Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் தில்லைச் சமரில் வென்றது தமிழ்

தில்லைச் சமரில் வென்றது தமிழ்

  • PDF

04_2008.jpgதில்லைப் போராட்ட வெற்றியானது ஒரு துவக்கப்புள்ளிதான், சமஸ்கருத வழபாட்டை அகற்றல், தமிழ் வழிபாடு, அனைத்து சாதியினரும் அர்ச்சராதல் - என நீண்டதொரு போராட்டத்தை தமிழினம் நடத்த வேண்டியுள்ளது.


மார்ச் 2ஆம் நாள். தில்லைக் கோயிலில் தீட்சிதப் பார்ப்பனர்கள் நிலைநாட்டி வந்த மொழித் தீண்டாமை வீழ்ந்தது. தில்லைச் சமரில் தமிழ் வென்றது. இது ஒரு வரலாற்றுச் சாதனை!

இந்தச் சாதனை ஒரேநாளில் எளிதில் நிகழ்ந்துவிடவில்லை. நீண்ட நெடிய உறுதியான போராட்டத்தின் வாயிலாகவே இந்த வெற்றி சாதிக்கப்பட்டுள்ளது. தில்லைச் சிற்றம்பல மேடையில் தேவாரத் தமிழ் பாடிய "குற்றத்திற்காக' 8 ஆண்டுகளுக்கு முன்பு சிவனடியார் ஆறுமுகசாமியின் கையை உடைத்து வெளியே தூக்கி வீசினார்கள், தீட்சிதப் பார்ப்பனர்கள். அதைத் தொடர்ந்து, சிவனடியார் ஆறுமுகசாமிக்கு ஆதரவாக நின்று, தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழை அரங்கேற்ற உறுதியேற்று மனித உரிமை பாதுகாப்பு மையம், ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகளின் முன்முயற்சியில், சிதம்பரம் நகர விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., தி.க. மற்றும் தமிழ் ஆர்வலர்களின் பங்களிப்புடன் எண்ணற்ற பொதுக்கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.


""தில்லை நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் தமிழ் ஒலிக்க வேண்டும்; இக்கோயிலை அறநிலைய ஆட்சித்துறை கைப்பற்ற வேண்டும்; நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பியுள்ள தீண்டாமைச் சுவரை இடிக்க வேண்டும்'' என்ற கோரிக்கைகளுடன் இவ்வமைப்புகளும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில் சிதம்பரம் நகர பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், தி.க., கடலூர் தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகளும் கொண்ட ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு போராட்டங்கள் தொடர்ந்தன. முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் வி.வி. சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் போன்றோர் இம்முயற்சிக்குத் துணை நின்றனர். மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் இளம் வழக்குரைஞர்கள் சிதம்பரம் நீதிமன்றத்திலும் உயர்நீதி மன்றத்திலும் தீட்சித கும்பலின் வழக்கை முறியடிக்க கடுமையாக உழைத்துள்ளனர். இத்தொடர் போராட்டங்களாலும், தமிழக மக்களின் பொதுக்கருத்து தீட்சிதக் கும்பலுக்கு எதிராக இருந்ததாலும் கடந்த பிப்ரவரி 29ஆம் தேதியன்று சிற்றம்பல மேடையில் பக்தர்கள் அனைவரும் தேவாரம் பாடலாம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.


இந்த அரசாணையைப் பெற்ற ம.உ.பா. மையத்தின் வழக்குரைஞர்கள், மார்ச் 2ஆம் நாளன்று காலை கடலூர் மாவட்ட ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. தோழர்களுடன் சிவனடியார் ஆறுமுகசாமியை யானை மீதேற்றி போர் இசை முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வந்தனர். சிவனடியார் ஆறுமுகசாமி போலீசு பாதுகாப்புடன் சிற்றம்பல மேடையேறியதும், தீட்சித ரௌடிகள் கருவறையை மூடினார்கள்; நடராசனுக்குக் குறுக்கே நந்தியாய் மறைத்து நின்றார்கள்; சூத்திரன் வாயிலிருந்து வரும் நீச பாஷையான தமிழ் இறைவனின் காதில் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக ஊளையிட்டார்கள்; ஆறுமுகசாமியை அடித்தார்கள்; போலீசு அதிகாரிகளைத் தாக்கினார்கள்; படிக்கட்டுகளில் எண்ணெயை ஊற்றி வழுக்கி விழ வைத்தார்கள்; கிலோ கணக்கில் கற்பூரத்தைக் கொளுத்தி புகை மூட்டத்தால் திக்குமுக்காடச் செய்தார்கள்.


இந்தக் கலவரத்தில் ஆறுமுகசாமியின் உதடுகள் அசைந்ததைக் கூட யாரும் காண முடியவில்லை. அவர் பாடி முடித்துவிட்டதாகக் கூறி அடுத்த சில நொடிகளில் முதியவர் ஆறுமுகசாமியை போலீசார் ஆலயத்துக்கு வெளியே தூக்கிக் கொண்டு வந்து விட்டனர். ""சிற்றம்பல மேடையில் 2 வரிகள் கூட தேவாரம் பாட இயலவில்லை; அரசு ஆணையின்படி அமைதியாக தேவாரம் பாடி வழிபட போலீசு வழி செய்ய வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட தீட்சிதர்கள் மீது கொலைமுயற்சி மற்றும் தீண்டாமைக் குற்றவழக்குகள் பதிவு செய்ய வேண்டும்'' என்று ஆறுமுகசாமியும் தோழர்களும் அக்கோயில் வாசலிலே ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தடியடி தாக்குதல் நடத்தி விரட்டியடித்து, முன்னணியாளர்களின் மண்டையை உடைத்து, வழக்குரைஞர்க் உள்ளிட்டு 34 பேரைக் கைது செய்து சிறையிலடைத்தது சிதம்பரம் நகர போலீசு. ஆறுமுகசாமியும் கைது செய்யப்பட்டார்.


ஆறுமுகசாமியுடன் வந்தவர்கள் போலீசின் மீது கல்லெறிந்து தாக்கியதாகவும் அதனால் தடியடி நடத்தியதாகவும் ஒரு பொய்யை சிதம்பரம் போலீசு, ஊடகங்கள் மத்தியில் பரப்பியது. சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடலாம் என்ற அரசாணையை அமல்படுத்துவதுபோல நாடகமாடிக் கொண்டே, ஒரு கலவரத்தை உருவாக்கி அதன்மூலம் அந்த அரசாணையை முறியடிக்க தீட்சிதர்களின் கைக்கூலிகளாகச் செயல்படும் சில போலீசு அதிகாரிகள் திட்டமிட்டே இப்படியொரு நாடகத்தை நடத்தியுள்ளனர். அதேசமயம், தீண்டாமை வன்முறையில் இறங்கிய தீட்சிதர்கள் மீது அக்குற்றங்களுக்காக வழக்குக்கூட பதிவு செய்யப்படவில்லை.


கைது செய்யப்பட்ட தோழர்கள், இந்தப் போராட்டத்தையும் பார்ப்பன ஆதிக்கத்தையும் விளக்கி, சிதம்பரம் நீதிமன்ற வளாகத்தையே பிரச்சார மேடையாக்கி முழக்கமிட்டனர். தீட்சிதர் கும்பலைக் கைது செய்யவும், தில்லைக் கோயிலை அறநிலைய ஆட்சித்துறை கைப்பற்றவும் கோரி கடலூர் மத்திய சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.


சிவனடியார் ஆறுமுகசாமியோ கண்கள் மங்கி தள்ளாத வயதிலுள்ள முதியவர். ஆன்மீகவாதியாக இருந்தாலும் சுயமரியாதை உணர்வுமிக்கவர். அந்தக் கிழவரிடமுள்ள தமிழ்ப்பற்றும் போராட்ட உறுதியும் பார்ப்பன எதிர்ப்பும் தில்லைச் சுற்றியுள்ள ஆதீனங்கள் சைவ மடாதிபதிகளுக்கு இல்லை. ஓதுவார்களுக்கும் தமிழறிஞர்களுக்கும் இல்லை. அப்படி இருந்திருந்தால், அரசாணை பிறப்பிக்கப்பட்ட உடனேயே சிற்றம்பல மேடையேறி அவர்கள் தமிழில் பாடியிருக்க முடியும். போராட்டத்தைத் தொடர்ந்திருக்கவும் முடியும். ஆனால், சிற்றம்பல மேடையேறி தமிழ் பாட ஒருவரும் வரவில்லை.


இந்த அடிமைத்தனத்தையும் கோழைத்தனத்தையும் கண்டு வேதனைப்பட்ட புரட்சிகர அமைப்புகளின் தோழர்களே, 5.3.08 அன்று மீண்டும் சிற்றம்பல மேடையேறி தேவாரம் பாடினர். ""நாங்கள் கம்யூனிஸ்டுகள்; நாத்திகர்கள். இன, மொழி, வர்க்க ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவது கம்யூனிஸ்டுகளின் கடமை. இழிமொழி என்று தமிழையும், சூத்திரர்பஞ்சமர் என்று உழைக்கும் மக்களையும் இழிவுபடுத்தும் பார்ப்பன கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டத்தின் ஓர் அங்கமாகவே நாங்கள் சிற்றம்பல மேடையேறி தேவாரம் பாடினோம்'' என்று அவர்கள் ஊடகங்களுக்குப் பேட்டியும் அளித்தனர்.


5.3.08 அன்று மாலையில் சிவனடியார் ஆறுமுகசாமி உள்ளிட்டு கைதான போராளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். கடலூர் மத்திய சிறை வாசலிலேயேயும், அதன் பிறகு சிதம்பரம் நகரிலும் இப்போராளிகளுக்கு அதிர்வேட்டுகள் முழங்க சிறப்பானதொரு வரவேற்பு அளிக்கப்பட்டது. மறுநாள், 6.3.08 அன்று காலையில் ஆறுமுகசாமியுடன் ஊர்வலமாகச் சென்ற தோழர்கள் பெரியார் சிலைக்கு மாலையணித்துவிட்டு, சிவனடியார் ஆறுமுகசாமியை சிற்றம்பல மேடையேற்றி மீண்டும் தேவாரம் பாட வைத்தனர்.


இப்படி நீண்ட காலமாக ம.உ.பா. மையமும் புரட்சிகர அமைப்புகளும் போராடிப் பெற்ற வெற்றியை, ""நாங்கள் நான்காண்டுகளுக்கு முன்பு பேரணி நடத்தியதற்குக் கிடைத்த வெற்றி'' என்று உரிமை கொண்டாடுகிறது, சி.பி.எம். கட்சியின் சிதம்பரம் நகர ""டைஃபி'' அமைப்பு. ""1982 முதல் நாங்கள் நடத்திவரும் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி'' என்று உரிமை பாராட்டுகிறார் தி.க.வீரமணி. இப்படி இவர்கள் கூசாமல் புளுகுவதைப் போலவே பார்ப்பன தீட்சிதக் கும்பலும், தேவாரம் பாட தாங்கள் எந்தத் தடையும் விதிக்கவில்லையென்றும், தினமும் பூசை நேரத்தில் தேவாரம் பாடப்பட்டு வருவதாகவும் கூசாமல் புளுகி வருகிறது. சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடுவதற்கு எதிராக அக்கும்பல் இடைக்கால தடைகோரி வழக்கு தொடுத்த விவகாரத்தை திட்டமிட்டே மூடி மறைக்க முயற்சிக்கிறது. தில்லை போராட்டத்துக்குப் பிறகு, கைக்கூலிகளைக் கொண்ட ""அமைதிக் குழு''வை உருவாக்கி காலை 7 மணி முதல் 7.30 மணி வரை தமிழில் பாடலாம் என தீர்மானித்து, காலையிலிருந்து மாலை வரை பூஜை இடைவெளியில் சிற்றம்பல மேடையில் தமிழில் பாடலாம் என்ற அரசு ஆணையை நீர்த்துப் போகச் செய்ய முயற்சித்து வருகிறது.


ஏற்கெனவே சூழ்ச்சிகள் சதிகள் மூலம் தில்லைக் கோயிலைக் களவாடிக் கொண்ட தீட்சிதர்கள், அது தொடர்பான எல்லா வழக்குகளையும் பலவிதமான தந்திரங்களைக் கையாண்டு நீதிமன்றத்தில் முடக்கி வந்திருக்கிறார்கள். தற்போது தமிழனின் உரிமையை நிலைநாட்டும் வகையில் தமிழக அரசு பிறப்பித்துள்ள இந்த அரசாணையையும் நீதிமன்றம் மூலம் முடக்குவதற்கு முயல்வார்கள். தீட்சிதர்களின் பிடியிலுள்ள அந்தக் கோயிலை அறநிலைய ஆட்சித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வராத வரையில், இந்த அரசாணை என்பது அரசாலேயே அமல்படுத்த முடியாத ஒரு வெற்றுக் காகிதமாகவே இருக்கும்.


எனவேதான், ""அறநிலையத் துறையே, தில்லைக் கோயிலைக் கைப்பற்று! தீண்டாமையைப் பறைசாற்றும் தெற்கு வாயில் சுவரை இடி! தீண்டாமை வெறிபிடித்த தீட்சிதர் கும்பலைக் கைது செய்!'' என்ற கோரிக்கைகளுடன் தில்லைப் போராட்ட வெற்றியைத் தொடர்ந்து புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் வீச்சாக பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன.


1987ஆம் ஆண்டிலேயே சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர புதிதாக விதிகள் உருவாக்கப்பட்ட போதிலும், கடந்த 21 ஆண்டுகளாக இந்தக் கோயிலில் ஒரு நிர்வாக அதிகாரியைக் கூட நியமிக்காமல், தமிழக அரசு கையைக் கட்டிக் கொண்டு நிற்கிறது. சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட ஆணை பிறப்பித்தும், போராளி ஆறுமுகசாமிக்கு மாதந்தோறும் உதவித் தொகை அறிவித்தும் இந்த விவகாரத்தை தமிழக அரசு சாந்தப்படுத்தி விட முயற்சிக்கிறது. அரைக்கிணறு தாண்டும் அரசின் இத்தகைய நடவடிக்கைகளால், பார்ப்பன தீட்சித கும்பலை வீழ்த்த முடியாது; மொழித் தீண்டாமையை முறியடிக்கவும் முடியாது.


மேலும், அரசாங்க சட்டம் உரிமையை வழங்கத்தான் முடியும். அந்த உரிமையைப் பயன்படுத்தும் உணர்வை வழங்க முடியாது. அந்த உணர்வை வர்க்கம், சாதி, இனம், மொழி, பாலினம் போன்ற ஒவ்வொரு துறையிலும் நிலவும் ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தினூடாவே பெற முடியும்.


பார்ப்பன ஆதிக்கத்துக்கும் மொழித் தீண்டாமைக்கும் எதிரான தில்லைப் போராட்ட வெற்றியானது ஒரு துவக்கப் புள்ளிதான். சமஸ்கிருத வழிபாட்டை அகற்றுதல், தமிழ் வழிபாடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல் என நீண்டதொரு போராட்டத்தை, அனைத்து வகை தீண்டாமைக்கும் ஆதிக்கத்துக்கும் எதிரான போராட்டத்தை தமிழினம் நடத்த வேண்டியுள்ளது. இன்றைய போராட்ட வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளவும் நாளைய வெற்றியை நோக்கி முன்னேறவும் இது மிக அவசியமாகியுள்ளது.


ஓங்கட்டும் போராட்டம்! ஒழியட்டும் பார்ப்பன ஆதிக்கம்!