Sat04202024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

ஏகாதிபத்தியங்களும் புலிகளும்

  • PDF

book _4.jpgபுலிகளுக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் இடையிலான அரசியல் பொருளாதார உறவு என்பது, இனவாத அரசு கையாளும் உறவுக்கு முரணானது அல்ல. உலகமயமாதல் நிகழ்ச்சியில் அக்கம்பக்கமாக, வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் ஒருவரையொருவர் தூக்கிவிடும் கொள்கையையே புலிகளும், இனவாதச் சிங்கள அரசும் கைக்கொள்கின்றன. இவர்களுக்கு இடையில் அடிப்படையில் என்ன முரண்பாடு உண்டு? தமிழனை அடக்கியாண்டு உலகமயமாக்கத்துக்கு மேலும் விசுவாசமாக யார் இருப்பது என்பதே. இந்த  இடத்தில் ஏகாதிபத்தியம் தனக்கு விசுவசமான இந்த இரண்டு நாய்களையும் எப்படி சமாதானப்படுத்தி, ஒரேவீட்டில் காவல் காக்க வைக்கலாம் என்ற தனது நரித்தனத்தற்காக சமாதானம் அமைதி என்று கூறி ஒற்றுமைப்படுத்தும் களத்தில் இறங்கியுள்ளன. கடந்த இரண்டு வருடத்துக்கும் அதிகமாக நடக்கும் இழுபறியான நீடித்த நிகழ்ச்சி நிரலில், ஏகாதிபத்திய நலனைக் கடந்து வெளியில் எதுவும் நடக்கவில்லை.

 
 புலிகள் என்ற குழுவின் நலன் இங்கு கூர்மையாக வெளிப்படுகின்றது. தனித்து தமிழர் தரப்பில் தாம் மட்டும் ஏகாதிபத்திய நாயாக இருக்கக் கோரும் கோரிக்கையில் இருந்தே முரண்பாடுகள் புலிகளுக்கும் - சிங்கள அரசுக்கும் இடையில் நீடிக்கின்றன. இதன் அடிப்படையில் முரண்பாடுகள் அரங்குக்கு வரும் போது, புலிகள் வழமை போல் ஏகாதிபத்திய நலன்களையும், அவர்களின் நோக்கத்தையும் ஒப்புக் கொள்கின்றனர். அதைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான பாலசிங்கம் வழங்கிய பேட்டியில் ~~இந்த மாநாட்டுக்கு முன்னரே இந்த மாநாட்டுப் பிரகடனங்கள் தயாரிக்கப்பட்டு விட்டன என்பது எங்களுக்குத் தெரியும். இலங்கை, நோர்வே அரசுகளும் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளும் இந்தத் தீர்மானங்களை நெறிப்படுத்தும் என்பதும் முன்னரே நாம் அறிந்த ஒன்றுதான். இந்த மாநாட்டில் பங்குபற்றும் நாடுகளும் அரசு, புலிகள் ஆகிய இரு தரப்புகளும் இந்தத் தீர்மானங்களில் ஒப்பமிடவேண்டும் என்ற நோக்கத்தோடு அவை தயாரிக்கப்பட்டன. ஆனால், நாம் இந்த மாநாட்டில் பங்கு பற்றமாட்டோம் என்பது உறுதியானதால் அவற்றில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன எனவும் பின்னர் அறிந்தோம். இப்படியான சர்வதேச பொறி ஒன்று தயாராகி இருக்கின்றது, காத்திருக்கின்றது என்பதை மாநாட்டின் முன்கூட்டியே நீங்கள் உங்கள் பத்திரிக்கையில் வெளிப்படுத்தியிருந்தீர்கள். நீங்கள் எங்கு அத்தகவலைப் பெற்றுக்கொண்டீர்களோ தெரியவில்லை. ஆனால், அது முற்றிலும் சரியான தகவல்தான். உலகத்தில் உள்ள பெரிய வல்லரசுகள் சில, இதில் தலையிட்டு ஒரு பொருளாதார ~பிளாக் மெயில்| ஆக நிதியைப் பணயமாக வைத்து அச்சுறுத்தி சில காரியங்களைச் சாதிக்க முயற்சிக்கின்றன. அது தவறு. சர்வதேச நியமங்களுக்கு மாறானது; நீதியானதல்ல,


 எமது மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு முரணாக வழிகாட்டும் வரைபடத்தைத் தயாரித்து, அதை எமது மக்கள் மீது திணிக்கும், நிர்ப்பந்திக்கும் ஓர் எத்தனமாகவே இது உள்ளது. டோக்கியோ மாநாட்டில் அறிவிக்;கப்பட்ட வழிகாட்டு வரைபடம் ஒரு நிரந்தரத் தீர்வைக் காணும் ஒரு புதிய அரசமைப்பை உருவாக்கும் திட்டத்துடன் முன் வைக்கப்படவில்லை. ஓர் உப்புச் சப்பற்ற மாகாண அதிகாரப் பரவலாக்கலுடன் அரசமைப்பில் ஏதோ சில திருத்தங்களைச் செய்யும் முயற்சியாகவும் அது இருக்கலாம். அதை நாம் ஒரு போதும் ஏற்கப்போவதில்லை. ஆனால், திடீரென கடந்த ஒரு வருடகாலமாக ரணிலின் அரசு தனது சுயநலத்துக்காக தனது அரசுக்குக் கடன்பெறும் நோக்கத்துக்காக, தனது அரசின் இறைமைக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகக் கூறி, பல வெளிநாடுகளை இந்த விடயத்துக்குள் தலையிடவைக்கும் புறநிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. தனது நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் புலிகளை அச்சுறுத்தி அடக்கவுமே இந்த சர்வதேசப் பாதுகாப்பு வலைப்பின்னலை, சதிவலைப்பின்னலை, ரணிலின் அரசு உருவாக்குகின்றது.... எந்தச் சக்தியினாலும் எங்களை மிரட்டி, பணியவைத்து, எமது மக்களின் சுதந்திரத்தை விலைபேசி விற்கச்செய்து, ஒரு தீர்வை நோக்கி நகரச்செய்ய வைக்க முடியாது என்பதை டோக்கியோ மாநாட்டுப் பகிஸ்கரிப்பு மூலம் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.|| என்ற பேட்டி, அமெரிக்காவில் கடன் வழங்குவதற்காக நடத்திய கூட்டத்துக்குப் புலிகள் அழைக்கப்படாத நிலையில், தொடர்ச்சியான கூட்டங்களைப் புலிகள் பகிஸ்கரிக்கத் தொடங்கிய போது கூறப்பட்டது.


 இது இங்கு புலிகளை, அவர்களது அதிகாரத்தை ஏகாதிபத்தியங்கள் அனைத்துத் தளத்திலும் அங்கீகரிக்க மறுத்த நிலையில் வெளிவந்த கருத்தாகும். நோர்வை தலையிடத் தொடங்கியது முதல், அன்னியத் தலையிடுகள் இலங்கையில் அனுமதிக்கபட்ட போதும் கூட புலிகள் இதைச் சொல்லவில்லை. புலிகள், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் மட்டுமே நாம் பேசுவோம் என்று முன்வைத்துக் கோரிய போது, மூன்றாம் தரப்பினரின் தலையீட்டுக்கான உரிமையை அங்கீகரித்த போது இதைக் கூறவில்லை. (உண்மையில் இந்த மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், என்பதைப் புலிகளுக்கு எதிராக 1992-இல் குமார்பொன்னம்பலமே வைத்தவர். (பார்க்க: தமிழோசை பத்திரிகையை) அதில் அவர் புலிகளுக்கும் அரசுக்கும் எதிராக இந்தியத் தலையீட்டை அல்லது வேறு வெளிநாட்டின் தலையீட்டைக் கோரினார்.) இரகசியமாக அங்கும் இங்குமாக பேசித் திரிந்த போது, இந்த சதியைச் சொல்லவில்லை. சொந்தக் குழுவின் நலன்கள் கேள்விக்கு உள்ளாகிய போது, இதைப் புலிகள் தங்களின் புதிய கண்டுபிடிப்பாகத் தற்காலிகமாகவே முன்வைத்தனர். குழு நலன் கேள்விக்குள்ளாகிய போது, தமிழ் மக்களின் சுயநிர்ணயம் பற்றி மூக்காலும் வாயாலும் அழுகின்றனர்.


 ஆனால் இரகசிய பேரங்கள் தொடர்ந்த போது, சிரித்து மகிழ்கின்றனர். தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை தமது சொந்தக் குழுவுக்கு இசைவாக விளக்கம் கொடுத்து காட்டிக் கொடுக்கின்றனர். இதை விரிவாகப் பார்ப்போம்; இந்த சமாதானம், அமைதி என்ற நாடகத்தில், புலிகள் தமது கொள்கைள் உலகமயமாதல் தான் என்பதை வலியுறுத்தி ஏகாதிபத்தியத்திடம் வாலாட்டத் தயங்கவில்லை. இதற்கு சொந்த மக்களையும், தேசிய நலன்களையும் விற்றுவிடவும் தயாராக இருக்கின்றனர். உங்கள் பொருளாதாரக் கொள்கை என்ன என புலிகளிடம் அமெரிக்கா கேட்ட போது, பாலசிங்கம் அசகு பிசகாது ~~தாராள ஜனநாயகப் பெறுமானங்களை அடிப்படையாகக் கொண்ட திறந்த பொருளாதாரக் கொள்கைக்கே நாம் ஆதரவானவர்கள் என்பதை மட்டும் என்னால் கூறமுடியும்;|| என்றார். உண்மையில் இதைத் தேசியம் என்றும், மக்களுக்குச் சார்பான கொள்கை என்றும் உலகில் யாராலும் நிறுவமுடியாது. கோட்பாட்டளவில், நடைமுறையில் இதன் விளைவு நாட்டை மறு காலனியாக்குவதே ஒழிய வேறு எதுவும் அல்ல. இங்கு இதை முன்வைக்கும் புலிகளின் பாத்திரம் என்னவாக இருக்கும். இந்த ஏகாதிபத்தியக் கொள்கையை நாட்டில் அமுல்படுத்தும் தரகராக மாறி, மக்களை அடக்கியொடுக்குவதைத் தாண்டி எதையும் மக்களுக்காகச் செய்ய இடமிருப்பதில்லை. 


 தாராளப் பெறுமானங்களை கொண்ட திறந்த பொருளாதாரக் கொள்கை என்பது, புலிகள் தமிழீழத் தாயகம் என்று இயக்கம் தொடங்கிய போது இருந்த கோரிக்கை அல்ல. இது ஏகாதிபத்தியம் உலகளாவில்; அமுல் செய்துள்ள உலகமயமாதல் கொள்கையே ஆகும். இதுவே இன்று புலிகளின் கொள்கையாகியது. இதற்கு வெளியில் புலிகளிடம் ஒரு தனியான பொருளாதாரக் கொள்கை என்பது கிடையாது. புலிகள் என்ற குழு, ஆளும் ஒரு பாசிசக் கட்டமைப்பில், தாராள பெறுமானங்களைக் கொண்ட திறந்த பொருளாதாரக் கொள்கையை அமுல் செய்யக் கோரும் உரிமையே சுயநிர்ணயம் என்று கோருகின்றனரே ஒழிய, வேறு ஒன்றையும் அல்ல. மக்கள் என்றும், தியாகம் என்றும் போடும் எல்லாவிதமான அரசியல் கூத்துகளின் இறுதி விளைவு, உலகமயமாதல் கொள்கையை அமுல் செய்யும் அதிகாரத்தை புலிகள் தம்மிடம் தரக் கோருகின்றனர். இதைவிட வேறு எதுவுமே அல்ல.


 இந்த நிலையிலும் ஏகாதிபத்தியம் புலிகளிடம் அங்கீகரிக்க மறுப்பது எதை? புலிகள் தாராள பெறுமானங்களைக் கொண்ட திறந்த பொருளாதாரக் கொள்கையை அமுல் செய்யும் பாசிசக் கட்டமைப்பை, தனது சொந்தத் தலைமையில் பிரித்துத் தரக் கோருவதையே ஏகாதிபத்தியங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இது ஏகாதிபத்தியத்துக்கு முரண்பாடான விடயம் அல்ல. ஆனால் இலங்கையில் இதைக் கையாள்வது, உலகமயமாதல் என்ற அடிப்படை நலனுக்கு எதிரானதாக இருப்பதால், புலிகளின் கோரிக்கையை மறுக்கின்றனர் அவ்வளவே. இந்தப் பொருளாதாரக் கொள்கையை இலங்கைக்கு உட்பட்ட ரீதியில், இதை அமுல் செய்யக் கூடிய எதிர் போட்டிக் குழுக்களையும் அனுமதித்த எல்லையில் புலிகளை இணங்கி வரக் கோருகின்றனர். இதுவே சமாதானமாகி அமைதியாகி நிற்கின்றது. இங்கு அமைதி, சமாதானம் என்பது மக்களின் நலனில் இருந்து உருவாகவில்லை.


 இதைப் பிசகு இன்றி பிரதிபலித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஆஷ்லி வில்ஸ் ~~இலங்கையின் நண்பர்கள் அதிகளவு தாராள சிந்தனையுடன் செயல்படும் நோக்கத்துடன் இருக்கிறார்கள் என்பதே எனது அபிப்பிராயமாகும். வட கிழக்கின் அபிவிருத்தியடையாத பகுதிகளுக்கே தமது பணம் சென்றடைய வேண்டும் என்றே அவர்கள் விரும்புகின்றார்கள்|| என்று கூறியதன் மூலம், தேசத்தின் அனைத்து விதமான உரிமைகளையும் எள்ளி நகையாடிய படி தமது சொந்த நாய்களைப் பாராட்டுகின்றார். அமைதி, சமாதனத்தின் உள்ளடக்கம் இதை தாண்டியவை அல்ல என்பதை தெளிவுபடுத்தி விடுகின்றார். அமைதி சமாதானம் எதுவும் இதற்குள்தான் சங்கமிக்கின்றது. முரண்பாடுகளும் இதற்குள் தான். இதற்கான விளக்கங்கள் எதுவும் இதைத் தாண்டி இருப்பதில்லை. வார்த்தை ஜாலங்களைத் தாண்டி முடிவுகள் பிசகு இன்றி தொடருகின்றது.


 இந்த நிலையில் இதற்குள் புலிகளை இணங்கி வரக் கோரும் அமெரிக்கா அதை நேரடியாகவே வெளிப்படுத்திவிடுகின்றது. அமெரிக்கத் தூதர் ஆஷ்லி வில்ஸ் ~~..புலிகளின் பொருளாதாரக் கொள்கை என்ன? சகலவற்றையும் அவர்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சிக்கிறார்களா? இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்து வட, கிழக்கை தனிமைப்படுத்தி அங்கு சர்வாதிகாரக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வது என்று அவர்கள் கருதுகிறார்களா? இதற்கு உதவி வழங்கும் நாடுகள், அமைப்புகள் இணங்க மாட்டார்கள் என்று நான் கருதுகின்றேன்|| என்று மிகத் தெளிவாகவே அமெரிக்கா புலிகளுடான அடிப்படை முரண்பாட்டைத் தெளிவுபடுத்தி விடுகின்றனர். இந்தக் கட்டமைப்பை தாண்டி, எந்த சமாதானத்தையும் புலிகள் ஏற்படுத்திவிட முடியாது. உலகமயமாதல் அமைப்புக்குள், அதற்குள் இணங்கிச் செல்லும் எல்லைக்குள், இது தான் உயர்ந்தபட்ச எல்லையாகும். இது அமெரிக்காவின் கொள்கை மட்டுமல்ல, அனைத்து நாடுகளின் கொள்கையும் கூட. புலிகளின் அரசியலை இதைத் தாண்டி நகர்த்த முடியாது. அப்படி நகர்த்த வேண்டும் என்றால், மொத்த அமைப்பையும் சுயவிமர்சனம் செய்து மீளவேண்டும்;. இதற்கு புலிகள் சார்பாகப் பதிலளித்த பாலசிங்கம் ~~தாராள ஜனநாயகப் பெறுமானங்களை அடிப்படையாகக் கொண்ட திறந்த பொருளாதாரக் கொள்கைக்கே நாம் ஆதரவானவர்கள் என்பதை மட்டும் என்னால் கூறமுடியும்;|| என்றார்.


 இப்படிக் கூறுவதன் மூலம் ஏகாதிபத்தியத்தை திருப்தி செய்துவிட முடியாது. ~~தாராள ஜனநாயகப் பெறுமானங்களைக் கொண்ட திறந்த பொருளாதார|| நலன்களை அடையும் சமூகக் கட்டமைப்பையே ஏகாதிபத்தியம் எதிர்பார்க்கின்றது. ஏகாதிபத்தியம் சார்பாக அமெரிக்கா உடனடியாக எதிர்பார்ப்பது என்ன? நடைமுறை ரீதியாக இலங்கைக்கு உட்பட்ட, உலகமயமாதலை ஆதரிக்கின்ற எதிர் கட்சிகளைக் கொண்ட, உலகமயமாதல் கொள்கையை நடைமுறைப்படுத்தக் கூடிய நடைமுறை ரீதியான மாற்றத்தையே கோருகின்றனர். இதை நடைமுறை ரீதியில் புலிகள் அமுல் செய்யும் பட்சத்தில், புலிகளை அங்கீகரிக்கத் தயாராகவே உள்ளனர். இதில் புலிகள் முரண்படுகின்றனரா எனின் இல்லை, ஆனால் இதை மறுசீரமைக்கக் கோருகின்றனர். தனிச் சர்வாதிகார அமைப்பை ஏகாதிபத்தியம் சம்மதிக்கும் பட்சத்தில், புலிகள் ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யத் தயாராக இருப்பதையே கோடிட்டுக் காட்டுகின்றனர். இது சாத்தியம் இல்லை என்றால், நீண்ட ஒரு காலத்திற்கு தமது ஆட்சியைத் தக்கவைப்பதன் மூலம் ஏகாதிபத்தியம் முன்வைக்கும் உட்கட்டமைப்புச் சீர்திருத்தத்தைச் செய்ய விரும்புகின்றனர். புலிகளின் அரசியல் இதைத் தாண்டி எந்த வித்திலும் மீள முடியாது. யுத்தம் மூலம் கூட இந்த வரையறையைத் தாண்ட முடியாது. அமைதி சமாதானம் என்ற எல்லாவிதமான கூத்தும், இதற்குள் தான் கட்டமைக்கப்படுகின்றது.


 ஏகாதிபத்தியங்கள் புலிகளின் நடைமுறையான, தெளிவான அணுகுமுறையை புலிகளிடம் கோருகின்றனர். இதை அமெரிக்கத் தூதர் ஆஷ்லி வில்ஸ் ~~இறுதித் தீர்வு ஏற்படும் வரை ஒருவரின் உரிமைகளும் கூட துஷ்பிரயோகம் செய்யக் கூடாதென்பதை சர்வதேச சமூகம் நெருக்கமாக அவதானிக்கும். புலிகள் கௌரவத்தை விரும்பினால் இதை ஏற்றுக் கொண்டு சிறீலங்கா அரசாங்;கத்துடன் இணைந்து புதிய இலங்கையை|| அமைப்பதே அவர்களுக்கு நல்லது என புலிகளை மிரட்டுகின்றார். நடைமுறை ரீதியாக புலிகளின் அணுகுமுறை எந்தளவுக்கு உலகமயமாதல் கொள்கையுடன் இணங்கிப் போகின்றதோ, அதுவே புலிகளுக்கான அரசியல் பாதை என்பதை அமெரிக்கா தெளிவுபடுத்தி விடுகின்றது. இதை அமுல் செய்ய மறுத்தால், புலிகளின் கௌரவம் என்று என்றைக்கும் இருக்கப் போவதில்லை என்பதை எச்சரிக்கையாகவே விடுக்கின்றார். புலிகளின் தலைவிதியை சர்வதேச சமூகத்தின் முன்பு, தெளிவாக வரையறுத்து விடுகின்றார். புலிகள் மக்களை எதிரியாக நடத்தி, மந்தைகளாக மாற்றியுள்ள நிலையில், அமெரிக்காவின் எச்சரிக்கையை எதிர்கொள்ளும் தார்மீகப் பலத்தைக் கூட புலிகள் பெற்று இருக்கவில்லை. அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக உலகமயமாதலுக்கு எதிராக வழிகாட்டி முன்னெடுத்துச் செல்லும் தார்மீகப் பலம் எதையும் புலிகள் கொண்டிருக்கவில்லை.


 அடிப்படையில் இங்கு புலிகள் எதிர்கொள்வது ஏகாதிபத்தியத்துடன் இணங்கி போகும் கொள்கையையே. இந்தக் கொள்கை என்பது புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பு, மற்றும் அவரைச் சுற்றியுள்ள புலிக் குழுவின் பாதுகாப்புடன் தொடர்புடையதாகி நிற்கின்றது. முழுப் பேரத்தின் சாரம் இதற்குள் முடங்கி கிடக்கின்றது. இதை மக்களின் பெயரில் அல்லாது, நடக்கும் தனிப்பட்ட இரகசியப் பேரங்கள் அனைத்தும் இந்த எல்லையைத் தாண்டி நடக்கவில்லை. புலிகளுக்குச் சாதகமாக உள்ள இந்த பேரத்தையும் ஏதோ ஒரு விதத்தில் ஏற்க மறுத்தால், யுத்தம் தவிர்க்க முடியாது.


 ஏகாதிபத்தியத்துடன் மோதும் ஒரு நிலைவரை விரிவடைந்தால், இந்த யுத்தத்தை புலிகளால் சிறிது காலத்துக்கு நடத்தமுடியும். தற்கொலை தாக்குதல் வடிவம் மூலம் இது தொடரலாம். ஆனால் புலிகள் மீட்சி பெற முடியாது. தலைமை திட்டவட்டமாக தெரிவு செய்யப்பட்டு அழிக்கப்படும். உண்மையில் தமிழ் மக்களுடன் ஒட்டோ உறவோ அற்ற புலிகளின் தலைவிதி இலகுவாகவே அழிக்கப்பட்டுவிடுவது தவிர்க்க முடியாது. இது ஈராக் அல்ல. ஆப்கான் மேலான ஆக்கிரமிப்பில் மிகப் பலமான தலிபான், மக்களிடம் அன்னியமாகிய நிலையில் எப்படிச் சிதைந்ததோ, அதுவே இங்கும் நடக்கும். மோதல் நடக்கும் எல்லாத் தளத்திலும் சர்வதேசப் படைகளை இறக்கும் தயாரிப்புகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கா தனது அலுவலகங்களை வடக்கு கிழக்கில் பரவலாகவே திறக்கின்றது. அவர்களின் பாதுகாப்பு என்ற பெயரில், அமெரிக்கப் படை இறக்கம் இலகுவாக நடக்கும்.


 புலிகள் சமாதானம் அமைதியின் பெயரில் தமது அபிவிருத்திக்கு இலங்கை அரசானது உதவவில்லை என்ற சொல்லி செய்யும் பிரச்சாரத்துக்கு இலங்கை அரசு பதிலளிக்கவில்லை. பணம் கொடுப்பவர்களின் சார்பாக அமெரிக்காவே பதிலளித்தது. அமெரிக்கத் தூதர் ஆஷ்லி வில்ஸ் ~~இலங்கையிலுள்ள சிலர் இப்போதே பொருளாதார அற்புதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்ற எண்ணப்பாடு எனக்கு ஏற்படுகின்றது. ரோமாபுரி ஒரே நாளில் கட்டியெழுப்பப்பட்ட நகரமல்ல. அது போல் கிளிநொச்சியையோ, திருகோணமலையையோ, அம்பாந்தோட்டையையோ நாம் விரும்பியவாறு துரிதமாக அபிவிருத்தி செய்ய முடியாது|| என்று கூறியதானது ஒரு தேசத்தின் தலைவிதி அமெரிக்காவின் கட்டை விரலில் இருப்பதை தெளிவுபடுத்திவிடுகின்றது. ஒரு தேசத்தின் நிர்மாணத்தை தமிழ் சிங்கள இனத்தின் பிரச்சனையை அமைதி - சமாதானம் எனும் பெயரால் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் விற்ற பின்பு, கையேந்தி பிச்சை எடுககும் போது அதற்கு அமெரிக்கா பதிலளிப்பது அவசியமாகி விடுகின்றது. மக்களுக்கான எந்த அபிவிருத்தியையும்; செய்ய, இலங்கையில் உள்ள எந்த அரசியல் கட்சிக்கும் அருகதை கிடையாது என்பதையே இது காட்டுகின்றது. இவர்கள் ஒரு கக்கூசைக் கூட நிர்மாணிக்க முடியாத வக்கற்றவர்களாகிவிட்டனர். சமாதானம், அமைதி என்று களமிறங்கிய இலங்கை இனவாத அரசும் சரி, தமிழ் குறுந் தேசியப் புலிகளும்; சரி ஏகாதிபத்தியத்தின் காலில் விழுந்து பிச்சை கேட்டு மண்டியிடுகின்றனர். மக்களை வரியின் பெயரிலும், பலவிதத்திலும் கொள்ளையிடும் பணத்தை, ஏதோ ஒரு விதத்தில் ஏகாதிபத்தியத்துக்குக் கையளித்து விடுகின்றனர். மக்கள் நலனில் ஈடுபடக் கூடிய எந்தக் கட்சியும் அற்றுப் போன நிலையில், மக்களின் நலன் என்பது அரசியலற்றதாகிவிட்டது. மக்கள் தமது சொந்த அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டம் மூலம் மட்டும் தான், இனி மக்களுக்கான ஒரு அரசை நிறுவமுடியும்.


 மக்களை வெறும் மந்தைக் கூட்டங்களாக்கிய நிலையில், ஏகாதிபத்தியத்துக்கு இடைத் தரகராக நின்று மேய்க்கும் தரகுத் தொழிலைச் செய்யும் இவர்கள், மக்களின் கோரிக்கையில் இருந்து அரசியல் பேசும் தார்மீகப்பலத்தையே இழந்துவிட்டனர். தனிநபர்களை மையப்படுத்தியும், குழுவை மையப்படுத்தி நடக்கும் அரசியல் விபச்சாரத்தையே அரசியலாக்கி விட்டனர். தன்னைத் தானே மாhக்சியவாதியாகக் கூறிக் கொள்ளும் புதுவை இரத்தினதுரை மார்க்சியம் என்ற பெயரில் ~~ஒரு அற்புதமான தலைவனை எங்கள் தேசம் அடைந்திருக்கின்றது. அந்த தலைவனின் காலத்தில் எமது விடிவை காணுவதுடன் மட்டுமின்றி, எமது தேசத்தையும் நாம் நிர்மாணிக்க வேண்டும்|| என்றார். புலிகளின் அரசியல் இந்தளவுக்குக் கேவலமானது. தேசிய விடுதலையை இப்படி சிறுமைப்படுத்த புலிகளால் மட்டும் தான் முடியும். தனிநபர்களின் பெயரால் தமிழ்த் தேசிய அரசியல் மலினப்படுவது, உண்மையில் தமது அழிவை தாமே உருவாக்கி விட்டதைக் காட்டுகின்றது. தமிழ் மக்களுக்கு எத்தனையோ தேசியப் பிரச்சனைகள் இருக்க, அதை முன்னிறுத்திப் போராட முடியாது போன புலிகள், அவற்றை எல்லாம் ஏகாதிபத்தியத்திடம் தாரைவார்த்துவிட்டனர். புலிகளின் தலைவரின் பெயரில் போராடக் கோருவது என்பது, புலிகளின் அரசியல் பழைய நிலப்பிரபுத்துவ மன்னர் பரம்பரையின் எச்சமாகிவிட்டது என்பதையே காட்டுகிறது. ஏன் புலிகளின் தலைவருக்காகப் போராட வேண்டும்? என்ற கேள்விக்கு பதிலளிப்பது சாத்தியமற்றதாகி விடுகின்றது. உண்மையில் பிரபாகரன் தலைமையும், அதைச் சுற்றியுள்ள குழுவின் பாதுகாப்பும், அவர்களின் வர்க்க நலன்களும்; ஏகாதிபத்தியத்தால் கேள்விக்குள்ளாகி இருப்பதை இது பிரதிபலிக்கின்றது.


 தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனை உயிருடன் இருக்க, அதற்குள் எத்தனையோ சமுதாயக் கோரிக்கைகள் இருக்கும் நிலையில் அவை அரசு மற்றும் புலிகளால் படிப்படியாக கைவிடப்பட்டதையே இரத்தினத்துறையின் வாதம் காட்டுகின்றது. இதில் அரசின் தமிழர் விரோதப் போக்கை மட்டும் பல புலித் தலைவர்கள் குறிப்பான பிரச்சாரமாக்கி வருகின்றனர். மறு தளத்தில் உண்மையில் தேசம் சிங்கள இனவாதிகளால் கூவி விற்கப்படுகின்றது. இதன் போது புலிகள் எங்களையும் கேட்டு விற்பனை செய்யுங்கள் என்று மட்டுமே கோருகின்றனர்.  


 திருகோணமலை எண்ணெய் குதங்களை இலங்கை அரசு இந்தியாவுக்கு கொடுத்தது பற்றி புலிகளின் சார்பாகத் தமிழ்ச்செல்வன்  ~~அவசரப்பட்டு செய்யப்பட்டிருக்கிறது என்றே நினைக்கின்றோம். திருமலை எமது தாயகக் கோட்பாட்டுக்குள் உட்பட்ட பகுதி. எனவே இனி வரும் காலங்களில் இது போன்ற ஏதாவது முயற்சிகள் முன்னெடுக்கப்படும் பொழுது எங்களையும் கலந்தாலோசிப்பதையே நாங்கள் விரும்புகின்றோம்;|| என்று கூறினார். இது தான் புலிகள். இது தான் புலிகளின் தமிழ்த் தேசியம். மக்களுக்காக, உலகமயமாதலை எதிர்த்துப் புலிகள் சுண்டுவிரலைக் கூட ஆட்டமாட்டர்கள். இங்கு குழு நலன் சாhந்து மட்டும் தான் மோதல் நடக்கின்றது. இது அமைதி சமாதானம் யுத்தம் என்ற எல்லைக்குள் கூத்து நடத்தப்படுவதை காட்டுகிறது. இலங்கையில் சிங்கள தமிழ் பகுதி உலகமயமாதல் என்ற கொள்கைகளாக விற்கப்பட்டு, மறு காலனியாதிக்கம் வேகம் பெற்று வரும் நிலையில் புலிகள் அதை பற்றி மூடிமறைப்பதற்கே உதவுகின்றனர்.


 இப்படி நடக்கிறதே எனக் கேட்டபோது ஆம் நடக்கின்றது என்று புலிகள் ஒத்துக் கொள்கின்றனர். இதைத் தமிழ்ச் செல்வன் ~~இலங்கையின் இன விவகாரத்தில் சர்வதேசத்தின் ஈடுபாடு பாரியளவில் விரிவாக்கம் பெற்றுள்ளது உண்மை|| என்றார். அதைத் தடுக்க என்ன செய்கின்றீர்கள் என்றால் எதுவுமில்லை. மாறாகத் தமது குழு நலன் சார்ந்து, நம்பிக்கையுடன் பேரங்கள் பேசி உதவுகின்றார்கள். இந்தக் குழு நலன் சார்ந்த மோதல் ஒன்று ஏற்படும் பட்சத்தில், சோரம் போகும் நிகழ்வு மூலம் தமது விலங்கைத் தாமே தயார் செய்கின்றனர் என்ற உண்மையைக் கண்டு கொள்வதில்லை. மாறாக சர்வதேசத் தலையீட்டை அதிகரிக்க உதவுகின்றனர். அதன் விசுவாசிகளாகத் தாம் இருப்பதை, வாலாட்டியபடி பிரகடனம் செய்கின்றனர். தமது பிரச்சனை என்ன என்று சொந்த மக்களிடம் எதுவும் சொல்ல முடியாது போயுள்ள புலிகள், உலகத் தலைவர்களிடம் மண்டியிட்டுச் சொல்லுகின்றனர்.


 புலிகளுக்காக மண்டியிடும் தமிழ்ச்செல்வன் இதை ஒப்புக் கொள்கின்றார். ~~.. நாங்கள் பல்வேறு உலக நாடுகளுக்கும் விஜயம் செய்துள்ளோம். பல்வேறு நாடுகளில் அரசியல் உயர் மட்டங்களை, அதிகாரிகளைச் சந்தித்துள்ளோம். அவர்களுக்கு எமது நிலைப்பாட்டை எமது போராட்டத்தின் நியாயப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளோம். பல்வேறு நாடுகளின் இராஜதந்திரிகள் கிளிநொச்சிக்கு வருகின்றனர்.... நாங்கள் முடிந்தளவு சர்வதேச சமூகத்துக்கு எமது நியாயத்தை எடுத்துச் செல்லும் அனைத்து வழிமுறைகளையும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம் தற்போது இலங்கையை நோக்கிய சர்வதேச தலையீடுகளுக்கு அப்பால் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற ஈடுபாடு அதிகரித்துள்ளது. ஐரோப்பிய யூனியன், ஜப்பான், அமெரிக்கா இந்தியா போன்ற பல சர்வதேசச் சமூகங்கள் ஆர்வம் கொண்டுள்ளன|| என்றார். ஏகாதிபத்தியத்தின் ஆர்வங்களுடன் புலிகளின் ஆர்வங்களும் சந்தித்துக் கொண்டதைப் பெருமையாகப் பீற்றுகின்றார். அட தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை? என்று புலிகளிடம் கேட்டால் யாருக்கும் பதில் தெரியாது தள்ளாடுகின்றனர். ஆனந்தசங்கரியின் அரசியல் விபச்சாரத்தைப் பற்றியும், டக்களஸ் தேவானந்தனின் துரோகத்தைப் பற்றியும், ஜே.வி.பியின் இனவாதத்தைப் பற்றியும் பேச முடிகின்றதே ஒழிய, உங்களைப் பற்றியும் மக்களைப் பற்றியும் பேச முடிவதில்லை. தியாகங்கள் பற்றி கூற முடிகின்றதே ஒழிய, மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டி ஒரு அரசியல் வழியை முன்வைக்க முடியவில்லை. சொந்தக் காலில் நின்று எதையும் மக்களுக்காகச் செய்ய முடியவில்லை. நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ஒவ்வொருவரின் உணர்வுகளையும்; கொச்சைப்படுத்தத் தான் முடிகின்றது. அதைக் கூட நியாயப்படுத்த முடியவில்லை.


 புலிகளின் பிரதிநிதியாக அவர்களின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு பாலகுமார் யாழ் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய உரையொன்றின் போது ~~எமது போராளிகளுள் அநேகமானவர்கள் வயதில் கூடியவர்களாக உள்ளனர். அவர்கள் தமது மன உளைச்சல்களை ஆசைகளைக் கட்டுப்படுத்தியுள்ளனர். இங்குள்ளவர்கள் என்றால் சுதந்திரமாக விசிலடிக்க, பீடிபிடிக்க, கள்குடிக்க முடியும்;. ஆனால், எமதுப் போராளிகள் அப்படிச் செய்ய முடியாது.|| என்று கூறினார். சொந்தத் தியாகத்தையே இப்படி புலித் தலைவர்களால் மட்டும் தான் கொச்சைப்படுத்த முடியும்;. மகிழ்ச்சி என்பது போராட்டமே ஒழிய வேறு ஒன்றுமல்ல என்றார் மார்க்ஸ். லெனின் சிரித்ததை தனது திருமணத்தின் பின் தான் கண்டது இல்லை என்கிறார் அவர் மனைவி. அந்தளவுக்கு லெனின் மக்களின் அவல வாழ்வுடன் ஒன்றிப் போய், அவர்களுக்காகப் போராடுவதையே மகிழ்ச்சியாக்கியவர்.


 மக்களுக்காகப் போராடுவது மகிழ்ச்சிக்குரியது. இப்படிப் போராடுவதை விட ~~சுதந்திரமாக விசிலடிப்பதும், பீடி பிடிப்பதும், கள் குடிப்பதும்|| மகிழ்ச்சியானது என்று கூறும் புலித் தலைவர்களை விட, வேறு யாராலும் போராளிகளின் உயர்ந்த இலட்சியங்களை இவ்வளவு கேவலமாகக் கொச்சைப்படுத்த முடியாது. கேவலமான அற்பமான உணர்வுகளையும் நுகர்வுகளையுமே சுதந்திரமானதாகவும், சந்தோசமானதாகவும் கருதும் புலிகள், அதைச் சொல்லி அரசியல் பேசும் வக்கிரத்தையே மேலே பார்க்கின்றோம். இப்படியான கண்ணோட்டம் கொண்டவர்கள், மக்களுக்கு எப்படி அரசியலைப் போதிக்க முடியும்? சொந்தப் போராளிகளுக்கு எதைத்தான் அரசியலாகப் புகட்டமுடியும்? நாம் விடுதலை பெற்றால்; ~~தமது மன உளைச்சல்களை|| தீர்க்க ~~சுதந்திரமாக விசிலடிப்பதும், பீடிபிடிப்பதும், கள் குடிப்பதும்|| சாத்தியம் என்று சொல்வதைத் தாண்டி, எதைத்தான் வழிகாட்ட முடியும்? புலிகள் சொல்லாது தவிர்த்து விட்ட காதல் செய்யவும், பாலியல் ரீதியாக நுகரவும் உள்ள சுதந்திரம், இவை தான் சந்தோசங்களா? இவை தான் இலட்சியமா? களவு ஒழுக்கங்கள் உலகமயமாதலில் இலட்சிய வேட்கையாகின்றன. அதைப் புலிகளின் தலைவர்கள் பிரதிபலிக்கின்றனர். போராளிகளின் உயர்ந்த இலட்சியம் என்பது, எப்போதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு செயல்தான். இது மக்களிடம் இருந்து அன்னியமாகும் போது, இந்தப் போராட்டம் நரகலாகின்றது. மகிழ்ச்சி என்பது புலிகளின் போராட்ட அரசியலில் கிடையாது. அதனால்தான் புலிகள் தம்மைத் தாமே கேவலப்படுத்தி ஒப்பிட முடிகின்றது.


 இப்படி தமிழ் மக்களினதும்;, போராளிகளினதும் அரசியலை நலம் அடித்த (சீரழித்த) பின்பு, ஏகாதிபத்தியம் எல்லாவற்றையும் புரிந்து வைத்துள்ளனர் என்று கூற புலிகளால் முடிகின்றது. அதாவது ஏகாதிபத்தியம் தனது கொள்கையைப் புலிகளின் கொள்கையாக்கும் போது, என்ன நடக்கும் என்பதைப் புலிகளே சொல்லிவிடுகின்றனர். ~~சர்வதேச நாடுகள் இலங்கைப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண வேண்டுமென்பதில் அக்கறையாக இருக்கின்றன. அதன் வெளிப்பாடாகத் தான் இந்த அக்கறை ஆர்வம் அனைத்தும் என்று புலிகள் கதைக்கின்றன.|| என்ன அரசியல் ஞானம் புலிகளுக்கு? இவர்கள் புல்லரிக்க வைக்கும் துரோகத்தை தவிர, வேறு எதையும் தமிழ் மக்களுக்கு பெற்றுத் தரப் போவதில்லை. ஏகாதிபத்தியங்களின் ஆர்வங்கள், விருப்பங்கள், அக்கறைகள் எல்லாம் தமது சொந்த நலன் தான். அதாவது தமிழ் மக்களை எப்படி அடிமைப்படுத்தி கொள்ளையடிப்பது என்பது தான். இதையே புலிகளும் தீர்வு எனக் கூறிய பின்பு, புலிகள் இனியும் தமிழ்த் தேசியத் தலைவர்கள் அல்ல. மாறாக ஏகாதிபத்தியத்தின் தரகுத் தலைவராகவே இருக்கின்றனர் என்ற உண்மை பளிச்சென்று நிர்வாணமாகிவிட்டது.   


 இந்த ஏகாதிபத்தியத்துக்குத் துணைபோகும் துரோகத்தைப் புலிகள் சார்பாகத் தமிழ்ச்செல்வன் உலகறிய நியாயப்படுத்தும் விதமோ கேவலமானது. ~~இன்று இலங்கை விவகாரம் சர்வதேசமயமாகியுள்ளது. இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் போரினால், பயத்தினால் புலம் பெயர்ந்து பல நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இது அந்த நாடுகளுக்குப் பிரச்சனையாக உள்ளது. அவர்களுக்கென தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவை அந்த நாடுகளுக்கு உள்ளது. இதற்கு அப்பால் அந்தந்த நாடுகளின் நலன்களும் உள்ளன. எனவே தான் அமைதி திரும்புவதை இந்நாடுகள் விரும்புகின்றன|| என்று கூறுகிறார். இதற்காகத் தமிழ் மக்களின் நலன்களைத் தாம் தியாகம் செய்ய உள்ளதாகக் கூற விரும்புகிறார்கள். இப்படி அப்பட்டமாகவே சோரம் போகக் கூடிய அனைத்துத் தர்க்க விளக்கங்களும், ஏகாதிபத்தியங்களின் சார்பாக அவர்களின் நலன்களில் இருந்து வைக்கப்படுகின்றது. புலம்பெயர்ந்த நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களைத் திருப்பி அனுப்பவும், ஏகாதிபத்திய உலகமயமாதல் நலன்களை அடைய மக்களை அடிமைப்படுத்தவும் விரும்பும் ஏகாதிபத்திய நலன்களை, புலிகள் ஏற்றுக் கொண்டு சோரம் போகத் தயாராக இருப்பதை புலிகள் ஒத்துக் கொள்கின்றனர். இதை நாகரிகமாக மூடிமறைத்தபடி களமாடுகின்றனர்.


 தமிழ் மக்களின் பிரச்சனைக்கு நேரடியாகவே எதிராக இருக்கும் இந்தியா பற்றி, புலிகளின் சார்பாகத் தமிழ்ச்செல்வனின் கூற்று அனைத்தையும் மறந்துவிடவும், மக்களை அடிமைப்படுத்தும் ஒரு நிலைக்குத் தாம் தயாராக இருப்பதைப் புலிகள் வலிந்து முன்வைக்கின்றனர். முன்னைய இந்தியா ஆக்கிரமிப்பையும், ராஜீவ் கொலையையும் பற்றி பேசிக் கொள்ளாத வகையில் உலகமயமாதல் நிகழ்ச்சியில் இணங்கிப் போகத் தயாராக இருப்பதைப் புலிகள் கோடிட்டுக் கட்டுகின்றனர். ~~நாம் இந்திய தேசத்துக்கோ, இந்திய மக்களுக்கோ எதிரானவர்கள் அல்ல|| என்று கூறி, இந்திய மக்களையும், அரசையும் ஒன்றாக காட்டி விடுகின்றனர். இதன் மூலம் இந்திய அரசுடன் கூடிக் குலாவத் தங்கள் விருப்பத்தை புலிகள் மீண்டும் வெளிப்படுத்திவிடுகின்றனர். எந்த அமைதியும் சமாதானமும் இந்திய அரசின் அடிப்படையான கொள்கையுடன் தொடர்புடையவை? ராஐ{வ் கொலைத் தொடர்பாக புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய நபர்கள் பற்றிய பிரச்சனையில், பிரபாகரனின் பாதுகாப்பு உறுதிப்படும் பட்சத்தில் தான், அமைதி மற்றும் சமாதானத்தின் ஆயுள் தங்கிக் கிடக்கின்றது. இங்கு தமிழ் மக்களின் பிரச்சனைகள் அல்ல. அவை இரண்டாம் பட்சமானவை. முதலாம் பட்சமாக இருப்பவை புலித் தலைவர்களினதும், அவர்களின் குழுவினது நலன்கள் தான். இந்தக் குழுக்களின் நலன்கள் பூர்த்தி செய்யப்படும் போது, அமைதி என்பது தமிழ் மக்கள் மேலான துரோகத்தில் பூத்துக் குலுங்கும்.

 
 தமது அமைப்பை பயங்காரவாதப் பட்டியலில் இருந்து நீக்குவதன் மூலம் நிறைவு செய்ய முடியும் என்கின்றார் தமிழ்ச்செல்வன். ~~சர்வதேச பயங்கரவாத நிகழ்ச்சி நிரல்களுக்குள் விடுதலைப் போராட்டத்தையும், விடுதலைப் புலிகளையும் இணைத்துக் கொண்டு செல்வது எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்று தெரியவில்லை|| என்பதை தெளிவாகச் சொல்லி விடுகின்றார். சமாதானம், அமைதி எதுவாக இருந்தாலும், புலிகள் என்ற குழுவின் அடிப்படை நலன் சார்ந்ததாக இருப்பதைத் தௌ;ளத் தெளிவாகக் கூறிவிடுகின்றார். விடுதலைப் புலிகளின் பாதுகாப்புக்கான உத்தரவாதம் தான், தமிழ் மக்களின் தேசியப் போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பதற்கான அடிப்படையான நிபந்தனை. நீடித்த இழுபறியாக நடக்கும் பேரங்கள் அனைத்தும், புலிகளின் எதிர்காலம் என்ன என்பதில் இருந்து, தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயகக் கோரிக்கை அனைத்தையும் காட்டிக் கொடுக்க தயாராக இருப்பதைப் புலிகள் எப்போதும் பிரகடனம் செய்து வருகின்றனர். தமிழ் மக்களின் எந்த ஜனநாயகக் கோரிக்கையையும் மக்கள் மத்தியில் புலிகள் முன்வைப்பதில்லை. குழுநலனை அடிப்படையாகக் கொண்டு, அதை தமிழ் மக்களின் பிரச்சனையாகக் காட்டுவதே அண்மைய குறிப்பான அரசியலாகியுள்ளது.


 சர்வதேச ரீதியாக அமெரிக்காவின் அத்துமீறிய ஆக்கிரமிப்புகள் உலகளவில் வேகம் பெற்றுள்ள நிலையில், புலிகள் மேலான அமெரிக்காவின் அச்சுறுத்தல் ஒரு இராணுவத் தாக்குதலாகும் எல்லையைத் தொட்டு நிற்கின்றது. அமெரிக்கா புலிகளுக்கு கொடுக்கும் நிர்ப்பந்தம், புலிகளை அமைதியாகச் சரணடையக் கோருகின்றது. இந்த நிலையில் புலிகள் சார்பாகத் தமிழ்ச்செல்வன் ~~ஒரு சுதந்திர இயக்கமான விடுதலை அமைப்பாகச் செயற்படும் விடுதலைப் புலிகள் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கப் போவதில்லை|| என்று கூறியதன் மூலம், தம் மீதான அங்கீகாரத்தை கோருகின்றார். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனை எக்கேடுகெட்டாலும் அதைப்பற்றி புலிகள் பேசமுன்வரவில்லை. ஏகாதிபத்தியங்களின்; கொள்ளைக்குப் புலிகள் அச்சுறுத்தலாக இருக்க மாட்டோம் என்பதைச் சொல்லிவிடுகின்றனர். உலகமயமாதலையே தமது கொள்கையாக்கிக் கொள்வதை உறுதி அளிக்கின்றனர். அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியத்துக்கு அச்சறுத்தலாக இருக்க மாட்டோம் என்பது, சாராம்சத்தில் இலங்கையில் ஏகாதிபத்தியத் தலையீட்டை அனுமதிப்போம் என்பதை ஒத்துக் கொள்கின்றது. உலகளவில் உலகமயமாதல் என்பது, ஏகாதிபத்திய அத்துமீறலைத் தேசிய எல்லைக்குள் அங்கீகரிப்பதை அடிப்படையாகக் கொண்டது. இதை வெளிப்படையாகப் புலிகள் ஆதரித்து நிற்பதும், அதற்குத் துணை போகத் தயாராக இருப்பதாகப் பிரகடனம் செய்யும் போது, தம்மை அங்கீகரித்து அதை முன்னெடுக்க அனுமதிக்கக் கோருகின்றனர். இவைத் தான் தமிழ் மக்கள் சார்பாக புலிகள் வைக்கும் உயாந்தபட்ச கோரிக்கையாகும். 


 இதனடிப்படையில் புலிகள் தமது சொந்தக் குழு எதை அடைய விரும்புகின்றது என்பதைத் தெளிவுபடுத்தி விடுகின்றனர். ~~தமது சொந்த மக்களின் அபிலாஷைகளுக்கெதிராகச் செயற்படும் குழுக்களை, இந்திய ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்த குழுக்கள் என்றும், அவர்களை இடைக்கால  நிர்வாகச் சபையில் இணைத்துக் கொள்ள வேண்டுமென்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. மக்களும் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எமது மக்களைப் பொறுத்த வரையில் வடக்குக் கிழக்கில் நடந்த தேர்தலில் தமிழ் மக்கள் அதனை வெளிப்படுத்தியுள்ளனர். || என்று புலிகள் சார்பாகத் தமிழ்ச்செல்வன் முன் வைக்கின்றார். உண்மையில் நீடித்த இழுபறியான பேச்சு வார்த்தைகள் இதற்குள் தான் நடக்கின்றது. இதில் தமிழ் மக்களின் நலன்கள் என எதுவும் அல்ல. உலக நாடுகளிடம் பிச்சை கேட்கவும், கடன் வாங்கவும், தமிழ் மக்களை அடக்கியொடுக்கவும், அதன் மேல் தனி சர்வாதிகார அமைப்பை நிறுவுவதுமே புலிகளின் தணியாத தாகமாகியுள்ளது. பிச்சை எடுக்கும் பாத்திரத்தையும், அடிமையாக இருக்க கையெழுத்திடும் உரிமையையும், இதை நடைமுறைப்படுத்தத் துப்பாக்கிகளையும் நீதிமன்றங்களையும் தம்மிடம் ஒப்படைக்கக் கோருகின்றனர். துரோகக் குழுக்கள் இதில் புலிகளுடன் முரண்படுவது, தமது பங்கையும் இணைக்கக் கோரித்தான். அதாவது இதை நடைமுறைப்படுத்த தனிச் சர்வாதிகார புலிகளின் அதிகாரத்துக்குப் பதிலாக, பன்மையான அதிகார அமைப்பைக் கோருகின்றனர்.. மற்றபடி தமிழ் மக்களின் பிரச்சனையில் அவர்களும் புலிகளும் ஒன்றுபட்ட ஒத்தக் கருத்தையே கொண்டுள்ளனர். இந்த உண்மையை மறுக்க புலிகள் ஒரு துப்பாக்கி குண்டினால் மரணதண்டனையை நிறைவேற்றுவதைத் தவிர, வேறு எதையும் சொல்ல வக்கற்றவர்களாக உள்ளனர். உலகமயமாதலின் கீழ் தமிழீழத் தாகம் என்பதை சொந்தக் குழு அங்கிகரிக்கும் பட்சத்தில், தமிழ் மக்களை கைவிடத் தயாராக இருப்பதைத் தொடர்ச்சியாகப் புலிகள் பிரகடனங்கள் செய்து வருகின்றனர்.


 புலிகள் தமது துரோகத்தை ஒன்றுக்கு பின் ஒன்றாக, முரண்பாடாக, புலம்பவும் செய்கின்றனர். இதோ, பாலசிங்கம் ~~இந்த அரசு அமெரிக்காவுடன் உடன்பாடு செய்கின்றது. இந்தியாவுடன் உடன்பாடு செய்கின்றது. இந்த அரசு சர்வதேச நாடுகளுடன் உடன்பாடுகள், ஒப்பந்தங்களை செய்கின்றது. ஒருபுறம் வர்த்தக ஒப்பந்தங்கள், பொருளாதார ஒப்பந்தங்கள், இராணுவ ஒப்பந்தங்கள் செய்யப்படுகின்றது. எதற்கு? புலிகள் இயக்கத்தைச் சுற்றி, ஒரு பாதுகாப்பு சிலந்திவலை ஒன்று போடப்படுகின்றது. இது எங்களுக்குத் தெரியும்....|| இப்படிக் கூறிக் கொண்டே புலிகள் ஏகாதிபத்தியத்திடம் சரணடைய விரும்புகின்றனர். புலிகள் தலைவர்களில் ஒருவரான பாலகுமார் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில் ~~பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் உட்பட பல நாடுகள் புலிகளோடு உறவு வைப்பது தான் சரியானதென்று இப்போது தீர்மானித்துள்ளன. புலிகளோடு உறவு வைப்பதுதான் தெற்காசியச் சமநிலையைப் பேணுவதற்கான சரியான வழி என்பதனையும் பல நாடுகள் இப்போது நன்கு உணர்ந்துள்ளன.|| என்றுக் கூறியுள்ளார். இங்கு புலிகள் ஏகாதிபத்தியக் கொள்கையுடன் இணங்கிப் போவதையே, அவர்கள் இணங்கி வருவதாகக் கூறுகின்றனர். புலிகளின் சோரத்தை அவர்களின் (ஏகாதிபத்தியங்களின்) சோராமாகத் திரித்துக் காட்டுகின்றனர். இங்கு புலிகள் எதிர்பார்ப்பது என்ன என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடுகின்றனர். இந்த அடிப்படையான கண்ணோட்டம் தான் புலிகளின் அனைத்துத் தீர்மானத்தையும் தீர்மானிக்கின்றது. புலிகள் பற்றிய அடிப்படையான கொள்கையில் ஏகாதிபத்தியம் எடுக்கும் கொள்கை தமக்குச் சாதகமாக இருக்கும் பட்சத்தில், சரணடைந்து விடத் தயார் என்பதையே புலிகள் சொல்லி வருகின்றனர். இதை  நியாயப்படுத்திய பாலகுமார் ~~...ஈராக் மீதான அமெரிக்கா யுத்தம் எமக்கு ஒரு பாடம். எனவே, மக்களாகிய நீங்கள் எமது தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அதைத் திருத்துவதற்கான சகல நடவடிக்கையையும் நாம் மேற்கொள்வோம்|| என்று கூறினார். இப்படிக் கூறுவதன் மூலம், துரோகத்தை இணைந்து எடுக்க மக்களையும் அழைக்கின்றனர். மக்கள் பற்றி இவ்வளவு காலமும் கொண்டிருந்த எதிர்மனப்பான்மையான கண்ணோட்டத்தை மறைத்து துரோகத்தினை இணைந்து செய்யக் கோரும் எதிர்நிலைக் கண்ணோட்டம் முன்வைக்கப்படுகின்றது. ஏகாதிபத்தியத்துடன் இணைந்து செல்ல, மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்கின்றனர். இதனடிப்படையில் தவறுகளைச் சுட்டிக்காட்ட கோருகின்றனர். புலிகளுக்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியின் ஒரு அங்கமாக புலிகள் முன்வைத்த கருத்து, நடைமுறையில் எதிர்நிலையில் இயங்குகின்றது.


 சமூகத்தின் மேல், தேசத்தின் மேல் அக்கறை உள்ள ஒவ்வொருவரின்; அடிப்படைக் கேள்வி என்ன செய்வது என்பதே? ஒழிய மௌனமாக இதை அங்கீகரிப்பது அல்ல.


புள்ளிவிபரங்கள் மற்றும் தரவுகள்
1. தினக்குரல் பத்திரிக்கை
2. வீரகேசரி பத்திரிக்கை
3 இணையம் ஊழடழஅடிழீயபந நேறள
4. இணையதளம் உதயன்
5. ஈழமுரசு
6. ஈ.பி.டி.பி இணையதளம்
7. புதிய பூமி
8. இலங்கை முஸ்லீம்களின் இணைதளம்
9. ஈழநாடு,  10. புலிகளின் இணையதளம்