Tue04162024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் இராஜஸ்தான்: குடிக்கத் தண்ணீர் கேட்டால் ஒடுக்கி உயிரைப் பறிக்கிறார்கள்

இராஜஸ்தான்: குடிக்கத் தண்ணீர் கேட்டால் ஒடுக்கி உயிரைப் பறிக்கிறார்கள்

  • PDF

07_2005.jpgபா.ஜ.க. அரசின் கொலை வெறியாட்டம் தவிச்ச வாய்க்கு தண்ணீர் கேட்டுப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, ஒரு கர்ப்பிணிப் பெண் உள்ளிட்டு 5 பேரைக் கொன்று வெறியாட்டம் போட்டுள்ளது, பா.ஜ.க.வின் இராஜஸ்தான் மாநில அரசு. பா.ஜ.க.வின் 18 மாத கால ஆட்சியில், இது இரண்டாவது முறையாக விவசாயிகள் மீது நடத்தப்பட்டுள்ள துப்பாக்கிச் சூடு. ஏற்கெனவே, கடந்த ஆண்டு அக்டோபரில் இதேபோல தண்ணீருக்காகப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, 5 பேரைக் கொன்றொழித்தது, கொலைகார பா.ஜ.க. அரசு.

 

இராஜஸ்தானின் பில்வாரா, டோங்க், சிறீகங்கா நகர் முதலான மாவட்டங்கள் புளோரைடு பாதிக்கப்பட்ட பகுதிகளாகும். இதனால் நிலத்தடி நீரை மனிதர்கள் மட்டுமல்ல் ஆடுமாடுகள் கூடக் குடிக்க முடியாது. வறண்டு கிடக்கும் இப்பகுதிகளில் புளோரைடு நஞ்சேறிய நிலத்தடி நீர்கூடக் கிடைப்பது அரிது. இந்திரா காந்தி கால்வாய் திட்டம் மூலம் பிலாஸ்பூர் அணையிலிருந்து பனார் கால்வாய் வழியே கிடைக்கும் நீரைத்தான் இப்பகுதிவாழ் மக்கள் குடிநீருக்கும் விவசாயத்துக்கும் நம்பியுள்ளனர். ஆனால், அணையில் போதிய அளவுக்குத் தண்ணீர் இல்லையென்று பனார் கால்வாய்க்குப் பல ஆண்டுகளாகத் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

 

விவசாயம் செய்ய முடியாமல் போனதோடு, குடிக்கக்கூடத் தண்ணீரில்லாமல் பரிதவிக்கும் டோங்க் மாவட்ட விவசாயிகள், ஆட்சியாளர்களிடம் பலமுறை மனு கொடுத்து மன்றாடினர். ஆனாலும், பல ஆண்டுகளாக அவர்களுக்குச் சொட்டுத் தண்ணீர் கூடக் கிடைக்கவில்லை. குமுறிக் கொண்டிருந்த விவசாயிகள், ஜெய்ப்பூர் டோங்க் நெடுஞ்சாலையில், சோகெலா எனும் சந்தை நகரில் கடந்த ஜூன் 19ஆம் நாளன்று சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினர். போராடிய விவசாயிகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்திய போலீசு, துப்பாக்கிச் சூடு நடத்தி 5 பேரைக் கொன்று, 20 பேரைப் படுகாயப்படுத்தி வெறியாட்டம் போட்டுள்ளது.

 

பில்வாரா, டோங்க், சிறீகங்கா நகர் மாவட்ட விவசாயிகளுக்கு விவசாயத்துக்கும் குடிநீருக்கும் பிலாஸ்பூர் அணையிலிருந்து தண்ணீர் தருவதாக வாக்களித்து ஓட்டுப் பொறுக்கிய இந்துவெறியர்கள், பதவியைப் பிடித்ததும் தமது வாக்குறுதியைப் பார்ப்பன தர்மப்படி கைகழுவி விட்டனர். ஏற்கெனவே கடந்த அக்டோபரில் சிறீகங்காநகர் மாவட்ட விவசாயிகள் குடிநீர் கேட்டுப் போராடிய போது போலீசை ஏவி துப்பாக்கிச் சூடு நடத்தி வெறியாட்டம் போட்டனர். விவசாயிகளின் உயிர் குடிக்கும் இரத்தக் காட்டேரியான முதல்வர் வசுந்தரா ராஜி சிந்தியாவைத்தான், இந்துவெறி பாசிசப் பரிவாரங்கள் ராஜமாதா என்றும், இராஜஸ்தானின் ராஜவம்சத்து பெண்சிங்கம் என்றும் வெட்கமின்றித் துதிபாடுகின்றன.

 

பிலாஸ்பூர் அணை மூலம் கடந்த இருபதாண்டுகளாகப் பாசன நீரும் குடிநீரும் பெற்றுவந்த இம்மக்கள், கடந்த ஐந்தாண்டுகளாக நீரின்றிப் பரிதவிக்கிறார்கள். பிலாஸ்பூர் அணையிலிருந்தும் ஆற்றுப்படுகை பகுதிகளிலிருந்தும் ஆழ்குழாய்கள் மூலம் வரைமுறையின்றி நிலத்தடிநீர் உறிஞ்சப்படுவதால், அணையில் நீர்மட்டம் குறைந்துவிட்டது; மேலும், ஆழ்குழாய் மூலம் உறிஞ்சப்படும் தண்ணீர் ஜெய்ப்பூர், அஜ்மீர் முதலான பெரு நகரங்களுக்கே பெரிதும் கொண்டு செல்லப்படுகிறது. அங்கும் கூட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கான ஐந்து நட்சத்திர விடுதிகள், நீச்சல் குளம், வாட்டர் போலோ எனும் நீர்ப்பந்து விளையாட்டுக் குளம் போன்றவற்றுக்கே பெரிதும் செலவிடப்படுகின்றன. ஆனால், விவசாயிகளோ குடிக்கக் கூடத் தண்ணீர் இல்லாமல் தத்தளிக்கிறார்கள். சுற்றுலாத்துறை மூலம் அன்னியச் செலாவணியை ஈட்டுவதற்காக எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் விவசாயிகளையே வதைக்கின்றன.

 

டோங்க் மாவட்டத்தில் போராடிய விவசாயிகள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட செய்தியறிந்து காங்கிரசு தலைவி சோனியா ஓடோடி வந்து, கொல்லப்பட்டோர் குடும்பத்தாருக்கு நிவாரணத் தொகையளித்து முதலைக் கண்ணீர் வடித்துள்ளார். இதற்கு முன்பு காங்கிரசு ஆட்சியின்போது, இதேபோல விவசாயிகள் தண்ணீருக்காகப் போராடிய போது மிருகத்தனமாக ஒடுக்கப்பட்டனர். அப்போது இந்துவெறியர்கள் ஓடோடி வந்து ஒப்பாரி வைத்தனர். இப்போது பா.ஜ.க. ஆட்சிக்கு வந்துவிட்டது. எனவே, சுழற்சி முறையில் எதிர்க்கட்சியான காங்கிரசின் தலைவியும் விவசாயிகளுக்காக ஒப்பாரி வைக்கிறார்.

 

இராஜஸ்தான் விவசாயிகளோ குடிக்கக் கூட தண்ணீரின்றித் தத்தளிக்கிறார்கள். அவர்களது விவசாயமும் எதிர்கால வாழ்வும் கேள்விக்குறியாகி விட்டது. தாங்கள் குளித்த ஒரு குடம் தண்ணீரை நாணல் கயிற்று வலையில் வடிகட்டி அக்கழிவுநீரை மறுசுழற்சி செய்து, மீண்டும் குளிக்கவும் துணி துவைக்கவும் பயன்படுத்துகிறார்கள். தண்ணீரின்றித் தத்தளிக்கும் ராஜஸ்தான் மக்களுக்காக நீர்ப்பாசன வசதிக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை அதிகரிக்க முன்வராத ஓட்டுக் கட்சி அரசுகள், போலீசுத்துறையை விரிவுபடுத்தி நவீனப்படுத்த ஆண்டுதோறும் கோடிகோடியாய் வாரியிறைக்கின்றன.

 

ஓட்டுக் கட்சிகளின் துரோகத்தை ராஜஸ்தான் விவசாயிகள் இனியும் நம்பி ஏமாறத் தயாராக இல்லை. ஓட்டுக் கட்சிகளைப் புறக்கணித்துவிட்டு, தன்னெழுச்சியாகத் திரண்டு தண்ணீருக்காகப் போராடத் தொடங்கி விட்டார்கள். அவர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரித்து முன்னெடுத்துச் செல்ல வேண்டியது நாடெங்குமுள்ள விவசாயிகளின் கடமை; நம் கடமை.

 

சூரியன்