Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் தனியார்மயமான பொதுத்துறை நிறுவனங்களின் அவலம்

தனியார்மயமான பொதுத்துறை நிறுவனங்களின் அவலம்

  • PDF

06_2005.jpg"பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் ஒப்படைத்தால், என்ன ஆகும்?'' எனப் படித்த மேதாவிகளிடம் கேட்டுப் பாருங்கள். ""அரசின் கையில் இருந்ததைவிட, அந்த நிறுவனங்கள் நல்ல இலாபத்தில் நடக்கத் தொடங்கிவிடும்; நிர்வாகம் ஒழுங்காக நடக்கும்'' என்ற ஒரே பதில்தான் நமது செவிட்டில் வந்து விழும்.

 

தனியார்துறை பற்றிய இந்த (மூட) நம்பிக்கை, கடவுள் நம்பிக்கைக்கு இணையாக நமது நாட்டில் பரவிக் கிடக்கிறது. இந்த நம்பிக்கையின்படி பார்த்தால், ஏற்கெனவே அரசுக்குச் சொந்தமாக இருந்து, தாராளமயத்தின் பின் தனியாரிடம் விற்கப்பட்டுவிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தற்பொழுது "ஓஹோ'வென்று இருக்க வேண்டும். ஆனால், தனியார்மயமாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் பற்றி வரும் செய்திகள், மேலே சொல்லப்பட்ட "நம்பிக்கையை'ப் பொய்யாக்கும் விதத்தில்தான் இருக்கின்றன.

 

உதாரணத்திற்கு இந்துஸ்தான் லீவர் நிறுவனத்திடம் விற்கப்பட்ட மாடர்ன் ஃபுட்ஸை எடுத்துக் கொள்வோம். தாராளமயத்தின் பின் முற்றிலுமாகத் தனியாரிடம் விற்கப்பட்ட பிரபலமான பொதுத்துறை நிறுவனம் மாடர்ன் ஃபுட்ஸ். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் இந்த விற்பனை நடந்தது. இப்பொழுது மாடர்ன் ஃபுட்ஸ் நிறுவனத்தை இந்துஸ்தான் லீவர் எப்பொழுது வேண்டுமானாலும் இழுத்து மூடிவிடலாம் என்ற சந்தேகத்தை முதலாளித்துவப் பத்திரிகைகளே எழுப்பியுள்ளன.

 

மாடர்ன் ஃபுட்ஸ் மிகவும் நொடித்துப் போய்விட்ட நிலையில் இந்துஸ்தான் லீவர் நிறுவனத்திற்கு விற்கப்படவில்லை. மாடர்ன் ஃபுட்ஸ் விற்கப்பட்ட பொழுது, ரொட்டி விற்பனையில், இந்திய அளவில் 40 சதவீதச் சந்தையை அந்நிறுவனம் தன் கையில் வைத்திருந்தது. அதனின் 199798 ஆம் ஆண்டு விற்பனை 167 கோடி ரூபாய். அந்த ஆண்டு அந்நிறுவனம் அடைந்த இலாபம் 9 கோடி ரூபாய்.

 

14 நவீன பேக்கரி தொழிற்சாலைகளையும்; ஏழு துணை நிறுவனங்களையும் மாடர்ன் ஃபுட்ஸ் நேரடியாக நடத்தி வந்தது. உற்பத்தியை அதிகரிப்பதற்காக மேலும் 17 தொழிற்சாலைகளைத் திறக்கவும் திட்டமிட்டிருந்தது. தில்லி, மும்பய், சென்னை, பெங்களூர், கொல்கத்தா உள்ளிட்டுப் பல்வேறு நகரங்களில், 4,50,000 சதுர மீட்டர் பரப்பு கொண்ட, விலை மதிப்பு மிக்க மனைகள் அந்நிறுவனத்திற்குச் சொந்தமாக இருந்தன. இந்த நிலத்தின் மதிப்பு மட்டும் ஏறத்தாழ 550 கோடி ரூபாய் என்றும்; அந்நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 2,100 கோடி ரூபாய் என்றும் மதிப்பிடப்பட்டிருந்தது.

 

பா.ஜ.க. கூட்டணி அரசோ, மாடர்ன் ஃபுட்ஸ் நட்டத்தில் இயங்குவதாகக் கூறி, அந்நிறுவனத்தை வெறும் 150 கோடி ரூபாய்க்கு இந்துஸ்தான் லீவருக்குத் தூக்கிக் கொடுத்தது. "நட்டத்தில்' இயங்கிய மாடர்ன் ஃபுட்ஸை, இந்துஸ்தான் லீவர் ஏமாளித்தனமாக வாங்கிப் போடவில்லை. 150 கோடி ரூபாய் மூலதனம் போட்டால், 2,100 கோடி ரூபாய் சொத்து சொந்தமாகும் என்று கணக்குப் போட்டது, லீவர் நிறுவனம்.

 

மாடர்ன் ஃபுட்ஸ் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டதை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்த்த பொழுது, தனியார்மயமாக்கல் துறையின் அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, ""ரொட்டி சுடுவது அரசாங்கத்தின் வேலையில்லை'' எனப் பதில் அளித்தார். இந்துஸ்தான் லீவர் நிறுவனமும் இப்பொழுது ரொட்டி சுடத் தயாராக இல்லை. மாறாக, மாடர்ன் ஃபுட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலங்களை விற்பதன் மூலம், தான் போட்ட மூலதனத்திற்கு மேல் பல நூறு கோடி ரூபாய்களைக் குறுக்கு வழியில் இலாபமாக அடையத் திட்டம் போடுகிறது.

 

மாடர்ன் ஃபுட்ஸ் அரசிடம் இருந்த பொழுது, ரொட்டி தயாரிப்பதற்காக 21 தொழிற்சாலைகள் இயங்கி வந்தன. மாடர்ன் ஃபுட்ஸை வாங்கிய இந்துஸ்தான் லீவர், கடந்த ஐந்தே ஆண்டுகளுக்குள் பெரும்பாலான தொழிற்சாலைகளை நட்டக் கணக்கு காட்டியே இழுத்து மூடி விட்டது. இந்த நட்டத்தை ஈடுகட்டுவதற்காக, மாடர்ன் ஃபுட்ஸ{க்குச் சொந்தமான நிலங்களை ஒன்றன் பின் ஒன்றாக விற்கவும் தொடங்கியிருக்கிறது. பெங்களூர் தொழிற்சாலை நிலத்தை 2.48 கோடி ரூபாய்க்கு விற்று ருசி கண்டுள்ள லீவர், தில்லி தொழிற்சாலை நிலத்தை 20 கோடி ரூபாய்க்கு விற்கத் திட்டமிட்டுள்ளது. இப்படி மாடர்ன் ஃபுட்ஸ் நிறுவனத்தை வைத்துக் கொண்டு ரியல் எஸ்டேட் வியாபாரத்தை நடத்தத் தொடங்கிவிட்ட லீவர், ரொட்டி தயாரிப்பதை காண்டிராக்டர்களிடம் ஒப்படைத்து விட்டது.

 

""மாடர்ன் ஃபுட்ஸைத் தொடர்ந்து நடத்தும் எண்ணமெல்லாம் லீவர் நிறுவனத்திற்குக் கிடையாது; எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் மாடர்ன் ஃபுட்ஸின் சொத்துக்களை விற்று விடுவதுதான் லீவரின் நோக்கம்'' என்ற உண்மையை மாடர்ன் ஃபுட்ஸ் தொழிலாளர் சங்கம், மாடர்ன் ஃபுட்ஸ் விற்கப்படுவதற்கு முன்பிருந்தே அம்பலப்படுத்தி வருகிறது. இதனாலேயே, கோவிந்த் யாதவ், வீ.கே. நாரங்க், கணேஷ் தாகூர் ஆகிய மூன்று தொழிற்சங்கத் தலைவர்கள், லீவர் நிறுவனத்தால் வேலையில் இருந்து நீக்கப்பட்டு, பழிவாங்கப்பட்டனர். பா.ஜ.க. கூட்டணி அரசோ, தொழிற்சங்கம் விடுத்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதோடு, லீவர் நிறுவனம் தொழிற்சங்கத் தலைவர்களைப் பழிவாங்குவதற்கும் துணை நின்றது.

 

மேலும், இந்த விற்பனையை எதிர்த்து நின்ற தொழிலாளர்களைச் சமாதானப்படுத்துவதற்காக, தனியார்மயமாக்கல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், ""பொதுத்துறை நிறுவனங்களை வாங்கும் தனியார் முதலாளிகள், அரசாங்கத்தின் அனுமதியில்லாமல், அப்பொதுத்துறை நிறுவனத்தின் சொத்துக்களை விற்பதைத் தடுக்கும் விதியினை விற்பனை ஒப்பந்தத்தில் போடலாம்'' என ஆலோசனை கூறி, இந்த விற்பனையைப் புனிதப்படுத்த முயன்றனர்.

 

ஆனால், பா.ஜ.க. கூட்டணி அரசாங்கேமா, மாடர்ன் ஃபுட்ஸ் சொத்துக்களை அபகரிக்கும் லீவர் நிறுவனத்தின் சுதந்திரத்தில் மயிரளவிற்குக் கூடத் தலையிடுவதற்கு மறுத்துவிட்டது. லீவர் நிறுவனம், மாடர்ன் ஃபுட்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை விற்கும் வேகத்தைப் பார்த்தாலே, இந்த அற்பமான விதியைக் கூடப் போடாமல் மாடர்ன் ஃபுட்ஸ் விற்கப்பட்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

 

உண்மை இப்படியிருக்க, பா.ஜ.க. கூட்டணி அரசில் நிதியமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங்கும், தனியார்மயமாக்கல் துறையின் அமைச்சராக இருந்த அருண் ஷோரியும், ""லீவர் நிறுவனம், ரொட்டி தயாரிக்கும் வியாபார நடவடிக்கைகளுக்கு மட்டுமே மாடர்ன் ஃபுட்ஸின் சொத்துக்களை பயன்படுத்த முடியும்; நிலங்களைத் தன்னிச்சையாக விற்க முடியாது; அப்படி விற்பனை நடந்தால், அது பற்றி அரசாங்கம் விசாரணை நடத்தும்'' என்றெல்லாம் நாடாளுமன்றத்திலேயே புளுகி, இம்மோசடி விற்பனையை நியாயப்படுத்தினார்கள்.

 

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, பா.ஜ.க.வைச் சேர்ந்த அருண் ஜெயிட்லி, ""மாடர்ன் ஃபுட்ஸ் தனியார்மயமாக்கப்பட்டு விட்டதால், இனி அந்நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெருகும்'' எனப் பூ சுற்றியதை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது.

 

மாடர்ன் ஃபுட்ஸ் லீவருக்கு விற்கப்படுவதற்கு முன்பாக, அந்நிறுவனத்தில் 2,037 தொழிலாளர்கள் நிரந்தரமாகப் பணியாற்றி வந்தனர். மாடர்ன் ஃபுட்ஸ், லீவரின் கைகளுக்குப் போன மூன்றே ஆண்டுகளுக்குள், 1,030 தொழிலாளர்கள் வேலையில் இருந்து தூக்கியெறியப்பட்டு விட்டனர். இப்பொழுது தில்லி கிளையை விற்க முடிவெடுத்துள்ள லீவர், அக்கிளையில் விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்தி வருவதால், நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 700 ஆகக் குறைந்து விட்டது என மாடர்ன் ஃபுட்ஸ் தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது. இப்படியே போனால், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ""மாடர்ன் பிரெட்'' என்பதே பழங்கதையாகி விடக் கூடும்.

 

தனியார்மயம் என்ற பெயரில் மாடர்ன் ஃபுட்ஸ் என்ற நிறுவனம் இருந்த சுவடே தெரியாமல் மொட்டையடிக்கப்படுவதை விதிவிலக்கான ஒன்றாகப் பார்க்க முடியாது. பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் தனியார்மயமாக்கல் துறையின் அமைச்சராக அருண் ஷோரி இருந்தபொழுது, ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான ஜு{ஹ சென்டார் ஐந்து நட்சத்திர விடுதியை தனியாரிடம் விற்பதென முடிவு செய்யப்பட்டது. இந்த விடுதியை 246 கோடி ரூபாய்க்குக் குறையாமல் விற்பதென முடிவெடுத்திருந்த மைய அரசு, பின்னர் விடுதியின் மதிப்பை 101 கோடி ரூபாய் எனத் தடாலடியாகக் குறைத்து விட்டது.

 

இந்த விடுதியை விற்பதற்காக அமைக்கப்பட்ட கமிட்டியில் உறுப்பினராக இருந்த அஜித் கெர்கருக்கே ஜு{ஹ சென்டார் விடுதி விற்கப்பட்டது. டான்சி நிலத்தை விற்பதென முடிவெடுத்த ஜெயாவே, அந்த நிலத்தை வாங்கியதைப் போல, இந்த விடுதி விற்பனையும் நடந்து முடிந்தது.

 

மும்பய் சர்வதேச விமான நிலையம் அருகே, ஆறு ஏக்கர் பரப்பளவில் 371 அறைகளுடன் அமைந்துள்ள இந்த விடுதி, வெறும் 153 கோடி ரூபாய்க்கு அஜித் கெர்கருக்கு விற்கப்பட்டது. இந்த மூலதனத்தைக் கூட அஜித் கெர்கர் தனது சொந்த பாக்கெட்டில் இருந்து எடுத்துப் போடவில்லை. அமைச்சர் அருண் ஷோரி, ""இந்த விடுதியை வாங்குவதற்கு அஜித் கெர்கருக்கு உடனே கடன் கொடுக்க வேண்டும்'' என பேங்க் ஆப் இந்தியா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆயுள் காப்பீட்டுக் கழகம், யூனிட் டிரஸ்ட் வங்கி ஆகிய பொதுத்துறை நிறுவனங்களுக்கு உத்தரவு போட்டு, தனது அமைச்சகத்தின் பொறுப்பிலேயே கடன் வாங்கிக் கொடுத்தார்.

 

இப்படிப்பட்ட அதிகார அத்துமீறல்கள், முறைகேடுகள் மூலமாகத்தான் ஜு{ஹ சென்டார் விடுதி தனியார்மயமாக்கப்பட்டது. இத்தனியார்மயத்தால் அவ்விடுதியில் வேலைபார்த்து வந்த 600 நிரந்தரத் தொழிலாளர்களின் வேலை பறிக்கப்பட்டு, அவர்களின் எதிர்கால வாழ்வு சிதைக்கப்பட்டு விட்டது. அதேசமயம், ஜு{ஹ சென்டாரின் புது முதலாளி அஜித் கெர்கரோ, இந்த விடுதியை 200 கோடி ரூபாய் இலாபத்தில் (350 கோடி ரூபாய்க்கு) பிரான்சு நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திடம் விற்றுவிட பேரம் நடத்திக் கொண்டிருக்கிறார். உமி கொண்டு வந்தவன் அவல் தின்ற கதைதான் இது.

 

""அஜித் கெர்கர் இந்த விடுதியை வேறு யாருக்காவது நல்ல விலைக்கு விற்று விடுவார் என்பது எங்களுக்கு முன்னரே தெரியும்'' என முன்னாள் அமைச்சர் அருண்ஷோரி இப்பொழுது பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்திருக்கிறார். மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் சொத்தை, முதலாளிகள் நோகாமல் ஏப்பம் விடுவதற்கு அரசாங்கம் தரகனாகச் செயல்படுகிறது என்பதற்கு அருண்ஷோரியின் வாக்குமூலமே சாட்சி.

 

அரசாங்கத்தின் சொத்தைச் சுருட்டிக் கொண்டால், முன்பு அதற்குப் பெயர் ஊழல்; இப்பொழுது அதற்குப் பெயர் தனியார்மயம். சந்தேகமிருந்தால், அரபிக் கடலில் உள்ள பன்னா, முக்தா என்ற (20,000 கோடி ரூபாய் பெறுமான) இரு எண்ணெய் வயல்களை, வெறும் 12 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ்என்ரான் கூட்டணிக்குத் தூக்கிக் கொடுத்ததற்கு எதிராக நடந்த வழக்கில், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பைப் படித்துக் கொள்ளுங்கள்!


· ரஹீம்