Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் பட்ஜெட் : ஆடு நனைகிறதென்று ஓநாய்கள் அழுகின்றன

பட்ஜெட் : ஆடு நனைகிறதென்று ஓநாய்கள் அழுகின்றன

  • PDF

puja_apri_07.jpg

பஞ்சாப், உத்தர்கண்ட் சட்டசபைத் தேர்தல்களில் வாங்கிய அடி, காங்கிரசு கட்சியை விலைவாசி உயர்வைப் பற்றிப் பேச வைத்திருக்கிறது. அதனால், சாமான்ய மக்களின் நலனை மனதில் கொண்டு, 2007/08 ஆண்டுக்கான மைய அரசின் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி கூறி வருகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.5%ஐத் தாண்டி வளர்ந்து "சாதனை' படைத்து விட்டாலும், விவசாய வளர்ச்சி பின்தங்கி விட்டது. விவசாய உற்பத்தித் தேங்கிப் போனதால், உணவுப் பொருள் விலையெல்லாம் உயர்ந்து விட்டது. எனவே, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும்; விவசாயத்தையும், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் இந்த பட்ஜெட்டில் பல திட்டங்கள் போடப்பட்டுள்ளதாகக் காங்கிரசுக் கட்சிப் பீற்றிக் கொள்கிறது.

 

விவசாயிகளுக்கு பொதுத்துறை வங்கிகள் மூலம் வழங்கும் கடன் 2.25 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது; கடந்த ஆண்டைவிட மேலும் 50 இலட்சம் விவசாயிகளுக்குக் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; நீர்ப்பாசனத் திட்டங்களை மேம்படுத்த சிறப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதற்கு 16,979 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்பன உள்ளிட்டு விவசாய வளர்ச்சிக்கு 18 அம்சத் திட்டமொன்றை ப.சிதம்பரம் பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார். இதன் மூலம் விவசாய உற்பத்திப் பெருகி விலைவாசி குறையும்; விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் நின்றுவிடும் என ஆரூடம் கூறுகிறார்.

 

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் கூட, பொதுத்துறை வங்கிகள் மூலம் 1,90,000 கோடி ரூபாய் விவசாயக் கடனாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், கடந்த பட்ஜெட்டுக்கும், இந்த பட்ஜெட்டுக்கும் இடைபட்ட இந்த ஓராண்டில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனதை இந்த வங்கிக் கடன் தடுத்து நிறுத்திவிடவில்லை.

 

விதை, உரம், பூச்சி மருந்து ஆகிய இடுபொருட்களின் விலைகள் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றித் தாறுமாறாக உயர்ந்துகொண்டே போவதால், உற்பத்திச் செலவு அதிகமாகிக் கொண்டே போகிறது. எவ்வளவுதான் நன்றாக விளைந்தாலும், இந்த உற்பத்திச் செலவை ஈடுகட்டும் விலை விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை. விவசாயிகள் விவசாயக் கூட்டுறவு வங்கியில் வாங்கும் கடனைக் கூட அடைக்க முடியாமல் முழி பிதுங்கி நிற்பதற்கு, இதுதான் அடிப்படை. எனவே, விவசாய விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய விலை கிடைப்பதை உத்தரவாதப்படுத்தாமல், விவசாயக் கடனை அதிகரிப்பது வங்கிக் கடன் பெறும் விவசாயிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பதெல்லாம் புண்ணுக்குப் புணுகு தடவுவதாகத்தான் முடியும்.

 

இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்வதற்காக, ""விவசாயிகள் தேசிய கமிசன்'' என்ற அதிகாரவர்க்க கமிட்டியை கடந்த ஆண்டே மைய அரசு அமைத்தது. ஆடு நனையுதென்று ஓநாய் அழுத கதையாக, இந்த கமிட்டியின் தலைவராக அமெரிக்கக் கைக்கூலி (வேளாண் விஞ்ஞானி) எம்.எஸ். சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். கந்துவட்டிக் கடன் தொல்லை, விளைபொருட்களின் விலை வீழ்ச்சி ஆகிய பிரச்சினைகளை மட்டுமின்றி, அந்நிய நாடுகளில் இருந்து விவசாய விளைபொருட்களைத் தாராளமாக இறக்குமதி செய்து கொள்வதற்குக் கொடுக்கப்பட்டுள்ள அனுமதியை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் விவசாயிகள் இக்கமிசன் முன் வைத்தனர்.

 

விவசாயிகளின் உயிராதாரமான இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட அக்கமிசன், ""விவசாயத்திற்கு வழங்கப்படும் வங்கிக் கடனுக்கான வட்டியைக் குறைக்க வேண்டும்; சந்தை ஏற்ற இறக்கத்தால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்'' என்பன உள்ளிட்டு சில சில்லறை பரிந்துரைகளை மைய அரசிடம் அளித்தது.

 

விவசாயிகளின் நலனுக்காக பட்ஜெட் போட்டதாகப் பீற்றிக் கொள்ளும் ப.சிதம்பரம், விவசாயிகள் கோரியபடி வேளாண் விளைபொருட்களின் இறக்குமதிக்கும் தடை போடவில்லை. தேசிய கமிசனின் அற்பமான பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, விவசாயிகளின் பிரச்சினையை ஆராய ராதாகிருஷ்ணன் கமிட்டியை அமைப்பதாக பட்ஜெட்டில் அறிவித்து, விவசாயிகளின் பிரச்சினையை மீண்டும் ஊறுகாய் பானைக்குள் போட்டுவிட்டார்.

 

16,979 கோடி ரூபாய் செலவில் நீராதாரங்களை மேம்படுத்தப் போவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இத்திட்டத்திற்காகத் தற்பொழுது ஒதுக்கப்பட்டுள்ள தொகை வெறும் 100 கோடி ரூபாய்தான். இப்புள்ளிவிவர மோசடித்தனம் ஒருபுறமிருக்க, ஒவ்வொரு மாநிலமும், தங்களின் நீர் ஆதாரங்களை மேம்படுத்த, மைய அரசின் முன்அனுமதியின்றியே, உலக வங்கியிடமிருந்து கடன் பெற்றுக் கொள்ளலாம் என்ற சலுகையை வாரி வழங்கியிருக்கிறார், ப.சிதம்பரம். இதன் அடிப்படையில், தமிழகம், காவிரி இறுதித் தீர்ப்பு வந்த சூட்டோடு, உலக வங்கியிடமிருந்து 2,182 கோடி ரூபாய் கடன் பெற ஒப்பந்தம் போட்டுள்ளது. ""குடிநீர், பாசன விநியோகத்தைத் தனியார்மயப்படுத்த வேண்டும். குடிநீர் மற்றும் பாசனக் கட்டணங்களை உயர்த்த வேண்டும்'' என்ற நிபந்தனைகள் இன்றி இந்தக் கடன் ஒப்பந்தம் முடிவாகி இருக்காது. இந்தக் கடன் மூலம் தமிழகத்திலுள்ள ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் ஆதாரங்கள் மேம்படுகிறதோ இல்லையோ, அவை கூடிய விரைவில் தனியார்மயமாகி விடும் என நிச்சயமாகச் சொல்லலாம்.

 

பட்ஜெட்டின் பெருமையைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு, தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாவட்டங்களின் எண்ணிக்கையை 200லிருந்து 330 ஆக உயர்த்தியிருப்பதையும்; அத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை 11,300 கோடி ரூபாயிலிருந்து

 

ரூ. 12,000 கோடியாக அதிகரிக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள். ஆனால், இத்திட்டத்தைத் தீவிரமாக கண்காணித்து வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், இத்திட்டத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்றால், ஒரு மாவட்டத்துக்கு தலா 100 கோடி ரூபாய் தேவைப்படும். இதன்படி 33,000 கோடி ரூபாய் இல்லாமல் இத்திட்டத்தை 330 மாவட்டங்களில் முழுமையாகச் செயல்படுத்த முடியாது; விலைவாசி உயர்வோடும், பணவீக்கத்தோடும் ஒப்பிட்டால், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை யானைப் பசிக்குச் சோளப் பொரிதான் என விமர்சித்துள்ளன.

 

இந்தியாவில் பள்ளிக்குச் செல்லும் வயதிலுள்ள குழந்தைகளுள் ஏறத்தாழ 1.3 கோடி குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்படுவதேயில்லை. பெற்றோர்களின் வறுமை மட்டும் இதற்குக் காரணம் இல்லை. இந்தியாவெங்கும் 31,478 கிராமங்களில் பள்ளிக் கூடங்களே கிடையாது. 6,647 பள்ளிக் கூடங்களில் கட்டிடங்கள்தான் இருக்கிறதேயொழிய, பாடம் நடத்த ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை. 75,884 பள்ளிகளில் ஒரேயொரு ஆசிரியர் தான் இருக்கிறார்.


இப்படி அவலமான நிலையில் இருக்கும் ஆரம்பக் கல்விக்கும், மதிய உணவுத் திட்டத்திற்கும் சேர்த்து 23,142 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டைவிட 6,000 கோடி ரூபாய் அதிகம் என பட்ஜெட்டின் துதிபாடிகள் மெச்சிக் கொள்வது உண்மைதான். ஆனாலும், இந்தக் கூடுதல் நிதி ஒதுக்கீடின் பின்னே, ஒரு பொறியையும் மறைத்து வைத்துள்ளார், ப.சிதம்பரம். அனைவருக்கும் ஆரம்பக் கல்வி திட்டத்திற்கு மைய அரசு 75 சதவீத நிதியையும், மாநில அரசுகள் 25 சதவீத நிதியையும் ஒதுக்கி வந்தன. இனி, மைய அரசு 50 சதவீத நிதியைத்தான் ஒதுக்கும் எனக் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார், ப.சிதம்பரம்.

 

2 இலட்சம் ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள்; 5 இலட்சம் வகுப்பறைகள் புதிதாகக் கட்டப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இத்திட்டங்களுக்காக ஒரு பைசாகூட நிதியாக ஒதுக்கப்படவில்லை.

 

ஆரம்பப் பள்ளியில் சேரும் மாணவர்களுள், 35 சதவீத மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு முடித்த பிறகும்; 53 சதவீதமாணவர்கள் எட்டாம் வகுப்பு முடித்த பிறகும்; 63 சதவீத மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்த பிறகும் மேலே படிக்க முடியாமல், இடையிலேயே நின்று விடுவதாக அரசே ஒப்புக் கொண்டுள்ளது. இப்படி இலட்சக்கணக்கான மாணவர்கள் படிப்பைப் பாதியிலேயே கைவிடும்பொழுது, அவர்களுள் ""திறமை'' வாய்ந்த ஒரு இலட்சம் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000/ கல்வி உதவித் தொகை அளிக்கப் போவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள மாணவர்கள், தங்களுக்குத் ""திறமை''யும் இல்லை, ""அதிருஷ்டமும்'' இல்லை என மனதைத் தேற்றிக் கொண்டு, குழந்தைத் தொழிலாளியாகப் போக வேண்டியதுதான்.

 

பட்ஜெட்டைக் கூறு போட்டால், சமூக நலத் திட்டங்கள் பற்றிய டாம்பீக அறிவிப்புகளுக்கும், உண்மை நிலைக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இருப்பதைப் பச்சையாகக் காண முடியும். இந்தியப் பொருளாதாரம் 8.5 சதவீதத்தைத் தாண்டி ""வளர்ந்து'' செல்லும் நிலையிலும் கூட, சமூக நலத் திட்டங்களுக்குக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய ஏன் மறுக்கிறார்கள்?

 

பட்ஜெட்டில் பற்றாக்குறை குறிப்பிட்ட வரம்பைத் தாண்டிச் செல்லக் கூடாது என்பது உலக வங்கியின் கட்டளை. இப்பற்றாக்குறையை ஈடுகட்ட வேண்டும் என்றால், தரகு முதலாளிகள் மீது, பன்னாட்டு நிறுவனங்கள் மீது கூடுதலாக வரி விதிக்க வேண்டும்; இல்லையென்றால், மக்களின் குரல்வ ளையை இறுக்க வேண்டும். முதலாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வரிச் சலுகைகளை பறித்தாலோ, அவர்கள் மீது கூடுதல் வரி விதித்தாலோ தாராளமய ஆதாரவாளர்கள் கொதித்துப் போய் விடுவார்கள். அதனால்தான் மக்களின் தேவைகளை இறுக்கிப் பிடித்து, உலகவங்கி நிர்ணயித்துள்ள பற்றாக்குறை வரம்பைத் தாண்டாமல் பட்ஜெட்டைப் போட்டிருக்கிறார், ப.சிதம்பரம்.

 

""பொருளாதார வளர்ச்சி'' பாதிக்கப்படக்கூடாது எனக் கூறி, இந்த பட்ஜெட்டில் தரகு முதலாளிகள் மீதோ, பன்னாட்டு நிறுவனங்கள் மீதோ அதிக அளவில் வரி விதிக்கப்படவில்லை. அவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள 1,50,000 கோடி ரூபாய் வரிச் சலுகையிலும் ப.சிதம்பரம் கைவைக்கவில்லை. முதலாளிகளுக்கு வரிச் சலுகை அளித்தால் விலைவாசி குறைந்துவிடும் எனக் கூறி, பல்வேறு பொருட்கள் மீது விதிக்கப்படும் உற்பத்தி வரியைக் குறைத்து, சலுகைகளை மேலும் வாரி வழங்கியிருக்கிறார்.

 

ஆனால், இந்தச் சலுகை அறிவிப்பானது, கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாகிவிட்டது. சிமெண்ட் ஆலை முதலாளிகள், பட்ஜெட் வெளியான மறுநாளே, பட்ஜெட் அறிவிப்புகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே, சிமெண்ட் விலையை உயர்த்தி, மக்களைக் கொள்ளையடிக்கத் தொடங்கி விட்டனர்.

 

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு, கர்நாடகாவைச் சேர்ந்த கடலை விவசாயிகள், கடலையின் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி போராடியபொழுது, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஆனால் ஜேப்படி திருடர்கள் போன்று கொள்ளையடிக்கும் சிமெண்ட் முதலாளிகள் விசயத்திலோ துப்பாக்கிகள் மௌனம் காக்கின்றன. விலையைக் குறைக்கும்படி அவர்களின் காலில் விழுந்து மன்றாடுகிறார், ப.சிதம்பரம். சிமெண்ட் முதலாளிகளோ அடுத்த ஆண்டுவரை விலையை உயர்த்த மாட்டோம் எனத் திமிராகப் பதில் அளிக்கிறார்கள். சாமானிய மக்களுக்காகப் போடப்பட்டதாகக் கூறப்பட்ட பட்ஜெட், மையின் ஈரம் உலரும் முன்பே, சாயம் வெளுத்து நிற்கிறது!


· செல்வம்