Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் குளிர்காயும் சிங்கள இனவாதம்

குளிர்காயும் சிங்கள இனவாதம்

  • PDF

book _4.jpgஅமைதி, சமாதானம் என்பது தொடரும் பட்சத்தில், இலங்கை இனவாத சக்திகளின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகிறது. இனவாதம் மூலம் அரசியல் பேசி பிழைத்த குழுக்களின், தலைவிதி தூக்கில் தொங்க வேண்டியதாகிறது. இது அரசு, எதிர்க் கட்சி என்ற இரு எதிர் தளங்களில் யார் இருந்தாலும், இதுவே அதன் சொந்தத் தலைவிதியாக இருக்கிறது. அமைதி, சமாதானம் என்பது உலகமயமாதல் திசையில் உறுதியாகி வருவதால், இனவாத சக்திகளின் கடைசி மூச்சுத் திணறல் புதிய அரசியல் நெருக்கடியாகியுள்ளது.


 எதிர்க் கட்சியில் இருப்பவர்கள் இனவாதத்தை புகையவிட்டு, அதில் குளிர்காயும் அரசியலானது உலகமயமாதலின் பல்வேறு நிர்பந்தங்களைக் கடந்து, அரசியல் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. எதிர்க் கட்சியாக இருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஜே.வி;.பி யும் எப்போதும் சிதைந்து செல்லும் கூட்டணியாக இணைந்து, இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தினர். சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனது ஆட்சிக் கவிழ்ப்பை நடத்திய உடனேயே, இந்தியா உள்ளிட்ட அமெரிக்காவுடன் நேரடியாகவே பல பேரங்களை நடத்தினர். தாங்கள் நம்புவதாக கூறும் ஜனநாயகத்தை, கழுத்தில் வெட்டிச் சரித்தபடி இனவாதத்தை கிளறிவிட்டுள்ளனர். இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் ஒன்றினையும் நடத்துகின்றனர்.


 இவற்றுக்குப் புலிகளின் மக்கள் விரோத அடிப்படைகளைத் தனக்குச் சாதகமாகக் கொண்டு குளிர்காயும் சிங்கள இனவாதம், சொந்த இராணுவ பலவீனங்களைக் கூட மேம்படுத்தப் புலிகளைச் சார்ந்தே உள்ளனர். புலிகளின் ஜனநாயக விரோதப் பண்பை, செயல்பாட்டை மூலதனமாக கொண்டே, சிங்கள இனவாதம் உலகைத் தனக்குப் பின்னால் திரட்ட முனைகின்றது. உண்மையில் இனவாதம் தனிமைப்பட்டு அழிந்து போக முடியாத வரலாற்றுப் போக்கை, புலிகளின் ஜனநாயக விரோதப் போக்கே ஏற்படுத்துகின்றது. இதன் மூலம் தனது சொந்த ஜனநாயக விரோதப் பாசிசப் போக்கை, இனவாத சக்திகள் மூடிமறைக்கின்றனர். அதைத் தேர்தல், ஜனநாயகம், பெரும்பான்மை என்ற வேடங்கள் மூலம் அலங்கரிக்கின்றனர். இனவாத யுத்தத்தைத் தொடர்வதன் மூலம், தமது அரசியலைத் தக்கவைக்கும் குறிக்கோளை முன்வைத்து களத்தில் இறங்கியுள்ளனர். இதே போன்று தமிழ் துரோகக் குழுக்களும் மற்றொரு தளத்தில் களத்தில் இறங்கியுள்ளனர்.