Sat04202024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் அதிகாரிகளின் அடாவடித்தனம்! மீனவர் வாழ்வுரிமை பறிப்பு!

அதிகாரிகளின் அடாவடித்தனம்! மீனவர் வாழ்வுரிமை பறிப்பு!

  • PDF

12_2006.jpg

பன்னாட்டு ஏகபோக மீன்பிடி முதலாளிகளுக்கு நமது கடல்வளங்களைத் தாரை வார்க்கும் தனியார்மய தாராளமயக் கொள்கைப்படி, சென்னை மெரீனா கடற்கரைப் பகுதியிலிருந்து மீனவர்கள் விரட்டப்பட்டார்கள்; இப்போது

 முத்துப்பேட்டை வட்டாரத்தில், மீனவர்கள் காட்டுப் பகுதி வழியே மீன்பிடிக்கச் செல்லத் தடைவிதித்து, கடலோர வனத்துறை அதிகாரிகள் மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறித்து வருகிறார்கள்.

 

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தொடங்கி கோடியக்கரை வரை உள்ள கடல் பகுதியானது, சேற்றுக் கடல் என்றழைக்கப்படுகிறது. காவிரிகிளை ஆறுகளின் கழிமுகப் பகுதியான இக்கடற்கரை, ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்படும் வண்டல் மண் படிந்து சேறு நிறைந்த காட்டுப் பகுதியாகும். இங்கு அலையாத்தி, தில்லை, கன்னா, உமரி போன்ற மரங்களும் புதர்களும் செழித்து வளர்ந்து, கடலோர மக்களை புயல்சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளிலிருந்து காப்பாற்றும் அரணாக உள்ளது. இவ்வட்டாரத்திலுள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள், சேறும் நீரும் சூழ்ந்த கடலோரக் காடுகளின் வழியே இடுப்பளவு சேற்றில் சிரமப்பட்டு நடந்து சென்று தலைமுறை தலைமுறையாக மீன் பிடித்து வருகிறார்கள்.

 

காடுகளின் அழிவுக்கு வழிகோலிய வனத்துறை அதிகாரிகள், இப்போது அலையாத்தி காடுகள் வளர்ப்புத்திட்டம் என்ற பெயரில் மீனவர்கள் கடலுக்குச் சென்று வரும் கடலோரப் பகுதியை ஆக்கிரமித்து, பத்தடிக்கு ஒரு வாய்க்கால் வீதம் குழியாக வெட்டி, இருபுறமும் கரை ஏற்படுத்தி, அலையாத்தி கன்றுகளைச் செயற்கையாக நட்டு வைத்துள்ளனர். மேற்கூறிய வாய்க்கால்களில் ஏறி இறங்கித்தான் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், ஊன்றப்பட்டுள்ள அலையாத்திக் கன்றுகள் மிதிபட்டு அழிவதாக பொய்க் காரணம் காட்டி, மீனவர்கள் இக்காட்டுப் பகுதி வழியே மீன்பிடிக்கச் செல்ல விடாமல் வனத்துறையினர் தடுத்து அடாவடி செய்கின்றனர். மீறிச் செல்லும் மீனவர்களைப் பிடித்துச் சென்று ஒருநாள் முழுவதும் உட்கார வைத்து பிழைப்பைக் கெடுத்து விரட்டுவது; அவர்களின் மீன்வலை, பானை முதலானவற்றையும் பிடித்து வைத்துள்ள மீன், கையிலிருக்கும் பணம் ஆகியவற்றையும் பிடுங்கிக் கொள்வது; வழக்குப் போடுவதாக மிரட்டி பணம் பறிப்பது என்பதாக வனத்துறையின் அட்டூழியம் கேள்வி முறையின்றித் தொடர்கிறது. இதனால் பரம்பரையாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த இப்பகுதிவாழ் மீனவர்கள் வாழ்விழந்து போகும் நிலையில் தத்தளிக்கின்றனர்.

 

அதிகார வர்க்கத்துக்கு காடு வளர்ப்பில் உண்மையான அக்கறை இருந்தால், மீனவர்கள் கடலுக்குச் சென்றுவர வழியை ஏற்படுத்தியிருப்பார்கள். ஆனால், நமது கடல்வளங்களைப் பன்னாட்டு மீன்பிடி முதலாளிகளுக்குத் தாரை வார்த்து கடற்கரையிலிருந்து மீனவர்களை வெளியேற்றும் ஏகாதிபத்திய சதித் திட்டத்தின்படியே ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும் செயல்படுகின்றனர் என்பதற்கு முத்துப்பேட்டை இன்னுமொரு சாட்சியமாக உள்ளது.

 

மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இத்தனியார்மய தாராளமயச் சதியை எதிர்த்தும், வனத்துறை அதிகாரிகளின் காட்டுதர்பாரை முறியடிக்க புரட்சிகர அமைப்புகளில் அணிதிரள மீனவர்களை அறைகூவியும் இப்பகுதியெங்கும் பிரச்சாரம் செய்த வி.வி.மு., அதன் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட மீனவர்களைத் திரட்டி, 20.11.06 அன்று மாலை முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையம் அருகே, வனச்சரக அலுவலகம் முன்பாக எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. பட்டுக்கோட்டை வட்ட வி.வி.மு. செயலர் தோழர் மாரிமுத்து தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னணித் தோழர்களும் ம.க.இ.க. இணைச் செயலர் தோழர் காளியப்பனும் கண்டன உரையாற்றினர். விண்ணதிரும் முழக்கங்களுடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், மீனவர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

 

விவசாயிகள் விடுதலை முன்னணி, பட்டுக்கோட்டை வட்டம்.