டொக்டர் அர்ச்சுனாவுக்கு எதிராக வரிஞ்சுகட்டிப் பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்திச் செயற்படுகின்றனரா? அர்ச்சுனாவுக்குப் பதில், இந்த யாழ்ப்பாணிகள் யாருக்கு வாக்களிக்கக் கோருகின்றனர்? இந்தக் கேள்விக்கான தேடுதலிலும், பதிலிலுமே, அர்ச்சுனாவுக்கு எதிரான தரப்பின் உண்மை முகங்களை இனம்காண முடியும்.
முக மூடிபோட்ட இந்த வெள்ளை வேட்டிக்காரர்களின் நோக்கம், அர்ச்சுனாவின் நடத்தைகளை விடக் கேவலமானது. அர்ச்சுனாவின் நடத்தையென்பது மூடிமறைக்காத, யாழ்ப்பாணியக் குணாம்சங்களே. இவை தான், மருத்துவ மாபியாக்களுடன் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக மோதவைத்தது. இதிலுள்ள நேர்மையை, அவரின் நடத்தைகளைக் கொண்டு கேலிக்குரியதாக்க முடியாது. ஊழலும், மாபியாத்தனமும்.. பொது உண்மையாகும்.
யாழ் மையவாத தமிழ் மாபியாக்களுடனும், அதன் பிரதிநிதிகளுடன் மோதுவதென்பது தற்கொலைக்கு ஒப்பானது. டொக்டர் அர்ச்சுனா மக்களை முன்னிறுத்தி மருத்துவ மாபியாக்களுடன் மோதிய போது, அரசியல் மாபியாக்கள் ஓடோடி வந்து மருத்துவ மாபியாக்களுக்கு முட்டுக் கொடுத்துப் பாதுகாத்தனர். இதுவொரு வெளிப்படையான உண்மை.
டொக்டர் அர்ச்சுனாவின் நேர்மையே, பொது மக்களின் ஆதரவாக மாறியது. இது அவரை அரசியலுக்கு கொண்டு வந்;தது. அரசியலைத் தவிர வேறு மாற்று வழியிருக்கவில்லை.
இந்தச் சூழலில் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை முன்வைத்து போராடும் இயக்கங்களை, நபர்களை.. இனம் காணத் தவறிய அர்ச்சுனா, தனிமனித வீரசாகசங்கள் மூலம் மக்களை முன்னிறுத்த முனைந்தார். இதை நடைமுறையிலும் செய்ய முற்பட்டார். அடிப்படையில் கடந்தகால தனிநபர் பயங்கரவாத நடவடிக்கைக்கு இது நிகரானது.
ஊழலுக்கு எதிரான மக்கள்திரள் போராட்டத்திற்கான அரசியலையும், அதற்கான அமைப்பு வடிவங்களையும் உருவாக்கிப் போராட்ட வேண்டியது அவசியமாக இருந்தது. இதற்குப் பதில் தன்னை முதன்மைப்படுத்தியும், தன்னை மையப்படுத்தியும் செய்த தனிமனித அரசியல் என்பது, மக்களைச் செயலிலிருந்து விலக்கிச் சென்றது. புலிகளை முன்னிறுத்திய அர்ச்சுனாவின் அரசியற் பார்வை, வரலாற்றுப் பார்வையற்ற சமூகத்திலிருந்து வெளிப்படும் தற்குறித்தனமானது. அரசியல் உள்ளடக்கத்தில் அப்பாவித்தனத்தாலானது.
தனிநபர் வீரசாகசங்கள், தனிநபர் செயற்பாடுகள், சமூக வலைத்தளம்.. மூலம் பொது சிவில் சட்ட நடைமுறைகளுக்கு முரண்பாடாகவும் மாறிச்சென்றது. இவை சட்டத்துக்குட்பட்ட பல்வேறு வழக்குகள், சிறை.. என்ற தொடர் நெருக்கடிக்குள்ளாக்கி வருகின்றது.இந்த வகையில் தன்னை முதன்மைப்படுத்தி, அமைப்பு முறைக்குக் கட்டுப்படாத செயற்பாடுகள், அரசியல் கொள்கையற்ற தான்தோன்றித்தனமான செயற்பாடுகள், தனிமனித உணர்ச்சி… என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் அரசியலில், தனிப்பட்ட விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்ட நண்பர்கள், உதவியவர்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட வேட்பாளர்களை முன்னிறுத்தினார்.
தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளராக, மேட்டுக்குடி பரம்பரை தமிழ் அரசியலை உலுப்புகின்ற ஒரு வேட்பாளராக அர்ச்சுனா மாறியதென்பது, இலங்கையில் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியுடன் ஒருங்கிணைந்து வெளிப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் டொக்டர் அர்ச்சுனாசுக்கு எதிரான அரசியல் சதிகள், கவிழ்ப்புகள் .. அவரின் நடத்தைகள் மீது பின்னப்பட்டு அரங்கில் விவாதமாக்கப்பட்டு வருகின்றது.
1.பெண் வேட்பாளர் கௌசல்யாவை மய்யப்படுத்தி, கேவலப்படுத்தி, இழிவுபடுத்தி.. முன்வைக்கப்படும் பிரச்சாரம்.
2.சர்வதேவரீதியாக நிதி திரட்டுவதாகவும், அதற்காக வங்கி இலக்கங்கள் உள்ளதென்று கூறும் பிரச்சாரங்கள்.
3.சக வேட்பாளரைக் கொண்டு அர்ச்சுனாவை தனிமைப்படுத்தித் தாக்குவது.
4.இப்படி பற்பல
இதன் மூலம் சாதிக்க நினைப்பது என்ன? பழைய வெள்ளை வேட்டி அரசியலை, ஊழல் மாபியாக்களை மறைமுகமாக பாதுகாத்து அவர்களின் பிரதிநிதிகளை வெல்லவைக்க முனைகின்றனர். ஊழலற்ற மக்கள் நலனை முன்னிறுத்தும் அரசியலை, இவர்கள் யாரும் முன்மொழியவில்லை.
பணம் சம்பாதிக்க யூ-ரியூப் நடத்துவோருக்கு கொண்டாட்டம். மக்கள் நலன் சார்ந்து எதுவும் முன்வைக்கப்படுதில்லை.
பெண் வேட்பாளர் கௌசல்யாவின் பழைய காதலனைக் கொண்டு அரங்கேறிய அசிங்கங்களின், பின்னணியில் வெள்ளை வேட்டி மாபியாக்களின் கரங்களின்றி எதுவும் அரங்கேறவில்லை. டொக்டர் அர்ச்சுனாவின் நண்பர் மயூரன் திடீர் பத்திரிகையாளர் சந்திப்பு, தனக்கு வாக்களிக்கக் கோரிய அசிங்கங்களின்; பின்னணியில் .. அர்ச்சுனா முன்னிறுத்திய மாபியாக்களைப் போற்றிப் புகழ்ந்தவை எல்லாம் எந்தப் பின்புலங்களுமின்றி அரங்கேறவில்லை.
இப்படியிருக்க டொக்டர் அர்ச்சுனாவின் தூசணப் பயன்பாடுகள், உணர்ச்சி மொழிகள், வார்த்தைப் பிரயோகங்கள் அனைத்தும் அவருக்குரியதல்ல. அன்றாடம் மூடிமறைத்து பயன்படுத்தும், யாழ்ப்பாணிய ஆணாதிக்க தமிழ் உரையாடல் மொழிதான்.
இதைவிட புலிகள் உள்ளிட்டவர்கள் மோசமாக தூசணத்தைப் பயன்படுத்தும் போது, அதைக் கண்டுகொள்ளாக் கும்பல் இன்று கொதித்தெழுவதேன்? டொக்டர் அர்ச்சுனாவின் ஆணாதிக்க மொழியாடல், இன்று கொதித்துப் பொங்கும் பன்னாடைகளின் மொழி தான். அர்ச்சுனாவுக்கு எதிராகப் பொங்கும் பன்னாடைகளின் ஆணாதிக்கத்துக்கு எதிரான அரசியல் செயற்பாடு தான் என்ன?
டொக்டர் அர்ச்;சுனா ஊழலுக்கு எதிராக, மாபியாவுக்கு எதிராக முன்வைத்த குரலும், போராட்டமும் .. அப்படியே தொடர்ந்து இருக்கின்றது. அதை மக்கள்திரள் போராட்டங்கள் மூலம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய கடமை மக்களுக்கானது. ஊழலுக்கு எதிராக, மாற்றத்துக்காக.. எதிர்க்கட்சிகளை உருவாக்க, மக்கள் வாக்களிக்க வேண்டியது அவசியமானது.
01.11.2024
- உதய கம்மன்பில தொடங்கி டொக்டர் அருச்சுனா வரை, மீண்டும் இனவாதம் - யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி - 7
- தேசிய மக்கள் சக்தியின் அரசு மதச்சார்பற்றதா!? - யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி -6
- .யார் செழுமையடைய போகின்றார்கள்? மக்களா!?-யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி - 5
- .டொலர் பொருளாதாரமா? தேசியப் பொருளாதாரமா?-யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி - 4
- .சமூக மாற்றத்தை மறுதலிக்கும் தேசிய மக்கள் சக்தி-யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி - 3
- .கள்ளரை வெளியேற்ற அனுரவுக்கு ஆதரவு" தெரிவிக்க வேண்டுமா!? - யாருக்கு வாக்களிக்க வேண்டும்-பகுதி - 2
- .மக்களின் குரலாக யார் இருக்கின்றனர்? யாருக்கு வாக்களிக்க வேண்டும் பகுதி - 1
- .ஜே.வி.பியின் வெற்றியும் சமூகத்தின் தோல்வியும்
- .பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஜே.வி.பி. குறித்த கற்பனைகளும் நிஜங்களும்.
- .ஜே.வி.பி. மீதான அரசியல் அழுத்தங்கள் மூலம் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்
- .தமிழ் தேசியமும் - சாராயக் கடையும் - பொலிஸ் அதிகாரமும்
- .யாருக்கு வாக்களிக்க வேண்டும்!? ஏன்!? எதற்காக!?
டொக்டர் அர்ச்சுனாவும் யாழ்ப்பாண மாபியாக்களும் - யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி – 08
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode