Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் வெள்ளப் பகுதிகளில் புரட்சிகர அமைப்புகளின் நிவாரணப் பணிகள், போராட்டப் பணிகள்

வெள்ளப் பகுதிகளில் புரட்சிகர அமைப்புகளின் நிவாரணப் பணிகள், போராட்டப் பணிகள்

  • PDF

01_2006.jpgகடந்த நவம்பர் டிசம்பர் மாதங்களில் தமிழகத்தைத் தாக்கிய பெருமழை பெருவெள்ளத்தால் இருக்கின்ற வாழ்வும் சிக்கலாகி உழைக்கும் மக்கள் நிர்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டனர். இத்தகயை இயற்கைப் பேரிடர் பேரழிவு மக்களைத் தாக்கும் போது, நிவாரணம் மீட்புப் பணிகளில் ஈடுபடுவது ஒரு அரசியல் இயக்கத்தின் கடமை மட்டுமல்ல் ஒவ்வொரு மனிதனின் தார்மீகப் பொறுப்பாகவும் இருக்கிறது.

 

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறி, குறிப்பாக சென்னை, கடலூர், திருச்சி மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகள் உடனடியாக கடமையாற்றக் களத்தில் இறங்கின. கடந்த நவம்பர் இறுதியில் தொடங்கிய இந்தப் பணி இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

அரசு நிவாரணத்தை சர்வ கட்சிக்குழு அமைத்து பொறுக்கித் தின்ன குரல் கொடுக்கும் எந்தவொரு ஓட்டுக் கட்சியும் நிவாரணப் பணிகளைச் செய்யவோ, மக்களைத் திரட்டிப் போராடவோ முன்வரவில்லை. ஓட்டுக் கட்சிகளின் மனிதாபிமானம், கண்ணீர் அஞ்சலி என்ற மாய்மாலங்களைக் கிழித்துப் போட்டு, போராட அறைகூவியதோடு போராட்டங்களை முன் நின்று நடத்திய காரணத்தால் புரட்சிகர அமைப்புகளின் நிவாரணப் பணிகள் செய்தி ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டன.

 

திருச்சி குழுமணி அருகிலுள்ள, அரவானூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு வெளியேற முடியாதபடி தனித்தீவாகிவிட்ட போது, விரைந்து அங்கு சென்ற தோழர்கள், அதிகாரிகள் போலீசார் தீயணைப்புத் துறையினருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து உதவி கோரினர். ஆனாலும், அதிகார வர்க்கமும் போலீசும் அசைந்து கொடுக்கவில்லை. தீயணைப்புத் துறையினரோ, கடவுளை வேண்டிக் கொள்ளுமாறு கூறினர். மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அதிகார வர்க்கம் தமது தொலைபேசித் தொடர்பையே துண்டித்து முடமாக்கி வைத்திருப்பது தெரிந்தது. உணவு இல்லை; குடிக்கத் தண்ணீரும் இல்லை. உயிரின் ஆதாரமான தண்ணீரை வறட்சியின்போது மட்டுமின்றி, இப்போது வெள்ளத்தின் நடுவேயும் தேடித் தவித்தனர், பாதிக்கப்பட்ட இக்கிராம மக்கள்.

 

நிலைமை விபரீதமாவதை உணர்ந்த தோழர்கள், வெள்ளத்தில் இறங்கி எதிர்நீச்சலடித்து திருச்சி உறையூர் வந்து இதர தோழர்களுக்குத் தகவல் தெரிவித்து, உணவுப் பொட்டலங்கள், பால், பிஸ்கட், தண்ணீர் பாக்கெட்டுகளைச் சேகரித்து, அரவானூர் கிராம மக்களிடம் வீடுவீடாகச் சென்று விநியோகித்தனர். பாதிக்கப்பட்ட மக்களின் தேவைக்கு தோழர்கள் கொடுத்தது சிறுதுளிதான் என்றாலும், உரிய தருணத்தில் செய்த இந்த உதவியை மக்கள் நெகிழ்ந்து பாராட்டினர்.

 

மூன்று நாட்களாகியும் அரசிடமிருந்து எந்தவொரு நிவாரண உதவியும் வந்து சேராத நிலையில், இனி போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை விளக்கி, அம்மக்களை அணிதிரட்டி நவம்பர் 27 அன்று உறையூர் நாச்சியார் கோவிலிருந்து ஊர்வலமாகச் சென்று தில்லைநகர் மெயின் ரோட்டில் தோழர்கள் முன்னின்று சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து, இம்மாவட்டத்திலேயே முதன்முதலாக அரவானூர் கிராம மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

 

திருவரம்பூர் கல்லணை அருகேயுள்ள அரசாங்குடி எனும் கிராமம் புதாறு உடைப்பால் கடந்த நவம்பர் இறுதியில் சுமார் 6 அடி வரை நீரில் மூழ்கியது. வெள்ளத்தால் பரிதவித்த மக்கள் பல நாட்களாக சோறு தண்ணீர் இல்லாமல் தத்தளித்தனர். தாயுள்ளத்தோடு "அம்மா' நிவாரணம் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மக்களின் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்தது. புரட்சிகர அமைப்புகளின் தோழர்கள், அரசாங்கத்தின் அலட்சியத்தை எதிர்த்துப் போராடாமல் நிவாரணம் கிடைக்காது என்ற உண்மையை அவர்களிடம் விளக்கி போராட அறைகூவினர். தோழர்களின் வழிகாட்டுதல்தான் சரியானது என்பதை உணர்ந்த மக்கள் திருவரம்பூர் துவாக்குடி சாலையில் மறியல் போராட்டம் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, போலீசார் ஓடோடி வந்து ஆவன செய்வதாக நைச்சியமாகப் பேசி போராட்டத்தைக் கைவிடக் கோரினர். சி.பி.எம். உள்ளிட்ட ஓட்டுக் கட்சிப் பிரமுகர்கள் மறியலைக் கைவிடக் கோரியபோதிலும் மக்களது போராட்ட உறுதியை அசைக்க முடியவில்லை. நாங்களெல்லாம் இருக்கும்போது ம.க.இ.க. காரங்க பின்னாடி ஏன் போறீங்க? என்று உள்ளூர் ஓட்டுக்கட்சி பிரமுகர்கள் புலம்பித் தீர்த்தனர். மறுநாள், வருவாய்த்துறை அதிகாரியின் முன்னிலையில், நிவாரணம் வழங்குவதாக உறுதியளித்த பின்னரே இம்மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

 

குழுமணி அருகிலுள்ள ஏகிரிமங்கலம், என்.சாத்தனூர், சீராத்தோப்பு கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்த பின்னரும் அதிகார வர்க்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புரட்சிகர அமைப்புகளின் வழிகாட்டுதலில், இக்கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வட்டார வளர்ச்சி அதிகாரியை முற்றுகையிட்டுப் போராடியதும், அடுத்த இரு நாட்களில் நிவாரணங்கள் வழங்கப்பட்டன.

 

அரவானூர், நாடார் தெரு, உறையூர், அரசங்குடி, கல்நாயக்கன் தெரு முதலான பகுதிகளில் தோழர்களது முன்முயற்சியால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அணிதிரண்டு போராடினர். போராடிய பகுதிகளில் அடுத்த இரு நாட்களில் நிவாரணம் கிடைத்தது. இவற்றால் உத்வேகமடைந்த திருச்சி நகர மக்களும், சுற்றுப்புற கிராமங்களின் மக்களும் தன்னெழுச்சியாகத் திரண்டு போராடத் தொடங்கினர். திருச்சி மாவட்டத்தில் நாள்தோறும் மறியல், முற்றுகை என போராட்டங்கள் தொடர்ந்தன. போராடும் மக்களிடம், ம.க.இ.க.காரன் தூண்டிவிட்டானா? என்று போலீசாரும் அதிகாரிகளும் தமது வெறுப்பைக் கொட்டி புலம்பித் தீர்த்தனர்.

 

சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள உழைக்கும் மக்களின் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருந்தபோது, ஏ.சி.சண்முகத்துக்குச் (முதலியார் சங்கம்) சொந்தமான எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரியை வெள்ளம் சூழ்ந்ததையே தொலைக்காட்சிகள் படம் பிடித்துக் காட்டின. உழைக்கும் மக்களின் குடியிருப்புப் பகுதியில் வெள்ளம் பெருகியதற்குக் காரணமே, ஏ.சி. சண்முகம் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து எழுப்பிய கல்லூரிக் கட்டிடங்கள் தான். வெள்ளத்துக்கு முன்னரே, ஏ.சி.சண்முகத்தின் சட்டவிரோத மக்கள் விரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து சுவரொட்டி இயக்கம் மேற்கொண்ட பு.மா.இ.மு. தோழர்கள், வெள்ளத்தின்போது கல்லூரிக்கு வந்த மாவட்ட ஆட்சியரை, மக்களைத் திரட்டி முற்றுகையிட்டு இந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி முறையிட்டனர்.

 

டிசம்பர் முதல்வாரத்தில், சென்னையில் மழையும் வெள்ளமும் பெருக்கெடுத்தபோது, மதுரவாயல் பகுதிவாழ் உழைக்கும் மக்களை மீட்டு, அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து, ஏறத்தாழ 2000 பேருக்கு தொடர்ந்து 4 நாட்களுக்கு தோழர்கள் உணவு வழங்கினர். முறையாக நிவாரணம் கிடைக்க உரிய ஏற்பாடுகளை முன்னின்று நடத்தினர். மதுரவாயல் பகுதியில் ஏ.சி.சண்முகத்தின் கல்லூரிக் கட்டிடங்களோடு, உழைக்கும் மக்களின் குடியிருப்புகளையும் இடிக்க நடந்து வரும் முயற்சிகளுக்கு எதிராகவும், மருத்துவமுகாம் குடிநீர் வசதிக ளுக்காகவும் மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி, போராடுவதற்கு அணிதிரட்டி வருகின்றனர்.

 

நவம்பர் இறுதியில் பெருமழையின் காரணமாக சாத்தனூர் அணையிலிருந்து எவ்வித முன்னறிவிப்புமின்றி அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், கடலூரின் மஞ்சக்குப்பம் தட்சிணாமூர்த்தி நகர் முதலான பகுதிகள் வெள்ளக்காடாகியது. தொடர்ந்து வெள்ளம் உயர்ந்ததால், உழைக்கும் மக்கள் தமது உடைமைகளை இழந்து 22.11.05 அன்று நள்ளிரவிலிருந்தே உயிர்பிழைக்க நீந்தி வெளியேறினர். கொட்டும் மழையில் எங்கே தங்குவது என்று புரியாமல் அலைபாய்ந்தனர். ஏறத்தாழ 4 நாட்களாக அரசு எந்த உதவியோ ஏற்பாடோ செய்யாத நிலையில், பு.மா.இ.மு. தோழர்கள் ஒரு திருமண மண்டபத்தைத் திறந்துவிட ஏற்பாடு செய்து, இம்மக்களைப் பாதுகாப்பாக தங்க வைத்தனர். இப்பகுதியிலுள்ள வியாபாரிகள், அரசியல் கட்சிப் பிரமுகர்களிடம் நன்கொடைகள் திரட்டி உடனடியாக உணவுக்கு ஏற்பாடு செய்தனர். பின்னர், மக்களிடம் கையெழுத்து வாங்கி, நிரந்தர முகாம் அமைத்து நிவாரணம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுத்தும் கூட, அதிகார வர்க்கம் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. பட்டினியால் பரிதவித்த மக்கள், தோழர்களின் வழிகாட்டுதலின்படி மறியல் போராட்டத்தில் இறங்கினர். உள்ளூர் ஓட்டுக் கட்சிப் பிரமுகர்களின் சதிகள், போலீசாரின் அச்சுறுத்தல்களை மீறி, உறுதியாக நடந்த இப்போராட்டத்தைத் தொடர்ந்து, அதிகார வர்க்கம் அம்மக்களுக்கு ஒருவார காலத்திற்கு உணவு வழங்கி, மருத்துவ முகாம் அமைத்துக் கொடுத்து உதவியது.

 

கடலூர் அருகே காரைமேடு, சேத்தியா தோப்பு அருகிலுள்ள பின்னலூர், அம்பாள்புரம், மஞ்சக் கொல்லை முதலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த போது, புரட்சிகர அமைப்புகளின் தோழர்கள் விரைந்து சென்று மீட்புப் பணிகளிலும் நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டனர். பல கிராமங்களில் அரசு நிவாரணத்தை விநியோகிக்கும் பொறுப்பை தோழர்களிடமே பஞ்சாயத்து தலைவர்கள் ஒப்படைத்தனர்.

 

""எங்களுக்கு காசு பணமோ, நிவாரணமோ பெரிசில்லை. நாங்க பரிதவிச்சு நிக்குற நேரத்துல, எங்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட யாருமில்லையேன்னு வேதனைப்பட்டோம். நீங்க வந்து ஆறுதல் சொன்னதோடு, உதவியும் செஞ்சீங்களே, அத எங்க உசுருள்ளவரைக்கும் மறக்க மாட்டோம்'' என்று தோழர்களிடம் நா தழுதழுக்கக் கூறிய இப்பகுதிவாழ் பெண்கள், நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தோழர்களுக்கு தங்கள் கையால் சோறாக்கிப் போட்டு தமது அன்பை வெளிப்படுத்தினர். உடைமைகளை இழந்து எதிர்காலமே இருண்ட காலமாகி அச்சுறுத்திக் கொண்டிருந்த நிலையிலும், மக்கள் வெளிப்படுத்திய போர்க்குணமும் தோழர்கள் மீது அவர்கள் காட்டிய அன்பும் நெகிழச் செய்பவையாக இருந்தன.

 

மு பு.ஜ. செய்தியாளர்கள்