Wed04242024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் மூளைக்கோளாறு பிடித்தவர்கள் நடத்திய படுகொலையும், நியாயப்படுத்தும் கிழக்கு பாசிட்டுகளும்

மூளைக்கோளாறு பிடித்தவர்கள் நடத்திய படுகொலையும், நியாயப்படுத்தும் கிழக்கு பாசிட்டுகளும்

  • PDF

பாசிசப் புலியில் கருணா என்ற தனிநபருக்கு ஏற்பட்ட முரண்பாடு கிழக்கு பிரிவினையாகியது. அதுவோ இன்று பேரினவாதத்தின் கிழக்கு கூலிக் கும்பலாகி நிற்கின்றது. இது கிழக்கு மக்களின் 'ஜனநாயகம்" கிழக்கு தமிழ் மக்கள் 'நலன்" என்று பல்வேறு கோசங்களுக்கு ஊடாக, தனது மக்கள் விரோத பாசிசத்தை விதைத்தனர், விதைக்கின்றனர்.

 

 

கிழக்குக் கூலிக் கும்பலுக்கெல்லாம் தலைமை தாங்கும் ஒரு ரவுடியை, கிழக்கு தமிழ் மக்களுக்கு ஏற்ற தலைவனாக இனம் கண்ட பேரினவாதம், அவனை தனது கிழக்கு முதலமைச்சராக்கியது. இப்படி 'கிழக்கில் உதித்த ஜனநாயக சூரியன்" என்று இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் புகழும் இந்த நிகழ்வுகள் அனைத்தும், பேரினவாத சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பத்தான் நடக்கின்றது. இப்படி இருக்க, இந்த கூலிக்கு மாரடிக்கும் கிழக்கு பாசிட்டுக்களை, கிழக்கு மக்களின் விருப்பாகவும், தேர்வாகவும் கூறுகின்றனர். புலியெதிர்ப்பு கிழக்கு பாசிட்டுக்களின், ஒரேயொரு அரசியலாக இதுவே உள்ளது.

 

எதையும் எப்படி செய்யலாம் எப்படியும் நியாயப்படுத்தலாம் என்பதே புலிப் பாசிச அரசியல். அதையே கிழக்கு கூலிக் கும்பலுக்காக, புலியெதிர்ப்பு கிழக்கு 'ஜனநாயக" பாசிட்டுக்கள் செய்கின்றனர்.

 

அரசின் கூலிப்படையாக காத்தான்குடியில் இயங்கிய கிழக்குப் பிரிவினைவாதிகளைச் சேர்ந்த இரண்டு கொலைகாரக் குண்டர்கள், புலிப் பாசிட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து கிழக்கு தமிழ் பிரிவினைவாதத்தை வைக்கும் தமிழ் கூலிக் குண்டர்கள், கிழக்கு முஸ்லீம் மக்கள் மேல் படுகொலைகளுடன் கூடிய பாசிச வெறியாட்டத்தை நடத்தினர். பலர் காயமடைய, சிலர் கொல்லப்பட்டனர்.

 

ரவுடிகளும், குண்டர்களும், அரசின் கூலிப்பட்டாளமாக செயல்படும் வரை, இது தொடரும். அரசுக்கு வெளியில் மக்களுக்கான எந்த அரசியல் வேலைத்திட்டமும், இவர்களிடம் கிடையாது. அரசின் தயவில் இயங்கும் கூலிக் கும்பல், ஒரு குண்டர் படையாகத் தான் கிழக்கில் செயல்படுகின்றது.

 

இதன் பின்னணியில் நாம் இங்கு புரிந்துகொள்ள வேண்டியது எதை? இதை நியாயப்படுத்தும் வடிவத்தைத் தான். புலியெதிர்ப்பின் பின் முகிழ்கின்ற, பாசிசத்தின் மொத்த வக்கிரத்தைத் தான்.

 

கிழக்கு முஸ்லீம் மக்கள் மேலான இந்தப் படுகொலையை, புலியெதிர்ப்பு கிழக்கு தமிழ் பாசிட்டுகள் நியாயப்படுத்தியுள்ளனர். அந்த பாசிசத்தைப் பாருங்கள்.

 

கிழக்கு புலியெதிர்ப்பு பேசும் 'ஜனநாயக" குமாரதுரையின் இணையத்தளமான விழிப்பு எழுதுகின்றது "காத்தான்குடி சம்பவமானது முன்திட்டமிடப்பட்ட வகையில் ரீ.எம்.வி.பியினரை ஆத்திரமூட்டி முஸ்லிம்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கு து}ண்டுவதற்கான சதிமுயற்சியாகும். இச் சதியின் பின்னணியில் பிரபாகரன் தலைமையிலான மனநோயாளிகளும், பதவிமோகங்கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒரு சாராரும் இருப்பதாக நம்பகரமாக அறியப்படுகின்றது"

 

சம்பவம் நடந்தவுடன், கிழக்கு பாசிசம் புலியின் பெயரால் இப்படித்தான் நியாயப்படுத்தி கொக்கரித்தது. எப்படி இது 'ரீ.எம்.வி.பியினரை ஆத்திரமூட்டி முஸ்லிம்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கு துண்டுவதற்கான சதிமுயற்சியாகும்? "ரீ.எம்.வி.பியினரை ஆத்திரமூட்டினர்" என்ன பாசிச தர்க்கம்! நீங்கள் வெளிப்படையாக அரசின் எடுபிடிகள். மறுபக்கத்தில் புலியின் ஆத்திரமூட்டலுக்கு எடுபடும், கைக் கூலிக் குண்டர்கள். இதைத் தானே பாசிச நியாயப்படுத்தல் ஊடாக சொல்லுகின்றார். அதாவது நாங்கள் சுயமற்ற அரசியல் எடுபிடிகள். அரசின் கூலிக் கும்பல், மறுபக்கத்தில் புலியின் நடத்தைக்கு எடுபடும் அடியாள் கும்பல். இந்த எல்லைக்குள் தான் பேரினவாதம், தனது குண்டர்களை அரசியல் ரீதியாக இருக்க அனுமதித்துள்ளது.

 

கிழக்கு முதலமைச்சரின் கட்சியின் உத்தியோகபூர்வ இணையமான தமிழ்அலை 'காத்தான்குடியில் த.ம.வி.பு. உறுப்பினர் இருவர் வீரமரணம்" என்று கூறும் அதேநேரம், தம்மால் கொல்லப்பட்டவருக்கு அஞ்சலி செலுத்தவில்லை. முஸ்லீம்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்றதையே அவர்கள் உறுதிசெய்கின்றனர். 22.05.2008 பி.பி.சிக்கு பாசிட் பிள்ளையான் வழங்கிய பேட்டியில், நாங்கள் முஸ்லீம்களைக் கொல்லவில்லை என்கின்றான். அதையே தமிழ்அலை அடுத்த நாள் 'தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் கொல்லப்பட்டதால், அதன் பின்னர் இடம்பெற்ற சம்பவத்தில் சிலர் தமது கட்சி உறுப்பினர்களைத் தொடர்புபடுத்துவதாக கூறிய முதலமைச்சர் இது தவறான கருத்தென்றும் இவ்வாறான விஷமத்தனமான பிரச்சாரங்களை மக்கள் நம்பவேண்டாமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார். கிழக்கில் பணிகளை முடக்குவதற்காக சிலர் திட்டமிட்டு மேற்கொள்ளும் சதி முயற்சிகளை அறிந்து கொண்டுள்ளதாக" கூறுகின்றான். இவன் எப்படிப்பட்ட ஒரு தெருப் பொறுக்கி. இவன் சில நாட்களுக்கு முன் வழங்கிய பேட்டியில் 'கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் என்ற வகையில் அனைத்து இன மக்களுக்கும் பொறுப்புக்கூறும் விதத்தில் நடந்து கொள்வேன்" என்றான். இவன் காத்தான்குடி படுகொலை சம்பவத்தில், 'பொறுப்பு கூறும் விதம்" என்பது, முஸ்லீம் விரோத உணர்வு கொண்டது. இது மொத்த மக்களுக்கும் எதிரான உணர்வைக் கொண்டதும், கூலிபடை மனப்பாங்குமாகும்.

 

சரி கிழக்கு பாசிட் குமாரதுரை இதற்கு முரணாகவே அன்று எழுதுகின்றார் 'முன்னைய துப்பாக்கிச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்னும் அடையாளங் காண்பதற்கு முன்னர் மூன்று அப்பாவி முஸ்லிம் பொதுமக்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களால் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை கண்டிக்கத்தக்க விடயம் மட்டுமன்றி எக்காரணங் கொண்டும் நியாயப்படுத்தமுடியாத விடயமுமாகும்." ஒருபுறம் தாம் இல்லையென்பது, மறுபுறம் கண்டிப்பது என்ற கோமாளித்தனத்தை அரங்கேற்றுகின்றனர். இதற்கு முந்தைய பாசிசப் புலம்பலில் 'பதவிமோகங்கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒரு சாராரும்" இருப்பதாக கூறி இதை நியாயப்படுத்திய இந்த கிழக்கு பாசிட், அடுத்த நாள் தமது 'ஜனநாயக" வேஷத்தை போர்த்தி பாதுகாக்க முனைகின்றனர்.

 

பிள்ளையான் நாங்கள் இந்தப் படுகொலையில் சம்பந்தப்படவில்லை என்று 'பொறுப்புக்கூறும் விதத்தில்" பாசிசத்தை புலம்பும் அதேநேரம், இவருக்கு பாசிச ஆலோசனை வழங்கும் பாசிட்டுகள் இதை 'ஆத்திரமூட்டிய" சம்பவம் என்று கூறி நியாயப்படுத்தினர். அடுத்தநாள் கண்டிப்பது வேடிக்கை தான். இந்த வகையில் அரசுடன் இயங்கும் தமிழ்-முஸ்லீம் கூலிப்படை தலைவர்கள், ஒன்றாக காத்தான்குடியில் சந்தித்து புலம்புவது கோமளித்தனம் தான். இங்கு பேரினவாத அரசு தான், பிள்ளையானை காத்தான்குடி செல்ல வைக்கின்றது. அங்கே கூடி புலம்பவைக்கின்றது.

 

கிழக்கு பாசிட் குமாரதுரை 'இச்சம்பவத்தில் சாந்தனுடன் பயணித்த ரீ.எம்.வி.பியின் உறுப்பினரும் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்." என்று கூறித் தான், இதை நியாயப்படுத்தினர். ஆக கிழக்கு கூலிக் குண்டர்கள் கொல்லப்பட்டதால் இது நியாயம் என்று தாக்கத்தை 'ஆத்திரமூட்டி"யது என்கின்றார். இதுவோ பாசிசத்தின் கழிசடைத்தனமாகும். அடுத்த நாள் 'துப்பாக்கிச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்னும் அடையாளங் காண்பதற்கு முன்னர்" என்று கூறி கண்டிக்கும் இந்த பாசிட், அடையாளம் கண்டு அதைச் செய்தால் சரி என்ற பாசிச அரசியலால் உருவேற்றுகின்றனர்.

 

சரி இந்த கிழக்கு பாசிட் தான் இப்படி என்றால், மற்றொரு புலியெதிர்ப்பு கிழக்கு பாசிட்டான இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 'கிழக்கில் உதித்த ஜனநாயக சூரியன்" என்ற தனது கட்டுரையில் என்ன சொல்லுகின்றார். 'அங்கு நடப்பவை சாதாரண மக்களை உணர்ச்சி வசப்படுத்தி ஒரு இனக்கலவரதையும் குழப்பத்தையும் உண்டுபண்னிப் புதினம் பார்ப்பவர்களால் நடத்தப்படுகிறது என்பதை உணர்ந்து கிழக்கு மக்கள் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ளவேண்டும்." என்ன அரசியல் வக்கிரம். பாசிசம் கொப்பளிக்கின்றது. காத்தான்குடி சம்பவத்தை ஏதோ மக்கள் செய்ததாகவும், 'கிழக்கு மக்கள் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ளவேண்டும்" என்றும் பாசிசத்தை பிழிந்து, அதை மக்கள் மேல் தெளிக்கின்றார்.

 

கடந்தகாலத்தில் பெண்ணியம் பேசியவர் இவர். கிழக்கில் அரசுடன் சேர்ந்து இயங்கும் குண்டர்களும், படைப் பிரிவுகளும் சேர்ந்து நடத்தும் தொடர்ச்சியான கற்பழிப்புக்களை கூட கண்டு கொள்ளாத அளவுக்கு, கிழக்கு பாசிசத்தை நியாயப்படுத்தும் அளவுக்கு பாசிசமயமாகியுள்ளார். இவர் நியாயப்படுத்தும் பாசிசத்தின் பின்னணியில், கிழக்கு மக்கள் எப்படிப்பட்ட சூழலில் வாழ்கின்றனர். கற்பழித்த பின் கொல்லப்பட்டார் என்ற மருத்துவ அறிக்கையை எழுதிய பெண் மருத்துவர், இப்படி எழுதியதற்காக மிரட்டப்பட்டார். இதனால் அவர் தனது வேலையை ராஐpனாமா செய்துள்ள சம்பவங்கள் பல கிழக்கில் நிகழ்கின்றது.  

 

கற்பழித்து கொன்றவர்கள் எப்படிப்பட்ட அறிக்கையை எதிர்பார்க்கின்றனர். யார் கொலை செய்தது என்று தெரியாத வகையில், புலியொழிப்புக் கொலையாக அல்லது புலிக்கொலையாக பொதுவில் இருக்கும் வண்ணம், தமது கற்பழிப்பை மருத்துவ அறிக்கையில் குறிப்பிடக் கூடாது என்கின்றது. புலியொழிப்பு 'ஜனநாயகம்". இப்படித்தான் 'கிழக்கில் உதித்த ஜனநாயக சூரியன்" மிளிர்கின்றது. பல பெண்கள் தொடர்ச்சியாக கற்பழிக்கப்படுகின்றனர். பிள்ளையான் அதைத் தடுத்து நிறுத்தப் போகின்றான்!!

 

பெண்ணியம் பேசியவர்கள் கிழக்கு பாசிட்டாகியவுடன் இதையெல்லாம் கண்டுகொள்வது கிடையாது. வடக்கு பாசிட்டுகள் பற்றி மட்டும் பேசுவதும், கிழக்கு பாசிசத்தை நியாயப்படுத்துவமே இவர்களின் அரசியலாகின்றது. இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் மகிந்தவை சந்தித்த கணத்தில், அவரின் அருட்பார்வையை பெற்றவுடன், கிழக்கு பாசிசம் தலைக்கேறியது. காத்தான்குடி சம்பவத்தை வைத்து, மக்களை எச்சரிக்கின்றார். மக்கள் தான் இதை செய்யப் போவதாக புலம்புகின்றார்.

 

நடந்தது புலிப் பாசிசப் படுகொலை. கொல்லப்பட்டவர்கள் அரச கூலிப்படையைச் சேர்ந்த குண்டர்கள். அதில் ஒருவன் நீண்ட காலமாகவே அரசுடன் இயங்கி வந்த முன்னாள் கொலைகாரன். இவர்களுக்கு இடையிலான மோதலில், மக்கள் பலியிடப்படுகின்றனர். இப்படி இருக்க 'கிழக்கு மக்கள் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ளவேண்டும்" என்று கூறுகின்ற இந்த வக்கிரம் தான், கிழக்கு பாசிசத்தின் கொப்பளிப்பு.

 

கிழக்கு பாசிட்டுக்களை பாதுகாக்க, தாம் செய்த இந்த முஸ்லீம் விரோத கொலையை புலிகள் மேல் குற்றம்சாட்டுகினறார். 'பொறாமைவாதிகளால் இந்தக்கொடுமைகள் நடத்தப்பட்டிருக்கின்றன… கிழக்கு மக்களின் பிரிவில் நன்மையடைபவர்கள் யார்? கல்யாணவீட்டில் கருமாதி செய்ய நினைத்தவர்கள் யார்?" புலிகள் மட்டுமா இல்லை, நீங்களும் தான். புலிகள் உங்களை தமிழர் பிரதேசத்தில் கொன்றால், முஸ்லீங்களை கொன்றது போல் தமிழரைக் கொல்வீர்களோ!!! 'கிழக்கு மக்கள் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ளவேண்டும்", 'ஆத்திரமூட்டி"யது என்று எல்லாம் அதை எழுதுவீர்களோ? கொப்பளிப்பதோ கிழக்கு தமிழ் பாசிசம்.

 

அரச கூலிப்படையைச் சேர்ந்த குண்டர்கள், முஸ்லீம் மக்கள் மேல் தாக்குதலை நடத்தி படுகொலையைச் செய்கின்றனர். இதைக் கண்டிக்க இந்த கிழக்கு பாசிசத்துக்கு வக்கில்லை. 'கிழக்கில் உதித்த ஜனநாயக சூரியன்" என்று, கிழக்கு மக்களை படுகொலை செய்யும் இந்த கொலைகார கும்பலுக்கு, மகுடம் சூட்டுகின்றனர். இவர்கள் எப்படிப்பட்ட பாசிசப் பொறிக்கிகள்.

 

பி.இரயாகரன்
24.05.2008

Last Updated on Monday, 26 May 2008 11:03