Fri04262024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் வாழ்க்கையைச் சொல்லும் தற்கொலைகள்

வாழ்க்கையைச் சொல்லும் தற்கொலைகள்

  • PDF

june_2007.jpg

விவசாயத்தில் ஏற்பட்ட கடனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு சாவதைத் தடுக்க முன் வராத அரசு, வங்கிக் கடனைக் கட்டத் தவறியதற்காக விவசாயிகளைக் கைது செய்ய முனைப்பு காட்டுகிறது.

 

கர்நாடகா மாநிலம் பீதார் மாவட்டத்தில் மட்டும், கடந்த நான்கே மாதங்களில் 25 கரும்பு விவசாயிகள் அடுத்தடுத்து தற்கொலை

 செய்து கொண்டு மாண்டு போய்விட்டனர். தனியார்மயம்தாராளமயம் நடைமுறைக்கு வந்த பிறகு, கடந்த 15 ஆண்டுகளில், நாடெங்கிலும் ஏறத்தாழ 1 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்து போய்விட்ட கசப்பான உண்மையை, அரசாங்கமே இப்பொழுது வெளிப்படையாக ஒத்துக் கொண்டுள்ளது.

 

எனினும், விவசாயிகளின் இந்தத் தற்கொலைச் சாவுகள் இந்திய சமூகத்தின் பொது புத்தியில் எவ்விதமான கலக்கத்தையோ, பதற்றத்தையோ ஏற்படுத்தவில்லை. தீவிரவாதிகளின் தாக்குதலுக்குத் தரப்படும் அரசியல் முக்கியத்துவம், சந்தை பயங்கரவாதத் தாக்குதலால் நடந்து வரும் இத்தற்கொலைச் சாவுகளுக்குத் தரப்படுவதில்லை. ""அவன் விதி, செத்தான்'' என இலகுவாக, வெறும் புள்ளிவிவரமாக ஒதுக்கித் தள்ளப்படுகிறது.

 

""இந்தத் தற்கொலைச் சாவுகள் இறந்து போனவர்களைப் பற்றி அல்ல; அந்த இழப்பைச் சகித்துக் கொண்டு வாழ்க்கையோடு போராடும் உயிருள்ள விவசாயிகளைப் பற்றித்தான் பேசுகிறது'' என்கிறார் ஏழை விவசாயியான கமலாபாய் குதே. இவர் வசித்து வரும் மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் மட்டும் கடந்த ஆறு ஆண்டுகளில் 6,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களுள், கமலா பாயின் கணவர் பலசுராமும் ஒருவர்.

 

பலசுராமின் தற்கொலைக்கு நட்டஈடாக அரசாங்கம் கொடுத்த ஒரு இலட்ச ரூபாயை, கந்துவட்டிக்காரர்கள் பறித்துக் கொண்ட பிறகும், கமலாபாய்க்கு ரூ. 50,000/ கடன் பாக்கி இருந்தது. கடந்த ஆண்டு, அவர் தனது ஆறு ஏக்கர் நிலத்தில், மகாராஷ்டிர மாநில அரசு விளம்பரப்படுத்திய பி.டி. பருத்தியினைப் பயிர் செய்தார். ஆனால், விளைந்ததோ வெறும் 2 குவிண்டால்தான். இப்பொழுது கடன் ஒன்றுக்கு இரண்டாகி விட்டது. ஆறு ஏக்கர் நிலம் இருந்த போதிலும், கமலாபாய் கூலி வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டார். பணப் புழக்கம் அதிகம் இருக்கும் நாட்டில், 12 மணி நேரம் வேலை செய்யும் கமலாபாய்க்குக் கிடைக்கும் கூலி, 25 ரூபாய் பெறுமான சோளம்தான்.

 

ஆந்திர மாநிலம் அனந்தபுர் மாவட்டத்தில் வாழும் பந்தி இலட்சுமம்மாவின் கணவர் பந்தி நரசிம்மலு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட பொழுது, இலட்சுமம்மாவிற்கு ஆறுதல் சொல்ல ஓட்டுக் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஓடிவந்தனர். அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, தற்போதைய ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, ""இலட்சுமம்மாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசாங்க வேலை அளிக்கப்படும்'' என வாக்குறுதி கொடுத்தார். ஆனால், ராஜசேகர ரெட்டியின் ஆட்சியில் இலட்சுமம்மாவிற்கு, கிராமப்புற வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின்கீழ் கூட வேலை கிடைக்கவில்லை.

 

இலட்சுமம்மா, தனது கிராமத்தில் இருந்து 18 கி.மீ. அப்பால் உள்ள நகரத்தில் தனியார் ஒப்பந்தக்காரர்களிடம் கூலி வேலைக்குச் சென்று வருகிறார். இதற்கு அவருக்கு கிடைக்கும் கூலி 60 ரூபாய்தான். இதில் 10 ரூபாய் போக்குவரத்து செலவுக்குப் போய்விடும். அவரது மகன் கோபால், உள்ளூரில் உள்ள வங்கியில் 1,500 ரூபாய் மாதச் சம்பளத்திற்கு, ஒப்பந்த அடிப்படையில் கணினி இயக்குநராக வேலை பார்க்கிறார். மூன்று பேர் கொண்ட இலட்சுமம்மாவின் குடும்பம், மாதந்தோறும் கிடைக்கும் 3,000 ரூபாய் கூலியில், குடும்பச் செலவுகளை மட்டும் ஈடு கட்டாமல், விவசாயத்தையும் நடத்த முயன்று வருகிறது. ""விளைச்சல் ஓரளவுக்கு நன்றாக இருந்தால் போதும், நாங்கள் பிழைத்துக் கொள்வோம்'' என நம்பிக்கையோடு சொல்கிறார், இலட்சுமம்மா.

 

விவசாயம் சூதாட்டமாக மாறிப் போன பிறகும், அத்தொழில் மீது நம்பிக்கை இழக்காமல் இருக்கும் இலட்சுமம்மா போன்ற விவசாயிகளுக்கு அரசு பெரிதாக உதவி எதுவும் செய்வதில்லை. மாறாக, ""வங்கிக் கடனைத் திருப்பித் தருகிறாயா, இல்லை கம்பி எண்ணப் போகிறாயா?'' என மிரட்டத் தொடங்கியிருக்கிறது.


ஆந்திர மாநிலம் அனந்தபுர் மாவட்டத்தைச் சேர்ந்த திராட்சை விவசாயி நல்லப்ப ரெட்டி, சமீபத்தில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். வங்கிக் கடனை உரிய காலக் கெடுவுக்குள் அடைக்கத் தவறியதுதான் இவர் செய்த குற்றம்.

 

நல்லப்ப ரெட்டி விவசாயத்திற்காக வங்கியில் வாங்கிய கடன் 24,000/ ரூபாய் தான். கந்துவட்டிக்காரர்களிடம் 34,000/ ரூபாய் கடன் வாங்கி, வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முயன்றார், அவர். ஆனால், வங்கியோ, வட்டியோடு சேர்த்து ஒரு இலட்ச ரூபாய் கட்டத் தவறியதற்காக அவரைச் சிறைச்சாலைக்கு அனுப்பி விட்டது.

 

கதிரி மண்டலைச் சேர்ந்த கெங்கி ரெட்டி, ""கடனுக்கு ஈடாக தனது ஆறு ஏக்கர் நிலத்தை எடுத்துக் கொள்ளுமாறு'' வங்கி அதிகாரிகளிடம் மன்றாடினார். ஆனால், அதிகாரிகளோ, ""பணம் இல்லையென்றால், ஜெயில்'' எனக் கறாராகச் சொல்லி, அவருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை வாங்கித் தந்துவிட்டனர். சிறையில் இருந்து விடுதலையான பிறகு, பாசன வசதிமிக்க தனது ஆறு ஏக்கர் நிலத்தை விற்று வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தினார், கெங்கி ரெட்டி.

 

மகபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு விவசாயிகள் (ஒருவர் தாழ்த்தப்பட்டவர்; மற்றொருவர் பிற்படுத்தப்பட்டவர்) இந்திய அரசு வங்கியில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாததற்காக, சாதி வேறுபாடு பார்க்காமல், அதிகாரிகளால் சிறைக்குள் தள்ளப்பட்டனர். உலக வங்கிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட இந்தக் கைது நடவடிக்கை, காங்கிரசு ஆட்சியில் தீவிரம் அடைந்திருப்பதாகக் குமுறுகிறார்கள், ஆந்திர விவசாயிகள்.

 

விவசாயத்தில் இருந்து போதிய வருமானம் கிடைப்பதில்லை என்பது உண்மை என்றாலும், சட்டமும், நீதிமன்றமும் தங்களின் கடமையைச் செய்வதைத் தடுக்க முடியாது என அதிகாரிகள் நியாயவான்களைப் போலப் பேசுகிறார்கள். ஆனால், இந்தச் சட்டமும், நீதிமன்றமும் வங்கிக் கடனை வாங்கி ஏப்பம் விட்ட எத்தனை தொழில் அதிபர்கள் மீது பாய்ந்திருக்கிறது? ஆந்திராவைச் சேர்ந்த 200 முக்கிய புள்ளிகள் வங்கிகள் மூலம் 1,000 கோடி ரூபாய் கடனை வாங்கி ஏப்பம் விட்டிருப்பதை ஆந்திர அரசே அம்பலப்படுத்திய பிறகும், அவர்களுள் ஒருவர்கூட இன்று வரை கைது செய்யப்படவில்லை.

 

""அரசாங்கம், விவசாயத்தை முதலாளிகளிடம் ஒப்படைக்க விரும்புகிறது'' என்கிறார், சாய்நாத் ரெட்டி என்கிற விவசாயி. இதற்காகத்தான், ஒப்பந்த விவசாயம், விவசாய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்; ஏற்றுமதிக்காக பழச் சாகுபடி செய்தால் 70 சதவீத மானியம்; மல்பெரி சாகுபடிக்கு மானியம்; ரிலையன்ஸ், வால் மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு விவசாயிகளைக் குத்தகைதாரர்களாக மாற்றுவது எனப் பல திட்டங்களை அரசு அறிவித்து வருகிறது.

 

ஏழை நடுத்தர விவசாயிகளை தரகு முதலாளிகளின் பிடியில் சிக்க வைக்கும் இக்கவர்ச்சித் திட்டங்களுக்கு மயங்காமல், தன் சொந்தக் காலில் நின்று விவசாயம் செய்யத் துணிந்தால், அவர்களை அச்சுறுத்துவதற்காகவே, ""கடன் வசூல், கைது, சிறைத் தண்டனை'' என்ற குண்டாந்தடிகளைத் தூக்கிக் கொண்டு திரிகிறது, ஆளும் வர்க்கம்.


· இரணியன்