Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் தமிழ் இனம் தனது மாற்றுக் கருத்துத் தளத்தைத் தொடர்ந்து இழந்து வருகின்றது. அதன் ஒரு அங்கமாகத்தான் வெக்ரோன் தொலைக்காட்சி நிறுத்தம் நிர்ப்பந்திக்கப்பட்டது

தமிழ் இனம் தனது மாற்றுக் கருத்துத் தளத்தைத் தொடர்ந்து இழந்து வருகின்றது. அதன் ஒரு அங்கமாகத்தான் வெக்ரோன் தொலைக்காட்சி நிறுத்தம் நிர்ப்பந்திக்கப்பட்டது

  • PDF

book _1.jpg"தமிழீழத் தேசியத் தலைவரின் ஆசியுடன் வெற்றி நடைபோட்ட வெக்ரோன் தமிழ்த் தொலைக்காட்சி சேவையானது நிறுத்தப்படுகின்றது என்பதனைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு. வெக்ரோன் உரக்கச் சொல்லும் உலகுக்கு.'' என்ற அறிவித்தலுடன், 27.4.2005 முதல் வெக்ரோன் தனது இலவச தொலைக்காட்சியைத் திடீரென நிறுத்தியது.


நிறுத்துவதற்கான காரணத்தைப் பூசிமெழுகிய வடிவில் புதைச்சேற்றில் புதைத்தனர். இந்தப் புதைச்சேற்றை மூடும் முன்பு அவர்கள் கூறிய காரணம் கூட, தமிழினத்தின் ஜனநாயகத்தை இட்டு சிறிதும் அக்கறையில்லாத வகையில், ஜனநாயக விரோதிகளின் விருப்புக்கு ஏற்றதாகவே புனைந்து காட்டினர். அவர்கள் இடை நிறுத்தத்துக்குக் கூறிய காரணத்தில்,

 

1. கொழும்பு பிரிவுக்கு தொடர்ச்சியாக ஏற்பட்ட அழுத்தம்


2. இலண்டனில் உள்ள இரண்டு தொலைக்காட்சிகளில் ஒன்றின் இடையூறு அல்லது அழுத்தம்.


3. சிங்களப் பத்திரிகையான ஒன்று இனவாத அடிப்படையில் வெக்ரோனை புலிசார்பான தொலைகாட்சியாகக் கூறும் பிரச்சாரம் என்பனவே காரணம் என்று தெரிவித்துள்ளனர்.


வழமைபோல் மூக்கைச் சுற்றி காட்டும் வித்தையூடாகவே, வெக்ரோன் தனது இடைநிறுத்தத்துக்கான காரணத்தை மூடிமறைக்கின்றது. ஒரு பத்திரிக்கை மற்றும் செய்தி அமைப்பு இயங்க வேண்டிய வடிவத்தில் வெக்ரோன் இயங்கியதல்ல. முரணற்ற வகையில் செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியதில்லை. இப்படி ஒருதலைப்பட்சமாகப் பொய்களை வரிந்து கட்டி இயங்கியதையே தமிழ்த் தேசியம் என்றனர். இவர்கள் புலிப்பினாமியாக வீறுநடைபோட்டு, முதுகெலும்பு இழந்து வக்காலத்து வாங்கியவர்களே. ஆனால் அதே புலிகளால் நிறுத்தப்படுவது என்பது, எம்மைப் பொறுத்தவரையில் ஆச்சரியமானவையல்ல. ஆனால் பலருக்கு ஏன்? யாரால்? எப்படி? எதற்காக? என்று இதுவே ஒரு புரியாத புதிராகி விடுகின்றது.


ஜனநாயகம், சுதந்திரம் என்பவற்றைச் சிலுவையில் அறைந்து விடுகின்ற போது கேள்விகளுக்குப் பதில்கள் இருப்பதில்லை. அதேபோல் பொய்களால் உண்மைகள் புதைக்கப்படுவதும் நிகழ்கின்றது. இதையே வெக்ரோன் நிறுத்துவதற்கு முந்திய கடைசி நிமிடங்களில் ஜனநாயக விரோதிகள் சாதித்துக் காட்டினர். இதனடிப்படையில் பலரும் இறுதிநேர தொடர்பைப் பயன்படுத்தி தொலைக்காட்சி நிறுத்தம் தொடர்பாக, தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு கருத்துக்களை வழங்கினர்.


ஆனால் உண்மையைப் புரிய முடியாத வகையில், வெக்ரோன் நிர்வாகிகள் சூட்சுமத்தால் உண்மைகளை மூடிமறைத்து ஊகங்களுக்குள் பார்வையாளர்களைத் தள்ளியதன் மூலம் தமிழ் மக்களையே கேவலப்படுத்தி சிறுமைப்படுத்தினர்.


இதன்போது வெக்ரோனை நிறுத்தியோர் அதைத் தமக்குச் சார்பாகப் பயன்படுத்திக் கொண்டனர். தமது சொந்த ஜனநாயக விரோத நிலைப்பாட்டை விரிவுபடுத்தவும், எஞ்சியுள்ள புலம்பெயர் மாற்று ஊடகங்களை முற்றாக அழித்தொழிக்கும் வகையில் வக்கரித்த கருத்துக்களைப் பொய்கள் மேல் கட்டமைத்தனர். குறிப்பாக இலண்டனில் உள்ள இரண்டு தொலைக்காட்சிகளில் ஒன்று என்று வெக்ரோன் நயவஞ்சமாகக் குறிப்பிட்ட தீபம் தொலைக்காட்சிக்கு எதிரான பிரச்சாரமாக ஜனநாயக விரோதிகள் திட்டமிட்டுக் கட்டமைத்தனர். தீபம் தொலைக்காட்சியை நிறுத்துவதே தமது அடுத்த இலக்கு என்பதை மிகத் தெளிவாகப் பிரகடனம் செய்தனர். இங்கு வெக்ரோன் விலாங்கு மீன் போல், தம்மைத்தாம் சந்தர்ப்பவாதிகளாக்கிச் செயல்பட்டனர். இதனால்தான் மூடப்படுவதின் காரணமும் கூட சூட்சுமமாகியது. இதை அடிப்படையாகக் கொண்ட வெக்ரோனின் செயல்பாடுகள், தொடர்ச்சியாகத் தீபம் தொலைக்காட்சியை மூடுவதற்குத் துணையாகக் களமிறங்கியுள்ளது. தாம் தொலைக்காட்சியை நிறுத்துவதற்குக் காரணம் என்ன என்பதைத் தெரிவிக்காத சூட்சுமத்துக்குள் இட்டுச் சென்றதன் மூலம், புலிகள் அல்லாத அனைத்து ஊடகத்துறைக்கும் ஒரு பாரிய அச்சுறுத்தலை விடுத்துள்ளனர். தீபம் தொலைக்காட்சி ஒரு துரோகத் தொலைக்காட்சியாகவும், றோவால் (கீஅஙி) நடத்தப்படுவதாகவும், இது இந்தியா முதல் புலம்பெயர் நாடுகள் வரை ஒளிபரப்புவதாகவும், சந்திரிக்காவின் பின்னால் இயங்குவதாகவும், வெக்ரோனில் இருந்து சென்ற ஒருவரே இதற்குக் காரணம் என்றும், ஈ.பி.டி.பி. அதை வாங்கி விட்டதாகவும் கூறி தீபம் தொலைக்காட்சியைப் பலவாறாக, தமிழ் மக்களுக்கு எதிராகச் செயல்படும் ஜனநாயக விரோத ஊடகமாகக் காட்டி கடித்துக் குதறினர்.


சந்திரிக்கா இலண்டனில் வந்து நின்றபோது இதைச் செய்து விட்டதாகவும், இதன் பின்னணியில் துரோகிகளும், கருணாக்களும், தீய சக்திகளும் உள்ளதாகவும் ஜனநாயகத்தை மறுக்கும் அரசியலற்ற வன்முறைக் கும்பல் தொலைக்காட்சியில் அறைகூவலிட்டனர்.


மறுபக்கத்தில் சமூகத்தைப் புரிந்து கொள்ளாது உலகம் சரியாக இயங்குவதாக நம்பும் தமிழர்கள் சிலர் சட்டப் பிரச்சனை என்றால் அதை எதிர்கொள்ளவும், நிதிப்பிரச்சினை என்றால் கை கொடுக்கவும் தயார் என பலவாறாக புலம்பியுள்ளனர். இங்கு வெக்ரோனின் விலாங்குத்தனமான கபடத்தைக் கூட புரிந்து கொள்ள முடியாத, மரமண்டைகளாக இருந்தபடி இப்படி ஒப்பாரி வைத்தனர்.


சில தமிழர்கள், இலங்கையின் நிலைமையை நாம் நன்கு அறிவோம். இதன் பின்னணியை நாம் புரிந்து கொள்கின்றோம் என்று தமது அபிப்பிராயத்தை முன்வைத்தனர். இதில் புலியெதிர்ப்பு பிரிவினரும், புலிகளால் சொந்த அனுபவத்தைப் பெற்றவர்களும் தெரிந்தவர்களும் அடங்குவர்.


இப்படி மூன்று தளங்களில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. ஒரு புறத்தில் புலிகள் அல்லாத மற்றைய குழுக்களையும், இலங்கை இனவாத அரசையும், மற்றைய ஊடகங்களையும் குற்றம் சாட்ட, மறுபுறத்தில் சிலர் அதைப் புலிகள் செய்ததாக மறைமுகமாகக் கூறினர். மூன்றாம் நிலையில் இதற்கு வெளியில் சட்டம், நிதி என்று அதற்குள் அபிப்பிராயத்தைத் தெரிவித்தனர். எதார்த்த நிலைமைகளைப் பகுத்தாய்வுக்கு உள்ளாக்கவும், காரணத்தைத் தெளிவுபடுத்தவும் முடியாத நிலையில் தமிழ்ச் சமூகத்தின் மலட்டுத்தனம் முதிர்ந்து காணப்படுகின்றது. புலிகளும், புலிகள் அல்லாத அனைவரும் அடுத்தநாள் ரி.பி.சி. வானொலி தனது கள அரசியல் விவாதத்தில் இதைத் தெளிவுபடுத்தும் என்ற ஆவலோடு வானொலி முன் காத்திருந்தனர். ரி.பி.சி. வானொலி இது பற்றி எதையும் கூற முன்வராத நிலையில், தொலைபேசியூடாக ஒருவர் இது பற்றி கேட்டார். அப்போது கூட அவர்களால் எதையும் சொல்ல முடியவில்லை. ஆனால் சிவலிங்கம் தான் கேள்விப்பட்டதாக ஒரு தகவலைச் சொன்னார். அவர்கள் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாலும், அடிக்கடி அலைவரிசையை மாற்றி வந்ததாகவும், நிதி நெருக்கடிகளால் தான் இது நிகழ்ந்ததாக ஒரு அபிப்பிராயத்தைத் தெரிவித்தார். எந்தப் பகுத்தாய்வும் இன்றி, வெக்ரோனின் தொடர்ச்சியான செயல்பாட்டைக் கவனியாது, நிதிப்பிரச்சனையல்ல என்ற அவர்களின் (வெக்ரோன்) தெளிவான மறுப்பைக் கவனத்தில் எடுக்காது உண்மைகளைப் புதைக்கும் வகையில் கருத்துரைத்தார்.


அவர்கள் அடிக்கடி அலைவரிசையை மாற்றினர் என்பது உண்மையே. ஆனால் இதனால்தான் நிறுத்தப்பட்டது என்பது கற்பனையானதும், பொய்யானதுமாகும். அவர்களின் தமிழ் அல்லாத பல மொழித் தொலைக்காட்சிகள் தொடர்ந்து செயல்படுவதும், நின்று போன அலைவரிசை தமிழ் அல்லாத வேறு மொழி ஒளிபரப்பாக மாறவுள்ளதாகவும் (ஆக தமிழ்மொழி அலைவரிசையை மட்டும் நிறுத்துவதாக) அவர்கள் விடுத்த அறிவித்தலை நாம் அவதானிக்க முடியும். இதை அவர்களே தெளிவுபடுத்தினர்.


நிதி மோசடிகள் என்பது தொலைக்காட்சியை அவர்கள் தொடங்கும் முன்பே தொடங்கியது தான். இன்ரப்போல் (சர்வதேச பொலிசு) வரை அவர்கள் நிதி மோசடிக்காகக் கண்காணிக்கப்படும் அளவுக்கு, பல வர்த்தக ஏமாற்றுக்களை அவர்கள் செய்தவர்கள் தான். இதற்குப் பொறுப்பானவர்கள் சொந்த வங்கி கணக்கைக் கூட வைத்திருக்க முடியாத நிலையில், பினாமி பெயரில் தான் பல கோடி பணத்தைத் தக்க வைத்துள்ளனர். பிரான்சில் இருந்து இப்படித்தான் லண்டனுக்கு ஓடினார்கள். ஆனால் நிதி மோசடிகள் காரணமாக இத்தொலைக்காட்சி நிறுத்தப்படவில்லை. தேசியத்தை இன்று உயர்த்தும் பலரும், நிதி மோசடிக்காரர்களாகவே உள்ளனர். மோசடிகளில் திரட்டும் பணத்தைத் தக்கவைக்கவும் அதைக் கொண்டு பணத்தைப் பெருக்கவும், தேசியத்தை உயர்த்தி காட்டி இவர்கள் பினாமியாவது தமிழ் இனத்தின் சாபக் கேடாகவே இன்று உள்ளது.


வெக்ரோன் நிறுத்தப்பட்டதை வெற்றிடத்தில் போட்டு யாரும் உடைக்க முடியாது. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றை விமர்சன ரீதியாகப் புரிந்து கொண்டவர்கள் அனைவரும் எந்தச் சந்தேகமும் இன்றி இதனைப் புரிந்து கொள்வார்கள். உண்மையில் இந்தத் தொலைக்காட்சி நிறுத்தப்படுவதற்குப் பின்னணியில் நிச்சயமாக புலிகளே உள்ளனர். நிச்சயமாக அரசு அல்ல என்கின்றோம். இதை நாம் எப்படி உறுதியாகக் கூறுகின்றோம்?


இங்கு சிங்களப் பேரினவாத அரசு இதைச் செய்யாது என்பதல்ல. ஆனால் இதை அரசு நிச்சயமாகச் செய்யவில்லை. உண்மையில் அரசு இதைச் செய்யவேண்டும் என்றால், முதலில் சொந்த நாட்டில் இதைச் செய்யவேண்டும், செய்திருக்க வேண்டும். புலிப் பினாமியத்தைத் தமது பத்திரிகைக்கு முத்திரையாகக் குத்தி வெளியிடும் வீரகேசரி, சுடர்ஒளி, உதயன், தினக்குரல் போன்ற பத்திரிகைகளைத் தடை செய்திருக்க வேண்டும். அவை தடையின்றி வெளிவருகின்றன. ஏன் புலிகளின் சூரல் என்ற வானொலியைத் தடுக்க முயன்று இருக்கவேண்டும். புலிகளுக்குச் சார்பான தமிழ் ஊடகத்துறையின் செயல்பாடுகள் தடை செய்யப்படவில்லை. இதில் செயல்படும் ஊடகவியலாளர்கள் சிலர் கொல்லப்பட்ட போதும் கூட, தெரிவு செய்யப்பட்டவர்களை மட்டுமே கொன்றனர். இதை மாற்றுத் தமிழ் குழுக்களும் செய்தனர். இதே போன்று புலிகளும் செய்தனர். இந்திய இராணுவம், இலங்கை இராணுவம் மற்றும் முதல் புலிகள் வரை பல செய்தி அமைப்புகளை முடக்கிய போதும், அவை முற்றிலும் இதில் இருந்து பண்பு வகையில் வேறுபட்டவை.


வெக்ரோன் புலிசார்பு தொலைக்காட்சி என்ற காரணத்தால் அரசால் இடைநிறுத்தப்பட்டது என்றால், இலங்கையில் இருந்து புலம் பெயர் நாட்டுக்கு புலிகளின் தொலைக்காட்சி சேவையை இடைநிறுத்தியிருக்க வேண்டும். புலிகள் இலண்டனில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கம் என்பதால், அதன் ஒளிபரப்புகளை ஒரு சிறு சட்ட நடவடிக்கை மூலமே மொத்தமாக முடக்க முடியும். இப்படி இருக்க ரி.ரி.என். போன்ற தொலைக்காட்சிகளை விட்டு வைத்து விட்டு வெக்ரோனை மட்டும் இனவாத அரசு நிறுத்தியது என்பது பொய்யான கருத்துரையாகும். ஏன் சுனாமியின் போது, இலங்கை அரசின் சட்டபூர்வமான தொலைக்காட்சி ரூபவாகினி, வெக்ரோன் செய்திகளை அப்படியே பெற்று வெளியிட்டது. இது தமிழ்ச் சிங்கள மொழிகளில் அடங்கும். இவை எல்லாம் அண்மைக்காலச் செய்திகள். இது அப்படி இருக்க கூடியதாக சிங்களப் பேரினவாத அரசு நிறுத்தியதாகக் கதை சொல்வது பொருத்தமற்றது, உண்மைக்குப் புறம்பானது.


இன்று பல செய்தி அமைப்புகள் அரசு கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் (புலிகளின் பிரதேசத்தில் அல்ல.) மிகச் சுதந்திரமாகப் புலிக்காக மட்டும் வக்காலத்து வாங்குகின்றன. இங்கு தமிழ் மக்களுக்காக அல்ல, புலிக்காகவே ஊளையிடுகின்றன. இப்படி இருக்க இந்த அமைதிக் காலத்தில் அரசு அதைக் கட்டுப்படுத்தவில்லை. அதை போல் தடை செய்யவுமில்லை. உயிர் அச்சுறுத்தலையும் விடவில்லை. ஏன் கைது கூட செய்யவில்லை. சில புலி சார்பு, புலியெதிர்ப்பு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதும், மிரட்டப்படுவதும் கூட எதிர் தரப்பாலும், குறிப்பான சில நடவடிக்கை தொடர்பான விடயங்களாலும் மட்டுமே நிகழ்கின்றன. பொதுவாகப் புலி சார்பாக எழுதும் அனைவருக்கும் இது நிகழவில்லை.


இப்படிப் பல உள்ள நிலையில் அரசு தடை செய்கின்றது என்பது அடிப்படையற்றதும், ஆதாரமற்றதுமாகும். வெக்ரோன் அரசைப் பெயர் குறிப்பிட்டுக் குற்றம் சாட்ட முடிகின்றது அல்லவா? இதனால் அரசு அலல பிரச்சினை. பிறகு எதற்காக எதைக் கண்டு அஞ்சுகின்றனர். திவயின என்ற பத்திரிக்கையைச் சிங்கள இனவாத பத்திரிக்கையாக அடையாளப்படுத்திய வெக்ரோன், அவர்கள் தம்மைப் புலித் தொலைக்காட்சி கூறுவதாகப் பெயர் குறிப்பிட்டுக் காட்டுகின்றனர். இங்கு துணிச்சலாக பெயர் குறிப்பிட்டுக் குற்றம்சாட்ட முடிகின்றது. அப்படி என்றால் இதைவிட பெயர் குறிப்பிட்டு குற்றம் சாட்ட முடியாத அந்தப் பலம் வாய்ந்த சக்தி யார்? நிச்சயமாக வெக்ரோனை நிறுத்துவதற்கு அவர்களே காரணமாகும்.


வெக்ரோன் புலிப் பினாமியத்தைப் பிரச்சாரம் செய்ததே ஒழிய தமிழ்த் தேசியத்தை அல்ல. புலியைப் போற்றுவதும், புலிகளின் தமிழ்த் தேசிய விரோத நடத்தைகளை மூடிமறைத்துத் திரிப்பதையே, தமிழ்த் தேசியம் என்பது கடைகெட்ட மோசடி. ஒரு சிங்கள பத்திரிக்கை புலிக்கு வக்காலத்து வாங்குகின்றது என்று குறிப்பிட்டதைக் காரணமாகக் கூறி நிறுத்துவதாகக் கூறுவது சுத்த மோசடி. நிச்சயமாக இதற்காகத் தொலைக்காட்சியை நிறுத்தவில்லை. சிங்கள இனவாதப் பத்திரிகை குறிப்பிட்டாலும் சரி, இலங்கை அரசு கூறினாலும் சரி இதற்காகத் தொலைக்காட்சியை நிறுத்தவில்லை. இங்கு இவர்களைப் பெயர் குறிப்பிட்டுக் குற்றம் சாட்டமுடிகின்றது.


பெயர் குறிப்பிடாத வகையில் இலண்டன் தொலைக்காட்சி ஒன்றையும், கொழும்பு அலுவலகம் மீதான அழுத்தத்தையும் குறிப்பிடுகின்றனர். நிச்சயமாக இது தமிழர் தரப்பாக இருப்பதுடன், பலம் வாய்ந்த ஒன்றாகவும் உள்ளது. அது நிச்சயமாகப் புலிகள். இதற்கு வெளியில் எதுவும் இன்று கிடையாது.


வெக்ரோன் இலண்டனில் உள்ள தமிழ்த் தொலைக்காட்சி இரண்டு நிறுவனங்களில் ஒன்று என்கின்றனர். இரண்டில் ஒன்று புலிகளின் ரி.ரி.என். ஆகும். ரி.ரி.என். தலைமையகம் இலண்டனாகும். மற்றது தீபம். இங்கு தீபம் ஒரு தொலைக்காட்சி நிறுவனமே ஒழிய, அதற்கு அடியாள் படைகள் என எதுவும் கிடையாது. எந்த அழுத்தத்தையும் அவர்கள், இவர்கள் மீது ஒருநாளுமே செலுத்த முடியாது.


சட்டப்படி எந்தத் தடையும் வெக்ரோனுக்குக் கிடையாது. அப்படியாயின் மற்றைய புலி தொலைக்காட்சிதான் வெக்ரோனின் தடைக்குக் காரணம். வெக்ரோனால் பெயர் குறிப்பிட முடியாத ஒரேயொரு சக்தி புலிகள் மட்டும் தான். புலிகள் நீண்ட காலமாகவே வெக்ரோனின் நிகழ்ச்சிகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி வந்தனர். குறிப்பாக கொழும்பு வெக்ரோன் நிர்வாகிகளைப் புலிகள் மிரட்டிய செய்திகள் முன்பே கசிந்துள்ளது. குறிப்பாக "திசைகள்' என்ற எதார்த்தக் காட்சி சார்ந்த ஆவண (டொக்குமென்ரி) நிகழ்ச்சியை நிறுத்தக் கோரியது உட்பட பல அழுத்தங்கள் செய்துள்ளனர். பிந்திய தகவல் ஒன்று கொழும்பு வெக்ரோனை சேர்ந்த ஒருவர் கடத்தி வைக்கப்பட்டதாகவும், அதன் மூலமே அதிரடியாக நிறுத்தியதாகவும் ஒரு தகவல் கசிகின்றது. இந்தக் கடத்தலை ஜே.வி.பி. செய்ததாக ஐரோப்பாவில் ஆதாரமற்ற வகையில் கதை கட்டுகின்றனர்.


மக்களின் இயல்பான பேட்டி சார்ந்த ஆவணப்படங்கள் "திøசகள்' ஊடாக வெளிவந்தது புலிகளுக்குப் பீதியை உருவாக்கியது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் தாமாகவே தமது சொந்த மனக்கிடங்கைத் திறந்து கொட்டிய நிகழ்வுகள், புலிகளின் அனைத்து விதமான பொய்களையும் நிர்வாணமாக்கியது. வெக்ரோன் நிர்வாகிகள், அதன் செய்தி வடிவமைப்பாளர்களும், செய்திகளைப் புலித் தோலால் போர்த்தி கொண்டு வந்த போதும், எதார்த்தமான மக்களின் வாழ்க்கைக் காட்சிகள் புலிகளை அச்சுறுத்தியது. இதனால் வெக்ரோன் நிகழ்ச்சிகளை நிறுத்துவது புலிகளின் தாகமாகியது.


மற்றொரு பக்கத்தில் அனைத்தையும் புலியின் தேசிய சொத்தாக்கும் தேசியக் கனவு, தமிழ் மக்களின் சொத்துரிமையை அபகரிப்பது இதன் ஒரு அங்கமாகும். அதாவது தமிழ் மக்களின் தனிச் சொத்துரிமையை, புலிகள் தமது தனிப்பட்ட தனிச் சொத்துரிமையாக்குவது அவர்களின் தணியாத தாகமாகும். புலிகள் அண்மையில் சொந்தத் தொலைக்காட்சியை வன்னியில் இருந்து ஒளிபரப்பத் தொடங்கியதால், மற்றொரு தொலைக்காட்சியை நிறுத்துவதைத் துரிதமாக்கியது. முன்பு பாரிசில் ஈழநாடு வந்தபோது, அதற்கு மாற்றாக ஈழமுரசு கொண்டு வரப்பட்டது. இதன் போது இதே அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. அத்துடன் ஈழநாடு அலுவலகத்தைத் தீ வைத்தனர். இறுதியாக ஈழநாடு ஆசிரியர் தாக்கப்பட்டார். இப்படி ஒரு வரலாறு உண்டு. புலிகளின் வன்னி தொலைக்காட்சியை விரிவுபடுத்தவும் இதுபோன்ற சேவைகளை அபகரிப்பதும் புலிகளின் வழமையான பாணிதான்.


புலிகளின் இன்றைய ரி.ரி.என். தொலைக்காட்சி கட்டிடம் உட்பட அதன் உபகரணம் அனைத்தும், முன்னைய ரி.ஆர்.ரி.யிடம் இருந்து ஏமாற்றியும், மிரட்டியும், மோசடியாகவும் அபகரிக்கப்பட்டவையே. இந்த முதலீட்டை நடத்திவர்கள், அனைத்தையும் இழந்து பெரும் கடனாளியானதுடன் பாரிசில் கையேந்தி வாழும் நிலைக்குச் சென்றுள்ளனர். இதற்குப் பின்னால் ஒரு சோகமான வரலாறே உண்டு. இன்றைய வன்னி ஈழநாதம் பத்திரிகைக்குரிய அச்சு உபகரணங்கள் வீரகேசரி பத்திரிகை யாழ் கிளைக்கு அனுப்பிய போது அவை அபகரிக்கப்பட்டவையே. இதை முதலில் ஈ.பி.ஆர்.எல்.எப். கைப்பற்றிய போதும், பின்னால் புலிகள் அதைப் பறித்தெடுத்தனர். இன்றைய மட்டக்களப்பு ஈழநாதம் பத்திரிகைக்கான அடிப்படையும், மட்டக்களப்பில் வெளிவந்த பத்திரிகை ஒன்றை முடக்கி அபகரிக்கப்பட்டது. இப்படி கோயில்கள் முதற்கொண்டு புலிச் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டவையே. இதுதான் வெக்ரோன் தொலைக்காட்சிக்கும் நடந்தது. இது முடிவின்றி தொடருகின்றது அவ்வளவே.


30.4.2005