Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் ராமன் மணியப்பன் கொலை: பலிகிடாவாக்கியது இந்தியா அரசே!

ராமன் மணியப்பன் கொலை: பலிகிடாவாக்கியது இந்தியா அரசே!

  • PDF

12_2005.jpgகேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம் சிங்கோலி கிராமத்தைச் சேர்ந்த இராமன்குட்டி மணியப்பன், ஆப்கானிலுள்ள தாலிபான் தீவிரவாதிகளால் கடந்த மாதம் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும்பாலான மக்களிடையே அனுதாபத்தையும், கேரள மாநிலம் முழுவதும் துக்கத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்திவிட்டது.

 

இத்தகைய உணர்வலைகள் தன்னெழுச்சியாக ஏற்பட்டவையும் அல்ல் இராமன்குட்டி மணியப்பன் கொலை சம்பவம் மட்டுமே இதற்குத் தூண்டுதலாக அமைந்துவிடவும் இல்லை. சாவுச் செய்திக்காகக் காத்திருக்கும் தொழில்முறை ஒப்பாரிக் கிழவிகளைப் போலச் செய்தி ஊடகம், இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டது. இந்திய அரசோ, தனது அமெரிக்க மேலாதிக்க ஆக்கிரமிப்பு மற்றும் போர்வெறிக்கு ஊழியம் செய்யும் அயலுறவுக் கொள்கைக்குக் கிடைத்த பதிலடிதான் மணியப்பன் கொலை என்பதை மூடிமறைக்கிறது; இதற்காக, தாலிபான் பயங்கரவாதிகளின் மிருகத்தனமான கொலைவெறிதான் இக்கொலைக்குக் காரணம் என்றும், பாகிஸ்தான் உளவு நிறுவனம் தாலிபானுக்குப் பின்னணியில் இருந்து தூண்டிவிட்டிருக்கிறது என்றும் ஒரு கருத்தை உருவாக்கி தேசியவெறியைப் பரப்பி ஆதாயம் தேடுகிறது.

 

ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் அன்னியச் செலாவணியை ஈட்டித்தரும் 19 இலட்சம் மலையாளிகள் வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள். அவர்களில் ஏறக்குறைய 15 இலட்சம்பேர் ""போரும் பயங்கரவாதத் தாக்குதல்களும்'' நிறைந்த பதற்ற பூமியான மத்திய கிழக்கு இசுலாமிய நாடுகளில் உள்ளனர். உலகின் மோதல்கள் நிறைந்த பகுதிகளில் பணியாற்றும்படி நிர்பந்திக்கப்பட்ட மக்கள் எத்தகைய ஆபத்தை எதிர்கொள்கிறார்கள் என்று எச்சரிக்கும் வகையில் மணியப்பன் கொலை சம்பவம் அமைந்திருக்கிறது. ""தங்கள் மக்கள் யுத்த பூமியில் பீரங்கிக் குண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறார்கள்'' என்றுதான் கேரள மக்கள் கொந்தளிக்கிறார்கள்.

 

ஈராக்கில் 2004 ஜூலையில் மற்ற ஆறு பேருடன், மூன்று இந்தியர்களை ""இசுலாமியத் தீவிரவாதிகள் கடத்தித் தலையைத் துண்டித்துக் கொலை செய்யப் போவதாக எச்சரித்தார்கள்; அப்போது தலையிட்டு, பேச்சுவார்த்தைகள் நடத்தி, சாவின் பிடியில் இருந்து இந்திய அரசு அவர்களை மீட்டது; அதைப் போன்று மணியப்பன் கடத்தப்பட்டபோது இந்திய அரசு செயல்பட்டிருந்தால் அவரை மீட்டிருக்கலாம்'' என்று கேரள மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

 

""மணியப்பனைக் கடத்திய தாலிபான் பயங்கரவாதிகள், அதற்கான வாய்ப்பே தராமல் கழுத்தை அறுத்துக் கொன்று, ஒரு சிறு குறிப்புடன் சாலையில் வீசிவிட்டனர்'' என்று கூறித் தனது பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்கு இந்திய அரசு முயல்கிறது. தாலிபான் இயக்கத்திற்கு எதிராக ஆத்திரமூட்டும் செய்கைகள் எதையும் தனிப்பட்ட முறையில் மணியப்பன் செய்து விடவில்லை. ஆப்கான் நாட்டுக்கும் மக்களுக்கும் குறிப்பாக தாலிபான் இயக்கத்துக்கும் எதிரான ஆத்திரமூட்டும் அயலுறவுக் கொள்கைகளை இந்திய அரசுதான் கடைப்பிடித்து வருகிறது. அதற்குத்தான் மணியப்பன் காவு கொடுக்கப்பட்டிருக்கிறார்.

 

கடந்த இரண்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக, அடுத்தடுத்து ஆப்கானை ஆக்கிரமித்து நிறுவப்பட்ட பொம்மை ஆட்சியாளர்களை இந்திய அரசு ஆதரித்து வந்திருக்கிறது. ஆப்கானை ஆண்டுவந்த மன்னராட்சியை இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் தூக்கியெறிந்து, நஜிபுல்லா என்ற போலி கம்யூனிஸ்டு தலைமையில் ஒரு பொம்மை அரசை சோவியத் ஒன்றியத்தை ஆண்டு கொண்டிருந்த சமூக ஏகாதிபத்தியம் நிறுவியது. அதை சோசலிச முற்போக்கு ஆட்சி என்று இந்தியாவின் இரண்டு போலி கம்யூனிஸ்டு கட்சிகளும் ஆதரித்தன.

 

அப்போது சோவியத் சமூக ஏகாதிபத்தியத்துடன் இராணுவக் கூட்டிலிருந்த இந்திய அரசு, நஜிபுல்லா அரசை அங்கீகரித்து நட்புப் பாராட்டியது. பாகிஸ்தானுக்கு எராக, அந்த அரசுடன் கூட்டணி அமைத்துக் கொண்டது. அமெரிக்கபாக். ஆயுத நிதி உதவியுடன் நஜிபுல்லா ஆட்சிக்கு எதிராக ஆப்கானில் உள்நாட்டுப் போர் மூண்ட நிலையிலும் அந்த ஆட்சிக்கு துணைநின்றது, இந்திய அரசு.

 

1990களின் ஆரம்பத்தில் அங்கு உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை எட்டியது. நாட்டின் பெரும் பகுதிகளை ஆங்காங்கே கை ஓங்கியிருந்த யுத்தப் பிரபுக்கள் கைப்பற்றினர். நஜிபுல்லா ஆட்சி ஆட்டம் கண்டபோது,சோவியத் சமூக ஏகாதிபத்திய இராணுவம் ஆப்கானுக்குள் புகுந்து அந்நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டது. அங்கிருந்த யுத்தப் பிரபுக்கள் கூட்டணி அமைத்து விடுதலைப் போரை நடத்தி ஆக்கிரமிப்பாளர்களுக்கு பெரும் சேதத்தை விளைவித்தனர். சோவியத் ஒன்றியமே நிலைகுலைந்தபோது அதன் ஆக்கிரமிப்பு இராணுவம் வேறு வழியின்றி விலக்கிக் கொள்ளப்பட்டது.

 

ஆப்கானில் யுத்தப் பிரபுக்களின் தற்காலிகக் கூட்டணி அரசு நிறுவப்பட்ட போதும், அவர்களிடையே உள்நாட்டுப் போர் நீடித்தது. தாலிபான் என்ற இசுலாமியத் தீவிரவாத இயக்கம், அமெரிக்கபாகிஸ்தான் உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. அதுவரை ஒரு மாளிகையில் முடங்கிக் கிடந்த நஜிபுல்லா மற்றும் தற்காலிக கூட்டணி அரசுத் தலைவர்கள் குரூரமான முறையில் பொது இடங்களில் வைத்து கொல்லப்பட்டனர். ஆப்கான் போரில் இந்தியா நடுநிலை வகிக்கவோ, ஒதுங்கியிருக்கவோ இல்லை.

 

தாலிபான் இயக்கம் பாகிஸ்தான் ஆதரவு பெற்றது என்பதாலேயே அதற்கு எதிராக இந்திய அரசு நின்றது. தாலிபான் ஆட்சியை நீண்டநாள் அங்கீகரிக்க மறுத்தது. இதற்கெல்லாம் பழிவாங்கும் முகமாக, அப்போது இந்திய சிறையிலிருந்த பாகிஸ்தான் ஆதரவு காசுமீர் தீவிரவாத இயக்கத் தலைவரை விடுவிக்கக் கோரி இந்திய சிவில் விமானம் ஆப்கானுக்குக் கடத்தப்பட்டபோது, கடத்தல்காரர்களுக்கு உறுதுணையாக தாலிபான் அரசு செயல்பட்டது.

 

ஆப்கான் விடுதலைப் போருக்கு அரபுநாடுகளில் இருந்து படையும் நிதியும் திரட்டிய சவுதி நாட்டவர்தான் ஒசாமா பின்லேடன். அவர் நிறுவிய அல்கொய்தாவைக் கொண்டு உலகு தழுவிய இசுலாமிய புனிதப்போர் தொடுப்பதுதான் அவரது இலட்சியம். இந்தப் புனிதப் போரில் அல்கொய்தாவுடன் கூட்டுச் சேர்ந்த தாலிபான், அதற்கான தளமாக ஆப்கானைப் பயன்படுத்த உதவியது.

அமெரிக்க உதவியைப் பெற்று வளர்ந்த தாலிபான் அல்கொய்தா இயக்கங்கள், தமது இசுலாமியப் புனிதப் போரை அமெரிக்காவுக்கு எதிராகவே திருப்பிவிட வேண்டி வந்தது. காரணம் பாலஸ்தீனம், ஈராக், லிபியா, சிரியா என்று அமெரிக்காவின் தலையீடும் ஆக்கிரமிப்பும் உருட்டல் மிரட்டலும், தடை முற்றுகையும் அரபுஇசுலாமிய நாடுகளுக்கு எதிராகப் பரவியது.

 

இதன் நேரடி விளைவாக அமெரிக்காவுக்கு எதிராக செப்டம்பர் 11, 2001 தாக்குதலை அல்கொய்தா வெற்றிகரமாக நடத்தியது. அதைத் தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு எதிரான உலகு தழுவிய போரைப் பிரகடனப்படுத்திய அமெரிக்கா, பிரிட்டனின் துணையோடு ஆப்கானையும் பின் ஈராக்கையும் ஆக்கிரமித்துக் கொண்டு அவ்விரு நாடுகளிலும் பொம்மை ஆட்சிகளை நிறுவியது.

 

நேரு காலம் முதல் இந்தியா ஒரு கூட்டுச் சேரா நாடு என்று நாடகமாடி வந்தபோது, சோவியத் மற்றும் அமெரிக்க வல்லரசுகளுக்கு மாறிமாறி ஊழியஞ்செய்து வந்திருக்கிறது. சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்குப் பிறகு அமெரிக்காவின் அழையாத அடியாளாக மாறியது. பயங்கரவாதத்துக்கெதிரான உலகப் போரை அமெரிக்கா பிரகடனப்படுத்திய போது, பயங்கரவாதம் என்றாலே இசுலாமிய பயங்கரவாதம்தான் என்ற தனது பார்வையின்படி, அதற்கு எதிரான போரில் அமெரிக்கா தன்னை இளைய பங்காளியாகச் சேர்த்துக் கொள்ளும் என்று நம்பி ஏமாந்தது, இந்திய அரசு.

 

பாகிஸ்தான், அமெரிக்காவுடன் நீண்டகால இராணுவக் கூட்டு வைத்துக் கொண்டுள்ள விசுவாசமான நாடு. மேலும் எண்ணெய் வளமிக்க இசுலாமிய அரபு நாடுகள் மீது அமெரிக்கா ஆக்கிரமிப்புப் போர் நடத்தவும், அதேசமயம் அது பொதுவில் இசுலாமியப் பகைநாடு என்ற தோற்றம் ஏற்படாமல் தடுக்கவும் பயன்படும். அதோடு பிராந்திய மற்றும் துணை வல்லரசு பேரõசை கொண்ட இந்தியாவையும், சீனா மற்றும் ரசியாவை எதிர்க்கவும் யுத்த தந்திர முக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு எல்லையில் உள்ளது. அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வுடன் கூட்டுச் சேர்ந்து உதவும் உளவுப்படை வலைப்பின்னலை இசுலாமிய அரபு நாடுகளில் கொண்டுள்ளது. எனவே, இந்தியாவை இரண்டாம்பட்ச கூட்டாளியாக மட்டுமே ஏற்றுக் கொண்ட அமெரிக்கா பாகிஸ்தானையே நம்பகமான முதல்நிலை அடிவருடியாக வைத்துக் கொண்டது.

 

இருந்தாலும், அமெரிக்காவின் நல்லாசியைப் பெறுவதற்காக தொடர்ந்து அதன் மேலாதிக்க, ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு உதவி வருகிறது. இந்தியா, அமெரிக்காவின் ஏவல் நாயான இசுரேலுடன் பலவகையிலும் நெருக்கமான உறவு வைத்துக் கொண்டது. அமெரிக்க நிர்பந்தத்தை ஏற்று, காசுமீர் விவகாரத்திலும் தனது பழைய நிலையைத் தளர்த்திக் கொண்டு பாகிஸ்தானுடன் சுமுக உறவை ஏற்படுத்திக் கொள்ளத் தொடங்கியது. அமெரிக்கா, இசுரேலுடன் இராணுவ ஒப்பந்தங்களும், இராணுவ ஒத்திகைகளும் வைத்துக் கொண்டது. தானே அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் போட்டுக் கொண்டபோதும், சிவில் தேவைகளுக்காக அணுசக்தியைப் பயன்படுத்தும் ஈரானின் முயற்சியை அமெரிக்காவுடன் சேர்ந்து தடுக்கும் வேலையில் ஈடுபட்டது. இதையே சாக்காக வைத்து ஈரான் மீது அமெரிக்கா ஆக்கிரமிப்புப் போர் தொடுப்பதற்கும் மறைமுகமாக உதவுகிறது.

 

இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக ஆப்கான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் ஆக்கிரமிப்பாளர்களுக்கும், அந்நாடுகளின் துரோகக் கும்பல்களுக்கும் துணைபோகும் செயல்களில் இந்தியா ஈடுபடுகிறது. அந்நாடுகள் மீதான ஆக்கிரமிப்புப் போர்களில் இந்தியா நேரடியாக இராணுவத்தை ஈடுபடுத்தாவிட்டாலும் மறைமுகமாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவியே வந்திருக்கிறது. மன்மோகன் சிங் நட்வர் சிங் கும்பல் பதவிக்கு வந்ததும், ஈராக்கிற்கு இந்திய இராணுவத்தை அனுப்புவதற்கு எத்தணித்தது. இங்கே கடும் எதிர்ப்புக் கிளம்பவே, முன்னாள் இராணுவத்தினரைத் திரட்டி தனியார் படை என்பதாக அனுப்பியுள்ளது.

 

ஆக்கிரமிப்புப் படைகளுக்கு சமையல் பாத்திரங்கள், கழிவறைகள் கழுவுவது, முடிவெட்டுவது முதல் கண்ணி வெடிகள் அகற்றுவது, சாலைகள், ஆயுதத் தளவாடங்கள், இராணுவ வாகனங்கள் பழுது பார்ப்பது வரை போரில் ஈடுபடுவதற்கான எல்லாத் தயாரிப்புகளும் செய்து கொடுக்க இந்தியர்கள் அனுப்பப்படுகின்றனர். போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

 

அத்தகைய திட்டங்களில் ஒன்றாகத்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப்புறச் சாலைகள் அமைப்புப் பணியை இந்திய அரசு நிறுவனமான எல்லை சாலைகள் அமைப்பு நிறுவனம் ஏற்றுச் செயல்படுகிறது. உண்மையில் இது சிவிலியன் பணி கிடையாது. துணை இராணுவ அமைப்பின், போர் முக்கியத்துவம் வாய்ந்த பணி. மத்திய ஆசியாவில் முகாமிட்டுள்ள அமெரிக்க பிரித்தானியப் படைகள் ஆப்கான் வழியாக ஈரான் மீது தாக்குதல் தொடுக்கவும், மத்திய மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் எண்ணெய் வயல்களைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தவும் அமெரிக்காவுக்குப் பயன்படும் சாலைகளை அமைக்கும் பணி. இவ்வாறு அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கும் துரோகிகளுக்கும் துணை போவதால் இந்தியாவின் மீது ஈராக் மற்றும் ஆப்கானில் உள்ள தாலிபான், அல்கொய்தா மற்றும் பிற இசுலாமிய தீவிரவாதிகளும் ஆத்திரம் கொண்டுள்ளனர்.

 

ஆப்கானில், அமெரிக்க இராணுவம் நடத்திய போலித் தேர்தல்களில் அதன் எடுபிடி அமீது கர்சாய் கும்பலை இந்தியா ஆதரித்தது. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட கர்சாயுடன் இந்திய அரசு நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்டது. தெற்காசியக் கூட்டமைப்பில் ஆப்கானைச் சேர்க்க முயலுகிறது. 2005ஆம் ஆண்டுக்கான இந்திராகாந்தி அமைதி விருது அமீது கர்சாய்க்கு வழங்கிப் பாராட்டுவதாகவும் முடிவு செய்தது. இவ்வாறு ஆப்கானை ஆளும் துரோகக் கும்பலுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் அமெரிக்காவின் இளைய பங்காளியாகி விடலாம் என்று கணக்குப் போட்டு இந்திய அரசு வேலை செய்கிறது.

 

இதனால் ஆத்திரமடைந்த தாலிபான் தீவிரவாதிகள், ""எல்லா இந்தியர்களும் ஆப்கானை விட்டு வெளியேற வேண்டும்'' என்று எச்சரித்துக் கெடுவும் விதித்தனர். அதை மதியாத இந்திய அரசு மணியப்பன் கடத்திக் கொல்லப்பட்ட பிறகும், ஆப்கானில் தனது திட்டப் பணிகளுக்குப் பாதுகாப்பாக உள்ள 900 இந்தியதிபேத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

 

ஆக்கிரமிப்பாளர்களையும், துரோகிகளையும் ஆதரிப்பது, துணைபோவது என்ற கேடான நடைமுறையால் இந்திய அரசு மணியப்பனைப் பலிகொடுத்தது. ஆனால், பாகிஸ்தான் உளவுத்துறையும், தாலிபான் பயங்கரவாதிகளும்தான் இதற்குக் காரணம் என்று இந்திய உளவுத்துறை ஆலோசகர் ஒருபுறம் கூறுகிறார். இராணுவ அமைச்சரோ அதை மறுத்து விளக்கமளிக்கிறார். மணியப்பன் ""அமைதிக்கான படைவீரர்'', ""ஆப்கான் இந்திய நட்புறவுக்காக உயிர்நீத்த தியாகி'' என்றெல்லாம் இந்திய அரசு புகழ்கிறது.

 

அவருக்கு ""கார்கில் போர் தியாகி'' களுக்கு அளிக்கப்பட்ட மரியாதை விருது வழங்கப்படுகிறது. தனி விமானத்தில் அவரது உடலைக் கொண்டு வந்து, புதுதில்லியில் இராணுவ மரியாதைகள் செய்யப்பட்டு, கேரளத்தில் அமைச்சர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள் சூழ, போலீசு குண்டு முழங்க அரசு மரியாதையுடன் எரியூட்டப்படுகிறது. 10 இலட்ச ரூபாய் உதவித் தொகை, மனைவிக்கு வேலை, குழந்தைகளுக்கு இலவசக் கல்வி என்று வாரி வழங்கி, தன் குற்றங்களை மூடிமறைக்க இந்திய அரசு எத்தணிக்கிறது.

 

வயது முதிர்ந்த நோயாளிகளான பெற்றோர், இளம் விதவை, சின்னஞ்சிறு குழந்தைகள் மணியப்பன் கொலைச் செய்தியை கேட்டுக் கதறித் துடிக்கும் காட்சிகளைச் செய்தி ஊடகம் மீண்டும் மீண்டும் காட்டுகின்றது. ""பிழைப்புக்காக வேலை பார்க்கப் போன அப்பாவியை பயங்கரவாதிகள் காட்டுமிராண்டித்தனமாக கழுத்தை அறுத்துக் கொன்று விட்டார்களே!'' என்று அனுதாபமும் கோபமும் கொப்பளிக்கச் செய்கின்றது. ஆனால், மெல்ல மெல்ல உண்மை வெளிவருகிறது. இச்சம்பவத்தின் பின்னணியைப் பற்றி பலரும் அறிய வருகின்றனர். இதனால் இந்திய அரசுக்கு எதிராக எழுகிற கொந்தளிப்பு அடங்காது!

 

மாணிக்கவாசகம்