Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் மானங்கெட்ட சிங்கின் துரோகம் அணுசக்தி என்ற பெயரால் அரசியல் இராணுவ அடிமைத்தனம்

மானங்கெட்ட சிங்கின் துரோகம் அணுசக்தி என்ற பெயரால் அரசியல் இராணுவ அடிமைத்தனம்

  • PDF

03_2006.jpg

மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாக, இந்தியப் பொருளாதாரமும் எல்லா உற்பத்தி மற்றும் விநியோகத் துறைகளும் பன்னாட்டு நிறுவனங்களின் கோரப் பிடிக்குள் சிக்கி வருவதை நாமறிவோம். இந்தப் பொருளாதார அடிமைத்தனத்தை விஞ்சும் அளவில் அரசியல் மற்றும் இராணுவ அடிமைத்தனத்திற்கான சங்கிலிகள் நம்மீது பூட்டப்படுகின்றன. தனது குறைந்தபட்ச செயல்திட்டத்தில், பாரதிய ஜனதாவைப் போலன்றி தன்னை ஒரு அமெரிக்க எதிர்ப்பாளனாக சித்தரித்துக் கொண்டது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி.

 

ஆனால், பதவியில் அமர்ந்த மறுகணமே தன் நோக்கத்தைத் தெளிவாக வெளியிட்டார், மன்மோகன். ""அமெரிக்கா ஒரு வல்லரசு என்ற உண்மையை நாம் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.... உலகப் பொருளாதாரம் மற்றும் அரசியலில் அமெரிக்கா மிக முக்கியப் பாத்திரம் வகிக்கிறது... எனவே, இருக்கின்ற சர்வதேச அமைப்புகளை நமது ஆதாயத்திற்கேற்ப நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்'' என்றார். பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் இந்த அமெரிக்க உளவாளியின் அடுத்தடுத்த நடவடிக்கைகள், நமது நாட்டை மீளவே முடியாத அடிமைப் படுகுழிக்குள் தள்ளி வருகின்றன.

 

ஜூன் 18,2005 அன்று புஷ்ஷûம் மன்மோகனும் அமெரிக்காவிலிருந்து வெளியிட்ட கூட்டறிக்கை, அதைத் தொடர்ந்து ஜுன் 28ஆம் தேதியன்று பிரணாப் முகர்ஜியும் ரம்ஸ்ஃபீல்டும் இணைந்து வெளியிட்ட இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தம், அதனைத் தொடர்ந்து சர்வதேச அணுசக்தி ஏஜென்சியில் அமெரிக்காவின் ஆணைக்கிணங்க இரானுக்கு எதிராக மூன்று முறை இந்தியா அளித்திருக்கும் வாக்கு, இதே காலகட்டத்தில் முடக்கப்பட்டிருக்கின்ற இரான் இந்தியா எண்ணெய் எரிவாயுக் குழாய் திட்டம், தற்போது புஷ் வருகையை ஒட்டி திணிக்கப்படக் காத்திருக்கும் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஆகிய இவையனைத்தும் அமெரிக்க சிலுவையில் நிரந்தரமாக இந்தியாவை அறைந்து விடுவதற்கான ஆணிகள். இவை தனித்தனி ஆணிகள் என்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாதவை என்றும் உளவாளி மன்மோகன் சிங் தொடர்ந்து புளுகி வந்தபோதிலும், உண்மை வெகு வேகமாக அம்பலமாகி வருகிறது.

 

இந்தியாவின் அதிகரித்து வரும் எண்ணெய் மற்றும் எரிவாயுத் தேவைகளை நிறைவு செய்வது, உலகச் சந்தையின் விலையேற்றங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதன் மூலம் அந்நியச் செலாவணி இழப்பை தவிர்ப்பது, கப்பல் மூலம் எண்ணெய் எரிவாயு தருவிக்கும் செலவை இல்லாமல் செய்வது, இரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக எண்ணெய்க் குழாய் அமைப்பதன் மூலம் இந்தியா பாகிஸ்தானிடையே சமாதானம் நிலவுவதற்கான பொருளாதார அவசியத்தை உருவாக்குவது என்ற நோக்கங்களை முன்வைத்து இரான் இந்தியா எரிவாயுக் குழாய் ஒப்பந்தம் சென்ற ஆண்டில் உருவாக்கப்பட்டது. மூன்று நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில் இருந்தது.

 

இரு நாடுகளுக்கிடையே மட்டுமின்றி, எண்ணெய் எரிவாயு வளம் மிக்க இரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளிலிருந்து தென்கிழக்காசிய நாடுகள் உள்ளிட்ட எல்லா ஆசிய நாடுகளையும் குழாய் மூலம் இணைப்பதற்கான திட்டமும் உருவாக்கப்பட்டிருந்தது. ஆசியப் பகுதிகளில் அமெரிக்க மேலாதிக்கத்தைத் தடுக்கும் நோக்கில் ரசியா மற்றும் சீனாவால் உருவாக்கப்பட்ட ஷாங்காய் கூட்டமைப்பின் அமர்வுகளில் இந்தியா இரான் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கலந்து கொண்டுமிருந்தன.

 

இந்த ஒப்பந்தத்தை தகர்ப்பதற்காகவே மார்ச் 2005இல் இந்தியாவிற்கு "விஜயம்' செய்த அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் கன்டலிசா ரைஸ், தங்களால் ரவுடி அரசாகக் கருதப்படும் இரானுடன் இந்தியா இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டால் பொருளாதாரத் தடையை எதிர்நோக்க வேண்டிவரும் என்று வெளிப்படையாக எச்சரித்தார். தன்னுடைய எரிசக்தித் தேவைகளுக்கு, கரியமில வாயுவை வெளியிட்டு சுற்றுச்சூழலை மாசாக்காத அணுசக்தியைப் பயன்படுத்துவது நல்லதென்றும் அதற்கு அமெரிக்கா உதவத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இந்தியாவை உலக வல்லரசாக்குவது என்று அமெரிக்கா திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

கபடமும் திமிரும் நிறைந்த இந்தப் பேச்சை அரசு உடனே கண்டித்திருக்க வேண்டும். மாறாக, பிரதமர் மானங்கெட்ட சிங் அமெரிக்காவிலிருந்து இதை வழிமொழிந்தார். இரானிலிருந்து எரிவாயு கொண்டு வருவது பாதுகாப்பற்றது என்றும், அதற்கு எந்த வங்கியும் கடன் கொடுக்காது என்றும் அறிவித்ததுடன் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயற்சி எடுத்த மணிசங்கர் அய்யரை பதவியிலிருந்து தூக்கினார்.

 

சுற்றுச்சூழல் குறித்த அமெரிக்காவின் அக்கறைக்கு விளக்கம் தேவையில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர்தான், எரிவாயு இறக்குமதி செய்து அதிலிருந்து மின்சாரம் தயாரிப்பதாகக் கூறிய அமெரிக்க என்ரானுக்கு இந்திய அரசு அனுமதி அளித்தது. பிறகு என்ரான் திவாலான பின் அந்த நிறுவனம் வாங்கிய கடன் 3300 கோடி ரூபாயை நம் வரிப்பணத்திலிருந்து கட்டியிருக்கிறது மன்மோகன் அரசு. இன்று அதே அமெரிக்கா எரிவாயுவை விட அணுசக்தி சிறந்தது என்று சொன்னவுடனே "ஆமாம்' என்று தலையாட்டுவதுடன் அணுசக்தி என்ற பெயரால் அடுத்த அடிமைத்தனத்திற்கு நாட்டை தயார்படுத்துகிறது.

 

அணுசக்தித் துறையைப் பொருத்தவரை, அதன் சிவில் பயன்பாட்டுக்கும் (மின்சாரம் போன்றவை) இராணுவப் பயன்பாட்டுக்கும் இடையில் வேறுபாடு இருந்தாலும், இவற்றின் அடிப்படையாக அமையும் ஆய்வுகளில் வேறுபாடு இல்லை. மேலும், அணுவெடிப்பு சோதனை நடத்தியுள்ள இந்தியா, அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் (கேகூ) கையெழுத்திடவும் மறுத்து வரும் நாடுமாகும். இதன் காரணமாக, அவ்வப்போது பொருளாதாரத் தடைகள் விதிப்பதுடன், அணுசக்தி தயாரிப்புக்குத் தேவையான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை இந்தியாவுக்கு வழங்க அணு ஆயுத வல்லரசுகள் மறுத்தும் வருகின்றன.

 

இந்தியாவில் யுரேனியம் கிடைப்பதில்லை என்றாலும், அணுசக்தி தயாரிக்கப் பயன்படும் தோரியம் என்ற தாதுப்பொருள் ஏராளமாக (உலக இருப்பில் 75மூ) உள்ளது. துவக்கமுதலே இந்தியாவின் அணுசக்தி ஆய்வுகள் தோரியத்தை மையமாக வைத்து செய்யப்படுவதால், இந்த ஆய்வில் முன்னிலை வகிக்கிறோம் என்றும் இறுதிக்கட்ட ஆய்வில் உள்ள நாம் வெகு விரைவில் இத்துறையில் உலகின் முதல் நாடாகிவிடுவோம் என்றும் கூறுகிறார், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநர் ஏ.என்.பிரசாத். இதன் மூலம் ஆண்டுக்கு 5,30,000 மெகாவாட் மின்சாரத்தை அடுத்த 300 ஆண்டுகளுக்கு உற்பத்தி செய்ய முடியும் என்றும் கூறுகிறார்.

 

மன்மோகன் சிங் கும்பல் அமெரிக்காவில் கையெழுத்திட்டிருக்கும் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், தோரியத்திலிருந்து அணுசக்தி தயாரிக்கும் இந்த சுயசார்பான ஆய்வை ஒழித்துக் கட்டி, யுரேனியத்தை, அதாவது அமெரிக்க இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையை இந்தியா மீது திணிக்கிறது. அணுமின்சார உற்பத்தி தோற்றுவிக்கும் அணுக்கழிவிலிருந்துதான் அணு ஆயுதம் தயாரிக்கப்படுவதால், இந்த அணுக்கழிவுகள் அனைத்தையும் தன்னிடம் ஒப்படைத்துவிட வேண்டுமென அமெரிக்கா கோருகிறது. மேலும், சிவில் உற்பத்திக்குத் தரப்படும் யுரேனியம் ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தப்படாமல் இருக்கிறதா என்று கண்காணிக்கும் அதிகாரமும், இந்திய அணு ஆய்வுகளை சோதனையிடும் அதிகாரமும் தனக்கு வேண்டுமென்கிறது.

 

இந்த ஒப்பந்தம் ஒரு அடிமைச் சாசனம் என்று எதிர்க்கும் இந்திய அணு விஞ்ஞானிகள் அனைவரும், அணுசக்தித் துறையில் அமெரிக்கா முன்னிலை வகிக்கவில்லை என்றும், தற்போதைய நமது மொத்த மின் சக்தி தேவையில் 3மூ மட்டுமே அணுசக்தியிலிருந்து கிடைப்பது என்பதால் இந்த ஒப்பந்தமே அர்த்தமற்றது என்றும் குமுறுகிறார்கள்.

 

ஆனால், இவையெதையும் மன்மோகன் அரசு பொருட்படுத்தவில்லை. அணுசக்தி ஆய்வில் முன்னேறிய நாடு என்ற "பிரம்மரிஷி' பட்டத்தை அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்கவிருப்பதாகவும், ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பிடிக்க இது உதவுமென்றும், அதாவது ரைஸ் கூறியது போல இந்தியாவை அமெரிக்கா வல்லரசாக்குமென்றும், அதற்காக இத்தகைய தியாகங்களைச் செய்யலாமென்றும் நியாயப்படுத்துகிறது. ஆனால், இந்தியாவை "அணு ஆய்வில் முன்னேறிய நாடு' என்று தாங்கள் கருதவில்லையென்றும், அணு ஆய்வில் ஈடுபட்டுவரும் நாடு என்று மட்டுமே கருதுவதாகவும் கூறி குட்டை உடைத்துவிட்டார், அமெரிக்க வெளியுறவுத்துறை இணைச்செயலர் பிரான்ஸ்.

 

இருந்தபோதிலும், புஷ் வருகையையொட்டி இந்திய அமெரிக்க அணுசக்தி கூட்டு என்ற பெயரிலான இந்த அடிமை ஒப்பந்தத்தை நிறைவேற்றத் துடிக்கிறது மன்மோகன் அரசு. ஏனெனில், இதற்கான அடிப்படை இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தத்தில் இருக்கிறது. ஆசியப் பகுதியில் சீனாவுக்கு எதிரான அமெரிக்க அடியாளாக இந்தியாவை மாற்றும் ஜூலை, 2005 ஒப்பந்தம் இந்த அணுசக்தி அடிமைத்தனத்தை முன் நிபந்தனையாகக் கொண்டது. இந்தியாவில் சீனத்தை குறிவைத்து பாட்ரியட் ஏவுகணைகளை நிறுவுவது, பனிமலைகள் முதல் பாலைவனம் வரை அனைத்து வாய்ப்புகளையும் கொண்ட இந்தியாவில் தனது ஆக்கிரமிப்புப் போருக்கான பயிற்சிகளை அமெரிக்க இராணுவம் மேற்கொள்வது, அமெரிக்காவின் எதிர்கால ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் காலாட்படையாக இந்திய இராணுவம் பங்கு பெறுவது, 32,000 கோடி ரூபாய்க்கு அமெரிக்காவிடமிருந்து ஆயுதக் கொள்முதல், அமெரிக்கஇந்திய கடற்படைகள் இணைந்து இந்து மாக்கடல் பிராந்தியத்தில் ரோந்து சுற்றுவது என்பன போன்ற பல அம்சங்களை உள்ளடக்கியது அவ்வொப்பந்தம்.

 

வல்லரசு என்ற பெயரில் அமெரிக்க அடியாளாக நியமனம் பெறத்துடிக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தின் இந்தக் கனவுதான் இரானுக்கு எதிரான அநீதியான தீர்மானத்தில் இந்தியாவை கையெழுத்திட வைத்திருக்கிறது. உலக நாடுகளும் மக்களும் கண்டு வெறுக்கும் இசுரேலைப் போன்ற ஆனால் அதைவிடத் தரம் தாழ்ந்த அடியாளாக நம் நாடு மாற்றப்படுகிறது. மறுகாலனியாக்கம் தோற்றுவிக்கும் பொருளாதார அடிமைத்தனத்தினும் கொடிய இந்த அடியாள்தனத்திலிருந்து நாட்டை விடுவிக்க வேண்டுமானால் உளவாளி மன்மோகன் சிங் அரசு உடனே தூக்கியெறியப்பட வேண்டும். அமெரிக்க மேலாதிக்கத்திற்கும் மறுகாலனியாதிக்கத்திற்கும் எதிரான போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படவேண்டும்.

 

ரஹீம்