Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் பெங்களூர் "கால் வென்டர்" பெண் ஊழியர் கொலை:அந்தியச் செலாவணி வருமானத்தின் பலிகிடாக்கள்!

பெங்களூர் "கால் வென்டர்" பெண் ஊழியர் கொலை:அந்தியச் செலாவணி வருமானத்தின் பலிகிடாக்கள்!

  • PDF

01_2006.jpgபெங்களூர் நகரில், பிரதிபா மூர்த்தி என்ற ""கால் சென்டர்'' நிறுவன பெண் ஊழியர் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதை, அனுதாபம், கண்ணீர் அஞ்சலி என்ற வழக்கமான சடங்குகளுக்குள் முடித்துவிடத் துடிக்கிறார்கள், அத்தொழில் ஜாம்பவான்கள். இந்தச் சம்பவத்தை அதற்கு மேல் நீட்டித்துக் கொண்டே போனால், இந்த நவீனத் தொழிலில் வேலை பார்க்கும் ஊழியர்களின் பரிதாபகரமான நிலை வெட்ட வெளிச்சமாகி விடுமோ என அஞ்சுகிறார்கள், ""கால் சென்டர்'' தொழில் அதிபர்கள்.

 

டிசம்பர் 13ந் தேதி அதிகாலை ""ஷிப்டு''க்குக் கிளம்பத் தயாராக இருந்த பிரதிபாவை அழைத்துச் செல்ல சிவக்குமார் என்ற ஓட்டுநர் கார் ஓட்டி வந்தார். அவரை வழக்கமாக அழைத்துச் செல்ல வரும் ஓட்டுநர் ஜகதீஷ் க்குப் பதிலாக, கம்பெனி தன்னை அனுப்பியதாகப் புதிய ஓட்டுநர் கூறியதை நம்பி, பிரதிபாவும் வேலைக்குக் கிளம்பி விட்டார். அவர், சிவக்குமாருடன் காரில் சென்று கொண்டிருந்தபொழுதே, வழக்கமான கார் ஓட்டுநரான ஜகதீஷ், பிரதிபாவை அவரது ""செல்போனில்'' தொடர்பு கொண்டு, தான் அவரை வேலைக்கு அழைத்துச் செல்ல வந்து கொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். பிரதிபா தன்னை ஏற்கெனவே சிவக்குமார் அழைத்துச் சென்று கொண்டிருப்பதை ஜகதீஷிடம் கூறிவிட்டு, சிவக்குமாரிடம் பேசச் சொல்லியிருக்கிறார். சிவக்குமார், ஜகதீஷிடம், ""தன்னை கம்பெனி அனுப்பி வைத்திருப்பதாக''க் கூறிவிட்டு, தொலைபேசியின் இயக்கத்தை நிறுத்திவிட்டார். ஜகதீஷ் உடனடியாக இந்த விசயத்தை பிரதிபா வேலை பார்த்த ""ஹெச்.பி.'' (ஹெவ்லட் அண்ட் பேகார்ட்) நிறுவனத்திடம் கூறிவிட்டு, பிற ஊழியர்களை அழைத்து வரச் சென்று விட்டார்.

 

ஆனால், பிரதிபா அன்று வேலைக்கே வரவில்லை. பிரதிபாவின் உறவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரைத் தேடத் தொடங்கிய போலீசார், அவரது பிணத்தை அவர் வீட்டில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இருக்கும் அஞ்சனாபுரம் பகுதியில் கண்டெடுத்தனர். ஜகதீஷ் மூலம் சிவக்குமாரைப் பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், பிரதிபா சிவக்குமாரால் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டு, பின் கத்தியால் கழுத்து அறுக்கப்பட்டுக் கொல்லப்பட்ட உண்மை தெரிய வந்தது.

 

இக்கொலையை விசாரித்து வரும் பெங்களூர் நகர போலீசு கமிசனர் அஜய் குமார் சிங், ""இக்கொலைக்கும், ஹெச்.பி. நிறுவனத்திற்கும் நேரடித் தொடர்பு இல்லை என்றாலும், பிரதிபாவைத் தனக்குப் பதிலாக சிவக்குமார் அழைத்து வருவதை ஜகதீஷ் சொல்லியவுடன், அந்நிறுவனம் இந்த விசயத்தில் கவனம் செலுத்தியிருந்தால் பிரதிபாவைக் காப்பாற்றியிருக்கலாம்'' எனக் கூறியிருக்கிறார்.

 

""நள்ளிரவு நேரத்தில் வேலைக்குக் கிளம்பும் ஊழியர்களுக்கு, அவர்களை அழைத்துச் செல்ல வரும் ஓட்டுநரின் பெயர்; வண்டியின் எண் ஆகியவற்றை தொலைபேசி குறுஞ்செய்தி (SMS) அனுப்புவதற்கு 50 காசுதான் செலவாகும். ஊழியர்களை மதிக்காத கால்சென்டர் நிறுவனங்கள், இதைச் செய்வதேயில்லை'' எனக் குறிப்பிடுகிறார், கால் சென்டர் ஊழியர்களின் நலச் சங்க அகில இந்தியப் பொதுச் செயலாளர் கார்த்திக் சேகர்.

 

பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யும் பன்னாட்டு நிறுவனமான ஹெச்.பி. அற்பக்காசு 50 பைசாவை செலவழித்திருந்தால், பிரதிபா உயிர் இழந்திருக்க மாட்டார். ஆனால் அந்நிறுவனமோ, ""இந்தப் படுகொலையைச் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகக் காட்டி'' நழுவிக் கொள்கிறது.

 

பிரதிபா கொலை செய்யப்பட்ட அன்று, அவரைத் தேடி வந்த உறவினர், மாலை ஆன பின்னும் கூட அவர் வீடு திரும்பாததால், பதற்றத்தோடு ஹெச்.பி. நிறுவனத்திடம் பிரதிபா பற்றி விசாரித்திருக்கிறார். அந்நிறுவன அதிகாரிகளோ, சிவக்குமார் என்ற ஓட்டுநருடன் அவர் நள்ளிரவு 2 மணிக்கே வேலைக்குக் கிளம்பிவிட்டார் எனத் தெரிந்திருந்தும், ""அவர் இன்று வேலைக்கு வரவில்லை'' எனப் பொறுப்பற்ற முறையில் கூறியுள்ளனர். இது பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டபொழுது, ""ஊழியரை அழைத்துவர கார் அனுப்புவதுதான் எங்கள் பொறுப்பு'' எனத் திமிராகப் பதில் அளித்துள்ளனர்.

 

""நள்ளிரவு தாண்டி வேலைக்கு வரும் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கும், உடல்நலத்திற்கும் நிறுவனங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்பது சர்வதேச அளவில் பின்பற்றப்படும் நடைமுறை. ஆனால், இந்த நடைமுறைகளை இந்தியாவில் கால்சென்டர் நிறுவனங்கள் ஒத்துக் கொண்டதேயில்லை. தெருவோரக் குப்பைகள் உள்ளே நுழைந்துவிட்டு வெளியே போவதை போலத்தான், ஊழியர்களை நிறுவனங்கள் மதிக்கின்றன. முதலாளிகளுக்கு சங்கம் வைத்துக் கொண்டு, ஊழியர்கள் சங்கம் வைத்துக் கொள்ளும் உரிமையை மறுக்கும் விசித்திரமான தொழில் இது'' எனக் குறிப்பிடுகிறார் கார்த்திக் சேகர்.

 

இவர் எதை எதைக் குற்றமாக, குறைகளாகப் பார்க்கிறாரோ, அதைத்தான் தொழிலாளர் நலச் சீர்திருத்தம் என்கிறார்கள், ஆட்சியாளர்கள். பெண்களை இரவு நேரங்களில் பணியில் அமர்த்துவதை தடை செய்திருந்த சிப்பந்திகள் ஊழியர்கள் சட்டம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்காகவே திருத்தப்பட்டு, பெண்களை இரவுப் பணியில் அமர்த்தும் சுதந்திரத்தை முதலாளிகளுக்குக் கொடுத்தது. இரவு நேரப் பணிகளுக்கு வரும் பெண்களுக்குக் கொடுக்க வேண்டிய பாதுகாப்பு குறித்து, சட்டத் திருத்தம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. நள்ளிரவில் கால்சென்டர் வேலைக்குக் கிளம்பிச் செல்லும் பெண்கள், தங்களின் பாதுகாப்பைத் தாங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் எனப் பொறுப்பை அவர்கள் தலையில் கட்டிவிட்டார்கள்.

 

பிரதிபாவின் உயிர் அநியாயமாக பறிக்கப்பட்ட பிறகுதான், கால் சென்டர் முதலாளிகள், அரசு, போலீசு என அனைவரும், ஆளுக்கொரு பக்கமாக நின்று கொண்டு பெண் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். இதிலும் கூட, ஊழியர்களை வேலைக்கு அழைத்து வரும் ஓட்டுநர்களை, யோக்கிய சிகாமணிகளாகப் பார்த்து நியமித்து விட்டால், எல்லாம் சரியாகி விடும் என்பது போல இப்பிரச்சினையைச் சுருக்கி விடுகிறார்கள். ஓட்டுநர்களின் கடந்த காலத்தைப் பற்றி விசாரிப்பது; அவர்களைப் பற்றிய விவரங்களை போலீசிடம் தெரிவிப்பது; பெண் ஊழியர்களை நள்ளிரவு நேரங்களில் வேலைக்கு அழைத்து வரும் பொழுதோ வீட்டிற்கு அனுப்பும் பொழுதோ காவலாளி துணையுடன் அனுப்புவது என்று பலவகையான ஆலோசனைகள் பரிசீலிக்கப்படுகின்றன.

 

""இந்த ஆரம்ப சூரத்தனங்கள் எல்லாம் எத்தனை நாள் நீடிக்கும்? பெண் ஊழியர்களின் துணைக்குக் காவலாளிகளை அனுப்புவதை, செலவைக் காரணமாக வைத்து ஏற்கெனவே பல நிறுவனங்கள் ரத்து செய்துவிட்டன. தொழிலை இலாபகரமாக நடத்த செலவைக் குறைப்பதை வழிமுறையாகப் பின்பற்றும் இந்த நிறுவனங்கள், ஊழியர்களின் நலன் சலுகைகளில்தான் முதலில் கை வைப்பார்கள்'' என கால் சென்டர் ஊழியர்கள் சிலரே, முதலாளிகளின் போலித்தனத்தை அம்பலப்படுத்துகின்றனர்.

 

தகவல் தொழில்நுட்பத் தொழிலின் பிதாமகனாக மதிக்கப்படும் இன்ஃபோசிஸ் அதிபர் நாராயணமூர்த்தி, இப்படுகொலை நடந்த பிறகு புவனேசுவரில் நடந்த இத்தொழில் தொடர்பான மாநாட்டில், பெண் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்துப் பேசவில்லை. மாறாக, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிடம் உள்ள புள்ளி விவரத் தகவல்களை, ஊழியர்கள் திருடி விடாமல் தடுப்பதற்கு சட்டப் பாதுகாப்புத் தர வேண்டிய அவசியம் பற்றித்தான் பேசியிருக்கிறார்.

 

கால்சென்டரில் பொறியாளராக வேலை பார்த்த பிரதிபா, ஓட்டுநரின் காமவெறிக்குப் பலியானது வெளியே தெரிந்த அளவிற்கு, இந்த நவீனத் தொழிலில் மென்பொருள் தொழில்நுட்ப வல்லுநர்களாகப் பணியாற்றும் பல இளைஞர்கள் இளம் பெண்கள், வேலைப் பளுவால் மனச்சுமை அதிகமாகித் தற்கொலைக்குத் தள்ளப்படுவது வெளியே தெரிவதில்லை. சமீபத்தில், சென்னையில் ஒரு தகவல்தொழில் நுட்ப ஊழியர் 6வது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். மனச்சுமை அதிகமாகித் தற்கொலையை நாடுபவர்களுக்கு ஆலோசனை வழங்கும் சென்னையைச் சேர்ந்த ""சிநேகா'' என்ற தன்னார்வ அமைப்பிற்கு மென்பொருள் தொழில்நுட்ப வல்லுநர்களிடமிருந்து மட்டும், ஆலோசனை கேட்டு 150க்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்திருப்பதாக ""இந்து'' நாளிதழ் (டிச.13, 05) செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

 

இலக்கை நிறைவேற்றுவதற்காக ஓய்வே இல்லாமல் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை வாங்கப்படுவது மனைவி, குழந்தைகள், நண்பர்கள் என யாருடனும் ஓய்வாகப் பொழுதைக் கழிப்பதற்கு வாய்ப்பில்லாமல் போவது இப்படிபட்ட இறுக்கமான சூழலே சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்துவரும் ஊழியர்களை மனச் சோர்வடையச் செய்து விடுகிறது. பிரதிபாவின் இறுதி ஊர்வலத்தில் சக ஊழியர்கள் கலந்து கொள்ளப் போவதற்குக் கூட பல கால் சென்டர் நிறுவனங்கள் அதிருப்தி தெரிவித்திருக்கின்றன. அந்தளவிற்கு ஊழியர்களை, உணர்ச்சிகளற்ற இயந்திரம் போல இம்முதலாளிகள் மாற்றி வருகிறார்கள்.

 

இப்படி மனச்சுமையால் சோர்ந்து போவது இந்தத் தொழிலில் சகஜமாக இருப்பதை முதலாளிகளே ஒப்புக் கொள்கின்றனர். ""இப்படிபட்டவர்களுக்கு இந்த நிறுவனங்கள் எந்த உதவியும் பெரிதாகச் செய்வதில்லை. மாறாக, அவர்களைக் கருவேப்பிலை போலத் தூக்கிப் போட்டு விடுகிறார்கள். இல்லையென்றால், வேலை தராமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்து, பைத்தியக்காரர்கள் போல ஆக்கி விடுகின்றனர்'' என்கிறார், கார்த்திக் சேகர்.

 

பிரதிபாவின் படுகொலை சம்பவம், கால் சென்டர் முதலாளிகளுக்கு ஊழியர்களின் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தவில்லை. மாறாக, இச்சம்பவம் ஊழியர்களின் கோபத்தைக் கிளறிவிட்டு, சங்கம் வரை சென்றுவிடுமோ என அவர்களை அச்சப்படச் செய்துவிட்டது. இதன் காரணமாக, பிரதிபாவின் படுகொலைக்கு நியாயம் கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்களில் பலர், தங்களின் அதிகாரிகளால் "அன்புடன்' கண்டிக்கப்பட்டுள்ளனர்.

 

கர்நாடக மாநில அரசின் சிப்பந்திகள் ஊழியர்கள் நலச் சட்டத்தின்படி, வேலை நேரத்தில், ஊழியர்களின் பாதுகாப்பிற்கு முதலாளிகள்தான் பொறுப்பேற்க வேண்டும். ஹெச்.பி. நிறுவனத்தின் மீது கொலைக் குற்றம் சுமத்துவது வரம்பு மீறியது என்றாலும், குறைந்தபட்சம் இச்சட்டத்தின் படி அந்நிறுவனம் மீது ஒரு வழக்கு தொடர்ந்திருக்கலாம். ஆனால், கர்நாடக மாநில அரசோ, அப்படி வழக்குத் தொடர்ந்தால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெங்களூரை விட்டு வெளியேறிவிடக் கூடும் என அச்சப்படுகிறதாம். ஊழியர்களின் உயிர் பாதுகாப்பு உரிமையைவிட ஆட்சியாளர்களுக்கு அந்நியச் செலாவணி முக்கியமானதல்லவா!

 

ஊழியர்களின் நலனையும், பாதுகாப்பையும் முதலாளிகளும், அரசும் உத்தரவாதம் செய்வார்கள் என எதிர்பார்ப்பது, ஓநாய் ஆட்டைப் பாதுகாக்கும் என நம்புவது போலத்தான் முடியும். கால் சென்டர் ஊழியர்கள், தொழிற்சங்கங்களை அமைத்துக் கொள்வதுதான் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உள்ள ஒரே வழி.

 

மு மணி