Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்...அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்

சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்...அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்

  • PDF

july_2007.jpg

தாழ்த்தப்பட்ட சாதி அல்லது பழங்குடி இனத்தைச் சேராத ஒருவராலோ அல்லது ஒரு சிலராலோ இம்மக்கள் வசிக்கும் ஓர் இடத்திலோ அவர்கள் வந்துபோகும் இடங்களிலோ, வன்கொடுமைகள் இழைக்கப்படும் என்ற தகவலோ, அச்சுறுத்தலோ ஒரு அரசு நிர்வாக அமலாளர் மற்றும் போலீசு துணைக் கண்காணிப்பாளருக்குக் கிடைக்கும்போது,

 அச்செய்தியை அந்த அதிகாரிகள் உறுதி செய்து கொண்டு வன்கொடுமைகள் நடக்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தாழ்த்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடி மக்களிடையே தமக்கு வன்கொடுமை ஆபத்து விளையாது என்ற நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை மாநில அரசு அதிகாரபூர்வ அரசிதழில் அறிவிப்பு செய்யவேண்டும் என்று வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் அறிவுறுத்துகிறது.

 

இச்சட்டத்தை பயனுள்ள முறையில் அமல் செய்வது மத்திய, மாநில அரசின் கடமைகள் என்று அறிவுறுத்தும் அதேசமயம், அதற்கான வழிவகைகளையும் நல்லெண்ணத்தோடு அந்த அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்குப் பாதுகாப்பும் அளிக்கிறது. அவ்வாறான நடவடிக்கை ஒன்றுக்காகவும் மத்திய, மாநில அரசுகளுக்கும் அவற்றின் அதிகாரிகளுக்கு எதிராகவும் உரிமையியல் வழக்கோ, உரிமைகள் வழக்கோ அல்லது வேறு சட்ட நடவடிக்கையோ ஏதும் தொடர முடியாது.


பின்வரும் நடவடிக்கைகளை இச்சட்டம் மாநில அரசுகளுக்குப் பரிந்துரைக்கிறது.

 

கொடுமைகளுக்கு ஆளானவர்களுக்கு சட்ட உதவி உட்பட போதிய வசதிகளுக்கு வகை செய்தல்; பாதிப்புற்றவர்களுக்கும் சாட்சிகளுக்கும் பயணச் செலவும் பராமரிப்புச் செலவும் கிடைக்க வகை செய்தல்; பொருளாதாரச் சமுதாயப் புனர்வாழ்விற்கு வகை செய்தல்; இச்சட்டத்தின் வழிவகைகளை மீறியதற்காக வழக்குத் தொடுப்பதற்கும் மேற்பார்வையிடுவதற்கும் அதிகாரிகளை நியமித்தல்; இச்சட்டத்தின்படியான நடவடிக்கைகளை வகுத்து அமல் செய்ய மாநில அரசுக்கு உதவும் பொருட்டு பொருத்தமான மட்டங்களில் குழுக்களை அமைத்தல்; இச்சட்டத்தின் வழிவகைகளை மேலும் சிறந்த முறையில் செயலாக்குவதற்கும் இவ்வழிவகைகள் இயங்கும் விதம் குறித்து ஆய்வு செய்வதற்கும் வகை செய்தல்; கொடுமைகளுக்கு ஆளாக்கப்படக் கூடிய பகுதிகளை இனங்கண்டு தகுந்த பாதுகாப்பை உறுதி செய்தல்.

 

மேலும், இச்சட்டத்தை அமலாக்குவதில் மத்திய அரசு செய்ய வேண்டிய பணிகளைப் பின்வருமாறு இச்சட்டமே பரிந்துரைக்கிறது. மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கு அவசியமாகக் கூடியவற்றை மத்திய அரசு செய்யும்.

 

மத்திய அரசும் மாநில அரசுகளும் இச்சட்டத்தின்படி எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.


···


தாழ்த்தப்பட்ட சாதியினர் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்புச்) சட்டம், 1989ஆம் ஆண்டே நிறைவேற்றப்பட்டிருந்தாலும், ஆறாண்டுகளுக்குப் பிறகுதான் அதாவது 1995ஆம் ஆண்டுதான் அச்சட்டத்தை அமலாக்குவதற்கான வழிவகைகளை வரையறுக்கும் விதிகளை மத்திய அரசு கொண்டு வந்தது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) விதிகள், 1995 என்பது அதன்பெயர்.

 

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் மீதான வன்செ யல்களைத் தடுக்கும் வகையில் அரசு மேற்கொள்ள வேண்டிய பதினோரு முன்னெச்சரிக்கை மற்றும் முன்தடுப்பு நடவடிக்கைகள் வகுத்துரைக்கப்பட்டுள்ளன.

 

வன்கொடுமை நிகழும் என நம்பும் அல்லது சந்தேகப்படும் இடங்களை அடையாளங்கண்டு, மாவட்ட குற்றவியல் நடுர் அல்லது போலீசுக் கண்காணிப்பாளர் அல்லது வேறு அலுவலர்களை அப்பகுதியைப் பார்வையிடும்படி ஆணையிட வேண்டும். தேவையெனில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களது வேலையாட்கள், குடும்ப நண்பர்கள் வைத்திருக்கும் உரிமத்தை முடக்கி வைக்க வேண்டும்; அத்தகைய ஆயுதங்களைக் கைப்பற்றி அரசு ஆயுதக் கிடங்கில் ஒப்படைக்க வேண்டும். அப்பகுதியில் எல்லா வெடிகளையும் பறிமுதல் செய்வதோடு வெடிபொருள் உற்பத்தியைத் தடை செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பளிப்பதற்காக அவசியம் எனில் அவர்களுக்கும் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமங்கள் வழங்க வேண்டும்.

 

இச்சட்டத்தின் விதிகளை அமலாக்குவதில் அரசுக்கு உதவிட அவசியம் எனில் மாநில, மாவட்ட அல்லது கோட்ட அளவிலான உயர்மட்டக் குழுக்களை அமைக்க வேண்டும். இச்சட்ட விதிமுறைகளைத் திறம்பட அமலாக்குவதற்கு வேண்டிய ஆலோசனைகளை வழங்கக் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுக் குழுக்களை அமைக்கவேண்டும். அப்பகுதிகளில் விழிப்புணர்வு மையங்களை அமைத்து, பணியரங்குகளை நடத்தி மத்திய, மாநில அரசுகளின் சட்டம், விதிகள், நடைமுறைகள் மற்றும் திட்டங்கள் மூலம் அம்மக்களுக்கு அளிக்கப்படும் உரிமைகள், பாதுகாப்புக் குறித்து விளக்க வேண்டும். இவ்வாறு செய்யும் அரசு சாரா அமைப்புகளுக்குத் தேவையான நிதி மற்றும் இதர உதவிகளை அளித்து ஊக்குவிக்க வேண்டும். அடையாளம் காணப்படும் பகுதிகளில் சிறப்புக் காவல் படையை நிறுத்த வேண்டும்.

 

காலாண்டுக்கு ஒருமுறை இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், இச்சட்டத்தின் விதிகளை அமலாக்குவதற்குப் பொறுப்பான அதிகாரிகள் அமைப்புகளின் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

 

வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை நடத்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர்மட்ட வழக்கறிஞர்களின் குழு ஒன்றை மாவட்டக் குற்றவியல் நடுவர் அளிக்கும் பரிந்துரையின்படி மாநில அரசு நியமிக்கவேண்டும். அதோடு வழக்குகளுக்குப் பொறுப்புள்ள விசாரணை இயக்குநரின் ஆலோசனையின் பேரில் அரசு குற்றவியல் வழக்குரைஞர் குழு ஒன்றும் அமைக்க வேண்டும். இவ்விரு குழுக்களும் மூன்றாண்டுகளுக்குப் பொறுப்பு வகிக்கும். மாவட்ட குற்றவியல் நடுவர் மற்றும் விசாரணை இயக்குநர் வருடத்திற்கு இரண்டு முறை வழக்குகளின் நிலவரம், அரசு குற்றவியல் வழக்கறிஞர்களின் செயல்பாடுகள் குறித்து விசாரித்து மாநில அரசுக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும். பதிவு செய்யப்படும் வழக்கு விவரங்களை ஒவ்வொரு மாதமும் மாநில அரசுக்கு அவர்கள் தெரிவிக்க வேண்டும்.

 

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு எதிராக வன்கொடுமைகள் நடந்தால் மேற்படி அதிகாரிகள் சம்பவம் நடந்த பகுதியை உடனடியாக நேரடியாகப் பார்வையிட்டு ஏற்பட்ட பாதிப்பு, உயிரிழந்தவர்களின் விவரம், சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து அரசுக்கு அறிக்கை தரவேண்டும். வன்கொடுமை பரவியுள்ள பகுதிகளில் தீவிர போலீசு ரோந்துக்கு ஆணையிட வேண்டும். உயிரிழந்தவர்களின் அனுதாபிகள் மற்றும் சாட்சிகளுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும்.

 

வன்கொடுமைக் குற்றத்தை போலீசு கண்காணிப்பாளர் பதவிக்குக் குறையாத ஒருவர்தான் புலனாய்வு செய்ய வேண்டும். கடந்தகால அனுபவம், நேர்மை, கடமை உணர்வு அடிப்படையில் இந்தப் புலனாய்வு அதிகாரியை மாநில அரசு, போலீசுத் தலைமை இயக்குநர் மூலம் நியமித்து, 30 நாட்களுக்குள் புலனாய்வை முடித்து அறிக்கை பெற வேண்டும். ஒவ்வொரு காலாண்டும் மாநில உள்துறைச் செயலர், சமூகநலச் செயலர், விசாரணை இயக்குநர், விசாரணைப் பொறுப்பு அதிகாரி, போலீசுத் தலைமை இயக்குநர் ஆகியோர் பரிசீலனை செய்ய வேண்டும்.

 

வன்கொடுமைக் குற்றங்களில் இருந்து தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்புக் குழு ஒன்றை மாநிலத் தலைநகரங்களில், போலீசு தலைமை ஆய்வாளர் பொறுப்பில் மாநில அரசு நியமிக்க வேண்டும். அக்குழுவானது குற்றங்கள் நடக்கும் என்று அடையாளம் காணப்படும் பகுதியில் ஆய்வு செய்து, பொது அமைதியை நிர்வகிக்க வேண்டும். அப்பகுதியில் சிறப்புக் காவல் படையை நிறுத்தவும் சிறப்புக் காவல் சாவடியை அமைக்கவும் ஏற்பாடு செய்யவேண்டும்.

 

குற்றங்களுக்குச் சரியான அடிப்படைக் காரணம் குறித்துப் புலனாய்வு செய்வதோடு, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் மத்தியில் பாதுகாப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்பகுதியின் சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்துத் தலைமை மற்றும் சிறப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தந்து, அவர்களிடம் விசாரணையும் செய்ய வேண்டும். குற்றங்களைப் பதிவு செய்வதோடு, வழக்குகள் குறித்து அதிகாரிகள் அலட்சியம் காட்டினால் விசாரிப்பதோடு வழக்குகளின் நிலவரம் குறித்து மறுபரிசீலனை செய்வேண்டும். மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு மாதமும் மாநில அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

 

இச்சட்டத்தின் விதிமுறைகளை அமலாக்கும் பொறுப்பு வகிக்கும் குற்றவியல் நடுவர் மற்றும் போலீசு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக மாநில அரசின் செயலர் பதவிக்கு இணையான உயர் அதிகாரியை மாநில அரசு நியமிக்க வேண்டும். அதேபோல மாவட்டக் குற்றவியல் நடுவர் பதவிக்குக் குறையாத ஒருவரை மாவட்டச் சிறப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும். இந்த அதிகாரிகள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினராக இருக்க வேண்டும்.

 

மாநில உயரதிகாரியானவர், இச்சட்ட விதிகளின்படி மாநில அரசு பெறும் அறிக்கைகளைப் பரிசீலிப்பது, வழக்குகளின் நிலவரங்களைப் பரிசீலிப்பது, குற்றங்கள் நடக்கும் பகுதிகளில் சட்டம்ஒழுங்கு நிலவரங்களைப் பரிசீலிப்பது ஆகியவற்றைச் செய்ய வேண்டும். வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் உடனடி நிவாரணம் மற்றும் இதர உதவிகளைப் பரிசீலிக்க வேண்டும். அவர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் தேவையான ரேசன், உடை, தங்கும் வசதி, சட்ட உதவி, பயணப்படி, தினசரிப்படி, போக்குவரத்து போன்ற வசதிகளைப் பரிசீலித்து போதிய அளவு அளிக்க வேண்டும். அரசு சாரா அமைப்புகள், பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் இச்சட்ட அமலாக்க அதிகாரிகள் ஆகியோரின் செயல்பாடுகளைப் பரிசீலிக்க வேண்டும்.

 

மாவட்ட சிறப்பு அதிகாரியானவர்கள் குற்றங்கள் நிகழும் பகுதி அல்லது மாவட்டத் தலைமையகங்களில் விழிப்புணர்வு மையங்களை அமைத்து மத்திய, மாநில அரசுகளின் சட்டதிட்டங்களால் கிடைக்கும் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் பிற உதவிகள் குறித்து பணியரங்குகள் மூலம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு விளக்க வேண்டும். இம்மையங்களை நிர்வகிப்பது அல்லது பணியரங்குகளை நடத்துவதற்காக அரசு சாரா அமைப்புகளுக்குத் தேவையான நிதி மற்றும் பிற உதவிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

 

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் மற்றும் சார்ந்திருப்பவர்களுக்குப் பயணப்படி, தினசரிப்படி, நிர்வாகச் செலவு, பராமரிப்புச் செலவு மற்றும் போக்குவரத்து வசதிகளை மாநில அரசு செய்து தரவேண்டும். பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவச் செலவு, அவசியமான உடைகள், உணவு மற்றும் பழங்கள், போக்குவரத்து ஆகியனவற்றுக்கு அவர்களே செய்த செலவுகளைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.

 

இச்சட்டத்தை அமலாக்குவதில் மாவட்ட நிர்வாகத்திற்குள்ள ஏழு பணிகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் உதவி செய்வது; உடனடியாகப் புலனாய்வு அதிகாரியை நியமிப்பது; அப்பகுதியில் காவல்படையை நிறுத்துவதோடு மீண்டும் குற்றங்கள் நடக்காதவாறு நடவடிக்கை எடுப்பது; பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர், உடை, தங்குமிடம், மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் அவர்களின் இழப்புகளுக்குத் தகுந்த நட்டஈடு அடங்கிய நிவாரணம் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

 

இச்சட்டத்தை அமலாக்க நியமிக்கப்படும் அதிகாரிகள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் பிரச்சினைகளையும் புரிந்து கொள்ளும் திறமுள்ளவராக இருக்க வேண்டும்; நிர்வாகம், காவல்நிலையம், காவல் சாவடி ஆகியவற்றில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிப்பதை மாநில அரசு உறுதி செய்யவேண்டும்.

 

பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வசதிகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை மாநில அரசு தனது ஆண்டு வரவு செலவு திட்டத்தில் செய்யவேண்டும். இச்சட்டத்தை அமலாக்குவது குறித்த பல்வேறு அறிக்கைகளைத் தவறாது பரிசீலிப்பதோடு மாநில அரசு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மறுபரிசீலனையும் செய்யவேண்டும்.

 

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாநில அரசு மேற்கொள்ள வேண்டிய நிவாரணத் திட்டங்களும் வரையறுக்கப்பட்டுள்ளன. உடனடி நிவாரணமாக பணம் மற்றும் பிற உதவிகள் வழங்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசுப் பணியில் வேலை அளிக்க வேண்டும். வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட விதவைகள், உயரிழந்தவர்களின் குழந்தைகள், உடல் ஊனமுற்றோர் அல்லது வயதானவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டாய நட்டஈடும், சமூகப் பொருளாதார, நிரந்தர வீட்டு வசதி ஆகியவை ஏற்படுத்த வேண்டும். அம்மக்கள் வாழும் பகுதிகளில் சுகாதாரம், இன்றியமையாப் பொருட்கள் வழங்கல், மின்சாரம், குடிநீர், மயானப் பாதை மற்றும் சாலை வசதிகளைச் செய்துர வேண்டும். இவற்றுக்கும் மேலும் எதிர்பாரா செலவினங்களுக்கும் திட்டம் வகுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

 

மேலும், ஒவ்வொரு மாநில அளவிலும் 25 பேர் கொண்ட உயர்மட்டக் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழு அமைக்க வேண்டும். மாநில முதல்வர் அதன் நிர்வாகியாகவும் தலைவராகவும் இருப்பார். உள்துறை மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர்கள் அதன் உறுப்பினர்களாக இருப்பர். இவர்களோடு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அக்குழு உறுப்பினர்களாக இருப்பர். மேலும் தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், போலீசுத் தலைமை இயக்குநர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணைய இயக்குநர் துணை இயக்குநர்களும் இக்குழுவில் இருப்பர். அம்மக்களின் மேம்பாடு மற்றும் நலவாழ்வுக்கான பொறுப்புச் செயலர் அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார். மாநில அரசு பெறும் பல்வேறு அறிக்கைகளையம் சட்ட விதி அமலாக்கம், வழக்குகள், நிவாரணங்கள் ஆகியவற்றை ஆண்டுக்கு இருமுறை இக்குழு பரிசீலிக்கும்.

 

இதேபோல மாவட்ட அளவில் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுக்கான உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு செயல்படும். நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்கள், போலீசுத் துறை கண்காணிப்பாளர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாநில அரசின் "ஏ' பிரிவு அதிகாரிகள் மூவர், அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள், அதே வகுப்பைச் சேர்ந்த அரசுசாரா அமைப்புகளின் 5 பிரதிநிதிகள், அந்த அமைப்புகளைச் சேர்ந்த ஆனால் அந்த வகுப்புகளைச் சாரா 3 உறுப்பினர்கள் ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக இருப்பர். மாவட்டக் குற்றவியல் நடுவர் தலைவராகவும், சமூகநல அதிகாரி செயலராகவும் செயல்படுவர்.

 

நாட்டின் எந்தவொரு சமூகப் பிரிவினருக்காகவும் இவ்வளவு விரிவாகவும், நுட்பமாகவும், ஆழமாகவும் அக்கறை காட்டும் வகையிலான "கடுமை'யான சட்டம் கிடையாது. இப்படிப்பட்ட சட்டம் இயற்றப்பட்டு 18 ஆண்டுகளாகிறது. இந்த 18 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு நேரும் வன்கொடுமைகளை இந்தியாவிலுள்ள மத்திய, மாநில அரசுகளும் அதிகாரிகளும் எவ்வாறு அமலாக்கியுள்ளனர் என்பதைப் பார்ப்போம்.


தொடரும்

Last Updated on Saturday, 03 May 2008 20:07