Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் நக்சல்பாரி புரட்சியாளர்கள் - ஆந்திர அரசாங்கம் சண்டை நிறுத்தம் - பேச்சு வார்த்தை கானல் நீர் தாகம் தீர்க்காது

நக்சல்பாரி புரட்சியாளர்கள் - ஆந்திர அரசாங்கம் சண்டை நிறுத்தம் - பேச்சு வார்த்தை கானல் நீர் தாகம் தீர்க்காது

  • PDF

04_2005.jpgஆந்திர மாநில அரசாங்கத்துக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு (மாவோயிஸ்ட்) கட்சிக்கும் இடையிலான சண்டை நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சு வார்த்தை அதிகாரபூர்வ அறிவிப்பின்றி ஏறக்குறைய முறிந்து போய் விட்டது என்றே சொல்லலாம். போலீசு மீண்டும் பழைய முனைப்புடன் தேடுதல் மற்றும் போலி மோதல் கொலைகளை நடத்தி வருகிறது. இ.க.க. (மாவோயிஸ்ட்) தவிர வேறு பிற நக்சல்பாரிப் புரட்சியாளர்களும் வேட்டையாடப்படுகின்றனர். பதிலடி கொடுக்கும் முகமாக இ.க.க. (மாவோயிஸ்ட்) கொரில்லாக் குழுக்களும் எதிரிகள் என்று அடையாளம் காணும் நபர்களை அழித்தொழிப்பதில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

கர்நாடகாவில் இ.க.க. (மாவோயிஸ்ட்) கட்சியின் முக்கியத் தோழர்களில் இருவர்கள் ""என்கவுண்டர்'' என்ற பெயரில் போலீசால் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு எதிர்த்தாக்குதல் தொடுக்கும் முகமாக அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்து வந்த கொரில்லாக் குழு ஒரு போலீசு முகாமைத் தாக்கி ஏழு போலீசாரைக் கொன்றதோடு சில ஆயுதங்களையும் கைப்பற்றிக் கொண்டு சென்றுள்ளனர். ஆத்திரம் கொண்ட கர்நாடகா போலீசார் பேருந்துகளைக் கொளுத்தி வெறியாட்டம் போட்டுள்ளனர். வீரப்பனைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட கர்நாடகா அதிரடிப்படை நக்சலைட் வேட்டையில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.

 

சண்டை நிறுத்தமும் பேச்சுவார்த்தையும் இவ்வாறு முறிந்து போகும் என்பது இ.க.க. (மாவோயிஸ்ட்) கட்சிக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் மனித உரிமை மற்றும் ஜனநாயக அறிவுஜீவிகள் அதற்கான முயற்சிகளில் இறங்கியபோது இவர்களும் விருப்பமுடன் ஈடுபட்டனர். அதற்கான காரணங்கள் என்ன?

 

முக்கியமாக மூன்று காரணங்களுக்காக சண்டை நிறுத்தமும் பேச்சு வார்த்தைகளும் இ.க.க. (மாவோயிஸ்ட்) களுக்கு அவசியமாக இருக்கிறது. முதலாவதாக அக்கட்சி பின்பற்றிய அரசியலற்ற போர்க்குணமிக்க பொருளாதாரவாதமும் அலைந்து திரியும் கொரில்லாக் குழுக்களின் இடது சந்தர்ப்பவாதச் சாகசங்களும் காரணமாக இதன் ""புரட்சிகர வன்முறையும்'' அரசின் ""எதிர்ப்புரட்சிகர வன்முறையும்'' ஆந்திர மாநில மக்களிடையே எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டன; உடனடியாக சண்டை நிறுத்தம் அமைதி மற்றும் வளர்ச்சித் திட்டப் பாதை என்ற முழக்கம் மேலோங்கி விட்டது. இரண்டாவதாக தொடர்ச்சியாக சந்திரபாபு நாயுடு ஆட்சியின் கீழ் கட்டவிழ்த்து விடப்பட்ட ஒன்பதாண்டு பாசிச ஒடுக்குமுறை பெரும் பின்னடைவு இழப்பு தேக்கத்தை ஏற்படுத்திவிட்டது. மகாராஷ்டிரா சட்டிஸ்கர் ம.பி. ஒரிசா மற்றும் பீகார் என்று பிற மாநிலங்களுக்கு தனது இயக்கத்தை அக்கட்சி விரிவுபடுத்தியுள்ள போதிலும் வட தெலுங்கானாவில் அது மிக மோசமான பின்னடைவையும் இழப்பையும் சந்தித்தது. ஆந்திர மாநிலத்தின் பிற பகுதிகளில் அக்கட்சி தனித்தனி இலக்குகளைத் தாக்கும் அலைந்து திரியும் குழுக் களாகி விட்டன. மூன்றாவதாக சிறு பெரு நகரங்களில் மக்களின் ஆதரவைப் பெறத் தவறி தனிமைப் போய்விட்டது.

 

இ.க.க. (மாவோயிஸ்ட்) குழுவின் தலைமைப் பிரதிநிதி இதைப் பின்வருமாறு ஒப்புக் கொள்கிறார்.

 

""கேள்வி: அரசியல் ரீதியில் நீங்கள் பலமாக உள்ள பகுதிகளில் இருந்துகூட உங்கள் (ஆயுதக்) குழுக்கள் பின்வாங்குகின்றனவே?

 

பதில்: முடிவுகள் எடுப்பதில் தாமதமாக்கியதால் சில இழப்புகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எதிரியைத் திறமையாக நாங்கள் எதிர்கொள்ள முடியவில்லை; ஏனென்றால் எங்களை விட ஏற்கெனவே எதிரி முன்னேறியிருந்தான். சில பகுதிகளில் எங்களால் எதிரியைத் தடுத்து நிறுத்த முடிந்தது. மக்கள் கொரில்லாப் படையை நீண்டகாலமாக அமைக்காததால் நாங்கள் இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.'' (இந்து நாளேடு 17 அக். 2004)

 

இ.க.க. (மாவோயிஸ்ட்) பலமாக இருந்த கிராமப்புறங்களில் மட்டுமல்ல; நகரப்புறங்களில் நடுத்தர வர்க்கங்கள் மத்தியில் கூட அக்கட்சி பலவீனமடைந்துள்ளதாக தலைமை ஒப்புக் கொள்கிறது.

 

""கேள்வி: ஏறக்குறைய ஒரு பத்தாண்டுகளாக மாணவர்களையும் தொழிலாளர்களையும் புரட்சிகர இயக்கங்களால் ஈர்க்க முடியவில்லை. நகரங்களிலும் நகரப்புற மையங்களிலும் அது தனது செல்வாக்கை இழந்துள்ளது ஏன்? நீங்கள் தெரிந்தெடுத்துள்ள ஆயுதப் போராட்டப் பாதை காரணமாக மாணவர்கள் இயக்கத்தில் சேரத் தயங்குகிறார்களா?

 

பதில்: இது உண்மைதான். நகரங்கள் நகர்ப்புற மையங்களில் இயக்கத்தைப் பராமரித்து விரிவுபடுத்துவதில் நாங்கள் தோற்றுப்போயுள்ளோம். சிறு பெரு நகரங்கள் வழக்கமாகவே எதிரி (அரசு)யின் பலமான செல்வாக்கில் உள்ளன. ஒடுக்குமுறையின்போது இயக்கத்தைப் பராமரிப்பதற்கான தெளிவானதொரு யுத்ததந்திரத்தை வகுக்கத் தவ றிவிட்டோம். ஆமாம்! இது ஒரு பிரச்சினைதான்; இப்போது சிறு பெரு நகர்புறங்களில் பணிபுரிவதற்கான ஒரு ஆவணம் தயாரித்துள்ளோம். இப்போது அப்புதிய யுத்தத்தந்திரத்தை நாங்கள் நிச்சயம் அமலாக்குவோம்.'' (இந்து நாளேடு 17 அக். 2004)

 

தமது பின்னடைவுக்குக் காரணம் ஏதோ நடைமுறை நீதியிலான அணுகுமுறைப் பிரச்சினை என்றுதான் இ.க.க. (மாவோயிஸ்ட்) பார்க்கிறது. தனது அணிகளில் கணிசமானவர்கள் துரோகிகளாகி எதிரிகளின் கூலிக் கொலைக் குழுக்களில் சேர்வதற்குக் கூட கடந்த காலத்தில் ஆள்சேர்ப்பதில் நேர்ந்த கவனக்குறைவு கறாரற்ற அணுகுமுறைதான் காரணமென்று இ.க.க. (மாவோயிஸ்ட்) தலைமை கூறுகிறது. இனி கறாராக கவனமாக இருக்கப் போவதாகக் கூறுகிறது.

 

ஆனால் இ.க.க. (மாவோயிஸ்ட்) இன் குறைபாடுகள் என்பவை அதன் அரசியல் சித்தாந்தத் தவறுகளிலேயே இருக்கிறது. அரசியல் போராட்டங்கள் மூலமாக மக்களை அணிதிரட்டி ஆயுதப் போராட்டங்களுக்கு அடிப்படையை உருவாக்குவது என்பதற்குப் பதிலாக ஆயுதப் போராட்டங்கள் மூலமாகவே மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்றுத் தங்களை ஆதரிப்பார்கள் என்ற அதன் பார்வையிலேயே குறைபாடுகள் உள்ளன.

 

ஆயுதப் போராட்டம் மூலம் மாபெரும் சாதனைகளை ஈட்டிவிட்டதாகக் கூறிக் கொள்ளும் இ.க.க. (மாவோயிஸ்ட்) தலைமை ஆந்திர அரசாங்கத்திடமும் நடுத்தர வர்க்க அறிவு ஜீவிகளிடமும் அரசியல் ரீதியில் தோற்றுப் போய் விட்டதாக மறைமுகமாக ஒப்புக் கொள்கிறது. இந்தியப் புரட்சிகர சக்திகளுக்கு உண்மையில் இந்த நிலை வருத்தமளிக்கிறது.

 

""அக்கறை கொண்ட குடிமக்கள் கமிட்டி (சி.சி.சி.)யின் ஜனநாயக அறிவுஜீவிகளை அரசாங்கத்தால் தன் பக்கம் வெல்ல முடிந்துவிட்து. ராஜசேகர ரெட்டியின் அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்ததில் இருந்து சி.சி.சி.யை நம்பிக்கைக்குரியதாக எடுத்துக் கொண்டு அரசாங்கத்தின் கண்ணோட்டத்தை ஜனநாயகவாதியின் ஆறுதலளிக்கும் அனுசரணையோடு முன்வைக்கும்படி தள்ளிவிட்டது. அரசாங்கம் நேரடியாக முன்மொழிந்திருந்தால் பலரும் எதிர்த்திருக்கக் கூடிய சண்டை நிறுத்த நிபந்தனைகள் இதுவரை சமுதாயத்தில் ஓரளவு மதிப்பும் மரியாதையும் பெற்றுள்ள அறிவுஜீவிகளின் வாயிலிருந்து வெளிவந்ததனால் ஓரளவு நியாயமும் மரியாதை நம்பிக்கையையும் பெற்று விட்டன. நக்சல்பாரிகள் காடுகளோடு நின்று கொள்ள வேண்டும் அல்லது தங்கள் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக நிராயுதபாணிகளாக மட்டுமே கிராமங்களுக்கு வரவேண்டும்; அவர்கள் தமது அணிகளுக்கு ஆள் சேர்க்கக் கூடாது அல்லது வெடிபொருள் ஆயுத சக்தியைப் பெருக்கிக் கொள்ளக் கூடாது. அரசு அடக்குமுறை தளர்த்தப்பட்டுள்ளதைப் பயன்படுத்திக் கொண்டு எந்தவகையிலும் தம்மை அவர்கள் பலப்படுத்திக் கொள்ளக் கூடாது; அரசு அதிகாரிகளை அவர்கள் மக்கள் முன் நிறுத்துவதற்கு ஆணையிடவோ விசாரிக்கவோ கூடாது. சண்டை நிறுத்தத்தின்போது போலீசு எத்தனை உளவாளிகளை (துப்புத் தருபவர்களை) உருவாக்கிக் கொண்டாலும் அவர்களைக் கொல்வதை மட்டுமல்ல எந்த வகையிலும் தொல்லைப்படுத்தக் கூடாது. இந்த நிபந்தனைகளை உருவாக்கியவர்கள் போலீசு உயர் அதிகாரிகளான ஒரு அரவிந்தராவோ ஒரு பூர்ணசந்திரராவோ ஆக இருக்கலாம். ஆனால் சி.சி.சி.யின் ஜனநாயகவாதிகளுடைய ஒப்புதல் காரணமாக அவை ஓரளவு மரியாதைக்குரியவைகளாக ஆகின்றன. இந்த அறிவுஜீவிகள் காட்சிப்படுத்திய ஆர்வமிகு ஆதரவு புதிய அரசாங்கத்துக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்திருக்கிறது; அதன் நிபந்தனைகள் நியாயமானவை என்ற தோற்றத்தை அது இப்போது தரமுடிகிறது!'' (பீப்பிள்ஸ் மார்ச் செப். 2004)

 

ம.யு. குழுவின் 25 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்திற்கு பிறகு ஆந்திராவின் பரந்துபட்ட மக்கள் சமாதானத்தையும் தற்போதைய அரசியல் பொருளாதார சமூக அமைப்புக்குள்ளாகவே வளர்ச்சி முன்னேற்றத்தையும் கோருகிறார்கள். தங்களுக்குத் தேவையானதெல்லாம் ஜனநாயக வாய்ப்பு தான் என்று மக்கள் கூறுகிறார்கள். ம.யு. குழுவினர் நல்லவர்கள்தாம்; இருந்தாலும் அவர்களின் ஆயுதந்தாங்கிய நடவடிக்கைகளுக்குப் பிறகு வரும் போலீசு ஒடுக்குமுறை தாக்குதல்களைத் தாங்க முடியவில்லை; (ம.யு. குழுவின் ஆயுத நடவடிக்கைகள் உட்பட) எல்லா வன்முறைச் செயல்களும் நிறுத்தப்பட வேண்டும்; தங்களுக்குத் தேவையானது அமைதியான வாழ்வும் சில சீர்திருத்தங்கள் வளர்ச்சி திட்டங்களும்தாம் என்று கோருகிறார்கள்.

 

அரசியல் அணிதிரட்டலின்றி ஆயுதப் போராட்டத்தை உறுதியாகத் தொடர்ந்து நடத்துவதால் மட்டும் புரட்சியின் பக்கம் மக்கள் வந்துவிடுவார்கள் என்பது உண்மையல்ல; இந்த அரசியல் அமைப்பு இனியும் நீடிக்கக் கூடாது என்பதை மக்கள் தமது சொந்த அனுபவத்தின் மூலம் உணரவில்லை. இன்னமும் இந்த அரசியல் சமூகப் பொருளாதார அமைப்பு மீதான பிரமைகள் நீடிக்கின்றன; ஓட்டுக் கட்சிகள் மீதான வெறுப்பு ஒட்டு மொத்த அரசியல் அமைப்பு மீதான வெறுப்பு என்றும் மக்கள் ஆயுதப் போராட்டத்துக்குத் தயாராகி விட்டார்கள் என்றும் முடிவு செய்வதற்கு பேரணிகளுக்கு மக்கள் கூடுவதை ஆதாரமாக கருதமுடியாது என்பதையே ஆந்திர அனுபவங்கள் காட்டுகின்றன.


(முற்றும்)
— ஆசிரியர் குழு