Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

தாய்மையை விலை பேசும் உலகமயம்

  • PDF

02_2007_pj.jpg

புதிய வேலைவாய்ப்பு; இது, நீங்கள் இதுவரை அறிந்திராத புத்தம்புதிய வேலைவாய்ப்பு. இது ஒரு புதிய உற்பத்தித் துறை. இங்கு பணியாற்ற உயர்கல்வியோ பயிற்சியோ அவசியமில்லை. இளம் பெண்கள் ஓராண்டு காலத்தில் ரூ. 50,000 முதல் ரூ. 2 இலட்சம் வரை சம்பாதிக்கலாம்.

— இப்படியொரு விளம்பரத்துடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பகிரங்கமாக அறைகூவி அழைக்கிறது. குஜராத்தின் மருத்துவ செயலாளர், இது புதிய வகைப்பட்ட தொழில்வேலைவாய்ப்பு என்றும், அனைவருக்கும் எப்போதுமே ஆதாயம் தரும் சூழல் நிலவுவதாகவும், எல்லா மாநிலங்களுக்கும் இதனைப் பரவலாக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறார். பெருநகரங்களில் இப்புதிய வேலைவாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நாளேடுகளில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. குறிப்பாக, மும்பை மற்றும் குஜராத்தின் ஆனந்த் நகரிலுள்ள பல தனியார் மருத்துவமனைகள் கிராமப்புறங்களுக்குச் சென்று இப்புதிய வேலைக்காக ஆட்களைத் திரட்டத் தொடங்கிவிட்டன.


அது என்ன புதிய வேலை வாய்ப்பு? தாய்மையையே வணிகமயமாக்கும் வாடகைத்தாய் என்பதுதான் இப்புதிய வேலைவாய்ப்பு!

 

குழந்தைப்பேறு இல்லாத வெளிநாட்டுத் தம்பதியினருக்காக, ஒரு இந்தியப் பெண் கருவைச் சுமந்து, பத்து மாதங்களில் குழந்தையைப் பெற்றுக் கொடுத்துவிட்டு, அதற்காக கணிசமான தொகையை வாங்கிக் கொள்வதுதான் வாடகைத்தாய் எனும் புதிய வேலைவாய்ப்பு.

 

""இன் விட்ரோ கருத்தரிப்புமுறை'' (IVF) எனும் புதிய தொழில்நுட்பம் மருத்துவ அறிவியலில் வளர்ச்சியடைந்துள்ளது. ஒரு பெண்ணின் கருமுட்டையையும், ஒரு ஆணின் விந்தணுவையும் தனித்தனியே சேகரித்து, அவற்றை உரிய முறையில் சோதனைக் குழாயில் கருத்தரிக்கச் செய்து, பின்னர் அக்கருவை பெண்ணின் கருப்பையிலிட்டு வளர்த்து தாய்மையடையச் செய்வதே இப்புதிய தொழில்நுட்பமுறையாகும். குழந்தைகள் இல்லாத உள்நாட்டுவெளிநாட்டுத் தம்பதிகளில், மனைவிக்கு தாய்மையடைய உடற்கூறு ரீதியாக வாய்ப்பில்லாத நிலையில், கணவன் தனது விந்தணுவைக் கொடுத்து வேறொரு பெண் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இத்தொழில் நுட்பத்தால் கிடைத்துள்ளது. இதைப் பயன்படுத்திக் கொண்டு, வாடகைத்தாய் எனும் புதிய வேலை வாய்ப்பை பல தனியார் நிறுவனங்கள் இந்திய ஆட்சியாளர்களின் பேராதரவோடு உருவாக்கியுள்ளன.

 

இதன்படி, வாடகைத்தாயின் கருமுட்டையும் உள்நாட்டுவெளிநாட்டுத் தந்தையின் விந்தணுவும் தனித்தனியே சேகரிக்கப்பட்டு, சோதனைக் குழாயிலிட்டு வளர்த்து பின்னர் வாடகைத்தாயின் கருப்பையிலிடப்படும்; வாடகைத்தாய் அக்கருவைச் சுமந்து குழந்தையைப் பெற்றுக் கொடுத்துவிட்டு, அதற்கீடாக உரிய தொகையைப் பெற்றுக் கொள்வார். இதுதான் ஆரவாரமாக அறிவிக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்படும் புதிய வேலைவாய்ப்பு.

 

தாய்மை அடைவது என்பது இதர வேலைகளைப் போன்றதல்ல; அது வேலைவாய்ப்புத் துறையுமல்ல. தாய்மை என்பது மிகவும் சிக்கலானது; உணர்ச்சிப்பூர்வமானது. அது தாயின் வாழ்வு முழுவதிலும் நினைவில் நிற்கக் கூடியது. தாய்மைக் காலத்தில் எண்ணற்ற ஹார்மோன்கள் உருவாக்கும் உணர்வுகள் தாயிடம் பெருந்தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பிரசவத்திற்குப் பின் கைக்குழந்தைக்கும் தாய்க்குமிடையிலான உறவு உணர்ச்சிகள் நிறைந்தது. வாடகைத்தாய் எனும் வியாபாரமானது, அறவியல் மதிப்பீடுகளுக்கு எதிராக இத்தகைய உணர்ச்சிபூர்வ உறவுகள் அனைத்தையும் வெட்டிச் சிதைத்து, தாயை வெறும் மனித எந்திரமாகச் சிதைத்து விடுகிறது.

 

இதுவொருபுறமிருக்க, அறவியல் மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டு, வாடகைத்தாயின் உயிருக்கும் உடலுக்கும் ஏற்படும் அபாயங்கள், குழந்தை பிறந்த பின்னர் ஏற்படும் உளவியல் மற்றும் உணர்ச்சிபூர்வ பாதிப்புகள் பற்றி இந்தப் புதிய வேலைவாய்ப்பு அக்கறை கொள்வதில்லை. மேலும், ஏழை நாடுகளில் பெண்களுக்கு பிரசவத்தின்போது சிக்கல்களும் அபாயங்களும் பெருமளவில் உள்ளன. மருத்துவசேவை என்பது ஏழை நாடுகளில் பெயரளவுக்கே உள்ளது. ஏழை நாடுகளில் நிலவும் வறுமையும், ஊட்டச்சத்து இல்லாமையும் தாய்மார்களுக்கு பிரசவ காலத்தில் பெரும்பாதிப்பை விளைவிக்கின்றன. இருப்பினும், இத்தகைய ஏழ்மை நிலையிலுள்ள பெண்கள்தான். பிழைப்புக்கான வேறுவழியில்லாத நிலையில் வாடகைத் தாய்களாகிறார்கள்.

 

தாய்மையை வியாபாரமாக்கும் இப்புதிய தொழிலை சுவீடன், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி முதலான பல மேற்கத்திய நாடுகள் தடை செய்துள்ளன. அனுமதிக்கப்பட்ட பல முதலாளித்துவ நாடுகளிலும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. கருத்தரிப்பு முறையில் ஏற்பட்டுள்ள புதிய தொழில்நுட்பத்தை வணிகமயமாக்கக் கூடாது என்று வாடகைத்தாய்க்கு சம்பளம் கொடுப்பதை கனடா நாட்டு அரசு தடை செய்துள்ளது; சுய விருப்பத்தின் அடிப்படையில் ஒரு பெண் இதனை ஏற்பதை மட்டுமே அந்நாடு அங்கீகரித்துள்ளது. பிரிட்டனில் இத்தகைய விவகாரங்களைப் பரிசீலிக்க சிறப்புக் கமிட்டிகள் நிறுவப்பட்டு, அதன் ஒப்புதலின் அடிப்படையிலேயே வரம்புக்குட்பட்ட முறையில் வாடகைத்தாய் முறை அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

வாடகைத் தாய் முறையை அனுமதிக்கும் பல ஏழை நாடுகளில் கூட, கடுமையான விதிகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன. அர்ஜெண்டினா, தென் ஆப்பிரிக்கா முதலான நாடுகளில் ஒவ்வொரு வாடகைத்தாய் விவகாரத்தையும் பரிசீலிக்க சிறப்புக் கமிட்டிகள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில் பெயரளவுக்குக் கூட விதிகளோ, கட்டுப்பாடுகளோ கிடையாது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR)பொதுவில் சில வழிகாட்டுதல்களை மட்டுமே கொடுத்துள்ளது. இவற்றைக் கொண்டு தாய்மையை வணிகமயமாக்கும் தனியார் மருத்துவ நிறுவனங்களையோ, வாடகைத் தாயை தேடி பேரம் நடத்தும் தரகு நிறுவனங்களையோ கட்டுப்படுத்த முடியாது; பாதிப்பு ஏற்பட்டால் தண்டிக்கவும் முடியாது.

 

குழந்தை பிறந்தபின், குறிப்பிட்ட காலத்திற்கு வாடகைத்தாயின் பொறுப்பில் குழந்தையை விடுவதற்குக் கூட விதிகளையும் கட்டுப்பாடுகளையும் இத்தகைய முறையை அனுமதிக்கும் நாடுகள் பின்பற்றுகின்றன. ஆனால் இந்தியாவில் இத்தகைய பிரச்சினைகள் குறித்த அக்கறையோ, வாடகைத் தாய்முறைக்கான விதிகளோ, கட்டுப்பாடுகளோ இல்லை. அறவியல் மதிப்பீடுகள், வாடகைத்தாயின் உடல்நலப் பாதிப்புகள், இத்தொழிலை முறைப்படுத்துவதற்கான சட்டங்கள், உணர்ச்சிபூர்வ பிரச்சினைகள் குறித்த முறைப்படுத்தல்கள் முதலான எதுவுமே இல்லை. சுருக்கமாகச் சொன்னால், வாடகைத் தாய்க்கு சட்டபூர்வ பாதுகாப்போ, பாதிப்புகளுக்கு நிவாரணமோ எதுவுமே இந்தியாவில் இல்லை. இவற்றைச் சாதகமாக்கிக் கொண்டு ஏழ்மையும் ஏழைகளும் நிறைந்த இந்தியாவில் வாடகைத்தாய் முறை வேகமாகப் பரவி வருகிறது.

 

இதற்கேற்ப தனியார் ஐந்து நட்சத்திர மருத்துவமனைகளும் தரகு நிறுவனங்களும் பெருகத் தொடங்கியுள்ளன. குறைந்த செலவில் சிகிச்சையும் குறைந்த விலைக்குப் பெண்களும் கிடைக்கும் என்ற விளம்பரங்களுடன் ""மருத்துவச் சுற்றுலா''க்களை நடத்தும் தரகு நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. குழந்தைப் பேறு இல்லாத வெளிநாட்டுத் தம்பதிகள் இந்தியாவுக்குப் படையெடுக்கின்றனர். வாடகைத் தாயிடம் ரூ. 50,000 முதல் ரூ. 2 லட்சம் வரை பேரம் பேசப்படுகிறது. அதாவது, குறைந்தபட்சம் 1000 அமெரிக்க டாலர். அதேசமயம், இதுபோன்ற வாடகைத் தாய் முறைக்கு அமெரிக்காவில் குறைந்தபட்சம் 20,000 முதல் 30,000 டாலர் வரை கொடுக்கப்படுகிறது. ஏழ்மை காரணமாகவும் கட்டுப்பாடுகள் இல்லாததாலும் இந்தியாவில் வாடகைத் தாய்க்கான ஒப்பந்தக்கூலி மிக மலிவாக உள்ளது. மேலும், இந்த வாடகைத்தாய், வெளிநாட்டு தம்பதிகள் போடும் எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுச் செயல்பட வேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாகிறார். கோடிகோடியாய் அந்நியச் செலாவணி கிடைக்கும் துறையாகச் சித்தரிக்கப்படும் மருத்துவச் சுற்றுலாத்துறை, இப்போது மறுஉற்பத்திச் சுற்றுலாத் துறையாக மாறிவிட்டது.
இதனால்தான், அடுத்த சில ஆண்டுகளில் 600 கோடி டாலர் அளவுக்கு வாடகைத்தாய் முறையில் வியாபாரம் பருகும் என்று பெருமிதத்தோடு அறிவிக்கிறது, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம். ஏராளமாக அந்நியச் செலாவணி கிடைக்கும்; மருத்துவர்கள், தாதிகள், தொழில்நுட்பவாதிகள், பரிசோதனைக்கூடப் பணியாளர்கள் எனப் பலருக்கு வேலைவாய்ப்புப் பெருகும் என்று ஆளும் வர்க்கங்களும் மருத்துவத்துறையினரும் வாடகைத்தாய் தொழிலை ஆரவாரத்துடன் வரவேற்கின்றனர். ஏற்கெனவே நடந்துவரும் சிறுநீரக விற்பனைத் தொழிலை வாடகைத்தாய் தொழில் விஞ்சிவிடும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

 

குஜராத்தின் ஆனந்த் நகரிலுள்ள அகான்க்ஷா கருத்தரிப்பு மையத்தின் தலைவரான டாக்டர் நயனாபடேல், கால் சென்டர் பி.பி.ஓ.க்களில் வெளிநாட்டு வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து தருவதைப் போல, வாடகைத்தாய் எனும் புதிய வணிகம் வேகமாக வளர்ந்து வருவதாகப் பெருமையுடன் குறிப்பிடுகிறார். வாடகைத் தாய்மார்களைக் கொண்டு வியாபாரம் செய்யும் இவர், 1970களில் ஆனந்த் நகரில் அமுல் நிறுவனம் நடத்திய வெண்மைப் புரட்சிக்குப் (பால் பெருக்குத் திட்டம்) பிறகு இப்போது இந்நகரில் வாடகைத்தாய் புரட்சி நடப்பதாகக் கூறுகிறார். மும்பையிலுள்ள மல்பானி கருத்தரிப்பு மையத்தின் டாக்டர் அஞ்சலி மற்றும் அனிருத்தா ஆகியோர், கடந்த ஈராண்டுகளில் தமது சிகிச்சை மையத்திற்கு வாடகைத்தாயைத் தேடிவரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக பூரித்துப் போகின்றனர்.

 

""அவன்அவள்அது'' கதைபோல இத்தொழில் இரகசியமாக நடைபெறுவதில்லை. கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் வெளிப்படையாகவே நடக்கத் தொடங்கி விட்டது. புனே நகரிலுள்ள ஒரு கருத்தரிப்பு சிகிச்சை மையம், குழந்தையில்லா வெளிநாட்டுத் தம்பதிகளை அழைப்பதோடு, இளம் இந்தியப் பெண்களை இம்மையத்தின் உறுப்பினராகச் சேர்ந்து பயனடையுமாறு பல்வேறு சிறப்புப் பரிசுகளுடன் அழைக்கிறது. பல்வேறு தனியார் மருத்துவ நிறுவனங்களும் தரகு நிறுவனங்களும் ""நீங்கள் வாழ்நாள் முழுக்க சம்பாதிப்பதைவிட மிக அதிகமாகச் சம்பாதிக்க முடியும்'' என்று கிராமப்புறப் பெண்களை வெளிப்படையாக ஆசைகாட்டி அழைக்கின்றன. மகளின் உயர்கல்விச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக வாடகைத் தாயாகிய குஜராத்தின் வீணா ராவத், கடன் சுமையிலிருந்து மீள்வதற்காக வாடகைத் தாயாகிய மும்பையின் சேத்னா ஜாதவ் என ஏழைப் பெண்கள் வேறு வழியின்றி தமக்காகவும் தமது குடும்பத்துக்காகவும் தமது உடலை மறுஉற்பத்திக் கூடமாகப் பயன்படுத்திக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறார்கள்.

 

குழந்தையில்லா வெளிநாட்டுத் தம்பதிகள் இந்தியாவின் ஏழைக் குழந்தைகளைத் தத்தெடுத்து தமது வாரிசாக வளர்க்க முடியும். ஆனால், எனது இரத்தவழி வாரிசு என்ற ஆணாதிக்க சொத்துடைமை வர்க்கத் திமிரும் பணத்திமிரும் சேர்ந்து கொள்ள, அனைத்தையும் பணஉறவாக்கியுள்ள உலகமயம் இப்புதிய அடிமைத் தொழிலை ஏழை நாடுகளில் வேர்விட்டுப் பரவச் செய்துள்ளது. இந்திய ஏழைத் தாய்மார்கள் இந்த வக்கிரத் தொழிலின் கூலி அடிமைகளாக்கப்பட்டுள்ளார்கள்.

 

ஒரு வெளிநாட்டுத் தம்பதியினர், ஆண் வாரிசை எதிர்பார்த்து வாடகைத் தாயை ஒப்பந்தக் கூலியாக அமர்த்திக் கொண்டு, அத்தாய்க்கு பெண் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தைக்கு யார் பொறுப்பு என்பதற்கான விதிகளோ, சட்டங்களோ இந்தியாவில் இல்லை. கருவிலுள்ள குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று கண்டறிந்து, பெண் குழந்தை எனில் கருக்கலைப்பு செய்ய வாடகைத் தாயை நிர்பந்தித்தால் அல்லது ஒப்பந்தப்படி கூலி தர மறுத்தால் அதை விசாரிக்கவோ தண்டிக்கவோ எவ்வித சட்டப் பாதுகாப்பும் இந்தியாவில் இல்லை. மேலும், ஒரு வாடகைத் தாய் எத்தனை முறை இவ்வாறு செயற்கை முறையில் கருத்தரிக்கலாம், அதனால் தாயின் உடல்நலத்திற்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதைப் பற்றிய அக்கறையோ, விதிகளோ கட்டுப்பாடோ எதுவுமில்லை. வாடகைத்தாய் முறையை அனுமதித்துள்ள இதர ஏழைநாடுகளில் கூட, இவ்வாறு 2 முறை மட்டுமே கருத்தரிக்கலாம் என்று விதிகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன. ஆனால் இந்தியாவில் 5 முறை இவ்வாறு கருத்தரிக்க தாராள அனுமதி தரப்பட்டுள்ளது. அதற்கு மேலும் கருத்தரித்து அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் வாடகைத் தாய்மார்களுக்கு ஆட்சியாளர்கள் சிறப்புப் பரிசுகள் அளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு முன்னர் கும்பினி ஆட்சியின்கீழ் நமது முன்னோர்கள் இலங்கை, மலேயா, மொரீசியஸ் முதலான நாடுகளுக்குக் கட்டி இழுத்துச் செல்லப்பட்டு, பாம்பும் அட்டையும் கொடிய விலங்குகளும் நிறைந்த காடுகளில் தள்ளப்பட்டு, தோட்டத் தொழில் செய்யும் அடிமைகளாக்கப்பட்டார்கள். அது காலனியாதிக்கம். இன்று நம்நாட்டு இளம்பெண்கள் வாடகைத்தாய் எனும் மறுஉற்பத்தி அடிமைகளாக மாற்றப்பட்டு வருகிறார்கள். இது மறுகாலனியாதிக்கம். தொழில்நுட்பவாதிகள் ஏற்றுமதி, கூலித் தொழிலாளர்கள் ஏற்றுமதி என்று தொடங்கி இப்போது இந்தியத் தாய்மார்களின் கருவறையும் வர்த்தகப் பண்டமாக மாற்றப்பட்டு விட்டது. இதுதான் மறுகாலனியாக்கம் நாட்டுக்கு அளித்துள்ள "பரிசு'! இம்மறுகாலனியாக்கத்தை வீழ்த்தாமல் பெண் விடுதலை என்பது ஒருக்காலும் சாத்தியமில்லை என்பதை நாட்டுக்கு உணர்த்திவிட்டு, வாடகைத் தாய்மார்கள் நவீன அடிமைகளாக உழன்று கொண்டிருக்கிறார்கள்.


· குமார்