Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் பயங்கரவாத மோடி : இந்திய நாட்டின் அவமானச் சின்னம்

பயங்கரவாத மோடி : இந்திய நாட்டின் அவமானச் சின்னம்

  • PDF

04_2005.jpg"மதச் சுதந்திர உரிமைகளை நேரடியாகவோ ஃ மறைமுகமாகவோ மீறும் எந்தவொரு அந்நிய நாட்டு அதிகாரிக்கும் விசாவினை (நுழைவுச் சீட்டு) மறுக்கலாம்'' என்ற அமெரிக்க சட்டத்தின்படி குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு வழங்கியிருந்த வர்த்தக ஃ சுற்றுலா விசாவினை அமெரிக்கா ரத்து செய்திருக்கிறது.

 

""மோடியின் அமெரிக்க பயணம் அரசுமுறை பயணம் அல்ல. அதனால் அவருக்கு அரசுமுறை விசாவும் வழங்க முடியாது' என மறுத்துவிட்டது அமெரிக்க அரசு.

 

குஜராத்தில் கொத்துக் கொத்தாக முசுலீம்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த பொழுது விசுவ இந்து பரிசத்தின் குஜராத் மாநிலத் தலைவர் கேசவ்ராம் காசிராம் சாஸ்திரி ""ஆம். நாங்கள் திட்டமிட்டுத்தான் கலவரம் நடத்தினோம்'' எனப் பகிரங்கமாகவே பேட்டி கொடுத்தார். இந்த இனப்படுகொலையின் தளபதி நரேந்திர மோடிதான் என்பதை கலவரத்துக்குப் பின் கோவாவில் நடந்த பா.ஜ.க.வின் உயர்மட்டக் கூட்டம் மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறது. இவை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நம் கண் முன் நடந்தவை.

 

இந்த சமீபத்திய வரலாற்று உண்மைகளை முசுலீம் பிணங்களோடு போட்டுப் புதைத்துவிட்டு ""எந்த நிரூபணமும் இல்லாமல் அரசியல் கட்சிகளும் மத்திய அரசும் அதன் அமைச்சர்களும் பத்திரிகை உலகமும் நரேந்திர மோடிக்கு குஜராத் கலவரங்களைப் பின் நின்று நடத்தி அந்தக் கொலைகளுக்குக் காரணமானவர் என்ற முத்திரையைக் குத்தி விட்டன... அமெரிக்காவிற்கு இந்த முத்திரை பயன்பட்டது.... அமெரிக்க நடவடிக்கை கண்டிக்கத் தகுந்தது'' எனப் பொய்யைக் கக்கி மோடிக்கு வக்காலத்து வாங்குகிறார் துக்ளக் ""சோ''.

 

ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பலோ இன்னும் ஒருபடி மேலே போய் மோடிக்கு விசா மறுக்கப்பட்டதை ""இந்திய அரசியல் சாசனத்திற்கும் இந்திய மக்களுக்கும் நேர்ந்துவிட்ட அவமானமாகவும்; இந்திய நாட்டிற்கு ஏற்பட்ட இழுக்காகவும்'' ஊதிப் பெருக்குகிறது.

 

பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் இராணுவ மந்திரியாக இருந்த ஜார்ஜ் பெர்ணான்டசு அமெரிக்க விமான நிலையம் ஒன்றில் ""சோதனை'' என்ற பெயரில் துகில் உரியப்பட்டார். ஒரு கிறித்தவ இந்திய அமைச்சருக்கு நேர்ந்த அவமானத்தை இந்திய அரசியல் சாசனத்திற்கு நேர்ந்த அவமானமாக பா.ஜ.க. அரசு கருதவில்லை. மாறாக ""அது அமெரிக்காவின் சட்டம்'' என்று சொல்லி அவமானத்தைச் சகித்துக் கொண்டார்கள்.

 

உலக வர்த்தக மையக் கட்டிடங்கள் தகர்க்கப்பட்ட பின் இந்தியா உள்ளிட்ட சில ஏழை ஆசிய கண்டத்து நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குச் செல்லும் அனைவரும் தங்களின் கைரேகைகளை அமெரிக்க அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. இரவு நேரத்தில் சந்தேகத்தில் பிடித்துக் கொள்ளும் நபர்களின் கைரேகைகளை போலீசார் பதிவு செய்து கொள்கிறார்களே அதற்கும் அமெரிக்காவின் சட்டத்திற்கும் பெரிய வேறுபாடு எதுவும் கிடையாது.

 

இந்திய நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் தீவிரவாதியாகச் சந்தேகிக்கும் இந்தச் சட்டத்தை பா.ஜ.க. அவமானமாகப் பார்க்கவில்லை. ஆனால் இந்துமத பயங்கரவாதி மோடிக்கு விசா மறுக்கப்பட்டதை அரசியல் சாசனத்தின் அவமானமாக ஒப்பிடுகிறது. அப்படியென்றால் மோடி என்ற கேடியைக் காப்பாற்றுவதுதான் அரசியல் சாசனத்தின் வேலையா?

 

இந்தக் கேள்விக்கு பா.ஜ.க. மட்டுமல்ல "மதச்சார்பற்ற காங்கிரசும் கூட ""ஆம்'' என்று தான் பதில் அளிக்கிறது. ""மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; குஜராத் மாநிலத்தின் முதல் மந்திரி; குஜராத் கலவரங்களுக்காக அவர் எந்தவொரு இந்திய நீதிமன்றத்தாலும் தண்டிக்கப்படவில்லை; எனவே அவருக்கு விசா மறுக்கப்பட்டதை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என இந்திய அரசின் சார்பாகவே அமெரிக்காவிடம் வேண்டுகிறார்கள்.

 

2இ000 முசுலீம்களைக் கொன்ற மோடி சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் என்பது இந்திய அரசியல் சாசனத்தின் ஓட்டாண்டித்தனத்தைத் தான் காட்டுகிறது.

 

""இந்து என்பது மதமல்ல; அது ஒரு வாழ்க்கை முறை'' என உச்சநீதி மன்றம் ஒரு தீர்ப்பில் சொல்லியிருக்கிறது. இதைத்தான் பா.ஜ.க. இந்துத்துவா என்கிறது.

 

ராமர் கோவில் கட்டுவதற்காகச் செதுக்கப்பட்ட தூண்களை பாபர் மசூதி வளாகத்தில் வைத்துப் பூசை செய்ய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் செய்தபொழுது உச்சநீதி மன்றம் அப்பூசையைத் தடை செய்யவில்லை. மாறாக வளாகத்திற்கு வெளியே பூசை நடத்திக் கொள்ளுங்கள் என்ற சந்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இப்படி பலவிதங்களில் ஆர்.எஸ்.எஸ்.க்கு அனுசரணையாக நடந்து கொள்ளும் நீதிமன்றங்கள் மோடியைத் தண்டிக்க வேண்டும் என்றால் சூரியன் மேற்கேதான் உதிக்க வேண்டும். மோடி தண்டிக்கப்படாமல் இருப்பதுதான் அவமானமேயொழிய அவருக்கு அமெரிக்கா விசா மறுக்கப்பட்டிருப்பது அவமானத்திற்குரியதல்ல! ···

 

""சவூதி அரேபியா ஈரானில் எல்லாம் மதவெறி ஆட்சி நடக்கிறது. பாகிஸ்தான் வங்காள தேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள். அந்நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு விசாவை மறுக்காத அமெரிக்கா மோடிக்கு மட்டும் மறுத்திருக்கிறது'' என அமெரிக்காவின் இரட்டை வேடத்தை பா.ஜ.க. அம்பலப்படுத்துகிறது.

 

அமெரிக்காவின் இந்த இரட்டைவேடத்தினால் பா.ஜ.க.வும்தான் பலன் அடைந்திருக்கிறது. கொசாவாவில் முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டதைச் சாக்காக வைத்து யுகோஸ்லாவியா நாட்டின் மீது அமெரிக்கா போரே தொடுத்தது. அதே அமெரிக்கா குஜராத்தில் முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது அதைக் கண்டித்து ஒரு அறிக்கைகூட விடவில்லை. இதற்குக் காரணம் குஜராத் கலவரம் நடந்தபொழுது ஆட்சியில் இருந்த வாஜ்பாயி அரசுக்கும் ஜார்ஜ் புஷ்ஷûக்கும் இடையே இருந்த நெருக்கம்தான்.

 

அமெரிக்காவில் உண்டியலைக் குலுக்கி வசூலிக்கப்பட்ட டாலர்கள் குஜராத் கலவரத்திற்குப் பயன்படுத்தப்பட்டன என்பதை பல்வேறு அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன. ஆனாலும் விசுவ இந்து பரிசத் அமெரிக்காவில் உண்டியல் குலுக்குவதை இன்று வரை புஷ் தடை செய்யவில்லை.

 

"சுதந்திரத்துக்கு' முன்னும் பின்னும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் நூற்றுக்கணக்கான மதவெறிக் கலவரங்களை நடத்தியிருக்கிறது. மதச் சுதந்திரத்துக்கே வேட்டு வைக்கும் மதமாற்றத் தடைச் சட்டம் இந்தியா முழுவதும் கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.இன் கொள்கை. இதன்படி பார்த்தால் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களைச் சேர்ந்த அனைவருக்குமே ""விசா'' மறுக்கப்பட வேண்டும். ஆனால் அமெரிக்காவோ மோடிக்கு மட்டும் விசாவை மறுத்துவிட்டு எங்களுக்கும் பா.ஜ.க.விற்கும் இடையே நல்ல உறவு இருப்பதாக அறிக்கை விடுகிறது.

 

இந்தியாவின் அத்வானி இசுரேலின் ஏரியல் ஷரோன் போன்ற மதவெறி பிடித்த அரசியல் தலைவர்களுக்குக் கூட ""விசா'' வழங்கி வரும் அமெரிக்கா கம்யூனிஸ்டுகள் இடது சாரி முற்போக்கு சிந்தனை கொண்டவர்களுக்கு ""விசா'' வழங்க மறுப்பதை அரசியல் தந்திரமாகவே கடைப்பிடித்து வருகிறது. அமெரிக்காவின் இந்த இரட்டை வேடத்தைப் பற்றி பா.ஜ.க. என்றைக்காவது வாயைத் திறந்ததுண்டா?

 

அமெரிக்காவின் நலன்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மதச் சர்வாதிகாரியாக இருந்தாலும் அவர்களுக்கு விசா வழங்க எந்தத் தடையும் இல்லை என அமெரிக்க சட்டமே கூறுகிறது. அதனால்தான் அத்வானி வாஜ்பாயி வகையறாக்களின் விசா ரத்து செய்யப்படவில்லை. மோடியின் விசா ரத்து செய்யப்பட்டிருப்பது ஒரு விதி விலக்கு. நமது நாட்டு நீதிமன்றங்கள் மனித உரிமைகளை மீறிய போலீசு அதிகாரிகளை அதிசயமாகத் தண்டிப்பது போல! ···

 

ஈராக் ஆக்கிரமிப்பு அபு கிரைப் சிறைச்சாலை சித்திரவதைகள் இவற்றைக் காட்டி மனித உரிமை பற்றிப் பேச அமெரிக்காவுக்குத் தகுதியில்லை என வாதாடுகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல். ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதைதான் இது.

இந்திய மக்களின் சட்டபூர்வ மனித உரிமைகள் அனைத்தையும் பறிப்பதற்காகவே ""பொடா'' என்ற கருப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தவர்கள் பா.ஜ. கட்சியினர். மனித உரிமைப் போராளிகள் இச்சட்டத்தை எதிர்த்த பொழுது அமெரிக்காவிலும் இது போன்ற சட்டம் பேட்ரியாட் சட்டம் கொண்டு வந்திருப்பதாகக் கூறி நியாயப்படுத்தினார்கள்.

 

இது மட்டுமின்றி ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுக்கத் திட்டம் போட்ட பொழுது தீவிரவாதத்துக்கு எதிரான போரில் தன்னை இளைய பங்காளியாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என பா.ஜ.க. கூட்டணி ஆட்சி மன்றாடியது.

 

அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்த பின் அமெரிக்காவின் தயவில் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு வியாபார ஒப்பந்தம் வாங்கித் தருவதற்காக ""அமெரிக்காவுக்கு உதவ ஈராக்கிற்கு இந்தியப் படைகளை அனுப்புவதாக'' புஷ்ஷிடம் வாக்குறுதி கொடுத்தார் அத்வானி. உள்நாட்டு எதிர்ப்பின் காரணமாக படைகளை அனுப்ப முடியாமல் போனதால் முன்னாள் இராணுவ வீரர்களைக் கூலிப் படைகளாக ஏற்றுமதி செய்ய பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அனுமதித்தது.

 

இப்படி அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு அடியாளாக வேலை செய்ய விருப்பம் கொண்ட இந்து மதவெறிக் கும்பல் ""மனித உரிமைகளை மீறிய அமெரிக்க அதிகாரிகளுக்கு இந்தியா விசாவை மறுத்தால் என்னவாகும்?'' எனச் சவால் விடுகிறது.

 

ஒருவேளை அப்படி நடந்து விடுகிறது எனக் கற்பனை செய்து கொள்வோம். பிறகு அந்நிய நிதி மூலதனத்தையும் தொழில்நுட்பத்தையும் பெறுவதற்கு இந்தியா எந்த நாட்டிடம் கையேந்தி நிற்க முடியும்?

 

1994இல் நடந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலின் பொழுது அமெரிக்க என்ரான் நிறுவனத்தை அரபிக் கடலில் தூக்கியெறிவோம் எனச் சவடால் அடித்தது பா.ஜ.க. ஆனால் அந்தத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தபின் என்ரானின் இரண்டாவது மின்திட்டத்திற்கும் சேர்த்தே அனுமதி கொடுத்தது.

 

வாஜ்பாயின் ஆட்சியில் அணுகுண்டு வெடித்த பொழுது அமெரிக்கா இந்தியா மீது அணு ஆராய்ச்சி சம்மந்தமான பொருளாதாரத் தடைகளை விதித்தது. அந்நியப் பொருட்கள் இறக்குமதிக்கு இந்தியாவில் உள்ள தடைகளை நீக்கி விடுகிறோம் என அமெரிக்காவோடு பேரம் நடத்திதான் பொருளாதாரத் தடையை நீக்கச் செய்தது வாஜ்பாயி அரசு. இதுதான் பா.ஜ.க.வின் கடந்தகால அமெரிக்க எதிர்ப்பு வீர வரலாறு!

 

மோடிக்கு விசா வழங்கப்பட்டதை எதிர்த்து அகமதாபாத் நகரில் நடந்த பேரணியில் ""நமது நாட்டின் சட்டம் இப்படி இருக்க வேண்டும்; நமது நாட்டின் பாடநூல்கள் இப்படி இருக்க வேண்டும் என அமெரிக்கா கட்டளையிடுவதா?'' என்று கொதிப்போடு பேசினாராம் மோடி. பா.ஜ.க. இந்தப் பேரணிக்கு ""சுயமரியாதை பேரணி'' எனப் பெயரிட்டிருந்தது.

 

அமெரிக்கா உத்திரவு போட்டு காப்புரிமைச் சட்டம் திருத்தப்பட்ட பொழுது; அமெரிக்கா உத்திரவு போட்டு தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டபொழுது பா.ஜ.க.வின் சுயமரியாதை எங்கே ஒளிந்து கொண்டிருந்தது?

 

""குஜராத்தில் நடந்த கலவரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். அதில் தலையிட்டுத் தீர்ப்புச் சொல்ல அமெரிக்காவிற்கு அதிகாரம் கிடையாது'' என பா.ஜ.க.வோடு சேர்ந்து கொண்டு காங்கிரசும் தர்க்க நியாயம் பேசுகிறது.

 

இந்திரா காந்தியின் அவசரநிலை காட்டாட்சியை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா தலையிட்டதை ஆர்.எஸ்.எஸ். கும்பல் வரவேற்றிருக்கிறது. கார்கில் போரை முடிவுக்குக் கொண்டுவர கிளிண்டனோடு இரகசியப் பேச்சு வார்த்தை நடத்தினார் வாஜ்பாயி. இவையெல்லாம் சர்வதேசப் பிரச்சினைகளா?

 

இந்த உள்நாட்டு அளவுகோலை ஈராக் நாட்டிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் பிரயோகித்தால் அமெரிக்கப் படைகளை அந்நாடுகளில் இருந்து வெளியேறச் சொல்ல வேண்டும். அந்த நாணயம் காங்கிரசு பா.ஜ.க. விடம் உண்டா?

 

அமெரிக்கா சதாமை சர்வாதிகாரி எனக் குற்றம் சாட்டியபொழுது ""அதை ஈராக் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்; அதில் அமெரிக்கா தலையிடக் கூடாது'' என மோடியோ அத்வானியோ எதிர்த்துப் பேசியதுண்டா? மாறாக ""சதாமை நீங்கள் தண்டிக்க விரும்பினால் ஐ.நா.வின் ஒப்புதலோடு தண்டியுங்கள்'' என்றுதான் அமெரிக்காவிடம் மன்றாடினார்கள்.

 

இன்றுள்ள உலகச் சூழலில் சில பிரச்சினைகளை உள்நாட்டு பிரச்சினைகள் என ஒதுக்கி விட முடியாது. தென்னப்பிரிக்காவில் நடந்த வெள்ளை இனவெறி அரசு கருப்பின மக்களுக்கு எதிராக நிறவெறிக் கொள்கையைக் கடைப்பிடித்த பொழுது அந்நாட்டை உலக நாடுகள் கண்டித்ததோடு அந்நாட்டோடு வர்த்தக அரசியல் உறவுகள் வைத்துக் கொள்ளாமல் புறக்கணித்தன. பாலஸ்தீன மக்களுக்குச் சொந்தமான பூமியை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ளும் நோக்கத்தோடு இசுரேல் கட்டிவரும் சுவரை இடித்துத் தள்ள வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. போஸ்னியாவிலும் கொசாவாவிலும் முசுலீம்களை இனப்படுகொலை செய்த யுகோஸ்லாவியாவின் முன்னாள் அதிபர் அந்தக் குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுகிறார்.

 

குஜராத்தில் நடந்த இனப்படுகொலை கூட சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டிய அளவிற்குக் கொடூரமானவைதான். இந்த இனப்படுகொலையின் தளபதியான மோடியை இந்தியச் சட்டங்கள் தண்டிக்க மறுக்கும் பொழுது அவனைத் தண்டிக்கக் கோரும் உரிமையை அமெரிக்க அரசிற்கு (அதனின் இரட்டை வேடம் காரணமாக) வேண்டுமானால் மறுக்கலாம். ஆனால் உலக மக்கள் அப்படிக் கோருவதைத் தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. இன்று போர் குற்றவாளி ஜார்ஜ் புஷ்ஷைத் தண்டிக்கக் கோரி போராடும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் நாளை மோடியையும் தண்டிக்கக் கோரி போராடினால் அதை நாம் இருகரம் கூப்பி வரவேற்கத்தான் வேண்டும்.

 

முத்து