Sat04202024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் புதிய காப்புரிமைச் சட்டம்: நோயாளிகளின் கழுத்துக்குச் சுருக்கு!

புதிய காப்புரிமைச் சட்டம்: நோயாளிகளின் கழுத்துக்குச் சுருக்கு!

  • PDF

mars_2007.jpg

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நோவார்டிஸ் என்ற பன்னாட்டு மருந்து நிறுவனம், தான் தயாரித்து விற்பனை செய்துவரும் ""க்ளீவெக்'' என்ற இரத்தப் புற்று நோய்க்கான மருந்திற்கு, இந்தியாவில், தனக்குக் காப்புரிமை வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் நோவார்டிஸுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டால், மாதம்

 8,000 ரூபாய் செலவில் கிடைக்கும் (இரத்தப் புற்று நோய்க்கான) உள்நாட்டு மருந்துகள் தடை செய்யப்படும். இதற்குப் பதிலாக, இரத்தப் புற்று நோயாளிகள், நோவார்டிஸின் க்ளீவெக் மருந்தை வாங்க மாதமொன்றுக்கு ரூ. 1,20,000/ செலவு செய்ய வேண்டிய அதிபயங்கரமான எதிர்காலத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

 

இந்த வழக்கு ஒரேயொரு மருந்து மட்டும் சம்மந்தப்பட்ட பிரச்சினையல்ல; இந்த வழக்கில் நோவார்டிஸுக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கிடைத்தால், பிறகு, உயிர் காக்கும் மருந்துகளைத் தயாரிக்கும் பல்வேறு பன்னாட்டு மருந்து நிறுவனங்களும் தங்களின் தயாரிப்புகளுக்கும் காப்புரிமை கோருவார்கள். எய்ட்ஸ், சர்க்கரை நோய், ஆஸ்துமா, இருதய நோய்கள் தாக்கியுள்ள பல தரப்பட்ட நோயாளிகள், மாதமொன்றுக்கு பத்தாயிரக்கணக்கில் செலவு செய்து மருந்து வாங்க வேண்டும்; அது முடியாதென்றால், நோயினால் அவதிப்பட்டுச் சாகவேண்டும் என்ற நிலைமையும் உருவாகி விடும்.

 

இந்திய அரசு, உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைக்கு அடிபணிந்து, வடிவுரிமை சட்டத்தில் செய்துள்ள மாற்றங்கள்தான், உயிர் காக்கும் மருந்தின் விலைகளை இந்நிறுவனங்கள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்த்திக் கொள்வதற்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது. வடிவுரிமைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு எதிராக இந்திய மக்கள் போராடியபொழுது, அப்போராட்டங்களைத் தணிப்பதற்காக, ""ஏற்கெனவே சந்தையில் புழங்கும் மருந்துகளில், சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் வடிவுரிமை கோர முடியாது'' என்ற பிரிவை புதிய வடிவுரிமைச் சட்டத்தில் இந்திய அரசு சேர்த்தது. இந்தப் பிரிவு, உலகமயம் தந்துள்ள வர்த்தகச் சுதந்திரத்திற்கு எதிரானது என்றும், அதனால் இந்தப் பிரிவை அடியோடு நீக்குவதன் மூலம் தனக்குக் காப்புரிமை வழங்க வேண்டும் என்றும் கோருகிறது, நோவார்டிஸ். ஏனென்றால், அந்நிறுவனம் காப்புரிமை கோரும் க்ளீவெக் மருந்து, ""புதிய மொந்தை பழைய கள்ளு'' போன்றது தான்.

 

இந்திய மக்கள் போராடிப் பெற்ற இந்த அற்பமான சலுகை நீதிமன்றத்தால் நீக்கப்பட்டால், இந்திய நோயாளிகள் மட்டுமல்ல, விலை மலிவான இந்திய மருந்துகளை இறக்குமதி செய்து வரும் பல்வேறு ஏழை நாடுகளும் பாதிக்கப்படும். அதனால்தான், 150 ஏழை நாடுகளைச் சேர்ந்த நோயாளிகள் நோவார்டிஸின் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி தத்தமது நாடுகளில் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறார்கள். இந்தியாவில் நோவார்டிஸுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

 

ஏகாதிபத்திய நிறுவனங்களின் இலாப வெறிக்கும், மக்களின் வாழ்வுரிமைக்கும் இடையே நடக்கும் போராட்டமாகத்தான் இந்த வழக்கைப் பார்க்க வேண்டும். இந்தப் பிரச்சினையில் இந்திய நீதிமன்றங்கள் மக்களுக்குச் சாதகமாக நடந்து கொள்ளும் என நம்பிக் கொண்டு மௌனமாய் இருந்துவிட முடியாது. ஏனென்றால், தாராளமயத்தின் பின், பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சாதகமாகத்தான் பல்வேறு தீர்ப்புகளை இந்திய நீதிமன்றங்கள் சொல்லியுள்ளன. எனவே, நோய் நொடியற்ற ஆரோக்கியமான வாழ்க்கைக்கான மக்களின் போராட்டமே, நோவார்டிஸின் பேராசையை மட்டுமல்ல, புதிய வடிவுரிமைச் சட்டத்தையும் ஒழித்துக் கட்டும்!