Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் தில்லை விளாகம் முன்னுதாரணமான கிராமம் முன்னுதாரணமான மக்கள்

தில்லை விளாகம் முன்னுதாரணமான கிராமம் முன்னுதாரணமான மக்கள்

  • PDF

put_oct-2007.jpg

திருவாரூர் மாவட்டத்திலுள்ள தில்லைவிளாகம் ஏழாண்டுகளுக்கு முன்புவரை பொன் விளையும் பூமியாக இருந்தது. ஆனால் இன்றோ, அது இறால் பண்ணைகளுக்கும் உப்பளங்களுக்கும் இரையாகி, பாரம்பரிய விவசாயமும் மீன்பிடித் தொழிலும் நாசமாக்கப்பட்டு, அப்பகுதிவாழ் மக்கள் வாழ்விழந்து நிற்கிறார்கள். இப்பகுதியை ஒட்டியுள்ள அலையாத்திக் காடுகளின் அரணால், சுனாமியால்கூட இந்தத் தில்லைவிளாகத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. எல்லை காத்தானாகப் பாதுகாத்து வந்த அக்காடுகளும் இன்று இறால்பண்ணை உப்பளங்களால் அழிக்கப்பட்டு வருகிறது.

 

ஏழாண்டுகளுக்கு முன்புவரை கடல்தாயோ தன் பிள்ளைகளுக்கு உப்பு கரிக்காத மீனைத் தந்தார்; நிலத்தாயோ வளமான நெல்லையும் சுவையான இளநீரையும் தந்தார். இன்று கடல்தாயிடம் மீனுமில்லை; நண்டுமில்லை. நிலத்தாயிடம் உப்பு நீரைத் தவிர எதுவுமில்லை. கடலைக் கீறும் துடுப்பும் மண்ணைக் கீறும் கலப்பையும் இன்று சீந்துவாரின்றி முடங்கிக் கிடக்கின்றன. இன்றோ நாளையோ அந்த மரபுக் கருவிகள் அடுப்புக்குப் போகும்முன், போர்க் கருவிகளாக மாற்றப்படும் என்ற நம்பிக்கை தில்லைவிளாக மக்களின் கண்களில் தெறிக்கிறது.


···

 

வேதாரண்யம் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. மீனாட்சி சுந்தரம், அவரது மகன் அன்பரசு ஆகியோர் தலைமையிலான 9 பேர் கொண்ட கும்பல் ""கேலக்சி கிரிஸ்டல்'' என்ற பெயரில் தில்லைவிளாகம் பகுதியில் உப்பளம் அமைத்துள்ளது. மக்கள் குடியிருப்புகள், விளைநிலங்களின் அருகிலேயே அரசுக்குச் சொந்தமான 300 ஏக்கர் நிலத்தில் இந்த உப்பளம் நிறுவப்பட்டுள்ளது. சாதாரண உப்பு தயாரிப்புக்காக அனுமதி பெறப்பட்டு, சட்ட விரோதமாக இங்கு இரசாயன உப்பு தயாரிக்கப்படுகிறது. இதற்காக அதிக அளவு உப்பு அடர்த்தி கொண்ட நீர் நிலத்தில் தேக்கப்படுவதால், இப்பகுதியில் 10 முதல் 18 அடிக்குள் கிடைக்கும் நல்ல தண்ணீர் அனைத்தும் குடிக்கவோ, விவசாயத்திற்குப் பயன்படுத்தவோ முடியாத அளவிற்கு உப்பு நீராக மாறிவிட்டது.

 

இதன் விளைவாக, இப்பகுதி முழுவதும் நெற்பயிர்கள் வளராமல் கருகுகின்றன. தென்னை மரங்கள் வளர்ச்சி குன்றி மொட்டையாகி விடுகின்றன. தில்லைவிளாகத் தெற்குக்காடு பகுதியில் ஓடும் கிளைதாங்கி ஆற்றில் நிறுவப்பட்ட நீரேற்று நிலையம் உப்பு நீரால் அரிக்கப்பட்டு கட்டடமே இடிந்து விழுந்து விட்டது. இந்நீரேற்று நிலையம் மூலம் பாசன வசதி பெற்று வந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பொட்டல் காடாகி விட்டன.

 

இந்த அபாயத்தை முன்கூட்டியே அறிந்த மக்கள், ""கேலக்சி கிரிஸ்டல்'' கும்பல் உப்பளம் அமைக்க 1994இல் அரசிடம் விண்ணப்பித்தபோதே எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். மக்கள் எதிர்ப்பையும் மீறி நாகை மாவட்ட ஆட்சியர் 11.10.1995இல் உப்பளத்திற்கு அனுமதி அளித்தார். ஆனாலும் உப்பளப் பணியினைத் தொடங்க விடாமல் மக்கள் தடுத்து நிறுத்திப் போராடினர்; உயர்நீதி மன்றத்தில் உப்பளம் தொடங்கத் தடையாணையையும் பெற்றனர்.

 

இருப்பினும், 1998இல் தடையாணையை உடைத்து விட்டு போலீசை அடியாளாக வைத்துக் கொண்டு உப்பளம் அமைத்தது "கேலக்சி' கும்பல். இதற்குப் பிறகும் சளைக்கவில்லை மக்கள். தயாரிக்கப்பட்ட உப்பை எடுக்கவிடாமல் தடுத்துப் போராடினர். மக்களின் போராட்டத்தைக் கண்டு அஞ்சிய ""கேலக்சி'' கும்பல் உயர்நீதி மன்றத்துக்கு ஓடியது. நீதிமன்றமோ உப்பை அள்ளிச் செல்ல உதவும் வகையில் போலீசு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டது.

 

1995ல் உப்பளத்திற்காகப் பெறப்பட்ட அனுமதி 5 ஆண்டுகளுக்கே செல்லுபடியாகும். எனவே 2000வது ஆண்டுக்குப் பிறகு அனுமதியை நீட்டிக்கக் கூடாது எனப் போராடும் மக்கள் சார்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணையின் போது ""உப்பளத்திற்கு அனுமதியை நீட்டிக்கப் போவதில்லை'' என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் அறிவித்தது.

 

இந்நிலையில், சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு அதிகாரியிடம் பணத்தை வீசியெறிந்து ""உப்பளத்தினால் பாதிப்பு ஏதுமில்லை'' என்ற "நற்சான்றை' வாங்கியது கேலக்சி. இந்த நற்சான்றானது உப்பளம் தொடங்குவதற்குரிய சான்று அல்ல. ஆனாலும் அதனைக் காட்டி மீண்டும் சட்ட விரோதமாக உப்பு தயாரிப்பதைத் தொடங்கியது கேலக்சி. இதற்கு எதிராக மறுபடியும் போராடி சட்ட விரோதமாகத் தயாரிக்கப்பட்ட உப்பை அள்ளுவதைத் தடுத்து நிறுத்தினர் மக்கள். ஆனால் உயர்நீதி மன்றம் இச்சட்டவிரோத உப்பை அள்ளிக் கொள்ள கேலக்சி கும்பலுக்கு சட்டபூர்வமான அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

 

உப்பளங்கள் மட்டுமல்ல; கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இறால் பண்ணைகளால் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வு நாசமாக்கப்பட்டுள்ளது. மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி பகுதிகளில் பெய்யும் மழை நீரானது, தில்லைவிளாகப் பகுதியிலுள்ள கிளைதாங்கி ஆறு, கந்தபறிச்சான் ஆறு, மரைக்கா கோரையாறு, பாமணி ஆறு, வளவனாறு ஆகியவற்றின் வழியே பாய்ந்தோடி கடலில் கலப்பதால், இப்பகுதியில் படியும் வண்டல் மண்ணே வளமான இயற்கை உரமாகி பொன்விளையும் பூமியாகத் திகழ்ந்தது. ஆனால், தில்லை விளாகத்தில் 3500 ஏக்கர் பரப்பளவு கொண்ட கடல்அலம் பகுதி இன்று இறால் பண்ணைகளால் தரிசாகிக் கிடக்கிறது.

 

இறால் பண்ணைகளில் இதர மீன் குஞ்சுகளை அழிக்கவும், வளர்ச்சியடைந்த இறாலின் மேலோடு (தோல்) உரிவதற்கான ஏராளமான இரசாயனப் பொருட்கள் இப்பண்ணைகளில் கொட்டப்பட்டு, பின்னர் அவற்றை கால்வாய்களின் வழியே கடலுக்குத் திறந்து விடுவதால், ஆறுகளும் கடற்பகுதியும் நஞ்சாகி இப்பகுதியின் மீன்வளமே அழிக்கப்பட்டு வருகிறது. ""பத்து லிட்டர் டீசல் போட்டு படகுகளில் சென்று இரவு முழுவதும் அலைந்தாலும் நூறு ரூபாய்க்குக் கூட மீன்கள் கிடைப்பதில்லை'' என்று மீனவர்கள் குமுறும் அளவுக்கு இறால் பண்ணைகளால் மீனவர் வாழ்வு நாசமாக்கப்பட்டுக் கிடக்கிறது. இதுதவிர, மீனவர்கள் கடலுக்குச் செல்லும் வழிகள் அனைத்தும் இறால் பண்ணைகளால் அடைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் பிழைக்க வழியின்றி அல்லற்படுகின்றனர்.

 

உப்பளங்களாலும் இறால் பண்ணைகளாலும் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு, 1994இலிருந்தே போராடி வரும் இப்பகுதிவாழ் விவசாயிகளும் மீனவர்களும், 2004இல் தீவிரமாகப் போராடி இக்கொள்ளைக் கூட்டத்தை அப்பகுதியிலிருந்தே விரட்டியடித்தனர். அரசு நிலத்தை ஆக்கிரமித்து, மக்களின் வாழ்வுரிமையைப் பறித்து, சட்டவிரோதமாக தனி சாம்ராஜ்யம் நடத்திவரும் இக்கொள்ளைக் கூட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கத் துப்பில்லாத முத்துப்பேட்டை போலீசு, போராடிய மக்களில் முன்னணியாளர்கள் 78 பேரைக் கைது செய்து சிறையிலடைத்தது. நீதிமன்றமோ பிணை வழங்க மறுத்தது. இரு மாதங்களுக்குப் பிறகு, 78 பேரும் திருச்சியில் தங்கி காலை, மாலை என இரண்டு வேளையும் இரண்டு மாதங்களுக்குக் கையெழுத்திட வேண்டும்; ஒவ்வொருவரும் தலா ரூ.5000 பிணைத் தொகையும் இரு நபர் ஜாமீனும் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிணை வழங்கியது.

 

இதன் மூலம், போராடும் மக்களைச் சிறையிலடைத்து மீண்டும் சட்டவிரோதமாக இரசாயன உப்பு தயாரிக்கவும், இறால் பண்ணைகளை நிறுவவும் போலீசும் நீதிமன்றமும் துணை நின்றன. தாசில்தார், கோட்டாட்சியர், உப்புத்துறை ஆணையர், சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு அதிகாரிகள், ஓட்டுப் பொறுக்கிகள், அமைச்சர்கள் என மிகப்பெரிய அரசாங்கக் கூட்டமே, தில்லைவிளாகத்தை அழித்துவரும் ஆக்கிரமிப்புப் கும்பலின் பின்னே அணி வகுத்து நின்றன. கைதுகள், பொய்வழக்குகள், சிறைசித்திரவதை என அடக்குமுறைகள் தொடர்ந்தாலும் சளைக்காமல் இப்பகுதிவாழ் மக்கள் போராடி வருகிறார்கள்.

 

தற்போது 200405, 200506 ஆகிய இரு ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட உப்பை அள்ளிச் செல்ல முயற்சிக்கிறது, கேலக்சி கும்பல். உப்பை எடுத்துச் செல்ல அனுமதித்தால் மீண்டும் உப்பளம் அமைக்கும் முயற்சி நடக்கும் என்பதால், ""உயிரைக் கொடுத்தேனும் உப்பு எடுக்க அனுமதிக்க மாட்டோம்'' என்று உறுதியுடன் நிற்கிறார்கள் தில்லைவிளாக மக்கள். ""எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை; உப்பை அள்ளியே தீருவோம்'' என்று எச்சரித்து வெறியோடு அலைகிறது கேலக்சி கும்பல். இதற்காக உப்பளக் கொட்டகை மற்றும் மோட்டாரை தாங்களே சேதப்படுத்திவிட்டு, போராடி வரும் முன்னணியாளர்கள் 20 பேர் மீது பொய்ப் புகார் கொடுத்துச் சிறையிலடைத்துவிட்டு, உப்பை அள்ளிச் செல்ல முயற்சிக்கிறது. போலீசு எடுபிடிகளோ உப்பள வாயிலில் கண்ணும் கருத்துமாக காவல் காக்கின்றனர்.

 

இதுவொருபுறமிருக்க, மீனவர்களின் வாழ்வோடும், வளத்தோடும் பின்னிப் பிணைந்துள்ள கடலிலிருந்தும் கடற்கரையிலிருந்தும் மீனவர்களை வெளியேற்றும் சட்டத்தை மைய அரசு கொண்டு வரத் தீர்மானித்துள்ளது. ஏற்கெனவே எம்.எஸ்.சுவாமிநாதன் துரோகக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டுள்ள மைய அரசு மீனவர்களைக் கூண்டோடு அழிக்கும் ""கடற்கரை மேலாண்மை அறிவிப்பாணை 2007'' (இஙூM)யைக் கொண்டு வந்து செயல்படுத்தத் தீர்மானித்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால், விவசாயத்திலிருந்து விவசாயிகளையும், கடல் கடற்கரையிலிருந்து மீனவர்களையும் வெறியேற்றிவிட்டு உள்நாட்டுவெளிநாட்டு முதலாளிகளுக்கு இப்பகுதிகளைத் தாரை வார்க்கும் மிகப் பெரிய சதி வேகமாக அரங்கேறி வருகிறது.

 

தில்லைவிளாக மக்களின் போராட்டம், நிலத்திற்கும் வாழ்வுரிமைக்குமான போராட்டம் மட்டுமல்ல; இது தாராளமயம் தோற்றுவித்துள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம்; மறுகாலனியாக்கத்துக்கு எதிரான போராட்டம்; இந்தப் போராட்டம் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வந்துவிடக் கூடிய போராட்டமல்ல என்பதை அனுபவரீதியாக உணர்ந்துள்ள தில்லைவிளாக மக்கள் கடந்த 13 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

 

""என்னுடைய மண்தான் எனக்கு உயிர்மூச்சு'' என்று தனது சொத்துக்களை விற்று, முன்னணியில் நின்று போராடும் பெரியவர் சுப்பிரமணியம்; ""இந்த உப்பளங்களையும் இறால் பண்ணைகளையும் ஒழித்துக் கட்டும் வரை எனக்குத் திருமணம் இல்லை'' என்று 35 வயதை எட்டிய பிறகும் திருமணம் செய்து கொள்ளாமல் போராட்டத்தின் மீது மாளாக்காதல் கொண்டுள்ள இளைஞர் மெய்யப்பன்; பெற்றோருடன் கைக்குழந்தையாகப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்று, இன்று போராட்டத்தோடு வளர்ந்து வரும் புதிய தலைமுறையினரான சிறுவர் சிறுமிகள் என தில்லைவிளாக மக்களின் போராட்டம் முன்னுதாரணமிக்கதாகத் திகழ்கிறது. மே.வங்க நந்திகிராம மக்களின் போராட்ட வழியில், ஒரிசா பழங்குடியின மக்களின் போராட்ட வழியில் ஓட்டுக் கட்சிகளைப் புறக்கணித்து விட்டு தில்லைவிளாக மக்களின் உறுதியான போராட்டம் தொடர்கிறது. மறுகாலனிய ஆக்கிரமிப்புக்கு எதிராக சளையாது போராடிவரும் தில்லைவிளாக மக்களுக்கு ஆதரவாக நிற்பதும், போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்ல உதவுவதும் புரட்சிகர ஜனநாயக சக்திகளின் உடனடிக் கடமை; நம் கடமை.

 

பு.ஜ. செய்தியாளர்கள்