Wed04242024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் விவசாயிகளைக் காவு கொள்ளும் தாராளமயக் கொள்கை

விவசாயிகளைக் காவு கொள்ளும் தாராளமயக் கொள்கை

  • PDF

12_2005.jpgதேசிய மாதிரி கள ஆய்வு நிறுவனம் 6,638 கிராமங்களில், 51,770 விவசாயக் குடும்பங்களிடம், அவர்களின் வருமானம்; அத்தியாவசியத் தேவைகளுக்கு அக்குடும்பங்கள் மாதந்தோறும் செய்யும் செலவு; அவர்களுக்குள்ள கடன் ஆகியவற்றைப் பற்றி 2003ஆம் ஆண்டு கள ஆய்வொன்றை நடத்தியது. அதில், ஒரிசா, ஜார்கண்டு, சட்டீஸ்கர், பீகார், ம.பி. ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயக் குடும்பங்கள், தங்களின் மாதாந்திர அத்தியாவசிய தேவைகளுக்கு 225ஃ ரூபாய் கூடச் செலவழிக்க முடியாமல் வாழ்வது தெரிய வந்தது.

 

மற்ற மாநிலங்களில் கூட விவசாயிகளின் வாழ்க்கை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இந்திய அளவில், கிராமப்புறங்களில் வாழும் விவசாயக் குடும்பங்கள், உணவு, உடை, கல்வி, மருத்துவம் போன்ற தேவைகளுக்கு, மாதந்தோறும் சராசரியாக 503 ரூபாய் தான் செலவழிப்பதாக இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

 

விலைவாசி விண்ணுக்குப் பறந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், (மாதாந்திர செலவு) 225 ரூபாய்க்கு (ஒரு நாளைக்கு ஏறத்தாழ எட்டு ரூபாய்) என்ன மதிப்பு இருந்துவிட முடியும்? தெருவோர தேநீர் கடையில், மூன்று டீ குடித்தாலே எட்டு ரூபாய் கரைந்து விடும். வெறும் மூன்று கிளாஸ் தேநீரின் மதிப்பை மட்டுமே கொண்ட எட்டு ரூபாயை வைத்துக் கொண்டு, ஐந்து அல்லது ஆறு பேரைக் கொண்ட குடும்பம், மூன்று வேளைக்கு அரை வயிறாவது சாப்பிட முடியுமா? மாதம் 225 ரூபாய் என்பது சாப்பாட்டுக்கே பத்தாத பொழுது, கல்வி, மருத்துவம் போன்ற செலவுகளை எப்படிச் சமாளிக்க முடியும்?

 

ஒரு செலவைத் தியாகம் செய்தால், இன்னொரு செலவைச் சமாளிக்கலாம் எனப் பொதுவாகக் கூறலாம். ஆனால், விவசாயத்தில் தாராளமயம் ஏற்படுத்திவரும் பாதிப்புகள் பற்றி ஆய்வு செய்து வரும் சாய்நாத் என்ற பத்திரிகையாளர், ""கிராமப்புற மக்களுள் 23 சதவீதம் பேர், வறுமையின் காரணமாக தங்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு மருத்துவம் பார்த்துக் கொள்வதையே கைவிட்டு விட்டதாக''க் குறிப்பிடுகிறார். இதற்காக, இந்திய சுகாதார அமைச்சகம் வெட்கப்படவில்லை. மாறாக, தாராளமயத்தின் பின் இந்தியாவில் மருத்துவ சுற்றுலா (வெளிநாட்டினர் இந்தியாவிற்கு வந்து சிகிச்சை செய்து கொள்வது) பெருகி விட்டதாகப் பீற்றிக் கொள்கிறது.

 

விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றிய இந்த ஆய்வு கூட முழுமையானதல்ல் ஏனென்றால், இந்த ஆய்வு கிராமப்புறங்களில் நிலவும் வர்க்க வேறுபாடுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், நிலப்பிரபுக்களையும், ஏழை விவசாயிகளையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கிறது.

 

மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூன்றரை ஏக்கருக்குச் சொந்தக்காரரான கணேஷ் பீமாராவின் குடும்பம், மாதாந்திரச் செலவைச் சமாளிக்க வயிற்றில் ஈரத்துணியைப் போட்டுக் கொள்வதாகக் கூறுகிறது. ""கோதுமையை அரைப்பதற்குக் கூட எங்களிடம் காசில்லை'' என்கிறார், தற்கொலை செய்து கொண்ட கணேஷ் தாக்கரேயின் மனைவி ரேகா. இப்படிப்பட்ட அரைப்பட்டினி நிலைமையை நிலப்பிரபுக்களின் குடும்பங்களில் பார்க்க முடியாது.

 

மேலும், இந்த ஆய்வு நிலத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ள விவசாயிகளிடம் மட்டும்தான் நடத்தப்பட்டுள்ளது. நிலமில்லாத கூலி விவசாயிகளைப் பற்றி இந்த ஆய்வு அக்கறை காட்டவில்லை. மூன்றரை ஏக்கர் நிலம் சொந்தமாகக் கொண்டுள்ள நடுத்தர விவசாயக் குடும்பமே அரைப்பட்டினியில் வாழும்போது, கூலி விவசாயிகளின் வாழ்க்கை அதைவிட மோசமானதாகத்தான் இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

 

கடனும் தற்கொலைச் சாவுகளும்

""கடன் இல்லாத ஒரு விவசாய குடும்பத்தைக் கூடப் பார்க்க முடியவில்லை'' என விவசாயத்தின் நசிவைச் சுட்டிக் காட்டும் இந்த ஆய்வறிக்கை, ""இந்தியாவெங்கும் 4.34 கோடி விவசாயக் குடும்பங்கள் மீள முடியாத கடனில் மூழ்கிக் கொண்டிருப்பதாக''க் குறிப்பிட்டுள்ளது.

 

மிகவும் பின்தங்கிய, வறிய மாநிலமான பீகார், கடன்பட்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கையில் 16ஆவது இடத்தில் இருக்கிறது. அதேசமயம், முதலாளித்துவ பத்திரிகைகளால் ஹைடெக் மாநிலமாகத் தூக்கிக் கொண்டாடப்பட்ட ஆந்திரா முதல் இடத்திலும்; ""தகவல் தொழில்நுட்ப புரட்சி'' நடந்து கொண்டிருக்கும் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன.

 

அரசாங்கக் கொள்முதலை நிறுத்துவது; மின்கட்டண உயர்வு; பாசன வசதியைத் தனியார்மயமாக்குவது என எவ்வளவு விரைவாக, ஒரு மாநிலத்தில் விவசாயத்தில் தாராளமயம் நடைமுறைப்படுத்தப்படுகிறதோ, அவ்வளவு விரைவாக அம்மாநிலம் தனது விவசாயிகளைப் பெரும் கடன் சுமைக்குள் தள்ளிவிடுவதை, இக்கடன் பட்டியலில் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தர வரிசையில் இருந்து புரிந்து கொள்ள முடியும்.

 

1991க்கு முன்பாக இந்திய விவசாயிகளுள் 26 சதவீதம் பேர்தான் கடன் சுமையால் பாதிக்கப்பட்டிருந்தனர். தாராளமயம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, இது 50 சதவீதத்தைத் தாண்டிவிட்டது.

 

தாராளமயம் திணிக்கும் இக்கடன் சுமையை, பெரும் நிலப்பிரபுக்களோ, பணக்கார விவசாயிகளோ சுமக்கவில்லை. சிறியநடுத்தர விவசாயிகள்தான் இக்கடன் சுமையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் இக்கள ஆய்வு அம்பலப்படுத்தியிருக்கிறது. பயிர் செய்ய கடனுக்கு மேல் கடன் வாங்கி மூழ்கிப் போன விவசாயிகளுள் 60 சதவீதப் பேர் 1 ஹெக்டேருக்குள் நிலம் வைத்திருக்கும் சிறிய விவசாயிகள்; 30 சதவீதப் பேர் 1 ஹெக்டேரில் இருந்து 4 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் நடுத்தர விவசாயிகள்.

 

சாதி ரீதியாக எடுத்துக் கொண்டால், கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுள் 18 சதவீதப் பேர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள்; 10 சதவீதப் பேர் பழங்குடி இனமக்கள்; 44 சதவீதப் பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள். தாராளமயத்தை எதிர்க்க, இவர்கள் சாதிய வேறுபாடுகளைக் கடந்து, வர்க்க ரீதியாக ஒன்றுபட வேண்டும் என்பது அவசியமாகிறது. ஆனால், சாதி சங்கங்களும், சாதிக் கட்சிகளும் இந்த வர்க்க ஒற்றுமை ஏற்படாமல், தடுப்பதன் மூலம் தாராளமயத்திற்கு மறைமுகமாக சேவை செய்கின்றன.

 

நாடெங்கும் விவசாயிகள் கொத்து கொத்தாகத் தற்கொலை செய்து கொண்ட பொழுது, முன்பு ஆட்சியில் இருந்த பா.ஜ.க. கூட்டணி இந்தியா ஒளிர்வதாகப் பிரச்சாரம் செய்தது. பா.ஜ.க. ஆட்சியின் மீது விவசாயிகளுக்கு இருந்த கோபத்தைப் பயன்படுத்திக் கொண்டு காங்கிரசு கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றிய பிறகும், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது நின்றபாடில்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும், கடந்த 10 மாதங்களுக்குள், விதர்பா பகுதியைச் சேர்ந்த 200 பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

 

கந்துவட்டிப் பிரச்சினையால்தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாகவும்; கந்துவட்டிக்குப் பதிலாக, அரசாங்கக் கடன் கிடைக்க ஏற்பாடு செய்துவிட்டால், விவசாயிகளின் தற்கொலை நின்று போகும் என காங்கிரசு ஆட்சி கூறுகிறது. கடந்த இரண்டு வருடங்களில் அரசு வங்கிகள் மூலம் ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் விவசாயிகளுக்குக் கடன் கொடுத்திருப்பதாக நிதியமைச்சர் ப.சிதம்பரமும் பீற்றிக் கொள்கிறார்.

 

இந்தப் பிரச்சாரத்தில் இரண்டு விதமான மோசடிகள் அடங்கியுள்ளன. முதலாவதாக அரசாங்கக் கடன் எல்லா விவசாயிகளுக்கும் கிடைப்பதில்லை. தேசிய மாதிரி கள ஆய்வு நிறுவனம், ""1,000 விவசாயிகள் வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்தால், அவர்களுள் 356 விவசாயிகளுக்குத்தான் வங்கிக் கடன் கிடைப்பதாக''க் கூறுகிறது.

 

""அந்நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தப் புள்ளி விவரம் கூட மிகைப்படுத்தப்பட்ட ஒன்று'' என்கிறார், பத்திரிகையாளர் சாய்நாத். ""மகாராஷ்டிராவில் 30 இலட்சம் பருத்தி விவசாயிகள் உள்ளனர். இவர்களுள் 10 சதவீத விவசாயிகளுக்குக் கூட வங்கிக் கடன் கிடைக்கவில்லை'' எனக் குறிப்பிட்டுள்ளார், அவர்.

 

காவிரிப் பாசனப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, முழுமையாகக் கடன் கொடுக்க வேண்டுமானால், அதற்கு 800 கோடி ரூபாய் தேவைப்படும்; ஆனால், இதற்கு தமிழக அரசு ஒதுக்கியிருப்பதோ வெறும் 75 கோடி ரூபாய் தான். இந்த அறிவிப்பு கூட காகிதத்தில் தான் இருக்கிறது.

 

இந்த ஆண்டு சம்பா பருவத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் கொடுக்க தமிழக அரசு 44 இலட்சம் ரூபாயை மட்டுமே ஒதுக்கியிருப்பதாகவும்; காவிரி பாசனப் பகுதியில் 5 சதவீத விவசாயிகளுக்குக் கூட அரசுக் கடன் கிடைப்பதில்லை என்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி உண்மை நிலையைப் புட்டு வைத்துள்ளது.

 

தமிழக அரசு அறிவித்துள்ள வட்டித் தள்ளுபடி கூட கண்துடைப்பு நடவடிக்கைதான். முன்பு வாங்கிய கடனை யார் முழுமையாக அடைக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே வட்டித் தள்ளுபடி கிடைக்கும் என்பதுதான் ஜெயா அறிவித்துள்ள சலுகையின் பின்னுள்ள உண்மை.

 

மகாராஷ்டிராவின் வார்தா பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயி வங்கிக் கடன் பெற, பொதுத்துறை வங்கியொன்றில் வேலை பார்க்கும் தனது நண்பரிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார். அந்த நண்பர், ""உனக்குக் கடன் கிடைக்கும்; ஆனால் விவசாயி என்று சொல்லாதே'' எனக் கூறியிருக்கிறார். இந்த ஆலோசனையின்படி, அந்த விவசாயி ஒரு விதை விற்பனை நிலையத்தைத் தொடங்க கடன் கேட்டவுடன், அவருக்கு கடனாக இரண்டு இலட்ச ரூபாய் கிடைத்திருக்கிறது. அவர் ஆரம்பித்த விதை நிறுவனம் நட்டமடைந்த பிறகு, 25,000 ரூபாயைப் பெற்றுக் கொண்டு, அவர் வாங்கிய கடன் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

 

விவசாயத்திற்கு அறிவிக்கப்படும் கடனை, சலுகைகளை விவசாயிகளின் பெயரில் வர்த்தகச் சூதாடிகள்தான் அனுபவிக்கிறார்கள் என்பதைத்தான் இந்த உண்மை சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

 

தாராளமயம் என்ற புதை குழி

1991க்கு முன்பு கூட விவசாயிகள் கடன் வாங்கித்தான் விவசாயம் செய்து வந்தார்கள். அப்பொழுதெல்லாம் நடந்திராத தற்கொலைச் சாவுகள், இப்பொழுது நடைபெறுவதற்குக் காரணமே தாராளமயம்தான். ஒருபுறம் தாராளமயத்தால் உற்பத்திச் செலவு அதிகரித்துக் கொண்டே போகிறது; இன்னொருபுறமோ உற்பத்திச் செலவை ஈடு செய்யக்கூடிய விலை கூட விவசாயிகளுக்கு சந்தையில் இருந்து கிடைப்பதில்லை.

 

மகாராஷ்டிரா மாநில அரசு, கடந்த ஆண்டு வரை ஒரு குவிண்டால் பருத்தியை ரூ. 2,250ஃக்குக் கொள்முதல் செய்து வந்தது. இந்த ஆண்டு கொள்முதல் விலையை ரூ. 1,700ஃ ஆகத் தடாலடியாகக் குறைத்து விட்டது. காரணம் கேட்டால், சர்வதேசச் சந்தையில் பருத்தியின் விலை குறைந்துவிட்டது என்கிறார்கள்.

 

தமிழக அரசு ஏற்கெனவே நேரடி நெல் கொள்முதல் செய்வதை நிறுத்தி விட்டது. மைய அரசின் ஏஜெண்டாக இருந்து கொண்டு கொள்முதலை நடத்துவதால், நெல் விவசாயிகளுக்கு வழங்கி வந்த ஊக்கத் தொகையையும் நிறுத்திவிட்டது. மேலும், ஈரப்பதம், தரப்பிடித்தம், சுத்தப்படுத்துதல் என்ற பெயரில், எவ்வளவு தூரத்திற்கு நெல் கொள்முதலைக் கழித்துக் கட்ட முடியுமோ அவ்வளவு தூரத்திற்குக் கழித்துக் கட்டியும் வருகிறது.

 

நெல், கோதுமை, கரும்புக்கு அரசாங்கம் தரும் ஆதார விலை கூட, அவற்றின் உற்பத்திச் செலவை ஈடு செய்யும் வகையில் இருப்பதில்லை. அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும், பத்தாண்டுகளுக்கு முன்பு என்ன விலை கிடைத்து வந்ததோ, அந்த விலைதான் தற்பொழுதும் கிடைப்பதாக ஒரு விவசாய வல்லுநர் கூறுகிறார்.

 

உற்பத்திச் செலவைக் கூடத் திரும்ப எடுக்க முடியாத பொழுது, விவசாயிகளால் வாங்கிய கடனை எப்படி அடைக்க முடியும்? கந்துவட்டிக் கும்பல், தான் கொடுத்த கடனுக்கு, அடியாட்களை அனுப்பி மிரட்டி, விவசாயிகளின் நிலங்களைக் கைப்பற்றிக் கொள்கிறது என்றால், அரசாங்கம் சட்டப்படி ""ஜப்தி'' செய்கிறது. ஏற்கெனவே வாங்கிய கடனை அடைத்தால்தான் புதிதாகக் கடன் தருவோம் எனக் கூறி, விவசாயிகளை கந்துவட்டிக் கும்பலிடமே தள்ளிவிடுகிறது.

 

இது ஒருபுறமிருக்க, மைய அரசு, தாராளமயத்தின் பின் விவசாயத்திற்குக் கொடுத்து வந்த மானியத்தைப் பெருமளவு குறைத்துவிட்டது. அதேசமயம், உலகமயமாக்கம் என்ற பெயரில், அமெரிக்க அரசிடமிருந்து 17,550 கோடி ரூபாய் மானியமாகப் பெறும் பருத்தி விவசாயிகளோடு, நம் நாட்டு விவசாயிகளைப் போட்டி போடச் சொல்கிறார்கள். அந்நிய நாடுகளில் இருந்து மிகக் குறைந்த விலையில் இறக்குமதியாகும் விவசாய விளைபொருட்கள், நம்நாட்டு பாரம்பரிய விவசாயத்திற்குக் குழிபறிக்கிறது. இத்தாராள இறக்குமதியை ஊக்குவிக்கும் ஆட்சியாளர்கள், நமது நாட்டு விவசாயிகளை காட்டாமணக்கு, வெண்ணிலா போன்ற மாற்றுப் பயிருக்கு மாறச் சொல்கிறார்கள்; இதன்மூலம், நமது நாடு, உணவுக்குக் கூட அந்நிய நாடுகளிடம் கையேந்தி நிற்கக் கூடிய அபாயகரமான எதிர்காலத்தை உருவாக்குகிறார்கள்.

 

""இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 178லிருந்து 311 ஆக உயர்ந்து விட்டது; அவர்களின் மொத்த சொத்து மதிப்பும் 2.13 இலட்சம் கோடி ரூபாயில் இருந்து 3.14 இலட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து விட்டது. இதுதான் இந்த ஆண்டின் மகிழ்ச்சியான செய்தி'' என பிசினஸ் ஸ்டாண்டர்டு என்ற பத்திரிகை பெருமிதமாகக் குறிப்பிட்டுள்ளது. தாராளமயத்தின் பின், உழைத்தவர் மெலிந்தனர்; வலுத்தவர் கொழுத்தனர் என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?

 

ஒரு 311 பேரிடம் சொத்துக் குவிவதைப் பற்றி பக்கம் பக்கமாக கட்டுரைகளை வெளியிடும் முதலாளித்துவப் பத்திரிகைகள், கோடிக்கணக்கான விவசாயிகளின் அரைப்பட்டினி வாழ்க்கையைத் திட்டமிட்டே மறைக்கின்றன. ஓட்டுக்கட்சிகளோ ஒருபுறம் தாராளமயத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டே, இன்னொருபுறம் உழவர் பாதுகாப்புத் திட்டம் போன்ற அற்ப சலுகைகளை வீசியெறிந்து, விவசாயிகளின் பிரச்சினையை நீர்த்து போகச் செய்ய முயலுகின்றன.

 

போலி கம்யூனிஸ்டுகள் கூட, இடது முன்னணி ஆளும் மே.வங்கத்தை முதல் மாநிலமாக்குவது என்ற பெயரில், ஒப்பந்த விவசாயம் போன்ற தாராளமயத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றனர். தாராளமயத்தை ஒழித்துக் கட்டுவதற்குப் பதில், மனித முகத்துடன் கூடிய தாராளமயத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என உபதேசிக்கின்றனர்.

 

உலக வர்த்தகக் கழகத்தில் இருந்து வெளியேறக் கோரி விவசாயிகள் போராடினால், ""அது இந்தியப் பொருளாதாரத்திற்கு ஆபத்து'' என ஓட்டுக் கட்சிகளும், பொருளாதார வல்லுநர்களும் பூச்சாண்டி காட்டுகின்றனர். ஏற்கெனவே அரைப்பட்டினியாக வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு, இனியும் புதிதாக என்ன ஆபத்து வந்துவிடும்? உலக வர்த்தக கழகத்தில் இருந்து வெளியேறினால், இந்த 311 பேரின் சொத்துக்கு ஆபத்து வந்துவிடும் என்பதுதான் இவர்களின் அச்சம். இப்படிப்பட்ட நிலையில், ஓட்டுக் கட்சிகளைப் புறக்கணித்து, மறுகாலனியாக்கத்தை எதிர்த்துப் போராடிவரும் புரட்சிகர அமைப்புகளின் தலைமையை ஏற்பதுதான் விவசாயிகள் முன்னுள்ள ஒரே மாற்று வழி!

 

ரஹீம்