Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் உங்களின் இரக்கம் உண்மையானதா?

உங்களின் இரக்கம் உண்மையானதா?

  • PDF

11_2006.jpg

ஜார்கண்டு மாநிலத்தின் தன்பாத் மாவட்டத்திலுள்ள பாத்திஹ் நிலக்கரிச் சுரங்கத்தில் செப்.6ந் தேதி முன்னிரவில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில், தரை மட்டத்தில் இருந்து 500 மீட்டருக்குக் கீழே நிலக்கரியை வெட்டி எடுக்கச் சென்றிருந்த 50 தொழிலாளர்கள் பரிதாபகரமாக இறந்து போனார்கள். இரண்டு நாட்கள் கழித்துதான் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. அவர்கள் தலையில் அணிந்திருந்த சுரங்க விளக்கில் போடப்பட்டிருந்த எண்ணை வைத்துதான், இறந்து போன தொழிலாளர்களை அடையாளம் காண முடிந்தது. அந்தளவிற்கு அவர்களின் உடல்கள் வெந்து கருகிப் போயிருந்தன.

 

நான்கு மாதங்களுக்கு முன்பு அரியானா மாநிலத்தில் பிரின்ஸ் சந்தர் என்ற ஆறு வயதுச் சிறுவன் 60 அடி பள்ளத்திற்குள் விழுந்து உயிருக்குப் போராடியதைப் பத்திரிகைகள் பரப்பரப்பான தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. இச்சிறுவன் உயிர் பிழைப்பதற்காக பலர் வேண்டிக் கொண்டதை தொலைக்காட்சிகள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பின. நாட்டில் கருணை செத்துப் போய்விடவில்லை எனப் பத்திரிகைகள் எழுதின. ஆனால், 500 மீட்டர் ஆழத்தில் மாட்டிக் கொண்ட நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களுக்காக, அவர்களின் உறவினர்களைத் தவிர, வேறு யாரும் கண்ணீர் விட்டதாகத் தெரியவில்லை. அச்சிறுவனின் உயிரைவிட, இத்தொழிலாளர்களின் உயிர் எந்தவிதத்தில் குறைந்து போய்விட்டது?

 

அதிகார வர்க்கம் 50 தொழிலாளர்கள் செத்துப் போனதை ""விபத்து'' என்கிறது. ஆனால், பாத்திஹ் சுரங்கத் தொழிலாளர்களோ இதனைப் படுகொலை என்கிறார்கள். இந்த நிலக்கரிச் சுரங்கம் மிகவும் அபாயகரமான சுரங்கம் என அரசாலேயே வகை பிரிக்கப்பட்டுள்ளது. எனினும், இச்சுரங்கத்தில் உள்ள மின்சாரக் கம்பிகளை மாற்றியே 30 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றால், சுரங்கத்தில் இறங்கும் தொழிலாளியின் உயிருக்கு என்ன பாதுகாப்பு கிடைத்திருக்கும்?

 

இந்த "விபத்து' நடந்த அதே சமயத்தில், வேலை வாய்ப்பில்லாத 30 ஏழை இளைஞர்கள் மேற்கு வங்க மாநிலத்தில் கைவிடப்பட்ட ஒரு நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து நிலக்கரியை எடுத்து வருவதற்காகச் சுரங்கத்தினுள் இறங்கியிருக்கிறார்கள். அப்பொழுது சுரங்கத்தினுள் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட இவர்களைக் காப்பாற்ற அதிகார வர்க்கம் பெரிய முயற்சி எதுவும் செய்யவில்லை. மாறாக, இந்த இளைஞர்கள் நிலக்கரியைத் திருடுவதற்காகச் சட்ட விரோதமாக சுரங்கத்தினுள் இறங்கியதாகத் திருட்டுப் பட்டம் கட்டித் தங்களின் பொறுப்பைத் தட்டிக் கழித்தார்கள். இப்படிப்பட்ட கல் நெஞ்சுக்காரர்கள் ஏழைகள் மீதும், தொழிலாளர்கள் மீதும் காட்டும் இரக்கம் உண்மையானதாக இருக்க முடியுமா?

 

அதிகார வர்க்கத்தை விடுங்கள். தொலைக்காட்சித் தொடரைப் பார்த்து கண்ணீர் உகுக்கும் உங்களில் எத்தனை பேர், சுரங்கத் தொழிலாளர்கள் செத்துப் போனதற்கு அனுதாபப்பட்டிருப்பீர்கள்? நிழலைப் பார்த்து அனுதாபப்படும் நீங்கள், நிஜத்தைப் பார்த்து மரக்கட்டை போல் இருக்கின்றீர்கள் என்றால், உங்களின் இரக்க குணம் உண்மையானதாக இருக்க முடியுமா?


""நாங்கள் ஒவ்வொரு நாளும் சுரங்கத்தினுள் இறங்கும்பொழுதும், உயிரோடு மீண்டு வருவோமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது'' என்கிறார்கள் பாத்திஹ் சுரங்கத் தொழிலாளர்கள். அவர்கள் தினந்தோறும் உயிரைப் பணயம் வைக்கவில்லையென்றால், நாட்டிற்கு நிலக்கரி கிடைக்காது; நிலக்கரி இல்லையென்றால், மின்சாரம் இருக்காது; தொலைக்காட்சிப் பெட்டியும் இருக்காது; கண்ணீர் வடிக்கும் தேவையும் உங்களுக்கு இருக்காது!


மு