யாழ் மருத்துவ மாபியாக்களுடனான அர்ச்சுனாவின் அதிகார மோதல், படிப்படியாக ஒட்டுமொத்த மக்களின் குரலாக மாறியது. மருத்துவ மாபியாக்களின் பிரதிநிதிகளான தமிழ்தேசியவாதிகளும், ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளும் களத்தில் இறங்கியதையடுத்து, யாழ் மண்ணிலிருந்தே மருத்துவர் அர்ச்சுனா துரத்தி விடப்பட்டார். கெடுபிடியான நீதித்துறை விசாரணைகள் மூலம், அர்ச்சுனா இலக்கு வைக்கப்பட்டுள்ளார்.
அர்ச்சுனாவின் நோக்கமானது வெளிப்படையானது. தனது ஊர் மருத்துவமனையை வளர்த்தெடுப்பதன் மூலம், சேவையாற்ற விரும்பிய ஒரு மருத்துவ அதிகாரி. இதைக்கடந்து அவர் தன்னை முன்னிறுத்தியது கிடையாது. இதில் அவர் வெளிப்படையான தன்மையுடன், தன்னைத்தான் முன்னிறுத்தினார்.
அர்ச்சுனாவின் கனவு, மருத்துவ மாபியாக்களின் கொள்ளைக்கு தடையாக இருந்தது. இலவச மருத்துவத்தை மக்களுக்கு தடைகளின்றி வழங்குவது என்பது, யாழ்மண்ணில் கொடிகட்டிப் பறக்கும் மருத்துவ வியாபாரத்துக்கு எதிரானது. மருத்துவ வியாபாரிகளைப் பாதுகாக்க, மருத்துவ மாபியாக்கள் தொடங்கி தொழிற்சங்கம் வரை ஒரேயணியாக அணிதிரண்டது.
ஊழல் நிறைந்த மருத்துவ வியாபாரத்தை தாங்கி நிற்கின்ற அரசியல் கட்சிகள் தொடங்கி சட்டம், நீதி போன்றன வரை, அனைவரும் ஒரு நேர்கோட்டில் இணைந்தபோது அர்ச்சுனாவின் சுய எதிர்வினையானது, படிப்படியாக தமிழ்மக்களை ஓர் அணியாக எதிர்வினையாற்ற வைத்தது.
மக்களின் பொது எதிர்வினையே, அர்ச்சுனா தொடர்ந்து நின்றுநிலைக்கவும், போராடவும் வைத்திருக்கின்றது. இந்தப் போராட்டமானது, அவருக்கு அறிமுகமில்லாதது. மக்களின் எதிர்வினை, அர்ச்சுனாவை அரசியல் மூலம் களமிறங்க வைத்திருக்கின்றது.
அர்ச்சுனாவின் அரசியற் புரிதலென்பது, புலிகளைப் புனிதர்களாக நம்பும் சுய அறிவின் எல்லையைத் தாண்டியதில்லை. புலிகள் குறித்த தனிப்பட்ட நம்பிக்கைகளையும், பிரமைகளையும், அறியாமையையும் அடிப்படையாகக் கொண்ட அரசியலை, பொதுமைப்படுத்துகின்ற சுய அங்கலாய்ப்புகளுக்குள் அரசியலை வரையறுக்கின்ற அபாயம், அவரின் கருத்துகளில் காணப்படுகின்றது. அதேநேரம் ஒழுக்கம் குறித்த யாழ் மேட்டுக்குடிகளின் வெறுமையான போலி நம்பிக்கைகளை அரசியலாக்கிவிட முடியும் என்று நம்புகின்றாரா என்ற சந்தேகமும், அவரின் கருத்துகளில் காணமுடிகின்றது.
வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள நிறையவே பாடங்களுண்டு. இயக்கங்களின் பின்னால் திரண்ட ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள், யுவதிகள் எந்தவிதமான குறுகிய சுயநலமுமின்றி, மக்களை நேசித்ததுடன், தங்கள் உயிர்களை அர்ப்பணித்தவர்கள். இது எல்லா இயக்கங்களுக்கும் பொருந்தும்.
இந்த வகையில் யாரும், எந்த இயக்கமும் விதிவிலக்கல்ல. ஆனால் நடந்ததென்ன? தியாகமும், அர்ப்பணிப்பும் மக்களுக்காக இயங்கியதா? மக்களின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வந்ததாவெனின் இல்லை. கற்றுக்கொள்ள நிறைய உண்டு.
ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களைச் சார்ந்து போராடாத, ஒடுக்கும் தமிழ் மக்களைச் சார்ந்த போராட்டம், மக்களுக்கு புதைகுழியையே வெட்டியது. இது எங்கும் எப்போதும் பொருந்தும். ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களை ஒடுக்குகின்ற தமிழர்கள் பேசுகின்ற அரசியலே, யாழ் மையவாத அரசியலாக இருக்கின்றது. தமிழர்கள் இரண்டாக இருக்கின்றனர் என்பதை உணராத அரசியல், எந்தத் தரப்பை சார்ந்திருத்தல் என்பதை தெளிவுபடுத்தாத அரசியல் என்பது, மக்களுக்கான சுடுகாடுதான். கணக்கு வழக்கை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வைத்திருத்தல் என்பதன் மட்டும் மூலம், மக்கள் அரசியலை முன்னெடுத்துவிட முடியாது.
இன்று மருத்துவ மாபியா மட்டுமல்ல, கல்வி மாபியாவாக, சாதிய மாபியாவாக, மத மாபியாவாக, அதிகார மாபியாவாக, சட்ட மாபியாவாக பல்வேறு மாபியாக்கள் யாழ்மண்ணில் புளுத்துக் கிடக்கின்றன. ஒன்றுடனொன்று பின்னிப்பிணைந்து குட்டிகளை ஈனுகின்றன. இதை எதிர்கொள்வது சவால் மிக்கது என்பதுடன், எதிர்ப்போரைச் சட்டம் மூலம் தண்டிப்பது தொடங்கி படுகொலை செய்வது வரை ஈவிரக்கமற்றது இந்த மாபியாக்களின் வலைப்பின்னல்.
மாபியா வழியில் திரளும் தனிச்சொத்துடமையைப் பாதுகாக்கவும், விரிவாக்கவும் எந்த எல்லைக்கும் செல்லும். இது அரசியலில் மிக முக்கியமானது. இது எனக்குத் தெரியாது என்று, அர்ச்சுனா நாளைக்கு சொல்லக் கூடாது.
மருத்துவ வியாபாரிகளே அரச மருத்துவமனையின் முடிவுகளை எடுக்கின்றனர்
அரசு மருத்துவமனையே, ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் உயிர்வாழ்வதற்காக எஞ்சியிருக்கும் அரசுதுறையின் எச்சமாக இருக்கின்றது. சிறிய நிதி ஒதுக்கீட்டைக் கொண்ட இந்த அரசுதுறையானது, மருத்துவ வியாபாரிகளின் கையில் சிக்கியிருப்பதுடன், இலவச மருத்துவத்தை வழங்கும் முடிவுகளை இவர்களே எடுக்கின்றனர். வியாபார நோக்கமல்லாத மருத்துவத்தை, தங்களின் தனிப்பட்ட வியாபாரமாக்குகின்றனர்.
1. யாழ் மருத்துவமனையில் அன்றாடம் மருத்துவத்துக்காக குவிகின்ற நோயாளிகளை, மூச்சுக்கூட விட முடியாத ஒரு இடத்திலடைக்கின்ற யாழ் மருத்துவ நிர்வாகத்தின் நோக்கமென்ன?
நெரிபாடுகளில் சிக்கித் திணறி மருத்துவரைச் சந்திக்க எடுக்கும் நேரம் தொடங்கி அங்கு கிடைக்கின்ற புறக்கணிப்புகளிருந்து தப்பிப்பிழைக்க வேண்டுமா, அப்படியாயின் தனியார் மருத்துவத்தை நோக்கிச் செல் என்பதே மறைமுகமாக கூறும் நடைமுறையாக இருக்கின்றது. தனியார் மருத்துவமனைக்கு ஆள் பிடிக்கின்ற இடமாக, நோயாளிகளை கூட்டமாக நெருங்க வைத்து அதில் ஒரு பகுதியை தனியார் மருத்துவமனைக்கு கடத்திச் செல்லும் வழிமுறைதான் யாழ் மருத்துவமனையின் பொது செயல்முறையாக இருக்கின்றது.
நாளாந்தம் 5000 பேரை தங்கள் மருத்துமனையில் வைத்தியம் செய்வதாக கூறுகின்ற மருத்துவமானது, அதாவது யாழ் மக்கள் தொகை 5 இலட்சம் என்றால் 100 இல் ஒருவர் அன்றாடம் யாழ் மருத்துவமனையில் சிக்கித்திணறும் வாழ்க்கை முறை, அன்றாடம் இது தான் நிலையென்றால், எப்படிப்பட்ட தனியார் மருத்துவக் கொள்ளைக்கு இவை காரணமாக இருக்கின்றது என்பது வெளிப்படையானது. இந்த எண்ணிக்கை போதாது என்று, சாவகச்சேரி மருத்துவமனையில் இருந்து அனுப்புகின்ற மருத்துவ வியாபாரம். கொப்பி போட கொப்பிக்கு 20 ரூபா காசு கேட்கும் ஊழியர்கள் .. இப்படி பற்பல.
2. மருத்துவர்கள் எழுதுகின்ற மருந்துகள் மூலம் நடத்துகின்ற கொள்ளை.
சர்வதேச மருந்துக் கம்பனிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ள மருத்துவர்கள், தாம் எழுதும் மருந்துகள் மூலம் இரண்டாவது சம்பளப் பட்டியலைக் கொண்டுள்ளனர். இதற்காக அரச மருத்துவமனையைப் பயன்படுத்துகின்றனர். இது சம்பளப் பட்டியல் அன்பளிப்புகள், விருந்துகள், சுற்றுலாக்கள், வெளிநாட்டுக் கற்கை நெறிகள் என்று பல முகங்கொண்ட இந்த வியாபாரத்துக்கு, மறைமுகமான பண அன்பளிப்புகள் மூலம் நடத்துகின்ற ஊழலாகும். அர்ச்சுனா பேச மறுத்த பக்கம். மக்களின் அன்றாடக் கூலியைச் சுரண்டுகின்ற, கூட்டுக் களவாணிகளாக கணிசமான மருத்துவர்கள் செயற்படுகின்றனர்.
ஒரு மருந்துக்குரிய உயிரியல் பெயரில் பல மருந்துகளைக் கொண்ட சந்தையில், மருந்தை எழுதும் மருத்துவ ஊழல். சர்வதேச மருந்து வியாபாரிகளுடன் இணைந்தது இந்த வக்கிரம். இந்தச் சம்பளப் பட்டியலில் இயங்கும் மருத்துவரைக் கண்காணிக்கின்ற மருந்துக் கம்பனி, பார்மசிகள், மருத்துவர்கள் என்ற சுற்றுக் கண்காணிப்பு முறை காணப்படுகின்றது. நோயாளி எந்த பார்மசியில் மருந்து வாங்கவேண்டும் என்ற கட்டாய வழிகாட்டலை வழங்குவதுடன், அங்கு மருந்து வாங்கியதை உறுதி செய்யுமளவுக்கான கூட்டுக் கண்காணிப்பே, அடுத்தமுறை தொடர் மருத்துவத்தைப் பெறுவதற்கான பொதுத் தகுதியாகிவிடுகின்றது.
3. தனியார்துறைக்கு வடிகட்டி அனுப்பிய பின் அரச மருத்துவமனையில் எஞ்சுகின்ற மக்கள் யார்? அன்றாடம் வேலை செய்கின்ற ஏழை எளிய வாழ வழியற்ற மக்கள். அன்றாடம் 5000 பேரின் கூலியைக் கூட இல்லாதாக்கும் மருத்துவமனையில் தூங்க வைக்கும் கொள்கை.
இப்படி பாதிப்புக்குள்ளாகும் மக்கள், குறிப்பாக யாழ் சமூகத்தில் இன்று பெரும்பான்மையாகவுள்ள சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள். இங்கு சுமந்திரனோ, சித்தார்த்தனோ, கஜேந்திரனோ மருந்துக்காக வரிசையில் இடிபடுவதுமில்லை. மருத்துவ மாபியாக்கள் தொடங்கி மருத்துவ அதிகாரிகளாக இருக்கின்றவர்களின், சாதிய சிந்தனைமுறையோ நோயாளிகளை இழிவாக நடத்துகின்றது. பொது வெளியில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான எந்த நடைமுறையும் ஒடுக்குமுறையும் இருக்கின்றதோ, அதையே மருத்துமனையிலும் காணமுடியும். மருத்துவத்துறையில் பொது நடத்தை, மருத்துவ மொழி தொடங்கி அனைத்தும், நோயாளியை சக மனிதனாக நடத்துவதில்லை.
ஆண்கள் தங்கள் ஆணுறுப்பைக் காட்டி ஆண் என்ற திமிருடன் பெண்ணை தங்கள் அடிமையாக நடத்துகின்ற இழிவுபடுத்துகின்ற அதே பாணியில், தங்கள் ஸ்ரெதஸ்கோப்பை வலிந்து தூக்கிக் கொண்டு நடமாடுகின்ற மருத்துவ அதிகாரம் கொண்ட சுயவக்கிரமே, நோயாளிக்கும் மருத்துவருக்குமான பொது உறவாக இருக்கின்றது. தனியார் மருத்துவமனையில் கூட குறைந்த கூலிக்கு வேலை செய்கின்றவர்கள், இந்த ஸ்ரெதஸ்கோப்பு மருத்துவர்கள் வரும்போதும் போகும்போதும் எழுந்து நிற்கவைக்கின்ற அளவுக்கு மருத்துவ உலகின் அடிமைத்தனத்தை யாழ் மண்ணிலேயே காணமுடியும்.
4. ஸ்ரெதஸ்கோப்பைக் காட்டி தங்களை முன்னிறுத்தும் மருத்துவர்களுக்கு அரசு கொடுக்கும் இலஞ்சம் வரியற்ற கார். பாராளுமன்ற உறுப்பினர்களை மக்களுக்கு எதிரான அரச எடுபிடிகளாக வைத்திருக்க வரிச்சலுகை கொண்ட வாகனங்களை வழங்குமாற் போலவே அதே நோக்கோடு மருத்துவர்களுக்கும் வழங்குகின்றது. (அண்மைய பொருளாதார நெருக்கடியுடன், வாகன இறக்குமதி தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.) அரசே இலஞ்சம் கொடுக்கும் மருத்துவர்களின் சம்பளமானது இலங்கை பிற உழைக்கும் மக்களினதையும் விட அதிகமானது.
5. மருத்துவ பரிசோதனைக்காக தனியாரிடம் அனுப்பும் வக்கிரம். இந்த இலக்கை அடிப்படையாகக் கொண்டு, தனியார் பரிசோதனை நிலையங்கள் காத்துக் கிடக்கின்றது. எங்கும் எதிலும் கூட்டுக்கொள்ளை.
6. ஐ.எம்.எவ் ஊழல் ஒழிப்பு என்பது, மருத்துவத்துக்காக ஒதுக்கும் நிதியை ஊழலின்றி முழுமையாக பயன்படுத்தக் கோருவது. இதன் மூலம் தனக்கான வட்டியையும், முதலையும் திருப்பித்தரக் கோருவது. மக்களுக்கான மருத்துவ நிதியைக் குறைப்பதும், ஒதுக்கும் நிதிப் பயன்பாட்டைப் பூரணமாக்குவதன் மூலம் மக்களை அமைதிப்படுத்துவது. இந்த ஊழல் ஒழிப்பு திட்டத்தை கடந்து அணுகுவதன் மூலம் மக்களுக்கான பூரணமான இலவச மருத்துவத்தை கோரவேண்டும். அப்படி இல்லாத மருத்;துவ ஊழல் எதிர்ப்பு என்பது தனியார் மருத்துவத்தை ஊக்குவிப்பதே.
பொல்லைக் கொடுத்து அடிவாங்கிய அரசியல்வாதிகள்
மக்களைத் தேசியத்தின் பெயரில் ஏமாற்றிப் பிழைக்கும் பிழைப்புவாத தமிழ்தேசிய அரசியல், ஒடுக்கப்பட்ட மக்களை எட்டியுதைக்கும் தங்கள் வழமையான பாணியில் அர்ச்சுனாவை முதுகில் குத்தியது. இந்த நெருக்கடியை எதிர்கொள்ள அர்ச்சுனாவுக்கு அரசியலைத் தவிர வேறு தேர்வு இருக்கவில்லை. தேர்தல் அரசியலில் இறங்கும் அவரின் முடிவு, யாழ்ப்பாண தேர்தல் அரசியலை புரட்டிப் போடுமளவுக்கு தமிழ்மக்களின் கோபம் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக மாறியிருக்கின்றது.
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறக்கூடிய வேட்பாளராக அர்ச்சுனா இருப்பதுடன், அவரைச் சார்ந்து பலர் வெற்றிபெறும் வாய்ப்பானது, யாழ்ப்பாண மரபார்ந்த குறுகிய தமிழினவாத மதவாத அரசியலுக்கு வேட்டுவைக்கக் கூடியதாகி இருக்கின்றது.
ஆறு தொகுதிகளைக் கொண்ட யாழ் மாவட்டத்தில் நடக்கும் எந்த மாற்றமும், இலங்கை தேர்தல் அரசியலில் மக்களைப் பிளக்கும் குறுகிய மனப்பாங்கைக் கேள்விக்குள்ளாக்கும்.
அர்ச்சுனாவின் அரசியல் என்ன?
1. அவர் தனது அரசியல் வலதா, இடதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியிருக்கின்றது. வலதுமில்லை இடதுமில்லை என்றால், அது ஒரு மோசடியாக - ஊழலாக மாறும்.
2. எந்த மக்களைச் சார்ந்து அரசியல்? அதாவது தமிழனைத் தமிழன் ஒடுக்குகின்ற அரசியலா? அல்லது ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்து ஒடுக்கும் தமிழனுக்கு எதிரானதா?.
3. மக்களின் மீதான ஒடுக்குமுறைகளை தெளிவாக வகைப்படுத்தி இனங்காட்டல்.
4. சாதிய சிந்தனைமுறை குறித்தான பார்வையும், அதற்கெதிரான மக்கள் அரசியலும்.
5. ஜனநாயகம் குறித்த கண்ணோட்டம் என்ன?.
6. கட்சி ஜனநாயகம் குறித்த பார்வை என்ன?.
7. அரசு குறித்த பார்வை என்ன?.
8. ஊழல் நிகழும் இடங்கள் எவை?.
9. இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் குறித்த பார்வை.இப்படி பலவற்றைப் பேசவேண்டி இருக்கின்றது. அரசியல்ரீதியாக வரையறுக்க வேண்டியிருக்கின்றது. எப்படித் தன்னிலையில் இருந்து அமைப்பாகத் தன்னை வெளிப்படுத்தப் போகின்றார் என்பதைப் பொறுத்து, தொடர்ந்து விவாதிக்கவும் சேர்ந்து பயணிக்கவும் முடியும்.
இரயாகரன்
26.07.2024
அர்ச்சுனாவின் அரசியல் மீதான கேள்விகள்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode