Tue04162024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் ஒரு பச்சோந்திக்கு, சந்தர்ப்பவாதிக்கு, பிழைப்புவாதிக்கு, பினாமிக்கு, கொலைகாரனுக்கு, இரட்டை வேடதாரிக்கு "மாமனிதர்' என்ற கௌரவம் விதிவிலக்கின்றி சிறப்பாகவே பொருந்துகின்றது

ஒரு பச்சோந்திக்கு, சந்தர்ப்பவாதிக்கு, பிழைப்புவாதிக்கு, பினாமிக்கு, கொலைகாரனுக்கு, இரட்டை வேடதாரிக்கு "மாமனிதர்' என்ற கௌரவம் விதிவிலக்கின்றி சிறப்பாகவே பொருந்துகின்றது

  • PDF

சிவராம் படுகொலை செய்யப்பட்டான் யாரால்? எதற்காக? படுகொலை வரலாற்றில் இது முதலாவதும் அல்ல, இறுதியுமல்ல.


இயக்கத் தலைமைகள் தமது தலைமையைத் தக்கவைக்கவும், குறுந்தமிழ் தேசியத்தின் தற்பாதுகாப்பே படுகொலை அரசியலாக வளர்ந்தது. அது முதல், படுகொலைகளே அரசியல் ஆணையாக மாறியது. படுகொலைகளின் போது எதிர்தரப்பு குதூகலிப்பதும், மறுதரப்பு புலம்புவதுமாக, தமிழ்க் குறுந்தேசிய வரலாறு தொடருகின்றது. எங்கும் சூனியம் நெற்றியில் செதுக்கப்படுகின்றது.

 

இந்தப் படுகொலைகள் மக்களின் வாழ்வியலுடன் தொடர்பற்ற வகையில், சொந்த குறுகிய நலன் சார்ந்ததாகவே எப்போதும் எங்கும் வக்கரிக்கின்றது. இப்படி நடக்கும் ஒவ்வொரு படுகொலையும், தமிழ் மக்களின் கைகளிலும் கால்களிலும் பூட்டப்பட்டுள்ள விலங்கை மேலும் இறுக்கும் நெம்புகோலாகின்றது. இது புலி சார்பு சிவராமாக இருக்கலாம் அல்லது புலி எதிர்ப்பு மற்றொரு நபராக இருக்கலாம். விளைவுகள் எப்போதும் ஒன்றே. மனிதக் குலத்தில் தமிழ் இனத்தின் புதைகுழி, இப்படி நாள்தோறும் வெட்டப்பட்டு புதைக்கப்படுகின்றது.


சிவராம் பத்திரிக்கை செய்தியாளர் என்பதால், கொலை முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது. ஆனால் மறுபக்கத்தில் அன்றாடம் தொடரும் சாதாரணமானவர்களின் கொலைகள், கடத்தல்கள் முக்கியத்துவமற்றதாக மாற்றப்படுகின்றது. உண்மையில் மனித இனத்துக்கு எதிரான கொலைகளையே தேசியம் கற்பித்து கொடுத்துள்ளது. கொலைகள் மூலம் தேசத்தையும், மக்களையும் வென்று அடக்கி ஆள முடியும் என்று, அதிகார வர்க்கங்கள் அனைவரினதும் கனவுகளை நனவாக்கவே கொலைகளில் முகிழ்ந்தெழுகின்றனர். இதனால் நாள்தோறும் ஒவ்வொரு நிமிடமும் யாரைக் கொலை செய்வது, யாரைச் சித்திரவதை செய்வது என்பதைப் பற்றிய திட்டங்களைத் தீட்டுகின்றனர்.


இன்று இலங்கையில் ஆயுதங்களைக் கையாளும் யாரும், இதற்கு விதிவிலக்குடன் இயங்கவில்லை. கொலை, கொள்ளை, சூறையாடுவது, சித்திரவதை, மிரட்டல் என்று ஒரு நவீன தேசிய அகராதியே, இன்றைய தேசியமாகவும், தேசிய எதிர்ப்பாகவும் வரையப்பட்டு விட்டது. மக்களையிட்டு யாருக்கும் துளியளவுக்கும் நேர்மையான ஒரு சமூக உணர்வோ அக்கறையோ கிடையாது. தமிழ் இன மக்கள் தனது சமூகப் பண்பாட்டு, கலாச்சார உணர்வுகளையே இழந்த அனாதைகளாகவும், வக்கரித்த லும்பன்களாகவும் மாறிவிட்டனர். மற்றைய மனிதனின் சாதாரணமான முரண்பட்ட கருத்தை விவாதிக்கக் கூடத் தேவையில்லை. குறைந்தபட்சம் மற்றைய மனிதனுடன் அதைப் பற்றி கதைக்கக் கூட தெரியாத மலட்டு சமூகத்தையே தேசியம் உருவாக்கியுள்ளது. குறைந்தபட்சம் தூசணம், வன்முறையுமின்றி முரண்பட்ட மனிதனுடன் பேசக் கூட தெரியாத தமிழ்ச் சமூகத்தில் நாம் வாழ்கின்றோம். இவற்றுக்கு கோட்பாடு ரீதியாக வழிகாட்டும் ஏகபிரதிநிதிகளாக இன்று புலிப் பினாமிகள் உள்ளனர்.


இதன் முதிர்வே இன்றைய தேசியக் கொலைகள், தமிழ் ஊடகவியலும், புலிப்பினாமியமும் கொலைகள் பற்றிய தமது நிலைப்பாட்டில் சந்தர்ப்பவாதத்தையும், ஒரு பக்க சார்புடனும், மௌனத்தின் மூலமும் கொலைகளை ஆதரிக்கின்ற நிலையில், கொலைகள் அங்குமிங்குமாக ஒரு பகுதியால் நியாயப்படுத்தப்படுகின்றது. பத்திரிக்கைத் துறையும் நெருக்கமாகவே இதனுடன் கைகோர்த்துக் கொள்கின்றது. தமிழ் மக்களின் நலன்களில் இருந்து இந்தக் கொலைகளை யாரும் பகுத்தாய்வு செய்வதில்லை. தமிழ் மக்கள் சந்திக்கும் பலதரப்பட்ட வாழ்வியல் நெருக்கடிகளில் இருந்து தேசியத்தை உயர்த்துவதில்லை. இதனடிப்படையில் சிவராம் கூட ஒரு பக்க சார்பாகக் கொலைகளை நியாயப்படுத்தி வக்கரித்தவன் தான். ஏன் அவனே ஒரு கொலைகாரன் தான். இன்று அவன் ஊடகவியல் துறையில் நக்கி பிழைக்கும் தனது அறிவுத் திறமையால் மிக முக்கியமான பினாமியாகி ""மாமனிதன்'' பட்டத்தைப் பெற்றுள்ளான்.


கொலைகளைத் தமிழ் மக்களின் நலன் சார்ந்து பகுத்து ஆராயும் முறைமை சிதைந்து போயுள்ளது. கொலைகளையே நியாயப்படுத்தும் பினாமி எழுத்தாளர்கள் சமூகத்தை வழிகாட்டும் நிலையில், கொலைகளே சமூக அதிகாரத்தின் இருப்பாகின்றது. மக்களுக்கு நேர்மையாக இருந்து, மக்களின் வாழ்வியலுக்கு விசுவாசமாகச் செயல்பட்ட ஒரு அதிகாரத்தை, குறைந்தபட்சம் தக்க வைக்கும் அடிப்படையான சமூகப் பண்பாட்டை இழந்துவிட்டனர். இந்த நிலையில் சமூக விரோத லும்பன்கள் உருவாக்கியுள்ள அதிகார மையங்களும், அதைச் சார்ந்து நக்கிப் பிழைக்கத் தெரிந்த பிழைப்புவாத பினாமிகளும்தான், தமிழ் மக்களின் அடிமைத்தனத்தின் மீது தமது சவாரிகளை நடத்துகின்றனர்.


சிவராம் படுகொலை அவர் என்ன அரசியலை வைத்திருந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அவன் படுபிற்போக்கான நபராக வாழ்ந்தபோதும், அவன் மீதான எந்தக் குற்றத்துக்குமான தண்டனையையும் மக்கள் மட்டுமே தீர்ப்பளிக்கும் தகுதி படைத்தவர்கள். சிவராமின் குற்றம் புலிகளுக்கு வக்காலத்து வாங்கி புலிகளின் மனித விரோதத்தை நியாயப்படுத்தியதால் மட்டுமானது அல்ல. இப்படி புலி எதிர்ப்பு பிரிவினர் பூச்சாண்டி காட்ட முனைகின்றனர். மாறாக அவன் புளொட் இயக்கத்தில் இருந்த காலத்திலேயே ஒரு மனித விரோதியாக, சமூகக் குற்றவாளியாக இருந்தவன். சிவராம் ஒரு சமூகக் குற்றவாளியாக இருந்த போதும், இன்று சிவராமைப் போன்றவர்கள் பரஸ்பரம் நடத்தும் படுகொலைகள் அனைத்தும், விதிவிலக்கற்ற வகையில் மக்களின் அடிமைத்தனத்தை மேலும் அகலமாக்குகின்றது.


1983கள் முதலே நான் சிவராமை அறிவேன். ஒரு பச்சோந்தியாக, சந்தர்ப்பவாதியாக, பிழைப்புவாதியாக, பினாமியாக, கொலைகாரனாக மனித இனத்துக்கு எதிரான ஒட்டுமொத்த வடிவம் தாங்கி அங்குமிங்கும் நக்கித் திரிந்தõன். அவனுக்கு என்று நிரந்தரமான கோட்பாடோ, கொள்கையோ கிடையாது. பலமுள்ளவன் பின் தனது விபச்சாரக் கடையை விரிப்பõன். குறிப்பாக அமெரிக்கா ஈராக்கைப் போல் தமிழ் மண்ணை ஆக்கிரமித்தால், அமைக்கும் இடைக்கால அரசில் ஒரு பிரதிநிதியாகப் பவனிவரக்கூடிய எல்லா இழிந்த தகுதியையும் அவன் தனக்குள் தானே தாங்கி நின்றான்.


அவனுக்கு எதிரான விமர்சனத்தை 1983களில் நான் அவனுக்கு முன் செய்திருக்கின்றேன். குறிப்பாக 10 வருடங்களுக்கு முன்பாக சமர் இதழில் சரிநிகர் பத்திரிக்கை மூலம் சிவராம் புதிய அவதாரம் எடுத்தபோது, அகிலன், செல்வனை உட்படுகொலை மூலம் புளொட் மட்டக்களப்பில் வைத்து கொன்றபோது, சிவராம் அதில் நேரடியாகச் சம்பந்தப்பட்டதை நான் சுட்டிக் காட்டினேன். இதன் பின்பாக பாரிஸ் இலக்கியச் சந்திப்பு ஒன்றுக்கு வந்த சிவராமும், ரி.பி.சி. ராம்ராஜ்சும் ஒன்றாகவே என்னுடன் இது தொடர்பாக விவாதித்தனர். அப்போது, அவன் இக்கொலைக்கும் தனக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை என்றான். ஆனால் அப்போது தான் அப்பிரதேசத்தில் இருந்ததாக ஒப்புக் கொண்டான். ஆனால் இப்படி மறுத்த அவன், அக்கொலைகள் நடந்த போது இயக்கத்தை விட்டு வெளியேறவில்லை. கொலையை மூடிமறைக்கும் அரசியல் கொள்கை விளக்கத்தையே புளொட்டுக்குள் நடத்தியவன்தான் இந்த சிவராம். தொடர்ந்து, புளொட்டைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்களை புளொட் தனது சித்திரவதைக் கூடாரங்களில் படுகொலை செய்து சவுக்குத் தோப்புகளில் புதைத்த போது, அதற்கு தங்க முலாம் பூசி கொலைகளை நியாயப்படுத்தி ஒரு அரசியல் தலைவனாக இருந்தவன் தான் இவன்.


புளொட் இராணுவ அரசியல் பலத்தை முற்றாகத் துறக்கும் வரை, அவ்வியக்கத்தின் விசுவாசமான ஒரு தலைவனாக அனைத்து மனித விரோதத்தினதும் வழிகாட்டியாக இருந்தõன். கொலைகாரத் தலைவன் உமாமகேஸ்வரனின் வலது கையாக நக்கித் திரிந்தõன். பல தொடர் படுகொலைகளுக்குத் துணை நின்றõன். பல பத்து கொலைகளைத் திட்டமிட்டுச் செய்வித்தõன். ஏன் புலிகளுக்கு எதிராக புளொட் நடத்திய இறைகுமாரன், உமைகுமாரன் படுகொலை முதல் சுழிபுரம் படுகொலைகள் வரை, அதை செய்வித்ததிலும், செய்ததை நியாயப்படுத்துவதிலும் ஒரு தலைசிறந்த வல்லுனராகச் செயல்பட்டõன். சுழிபுரம் படுகொலைகள் நிகழ்ந்தபோது அப்பிரதேசத்தில் பிரசன்னமாகவிருந்தும் படுகொலைகளை நடத்தியது புளொட் அல்ல என்ற திசை திருப்பிய பிரச்சாரத்துக்கு அங்கீகாரம் தந்தõன்.


புளொட்டின் மனிதவிரோத செயல்பாட்டை எதிர்த்தும், உட் படுகொலைகளையும், வெளி படுகொலைகளையும் எதிர்த்து தீப்பொறி முதல் பலர் இயக்கத்தில் இருந்து குழுவாகவும், தனியாகவும் வெளியேறிய போது, அவர்களுக்கு எதிராக ஆயுத நடவடிக்கை எடுக்க ஆயுதம் தரித்து கச்சை கட்டி நின்றவன் தான் இந்தச் சிவராம். அவர்களைப் படுகொலை செய்ய சதிகளை உமாமகேஸ்வரனுடன் இருந்த கொலைகாரக் கும்பலுடன் சேர்ந்து திட்டமிட்டவன் தான் இந்த "மாமனிதன்' சிவராம். அவர்களைக் கொல்லவும், கடத்தி சித்திரவதை செய்யவும் துணை நின்றவன் தான் இந்தச் சிவராம். சந்ததியாரைச் சித்திரவதை செய்து கொல்வதற்குப் பக்கத் துணையாக நின்றவன்தான் இவன். அந்தக் கொலையை அரசியல் ரீதியாக நியாயப்படுத்தி புளொட்டில் அரசியல் பிரச்சாரம் செய்தவன். புளொட் சாதித்து முடித்த தொடர் படுகொலைகளின் மூளையாக ""மாமனித''னாகத் திகழ்ந்தவன்தான் இவன். இவை மட்டுமல்ல அவனின் வரலாறு மொழி அறிவு சார்ந்த அறிவையும், மார்க்சியத்தையும் கற்று, அதைக் கொண்டு ஏமாற்றி பிழைக்கவும் தவறவில்லை. மார்க்சியத்தின் பெயரில் அதைத் திரித்து, புளொட்டின் பாசறைகளில் பெண்களையே நுகரவைத்ததுடன், தானும் நுகர்ந்து ஒரு ஆணாதிக்கச் சமூக விரோதப் பொறுக்கியாகத் திகழ்ந்தõன். இப்படி மக்கள் விரோத பாத்திரத்தின் எல்லா வடிவத்திலும் தன்னைத் தான் "மாமனித'னாக அலங்கரித்தõன். தனது அறிவின் திறமையைப் பொறுக்கித் தின்பதற்காக மட்டும் பயன்படுத்தினான். எப்போதும் பலமானவர்களின் பின்னால் நின்று வாழத் தெரிந்தவனாக, அனைத்து மனித விரோதச் செயலுக்கும் துணை நின்றõன்.


புலிகள் மாற்று இயக்கங்களைத் ""துரோக'' முத்திரை குத்தி அழித்தொழிக்கும் போது, சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் தப்பி பிழைத்தõன். ஒரு துரோகியாக மரணிக்காது சந்தர்ப்பச் சூழ்நிலையால் தப்பினான். இன்று தியாகியாகி "மாமனித'னாகியுள்ளான். இது தமிழ்த் தேசிய வரலாற்றின் குறிப்பான முரண்நிலைதான். புளொட் வாசுதேவன் (முன்னைநாள் புளொட் அரசியல்துறைச் செயலர்), கண்ணன் (முன்னைநாள் புளொட் படைத்துறைச் செயலர் சோதீஸ்வரன்) போன்றோர் புலிகள் பேச்சு வார்த்தைக்கு அழைத்துக் கூட்டமாக மட்டக்களப்பில் படுகொலை செய்தபோது, அதில் விதிவிலக்காக எப்படியோ (எப்படி என்பது மர்மமாகவே உள்ளது.) தப்பி பிழைத்தõன். தப்பிப் பிழைத்தாலும் தொடர்ந்து புலிகளின் துரோகிகள் பட்டியலில் முன்னணி நபராகவே இருந்தõன்.


புளொட் சொந்தப் பலத்தை இழந்த நிலையில், சிவராம் அதில் இருந்து கலைந்து சென்றான். மாற்று கருத்துக்களை முன்வைத்தவர்களின் பின்னால் ஒட்டிக் கொள்ள முனைந்தான். புலம்பெயர் இலக்கிய ஜாம்பவான்கள் முதல் சரிநிகர் வரை அனைவரும் இவனின் சமூக விரோத நோக்கத்துக்குத் துணை போனார்கள். வாழத் தெரிந்த புத்திஜீவியான இவன், மாற்று இலக்கியம் என்பது வெற்றுவேட்டு என்பதைப் புரிந்து கொண்டான். இதனால் தான் வாழ முடியாது என்ற நிலையை அடைந்தான். அதேநேரம் தராக்கி என்ற பெயரில், புலியெதிர்ப்பு கட்டுரைகளையே எழுதி வந்தான். இதன் மூலம் இனவாதிகளுடன் சேர்ந்து நக்கிப் பிழைக்கத் தொடங்கினான். ஏகாதிபத்தியத் துணையுடன் உலகம் சுற்றும் வாலிபனாகவும், மர்மமான வகையில் வசதியான வாழ்வின் அடிப்படையையும் ஏற்படுத்திக் கொண்டான்.


புலிகள் தமது முன்னைய துரோகிகளைப் பினாமியாக்கி ""மாமனிதனாக்க'' முடியும் என்பதை அனுபவ ரீதியாகப் புரிந்து கொண்டது முதல், இவர்களின்பால் சில நெகிழ்ச்சி போக்கைக் கையாண்டனர். பலரைப் பினாமியாக்கவும், தமது உளவு தரகு படையாக்கவும் தொடங்கினர். இதை வசதியாகப் பற்றிக் கொண்ட சிவராம், புலிப்பினாமியாக குத்துகரணம் அடித்தான். புலிசார்பு பிரச்சாரத்தை, புலியெதிர்ப்பு பிரச்சாரத்தில் இருந்து மாற்றி அமைத்தான். புலிகள் தமது அரசியல், இராணுவ ஆய்வாளராகக் கருதும் அளவுக்குச் சிவராம் புலிகளின் நம்பிக்கைக்குரிய பினாமியானான். இவன் புலிகளின் படுகொலைகளை நியாயப்படுத்தவும், அதை இனம் தெரியாத கொலைகளாகக் காட்டவும் ஒரு நாளும் பின் நிற்கவில்லை. புளொட்டில் எதைச் செய்தானோ, அதையே புலிகளுக்காகச் செய்யத் தொடங்கினான்.


தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்தையும் தனது சொந்த திறமையால் உப்புச் சப்பின்றி நியாயப்படுத்தினான். இதனால் மட்டும் மிக பிரபல்யம் அடைந்த ஒரு ஊடகவியலாளனாக மாறினான். தமிழ்த் தேசியம் என்பது புலியின் நலன் என்ற குறுகிய விளக்கத்துக்கும் செயல்பாட்டுக்கும் அமைய, நியாயப்படுத்தியவர்கள் தமிழ்த் தேசியவாதியாகக் காட்டப்படுவதே இன்றைய தமிழ் ஊடகவியல் தத்துவமாகும். இதற்கு அமைய இயங்கிய சிவராம் என்ற தராக்கி புலித் தேசியத்தின் உச்சியில் வைக்கப்பட்டான்.


இவன் ஒரு கடைந்தெடுத்த இரட்டை வேடம் போட்ட சந்தர்ப்பவாத நரியன். இதன் அங்கமாக புலிகளின் உள்முரண்பாடுகளை விரிவாக்கும் பணியில், கருணாவுக்குச் சார்பாகவே செயல்பட்டான். கருணாவுக்கும் புலிகளின் தலைமைக்கும் இடையிலான முரண்பாட்டை, அரசியல் முலாம் பூசி பிரதேச முரண்பாடாக வெளிக்கொண்டு வந்ததில் சிவராமின் பங்கு மிக முக்கியமானது. கருணா புலிகளில் இருந்து பிரிந்துள்ளதை உத்தியோகபூர்வமான அறிவித்த அன்றும், அதற்கு முன்பும் கருணாவுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றியõன். கருணா பகிரங்கமாக தனது சொந்தப் பிளவை அறிவித்த அன்று, பி.பி.சி. யானது சிவராமின் பேட்டியை உடன் ஒளிபரப்பியது. அதில் சிவராம் கூறினான். ""நான் இப்ப கருணாவோடு நின்றுதான் வருகின்றேன். இது பிளவுறாத வகையில் தீர்க்கப்படும்'' என்றான். இப்படி கருணாவுடன் கூடிக் கூலாவிய அவன், கருணாவின் பிளவுக்கு அரசியல் முலாம் கொடுக்கும் வகையில் பிரதேசவாத அரசியல் அடிப்படையை ஏற்படுத்தினான்.


கருணாவின் பிளவை அடுத்து பாரிசில் வெளியாகிய அனாமதேயத் துண்டுப் பிரசுரம் ஒன்று, சிவராம் பெயரைக் குறிப்பிடாமல் சிவராமைக் குற்றம் சாட்டியது. இப்படித்தான் அன்று தொடங்கியது. புலிகள் நிலைமையின் விபரீதத்தையும், விளைவையும் புரிந்து கொண்டு, கருணாவைத் தனிமைப்படுத்தி அழிக்கும் வகையில் சில இராணுவ வியூகங்களை வகுத்தனர். இதனடிப்படையில் சிவராமை வளைத்துப் பிடித்து கருணாவுக்கு எதிராகச் சிவராமின் கட்டுரையை வீரகேசரியில் பிரசுரிக்க வைத்தனர். இதன் பல ஆயிரம் பிரதிகளைப் புலிகள் போட்டோ கொப்பி எடுத்து இலவசமாக விநியோகித்தனர். அத்துடன் சிவராமின் துணையுடனும், தனியாகவும் மட்டக்களப்பு புலி முக்கியஸ்தர்கள் பலரைக் கருணாவுக்கு எதிராக மாற்றியமைத்தனர். அவர்களைக் கருணாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் பயன்படுத்தினர். இப்படி பயன்படுத்தப்பட்டவர்கள் பலருக்கு இன்று என்ன நடந்தது என்பது தெரியாத மர்மமான ஒரு இரகசிய விடையமாகி விட்டது.


குறிப்பாக திருகோணமலை தளபதி பதுமன் ""நான் தான் இப்போது தளபதி'' என்று பேட்டி வழங்கினார். பின்னால் அவர் எங்கே என்று தெரியாது. இப்படித்தான் சிவராம் பயன்படுத்தப்பட்டார். சிவராமைப் புலிகள் தமது இராணுவ இலக்கில் பல வழிகளில் கையாண்டனர். கருணா தரப்பை இனம் காணவும், மறைவிடங்களை இடம் காட்டவும் கூட புலிகள் பயன்படுத்தினர். கொழும்பில் நடந்த கூட்டக் கொலை ஒன்றை, அரசு தெரிந்து கொள்ள முன்பே சிவராமின் இணையம் செய்தியாக வெளியிட்டது. இதைப் பார்த்துத்தான் கொலை நடந்ததை அரசு அறிந்து அங்கே சென்றது. இதனால் கொலைக்கும் சிவராமுக்கும் தொடர்பு உண்டு என்ற சந்தேகத்தை அரசுக்கு ஏற்படுத்தியது. இதனால் அவர் மீதான கண்காணிப்பு, விசாரணை, சோதனைகள் தொடர்ச்சியாக அதிகமாகியது.


மறுபக்கத்தில் புலிகளின் இராணுவ நடவடிக்கையால் பின்வாங்கிய கருணா தரப்பு, தம்மை இராணுவ ரீதியாக (அரசியல் ரீதியாக அல்ல) நிலைப்படுத்திக் கொண்டு மெதுமெதுவாக எதிர் தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளனர். இதன் மூலம் தமது பலத்தை உயர்த்தி வருகின்றனர். படுகொலை அரசியலை அண்ணன் தம்பியாக ஒரே இயக்கப் பாணியில் பரஸ்பரம் நடத்துகின்றனர். சிவராம் தர்மசங்கடமான நிலையில் அங்கு இங்குமாகத் திக்குமுக்காடும் வகையில் சிக்கிக் கொண்டான். அவன் கொல்லப்படும் முன் வீரகேசரியில் எழுதிய கட்டுரை இதற்கு தெளிவாக விளக்கமளிக்கின்றது.


புலிகள் மீதான மறைமுகமான சூழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட விமர்சனமாக இது அமைகின்றது. சாதியம், பிரதேசவாதம் போன்றவற்றை இனவாத அரசு பயன்படுத்துகின்றது. அந்த விமர்சனத்தில் ""நாங்கள் பேயராக்கப்படுகிறோம் என்ற தன்மை உணர்வு மக்களிடையே கூர்மையடைந்ததாலேயே எமது போராட்டம் எழுச்சியடைந்தது! அந்த அரசியல் எழுச்சியும் முனைப்பும் எமது போராட்டம் தடம் புரளாமல் இருக்க உதவின. இவை மழுங்கிப் போகுமாயின் நாம் சலுகைகளுக்காகச் சோரம் போகின்ற கேவலமான ஒரு கூட்டமாகிவிடுவோம்!'' என்றார். இதைப் புலிகள் தவிர்க்கும் வகையில், புலிகள் தமது அரசியல் நிலைபாட்டை மாற்ற வேண்டும் என்றார். ""எரிக்சோல்கெம் வருகிறார்! அவரைப் புலிகள் சந்திக்கின்றார்கள் சிரித்துக் கொண்டே கைக்குலுக்குகிறார்கள்'' இப்படி புலிகளை விமர்சித்து, தனது பழைய கருணா நிலைக்குச் சென்று, கருணா தரப்பைக் குளிர்மைப்படுத்தவே முனைந்தார். இக்கட்டுரை, சிவராமின் வழமையான பல குத்துக்கரணங்களின் மற்றொரு வெட்டுமுகம் தான். மாறிவரும் நிலைமைகளில் இருந்து தப்பிப் பிழைக்கவும், நக்கிப் பிழைக்கவும் முனைந்த சந்தர்ப்பவாதத்தின் வெளிப்பாடு தான் இது.


இவற்றையும் தாண்டி சிவராம் படுகொலை செய்யப்பட்டு விடுகின்றான். யார் இந்தப் படுகொலையைச் செய்தார்கள். இது சிக்கலான வகையில் காணப்படுகின்றது. பொதுவாக அரசின் திட்டமிட்ட வழிகாட்டல் இல்லாத அரசில் இருக்கும் ஒரு பிரிவு அல்லது சிங்கள இனவாதச் சார்பு குழுவே இதைச் செய்திருக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்தக் கொலை செய்தவர்கள் அதைக் கொண்டாட வக்கிரமாக, அவரின் மனைவியிடமே இதைத் தெரிவித்த விதம் வித்தியாசமானது. இங்கு பழிவாங்கும் உணர்வு மேலோங்கி காணப்படுகின்றது. குறிப்பாக அண்மையில் கடத்திக் கொண்டு செல்லப்பட்ட புலனாய்வு அதிகாரி ஜெயரட்ணத்திற்குப் பழிவாங்கும் வகையில், அவருடன் இருந்த குழு அல்லது அதற்குப் பழிதீர்க்கும் வகையில் ஒரு குழு இதைச் செய்திருக்கும் வாய்ப்புகள் அதிகம்.


மறுபக்கத்தில் சிவராமின் மனைவி நன்கு அறிமுகமான குரலே, கொல்லப்பட்ட செய்தியைத் தமக்குக் கூறியதாகத் தனது வாக்குமூலத்தில் கூறுகின்றார். இது நிலைமையை மேலும் சிக்கலாக்குகின்றது. இங்கு புலிகள் அல்லது கருணா தரப்பும் கூட ஏன் செய்திருக்கக் கூடாது என்ற கேள்வியை நாம் இலகுவாக நிராகரிக்க முடியாது.


புலிகளுடன் கருணா தரப்பின் பிளவை அதிகரிக்க வைத்து, அதற்கு அரசியல் முலாம் பூசிய பின் நட்டாற்றில் கைவிட்டதைப் பழிதீர்க்கவும் இதைச் செய்திருக்கலாம். புலிகளுடன் சேர்ந்து தம்மைக் காட்டிக் கொடுத்து, பல படுகொலைகளுக்குத் துணைபோனதைப் பழிதீர்க்கவும் இதைச் செய்திருக்கலாம். இந்த ஊகங்கள் நிராகரிக்க முடியாதவை.


இதேபோல் கருணாவின் பிளவுக்குத் துணை நின்ற சிவராமைப் புலிகள் பயன்படுத்தி முடிந்த நிலையில், பிளவுக்குத் துணை நின்ற இரட்டை வேடதாரியைப் பழிதீர்க்க புலிகள் கொன்று இருக்கலாம். புலிகள் கருணா பிரச்சினையின் போது, புலிகளுக்குச் சார்பாக மட்டக்களப்பில் துணை நின்ற பல முக்கியஸ்தர்களுக்கு என்ன நடந்தது என்பது யாரும் தெரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுபோல் அதன் தொடர்ச்சியில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். அத்துடன் புலிகளின் அரசியல் அடிப்படையையே மாற்ற வேண்டும் என்று சிவராம் வீரகேசரியில் எழுதிய கட்டுரையின் அடிப்படையில், சிவராமின் இரட்டை வாழ்க்கையை நன்கு புரிந்து கொண்ட புலிகள் அவரைக் கொல்வதைத் துரிதமாக்கியிருக்கலாம்.


எது எப்படி இருந்தாலும் சிவராம் போன்ற மனித விரோதியை இவர்கள் யாருமே கொல்வதை அங்கீகரிக்க முடியாது. மக்கள் தான், தமது சொந்த மக்கள் நீதிமன்றங்களில் விசாரிக்கவும் தண்டிக்கவும் முடியும். இன்று புலிகள் அவருக்கு ""மாமனிதர்'' என்ற கவுரவப் பட்டத்தை வழங்கியுள்ளனர். அதில் அவர்கள் ""தி.தருமரட்ணம் சிவராம் அவர்கள் எளிமையும் நேர்மையும் பொருந்திய ஒரு தனித்துவமான மனிதர்'' என்கின்றனர். இவை எல்லாம் உண்மையா? நம்புங்கள் உண்மை என்று. அதைத் தேசியத்தின் பெயரிலும் தலைவரின் பெயரிலும் உண்மையாக இருக்க வேண்டும் என்று. ஆனால் சிவராம் தமிழ் இனத்துக்குச் செய்த கொடுமைகளை வரலாறு ஒரு நாளுமே மன்னிக்காது.


புளொட் நடத்திய கொலைகளை நியாயப்படுத்தியது முதல் புலிகளின் மக்கள் விரோதப் படுகொலை அரசியலை நியாயப்படுத்திய எல்லை வரைக்கும் இந்த ""மாமனிதர்'' என்ற கவுரவம் பொருந்தி விடுகின்றது. ஏன் இறைகுமாரன் உமைகுமாரன் படுகொலை முதல் சுழிபுரம் படுகொலை வரை அதை நியாயப்படுத்தியதற்கும் சேர்த்து வழங்கப்பட்டதே ""மாமனிதர்'' கவுரவம். அது மிகச் சிறப்பாகவே பொருந்துகின்றது. புலிகளின் அண்மைய அரசியல் காட்டிக் கொடுப்புக்கு ஏற்ப சிறப்பான தெரிவுதான் இந்த ""மாமனிதர்'' கவுரவப் பரிசு.

 

01.05.2005

Last Updated on Sunday, 27 February 2011 07:53