமைத்தனத்தைத் தான்.

 

இதற்கெதிராக நாம் மட்டும் போராடுகின்றோம்;. உங்களிடம் ஒருதுளி மனச்சாட்சி இருந்தால், உங்களிடம் நேர்மையின் சாயல் இருந்தால், இவ் இரண்டு படுகொலை அரசியலையும் எதிர்த்து, மக்களுக்காக போராட நாம் அழைகின்றோம்.

 

பி.இரயாகரன்
10.06.2008

Last Updated on Wednesday, 11 June 2008 05:48