Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் ஏற்றுமதி கொள்கைக்காக திருப்பூர் முதலாளிகளின் பயங்கரவாதம்

ஏற்றுமதி கொள்கைக்காக திருப்பூர் முதலாளிகளின் பயங்கரவாதம்

  • PDF

07_2005.jpg திருப்பூர் என்றதும் நமக்கெல்லாம் சட்டென்று நினைவுக்கு வருவது, அங்கு நடைபெறும் பனியன் ஏற்றுமதித் தொழில்தான். ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 15 கோடி ரூபாயாக இருந்த திருப்பூர் நகரின் பனியன் ஏற்றுமதி, 2004இல் 6,000 கோடி ரூபாயாக, பிரம்மாண்ட வளர்ச்சி அடைந்திருக்கிறது. இந்திய அரசிற்கு அந்நியச் செலாவணி ஈட்டித் தருவதாகவும்; திருப்பூரைச் சேர்ந்த 4,500 முதலாளிகளுக்குப் பொன் முட்டை இடும் வாத்தாகவும் பனியன் ஏற்றுமதித் தொழில் அமைந்திருக்கிறது. அகில உலகமுமே அறிந்திருக்கும் திருப்பூர் நகரின் இந்த பிரம்மாண்டமான வளர்ச்சி, ஏறத்தாழ 50,000 விவசாயிகளின் வாழ்க்கையை உருத்தெரியாமல் அழித்து வருவது உங்களுக்குத் தெரியுமா?

 

திருப்பூரில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் ஒரத்துப்பாளையம் கிராமத்திற்குச் சென்று பாருங்கள். திருப்பூரின் தொழில் வளர்ச்சி, அந்தக் கிராமத்தைப் புல், பூண்டுகூட முளைக்க இலாயக்கற்ற பாலைவனமாக மாற்றியிருப்பதைத் தெரிந்து கொள்ள முடியும். அங்கிருந்து, நொய்யல் ஆறு கரூர் நகருக்கு அருகே காவிரியில் கலக்கும் நெய்க்குப்பம் வரை, நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ள கிராமங்களைச் சென்று பாருங்கள். திருப்பூரின் தொழில் வளர்ச்சி, விவசாயத்திற்கு எதிரியாக மாறிப் போயிருப்பதை நேரடியாகப் பார்க்க முடியும்.

 

மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு, கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களின் வழியாக ஓடி, கரூருக்கு அருகே காவிரியில் கலக்கிறது. பெருந்துறை, காங்கயம், கரூர் பகுதிகளைச் சேர்ந்த 10,875 ஏக்கர் விளைநிலங்களுக்குப் பாசன வசதி அளிக்கும் நோக்கத்தோடு, ஒரத்துப்பாளையத்தில் நொய்யல் ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டு, 1992ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

 

வெள்ளைக்காரன் ஆண்ட காலத்திலேயே நொய்யல் ஆற்றின் குறுக்கே பெரிய அணை கட்ட வேண்டும் எனக் கோரிக்கை வைத்த இப்பகுதி விவசாயிகள், இப்பொழுது, 1992இல் திறக்கப்பட்ட இந்த அணையைக் குண்டு வைத்துத் தகர்த்துவிட வேண்டும் எனக் குமுறுகிறார்கள். ஏனென்றால், இந்த ஒரத்துப்பாளையம் அணை, பாசனத்திற்காக நொய்யல் நதி நீரைத் தேக்கி வைக்கப் பயன்படவில்லை. மாறாக, திருப்பூர் பின்னலாடை தொழிலைச் சேர்ந்த சாயப் பட்டறைகளில் இருந்து நொய்யல் ஆற்றில் விடப்படும் கழிவு நீரைத் தேக்கி வைக்கும் அணையாக மாறிவிட்டது.

 

திருப்பூர் பனியன் ஏற்றுமதித் தொழில் சூடு பிடிக்கத் தொடங்கிய 198586இல் 99 ஆக இருந்த சாயப் பட்டறைகளின் எண்ணிக்கை, தாராளமயம் நடைமுறைக்கு வந்த 199192இல் 551 ஆக உயர்ந்து, 2004இல் 800ஐத் தொட்டு விட்டது. சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய அபாயகரமான தொழிற்சாலைகள் ஆற்றின் கரையில் இருந்து 3 கி.மீ. தள்ளி இருக்க வேண்டும் என்கிறது சட்டம். ஆனால், இந்தச் சட்டத்தை சாயப் பட்டறை அதிபர்கள் மயிரளவுக்குக் கூட மதிக்கவில்லை; அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. இந்த சாயப் பட்டறைகள் அனைத்தும் நொய்யல் மற்றும் அதன் துணை ஆறுகளின் கரையோரமாகத்தான் அமைந்திருக்கின்றன.

 

இந்தச் சாயப்பட்டறைகள் அனைத்திலும் ஐரோப்பாவில் தடை செய்யப்பட்டுள்ள புரோசியான் என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திதான் துணிகளில் சாயம் ஏற்றப்படுகிறது. தினந்தோறும் இந்தச் சாயப் பட்டறைகளில் இருந்து வெளியேறும் 10 கோடி லிட்டர் கழிவு நீர் சுத்தம் செய்யப்படாமல் நொய்யலிலும், அதன் துணை ஆறுகளிலும் தான் திறந்து விடப்படுகிறது.

 

இதன் விளைவாக, முன்னொரு காலத்தில் காஞ்சி மாநதி என்று அழைக்கப்பட்ட நொய்யல், சிறுவாணிக்கு இணையான நதியாக இருந்த நொய்யல், இன்று கழிவுநீர் குட்டையாக, விஷ ஆறாக மாற்றப்பட்டு விட்டது. 40 அடி உயரம் கொண்ட ஒரத்துப்பாளையம் அணையில், இன்று 39 அடி உயரம் அளவிற்கு திருப்பூர் சாயப்பட்டறை கழிவுநீர்தான் தேங்கி நிற்கிறது.

 

ஒரத்துப்பாளையம் அணை கட்டப்படுவதற்கு முன்பாக, நொய்யல் ஆற்றுப் பகுதி கடலை, பருத்தி, வாழை, மஞ்சள், கரும்பு, சோளம், நெல் எனப் பலவிதமான பயிர்கள் விளையும் பூமியாக இருந்து வந்தது. ஆனால், இப்போது தென்னை மரத்தைத் தவிர எதுவும் வருவது இல்லை. ""தென்னை மரமும் காய் குறைவாக காய்க்கிறது. எல்லாம் குரும்பையாக உதிர்ந்து விடுகிறது. தேங்காய் தண்ணீர் உப்பாக இருப்பதால், இளநீரைக் குடிக்க முடியாது'' என்கிறார் செம்மண் குழிபாளையத்தைச் சேர்ந்த ஜெகந்நாதன் என்ற விவசாயி.

 

""அணைக்கட்டுப் பகுதியில் இருந்து வீசும் காற்றும், மண்ணும் இரும்பைக் கூட அரித்துத் தின்று விடும் விஷத் தன்மை கொண்டது'' எனக் கூறும் ஜெகந்நாதன், இதற்கு ஆதாரமாகத் தனது மிதிவண்டியைக் காட்டுகிறார். மூன்று மாதத்திற்கு முன்பு மாட்டப்பட்ட சைக்கிள் ரிம்மும், மட்கார்டும் இப்பொழுது செல்லரித்துப் போய் காயலாங்கடைக்குப் போடவேண்டிய நிலையில் இருக்கிறது. இரும்பையே அரித்துத் தின்று விடும் அணையின் விஷக் காற்றுக்கு மனிதத் தோல் எம்மாத்திரம்?

 

நொய்யல் ஆற்றில் காங்கேயம் அருகே கட்டப்பட்டுள்ள சின்ன முத்தூர் தடுப்பணையின் காவலாளியாகப் பணிபுரிந்து வரும் மணியின் மகள் செல்வப்பிரியா. தற்பொழுது 14 வயதான இந்தச் சிறுமி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, தடுப்பணையில் தேங்கி நின்ற சாயப்பட்டறைக் கழிவு நீரில் குளித்துவிட, மறுநாளே அந்தச் சிறுமியின் உடம்பில் சிறிய வேர்க்குரு மாதிரி வந்து, அது நீர்க் கோர்த்து, உடைந்து புண்ணாகி விட்டது. மீண்டும் அதே இடத்தில் வேர்க்குரு மாதிரி புறப்பட்டு புண்ணாகி விடுகிறது. ஜெகந்நாதனின் சைக்கிள் ரிம் பொத்தல் பொத்தலாக இருப்பதைப் போல, அச்சிறுமியின் பச்சை உடம்பு புண்ணால் புரையோடிப் போயிருக்கிறது.

 

வெறும் 1,500 ரூபாய் சம்பளம் வாங்கும் இந்தத் தொழிலாளி, தனது மகளின் வைத்தியத்திற்காக கடந்த ஆறு வருடங்களில் ஒரு இலட்ச ரூபாய் செலவு செய்து விட்டார். ""ஆடு, மாடு எல்லாவற்றையும் வித்தும் என் புள்ளைக்கு உடம்பு சரியாகவில்லை; 23 ஆயிரம் ரூபாய் கடன் ஏற்பட்டதுதான் மிச்சம், எங்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்'' எனக் கண் கலங்குகிறார், அவர்.

 

திருப்பூர் சாயப் பட்டறை கழிவு பாயும் நொய்யல் ஆற்றுப் பகுதியில் வாழும் கர்ப்பிணி பெண்கள், 4 ஆவது மாதத்திற்கு பிறகு அங்கு குடியிருப்பதே இல்லை. ஊரில் கிடைக்கும் கிணற்றுத் தண்ணீரை, குளிப்பதற்குக் கூட கர்ப்பிணிப் பெண்கள் பயன்படுத்துவதில்லை. ""இந்த நச்சுக் கழிவால், காற்று, நீர், நிலம் எல்லாம் மாசுபட்டு போனதால், பெண்களுக்குக் கர்ப்பப்பை புற்று நோய் வந்து விடுகிறது'' என்கிறார், ஜெகந்நாதன்.

 

திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவிகள், 2004ஆம் ஆண்டு நடந்த தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்காக, இந்த நச்சுக் கழிவு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் பற்றி நடத்திய விரிவான ஆய்வில் சாயப் பட்டறை கழிவால், ஒரத்துப்பாளையம் அணையை ஒட்டி வாழும் கிராம மக்களுக்கு, ""தேமல், சொறி, சிரங்கு, மூளைக் காய்ச்சல், சிறுநீரகப் பாதிப்பு, புற்று நோய், கண் எரிச்சல், மஞ்சள் காமாலை, பேச்சு தடுமாறுதல், கருச்சிதைவு'' உள்ளிட்டு பல நோய்கள் வந்திருப்பதைச் சான்றுகளுடன் குறிப்பிட்டுள்ளனர்.

 

""கறவை வற்றிப் போதல், கன்றுகள் இறந்து பிறப்பது, மலட்டுத் தன்மை, வயிற்றுப் போக்கு, அம்மை நோய், முடி உதிர்தல்'' எனப் பலவகையான நோய்கள் கால்நடைகளைத் தாக்குவதையும் இப்பள்ளி மாணவிகள் நடத்திய ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.

 

நொய்யல் ஆறு மாசுபட்டு விட்டதால், ஒரத்துப்பாளையம் அணை பாசனத்தை நம்பியிருந்த விவசாயிகளுள் 53 சதவீதம் பேர், விவசாயத்திற்கு தலை முழுகிவிட்டு நெசவு, ஆடு மாடு மேய்த்தல், மீன் பிடித்தல் போன்ற வேறு தொழில்களுக்கு மாறிச் சென்று விட்டனர். ஒரத்துப்பாளையம் அணையில் சாயப் பட்டறை கழிவு பல ஆண்டுகளாகத் தேங்கி நிற்பதால், ஏறத்தாழ 300 கிராமங்களின் நிலத்தடி நீர் மாசுபட்டு போய், இக்கிராம மக்கள் குடிதண்ணீருக்குக் கூட அலைய வேண்டிய நிலையில் தள்ளப்பட்டு விட்டனர்.

 

நொய்யல் ஆற்றுப் பகுதியில் கிடைக்கும் நிலத்தடி நீர் தொழிற்சாலைகளுக்குக் கூடப் பயன்படுத்த முடியாதபடி கெட்டுப் போய்விட்டது. இதனால் திருப்பூர் சாயப் பட்டறைகள், 30 கி.மீ. சுற்றளவில் அமைந்திருக்கும் கிராமங்களில் இருந்து தண்ணீர் எடுத்து வருகின்றன. சாயப் பட்டறைகளால் நிலத்தடி நீர் ஒட்டச் சுரண்டப்படுவதால், அவினாசி, பல்லடம், பொங்கலூர், சோமனூர் பகுதிகளில் நிலத்தடி நீர் 1200 அடிக்கும் கீழே போய் விட்டது. பல கிராமங்களில் அன்றாடத் தேவைக்குக் கூடத் தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே, கிராம மக்கள் தண்ணீர் லாரியைச் சிறை பிடிப்பது, சாலை மறியல் செய்வது எனப் போராடி தண்ணீர் பெற வேண்டிய இக்கட்டில் வாழ்கின்றனர்.

 

சாயப் பட்டறைகளில் தேங்கும் திடக் கழிவுகள், எவ்விதப் பாதுகாப்புமின்றி திறந்த வெளியில் கொட்டப்பட்டுள்ளதால், இக்கழிவில் இருந்து வெளியேறும் நச்சுக் காற்றினால், ஆஸ்துமா, சைனஸ், சளித் தொல்லைகள் போன்ற நுரையீரல் நோய்கள் சுற்றுவட்டார மக்களைத் தாக்கி வருகின்றன.

 

மொத்தமாகச் சுருக்கிச் சொன்னால், நொய்யல் ஆற்றில் விடப்படும் சாயப்பட்டறைக் கழிவால் கரூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 424 கிராமங்களில் உள்ள 77,000 ஏக்கர் சாகுபடி நிலம் பாழ்பட்டுப் போய்விட்டது; 4,925 விவசாயக் கிணறுகள், பாசனத்திற்குக் கூடப் பயன்படுத்த முடியாதபடி மாசுபட்டுப் போய்விட்டன் 6,150 விவசாய பம்பு செட்டுகள் துருப்பிடித்துப் போய்விட்டன. 72,850 தென்னை மரங்கள் காய்ந்து சருகாகி விட்டன. 16,240 மாடுகளும், 48,725 ஆடுகளும் பல்வேறு நோய்களால் தாக்கப்பட்டுள்ளன. இதனால், ஏறத்தாழ 50,000 கிராம மக்கள் ஃ விவசாயிகள் நடைப்பிணம் போல வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

 

கடந்த 13 ஆண்டுகளில், ஒரத்துப் பாளையம் அணை ஒரேயொரு முறைதான் பாசனத்திற்காகத் திறந்து விடப்பட்டது. மீதி ஆண்டுகளில், அணையைத் திறந்தால், சாயப்பட்டறைக் கழிவுதான் பாசன வாய்க்காலில் ஓடி வரும். குறிப்பாக, பருவமழைக் காலங்களில், காவிரியில் தண்ணீர் ஓடும் பொழுது, இந்த விஷக் கழிவைத் திறந்துவிட்டு, கரூருக்குக் கீழேயுள்ள காவிரி பாசனப் பகுதிகளையும் நஞ்சாக்கி வருகிறது, அதிகார வர்க்கம்.

 

1997ஆம் ஆண்டு, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இந்த விஷக் கழிவு திறந்துவிடப்பட்டதால், காவிரி தண்ணீரைக் குடித்த கிராம மக்கள் வாந்தியெடுத்து மயங்கி விழுந்தனர்; ஆடு, மாடுகள் செத்து மடிந்தன் கரூரில் உள்ள அரசு காகிதத் தொழிற்சாலையின் இயந்திரங்கள் பழுதாகி, 10 கோடி ரூபாய் நட்டமேற்பட்டது.

 

இந்நிலையில் நொய்யல் ஆறு ஆயக்கட்டுதாரர் சங்கம், ""சாயப் பட்டறைக் கழிவை நொய்யல் ஆற்றில் திறந்து விடப்படுவதைத் தடை செய்யக் கோரி'', 1998ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு விவசாயிகளுக்குச் சாதகமாக இருந்தாலும், சாயப் பட்டறை முதலாளிகள் கழிவு நீரை நொய்யல் ஆற்றில் திறந்து விடுவதை, கடந்த ஏழு ஆண்டுகளில் ஒருநாள் கூட நிறுத்தவேயில்லை. மாசு கட்டுப்பாடு அதிகாரிகள், பொதுப் பணித்துறை அதிகாரிகள் மட்டுமல்ல, மாண்புமிகு நீதிபதிகள் கூட, சாயப் பட்டறை முதலாளிகள் நீதிமன்ற உத்தரவை மீறி நடப்பதைக் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை தான் பார்த்தனர்.

 

""ஒரத்துப்பாளையம் அணையில் தேங்கியிருக்கும் விஷக் கழிவைச் சுத்தப்படுத்த, சாயப் பட்டறை முதலாளிகள் 12 கோடி ரூபாய் தர வேண்டும்'' என சென்னை உயர்நீதி மன்றம் 14.7.04 அன்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு போட்டு ஒரு வருடம் முடியப் போகிறது. ஆனாலும் சாயப் பட்டறை முதலாளிகளிடமிருந்து, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஒரு சல்லிக் காசைக் கூட அதிகாரிகளால் வாங்க முடியவில்லை. சாயப்பட்டறை முதலாளிகள் நீதிமன்ற உத்தரவுகளைப் பகிரங்கமாக மீறுகிறார்கள். ஆனால், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குக் கூடப் பாயவில்லை.

 

ஒரத்துப்பாளையம் அணையில் தற்பொழுது 39 அடி உயரத்திற்கு கழிவு நீர் தேங்கி நிற்பதால், அணையே உடைந்து விடும் அபாயத்தில் இருக்கிறது. இதனால் நொய்யல் ஒரத்துப்பாளையம் பாசன விவசாயிகள் சங்கம், ""கழிவு நீரை உடனே திறந்து விட வேண்டும்; 1998ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்'' எனக் கோரி மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். அதேசமயம், அணைக்குக் கிழக்கே உள்ள விவசாயிகளோ, ""கழிவு நீரைத் திறந்துவிடக் கூடாது'' எனக் கோரி எதிர்மனு தாக்கல் செய்தனர். கழிவு நீரைத் திறக்காமல் தேக்கி வைத்தாலும் ஆபத்து; திறந்து விட்டாலும் ஆபத்து என்ற இக்கட்டில் விவசாயிகள் மாட்டிக் கொண்டு தவிக்கும் இந்த நேரத்தில் கூட, சாயப்பட்டறை முதலாளிகள் கழிவு நீரை நொய்யலில் கொட்டுவதை நிறுத்த மறுக்கின்றனர்.

 

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து ஒரு நாளைக்கு ஒரு வினாடிக்கு 40 கன அடி (அணையில் 60 கோடி கன அடி கழிவு நீர் தேங்கி நிற்கிறது) கழிவு நீரைத் தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்குத் திறந்து விட வேண்டும். பிறகு ஏழு நாட்களுக்கு அணையை மூடி விட வேண்டும். வெளியேற்றப்பட்ட கழிவு நீர் ஏழு நாட்களுக்குள் காய்ந்து விடும்; பிறகு மீண்டும் அணையை ஐந்து நாட்களுக்குத் திறந்து விட வேண்டும்'' என உத்தரவிட்டது. இப்படி அணையைத் திறந்தால், கரூருக்குக் கீழேயுள்ள காவிரி பாசன விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனத் தங்களது தீர்ப்பின் சாதுர்யத்தையும் நீதிபதிகள் பாராட்டிக் கொண்டனர்.

 

ஆனால், அணையில் இருந்து திறந்துவிடப் பட்ட கழிவு நீரோ, நீதிபதிகளின் ""உத்தரவையும் மீறி'', 29.5.05 அன்று மதியமே கரூருக்கு அருகே காவிரியில் கலந்து விட்டது. இதனால் நொய்யல், காவிரி ஆற்றில் பொதுமக்கள் குடிநீர் அருந்தவோ, கால்நடைகளுக்குத் தண்ணீர் கொடுக்கவோ பயன்படுத்த வேண்டாம் என்றும்; ஆற்றில் மீன் பிடித்துச் சாப்பிட வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் தண்டோரா போட்டு பொதுமக்களை எச்சரித்துள்ளது. மேலும், காவிரியாற்றில் இருந்து குடிநீர் இறைப்பதும்; பாசனத்திற்கு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடுவதும் நிறுத்தப்பட்டு விட்டது. பொதுமக்களை, அவர்களின் ஊர்களில் இருந்து அப்புறப்படுத்தி, துரத்தியடிக்காததுதான் பாக்கி!

 

திருப்பூர் பகுதியில் தற்போது இயங்கிவரும் 729 சாயப்பட்டறைகளுள், 19 சாயப்பட்டறைகளில்தான் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள சாயப்பட்டறைகளில் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க இன்னும் ஆறு மாத காலம் அவகாசம் வேண்டும் என முதலாளிகள் நீதிமன்றத்திடம் முறையிட்டுள்ளனர்.

 

சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கச் சொல்லி, சென்னை உயர்நீதி மன்றம் 1998ஆம் ஆண்டு போட்ட உத்தரவை, சாயப்பட்டறை அதிபர்கள் கடந்த ஏழு ஆண்டுகளாகக் கண்டு கொள்ளவேயில்லை. அப்படிப்பட்ட முதலாளிகள், அடுத்த ஆறு மாதங்களில் சுத்திகரிப்பு நிலையங்களைக் கட்டிவிடுவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

 

இப்படிப்பட்ட நிலையில், சுத்திகரிப்பு நிலையம் கட்டி முடிக்கப்படும் காலம்வரை, சாயப்பட்டறைகளை இழுத்து மூடுங்கள் என உத்தரவிட்டிருக்க வேண்டும்; இல்லையென்றால், சாயக் கழிவுகளை நொய்யல் ஆற்றில் விடக்கூடாது என்றாவது உத்தரவிட்டிருக்க வேண்டும். இந்த இரண்டு உத்தரவுகளில் ஒன்றைக் கூடப் போடாத நீதிமன்றம், சாயக் கழிவுகளை நொய்யல் ஆற்றில் கொட்டுவதற்கு முதலாளிகளுக்கு சட்டப்பூர்வமான அனுமதி வழங்கியிருக்கிறது.

 

""அணையில் இருந்து கழிவு நீரை முழுவதுமாக அகற்றும் வரையில், சாய ஆலைகள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் செயல்படும் என்று மூத்த வழக்கறிஞர் கூறியுள்ளார். அந்தக் கோரிக்கை ஏற்க''ப்படுவதாகக் கூறிவிட்டது, நீதிமன்றம்.

 

சாயப்பட்டறை இயங்கும் நாட்களில், அதன் கழிவுகளை நொய்யல் ஆற்றில் கொட்டலாம் என்பதுதான் இந்த உத்தரவின் பொருள். நொய்யல் ஆற்றுப் பாசன விவசாயிகள் எந்த நோக்கத்திற்காக இந்த வழக்கைத் தொடுத்தார்களோ, அந்த நோக்கத்தையே இந்த உத்தரவின் மூலம் தோற்கடித்து விட்டார்கள், நீதிபதிகள்.

 

குண்டு வைத்து மனிதர்களைக் கொல்லுவது பயங்கரவாதம் என்றால், நீர், நிலம், காற்றை நஞ்சாக்கி பல்லாயிரக்கணக்கான விவசாயிகளையும், கால்நடைகளையும் சாயப்பட்டறை அதிபர்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று வருகிறார்களே, இதை என்னவென்று சொல்லுவது? இந்த பயங்கரவாதத்தைத் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் நியாயப்படுத்தி விட முடியுமா?

 

குடிக்கும் நீரில் சிறு தூசு தும்பு இருந்தாலே அதைக் குடிக்காமல் ஒதுக்கி வைத்து விடுகிறோம். ஆனால், திருப்பூர் சாயப் பட்டறை அதிபர்களோ, காவிரி ஆற்றையே நஞ்சாக்கி விட்டுத்தான் ஓய்வார்கள் போலிருக்கிறது. அந்நியச் செலாவணி கிடைக்கிறது என்பதற்காக, இந்தச் சமூக விரோதச் செயலைக் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க முடியுமா?

 

சாயப்பட்டறைக் கழிவுகளால் நஞ்சாகிப் போன நிலத்தடி நீரைத் தூய்மைப்படுத்த 20,30 வருடங்களுக்கு மேலாகும் என்கிறார்கள். எங்கோ இருக்கும் அமெரிக்கனும், ஐரோப்பியனும் கலர் கலராக சட்டை ஃ பனியன் மாட்டிக் கொள்ள, நாம் வாழும் பூமியை, குடிக்கும் நீரை நஞ்சாக்க அனுமதிப்பது அறிவுடைமையாகுமா?

 

சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்காதவரை சாயப் பட்டறைகள் இயங்க அனுமதிக்கக் கூடாது; விவசாயிகள் கோருகிறபடி சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை மறுசுழற்சி என்ற அடிப்படையில் சாயப்பட்டறைகளே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதை நொய்யல் ஆற்றில் விடக் கூடாது. சாயக் கழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்குவதற்கும், ஒரத்துப்பாளையம் அணையைச் சுத்தம் செய்வதற்கும் சாயப் பட்டறை அதிபர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும்.

 

ஒரத்துப்பாளையம் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாகத் தமிழகமெங்கும் இந்தக் கோரிக்கைகள் எழுப்பப்பட வேண்டும். ஏனென்றால், அவர்களின் போராட்டம், காவிரிப் பாசன விவசாயத்தை, தமிழகத்தின் சுற்றுச் சூழலைக் காப்பதற்கான போராட்டம்! அந்நியச் செலாவணி வருவாய், தொழில் வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை இந்தியா போன்ற ஏழை நாடுகளின் தலையில் கட்டும் ஏகாதிபத்திய சதிக்கு எதிரான போராட்டம்!

 

கருப்பன்
கட்டுரையாக்க உதவி:


பு.ஜ. செய்தியாளர்கள், திருச்சி மற்றும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2004க்காக, திருப்பூர் ஜெய்வாபாய்


நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி +2 மாணவிகள் தயாரித்துள்ள
""நொய்யலாற்றில் ஒரு விஷ அணை'' என்ற ஆய்வுக் கட்டுரை.