Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

பிற்போக்கு தேசியத்தின் அடித்தளம்

  • PDF

 தரப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டு தொடங்கிய ஆயுதப்போராட்டம் பிற்போக்கான திசை வழியில் இன்று வரை தொடருகின்றது. உண்மையில் இனவாதத் தரப்படுத்தலை எப்படி ஒரு ஜனநாயகக் கோரிக்கையாக மாற்றி போராடியிருக்க வேண்டும் என்பதே எம்முன்னுள்ள அடிப்படையான கேள்வியாகும். இதுவே தமிழ் மக்களின் போராட்டத்தை சரியாக வழிநடத்தியிருக்கும். தரப்படுத்தலை எந்தவகையில் எதிர் கொண்டிருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

 

1. இனவாத இனப்பிளவை கொண்டுவரும் தரப்படுத்தும் முறையை எதிர்த்து, பல்கலைக்கழக தகுதி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் அனுமதியை வழங்கு என்ற கோரியிருக்க வேண்டும்.

 

2. பின்தங்கிய மாவட்டங்களின் (தமிழ், சிங்கள, மலையக, முஸ்லீம் மக்களின்) கல்விக்கான அடிப்படை வசதியை உயர்த்தக் கோரியிருக்க வேண்டும்.

 

3. இலங்கை தேசிய வளத்துக்கும் அது சார்ந்த உற்பத்திக்கு ஏற்ப கல்வியை முற்றாக மாற்றவும், அதற்கு இசைவான பல்கலைக்கழக பட்டப்படிப்புகளை கோரியிருக்க வேண்டும்.

 

4. உயர் அதிகாரிகளை உருவாக்கவும், உயர் அந்தஸ்துக்கான கல்விக்கு பதிலாக மக்களின் வாழ்வுடன் இணைந்த அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் கல்வியை முன்வைத்து இருக்கவேண்டும்.

 

5. முன்னேறிய கல்வி அடிப்படையை பெறும் வகையில் பின் தங்கிய மக்கள் கல்வியை பெறும் வகையில் சமூக பொருளாதார சூழலை உருவாக்க போராடியிருக்க வேண்டும்.

 

இந்த கோரிக்கை தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் கூட இதுவே பொது கோசமாயிருக்க வேண்டும்.

 

1. இனம் சார்ந்த இனவாத அடிப்படையிலான தரப்படுத்தல் முறையை எதிர்த்துப் போராடியிருக்க வேண்டும்.

 

2. பிரித்தாளும் குறுகிய இன அரசியலை எதிர்த்துப் போராடியிருக்க வேண்டும்.

 

3. இன ஐக்கியத்தை இனம் கடந்து முன் வைத்திருக்க வேண்டும்.

 

4. இன அடிப்படையிலான சமுதாயத்தின் திட்டமிட்ட பிளவுகளை வரலாற்று ரீதியாக அடையாளம் காட்டி, அதை எதிர்த்துப் போராடியிருக்க வேண்டும்.

 

5. ஆதிக்க வர்க்கங்களின் இன வர்க்க நலன்களையும் நோக்கத்தையும், தெளிவுபடவே இனம் காட்டி அதை எதிர்த்துப் போராடியிருக்க வேண்டும்.

 

ஆனால் இதை தமிழ் மக்களும் சரி, சிங்கள மக்களும் சரி செய்யவில்லை. இலங்கையில் எந்தக் கட்சியும் இதை முழுமையாக கொண்ட போராட்டத்தை நடத்தவில்லை. கட்சிகள் இந்த பிளவில் குளிர்காய்பவர்களாக இருந்ததால், இந்த பிளவை வீங்கவைத்தனர். இதன் எதிர்நிலைத் தன்மையில் ஒருபுறம் சிங்கள மக்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்பட்டன. மறு தளத்தில் தமிழரின் உரிமைகள் பறிக்கப்பட்டன. இன அடிப்படைவாதம் சமூகங்களை இனங்களாகப் பிளந்து படிப்படியாக ஒரு யுத்த தன்மைக்குள் நகர்த்தின. இதனால் தமிழர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகள் முந்திய சிங்கள இன நிலைக்கு தாழ்ந்து மறுக்கப்பட்டதுடன், தமிழரின் வாழ்வு மறுக்கப்பட்டது. இவை நிகழ்ந்த காலகட்டம் என்பது, ஒரு வரலாற்று நீட்சியாக இருந்துள்ளது. ஆனால் இதை மறுத்த தமிழ் தேசியம் தமிழர்கள் தமது ஒடுக்குமுறையை பல்கலைக்கழக அனுமதியில் இருந்து விளக்கியதில் இருந்தே, போராட்டத்தில் பிற்போக்கான கூறு வளர்ச்சி பெறுவதை உறுதி செய்தது. சிங்கள இனவாத அரசு தரப்படுத்தலை கொண்டு வந்த போது, இனவாதமே அதன் அடிப்படையாக இருந்தது. இதை தமிழர்கள் அதே இனவாதத்துடன் உள்வாங்கி எதிர்த்தது என்பது, எமது போராட்டத்தின் ஒரு திசைவிலகல்தான். உண்மையில் ஜனநாயகபூர்வமாக சிந்திப்பவன் ஒட்டு மொத்தமாக சகல மாணவர்களையும் இனம் கடந்து பார்த்திருக்க வேண்டும். அதை குறுந் தமிழ் தேசியம் ஒருநாளும் செய்யவில்லை.

 

உண்மையில் பல்கலைக்கழக அனுமதியில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை எல்லையற்றது. 1942 இல் பல்கலைக்கழகத்தில் ஒட்டு மொத்தமாக கல்வி கற்ற மாணவர்கள் எண்ணிக்கை 904யாக இருந்தது. இது 1988-89 இல் 29781 யாக மாறியது. 1998 இல் இது 32000 மாக மாறியது. ஆனால் பல்கலைகழக அனுமதி கோரி 1960 இல் 5277 பேர் விண்ணப்பித்தனர். 1969-70 இல் 30445 பேர் விண்ணப்பித்தனர். இது 1995 இல் 70 000 மாக மாறியது. ஆனால் பல்கலைக்கழக அனுமதி 1960 இல் 1812 பேருக்கும், 1969-70 இல் 3451 பேருக்குமே, 1995 இல் 8000 பேருக்கே கிடைத்தது. பல்கலைக்கழக தகுதியுடைவர்களில் கிடைக்கும் எண்ணிக்கை ஆழமாக குறைந்து வருகின்றது. பல்கலைக்கழகம் செல்லும் தகுதி உடையவர்களில் பல்கலைக்கழகம் செல்வது 1970 இல் 34 சதவீதமும், 1975 இல் 26 சதவீதமும், 1980 இல்12 சதவீதமும், 1991 இல் 15.5 சதவீதமும், 1993 இல் 14.6 சதவீதமாகவும், 1995 இல் 11.4 சதவீதமாகவும் குறைந்து செல்லுகின்றது. பல்கலைக்கழகம் செல்ல தகுதி உடையவர்கள் கல்வி மறுக்கப்பட்டு, கற்ற கல்விமுறைக்கு சம்பந்தம் இல்லாத சமூக உழைப்புடன் தொடர்பற்ற வகையில் சமுகத்தில் வீசப்படுகின்றார்கள்.

 

பல்கலைக்கழகம் செல்லத் தகுதியுடையோரில் பல்கலைக்கழகம் செல்வோர்.

ஆண்டு   சதவீதம்  ஆண்டு    சதவீதம்   ஆண்டு  சதவீதம்

1948               22.4         1958           28.0          1970         10.9
1949               24.0         1959           30.0          1971              -
1950              30.3         1960            34.3          1972         10.8
 1951             28.1         1961            37.0          1974         11.2
 1952             25.6         1962            21.4          1975           8.4
 1953             24.1         1963            22.4          1976           7.8
 1954             29.5         1964            20.6          1977           5.9
 1955             31.3         1965            20.3          1978           6.7
 1956             35.1         1966            11.6          1979           6.4

 
உண்மையில் பல்கலைக்கழக தகுதியுடைய அனைத்து மாணவருக்கும் பல்கலைக்கழகம் அனுமதி மறுக்கப்படுகின்றது. தகுதியுடைய மிகக் குறைந்த சிலருக்கே அனுமதி என்ற நிலையில், இதில் இனவாதம் புகுத்தப்பட்டது. தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கிடைக்குமாயின், தரப்படுத்தல் என்ற முறையே அர்த்தமற்றதாகிவிடும். அண்ணளவாக 9 முதல் 10 மடங்கு மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி மறுப்புக்குள்ளாகிய நிலையில், இதை திசை திருப்பவே இனவாத மோதலை திட்டமிட்டு உருவாக்கியதை, இலங்கை வரலாறு மீண்டும் ஒருமுறை காட்டுகின்றது. தகுதியுடைய பல்கலைக்கழக கல்வி மறுக்கப்பட்ட மாணவர் நலனுக்காக யாரும் போராடத் தயாராக இல்லை. இது தமிழ் சிங்கள இனம் கடந்து ஒரே நிலையில், ஒரேவிதமான முடிவுகளையே கொண்டிருப்பது இதன் சாரமாகும். உண்மையில் பல்கலைக்கழக தகுதி உடையவர்களில் கல்வி மறுக்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கில் தமிழரும் இருந்தனர் சிங்களவரும் இருந்தனர். ஆனால் தேசியவாதிகள் தத்தம் தரப்பில் இதையிட்டு மூச்சுக் கூட விடவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக இந்த தேசியம் உண்மையில் போராடத் தயாராக இருக்கவில்லை.

 

இது ஒருபுறம் மறுக்கப்பட மறு தளத்தில் பொதுவாகவே கல்வி மறுக்கப்படுகின்றது. இலங்கையில் 1995 இல் உயர்கல்வி 2 முதல் 5 சதவீதமானவருக்கே கிடைத்தது. மிகுதி மாணவர்களுக்கு அது திட்டவட்டமாக மறுக்கப்படுகின்றது. அண்ணளவாக 14 சதவீதமான குழந்தைகள் பாடசாலை செல்லும் வயதில் சேரிகளிலும் தொழில் நிலையங்களிலும் அடிமைகளாக வாழ்கின்றனர். அடிப்படையான தேவையை நிறைவு செய்யும் சமூகப் பொருளாதார பண்பாட்டுச் சூழல் இன்மையால், கல்வி கற்போரும் தமது கல்வியை தொடரமுடியாத சூழலில் சிதிலமடைகின்றனர். 1987 இல் 389 577 மாணவர்கள் க.பொ.த சாதாரண பரீட்சையில் சித்தியடையவில்லை. அவர்களை எந்த விதமான கல்வி தொடர்ச்சியுமின்றி வீதியில் வீசியெறியப்பட்டனர். இதே ஆண்டில் 112 577 மாணவர்கள் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோன்றிய போது 6143 மாணவருக்கு மட்டுமே பல்கலைக்கழக அனுமதிகிடைத்தது. மிகுதியானவர்கள் சமூக வெற்றிடத்தில் தள்ளப்பட்டனர்.

 

இலங்கையின் சமூகப் பொருளாதார பண்பாட்டு நிலமை மக்களிடையில் பிளவுபட்டு இருப்பதால், ஒட்டு மொத்த மாணவர் சமூகமே பாதிக்கப்படுகின்றது. 1991, 1992, 1993 இல் இல் 5ம் வகுப்பு புலமைப் பரீட்சையை ஆராயின் 10 முதல் 17 சதவீதமானோர் 100 க்கு 10 குறைவான புள்ளிகளையே பெற்றனர். 23 முதல் 42 சதவீதமானவர்கள் 20க்கு குறைவான புள்ளிகளைப் பெற்றனர் 53 முதல் 73 சதவீதமான மாணவர்கள் 40 க்கு குறைவான புள்ளிகளைப் பெற்றனர். அதாவது 1991 இல் 38000 பேர் 100 க்கு 10 குறைவான புள்ளிகளையே பெற்றனர். 1991 இல் 86000 பேர் 100 க்கு 20 குறைவான புள்ளிகளையே பெற்றனர். 1991 இல் 150 000 பேர் 100 க்கு 40 குறைவான புள்ளிகளையே பெற்றனர். முரண்பாடு கொண்ட சமூகப் பொருளாதார பண்பாட்டுக் கூறுகள் மாணவர்களின் கல்வித் தரத்தை மிக மோசமாக பாதிப்பதை இது காட்டுகின்றது.

 

வாழ்க்கையோடு தொடர்பற்ற வகையில் திணிக்கப்படும் கல்வி மற்றும் உயர்ந்த அந்தஸ்தை நோக்கிய கனவுடன் திணிக்கப்படும் கல்வி முறை பாரிய சமூக விளைவுகளை ஏற்படுத்துகின்றது. 1990 இல் வந்த தொடர் பத்து ஆண்டுகளில் க.பொ.த.சாதாரண பரீட்சையில் 10 சதவீதமானவர்கள் (1995 இல் 55000 பேர்) ஒரு பாடத்தில் தன்னும் சித்தி பெறவில்லை. 70 சதவீதமானவர்கள் கணிதம் மற்றும் விஞ்ஞானத்தில் சித்தியடையவில்லை. 1995 இல் 15 சதவீதமானவர்கள் மட்டுமே க.பொ.த உயர்தர வகுப்புக்கு செல்லும் தகுதியை அடைந்தனர். 1995 இல் 12000 மாணவர்கள் க.பொ.த உயர்தர பரீட்சையில் ஒரு பாடத்தில் தன்னும் சித்தி பெறவில்லை. ஆண்டுக்கு 200 கோடி செலவில் வழங்கப்படும் இந்த ஏகாதிபத்தியக் கல்வியின் கதி இது. க.பொ.த பரீட்சைக்கு பங்கு கொள்ளும் 170 000 மாணவர்களில் 8 முதல் 9 ஆயிரம் பேர் வேலையற்றவராக மாறுகின்றனர். 1960 தொடங்கிய வேலையற்ற பட்டதாரிகளை உற்பத்தி செய்யும் எமது கல்வி அமைப்பு, இன்று 16 முதல் 17 ஆயிரம் பட்டதாரிகளை வேலையற்றவராக்கி விடுகின்றனர். இன்று 170 000 மாணவர்கள் பல்கலைக்கழக பரீட்சையில் பங்கு கொள்ளும் அதே நேரம், 70000 பேர் பல்கலைக்கழக தகுதியை பெற்ற போதும் அதில் 8000 பேர் மட்டுமே பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகின்றனர்.

 

இந்த தகுதி பெற்றோரில் பல்கலைக்கழகம் செல்வோர் குறைந்து வருகின்றனர். உயர் கல்வி வயது எல்லையான 19-23 வயதுடைய 2 சதவீதமானவர்களே உயர் கல்வியைப் பெறுகின்றனர். இது தென்னாசியாவில் 5 சதவீதமாகவும், தூரகிழக்கு நாடுகளில் 8 சதவீதமாகவும், மேற்கில் 20 முதல் 30 சதவீதமாகவும் உள்ளது. 40 கோடி மக்கள் தொகை கொண்ட ஐரோப்பாவில் 1.2 கோடி மாணவர்கள் பல்கலைகழகத்தில் கல்வி கற்கின்றனர். 2000ம் ஆண்டில் 30 க்கும் 34 க்கும் இடைப்பட்ட வயதில் உள்ளவர்களிடையே 22 சதவீதமானவர்கள் உயர்ந்த பட்டப்படிப்பை முடித்தவர்களாக உள்ளனர். லுக்சம்பேர்க்கை எடுத்தால் 80 சதவீதமானவர்கள் பட்டப்படிப்பை முடிக்கின்றனர்.

 

இலங்கையில் அடிப்படைக் கல்வியை பெறுவோரில் கல்வித்தரமும், அதன் தொடர்ச்சியும் மிக மோசமாக அடிபாதாளத்தில் காணப்படுகின்றது. எமது தேசிய போராட்டம் கல்வியை முன்னிலைப்படுத்தி தொடங்கியபோது, அனைத்து மாணவர்களின் கல்வி மீது தன்னை ஆயுதபாணியாக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் கிடைக்கும் உயர் அந்தஸ்துகளை உடைய மருத்துவம், பொறியியல் மற்றும் விஞ்ஞானத் துறை சார்ந்து கிடைக்கும் 500 உயர் கல்வியை மையமாக வைத்தே, குறுந் தேசியத்தை உயர்த்தினர். இதற்கு சாதகமாக மருத்துவர், பொறியியல் கனவுகளுடன் கற்று வந்த மாணவர் சமூகத்தையும், ஒட்டு மொத்த சமூக கண்ணோட்டத்தையும் குறுந் தேசிய இனப் போராட்டத்தின் பால் இழுக்க முடிந்தது. பல்வேறு சமூகத்துறை சார்ந்த குறுகிய கண்ணோட்டம் குறுந்தேசிய இனப் போராட்டமாகியது.

 

ஒட்டு மொத்த மாணவர்களின் எதிர்காலம், சமூகத்தில் வடிகட்டப்பட்ட பின் அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பது தொடங்கி இதன் சமூக பொருளாதார பண்பாட்டுக் கூறுகள் என்ன என்பதையிட்டு குறுந் தேசியப் போராட்டம் அக்கறைப்படவேயில்லை. இதற்கு எதிரான சமூக கண்ணோட்டத்தை கொண்டு கோசம் போட்டவர்கள், கல்வி தொடர முடியாத சமூகநிலமைகளை கவனத்தில் எடுத்து அதற்கு எதிராக போராட முன்வரவில்லை. கிரிக்கட் போட்டியில் சிறு எண்ணிக்கையானோர் விளையாட, வேலை வெட்டி இல்லாதவர்கள் நாள் கணக்காக சுற்றி நின்று வம்பளப்பது போல், மாணவர் சமூகத்தில் ஒரு சிலரை உருவாக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான வடிகட்டல் ஊடாக சிலரை மையப்படுத்தி சமூக கண்ணோட்டம் நீடிக்கும் போது, உண்மையில் கல்வி தரம் என்பது ஆதாள பாதாளத்தில் வீழ்ச்சி காண்பது தவிர்க்கமுடியாது. கல்வி என்பது சமூகத் தளத்தில் மனிதனின் வாழ்வியலுடன் எந்த விதத்திலும் தொடர்பற்றதாக உள்ளவரை, அறிவற்ற மூடர்களாக சமூகம் உருவாகின்றது. அதில் இருந்து உருவாகும் போராட்டம் முட்டாள் தனத்தையும் மக்கள் விரோதத்தையும் ஆதாரமாக அடிப்படையாகக் கொள்கின்றது.

 

இலங்கை ஒரு விவசாயநாடு. ஆனால் எத்தனை பேருக்கு அதில் பட்டத்தை பெற முடிகின்றது. இது போல் மீன் பிடி தொடங்கி தேசிய உற்பத்தி மேல் நாம் ஆராயின் எமது கல்வியின் கோமாளித் தனத்தையும், தேசியத்தின் ஏகாதிபத்திய தன்மையையும் புரிந்து கொள்ளமுடியும். இந்தத் தொழில்கள் இழிவாக்கப்பட்ட போது, அந்த பட்டங்கள் கூட இழிவாகவே தீட்டுப்படுகின்றது. ஏகாதிபத்திய நாடுகளுக்கு தேவையான மலிவான கூலிகளை உற்பத்தி செய்வதற்கே இந்தக் கல்வி ஆதாரமாகின்றது. இலங்கையில் பல்கலைக்கழகம் சென்ற இந்த பிரிவுகள், நாட்டை விட்டுச் சென்று விடுவது வெட்டவெளிச்சமாகும். ஆனால் எமது தேசியம் இந்த வட்டத்துக்குள் நின்று இதை மையமாக வைத்தே சுழல்கின்றது.

 

இதை உயர் வர்க்கங்கள் தமது நலனில் இருந்து ஒட்டு மொத்த சமூகத்துக்கும் கட்டமைக்கின்றனர். தரப்படுத்தலுக்கு முன் இலங்கையில் மருத்துவம் பொறியியல் மற்றும் விஞ்ஞானத்தில் யாழ் குடா நாடு 50 சதவீதத்தை கைப்பற்றிய போது, கலைத்துறையில் 5 சதவீதத்துக்கு குறைவாகவே பல்கலைக்கழகம் சென்றனர். யாழ் சமூகத்தின் பூர்சுவா கண்ணோட்டம் கலைத்துறையை இழிவாக்கி அதைத் தீட்டாக்கியதன் விளைவே இது. இதைப் பார்ப்போம்.

ஆண்டு              69-70            70-71           71-72           73              74           75        76        77        78
 சிங்களம்           89.1               89.7             92.7           91.8           86.0       85.6      86.3    85.8     83.3
 தமிழ்                     6.9                  7.0               4.7             5.9           10.0       10.1        8.6       9.2     15.3


இந்த நிலையில் கல்வி தொடர முடியாத குழந்தைகளின் சமூகப் பொருளாதார நிலைமையை இட்டு, இந்த தமழ் தேசிய உயர் வர்க்கம் என்றுமே கவலைப்பட்டது கிடையாது. இதை வகுப்பு ரீதியாக பாடசாலையை விட்டு விலகியதை ஆராய்வோம்.

வகுப்பு       1            2         3             4            5              6            7             8
1972             -          5.3      5.3          6.4        7.3           9.3         4.7         8.4
1973          3.9        4.3     9.81       10.9      13.2        13.5       11.8       14.1
1975          2.2        5.2     11.2       11.2     12.4         12.4      12.0        12.0
1976          6.8        2.3       5.5         7.4      10.2           7.5         6.3       13.9


தமழ் தேசிய உயர் வர்க்கம் தனது நலனில் இருந்து தொடங்கிய தேசிய போராட்டம் கூட, அதன் எல்லைக்குள் தான் இன்று வரை தன்னை தகவமைத்துள்ளது. அனைத்து மாணவர்களின் கல்வி பற்றி சிந்திக்க தவறிய எமது குறுந்தேசிய இனப் போராட்டம், குறுகிய சமூக நலன்களில் இருந்தே தனது கோரிக்கைகளை முன்வைக்கின்றது. தமிழ் தேசிய வாதிகள் மட்டுமல்ல சிங்கள ஆட்சியாளர்களும் இதையே சிங்கள மக்கள் மேல் திணிக்கின்றனர். இவர்களுக்கு இடையில் இதில் கொள்கை வேறுபாடு கிடையாது. ஆக மக்களை கொள்ளையிட்டு பிரதேசங்களை யார் ஆள்வது என்பதே குறுந்தேசியத்தின் மையமான பிரச்சனை. தேசியத்தில் மக்களின் நலன் என்ன என்பது பற்றி அக்கறை கிடையாது. இதனால் மாணவர் சமூகத்தையிட்டு இந்த தேசியம் பழைய அதே கொள்கையையே கடைபிடிக்கின்றது. மறுதளத்தில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கே இந்தக் கதியுள்ள போது, பாடசாலை செல்ல முடியாதவர்கள் நிலையை நாம் கற்பனை பண்ணத் தேவையில்லை. இலங்கையில் கல்வியை பெற முடியாதவர்கள் முதல் எத்தனை சதவிகிதம் மாணவர்கள் கல்வியை பெறுகின்றனர் என பார்ப்போம்

 

கல்வி மட்டம்                                                            1971                1971              1981                   1981
                                                                                            ஆண்            பெண்           ஆண்                 பெண்
பாடசாலை செல்லாதோர்                                     12.1                 12.4                6.0                        4.2
1 முதல் 5 வரை சித்தியடைந்தோர்                 15.6                10.4                 9.4                         4.9
6 முதல் 10 வரை சித்தியடைந்தோர்.              61.4                58.0              72.7                       67.6
க.பொ.த சாதாரண வரை சித்தியடைந்தோர் 9.9                18.0                9.8                       19.6
க.பொ.த உயர்தரம் வரை சித்தியடைந்தோர் 0.7                1.0                 1.7                          3.3
 பட்டப்படிப்பும் அதற்கு மேலும்                         0.3                   0.6                0.1                          0.4

 

இலங்கையில் கல்வி கற்க முடியாத சமூக பொருளாதார பண்பாட்டுக் கூறுகளை அடைப்படையாக் கொண்ட குழந்தைகளையிட்டு, தமிழ் தேசியம் சரி சிங்கள தேசியம் சரி அல்லது இலங்கையில் எந்தக் கட்சியும் கூட அக்கறைப்படவில்லை. பாடசாலை செல்பவர்கள் கூட உண்மையில் இயந்திரமாக செல்லுகின்றனரே ஒழிய, கல்வி மீதான சழூக ஆர்வம் அல்ல. சமுதாயத்தின் இழிந்துபோன சமூகக் கண்ணோட்டம் கல்வியில் பாரிய விளைவை ஏற்படுத்துகின்றது. இது கல்வி தரத்தை வீழ்த்துவதுடன், தொடர்ச்சியான கல்வி முடக்கப்படுகின்றது. இதனால் க.பொ.த சாதாரண வகுப்பு மாணவர்களில் 80 சதவீதமான மாணவர்கள் பெரும்பாலான பாடங்களில் சித்தி பெறுவதில்லை. 20 சதவீதமான மாணவர்களே அனைத்துப் பாடங்களிலும் சித்தி பெற்றுகின்றனர். அனைத்து மாணவர்களில் 12 சதவீதமானவர்கள் மொத்தத்தில் அதே வகுப்பை மீண்டும் படிக்கின்றனர். உண்மையில் இலங்கையில் மாணவர்களின் கல்வி என்பது, 99 சதவீதம் மறுக்கப்படுகின்றது. சிலரை உருவாக்கும் கல்வி மூடிமறைக்கவே கல்வியில் இனவாதம் புகுத்தப்பட்டது. ஒட்டு மொத்த மாணவர் பிரச்சனையை குறுகிய இனவாத எல்லைக்குள் சிதைத்ததன் மூலம், மாணவர்களின் முதுகில் ஆளும் வர்க்கங்களும் கட்சிகளும் சவாரி செய்ய முடிந்தது, முடிகின்றது. இதையே தமிழ் தேசியமும் மறு தளத்தில் செய்தது. அனைத்து மாணவர்களின் நலன்களில் இருந்து இந்த தேசிய பிரச்சனையை இரு பகுதியுமே அணுகவில்லை, அணுகப்போவதுமில்லை. இதனால் இந்த தேசியம் என்பது சிலரின் நலனையும், சில வர்க்கத்தின் நலனையும், சில பிரதேசத்தின் நலனையும், உயர் சாதியின் நலனையும் பிரதி பலிப்பதால், யாழ் நலன்கள் சார்ந்த குறுந்தேசிய இனப் போராட்டமாக சீரழிந்தது.

 

அனைத்து மாணவர்களின் நலனை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கோரிக்கையை முன்வைத்து போராடியிருக்க வேண்டும். இனவாத பிளவுக்கான தரப்படுத்தல் முயற்சியை இதனடிப்படையில் முறியடித்திருக்க வேண்டும். மற்றைய தமிழ் பிரதேச மணவர்களுடன் இணைந்து, பிரதேச வாதத்தை தகர்த்திருக்க வேண்டும். சிறுபான்மை முஸ்லீம், மலையக மக்களுடன் நேசக்கரம் நீட்டியிருக்க வேண்டும். ஆனால் நாம் எதிரிடையாக சென்றோம். யாழ் மேலாண்மையை நிறுவவும், அதிக பல்கலைக்கழக அனுமதியையே நாம் கோரினோம். நாம் இன்று தமிழ் ஈழத்தைப் பெற்றாலும் கூட, இன்று இருக்கும் பல்கலைகழக அனுமதியைக் கூட பெறமுடியாது. இன்று உள்ள தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையை விட குறைவாகவே பல்கலைக்கழகம் செல்வார். தேசிய தேவைக்கு ஏற்ற கல்விக்கு பதில், ஏகாதிபத்திய உற்பத்தி மற்றும் கைக்கூலிக்கு ஏற்ற கல்வியே எமது தேசிய கல்வியாக உள்ளது. இதுவே புலிகளின் தேசிய கொள்கையும் கூட. எமது ஆயுதப் போராட்டம் வித்திட்டு வளர்ந்த முறையே பிற்போக்கானதாகும். குறுந்தேசிய யாழ் மையவாத உயர் கைக்கூலிகளின் நலன்களை பிரதிபலிக்கும் போராட்டமாகவே பரிணமித்தது. ஆனால் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைகள் பல இருந்தது, இருக்கின்றது. அதில் கல்வியும் ஒன்று.

 

1969இல் போட்டி பரீட்சை மூலம் தெரிவான 27.5 சதவீதமான தமிழ் மாணவர்கள் எண்ணிக்கை 1974 இல் 7 சதவீதமாக குறைந்தது. இதை மாவட்ட ரீதியாக பங்கிடப்பட்டது. 1973 இல் மொழிவாரி தரப்படுத்தல், 1974 இல் மாவட்ட அடிப்படையிலான தரப்படுத்தலும், 1975 இல் 100 சதவீத மாவட்ட ஒதுக்கீடும், 1976 இல் 70 சதவீதம் மாவட்ட ஒதுக்கீடும 30 சதவீதம் போட்டி பரீட்சையிலான திறமை அடிப்படையிலான ஒதுக்கீடும், ஒட்டு மொத்த தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியில் இனவிகித எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது. ஆனால் இது எந்த விதத்திலும் யாழ் மாவட்டத்தின் ஒட்டுமொத்த மாணவர்களின் சதவிகிதத்துக்கு மேலாகவே, பல்கலைக்கழக அனுமதியை யாழ் மாணவர்கள் பெற்றனர். இது எந்த பாதிப்பையும் இனவிகிதம் சார்ந்து யாழ்குடாநாட்டை பாதிக்கப்படவில்லை.

 

உண்மையில் யாழ் அல்லாத தமிழ் மாணவர்களே தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டனர். தரப்படுத்தல் அவர்களில் சிலருக்கு சலுகை வழங்கிய போதும், இனவிகிதாசாரம் சார்ந்து பாரிய இழப்பை தொடர்ந்தும் சந்தித்தனர். கல்விக்கான சமூக பொருளாதார பண்பாட்டுச் சூழல் அவர்களுக்கு எதிராக இருந்தது. இது யாழ் உயர் பிரிவுகளின் (இது வர்க்கம், சாதி, பிரதேசவாதம்) தொடர்ச்சியான ஒடுக்குமுறையாலும், சிங்கள இனவாத அரசின் ஒடுக்குமுறையாலும் ஏற்பட்டது. தமிழ் மக்களின் கல்வி சார்ந்த பிரச்சனை என்பது யாழ்குடா அல்லாத பிரதேசங்களிலும், தாழ்த்தப்பட்ட மாணவர்களினதும், முஸ்லீம் மாணவர்களினதும், மலையக மாணவர்களின் கல்விக்கான அடிப்படை வசதிகளை, சிங்கள இனவாதிகள் முதல் தமிழ் குறுந்தேசியவாதிகளும் திட்டமிட்டு மறுத்து வந்தனர். இதற்கு யாழ் சமூகம் சார்ந்த தேசியம், தமிழ் மக்கள் என்ற பொதுமைப்படுத்தல் ஊடாக அந்த மக்களின் நலனை இனவாத அமைப்புக்குள்ளேயே சூறையாடியதும், அந்த மக்களை இழிவுபடுத்தி ஒடுக்கியதும் ஒரு முக்கியமான தேசிய இன அடிப்படையாகும். இனமாக தேசியமாக பொதுமைப்படுத்தும் போது அந்த மக்களின் நலன்களை கவனத்தில் எடுக்க வேண்டும். மாறாக பொதுமைப்படுத்திய இனக் குறுந்தேசிய அடிப்படையில் அந்த மக்களை சூறையாடும் யாழ் மையவாத நலன்கள், அந்த மக்களை இன எல்லைக்குள் ஒடுக்கி வைத்துள்ளது. இதை ஆதாரமாக ஆராய்வதன் மூலம் இதை தெளிவாக்கலாம.

Last Updated on Tuesday, 26 August 2008 20:30