Thu04252024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் அழிவை நோக்கித் தள்ளப்படும் சில்லறை வியாபாரம்

அழிவை நோக்கித் தள்ளப்படும் சில்லறை வியாபாரம்

  • PDF

jan_07.jpg

சில்லறை வியாபாரத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் நுழைந்திருப்பது; அமெரிக்காவின் சில்லறை வியாபார நிறுவனமான வால்மார்ட்டும், இந்தியாவின் பாரதி நிறுவனமும் இணைந்து இந்தியாவில் சில்லறை வியாபாரத்தில் இறங்க முடிவெடுத்திருப்பது; இங்கிலாந்தின் டெஸ்கோ மற்றும் கேரிஃபோர் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களோடு கூட்டுச் சேர்ந்து சில்லறை வியாபாரத்தில் இறங்கப் பேச்சு வார்த்தைகள்

 நடத்தி வருவது — இவற்றையெல்லாம் காட்டி இந்தியாவின் சில்லறை வியாபாரத் துறையில் ஓர் அமைதி புரட்சி நடந்து வருவதாகத் தாராளமயத்தின் ஆதரவாளர்கள் பீற்றி வருகின்றனர்.

 

உணவுப் பொருட்கள் உள்ளிட்டு, பல்வேறு விதமான மளிகைச் சாமான்கள், நுகர்பொருட்களை விற்கும் சில்லறை வியாபாரத்தில் அந்நிய நிறுவனங்கள் நேரடியாக மூலதனமிட இன்னும் அனுமதிக்கப்படவில்லைதான். எனினும், ஒரே நிறுவனத் தயாரிப்புகளை விற்கும் பேரங்காடிகளைத் திறந்து நடத்தவும்; மொத்த வியாபாரத்திலும்; பொருட்களை வாங்கிச் சேமித்து வைக்கும் பண்டகசாலைகள் நடத்துவதிலும் 51 சதவீதம் வரை முதலீடு போட அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கொல்லைப்புற வழியைப் பயன்படுத்திக் கொண்டு அந்நிய நிறுவனங்கள் மளிகைக் கடை நடத்துவதிலும் இறங்கிவிட முயலுகின்றன.

 

சில்லறை வியாபாரத்தில் வால்மார்ட்டுக்கும், பாரதி நிறுவனத்துக்கும் இடையே உருவாகியுள்ள ஒப்பந்தம் இப்படிபட்டதுதான். பாரதி நிறுவனம் நேரடியாக கடைகளைத் திறந்து நடத்தும்; வால்மார்ட் கொள்முதல் செய்து கொடுக்கும் என்று கூறப்படுகிறது. சில்லறை வியாபாரத்தில் 450 கோடி ரூபாயை முதலீடு செய்யவுள்ள வால்மார்ட் பாரதி கூட்டின் முதல் கடை 2007ஆம் ஆண்டு இந்திய "சுதந்திர' நாளன்று திறக்கப்படுமாம்.

 

இந்தியா முழுவதிலும் 2011ஆம் ஆண்டுக்குள் ஏறத்தாழ 3,000 கடைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ள ரிலையன்ஸ், இத்துறையில் 25,000 கோடி ரூபாய் மூலதனமிடப் போவதாக அறிவித்திருக்கிறது. டெல்லி, மும்பய், சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமல்ல, ஆண்டிப்பட்டி போன்ற சிறு சந்தை நகரங்களில் கூட பேரங்காடிகளைத் (சூப்பர் மார்க்கெட்டுகள்) திறக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர். முதலாளித்துவ நிறுவனங்களால் திறக்கப்படவுள்ள பேரங்காடிகளில் ஏறத்தாழ 35 சதவீதக் கடைகள் சிறு நகரங்களைக் குறி வைத்திருப்பதாக ""பிஸினஸ் வேர்ல்டு'' என்ற பத்திரிகை குறிப்பிடுகிறது. ரிலையன்ஸ் நிறுவனம், தமிழகத்தில் மட்டும், 75 நகரங்களில், 380 பேரங்காடிகளையும், 85 மீ அங்காடிகளையும் (ஹைப்பர் மார்க்கெட்) திறக்கத் திட்டமிட்டுள்ளது.

 

இந்தியாவில் 1,000 பேருக்கு 11 சில்லறை வியாபாரக் கடைகள் நடத்தப்படுகின்றன. வால்மார்ட் பிறந்த அமெரிக்காவிலோ இந்த எண்ணிக்கை 4 தான். சில்லறை வியாபாரத்தில் இந்தியா அமெரிக்காவைப் போல ஆக வேண்டுமென்றால், 11ஐ 4ஆகக் குறைக்க வேண்டும். சில்லறை வியாபாரத்தில் நடந்துவரும் அமைதி புரட்சியின் பின்னுள்ள பேராபத்து இதுதான்.

 

எங்களின் கடைகளின் மூலம் 5 இலட்சம் பேருக்கு நேரடி வாய்ப்புகள் வழங்குவோம் என்கிறது ரிலையன்ஸ். ஆனால், எத்தனை இலட்சம் பேரின் வேலை வாய்ப்பு பறிபோகும் என்பது இதோடு தொடர்புடைய இன்னொரு கேள்வி. தற்பொழுது சில்லறை வியாபாரத்தில் 6 சதவீதத்தைக் கைப்பற்றியுள்ள சூப்பர்மார்க்கெட்டுகளின் பங்கு 20 சதவீதமாக வளரும்பொழுது, இந்தியாவெங்கும் 80 இலட்சம் கடைச் சிப்பந்திகளின் வேலை வாய்ப்பு பறிபோகும் என முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களே எச்சரிக்கிறார்கள்.

 

சிறிய கடைகளைவிட, சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களின் விலை மலிவாக இருக்கும் எனக் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்யப்படுகிறது. சுபிக்ஷா, த்ரிநேத்ரா, ஃபுட் வேர்ல்டு போன்ற நிறுவனங்கள், 50 பைசா, ஒரு ரூபாய் எனத் தள்ளுபடி செய்து நுகர் பொருட்களை விற்று வருவது, சிறு வியாபாரிகளை ஒழித்துக் கட்டும் வியாபாரத் தந்திரம்தானே தவிர வேறில்லை.

 

இது ஒருபுறமிருக்க, கடந்த மூன்று, நான்கு மாதங்களாக மிளகாய் வத்தல், புளி, பருப்பு, எண்ணெய் வித்துகள் போன்ற உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதற்கு, சில்லறை வியாபாரத்தில் நுழைந்துள்ள இந்நிறுவனங்கள் இந்தப் பொருட்களை வாங்கிப் பதுக்கி வைத்திருப்பதும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.

 

ரிலையன்ஸும், பாரதியும் இன்னும் ஒருபடி மேல் போய் அரிசி, கோதுமை, மிளகாய், பழங்கள் உள்ளிட்டு விவசாய விளைபொருட்கள் அனைத்தையும் விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யும் புதிய கமிசன் மண்டி வியாபாரிகளாக அவதாரமெடுக்கப் போகின்றன.

 

ரிலையன்ஸ் நிறுவனம், விவசாய விளைபொருட்களின் கொள்முதலுக்காக, தமிழ்நாட்டில் மட்டும் 40 கிராமப்புற வர்த்தக மையங்களையும், 160 துணை நிலையங்களையும் ஏற்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. வால்மார்ட்டுடன் இணைந்துள்ள பாரதி, பஞ்சாப் மாநிலத்தில் 5000 ஏக்கர் பரப்பளவில் ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது.

 

இந்நிறுவனங்கள் வியாபாரத்தின் இரு முனைகளிலும் கொள்முதலிலும், விற்பனையிலும் ஏகபோக ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகும் பொழுது, அரிசி, கோதுமை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை தங்கள் வசதிக்கேற்ப இந்நிறுவனங்கள்தான் தீர்மானிக்கும் நிலை உருவாகி விடும்; இதன் மூலம், விவசாயிகளையும் நுகர்வோரையும் மட்டுமல்ல, இந்நிறுவனங்களோடு போட்டி போடும் மற்ற சில்லறை வணிகர்களையும் கட்டுப்படுத்தக் கூடிய சக்திகளாக இந்நிறுவனங்கள் மாறிவிடும். அத்தியாவசிய உணவுப் பொருள் சட்டத்தை நீக்க வேண்டும் என இந்நிறுவனங்கள் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருவதை இந்தப் பின்னணியில் வைத்துதான் பார்க்க வேண்டும்.

 

···


சமீபத்தில், தில்லி நகரில் உள்ள 2,250 தெருக்களில் பல ஆண்டுகளாக நடந்து வந்த ஆயிரக்கணக்கான சிறிய நடுத்தர கடைகளைப் பூட்டி ""சீல்'' வைத்துவிட்டது, தில்லி அரசு. இந்தக் கடைகள் அனைத்தும் குடியிருப்புப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்தவை என உச்சநீதி மன்றம் ""குற்றம்'' கண்டுபிடித்து, அவற்றை நிரந்தரமாக மூடிவிட உத்தரவிட்டது.

 

பல ஆண்டுகளாக வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, கருப்புப் பணத்தைக் குவித்து வைத்திருக்கும் முதலாளிகளுக்குக் கூடப் பொது மன்னிப்பு வழங்கியிருக்கும் மைய அரசு, ""சட்ட விரோதமாகக் கடைகள் நடத்தி வந்த குற்றத்தை'' மட்டும் ஏன் மன்னிக்க மறுக்கிறது? அந்த வியாபாரிகளுள் யாரும் கஞ்சா, அபின் போன்ற சட்ட விரோதப் பொருட்களை விற்கவில்லையே?

 

சில்லறை வியாபாரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதற்கு வசதியாக, "சுதந்திரத்திற்கு'ப் பின் போடப்பட்ட சட்டங்களையெல்லாம் மாற்றும் அரசு, "இச்சட்ட விரோதக் கடைகளை' அங்கீகரிக்க சட்டத்திருத்தம் செய்ய மறுப்பது ஏன்?

 

தில்லியின் 2,250 தெருக்களில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக, இந்தச் சில்லறை வியாபாரக்கடைகள் இழுத்து மூடப்படவில்லை. அரசின் இந்த நடவடிக்கையின் பின்னே சூப்பர் மார்க்கெட்டுகளின் நலன் ஒளிந்திருக்கிறது என்பதே உண்மை.

 

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பார்கள். அதுபோல, சில்லறை வியாபாரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதற்கு அனுமதியளிக்கும் முன்பாகவே, சிறிய வணிகர்களுக்கு எதிரான வரி விதிப்பை — ""வாட்'' வரியைக் கொண்டு வந்துவிட்டது, மைய அரசு.

 

ஏகாதிபத்தியங்களின் நலனுக்காகத் திணிக்கப்படும் இந்த ""வாட்'' வரி விதிப்பை எதிர்த்து சிறு வணிர்கள் இந்தியாவெங்கிலும் போராடி வருகிறார்கள். ""வாட்'' வரி விதிப்பை எதிர்க்கும் இவர்களைப் பொதுமக்களின் மத்தியில் வில்லனாகக் காட்ட வேண்டும் என்பதற்காகவே, ""இவ்வரி விதிப்பு முறையில் வரி ஏய்ப்பு செய்ய முடியாது; பொருட்களின் மீது விதிக்கப்படும் வரி குறைந்து, பொருட்கள் விலை மலிவாகக் கிடைக்கும்'' என்ற பிரச்சாரத்தைத் தீவிரமாக நடத்தி வருகிறது, ஆளும் கும்பல்.

 

பொருளின் அடக்கவிலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே போவதைத் தடுக்க வக்கற்ற அரசு, அவற்றின் மீது விதிக்கப்படும் வரியைக் குறைப்பதாகக் கூறுவது, அழும் குழந்தையை ஏமாற்ற மிட்டாயைக் கொடுப்பது போன்றதுதான்.


இந்த வரி அமலில் உள்ள பிரிட்டனில், ஜூன் 2005லிருந்து ஜூன் 2006 வரை உள்ள ஓராண்டில் மட்டும் 7,18,200 கோடி ரூபாய்க்கும், ஸ்பெயினில் 14,820 கோடி ரூபாய்க்கும்; இத்தாலியில் 13,110 கோடி ரூபாய்க்கும்; ஜெர்மனியில் 10,830 கோடி ரூபாய்க்கும்; பிரான்சில் 8,550 கோடி ரூபாய்க்கும் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக பெல்ஜியத்தைச் சேர்ந்த வரி ஏய்ப்புத் தடுப்புப் படை அம்பலப்படுத்தியிருக்கிறது. வரி ஏய்ப்பு செய்ய ஓட்டைகளே இல்லையென்றால், அதிகார வர்க்கமும் தரகு முதலாளிகளுமே இந்த ""வாட்'' வரி விதிப்புக்கு எதிராக நின்றிருப்பார்கள்.

 

""வாட்'' வரி எதிர்ப்புப் போராட்டங்களில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முன்னோடியாக இருந்து வருகிறது. தமிழகத்தில் சனவரி 1, 2007 முதல் ""வாட்'' வரியை அமல்படுத்தியே தீர வேண்டும் எனப் பிடிவாதமாக இருக்கும் தி.மு.க. அரசு, இவ்வரி விதிப்பை எதிர்த்துப் போராடுவதைச் சட்டவிரோதமாக அறிவித்துவிட்டது.

 

ஜெயா ஆட்சியில் கூட ""வாட்''டை எதிர்த்துப் போராடிய சிறு வணிகர்களுக்கு எதிராக இப்படியொரு பாசிச அச்சுறுத்தல், அரசு விளம்பரமாக வெளியிடப்படவில்லை. அந்த வகையில் கருணாநிதியின் ஆட்சி, பாசிச ஜெயாவுக்கே முன்னோடியாகவும்; சிறு வணிகர்களுக்கு எதிரானதாகவும் அமைந்துவிட்டது.


· செல்வம்

Last Updated on Monday, 05 May 2008 21:17