Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் தருமபுரி பேருந்து எரிப்பு தீர்ப்பு: குற்றக் கும்பலின் கூடாரமே அ.தி.மு.க

தருமபுரி பேருந்து எரிப்பு தீர்ப்பு: குற்றக் கும்பலின் கூடாரமே அ.தி.மு.க

  • PDF

mars_2007.jpg

தலைமைக்குத் தனது விசுவாசத்தைக் காட்டி, அரசியல் பதவி ஆதாயம் அடைவதற்கான வேறொரு வகை பிழைப்புவாதம்தான், இந்த மனிதத் தன்மையற்ற, கொடூரமான கொலைவெறிக்கு அடிப்படையாய் இருந்தது.

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கையும், தீர்ப்பையும் மேலவளவு சாதிவெறிப் படுகொலை வழக்கையும் தீர்ப்பையும் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது. இரண்டு வழக்குகளுமே கொஞ்சமும் மனிதத்தன்மையற்ற, கொடூரமான முறையில் கும்பல் வெறியால் நிகழ்த்தப்பட்டவை. முதல் சம்பவம் பிழைப்புவாத அரசியல் நோக்கில் நடத்தப்பட்டது; இரண்டாவது, சாதிவெறி அரசியல் நோக்கில் நடத்தப்பட்டவை. இரண்டுமே, கொடூரம் நிகழ்ந்த மாவட்டங்களில் வழக்கு நடத்தப்பட்டால் நீதி கிடைக்காதென்று சேலம் நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டன. மேலவளவு படுகொலைகளுக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு அதிகபட்சத் தண்டனை விதிக்கப்படவில்லை. குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 14 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், அவர்களையும் பிணையில் அனுப்பி சுதந்திரமாக திரியவிட்டும் ஆதிக்க சாதிவெறிக்குக் கருணை காட்டியது நீதித்துறை. ஆனால், தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் நடுத்தர வர்க்கத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரமான அநீதிஅக்கிரமம் கண்டு கொதித்துப்போன நீதித்துறை, அதன் மீதே நம்பிக்கை இழந்துவிடக் கூடாதென்று அதிகபட்சத் தண்டனையான மரண தண்டனையை வழங்கியது.

 

அதிகபட்சத் தண்டனையாக மரண தண்டனை எதற்காக விதிக்கப்படுகிறது? ""குற்றவாளிகள் வெளியே வந்தால் சமூ கம் நிம்மதியாக வாழ முடியாது'' என்கிறார் அரசு வக்கீல். ""இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடக்கக் கூடாது'' என்கிறார், மாணவி கோகிலவாணியின் தந்தை. ""எங்கள் மகளுக்கு ஏற்பட்ட கதி இனி யாருக்கும் ஏற்படக்கூடாது... இத்தீர்ப்பு உறுதியாக நிறைவேற்றப்பட்டால் எதிர்காலத்தில் யாரும் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்படுவார்கள்'' என்கிறார் மற்றொரு மாணவி காயத்ரியின் தந்தை.

 

அவர்களின் நம்பிக்கை பலிக்குமா என்பதுதான் முக்கியமான கேள்வி. இந்த நம்பிக்கை நிச்சயமாக பலிக்காது; தோற்றுப்போகும். இந்தக் கேள்விக்கான பதில், தீர்ப்பிலேயே பொதிந்திருக்கிறது. ""பயங்கரமான கொடூரமான இந்தச் செயல்களின் நோக்கம் அரசியல் லாபத்திற்காகவும் தங்களுடைய தலைவர்களிடம் நல்ல பெயர் எடுக்கவும் கொஞ்சம் கூட இரக்கமற்றமுறையில், இருதயம் இல்லாதவர்களாக கொலைகள் செய்துள்ளனர்'' என்கிறார் நீதிபதி. இத்தகைய பிழைப்புவாத கிரிமினல் குற்றவாளிகளை ஊட்டி வளர்க்கும் ஒரு அரசியல் கட்சி இந்த மாநிலத்தில் பத்தாண்டுகள் ஆளுங்கட்சியாகவும், இப்போதும் முதன்மையான எதிர்க்கட்சியாகவும் இருக்கிறது.

 

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் என்னென்ன குற்றங்களுக்காக ஏழாண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோ, அதே குற்றங்களை அதேநாளில் அக்கட்சியின் பலநூறு உறுப்பினர்கள் புரிந்துள்ளனர். மேலும், தர்மபுரி கொலைக்குற்ற வழக்கில் தடையங்களை அழிப்பது, குற்றவாளிகளுக்கு மாதம் 5000 ரூபாய்வரை ஊதியம் வழங்குவது, சாட்சியங்களைப் பிறழச் செய்வது போன்ற பல குற்றங்களை அக்கட்சியும் அதன் அரசாங்கமும் செய்திருக்கிறது. கிருட்டிணகிரி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தபோது, இரண்டே நாட்களில் 22 அரசு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாற்றப்பட்டனர்.

 

கொளுத்தப்பட்ட மாணவி கோகிலவாணியின் தந்தை சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குப் போட்டு, அரசும், போலீசும் கடும் கண்டனத்துக்குள்ளாகி, வழக்கு சேலத்துக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகும் உயர்நீதி மன்றம் பரிந்துரைத்தவரை சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க மறுத்து, மேலும் மேலும் மேல் முறையீடு செய்து வழக்கை இழுத்தடித்தது. ஜெயலலிதா அரசும், அதிகாரிகளும் நீதிமன்ற அவமதிப்புத் தண்டனையிலிருந்து தப்பமுடியாத நிலையில் அரசு வழக்கறிஞரை நியமித்தனர். பிறகும், வழக்குத் தொடர முடியாதவாறு வழக்கு ஆவணங்கள் தொலைந்து போனதாக நாடகமாடியது. கொளுத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களிடம் கோடீசுவர முதலாளிகளை அனுப்பி விலைக்கு வாங்கிடச் செய்த முயற்சி பலிக்காதபோது, கொலைமிரட்டல்கள் விடப்பட்டன. எல்லாத் தடைகளையும் கடந்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட பிறகு, அவர்களின் குடும்பங்களுக்குப் பல இலட்சம் ரூபாய் ""கருணைத் தொகை'' ஏற்பாடு செய்துள்ளது ஜெயலலிதா கட்சி.

 

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் மட்டுமல்ல, பொதுவில் ஓட்டுக்கட்சி அரசியலில் கொள்கை, கோட்பாடு, தத்துவம் ஏதுமற்ற பிழைப்புவாதமே மேலோங்கியுள்ள நிலையில், அ.இ.அ.தி.மு. க.வோ, முழுக்கவும் அரசியல் பிழைப்புவாதக் கிரிமினல்களின் கட்சியாக உள்ளது. கட்சிக்குள்ளேயே சுயநலத்துக்காக ஒருவரை ஒருவர் படுகொலைகள் செய்வதும், கட்சித் தலைமையே தனது கட்சிப் பிரமுகர்கள் மீதே கொலைவெறித் தாக்குதல்களை ஏவி விடுவதும், பதவி ஆதாயத்துக்காகவும் தலைமையின் கருணைப் பார்வையை ஈர்ப்பதற்காகவே நாக்கை அறுத்துக் கொள்வதும், விரலைத் துண்டித்துக் கொள்வதும், தற்கொலை செய்து கொள்வதும் வழக்கமாக உள்ளது.

 

இப்படிப்பட்ட குற்றவாளிகளின் கூடாரமாகிய ஒரு அமைப்பும் அது ஒரு அரசியல் கட்சியாகவும் நீடிப்பதே சமூகத்துக்கு தீங்கும் ஆபத்தும் விளைவிப்பதாக உள்ளது. இந்த உண்மைகளை முன்வைத்து அந்தப் பிழைப்புவாதக் கிரிமினல் கட்சியைத் தடை செய்யும்படி கோரும் அருகதையும் அக்கறையும் வேறு எந்த ஓட்டுக் கட்சிக்கும் கிடையாது. இதுதுõன் ஜெயலலிதா கும்பலின் பலத்திற்கும் துணிவுக்கும் அடிப்படை.

 

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மாட்சிமை குறித்து சண்டப்பிரசண்டம் செய்யும் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளுக்கு, அதன் ஒரு அங்கமான ஓட்டுக்கட்சி அரசியல் இவ்வளவு தூரம் சீரழிந்து கழிசடை நிலையை அடைந்து, பெரும் சவாலாக வளர்ந்திருப்பது மட்டும் சகித்துக் கொள்ள முடியாததாக உள்ளது.