Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் பிரான்சை உலுக்கிய மாணவர் போராட்டம் தனியார்மயத் தாக்குதலை ஒன்றுபட்டுப் போராடி விழ்த்த முடியும் என நிரூபித்துள்ளனர், பிரெஞ்சு பல்கலைக்கழக் மாணவர்கள்

பிரான்சை உலுக்கிய மாணவர் போராட்டம் தனியார்மயத் தாக்குதலை ஒன்றுபட்டுப் போராடி விழ்த்த முடியும் என நிரூபித்துள்ளனர், பிரெஞ்சு பல்கலைக்கழக் மாணவர்கள்

  • PDF

05_2006.jpg

"தெருப் போராட்டங்களின் ஆட்சி நடைபெறுகிறது; அதிபர் சிராக்கே, பதவியை விட்டு விலகு!'', ""அதிபர் சிராக்கே, தெருப் போராட்டங்களின் சக்தியைக் குறைத்து மதிப்பிடாதே!'' கடந்த மூன்று மாதங்களாக இப்படிபட்ட போராட்ட முழக்கங்கள் பிரான்சு நாட்டின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்து, பிரெஞ்சு ஏகாதிபத்திய ஆளுங் கும்பலின் வயிற்றைக் கலக்கி வந்தன.

 

            பிரான்சு நாட்டிலுள்ள 84 பல்கலைக்கழகங்களுள், நான்கில் மூன்று பங்கு பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு, இத்தெருப் போராட்டங்களில் கலந்து கொண்டதோடு, இப்போராட்டத்தின் முன்னணி வீரர்களாக இருந்தனர்.

            பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக பள்ளிக்கூட மாணவர்கள், அரசாங்க  தனியார்துறை ஊழியர்கள், வேலையில்லா பட்டதாரிகள், இளைஞர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், அனைத்து இடதுசாரி தொழிற்சங்கங்கள் என ஒட்டுமொத்த பிரான்சு நாடே, அந்நாட்டின் ஆளும் கும்பலை எதிர்த்து நின்றது.

            ஒருபுறம் போலீசின் ஒடுக்குமுறை; இன்னொருபுறம் பேச்சு வார்த்தை நாடகம் என்ற கிடுக்கிப் பிடிக்குள் இப்போராட்டத்தை நசுக்கிவிட பிரெஞ்சு அரசாங்கம் முயன்றது. அதேபொழுதில், மாணவர்களின் போராட்டக் குணமோ, ""செய் அல்லத செத்துமடி'' என்பதில் உறுதியாக நின்றது.

            இப்படி பிரான்சு நாடே பற்றி எரிய, ஒரு சட்டதிருத்தம்தான் காரணமாக அமைந்தது. பிரெஞ்சு ஆளும் கும்பல் அந்தச் சட்டத்திருத்தத்திற்கு இட்டிருக்கும் பெயர், ""முதல் வேலைவாய்ப்பு ஒப்பந்தம்''.

 

            பிரெஞ்சு தொழிலாளர் நலச் சட்டத்தின்படி, ஒரு தொழிலாளி புதிய பணியில் சேர்ந்து, மூன்று மாதம் தொடங்கி ஆறு மாதம் முடியவுள்ள தனது நன்னடத்தைக் காலத்தை  முடித்துவிட்டாரென்றால், அவர் நிரந்தரத் தொழிலாளியாக மாறிவிடுவார். அவரை நன்னடத்தைக் காலத்தில் கூட எளிதாகப் பணி நீக்கம் செய்ய முடியாதபடி சட்டப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

            பிரெஞ்சு அரசாங்கத்தால் தற்பொழுது கொண்டு வரப்பட்டுள்ள திருத்தம், இந்த உரிமைக்கு உலை வைக்கிறது. இச்சட்டத் திருத்தத்தின்படி, புதிதாகப் பணியில் சேரும் 26 வயதுக்குக் கீழான தொழிலாளர்களின் நன்னடத்தைக் காலம் இரண்டு ஆண்டுகள் என நீடிக்கப்பட்டுள்ளதோடு, நன்னடத்தை காலத்தில் எவ்விதக் காரணமும் அளிக்காமல் இந்த இளைய தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்யலாம் என்ற சலுகையினையும் முதலாளிகளுக்கு வாரி வழங்கியுள்ளது.

****

            பிரான்சு, உலகின் மிகப் பெரும் ஏழு பணக்கார நாடுகளில் ஒன்றாக, வெளிப்பார்வைக்கு மிடுக்காகத் தெரிந்தாலும், அந்நாடு உள்ளுக்குள் அழுகி நாறிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. அந்நாட்டின் மக்கள் தொகையில் 25 சதவீதப் பேர், எவ்வித வேலையும் கிடைக்காமல், உதிரிகளாக, நாடோடிகளாக வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். பிரெஞ்சு கருப்பின இளைஞர்கள் மத்தியில் இந்த வேலைவாய்ப்பின்மை, 50 சதவீதத்தைத் தாண்டிவிட்டது. வறுமை, ஏழைபணக்காரன் ஏற்றத்தாழ்வு, இனப்பாகுபாடு என்ற முதலாளித்துவத்தின் சாபக்கேடுகளை அந்நாட்டில் சர்வ சாதாரணமாகக் காணமுடியும். பிரெஞ்சு புரட்சியின் மூல முழக்கங்களுள் ஒன்றான சமத்துவம் என்பதை பிரெஞ்சு ஏகாதிபத்தியம் குழி தோண்டிப் புதைத்தே விட்டது.

            பிரெஞ்சு ஏகாதிபத்திய முதலாளிகள், கூலி மலிவாக உள்ள ஏழை நாடுகளில் தங்கள் தொழிற்சாலைகளை இடம் மாற்றி அமைத்துக் கொள்வது; உள்நாட்டில் ஏற்கெனவே இருந்து வரும் தொழிலாளர் நலச் சட்டங்களை ஏய்க்கும் விதத்தில் காலியிடங்களை நிரப்புவது; நிரந்தரப் பணியிடங்களில் பயிற்சியாளர்களை நியமித்து குறைந்த கூலியில் வேலை வாங்கிக் கொள்வது போன்ற பல தந்திரங்களின் மூலம், தங்களின் இலாபம் சரிந்துவிடாமல் பார்த்துக் கொள்வதில் குறியாக உள்ளனர்.

            இந்த இலாபவெறி, பிரெஞ்சு இளைஞர் சமுதாயத்தை வெகுவாகத் தண்டித்து வருகிறது. இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்றுவிட்டு, 30 வயது ஆன பின்னும் நிரந்தர வேலை எதுவும் கிடைக்காமல், எல்லாத் தேவைகளுக்கும் பெற்றோர்களை எதிர்பார்த்து வாழும் இலட்சக்கணக்கான இளைஞர்களை அந்நாட்டில் காண முடியும்.

            ஆனால் பிரெஞ்சு அரசாங்கமும், முதலாளிகளும் இந்த அவலத்திற்குக் காரணமான இலாபவெறியை மூடிமறைத்துவிட்டு, ""பிரெஞ்சுத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள்தான் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தடையாக உள்ளன; உலகமயத்தோடு கலக்க முடியாமல் பிரெஞ்சு சமூகத்தைத் தடுக்கின்றன'' என முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். பிரான்சு நாட்டை பிடித்தாட்டும் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதற்குத்தான், இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருப்பதாகக் கூறுகிறார், அதிபர் சிராக்.

            இச்சட்டத் திருத்தம் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கப் போவதில்லை; மாறாக, பிரெஞ்சு தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்றுள்ள உரிமைகளை வாரத்திற்கு 35 மணி நேர வேலை; வருடத்திற்கு இரண்டு போனசு; சம்பளத்துடன் கூடிய ஐந்து வார கால சுற்றுலா விடுமுறை; ஓய்வூதிய, மருத்துவச் சலுகைகள் ஒவ்வொன்றாக ஒழிக்கப் போகும் நரித்தனத்தின் முதல் படி என்பதனை பல்கலைக்கழக மாணவர்கள், வேலையில்லாத இளைஞர்கள் மட்டுமின்றி, பிரெஞ்சு உழைக்கும் மக்கள் அனைவரும் உணர்ந்திருந்தனர். முதலாளித்துவத்தின் கீழ் அடைந்துள்ள ""பணி பாதுகாப்பு'' என்ற குறைந்தபட்ச உரிமையைப் பாதுகாக்கப் போராடப் போகிறோமா? அல்லது உலகமயமாக்கம் என்னும் காட்டுமிராண்டித்தனத்தின் கீழ் நசுங்கிவிடப் போகிறோமா? என்பதுதான் இப்போராட்டத்தின் மையமான பிரச்சினையாக எழுந்து நின்றது.

            உலகமயத்திற்கும், பிரெஞ்சு முதலாளிகளுக்கும் ஆதரவாக இப்படியொரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்காக, பிரெஞ்சு ஆளும் கட்சி ""நாடாளுமன்ற ஜனநாயகத்தை''க் கூட குழி தோண்டி புதைத்தது. இச்சட்டத் திருத்தம் பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமல், குறுக்கு வழியில் நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

            இச்சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதன்முறையாக பிப்ரவரி 7 அன்று பிரான்சின் பல்வேறு நகரங்களில் மாணவர் சங்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் ஏறத்தாழ 4 இலட்சம் பேர் கலந்து கொண்டனர். இத்திருத்தம் குறுக்கு வழியில் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டவுடனேயே, பிரான்சின் புகழ்பெற்ற ஸோர்போன் பல்கலைக்கழகத்தை மாணவர்கள் கைப்பற்றிக் கொண்டனர். அதிரடி போலீசார் அம்மாணவர்களைத் தடியடி நடத்தி வெளியேற்றிய பிறகு, மாணவர்களின் போராட்டம் மாபெரும் மக்கள் திரள் போராட்டமாக வளர்ந்து சென்றது.

            பல்கலைக்கழக மாணவர்கள்  வேலையில்லாத இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, பிரெஞ்சு அதிபர் சிராக் மார்ச் 27 அன்று இத்திருத்தத்தைச் சட்டமாக அறிவித்தார். இதனை எதிர்த்து மார்ச் 28 அன்று பிரான்சு நாடெங்கும் 130 இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் ஏறத்தாழ 30 இலட்சம் பேர் பங்கு பெற்றனர்.

            போராட்டத்தில் ஈடுபட்ட எந்தவொரு சங்கமும் அரசாங்கத்தோடு சமரச பேச்சுவார்த்தை நடத்த முன்வராததால், அதிபர் சிராக் ஒருதலைப்பட்சமாக, ""சட்டத் திருத்தத்தில் உள்ள நன்னடத்தைக் காலத்தை ஒரு வருட காலமாகக் குறைத்துக் கொள்வதாகவும்; நன்னடத்தைக் காலத்தில் வேலை நீக்கம் செய்யப்படும் இளம் தொழிலாளர்களுக்கு, அதற்குரிய காரணம் சொல்லப்பட வேண்டும் என்ற புதிய விதியை உருவாக்கப் போவதாகவும்'' வாக்குறுதி கொடுத்தார். இந்த சில்லறை சலுகைகள் போராட்டத்தைப் பிசுபிசுக்கச் செய்துவிடும் என எதிர்பார்த்திருந்த பிரெஞ்சு ஆளும் கட்சிக்கு ஏமாற்றமே பரிசாகக் கிடைத்தது.

            அதிபர் சிராக் இந்தச் சில்லறை சலுகைகளை, தனது தேசிய உரையில் பிரெஞ்சு நாட்டு மக்களுக்கு அறிவித்த அதே நேரத்தில், பிரெஞ்சு புரட்சியின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள பாஸ்டில் சதுக்கத்தில் கூடிய மாணவர்கள், சிராக்கைப் பதவியை விட்டு விலகக் கோரி ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இச்சட்டத் திருத்தத்தை எவ்வித நிபந்தனையும் இன்றி முழுமையாகத் திரும்பப் பெறக் கோரி ஏப்ரல் 4 அன்று நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில், பிரான்சு நாடே உறைந்தே போனது. நன்னடத்தைக் காலம் குறித்த புதிய விதிகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அதிபர் சிராக் ஏப்ரல் 10 அன்று அறிவித்த பிறகுதான், எட்டு வாரங்களாகத் தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டங்களும், மோதல்களும் முடிவுக்கு வந்தன.

            பிரான்சைப் போலவே இந்தியாவிலும் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது. மத்திய மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வரும் வேலை நியமனத் தடைச் சட்டம், இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை இருட்டாக்கி விட்டது. பிரெஞ்சு அதிபர் சிராக் போலவே பிரதமர் மன்மோகன் சிங்கும் தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தினால்தான் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனக் கதைவிட்டுக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் பிரெஞ்சு இளைஞர்களும், உழைக்கும் மக்களும் இணைந்து போராடி அடைந்துள்ள வெற்றி நமது நாட்டு இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் புதிய நம்பிக்கையை அளிப்பதாகவே உள்ளது!

மு ரஹீம்