Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் காசுமீர் : அரச பயங்கரவாதத்தின் இரத்த சாட்சியங்கள்!

காசுமீர் : அரச பயங்கரவாதத்தின் இரத்த சாட்சியங்கள்!

  • PDF

10_2006.jpg

காசுமீர் பள்ளத்தாக்கில் உள்ள குப்வாரா நகருக்கு அருகில் இருக்கும் சாஹல்பதி கிராமத்தைச் சேர்ந்த குலாம் மொஹைதீன் என்பவரும், ருபினா என்ற 14 வயது சிறுமியும் கடந்த ஆகஸ்டு 12ஆம் தேதி அதிகாலையில், ""ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ்'' என்ற துணை இராணுவப்படை சிப்பாய்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அன்று அதிகாலையில் விறகு பொறுக்குவதற்காகக் காட்டுக்குள் சென்றதுதான் அவர்கள் செய்த ""குற்றம்''; அதற்குத்தான் இந்த மரண தண்டனை!

சாஹல்பதி கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள் அன்று அதிகாலையில் விறகு பொறுக்குவதற்காகக் காட்டிற்குச் சென்றார்கள். அவர்களுள் ஒருவரான சஜா, ""இராணுவம் எங்களை நோக்கிச் சுடத் தொடங்கிய மறுநிமிடமே, ருபினா இரத்த வெள்ளத்தில் செத்துக் கிடந்ததாக'' அந்தப் பயங்கரத்தைப் பற்றிக் கூறுகிறார்.

 

""காட்டிற்குப் போவதற்காக என்னை, என் அம்மா அதிகாலை 5.20க்கு எழுப்பி விட்டார். சில நிமிட தாமதத்தினால், நான் மற்றவர்களுடன் சேர்ந்து காட்டிற்குப் போக முடியவில்லை. ஆனால், அதற்குள்ளாகவே என் தங்கை பரிதாபகரமாக இறந்து போன செய்தி எங்கள் வீட்டிற்கு வந்து விட்டது'' என்கிறார், ருபினாவின் சகோதரர் அப்துல் வாஹித்.

 

ஜம்மு காசுமீர் மாநிலத்தில் இந்திய இராணுவத்தால் நடத்தப்படும் இது போன்ற படுகொலைகளுள் பெரும்பாலானவை எல்லை தாண்டிய பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலாக சோடிக்கப்பட்டு, உண்மைக்கும் சமாதி கட்டப்பட்டு விடும். ஆனால், குலாம் மொஹைதீனும், ருபினாவும் கொல்லப்பட்ட சம்பவத்திலோ இந்திய இராணுவம் தனது ""தவறை'' ஒப்புக் கொள்ள வேண்டிய இக்கட்டில் மாட்டிக் கொண்டுவிட்டது.

 

இதற்கு இந்திய இராணுவத்தின் ""நேர்மையோ'', நியாய உணர்ச்சியோ காரணம் அல்ல. குலாம் மொஹைதீனையும், ருபினாவையும் இந்திய இராணுவம் சுட்டுக் கொன்றதைக் கண்ணால் கண்ட சாட்சிகள் இருப்பதால், இந்திய இராணுவத்தால், குலாம் மொஹைதீனையும், ருபினாவையும் எல்லை தாண்டிய பயங்கரவாதிகளைப் போல ""செட்அப்'' செய்ய முடியவில்லை. மேலும், சம்பவம் நடந்த உடனேயே, குப்வாரா நகர மக்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், இப்படுகொலைச் சம்பவம் காசுமீர் மாநிலமெங்குமே அம்பலமாகி விட்டது.

 

எனினும், இராணுவம் தனது தீவிரவாதப் பீதியூட்டலை விட்டுவிடவில்லை. ""இராணுவத்தினர் பயங்கரவாதிகளைக் காட்டுக்குள் தேடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது சிலர் ஆயுதங்களோடு காட்டுக்குள் ஓடுவது தெரிந்தது. தீவிரவாதிகள் என நினைத்துக் கொண்டு இராணுவம் சுட்டதில் குலாம் மொஹைதீனும், ருபினாவும் இறந்து போய்விட்டார்கள். இது தவறுதலாக நடந்துவிட்ட துயரச் சம்பவமே தவிர, திட்டமிட்ட படுகொலை அல்ல'' என இராணுவ அதிகாரிகள் முதலைக் கண்ணீர் வடித்துள்ளனர்.

 

முன்னெச்சரிக்கைக் கூடச் செய்யாமல், உடனடியாகச் சுடும்படி இராணுவத்தினரைப் பயமுறுத்திய ஆயுதம் என்ன தெரியுமா? விறகு வெட்டுவதற்காக கிராமத்தினர் எடுத்துச் சென்ற கோடாரிதான் அந்த ஆயுதம். பனிமூட்டத்தில் தொலைவிலிருந்து பார்த்தபோது, தீவிரவாதிகள் ஏ.கே 47 ரக துப்பாக்கியை தோளில் சுமந்து செல்வது போலத் தெரிந்ததாம். எனவேதான் சுட்டுக் கொன்று விட்டார்களாம். செக்குக்கும், சிவலிங்கத்திற்கும் வேறுபாடு தெரியாத தெருநாயைப் போல நடந்து கொண்ட இந்திய இராணுவம் தரும் இந்த நியாயவாதத்தை நாட்டு மக்கள் நம்ப வேண்டுமாம்!

 

இச்சம்பவம் நடப்பதற்கு மூன்று நாட்கள் முன்னதாக, ஆகஸ்ட் 9 அன்று குலாம் முகம்மது ஷேக் என்ற மாணவர் மத்திய ரிசர்வ் போலீசு படையால், தால்கேட் சந்தைப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். குலாம் முகம்மது ஷேக், பயங்கரவாதியா, இல்லை அப்பாவியா என்பது உறுதியாகத் தெரியாத நிலையிலேயே, அவர் நடுத்தெருவில் நாயைப் போலச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி மத்திய ரிசர்வ் போலீசு படை விடுத்துள்ள அறிக்கையில், ""குலாம் முகம்மது ஷேக் கையெறி குண்டை வீச முயலும்பொழுது, அவரைக் கையும் களவுமாகப் பிடித்ததாக''க் கூறியிருக்கிறது. அப்படி பிடிக்கப்பட்டவரை உடனடியாகச் சுட்டுக் கொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது என்ற கேள்விக்கு அத்துணை இராணுவப்படை பதில் அளிக்கவில்லை. மாறாக, குலாம் முகம்மது ஷேக் கையெறி குண்டை வீச முயன்றதைப் பொதுமக்கள் பார்த்ததாகக் குறிப்பிட்டு இந்தக் கொலையை நியாயப்படுத்தியுள்ளது.

 

ஆனால், பந்திபூர் நகரைச் சேர்ந்த பொதுமக்களும், அமர்சிங் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களும் குலாம் முகம்மது ஷேக், இளைஞர் முசுலீம் லீக் கட்சியின் மாணவர் அமைப்பின் தலைவர் என்ற காரணத்திற்காகத்தான் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டு, ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

 

""இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, இராணுவத்தின் அட்டூழியங்களை எதிர்த்துப் போராடி வரும் பலரையும் இந்திய இராணுவம் கைது செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான், குலாம் முகம்மது ஷேக்கை, இந்திய இராணுவம் சுட்டுக் கொன்றுவிட்டதாக''க் குற்றஞ் சுமத்தியுள்ளார், முசுலீம் லீக் கட்சியின் தலைவர் முஸாரத் ஆலம்.

 

இப்படி அப்பாவிகளைக் கொன்றுவிட்டு, அவர்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பது இந்திய இராணுவத்துக்குக் கைவந்த கலை. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, சட்டிஸ்புரா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஐந்து அப்பாவி முசுலீம்களைக் கொன்றுவிட்டு, அவர்களைப் பாகிஸ்தான் அனுப்பிய பயங்கரவாதிகளாக முத்திரை குத்தி இந்திய இராணுவம் நடத்திய நாடகம் உலகப் பிரசித்தி பெற்றது.

 

1U9 தொடங்கி 2003 முடிய ஏறத்தாழ 3,931 காசுமீர் முசுலீம்கள் காணாமல் போய்விட்டதாக, அம்மாநில அரசே அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. இராணுவத்தாலும், துணை இராணுவப் படைகளாலும் இழுத்துச் செல்லப்பட்ட இவர்கள் உயிரோடு இருக்கிறார்களா, இல்லை இறந்து போய்விட்டார்களா என்பதை ""இராணுவ இரகசியம்'' போல இந்திய அரசு மூடி மறைத்து வருகிறது.

 

76 வயதான அப்துல் அஹத், செப். 2000இல் இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்ட தனது இரு மகன்களை, தனது தள்ளாத வயதையும் பொருட்படுத்தாது இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்.

 

குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த சாரா முகம்மது, ராஷ்டிரிய ரைபிள் இராணுவ அதிகாரிகளால் பிடித்துச் செல்லப்பட்ட தனது கணவர் குலாம் முகம்மதுவை 2004லிருந்து தேடிக் கொண்டிருக்கிறார். கணவனைத் தேடி அலையும் மனைவியரை, ""அரைக் கைம்பெண்'' என அம்மாநிலத்தில் அழைக்கும் அளவிற்கு புதிய சொல் அகராதிகளை இராணுவத்தின் அட்டூழியங்கள் உருவாக்கி வருகின்றன. இந்தக் காணாமல் போனவர்கள் பற்றிய புள்ளி விவரப் பட்டியலில், போலி மோதல் படுகொலைகளில் கொல்லப்பட்ட காசுமீர் முசுலீம்களின் எண்ணிக்கை அடங்காது.

 

நீதிமன்றத்தில் போடப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள், மனித உரிமை கமிசனின் உத்தரவுகள் இவையெல்லாம், இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்கும் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் முன் செல்லாக் காசுகள்.

 

ராணுவத்தின் அட்டூழியத்தை யாரும் தட்டிக் கேட்கக் கூடாது; இராணுவச் சிப்பாய்கள் அதிகாரிகள் மீது யாரும் மனித உரிமை மீறல் வழக்கு தொடரக் கூடாது என்பதற்காகவே, கலவரப் பகுதி சட்டம், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் ஆகிய பாசிசச் சட்டங்களின் மூலம் இராணுவத்தின் அட்டூழியங்களுக்குச் சட்டபூர்வ பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அம்மாநிலத்தில் நடைபெறும் இராணுவ காலனிய ஆட்சியை மூடிமறைப்பதற்காகவே தேர்தல், சட்டமன்றம் ஆகியவை முகமூடிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

 

தேச பக்தி, நாட்டின் ஒருமைப்பாடு என்ற பெயரில் புனிதப்படுத்தப்படும் இந்த அரசு பயங்கரவாதமானது எல்லை தாண்டி வரும் பயங்கரவாதம் முசுலீம் மதவெறி பயங்கரவாதத்தைவிட கொடூரமானது, வக்கிரமானது என்பதற்கு ஜம்முகாசுமீர் இரத்த சாட்சியாக உள்ளது.

 

செல்வம்