சாதி குறித்து டொக்டர் அருச்சுனாவின் வெள்ளாளியக் கண்ணோட்டம்
பனை வளம் குறித்தும் அதன் பயன்பாடு குறித்துமான "சாதிய வாதங்களை வைத்து என்.பி.பி பிழைப்பு நடத்துகிறதா?" என்ற தலைப்பில் டொக்டர் அருச்சுனா, சாதி பற்றி தனது கருத்தை முன்வைத்திருக்கின்றார். பனை அபிவிருத்திச் சபையின் புதிய தலைவர் சகாதேவனுக்கு எதிராக வெளியான ஒரு கட்டுரையைப் பகிர்ந்து தனது யூரியூப்பில் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
இங்கு அருச்சுனா விவாதத்துக்கு முன்வைத்த விடையங்கள், குறிப்பாக அவர் பகிர்ந்த கட்டுரையில் இல்லை. இந்த வகையில்
1. தவறணைகளை மீள அமைப்பது குறித்தும்
2. ஒடுக்கப்பட்ட சாதிகளின் வளர்ச்சிக்கு தவறணை உதவும் என்ற வாதம்
3. பனைகளை வெட்டும் அனுமதி பனை அபிவிருத்தி சபைக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து
இவை பற்றி எந்தக் குறிப்பும் அருச்சுனா பகிர்ந்த கட்டுரையில் இல்லை. இருந்த போதும்
மீளவும் தவறணை அமைப்பதற்கான அனுமதி, பனையை வெட்ட பனை அபிவிருத்தி சபையின் அதிகாரத்தை தரவேண்டும் என்ற கோரிக்கையை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த வகையில் அருச்சுனாவின் கண்ணோட்டம், இதற்காக அவர் கூறும் காரணங்களைக் கடந்து சரியானது.
1.பழையபடி தவறணை என்பது, முன்னோக்கிப் பயணிக்க வேண்டிய உற்பத்தி மற்றும் பயன்பாட்டு முறையை பின்னோக்கி கொண்டு வருவது. இருக்கின்ற அறிவைக்கொண்டு சமூகத்தையும், உற்பத்தியையும் பின்நோக்கி இழுப்பது. பழைய சாதிய சமூக உற்பத்தி - நுகர்வு வடிவத்துக்குள் சமூகத்தை மீளக் கொண்டு வருவது. சாதிய அடிப்படையில் தவறணை சாதியின் வளர்ச்சிக்கு உதவும் என்று கூறியிருந்தால், பொருளாதார வாதத்தை முன்வைத்து சாதியைப் பின்னோக்கி நகர்த்துவதாகும். இதைப்பற்றி விரிவாக பலவற்றை விவாதிக்க முடியும்.