Language Selection

ப.வி.ஸ்ரீரங்கன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"vertrauen Sie denen,die nach der Wahrheit suchen,
und misstrauen Sie denen,die sie gefunden haben." -André Gide.

Trust in those who are searching for truth
and be suspicious of those who have found it.

 

அவர்கள் உண்மையைத் தேடுகின்றபோது அவர்களின்பால் நம்பிக்கைகொள்ளுங்கள்,அதைக் கண்டடைந்து விட்டோமெனும்போது அவர்கள்மீது அவநம்பிக்கை கொள்ளுங்கள்.-அந்திரே ஜீத்.

 

நாம் இன்று பொய்யுரையையும், புகழ்பாடுதலையும்,சமூகக் கட்டமைப்பினுடு வெறித்தனமாக வளரும் பாசிசத்தன்மையையும் எதிர் கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம்.இதுவரை கால பெறுமானமிக்க வாழ்வியற் பண்புகளாகப் பறைசாற்றிய தமிழர்தம் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' படுகேவலமாக மரணப் படுக்கையில்,நாம் இன்றிதன் நிகழ்வுக்குப் பாத்திரமானவர்கள்.ஈழத்தேசிய இனத்தின் தேசிய இயக்க வரலாற்றுப்போக்கினால் அதனுடாக விருத்தியான ஆயுதக்குழுக்கள் தமது இயக்க நலனின்பொருட்டு வேடிக்கையான போராட்டச் செல்நெறியைக் கைக்கொண்டு மானுட விழுமியத்தை காலிற்போட்டு மிதித்த காலம் தொட்டு நாம் இவற்றிக் கெதிராகப் பாரிய மக்கள்திரள் போராட்டங்களைச் செய்ய எமது மக்கள் மத்தியில் நிலவிய அன்னிய ஒடுக்குமுறை இடமளிக்கவில்லை.எது நிகழினும் அது தமிழீழ நலத்தின் பொருட்டே நடப்பதாக பறையடிக்கப்பட்டு இதுவரை நாம் ஏமாற்றப்படுகிறோம், எனவே இந்த பொய்மைக்குப் பின் அரங்கேறும் நிசம் நம்மை முற்றுமுழுதாகப் பலி கொள்வதை இனியும் மௌனமாக அங்கீகரிக்க முடியாது! உயிரே போயினும் இது குறித்தவொரு மதிப்பீட்டுக்கு நாம் சென்றடைய வேண்டும்.இந்நோக்கோடு மேலே செல்வோம்.

 

தமிழ் ஈழம் :கோசமும்,கொலையும்.

 

'மாறிவரும் சார்வதேச அரசயற்சூழலினால் நாம் நமது போராட்ட வடிவத்தை மாற்றி நமது இறுதி இலச்சியத்தை நோக்கி நகர்கிறோம்.'இந்த அழகான பொய் நமது பொறுமையைச் சோதிப்பது ஒருபுறம் இருக்கட்டும்,இதுநாள் வரையினால நமது போராட்டம் பற்றியும் அதன் அறுவடை பற்றியும் பார்ப்பதுதாம் இப்போதைக்கு முக்கியம்.எம்மீது திணிக்கப்பட்ட |தணிக்கப்படும் யுத்தம் பாரிய சமூகச் சிதறலையும் இன அழிப்பையும்,நிலப்பறிப்பையும் ஒருங்கே கொண்டியங் குகிறது.இது மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத தேவையாக-விடுதலையின் வாசலில் நாம் நிற்பதாகவும் பரப்புரை செய்கிறது,இந்த யுத்தத்தினது முக விலாசம் தற்போதய 'கருணா-பிரபாகரன் பிளவில்' தனது கோரப்பல்லைக்காட்டி, மக்களுக்கு தன்னை நன்றாக அம்பலப்படுத் துகிறது.தமிழீழக்கோசத்தினது கபட அரசியல் இதுவரை 130.000.மக்களைப் பலிகொண்டுள்ளது,ஒருமில்லியன் மக்களை நாடோடிகளாய் உலகெல்லாம் அலைய விட்டுள்ளது,இலட்சத்திற்கு மேற்பட்ட பெண்களை விதவைகளாகவும்,இவற்றையெல்லாம்விட மோசமாக பல்லாயிரம் இளஞ் சிறார்களை ஊனமாக்கி அனாதைகளாக அலையவிட்டுள்ளது!ஒருதலைமுறையே பலியிடப்பட்டு,தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில்30மூ வீதமான நிலப்பரப்பு சிங்கள இராணுவத்தினது குடியேற்றங்களாக மாற்றப்பட்டுள்ளது,இந்த இலட்சணத்தில் தமிழ்மக்களினது அன்றாடவாழ்வினது அவசியத்திற்கும்,சீர்குலைந்த வாழ்வுக்கும்-சிதறிய பொருளியல் மீட்சிக்கும் அமைதி,சமாதானம் அவசியமாதலால் தாம் தவிர்க்கமுடியாது சமாதனஞ்செய்கின்றார்களாம்!80களில் நமது வாழ்வியற் சூழலுக்கும் இன்றைய போராட்டம் தந்த வாழ்வுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது! (இது தேவைதாமா? இனியும் நாம் வெறும் பார்வையாளர்களா?இந்த மக்கள் விரோதிகளை எப்போது தண்டிக்கப்போகிறோம்?)பொய்யான கோசத்தின் மூலம்-இதை மாற்றப்போகிறோமெனத் தெரிந்தும் ,அதற்கு உருவேற்றி,மக்களைப் பலிகொடுத்தவர்கள், இப்போது தமது வஞ்சகச் செயலை சர்வதேச அரிசியல் மாற்றமென நியாயப்படுத்திவிடுவது எவ்வளவு கேவலமான ஈனத் தனம்?,இது ஒரு வகையில் கிரிமனல் குற்றம்.இதை மறைப்பதற்காக மீளவும் விரிக்கப்படும் வஞ்சக வலை நம்மைக் காவு கொள்வதற்குள் கருணாவினது பிளவு நம்மை விழிக்க வைத்துள்ளது!

 

இலங்கையினது இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சியானது ஒரு இனத்தை இன்னொருவினம் தலைவெட்ட முயன்றவேளை 1915ஆம் ஆண்டு முதலாவது இனக்கலவரம் மூண்டது,அது சிங்கள தரகு முதலாளிகளுக்கும் தமிழ்பேசும் இஸ்லாமியத் தரகு முதலாளிகளுக்குமான முரண்பாடாக இருந்தது, தமிழ்த்தரகு முதலாளிகளின் பிரதிநிதிகளான பொன்.இராமநாதன்-அருணாசலம் வகையறாக்கள் இங்கிலாந்து வரை சென்று சிங்கள முதலாளிகளைக் காத்தனர்.பின்பு இம்முரண்பாடு தம்மையும் பதம்பார்க்க இலங்கைத் தேசிய காங்கிரசிலிருந்து வெளியேறி 'தமிழர் தேசிய மகாசபையாகி' மகாதேவாவோடு 50க்கு 50தாக குழம்பி பலகூட்டுக்களைக் கண்டு இறுதியில் தமது நலனுக்கேற்றவாறு தனித் தமிழ் ஈழக்கோசமாக மாறுகிறது, இவர்தம் வழி அரசியல்.இது எல்லோருக்கும் தெரிந்த வரலாற்றுநிகழ்வே.இந்தக் கோசம் இதுவரை தந்த பரிசை நாம் மேலே கண்டோம்.

 

ஒரு யுத்தத்தின் உள்ளடக்கம் எதிரியின் (சிங்கள ஆளும் வர்க்கம்)இன ஒடுக்குமுறையைத்துக்கி வீசுவதற்கென்றால் ஒடுக்கப்படும் மக்களான தமிழ்பேசும் மக்கள் செய்யும் யுத்தம் முற்போக்கானது ,ஆனால் அது தமிழ்த் தரகு முதலாளிகளினது நலத்தின் பொருட்டு வளங்களைப் பங்குபோடுதல்,கொள்ளைகளைப் பங்குபோடுதல்,இனங்களை அடக்கி ஆளுதலைப் பங்கு போடுதல் என்பதில் குறியாய் இருக்கும் போது இது மக்களை முழுமனவே ஏமாற்றுவதாகும்.இதைத்தாம் இதுநாள் வரை தமிழ்த்தலைமைகள் செய்கின்றன.தேசிய விடுதலையினது போராட்ட வீச்சு எப்பவும் முதலாளிகளினது கோட்டையிலிருந்தே வெளிக்கிளம்புவது.இலங்கைத்தமிழர்தம் பக்கம் புதிய ஆளும் வர்க்கம் தோன்றி வளர்வதற்காக இது வரை பல தேசபக்த இளஞ்சிறார்கள் பலியாகியுள்ளார்கள்,இந்த இளசுகளின் குருதியில் தமது கனவுகளை நனவாக்கும் இன்றைய போராட்டத் தலைமை புதிய புதிய அரசியல் வியூகங்களை முன் வைத்து தமிழீழக் கோசத்தை இன்னும் வலுப்படுத்துகிறது,இதன் தொடர்ச்சியாக போடப்படும் புதிய பாணியிலான தந்திரோபாயங்கள் ஒருவரையொருவர் துரோகி என்று வரையறை செய்வதில் முந்திக்கொள்கிறது!இந்த வியூகம் மற்றவர்களினது (அந்நிய சக்திகளினது:அமெரிக்க,ஐரோப்பிய,இந்திய பிராந்தியநலன்)நலனுடன் இணைந்து நம் பாலகர்களை கொல்வதற்குத் தயாரவது இதுவரை நாம் பார்த்த வரலாறாகும்.

 

பண்டா செல்வா ஒப்பந்தமும்,இன்றைய ஆயுதக்குழுக்களினது இடைக்கால நிர்வாகக்கோரிக்கையும்:

 

பிரபாகரன் குழுவினது 'தமிழீழத் தாகம்' தீர்த்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையையும் மற்றும் இராஜீவ் காந்தி ஜே.ஆர் ஒப்பந்தங்களும் அந்நிய மூலதனங்கள் பெற்றெடுத்த குழந்தைகள்,இவை நமது தேசிய அடையாளத்தை-சுயநிர்ணயத்தை,பொருளாதார சுதந்திரத்தை,வாழ்வியல்-குடிசார் நலத்தை மையப்படுத்திய ஜனநாயகத்தன்மைகளை கொண்டவையல்ல,மாறாகத் தமிழ் தரகு முதலாளிவர்க்கத்தினது நலன்களையே மையப்படுத்திய ஒரு அதிகாரப்பங்கீடு!இவற்றால் நன்மையடையும் வர்க்கம் தமது நலனின் பொருட்டு சமரசங்களின் மூலம் ஒரு தீர்வை நோக்கிச் செல்வதற்கு தடையேற்படும் போது யுத்தங்களை ஆயுதமாகக் கொள்கின்றது.இந்த யுத்தங்கள்மூலம் அந்நிய மூலதன வாதிகளுக்கு அழுத்தம் கொடுத்து தம் பங்கைக்கோருகின்ற வியூகத்தைச் செய்கின்றன,இவ்வண்ணமே அந்நிய சக்திகளும் இவர்களுடாய் யுத்தத்திற்கு உதவியளித்து தமது நலனை இலங்கையில் அடைகிறது. ஆளும் அரசுகளும் தமது ஆட்சிக்கு வரும் நெருக்கடிகளுக்கு தீர்வாக யுத்தத்தையே கையாளுகின்றன,இந்த வகைமாதிரியினது ஒரு வடிவம்தாம் ஈழப்போராட்டமும்,அழிவும். ஏற்கனவே மக்களினது நலனில் அக்கறையுடைய ஒரு கட்சியிருந்திருந்தால் நிச்சியம் இவ்வளவு அழிவு தமிழ்பேசும் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்காது,பண்டா செல்வா ஒப்பந்தமே இதற்கொரு முடிவைத் தந்திருக்கும்!

 

திரு.பண்டாரநாயக்க இலங்கைத்தேசிய முதலாளியத்தின் அரசியற்றலைவர்,ஏகாதிபத்யத்திற் கெதிரான மூன்றாவது உலக அணியினது ஸ்தாபகர்களிலொருவரான இவர் ஏகாதிபத்ய தாசர்களான தமிழர் தரப்பு செல்வாவுடன் போட்ட ஒப்பந்தம் நமது பிரச்சனைக்குத் தீர்வையன்றே தந்திருக்க நேர்ந்திருக்கும்,ஆனால் சிங்கள ஏகாதிபத்ய தாசர்களான யூ.என்.பி. கட்சியும் ஜே.ஆர்.ஜெயவர்தனாவும் அவரது காடைக்கூட்டமும் 1958இல் போட்ட இவ் ஒப்பந்தத்தை 'பண்டா சிங்களவரையும்,ஸ்ரீலங்காவையும் செல்வாவிடம் விற்றுவிட்டார்'என்ற பொய்யுரைப்போடு எதிர்த்து களனியிலருந்து கண்டிக்கு பாதயாத்திரை செய்து பண்டாவுக்கு அரசியல் நெருக்கடியை கொடுத்தார்.இந்தச் சூழலில் பண்டாவுக்கு பக்கப்பலமாக இருக்கவேண்டிய தமிழர்தரப்போ இதற்கு ஆப்புவைத்து தமது ஏகாதிபத்ய எஜமானர்களுக்கு சேவை செய்தார்கள்.சிங்கள ஏகாதிபத்யக் கைக்கூலி ஜே.ஆர்.செய்த அதே வேலையை தமிழ் தலைமையும் செய்தது(தமிழ்ப் பிரதேசமெங்கும் சிங்கள எழுத்துக்களை தார்பூசியழித்ததும்,அங்கு வாழ்ந்த சிங்களவர்களை வெருட்டியடித்ததும்).இந்த ஈனத்தனத்தால் பண்டா ஒப்பந்தத்தைக் கிழித்தெறியும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.இந்த வெற்றிகரமான நாடகத்தை நடாத்திய அமெரிக்கா சிறிது காலத்தில் பண்டாவையே கொன்று இலங்கையில் தேசிய முதலாளி வளர்ச்சிக்கு முடிவுகட்டியது! இந்த நாடகத்தில் பாத்திரங்களாக நடித்த யூ.என்.பி.யும்,தமிழரசுக் கட்சி செல்வா தலைமையும் ஏகாதிபத்யங்கள் பெற்றெடுத்த பிள்ளைகளே! இவர்களது இன்றைய வாரீசுகள் போடும் ஒப்பந்தங்களும் இந்த வகைப்பட்ட கதிக்கே இப்போது செல்லப் போகிறது. இதன் முதற்கட்ட நாடகம் தளபதி பிரபா, தளபதி கருணா பிளவாய் அரங்கேறி அற்ப சொற்ப தீர்வாய் தமிழ் பேசும் மக்களின் உரிமை சுருங்கும்.

 

பிரதேசவேறுபாடு-பிரதேசவாதமும்,பிராந்திய முதலாளிய பங்குச்சண்டையும்:

 

இலங்கைத் தமிழ்த்தேசிய இனம் ஒருங்கமைந்த வளர்ச்சிப்போக்கிலுருவாகிய பொருளாதார அடிப்படையைக் கொண்ட சமுதாயமில்லை.இவர்களை வெறும் சிங்கள இனவாத ஒடுக்குமுறைமட்டுமே ஒருவகைத் தேசியஇன அடையாளத்தை வலிந்துருவாக்கத் துண்டியது. அரைநிலப்பிரபுத்துவ-அரைகொலனித்துவ அரச முதலாளிய அமைப்பில் ஒடுக்கப்படும் தமிழ் பேசும் மக்கள் தமக்குள் 'உள்ளகக் கொலனித்துவ சாதிய முறைமைக்குள்ளே'பிளவுபட்டும்,பழைய பூர்ச்சுவாத்தன்மைக்கும் முன்னனைய ஆண்டான் அடிமை முறையினது எச்சசொச்ச உளவியற்பாங்கால் ஒருவரையொருவர் தாழ்த்தி தமக்குள் முட்டிமோதும் ஆணாதிக்க இனக்குழுவாகச் சீரழிந்துள்ளார்கள்.இதை மறைப்பதற்காக தமிழீழக் கோரிக்கை எவ்வளவுதாம் பிரயத்தனஞ் செய்தாலும் நம்மையொடுக்கக் காத்திருக்கும் சிங்கள-அந்நிய அரசுகள் அவற்றைக் காலத்திற்குக் காலம் தமது நலனுக்கேற்றவாறு பயன் படுத்தி வெற்றிபெறுகிறார்கள்.

 

இந்த நிலையில் தேசியப் போராட்டக்குழுக்கள் இலங்கையில் வாழும் இஸ்லாமியத் தமிழ்பேசும் மக்களை,மலையகத் தமிழ்பேசும் மக்களை ஸ்டாலினின் தேசிய வரையறை மூலம் தேசிய இனங்களாக மொழிந்தார்கள்.இந்த வகைத் தேசிய அடையாளத்தை இவ்வினக் குழுக்களுக்குள்ளிருக்கும் தரகு முதலாளிய வர்க்கம் தமது நலனுக்கேற்றவாறு ,அவற்றிக்கூடாகக் கோடுகிழித்து தமக்குரிய பங்கை பங்குபோட எடுக்கும் காரியமாக இன்றைய தமிழ்பேசும் மக்களினது முரண்பாட்டைப் பயன் படுத்தமுனைதல் ஒருவகைத் தந்திரோபாயமாக விருத்தியுறுகிறது! இந்த முரண்பாட்டைச் சரியாகப் பயன்படுத்த முனையும் அமெரிக்கா இதை ஈராக்கில் வெற்றியாகக் கையாளுகிறது.

 

தமிழ்பேசும் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்ட பூர்ச்சுவா எண்ணக்கருத்தியல் தளம் அவர்களைத் திமிர்த்தனமான ஆதிக்க மனோபாவ உளவியலுக்குள் கட்டிப்போட்டுள்ளது.இது தம்மைத்தாமே அதியுயர் மனிதர்களாகக் கனவுகண்டு இறுமார்ந்திருக்க வழிசமைப்பதோடு நிற்காது மற்றைய மனிதர்களையும் தனக்குக் கீழ் அடிமைப்படுத்தும் அல்லது ஆதிகஞ்செய்யும் நிலைக்குத்தள்ளிவிடுகிறது!இதன் தொடர்ச்சியாக பெண்ணடிமை முதல் பிரதேச வேறுபாடுவரை மட்டுமல்ல சாதிகளாகப் பிளவு பட வைத்திருக்கிறது,இந்த உளவியற்பாங்கு சினஞ்சிறியவர்களைக்கூட உடமைகளாகக் காணும் மனோ நிலையை நமக்குள் ஏற்படுத்தியுள்ளது.இதன் தொடர்ச்சியேதாம் வடக்கினது பாரபட்சமாக கிழக்கு மாகாணத்தில் முகிழ்த்தது, 'பனை தமிழரினது தேசிய மரமென ' வரையறை செய்வதுகூட ஒருவகை யாழ்ப்பாண ஆதிக்க் கருத்தியல்தாம்.இந்நோக்கில் பார்த்தால் தளபதி கருணா முன்வைத்த கருத்துக்களில் உண்மையிருப்பதை யாரும் மறுக்க முடியாது.ஆனால் இவற்றை முன்தள்ளி ஆதாயமடைவது நிச்சியமாகச் சிங்கள ஆளும் வர்க்கமும்,இவர்களைக் காப்பாற்றும் அந்நிய சக்திகளுமாக இருக்கும்.ஜே.ஆரே.பிரிக்க முடியாமற்போன வடக்குக் கிழக்கு மாநிலத்தை பிரபாகரனது போராட்டச்செல் நெறி,எம்மை உடைத்துத் துளாக்கவெண்ணும் அந்நிய சக்திகளுக்கு வழிவகுத்துவிட, இது பிராந்தியத் தரகு முதலாளிகளினது பங்கீட்டுச் சண்டையாக மாறி மக்களை கழுமரத்திலேற்றும் நிலைக்கு வளர்வுறக் காத்துக்கிடக்கிறது.

 

நாடாளுமன்றம்: தேர்தலும்,மோசடியும்.

 

யுத்தங்களினால் பேரம்பேசிய தமிழ் தரகு 'புதியமுதாலாளிகள்' தற்போது பழைய மொந்தையை தமிழ்மக்களினது குருதியினால் நன்றாக அலம்பிக்கழுவி ஒரு கூட்டுக்குள்'தமிழ்த்(வி)தேசியக்கூட்டமைப்பு' எனும் பெருச்சாளிகளினது இரசவாதத்தை ஊற்றிக் கொண்டுள்ளார்கள்.அதை தமிழரினது விடுதலையை(!?)வென்றெடுக்கும் கூட்டாகவேறு சொல்கிறார்கள்.தமிழ் பேசும் மக்களை போரினால் கொன்றார்கள்,துரோகியெனச் சொல்லியும்,மாற்றுக்கட்சிக்காரனெக் கண்டும் கொன்றார்கள்.எதற்குமே மக்கள் வாய்திறக்கவில்லை! அந்தளவுக்கு இவர்களெல்லோரும் ஜனநாயகத்(!?) தலைமைகள்! இந்த நிலையில் யார்வேண்டுமானாலும் எதையும் செய்யலாம்,இப்போது நடாளுமன்றம் தமிழரின் உரிமையை வென்றெடுக்கும் போர்பரணியாம், இவர்தம் ஊசலாட்டமும்,பதவி-பணமோகமும் வெறியாகி நம்மைக் காவுகொள்ளும் நிலையை எட்டிவிட்டது .உளுத்துப்போன நாடாளமன்றத்திற்குள் நமது பிரச்சனையில்லையென்றதனாற்றாம் ஆயுதம் ஏந்திப்போராடியதென்பது வரலாறு,எமது பிரச்சனை அதற்கு வெளியேதாம், இந்த வஞ்சக வலையை விரித்து தேர்தல்களில் வென்று தத்தமது இருப்பினதும்,தேவையினதும் நலன் கருதி ஒவ்வொரு பங்காளிகளும் பங்கைச் சரிவரப் பங்கீடு செய்ய நடாளுமன்றம் வருகிறார்கள்.இவர்களினது தோற்றங்களுக்குள்ளே பாரிய இராட்சத முதலைகள் பதுங்குகின்றன.இவை நம்மை ஒருபுறம் யுத்தத்தால் சீரளழித்துவிட்டு மறுபுறம் பூர்ச்சுவா நாடாளுமன்றச் சகதிக்குள் தமது தவறுகளைத் தள்ளி மறைத்துவிட்டு, சேர்த்துவிட்ட சொத்துக்களின் சொந்தக்காரர்களாக மாறக் காத்திருக்கிறார்கள்.

 

புலம்பெயர் நாடுகளில் பற்பல ஊடகங்கள் இவர்தம் திருட்டுப் பணத்தில் இயங்கித், தமிழர்களின் ஜனநாயக உரிமைக்(!?)காக குரல் கொடுப்பதுபோல் பாசாங்கு செய்கின்றன.எரிகின்ற வீட்டில் பிடுங்கியது மிச்சம்தாமே? ஒவ்வொருகுழுவும் தமிழர் நலம்,ஜனநாயகமெனத் தாலாட்டியபடி சுரண்டலில் ஈடுபட நாமோ நடாற்றில் தள்ளிய நாயாகத் தத்தளிக்கின்றோம்.கடந்த 56ஆண்டுகளாக இதே கதைதாம் வௌ;வேறு பாத்திரங்களுடாய் அரங்கேறியது,இப்போதோ (வி)தேசியத் தலைவரின் வழிகாட்டலில் அண்ணன்மார்,தம்பிமார் அரிவாளும் சுத்தியலும் ஏந்தித் தமிழர் நலத்தை-விடுதலையை-சுயநிர்ணய உரிமையை-ஜனநாயகத்தை-தாயகத்தை மீட்டுவர நாடாளமன்றம் செல்லும்போது நாம் வாழ்த்தி வரவேற்புக் கொடுத்து அனுப்புவோமாக. 

 

-ப.வி.ஸ்ரீரங்கன்

 

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது