துரோகிகள், சிங்களவன் காலை நக்குகின்றவர்கள்…என்று தாமல்லாத எதிர்த்தரப்பைக் கூறிக் கொண்டு, நாங்கள் உணர்ச்சியும் அறிவும் மானமுமுள்ள தமிழர்கள் என்று கூறிக்கொண்டு திரிபவர்களே தமிழினவாதிகள். இவர்கள் வேறு யாருமல்ல. அரசு மூலம் சொகுசு வாகனங்களை, மதுபான பெமிற்றுக்களை, பாராளுமன்ற சலுகைகளை, … பெற்றுக்கொண்டு வாழ்பவர்கள். அனைத்து இனவாதிகளும் கூடிக் கும்மியடிக்கும் கடந்தபோன வரலாறு, இந்த தேர்தலில் கணிசமாக இழந்து போனதால் புலம்புகின்றனர். தமிழினத்தின் ஒற்றுமை பற்றி வகுப்பெடுக்கின்றனர்.
இப்படி தோற்றுப் புலம்பும் இந்தத் தமிழினவாதிகள், புலம்பெயர் தமிழினவாதிகளின் பினாமிகள். புலம்பெயர் தமிழினவாத பிழைப்புவாதக் கும்பல்களின் பிளவுகளுக்கேற்ப, கும்மி அடித்த மற்றும் அடிக்கின்ற பிளவுவாதிகள்.
புலம்பெயர் தமிழினவாதிகளுள் பிளவு என்பது, கொள்கைரீதியானதல்ல. புலிகளுடன் உருவான இந்த அணியின் பிளவு, புலிச் சொத்துகளை ஆட்டையைப் போடவும், புலியை சொல்லிப் பிழைக்கவும்.. யாருக்கு உரிமையுண்டு என்ற மோதலே, பல புலம்பெயர் தமிழினவாத அணிகளை உருவாக்கியது.
இந்த மோதல் இலங்கையில் தமிழினவாத கட்சிகள் மற்றும் வேறு கட்சிகளுமிடையிலான மோதலாக மாறியது. இந்த மோதல் புலம்பெயர் தமிழ் மக்களை தமிழினவாதத்தின் பெயரில் ஏமாற்றிப் பிழைப்பதற்கான கருவியாக மாறியது. யார் தீவிர தமிழினவாதி என்பதை நிறுவுவதும், அதைக்காட்டி புலம்பெயர் நாட்டில் பணம் திரட்டுவதும் என்ற வியாபாரம், தனிநபர்கள் பணம் சம்பாதிக்கும் தொழிலாகப் பரிணாமடைந்திருக்கின்றது.
இலங்கையின் தமிழினவாதக் கட்சிகள், ஆய்வாளர்களின், சமூக வலைத்தளங்கள், யூ-ரியூப் முரண்பாடுகள், புலம்பெயர் வெவ்வேறு தமிழினவாத குழுக்களால் இயக்கப்படும் அதேநேரம், இவர்கள் புலம்பெயர் பணத்தில் இயக்கப்படுகின்ற பொம்மைகளே. இதற்குள் பணம், அதிகாரம் தமக்கு தரப்பட வேண்டும் என்று கோருகின்ற தனிநபர் முரண்பாடுகளும் முட்டி மோதுகின்றது..
அதேநேரம் தமிழ் தேசியத்தை முன்வைத்து இலங்கையில் முதலிடவும், சந்தைப்படுத்தவும் முனையும் மற்றொரு புலம்பெயர் தமிழினவாத தரப்பு மோதுகின்றது. இந்தப் புலம்பெயர் போக்குகளே, தமிழ்தேசிய அணிகளை, அரசியலை தீர்மானிக்கின்றது.
இதனடிப்படையில் தமிழ்நாட்டில் சீமான் இப்படி உருவாக்கப்பட்டார். ஊழலுக்கு எதிரான குரலுடன் வெளிவந்த டொக்டர் அர்ச்சுனா கூட, இறுதியில் புலம்பெயர் தமிழினவாத பின்னணியில் தமிழினவாத சாக்கடையில் இறங்கியுள்ளார்.
பொதுவான இந்தப் புலம்பெயர் அரசியல் அடித்தளத்தில் இருந்துதான், உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட தமிழினவாதமும், அதை மறுக்கும் சுமந்திரனுக்குமான மோதல் எழுகின்றது.
உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட புலம்பெயர் தமிழினவாத வியாபாரிகள் சுமந்திரiனை எதிரியாக்கி இலக்கு வைக்கின்றனர்.
சீமான் போன்று பொய், பித்தலாட்டம் மூலம் இனவாதத்தை உசுப்பேற்றுவதன் மூலம் அரசியல் வியாபரம் செய்யக் கோரும் புலம்பெயர் தமிழினவாத வியாபாரிகள் பின்னணியில் சுமந்திரன் இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றார்.
மறுபக்கத்தில் இலங்கையில் முதலிட விரும்புகின்ற தமிழினவாதிகள், சுமந்திரனை முன்னிறுத்துகின்றனர். இந்த இ;ரு வேறு அடித்தளத்தில், தமிழினவாத தேசியம் குறித்த முரண்பாடுகள் முற்றியிருக்கின்றது.
குறிப்பாக இலங்கைக்குள் வரமுடியாத புலம்பெயர் புலித் தமிழினவாதிகள், வரமுடிந்த புலித் தமிழினவாதிகளுக்கு இடையிலான முரண்பாடு, எந்த வகையில் தமிழினவாதத்தை முன்வைப்பது என்ற அடிப்படையைத் தீர்மானிக்கின்றது.
புலம்பெயர் தமிழினவாதிகளின் வரலாற்றுரீதியான பின்னணியென்ன? புலிகளின் காலத்தில் மனித அறிவுக்கும், சிந்தனைக்கும் இடமிருக்கவில்லை. மனித அறிவும், மனித சிந்தனையும் ஈவிரக்கமின்றி ஒடுக்கப்பட்டதுடன், உசுப்பேத்தும் முட்டாள்தனமே ஊக்குவிக்கப்பட்டது. இந்த முட்டாள்களின் முட்டாள்தனங்களே.. புலம்பெயர் தமிழினவாதிகளுக்கான பொதுச் சிந்தனைக்கான அடித்தளம்.
இந்த அரசியலை மூலதனமாக்கி வியாபாரிகள், ஊழல்வாதிகள், மாபியாக்கள்,… ஒருங்கிணைந்ததுடன், தியாகங்களையும், இராணுவ வெற்றிகளையும் காட்டி மக்களை ஏமாற்றி வாழும் தமிழினவாதக் கும்பல் உருவானது. இந்தக் கும்பல் போராட்டத்தை தங்கள் வியாபாரப் பொருளாக்கினர். போராட்டத்தை தங்கள் விளம்பரத்துக்கும், அடையாளத்துக்கும் பயன்படுத்தினர். இப்படிக் கொழுத்த, வெம்பிய கும்பல், இறுதியில் புலியைப் பலியிட்டனர்.
புலியைப் பலியிட்டவர்கள் தமிழினவாதத்தை முன்வைத்ததுடன், புலிகளின் சொத்துக்களை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு அணிகளாகினர். இவர்கள் தங்கள் தமிழினவாதத்தை பினாமிகள் மூலம் தேர்தலில் முன்வைத்ததுடன், அதை தமக்கு ஏற்பப் பிளந்து வந்தனர்;. இந்த வகையில் தங்களுக்கேற்ற பழைய பெருச்சாளிகளை முன்னிறுத்தி, அவர்களைத் தக்க வைத்துக்கொண்டு, புலம்பெயர் மக்களை ஏமாற்றி பிழைப்பதைத், தொழிலாகவே செய்கின்றனர்.
இலங்கையில் தமிழினவாத உணர்ச்சியைத் தூண்டி அரசியல் நடத்தும்படி கோருகின்றனர். இதற்கு தடையான நபர்களை அகற்றும்படி கோருகின்றனர். உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட ஒற்றுமை – வேற்றுமை மூலமான வெற்றிகள், புலம்பெயர் சமூகத்தில் தொடர்ந்து புலம்பெயர் மக்களை ஏமாற்றிப் பிழைப்பதற்கான பொது வழியாகும்.
இந்த உணர்ச்சி அரசியலுக்கு சுமந்திரன் தடையாக இருப்பதுடன், கட்சி ஜனநாயகம் குறித்து அக்கறையற்ற உணர்ச்சியை மூலதனமாகக் கொண்ட தரப்புகளை கட்சியில் இருந்து களைந்தெடுப்பதில் சுமந்திரன் வெற்றி பெற்று வருகின்றார். இலங்கைச் சட்டதிட்டங்கள் மூலமும், சமூக ஒழுக்கக் கேடுகளை காட்டியும் கட்சியைக் கைப்பற்றவும் முடிகின்றது.
இதன் மூலம் இலங்கையில் முதலிடக் கூடிய தமிழினவாத புலம்பெயர் தரப்பின் ஆதரவு, இவருக்கு கிடைக்கின்றது. இந்தப் புலம்பெயர் தமிழினவாதிகள் கல்வியில் முன்னேறிய தரப்பாக இருக்கின்ற அதேநேரம், தமிழினவாதம் மூலம் தமிழ்மக்கள் மத்தியில் தன்னை முன்னிறுத்த முனைகின்றது.
புலம்பெயர் தமிழினவாதிகளுடன் சேர்ந்து தமிழ் மக்களை அடிமையாக வைத்து எப்படி சூறையாடுவது என்பதில் உள்ள முரண்பாடே, இலங்கைக்குள் தமிழினவாத கட்சிக்குள்ளும், கட்சிகளுக்குமான முரண்பாட்டின் பொது அடித்தளமாகும்.
சுமந்திரன் கடந்தகால புலிகளின் நடவடிக்கைகள் சிலவற்றை விமர்சனம் செய்கின்ற அதேநேரம், எதார்த்தத்தில் எது சாத்தியம் என்ற அடிப்படையில் இருந்து அணுக முற்படுகின்றார். தடுமாற்றங்களுடன் ஒரு தீர்வை நோக்கி செல்ல முற்படுகின்றார்.
சுமந்திரனின் இந்த அணுகுமுறை தங்களது தமிழினவாத உணர்ச்சி அரசியலிருப்பையும், பிழைப்பையும் இல்லாதாக்கிவிடும் என்ற அச்சம், உணர்ச்சியை மூலதனமாகக் கொண்ட தமிழினவாதத் தரப்பின் பொது அச்சமாகியுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் வருகையும், அது தீர்வு காணவிருக்கும் முடிவுகளைக் கண்டு பீதியடைந்திருக்கின்றது.
தமிழினவாதிகளின் ஒற்றுமை பற்றியும், ஒற்றுமை மூலம் கிடைக்கும் எண்ணிக்கையைக் காட்டி, தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை தோல்வியாக காட்டும், கடைசிப் புகலிடத்தில் நின்று தமிழினவாதிகள் புலம்புகின்றனர்.
19.11.2024
தமிழினவாதிகளால் சுமந்திரன் தூற்றப்படுவது ஏன்!?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode