Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் உ.பி.: தலித் ஆட்சியா? பார்ப்பன மீட்சியா?

உ.பி.: தலித் ஆட்சியா? பார்ப்பன மீட்சியா?

  • PDF

june_2007.jpg

உத்தரப்பிரதேச மாநில சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 402 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி 206 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. அக்கட்சியின் தலைவியான மாயாவதி, உ.பி.யில் 4வது முறையாக முதல்வராகியுள்ளார்.

 

பத்திரிகைகளும் கருத்துக் கணிப்பு நிறுவனங்களும் உருவாக்கிய மணற்கோட்டைகள் அனைத்தும் சரிந்து, காங்கிரசு, பா.ஜ.க., சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் இத்தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளன. கடந்த தேர்தலில் 143 தொகுதிகளைக் கைப்பற்றிய சமாஜ்வாதி கட்சி இம்முறை 97 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பா.ஜ.க. 51 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. ராகுல்காந்தி சூறாவளிப் பிரச்சாரம் செய்தும் கூட காங்கிரசு கட்சி 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. "இடதுசாரிகள்' 46 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறமுடியவில்லை. உ.பி.யில் பிரபலமான கட்சிகள் அனைத்தும் குப்பைத் தொட்டியில் வீசியெறியப்பட்டு விட்டன என்று முதலாளித்துவப் பத்திரிகைகளே குறிப்பிடுமளவுக்கு இத்தேர்தலில் மாயாவதி அலை சுழன்று வீசியது.

 

தனிப்பெரும்பான்மையுடன் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றதன் மூலம் கடந்த 16 ஆண்டுகாலமாக உ.பி.யில் நிலவி வந்த கூட்டணி ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 

""இது மகத்தான வெற்றி; இந்திய நாடாளுமன்ற அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ள வெற்றி; ஈராயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு தலித் அதிலும் ஒரு பெண், கட்சியின் நிறுவனரான கன்ஷிராம் மறைந்துவிட்ட நிலையில், எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்து நின்று, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவியான மாயாவதி இம்மாபெரும் வெற்றியைச் சாதித்துள்ளார். ஒடுக்கப்பட்ட தலித் சாதியைச் சேர்ந்த மாயாவதி, இந்தியாவிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தைக் கட்டியாளப் போகிறார்'' என்று பார்ப்பன பத்திரிகைகளே வியந்து பாராட்டுமளவுக்கு இந்தியாவையே தனது தேர்தல் வெற்றியால் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் மாயாவதி.

 

""மாயாவதியின் வெற்றியானது, இந்தியாவின் அரசியல் போக்குகளையும் சமூக உறவுகளையும் மாற்றப் போகிறது; 2008இல் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள ம.பி., ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களில் இந்த வெற்றியானது தீவிரமான தொடர் விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது'' என்றெல்லாம் முதலாளித்துவ அரசியல் நோக்கர்கள் ஆரூடம் சொல்கிறார்கள். ""உ.பி.யில் மட்டுமின்றி இந்திய நாடெங்கும் இந்த வெற்றியின் தாக்கம் தீயாய்ப் பற்றிப் பரவும்'' என்கிறார் திருமாவளவன்.

 

சாதி அரசியலும் கிரிமினல் அரசியலும் கொடிகட்டிப் பறக்கும் உ.பி. மாநிலத்தில், தனித்து நின்று ஒரு தலித்திய கட்சியால் எப்படி இந்த வெற்றியைச் சாதிக்க முடிந்தது? பெரும்பான்மையினரான ஆதிக்கசாதி மக்களை எவ்வாறு மாயாவதியால் ஈர்க்க முடிந்தது? ஒரே வரியில் சொல்வதாயின், மே.வங்க போலி கம்யூனிஸ்டு முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா பகிரங்கமாக அறிவித்ததைப் போல, மாயாவதியும் தனது கட்சியின் கொள்கைகளைத் தலைகீழாக மாற்றிக் கொண்டு விட்டார். அதனாலேயே அவரால் இவ்வெற்றியைச் சாதிக்க முடிந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை ""திலக், தராஜு, அவுர் தல்வார், இன்கோ மாரோ ஜூட்சார்'' என்று மேடைகளில் முழங்கியவர்தான் மாயாவதி. அதாவது, திலக் நெற்றியில் பொட்டு வைக்கும் பார்ப்பனரையும், தராஜு பனியா எனும் வணிக சாதியினரையும், தல்வார் தலைப்பாகை அணியும் ராஜபுத்திர சத்திரிய சாதியினரையும் செருப்பால் (தாழ்த்தப்பட்டோரில் ஒரு பிரிவினரது தொழில்) அடிப்போம் என்று அவர் முழங்கி வந்தார். ஆதிக்கசாதி இந்துக்களுக்கு எதிராக, குறிப்பாக பா.ஜ.க. வுக்கு எதிராக ஆவேசமாக முழங்கி வந்தார். ""எங்கள் ஓட்டு; உங்கள் ஆட்சியா? இனி அது நடக்காது'' என்று மேடைகளில் நெருப்பைக் கக்கினார்.

""சாதியத்தை உடைப்போம்; ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை ஒருங்கிணைப்போம்'' என்று கன்ஷிராமை நிறுவனராகக் கொண்டு முழங்கிவந்த பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கையும் லட்சியமும் மாயாவதியின் வீரவசனங்களும் ஓட்டுப் பொறுக்கி அரசியல் களத்தில் இன்று காலிப் பெருங்காய டப்பாவாகிவிட்டன. ""தலித் பிரச்சினையை தலித் மக்களால் மட்டுமே உணர முடியும்; தலித்துகளுக்கு தலித்துகள்தான் தலைமை தாங்க வேண்டும். தலித்துகளே, பிற கட்சிகளில் சேராதீர்கள்; பிற ஆதிக்க சாதியினரை எமது கட்சியில் சேர்க்கவே மாட்டோம்'' என்றெல்லாம் சவடால் அடித்து வந்த ""பகுஜன்'' சமாஜ் கட்சி இன்று பார்ப்பனர்களும் பிற ஆதிக்க சாதியினரும் முக்கிய பொறுப்புகளில் அங்கம் வகிக்கும் ""சர்வஜன்'' (அனைத்து சாதியினருக்குமான) கட்சியாகி விட்டது. மாயாவதியும் தமது கட்சி ""சர்வஜன்'' கட்சிதான் என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார்.

 

ஆதிக்க சாதியினரையும் அவர்களது கட்சிகளையும் மனுவாதிகள் என்று சாடிவந்த பகுஜன் சமாஜ் கட்சி, இப்போது அதே மனுவாதிகளைத் தமது கட்சியின் முக்கிய பிரமுகர்களாக பொறுப்புகளில் அமர்த்தியுள்ளது. பார்ப்பன எதிர்ப்பு ஆதிக்க சாதி எதிர்ப்பு என்றெல்லாம் சவடால் அடித்து வந்த அக்கட்சி, இன்று மனுவாதிகளின் நம்பகமான கூட்டாளியாகி விட்டது.

 

கடந்த 2002 உ.பி. மாநில சட்டமன்றத் தேர்தலின்போது பார்ப்பனர்களுடன் சங்கமித்த மாயாவதி, தமது கட்சியின் சார்பில் 36 பார்ப்பனர்கள் உள்ளிட்டு 96 ஆதிக்க சாதியினரை வேட்பாளராக நிறுத்தினார். தற்போதைய 2007 தேர்தலில் 86 பார்ப்பனர்கள் உள்ளிட்டு 139 ஆதிக்க சாதியினரை தமது கட்சியின் வேட்பாளராக நிறுத்தினார். தலித்துகளுக்குத் தலித்துகள்தான் தலைமை தாங்க வேண்டும் என்று சவடால் அடித்துவந்த மாயாவதி, சதிஷ்சந்திர மிஸ்ரா என்ற பார்ப்பனரையே தமது கட்சியின் பொதுச் செயலாளராக்கினார். இதுதவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் 25 பேர் கொண்ட ""சகோதரத்துவ மேம்பாட்டு கமிட்டி''களை பகுஜன் சமாஜ் கட்சி நிறுவியுள்ளது. இக்கமிட்டிகளின் தலைவர், துணைத் தலைவர் பொறுப்புகளில் பார்ப்பனர்கள் இருக்க, தாழ்த்தப்பட்டோர் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எந்தவொரு கட்சியும் பார்ப்பனர்களுக்கு இப்படி அரசியல் மேடையை அமைத்துக் கொடுத்ததில்லை என்று பார்ப்பனர்களே புகழும் அளவுக்கு மாயாவதியின் பார்ப்பன சேவை நாலு கால் பாய்ச்சலில் முன்னேறியது.

 

இது மட்டுமா? உ.பி.யில் "சிறுபான்மை'யினரான பார்ப்பனர்கள் பாதுகாப்பற்ற நிலையில் பரிதவிக்கிறார்களாம். எனவே "ஒடுக்கப்பட்ட', "சிறுபான்மை'யினரான பார்ப்பனர்களைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் மாநிலமெங்கும் 22 வட்டார மாநாடுகளை நடத்திய மாயாவதி, கடந்த 2005ஆம் ஆண்டில் லக்னோ நகரில் மிகப்பெரிய பார்ப்பன மாநில மாநாட்டையும் நடத்தினார். அம்பேத்கரின் புகழ்பாடி ""ஜெய் பீம்'' என்று முழங்கி வந்த தாழ்த்தப்பட்டோர், இம்மாநாட்டுப் பேரணியில் பார்ப்பனரோடு சேர்ந்து ""ஜெய் பரசுராம்'' என்று முழங்கினர். இம்மாநாட்டில் பார்ப்பனர்கள், பரசுராமனின் நினைவாக வெள்ளிக் கோடாரியை மாயாவதிக்குப் பரிசளித்து கௌரவித்தனர்.

 

இந்தப் பரசுராமன் என்ற பார்ப்பனர், சத்திரியர்களை (சூத்திரர்களை) கோடாரியால் தாக்கி அழித்து பார்ப்பனச் சாதியைப் பாதுகாத்து, அதன் ஆதிக்கத்தை நிலைநாட்டினார் என்பது பார்ப்பன புராணக் கதை. ஏடறிந்த வரலாற்றில் புஷ்யமித்ர சுங்கன் என்ற பார்ப்பன மன்னன், சத்திரிய மன்னனைக் கொன்று பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்டியவன் என்பதால், பார்ப்பன ஆதிக்கச் சின்னமாகக் கருதப்படுவதைப் போல, புராண காலத்தின் பார்ப்பன ஆதிக்கச் சின்னமாக பரசுராமன் கருதப்படுகிறான். பரசுராமனைப் போல, தலித் சகோதரி மாயாவதியும் பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகவே பார்ப்பனர்கள் இம்மாநாட்டில் அவருக்கு வெள்ளிக் கோடாரியைப் பரிசளித்தனர்.

 

வேத மந்திரங்கள் முழங்க பார்ப்பனர்கள் இம்மாநாட்டில் தனக்களித்த வரவேற்பைக் கண்டு பூரித்துப் போன மாயாவதி, ""எங்கள் கட்சியின் தேர்தல் சின்னம் வெறும் யானை அல்ல; பார்ப்பனர்களின் முழுமுதற் கடவுளாகிய கணேசமூர்த்தியின் அவதாரம்; அது பிரும்மா, விஷ்ணு, மகேசனின் ஒருங்கிணைந்த உருவம். எங்கள் கட்சியை பார்ப்பனர்களுக்கும் மேல்சாதியினருக்கும் எதிரான கட்சி என்று சிலர் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றனர். எமது நடைமுறையே இந்த அவதூறுகளை வீழ்த்தி விடும். இனிமேலும் பார்ப்பனர்கள் இதர கட்சிகளை நம்பி ஏமாற மாட்டார்கள். பார்ப்பனர்தலித் கூட்டணியானது உ.பி.யில் புதிய மாற்றங்களையும் அனைத்து மக்களுக்கும் நல்வாழ்வையும் கொண்டு வரும்'' என்று முழங்கினார். பின்னர், இதுவே அவரது தேர்தல் பிரச்சாரமாகியது.

 

சாதி அரசியல் கொடி கட்டப் பறக்கும் உ.பி. மாநிலத்தில், வெறும் தலித்முஸ்லீம் கூட்டணியை வைத்துக் கொண்டு சாதிய ஓட்டு வங்கிகளைத் தகர்த்து அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது என்பதைப் புரிந்து கொண்டதாகவும், எனவேதான் தலித்முஸ்லிம்பார்ப்பனர் மற்றும் பிற சாதியினருடன் புதிய கூட்டணி அமைத்துள்ளதாகவும் தமது பிழைப்புவாதத்துக்கு சித்தாந்த விளக்கமளிக்கிறார் மாயாவதி. இது வெளியே தெரிந்த உண்மை. தமது சாதிய ஆதிக்கத்துக்கும் அதிகாரத்துக்கும் பகுஜன் சமாஜ் கட்சியால் எந்த இடையூறும் ஏற்படாது என்ற உத்தரவாதமும் நம்பிக்கையும் கிடைத்ததால்தான், பார்ப்பனர்களும் மற்றும் பிற ஆதிக்க சாதியினரும் பகுஜன் சமாஜ் கட்சியை தமது சொந்தக் கட்சியாகக் கருதி ஆதரிக்கின்றனர். இது வெளியே தெரியாத உண்மை.

 

பகுஜன் சமாஜ் கட்சியின் பொறுப்புகளில் உள்ள பார்ப்பனர்களும் ஆதிக்க சாதியினரும் தாங்கள் தீண்டாமையை எதிர்ப்பதாகவோ, தமது சாதியினர் தாழ்த்தப்பட்டோர் மீது ஏவிவரும் அடக்குமுறை சுரண்டலை எதிர்ப்பதாகவோ வாயளவில் கூட வாக்குறுதி அளிக்கவில்லை. ஆனாலும், பார்ப்பனஆதிக்க சாதியினருடன் கூட்டணி கட்டிக் கொண்டு சமூக நீதியை நிலைநாட்டப் போவதாகச் சூளுரைக்கிறார் மாயாவதி.

 

மாயாவதியின் பார்ப்பன சேவை இன்னும் ஒருபடி முன்னேறி, இப்போது மேல்சாதியினரில் பொருளாதார ரீதியில் ஏழ்மை நிலையில் உள்ளோருக்கும் இடஒதுக்கீடு சலுகை அளிக்கவும் அவர் கிளம்பியுள்ளார். அதேநேரத்தில், ஒடுக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்டோரைக் கை தூக்கி விடுவதற்கு, நிலச் சீர்திருத்தத்தை நடைமுறைப் படுத்துவதைப் பற்றி அவர் வாயே திறக்கவில்லை.

 

எனவேதான், ""இன்று உ.பி.யில் இரண்டாவது பா.ஜ.க. உருவாகியிருக்கிறது. "உயர் ஜாதியினரை செருப்பால் அடி' என்ற போர்க்குரல் மாறி, ஹிந்துக் கடவுள்களான "விநாயகர், பிரம்மா, விஷ்ணு, சிவன்' இவர்களைத் துதிக்கும் பாடலாக மாறி, உயர் ஜாதியினரின் மனதை குளிர வைத்திருக்கிறது. திராவிடர் கழகம் போல் கசப்பை வளர்த்துவந்த ப.ச.க. (பகுஜன் சமாஜ் கட்சி) "பா.ஜ.க.2' ஆக மாறியுள்ளது, உ.பி. மாநிலத்துக்கும் நாட்டுக்கும் நல்லதே'' என்று ""வருகிறது பா.ஜ.க. ஐஐ'' எனும் தலைப்பில் துக்ளக் ஏட்டில் (16.5.07) எழுதியுள்ளார், இந்துவெறி அறிவுஜீவியான எஸ்.குருமூர்த்தி. மாயாவதி அரசில் பார்ப்பனர்களுக்கு உயர்பதவிகள் அளிக்கப்பட்டுள்ளதைப் பாராட்டியும், இந்த நிலைமை மேலும் தொடர வேண்டும் என்றும் மாயாவதியின் ஆட்சி நீண்டகாலம் நீடிக்கவும் வேண்டி காசியில் வைதீக பார்ப்பன சங்கம் சிறப்பு பூசைகளையும் வழிபாடுகளையும் நடத்தியுள்ளது. இந்துத்துவத்துடன் மென்மையாக அணுகுமுறை கொண்ட நவீன இந்திரா காந்தி என்று மாயாவதிக்குப் புகழாரம் சூட்டுகிறது, இந்துவெறி ஆர்.எஸ்.எஸ்.இன் பத்திரிகையான ""ஆர்கனைசர்''.

 

முலயம்சிங்கின் ஊழல்ஒடுக்குமுறை ஆட்சியின் மீதான மக்களின் வெறுப்பு; முலயம்சிங்கின் சமாஜ்வாதி கட்சியுடனான பா.ஜ.க.வின் சமரசம் கள்ளக்கூட்டைக் கண்டு பார்ப்பனமேல் சாதியினரின் அதிருப்தி, காங்கிரசு, "இடது'சாரிகள் மற்றும் பிற ஓட்டுக் கட்சிகளின் கையாலாகாத்தனம், வானவில் கூட்டணியை உருவாக்கி அனைத்து சாதிகளும் அரசாங்கப் பதவி, சலுகைசன்மானங்களைப் பொறுக்கித் தின்ன மாயாவதி உருவாக்கிய புதிய ஏற்பாடு — ஆகிய அனைத்தும் சேர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் மிகப் பெரிய வெற்றிக்குக் காரணமாகியுள்ளனவே தவிர, இது தலித் அரசியலின் செல்வாக்குவலிமையினால் ஏற்பட்ட விளைவு அல்ல.

 

பகுஜன் சமாஜ் கட்சியின் வெற்றியை தலித்திய பிழைப்புவாதிகளும் பார்ப்பன பத்திரிகைகளும் பலவாறாக வியந்து போற்றினாலும், இது அரசாங்கப் பதவிகளையும் சன்மானங்களையும் பொறுக்கித் தின்பதற்காக உருவாகியுள்ள சர்வஜன சாதியக் கூட்டணிதான். சமுதாயத்தை சாதி அடிப்படையில் மேலும் உறுதிப்படுத்தி, சாதியக் கலவரங்களுக்கு வித்திடும் பிற்போக்குக் கூட்டணி தான்.

 

இருப்பினும், உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சியின் வெற்றியானது, சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி என்கிறார் பா.ம.க.வின் ராமதாசு. உ.பி. மக்கள் மதவெறிக் கட்சியான பா.ஜ.க.வை நிராகரித்து விட்டனர் என்று கூத்தாடுகிறது, சி.பி.எம். கட்சி. மாயாவதியோ, டெல்லிக்குச் செல்வதற்கான பாதை தெளிவாகிவிட்டது என்கிறார். திருமாவளவனோ, உயர்சாதி இந்துக்கள் மாயாவதியின் தயவை நடுமளவுக்கு, மாயாவதியின் தலைமை வலிமை மிக்கதாக வளர்ந்துள்ளது என்கிறார்.

 

உண்மைதான்; சாதிவெறியர்களுடன் கூட்டணி கட்டிக் கொண்டு ""சாதிக்காக இனி ரத்தம் சிந்த நாங்கள் தயாராக இல்லை'' என்று முழங்கிய திருமாவுக்கு "தமிழ்ப் பாதுகாப்பு இயக்க'த்தின் தலைமைப் பதவி கிடைத்தது. பார்ப்பனஆதிக்க சாதிகளுடன் கூட்டணி கட்டிக் கொண்டு சர்வஜன கட்சித் தலைவியாகிவிட்ட மாயாவதிக்கு முதல்வர் பதவி கிடைத்திருக்கிறது. இதுதான் "வலிமையான' தலித் தலைமையின் மகிமை!

 

புரட்சிகர அரசியல்சித்தாந்தம் எதுவுமின்றிச் சீரழியும் இத்தகைய தலித்திய பிழைப்புவாத இயக்கங்களை நிறுவனமயமாக்கிக் கொண்டு ஆதாயமடையும் ஆளும் வர்க்கங்களும் ஆதிக்க சாதிகளும், ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட மனிதனுக்கும் தலைநிமிர்வைத் தந்துள்ளதாக மாயாவதியின் வெற்றியை ஏற்றிப் போற்றுகின்றன. நாமும் மாயாவதியின் வெற்றியைப் பாராட்டத்தான் வேண்டும் தலித்தியம் என்றால் பார்ப்பனஆதிக்க சாதி சேவையுடன் கலந்த கடைந்தெடுத்த பிழைப்புவாதம்தான் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டியதற்காக.


· தனபால்

Last Updated on Saturday, 03 May 2008 20:30