Sat04202024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் இந்து மதவெறியின் பரிணாமம்: அன்று சோமபானம்! இன்று கோகெய்ன்!

இந்து மதவெறியின் பரிணாமம்: அன்று சோமபானம்! இன்று கோகெய்ன்!

  • PDF

07_2006.jpg

போதை மருந்தை வாங்கி உட்கொண்ட குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட ராகுல் மகாஜனின் கதையை, முதலாளித்துவ ஊடகங்கள் அனைத்தும் ""செண்டிமென்ட்'' கலந்து கொடுத்தன. அந்த 31 வயது இளைஞனின் தந்தை பிரமோத் மகாஜன், தனது சொந்த தம்பியாலேயே சுடப்பட்டு இறந்து போன சோகம் மறைவதற்குள்ளாகவே, மகாஜன் குடும்பத்தைத் தாக்கிய இரண்டாவது பேரிடியாக, இந்த விவகாரத்தை முதலாளித்துவ பத்திரிகைகளும், ஓட்டுச்சீட்டு அரசியல்வாதிகளும் சித்தரித்து வருகின்றனர்.

 

ராகுல் மகாஜனின் குடும்பம் வருத்தம் அடைந்திருக்கும். ஆனால், எதற்காக? ராகுல் மகாஜன் போதை மருந்து உட்கொள்ளும் பழக்கமுடையவர் என்பது மகாஜன் குடும்பத்திற்கு மட்டுமல்ல, வாஜ்பாய் உள்ளிட்டு, பிரமோத் மகாஜனோடு நெருக்கமாக இருந்த பா.ஜ.க. தலைவர்கள் அனைவருக்கும் தெரியும். இந்த உல்லாச விவகாரம் அம்பலப்பட்டு கைது வரை போய், ராகுல் மகாஜனின் எதிர்கால அரசியல் வாழ்வு பின்னடைவுக்கு உள்ளாகிவிட்டதே என்பதுதான் மகாஜன் குடும்பத்தின் வருத்தமாக இருக்கும். ஏனென்றால், பிரமோத் மகாஜன் இறந்து போனதையடுத்து அவரது வாரிசான ராகுல் மகாஜனை பா.ஜ.க.வில் ஏதாவதொரு பதவியில் திணித்து விடுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தன. பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ்.இன் உயர்மட்டத் தலைவர்களும இதற்குச் சம்மதித்திருந்தனர்.

 

""ராம பக்தர்களின் கட்சியாக அறியப்பட்ட பா.ஜ.க., இப்பொழுது அனைத்துத் தரப்பினரின் கட்சியாக மாறிவிட்டதற்கு இந்த நள்ளிரவு போதையாட்டமே சாட்சி''; ""இந்தியா ஒளிர்கிறது என்ற முழக்கத்திற்குப் பதிலாக, இந்தியா உறிஞ்சுகிறது என்ற முழக்கத்தை இனி பா.ஜ.க. முன் வைக்கலாம்'' என சொந்தக் கட்சிக்காரர்களாலேயே கிண்டல் செய்யப்படும் அளவிற்கு, இந்த விவகாரம் பா.ஜ.க.விற்குப் பாதகமாக உள்ளது. அதனால்தான், இந்தப் போதை மருந்து விவகாரத்தை முளையிலேயே மூடி மறைத்துவிடவும்; திசை திருப்பிவிடவும் பா.ஜ.க. தலைவர்கள் தீவிரமாக முயன்றனர்.

 

ராகுல் மகாஜனும், விவேக் மொய்த்ராவும் தில்லியில் ஜூன் 1 அன்று இரவு தங்கியிருந்த அரசாங்க வீட்டுக்கு அருகிலேயே மைய அரசுக்குச் சொந்தமான அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை இருந்தும், அவர்களை அங்கு கொண்டு சேர்க்காமல், தொலைவில் உள்ள தனியார் அப்பல்லோ மருத்துவமனைக்கு தூக்கிப் போனதற்குக் காரணமே, இந்த விவகாரத்தை அதன் சுவடே தெரியாமல் மூடி மறைத்துவிட வேண்டும் என்பதுதான். பிரமோத் மகாஜனிடம் முன்பு செயலாளராக வேலை பார்த்த ஹரீஷ் சர்மாதான் இந்த யோசனையைக் கூறியதோடு, அந்த வீட்டில் போதை மருந்து உட்கொண்டதற்கான எல்லா ஆதாரங்களையும் அழித்துவிடும்படி வேலைக்காரர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அப்பல்லோ மருத்துவமனையின் நிறுவனர் பிரதாப் சி.ரெட்டி, அவரது உதவியாளர், மற்றும் ஹரீஷ் சர்மா இம்மூவருக்கும் இடையே அந்த நள்ளிரவு நேரத்திலும் இது குறித்து செல்ஃபோன் உரையாடல் நடந்ததாக போலீசார் குற்றஞ் சுமத்தியுள்ளனர்.

 

எதிர்பாராதவிதமாக விவேக் மொய்த்ரா இறந்து போனதால், இந்தப் போதை விவகாரம் அம்பலத்திற்கு வந்துவிட்டது. ஆனாலும், அப்பல்லோ நிர்வாகம், அவர்கள் இருவருக்கும் விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற வதந்தியைக் கிளப்பிவிட்டது. பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், ராகுல் மகாஜனின் மாமாவுமான கோபிநாத் முண்டே, இந்த வதந்தியைப் பத்திரிகையாளர்களிடம் ஊதிப் பெருக்கினார்.

 

""நாங்கள் 14 விதமான ரத்தப் பரிசோதனைகளைச் செய்துவிட்டோம்; ராகுல் மகாஜன் போதை மருந்து உட்கொண்டதற்கான அறிகுறி எதுவும் இல்லை'' என்ற புளுகு மூட்டையை அப்பல்லோ நிர்வாகம் அசராமல் அவிழ்த்துவிட்டது. ஆனால், வேறொரு ஆய்வுக் கூடத்தில் ராகுல் மகாஜன் போதை மருந்து உட்கொண்டது நிரூபணமான பிறகு, ""நாங்கள் செய்தது வேறு விதமான ஆய்வு; அவர்கள் செய்தது வேறுவிதமான ஆய்வு'' எனப் பூசி மெழுகியது.

 

""ராகுல் மகாஜன் அப்பல்லோவிற்குக் கொண்டு வரப்பட்டவுடனேயே, அவரது சிறுநீரை எடுத்துப் பரிசோதிக்காமல், திட்டமிட்டே கால தாமதம் செய்துள்ளனர். பரிசோதனைக்கு முன்பாகவே, நரம்பு மூலம் திரவ மருந்துகளை அவரது உடம்புக்குள் செலுத்தி, சிறுநீரை வெளியேற்றியதன் மூலம், ராகுல் மகாஜன் போதை மருந்து உட்கொண்டதற்கான ஆதாரங்களை அழிக்க முயன்றுள்ளனர். ராகுல் மகாஜனை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டிய அவசியமே இல்லாதபொழுது, அவரை இரண்டு நாட்கள் அந்தப் பிரிவில் தொடர்ந்து வைத்திருந்து, போலீசு விசாரணையைத் தாமதப்படுத்தியுள்ளனர்'' என அப்பல்லோ நிர்வாகம் மீது போலீசார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

 

சில பா.ஜ.க. தலைவர்கள் தங்கள் பங்கிற்கு, ""இதற்குப் பின்னால் திட்டமிட்ட சதி இருப்பதாகவும்; ராகுல் மகாஜனைக் கொலை செய்யும் நோக்கத்தோடு யாரோ, எதையோ கலந்து கொடுத்துவிட்டதாகவும்'' பத்திரிகைகளுக்கு பேட்டியளித்து, பிரச்சினையைத் திசை திருப்ப முயன்றனர்.

 

இறுதியாக, ராகுல் மகாஜன் போதை மருந்து உட்கொண்டது மருத்துவ ஆய்வு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டவுடன், எல்லாவற்றுக்கும் காரணம் மொய்த்ரா தான் பிரமோத் மகாஜனிடம் அந்தரங்கச் செயலாளராக இருந்த விவேக் மொய்த்ராதான் சாஹில் ஜாரூவைத் தொலைபேசி மூலம் அழைத்தார்; மொய்த்ராதான் சரக்கு வாங்கிவரச் சொல்லி ஜாரூவிடம் பணம் கொடுத்தார். போலீசு கைப்பற்றியிருக்கும் வெள்ளை பவுடர் கூட மொய்த்ராவிடமிருந்துதான் எடுக்கப்பட்டதுதான் எனப் பழி அனைத்தையும் செத்துப் போனவன் மீது போட்டுவிட்டு, ராகுலை, வாயில் விரலை வைத்தால் கூடக் கடிக்கத் தெரியாத குழந்தை போலக் காட்டுகிறார்கள்.

 

இந்த வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் கூட, சட்டத்திலுள்ள சில தொழில்நுட்பக் காரணிகளை ராகுல் மகாஜனின் சிறுநீர் பரிசோதனையில் போதை மருந்தின் அளவு குறைவாக இருப்பது; அவரிடமிருந்து போதை மருந்து எதனையும் கைப்பற்ற முடியாமல் போனது; முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் போலீசார் செய்துள்ள குளறுபடிகள் வைத்துக் கொண்டு, ராகுல் மகாஜனை எதிர்பாராத விதத்தில் சிக்கிக் கொண்ட பலிகடாவைப் போலச் சித்தரித்து, ஒன்பதே நாட்களில் பிணையில் விடுதலை செய்துவிட்டது.

 

ஆனால், ராகுல் மகாஜனின் கடந்த கால வாழ்க்கையைப் பார்த்தால், அவர் கோயில் காளையைப் போலத்தான் ஊர் மேய்ந்து கொண்டிருந்தார். வசதி, பணம், செல்வாக்கு இருந்த அளவிற்கு, அவருக்குப் படிப்பு ஏறியதாகத் தெரியவில்லை. விமான ஓட்டுநர் பயிற்சி பெறுவதற்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்; அதிலும் அவர் தேறவில்லை. எனினும், பிரமோத் மகாஜன், தனது மகனுக்கு, தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, ""ஜெட் ஏர்வேஸ்'' நிறுவனத்தில் விமானி வேலை வாங்கிக் கொடுத்தார். அந்த வேலையிலும் அவர் நிலைக்கவில்லை. கணினி மென்பொருள் நிறுவனம் நடத்துவதாக பேர் பண்ணிக் கொண்டிருந்த ராகுல் மகாஜன், தனது தந்தை இறந்து போனவுடன், வாரிசு உரிமையைப் பயன்படுத்தி அரசியலில் குதிக்கத் தயாரானார்.

 

போதை மருந்து உட்கொள்ளும் பழக்கத்தில் இருந்து விடுபட, அவர் ஏற்கெனவே ஒருமுறை இலண்டனில் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. மும்பய் நகரில், பெரிய மனிதர்கள் நடத்தும் இரவு விருந்துகளில் கலந்து கொள்ளும் பழக்கமுடைய ராகுல் மகாஜன், பா.ஜ.க.வின் ""இந்துப் பண்பாட்டில்'' மூழ்கிப் போனதில்லை. சம்பவம் நடந்த அன்று, போதை மருந்தை மூக்கு வழியாக உறிஞ்சியவுடனேயே, சரக்கில் கலப்படம் இருப்பதாகச் சொன்னவரே ராகுல்தான் எனச் சாட்சியங்கள் கூறுகின்றன.

 

அன்று இரவு போதை ஏற்றிக் கொள்ள வேண்டும் எனப் பைத்தியம் போல அலைந்த ராகுல் மொய்த்ரா ஜோடி, அதற்காக பதினைந்தாயிரம் ரூபாயைத் தாராளமாகச் செலவழித்திருக்கிறது. ஒரு ஐநூறு ரூபாயைச் சுருட்டிக் கொண்டு, அதைப் பயன்படுத்திதான் ராகுல் போதை மருந்தை உறிஞ்சியிருக்கிறார். இப்படிப்பட்ட உல்லாச ஊதாரிப் பேர்வழி, மேடையேறி, மைக்கைப் பிடித்துக் கொண்டு, ஏழை மக்களைப் பற்றியும், நாட்டு நலனைப் பற்றியும் பேசுவது கனவில் வருவதைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியுமா?

 

போதை தலைக்கேறிப் போய் செத்துப்போன விவேக் மொய்த்ரா 1980களில் இருந்தே பா.ஜ.க.வின் இளைஞர் அணியில் உறுப்பினராக இருந்து வந்துள்ளார். பா.ஜ.க.வின் தலைவர்கள், ""மொய்த்ரா உற்சாகமாகச் செயல்பட்ட கட்சி ஊழியர்'' எனப் புகழஞ்சலி செலுத்துகின்றனர். அவர் அப்படி உற்சாகமாகச் செய்த கட்சி வேலை என்ன தெரியுமா? கட்சிக்காக தரகு முதலாளிகளிடம் வாங்கும் நன்கொடையைப் பதுக்கி வைப்பதில், பிரமோத் மகாஜனுக்கு உதவியாக இருந்திருக்கிறார். பிரமோத் மகாஜனின் இரகசிய நடவடிக்கைகள் அனைத்திற்கும் பக்கபலமாக இருந்து வந்துள்ளார்.

 

பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்.இன் அடிமட்டத் தொண்டர்கள் இந்து மதவெறி போதை தலைக்கேறிப் போய், சூலத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஊரைக் கொளுத்தும்பொழுது, மொய்த்ரா ஒரு கையில் பணப் பெட்டியோடும், இன்னொரு கையில் ஒயின் பாட்டிலோடும் உல்லாசமாக இருந்திருக்கிறார். இந்தப் பண்பாடு இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானதல்ல. இந்து மதவெறி அரசியலின் இன்னொரு பக்கம்தான் ராகுல் மொய்த்ராவின் அந்தரங்க வாழ்க்கை. கஞ்சா போதையும் சோமபானம் சுராபானம் அடித்துவிட்டு சுருண்டு போவதும் ஆரிய இந்துப் பண்பாடு தானே!

 

சங்கப் பரிவார அமைப்புகளில், ஊழல் உல்லாசம் ஊதாரித்தனத்தில் மூழ்கித் திளைக்கும் தலைவர்கள் இருப்பது, தெகல்கா ஊழல், பெட்ரோல் பங்க் ஒதுக்கீடு ஊழல், நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க இலஞ்சம் வாங்கியது, தகாத பாலியல் உறவில் பா.ஜ.க.வின் பொதுச் செயலாளர் சஞ்சய் ஜோஷி மாட்டிக் கொண்டது ஆகியவற்றின் மூலம் ஏற்கெனவே அம்பலமாகியிருக்கிறது. அதனால்தான், வாஜ்பாயி போன்ற பெருந்தலைவர்கள்கூட போதை பழக்கத்துக்கு அடிமையான ராகுல் மகாஜனைக் கைகழுவிவிடாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

 

ராகுல் மகாஜனைப் போல உல்லாசம் ஊதாரித்தனத்தில் திளைக்கும் இளம் தலைமுறையை அனைத்து ஓட்டுக்கட்சிகளிலும் காண முடியும். அந்நிய நாட்டுப் பெண் ஒருவருடன் இலண்டனில் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த ராகுல் காந்தி, திடீரென அரசியலுக்கு இழுத்து வரப்பட்டு, எம்.பி. ஆக்கப்பட்டார்.

 

இறந்து போன பிஜு பட் நாயக்கின் மகன் என்ற ஒரே தகுதியின் காரணமாக ஒரிசாவின் முதல் அமைச்சர் ஆக்கப்பட்ட நவீன் பட்நாயக், மாலை நேரமானால், தனது நண்பர்களோடு சேர்ந்து கொண்டு குடியும் கும்மாளமுமாகப் பொழுதை ஓட்டுவார்.

 

தில்லியில் உள்ள ஒரு மதுபான விடுதியில், நள்ளிரவு நேரத்தில் தனக்கு ""தண்ணி'' ஊத்தி தர மறுத்ததற்காக ஜெஸிகா லால் என்ற பணிப்பெண்ணைப் பலர் முன்னிலையில் சுட்டுக் கொன்றான், சண்டீகர் நகர காங்கிரசு தலைவராக இருந்த வினோத் சர்மாவின் மகன் மனுசர்மா.

 

முலயம் சிங் யாதவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான அகிலேஷ் யாதவ் மீது, ஒரு பெண்ணை மானபங்கப்படுத்த முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனால்தான் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் ராகுல் மகாஜன் விவகாரத்தை ""செண்டிமெண்ட்'' கலந்து முடித்து விடுவதில் ஒன்றாக நிற்கின்றன.

 

பரூக் அப்துல்லாவின் மகன் ஓமர் அப்துல்லா (தேசிய மாநாட்டுக் கட்சி); ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட் (காங்கிரசு); விஜயராஜே சிந்தியாவின் மகன் துஷ்யந்த் (பா.ஜ.க.); முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் (தி.மு.க.) என ஒரு பெரிய இளைய தலைமுறை பட்டாளம், ஓட்டுக்கட்சிகளிலும் அரசாங்கத்திலும் அதிகாரமிக்க பதவிகளில் திணிக்கப்பட்டுள்ளனர்.

 

திராவிடம், தேசியம், பொதுவுடைமை, ஜனநாயகம் என ஏதாவதொரு கொள்கை, தத்துவம், கோட்பாடு அடிப்படையில் தமது அரசியல்வாழ்வைத் தொடங்கிய பழைய தலைமுறை, சுயநலம், பிழைப்புவாதம், இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள், பொறுக்கி அரசியல் என்ற சீரழிந்த பண்புகளோடுதான் ஓய்வு பெறுகிறது. தரகு முதலாளிகளான ராகுல் பஜாஜ், அனில் அம்பானி, விஜய் மல்லையா மற்றும் 220 கோடி ரூபாய் குடும்பச் சொத்து கொண்ட அமிதாப்பின் மனைவி ஜெயாபச்சன் போன்ற கோடீசுவரர்களைக் கூட எம்.பி.யாகத் தேர்ந்தெடுத்து அனுப்பும் அளவிற்கு ஓட்டுக்கட்சிகள் கொள்கை, கோட்பாடு எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டன.

 

புதிய தலைமுறை அரசியல்வாதிகளின் கூட்டம் இச்சீரழிவுகளுக்கு எதிரான போராட்டத்தின் விளைவாக தலை எடுக்கவில்லை. மாறாக, இச்சீரழிவுகளின் பக்க விளைவாக அரசியலில் நுழைந்திருக்கிறார்கள் அல்லது திணிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், இவர்கள் எந்தவித சமூக விழுமியங்கள், மதிப்பீடுகள், ஒழுங்குமுறைகளையும் அடிப்படையாக வைத்து வளர்த்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. அதனால், இப்புதிய இளந்தலைமுறை அரசியல் தலைவர்கள் ஏகாதிபத்திய ஒட்டுண்ணிச் சுரண்டலையும், அடக்குமுறையையும் மட்டுமல்ல் ""டிஸ்கொத்தே'' பண்பாட்டையும் நியாயப்படுத்துவார்கள்.

 

மு செல்வம்