Language Selection

புதிய ஜனநாயகம் 2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

02_2006.jpgகடந்த ஜனவரி 2ஆம் தேதியன்று, தமது நிலங்களில் டாடா உருக்கு ஆலைக்கான சுற்றுச்சுவர் கட்டப்படுவதை எதிர்த்து திரண்டமைக்காக, ஒரிசா மாநிலத்தின் ஜஜ்பூர் மாவட்டத்திலுள்ள கலிங்கா நகர் பகுதியின் பழங்குடியினர் 13 வயது சிறுவனும், மூன்று பெண்களும் உட்பட 12 பேர், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ""இரண்டாவது ஜாலியன் வாலாபாக்'' எனத்தக்க வகையில், போராடிய மக்களை அரசு நிர்வாகமும், டாடா நிறுவனமும் திட்டமிட்டு படுகொலை செய்துள்ளன. கொலைவெறியாட்டத்தின் உச்ச கட்டமாய், காயம்பட்ட ஆறு பேரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, அவர்களுடைய கரங்களை வெட்டிப் பிணங்களாக திருப்பி அளித்திருக்கிறது, போலீசு.

 நாடு முழுவதும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ள இச்சம்பவத்தின் விளைவாக, ஒரிசா பழங்குடியினர் மீதான எண்ணிலடங்கா ஒடுக்குமுறைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

 

பழங்குடியினர் மீதான அரசு போலீசு வன்முறைக்கும், ஒடுக்குதலுக்கும் ஏராளமான சாட்சியங்கள் நவீன வரலாறு நெடுகப் படிந்துள்ளது. குறிப்பாக, பழங்குடியினரின் நிலங்களை ஏய்த்துப் பிடுங்குவதையும், அதற்கு எதிராகக் கிளர்ந்தெழுபவர்களைக் கொடூரமாக அடக்கிப் "பாடம் புகட்டுவதையும்' ஆளும் வர்க்கம் தனது அதிகாரபூர்வக் கொள்கையாகவே கொண்டிருக்கிறது. மிகச் சமீபத்தில், கேரள மாநிலத்தில் தமது நில உரிமைகளுக்காகப் போராடிய வயநாடு மாவட்ட பழங்குடியினர் மீதும் இத்தகைய திட்டமிடப்பட்ட கொலைவெறித் தாக்குதல் ஏவி விடப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. தமது நிலங்களையும், வாழ்க்கையையும் பறிகொடுத்த ஒரிசா பழங்குடி மக்கள் விழிப்புற்று, ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒன்று திரண்டு போராடி வரும் பின்னணியையும், ஆளும் வர்க்கத்தின் தொடர் அநீதிகளையும், அரசும், ஊடகங்களும் அங்கலாய்க்கும் அந்நிய முதலீட்டிற்கான விலை என்னவென்பதையும் அறிந்து கொள்வது அவசியமாயிருக்கிறது.

 

இரும்புத் தாது வளம் மிகுந்த 27 கிராம பஞ்சாயத்துக்களை உள்ளடக்கிய கலிங்கா நகர் வட்டாரத்தில், ஏறத்தாழ ஒரு இலட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மை மக்கள் வறிய பழங்குடியினங்களைச் சார்ந்தவர்கள். "சுதந்திர'த்திற்குப் பின்னும் வாய்ப்பு வசதிகளற்று மக்கள் வாழும் இப்பகுதியில், இதுவரை ஒரே ஒரு உயர்நிலைப் பள்ளிக்கூடமும், மருத்துவமனையும்தான் கட்டப்பட்டுள்ளன. இப்பகுதியின் இரும்புத்தாது வளத்தை குறிவைத்த ஆளும் வர்க்கம், கலிங்காநகர் தொழிற்பேட்டையை தொடங்கத் திட்டமிட்டது. தொடக்கத்தில் சில பொதுத்துறை உருக்கு ஆலைகளும், பின்னர் புதிய பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில், அந்நிய நிறுவனங்களும் தொடங்கப்பட்டன.

 

இதனையொட்டி, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, உரிய நிலக்கொள்முதல் தொகை, மறுவாழ்விடம், பள்ளி மருத்துவ வசதிகள் உள்ளிட்ட உத்தரவாதங்களோடு, பழங்குடியினரின் நிலங்களை அரசு கையகப்படுத்தத் தொடங்கியது. 1997இல் முதன்முதலில் இத்தொழிற்பேட்டையில் தொடங்கப்பட்ட நிலாச்சல் தொழிற்சாலை முதலாக, பல தொழிற்சாலைகளும் தொடங்கப்பட்டு, தாது வளங்களைத் தனியார் முதலாளிகள் அபகரிக்கத் தொடங்கினர்.

 

ஆனால், தனது வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விட்ட அரசு, அடிமாட்டுத் தொகையை வீசியெறிந்து மக்களை அப்புறப்படுத்தி வருகிறது. ஒரு ஏக்கருக்கு 37,000 ரூபாயை வழங்கிய அரசு, தொழில் தொடங்கிய தனியார் நிறுவனங்களிடம் ஏக்கர் ரூ.3.35 லட்சம் என விற்றுக் கொள்ளை இலாபம் அடித்தது. மேலும், "பட்டா' உள்ளவர்களுக்கு மட்டுமே தொகை வழங்கப்படும் என "சட்டம்' பேசியது.

 

1928க்குப் பிறகு, ஒருபோதும் அரசு இப்பகுதியில் நிலத்தீர்வை செய்யாத நிலையில், அனுபோக உரிமையாக மட்டுமே தமது நிலங்களில் பயிரிட்டு வந்த பழங்குடியினர், அரசின் நயவஞ்சகத்திற்கு முன் செய்வதறியாது நின்றனர். இதிலுள்ள விநோதம் என்னவென்றால், இப்பழங்குடியினர் "வாக்காளர்களாக'ப் பதிவு செய்யப்பட்டு இங்கு தேர்தல்கள் நடந்து வந்துள்ளன. இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்துகள் உள்ளன. ஆனால், அப்பஞ்சாயத்து நிலங்கள் என்று கூட எதுவும் வரையறுக்கப்படவில்லை. இவ்வாறு அரசால் கழுத்தறுக்கப்பட்டு பழங்குடியினர் அப்புறப்படுத்தப்பட்ட வரலாறு துயரம் தோய்ந்த ஒன்றாகும்.

 

உதாரணமாக, நிலாச்சல் ஆலைக்காக மட்டும் அப்புறப்படுத்தப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 634. இக்குடும்பங்களுக்கு தங்கள் கிராமங்களிலிருந்து 12 கி.மீ. தொலைவில் துண்டு நிலம் அளிக்கப்பட்டது. அதைக் கொண்டு விவசாயம் செய்ய இயலாத நிலையில், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்று வாய்ப்பந்தலிட்ட அரசு, நிலம் கொடுத்த எவருக்கும் வேலை வழங்காத நிலையில், தமது நிலங்களையும், வாழ்விடங்களையும் இழந்து, இம்மக்கள் நிர்க்கதியாக கைவிடப்பட்டனர். பல குடும்பங்கள் பிழைப்பு தேடி வேறு இடங்களுக்கு ஓடின. ஒட்டுமொத்தத்தில் பழங்குடியினரில் பல நூறு குடும்பங்களின் வாழ்வு கேட்பாரற்று அழிந்தது. இது போன்று ஒரிசாவின் பல்வேறு மாவட்டங்களிலும், தனியார் மற்றும் அரசு உருக்கு ஆலைகளுக்காக, பழங்குடி மக்கள் தமது வாழ்விடங்களிலிருந்து பிடுங்கி எறியப்பட்டு, சொந்த மண்ணிலேயே அகதிகளாக விரட்டப்பட்டனர்.

 

இவ்வாறு கடந்த பத்தாண்டுகளாக ஆயிரக்கணக்கான பழங்குடியினர் அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டனர். இத்தகைய நிகழ்வுகளின் விளைவாக, கொதிப்புற்ற பழங்குடி மக்கள் அரசின் நிலக் கையகப்படுத்துதலுக்கு எதிராகவும், இழந்த நிலங்களுக்கு உரிய இழப்பீடு கோரியும், மறுவாழ்வு வாய்ப்புகளுக்காகவும், தமக்கான அமைப்புகளை உருவாக்கி, போராடத் தொடங்கினர்.

 

கடந்த மே 9ஆம் தேதியன்று ""மகாராஷ்டிரா சீம்லெஸ்'' எனும் உருக்கு ஆலைக்கான "பூமி பூஜை'யின்போது பழங்குடி மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், மாநில நிதி அமைச்சர் பிரபுல்லா கதே "முன்னிலையில்' போலீசு காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தியது. இரவு நேரத்தில் பழங்குடியினர் குடியிருப்புகளில் "தேடுதல் வேட்டை' நடத்தியது. 25 பெண்கள், 14 குழந்தைகள் உட்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மனித உரிமை ஆணையம் கூக்குரல் எழுப்பியும் அரசு அசைந்து கொடுக்கவில்லை.

 

இந்நிலையில், கலிங்கா நகர் தொழிற்பேட்டை என்று அரசு வரையறுத்த நிலங்களின் அடிப்படையில், டாடா நிறுவனத்தின் உருக்கு ஆலைக்காக மட்டும் 2,000 ஏக்கர் பரப்பளவில் 9 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டன. இவ்வாறு அப்புறப்படுத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்ட மக்களுக்கான மறுவாழ்விடங்களோ, வேலை உத்திரவாதங்களோ கூட அறிவிக்கப்படவில்லை. கடந்த அக்டோபரிலேயே ஆலை கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு ஆலை சுற்றுச்சுவர் கட்ட முயற்சிக்கப்பட்டது. மக்கள் உறுதியோடு எதிர்த்துப் போராடத் தொடங்கியதன் விளைவாக, சுற்றுச்சுவர் எழுப்பும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, கட்டுமானப் பணிகள் மெதுவாக நடந்தேறத் தொடங்கியது. இதனையொட்டி மக்கள் மிகப்பெரிய அளவில் அணிதிரண்டு போராட ஆயத்தமாகி வருவதை உணர்ந்த டாடா நிறுவனமும் அரசும் ஆலையைக் கட்டியே தீருவதென முடிவெடுத்தன.

 

ஜனவரி 2ஆம் தேதியன்று, ஆயுதமேந்திய 300 போலீசாரடங்கிய 6 படையணிகள் களமிறக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர், போலீசு உயர் அதிகாரிகள் தலைமையில், ஆலை சுற்றுச்சுவர் கட்டுமானம் தொடங்கப்பட்டது. இதனை அறிந்த பழங்குடியினர் அங்கே அணிதிரண்டனர். தமது எதிர்ப்பை தெரிவிக்கவும் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தவும், தம்மில் நால்வரைத் தேர்ந்தெடுத்து அனுப்பினர். நால்வரும் சுற்றுச்சுவருக்காகத் தோண்டப்பட்டிருந்த குழியை நெருங்கியவுடன், யாரும் எதிர்பாராத வகையில் குழியில் பதிக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் போலீசாரால் வெடிக்கப்பட்டன. அதிர்ச்சியில் நால்வரும் அக்குழியில் விழ, சரமாரியாக கண்ணீர்ப் புகைக் குண்டுகளும், ரப்பர் தோட்டாக்களும் மக்களைத் தாக்கின. வெகுண்டெழுந்த மக்கள், கற்களால் போலீசைத் திருப்பித் தாக்கத் தொடங்கினர். மோதலில் ஒரு போலீசு மக்களால் கொல்லப்பட்டான். உடனடியாக, மக்கள் மீது ஈவிரக்கமற்ற மூர்க்கத்தனமான துப்பாக்கிச் சூடு கட்டவிழ்த்து விடப்பட்டது. வெறித்தனமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில், நிராயுதபாணியான மக்கள் பிணங்களாகச் சரிந்து விழுந்தனர். பதறி ஓடிய மக்களை விரட்டி விரட்டி சுட்ட போலீசு, காயம்பட்டவர்களை இரத்தம் சொட்டச் சொட்ட இழுத்துச் சென்றது.

 

மாவட்டம் முழுவதும் பதற்றம் தொற்ற, ஆவேசமுற்ற மக்கள் கலிங்கா நகர் வட்டாரத்தின் அனைத்து நெடுஞ்சாலைகளையும் மறித்தனர். வயலில் இறைந்து கிடந்த நான்கு பிணங்களையும் சாலையின் நடுவில் வைத்து, தொடர் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். டாடா உருக்கு ஆலை கட்டுமானப் பணிகளை ஒட்டுமொத்தமாக நிறுத்தவும், இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கவும், இதுவரை தாம் இழந்த நிலங்களுக்கெல்லாம் நட்டஈடு வழங்கவுமாய் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வரலாறு காணாத வகையில் இரவு பகலாக சாலை மறியல் போராட்டம் தொடர்ந்தது. மாவட்டத்தின் அனைத்துப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. போலீசு, அரசு அதிகாரிகள் எவரும் போராட்டப் பகுதிகளுக்குள் நுழைய முடியவில்லை.

 

இந்நிலையில் ஜனவரி 4ஆம் தேதியன்று, காயம்பட்டு மருத்துவமனையில் போலீசாரால் சேர்க்கப்பட்டவர்கள் பிணங்களாக ஒப்படைக்கப்பட்டார்கள். அவற்றுள் ஐவரின் உடல்களில் கரங்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. அவர்கள் துப்பாக்கிச் சூட்டில் இறக்கவில்லை, போலீசாரால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்த மக்கள் கொதித்தெழுந்தனர். ஆனால், கைரேகைகளுக்காகவே கரங்கள் வெட்டப்பட்டதாக பச்சையாகப் புளுகியது போலீசு. முன்னாள் போலீசு அதிகாரிகளே இப்பொய்யை ஏற்க மறுக்கின்றனர். 12 பிணங்களோடும் போராட்டம் ஆவேசத்தோடு தொடர்ந்தது. பின்னர், சில சமூக இயக்கங்களின் தலைவர்களின் ஆலோசனையின் பேரில், அன்று மதியம் அவ்வுடல்கள் எரியூட்டப்பட்டன.

 

அன்று முதல் பழங்குடியினரின் போராட்டம் தீர்மானகரமான கட்டத்தை நோக்கித் திரும்பியுள்ளது. கலிங்காநகர் மட்டுமின்றி, ஆங்குல், கோரபுட், சுந்தர்கர், ஜகத்சிங்பூர், பாரதீப் ஆகிய இடங்களிலும் பழங்குடி மக்களின் போராட்டங்கள் வெடித்தன. இன்றளவும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

அரசும், தொழில் முதலைகளும் எதிர்பார்த்ததற்கு மாறாக, கொலைவெறியாட்டத்திற்குப் பிறகு, நசுக்கப்பட்ட மக்கள் அஞ்சி ஒடுங்குவதற்குப் பதிலாக, ஆர்ப்பரித்து எழுந்துள்ளதைக் கண்டு ஆளும் வர்க்கம் அச்சத்தில் உறைந்து போயுள்ளது. வழக்கம் போல் விசாரணைக் கமிசன், நீதி விசாரணை, மாவட்ட ஆட்சியர் போலீசு உயர் அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம், இழப்பீடு என நவீன் பட்நாயக் அரசு நாடகமாடியதை மக்கள் ஒதுக்கிப் புறந்தள்ளி விட்டனர்.

 

பழங்குடியினரின் போர்க்குணமிக்க எழுச்சியால் கிலி கண்டு போயுள்ள அரசு, தற்போது பழங்குடியினர் மறுவாழ்வுக்கான நிவாரணங்களை "ஆய்வு' செய்ய அமைச்சர்கள் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தியாவிலேயே அதிகமான அந்நிய முதலீடாக 51,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ள ""போஸ்கோ'' நிறுவனம் தனது உருக்காலையைத் தொடங்குவதற்கு ஐயம் தெரிவித்துள்ளது. கலிங்கா நகரில் 16,000 கோடி முதலீட்டில் ஆலை தொடங்கத் திட்டமிட்டிருந்த ""டிஸ்கோ'' நிறுவனம் தனது நிர்மாணப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

 

சோனியா காந்தி நேரில் சென்று ஆறுதல் சொல்லியும், ஒரிசாவை ஆளும் நவீன் பட்நாயக் அரசை காங்கிரசு மற்றும் இடதுசாரிகள் கண்டித்தும், ஆளும் கூட்டணியிலுள்ள பா.ஜ.க. அமைச்சர்களே அரசை எதிர்க்கவுமாய் ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகள் இச்சம்பவத்தைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயன்று வருகின்றன.

 

ஆனால், இவற்றையெல்லாம் மீறி பழங்குடியினரை ஒருங்கிணைக்கும் "விஸ்தாபன் விரோதி மன்ச்' என்ற அமைப்பின் தலைமையில் போராட்டத் தீ, ஒரிய மாநிலமெங்கும் பற்றிப் படர்ந்து வருகிறது. இவ்வமைப்பின் தலைவர் ரபீந்திர ஜரகா கடந்த அக்டோபர் முதலாக பொய்க் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போராட்டத்தைத் தொடரும் மக்கள், கடந்த காலங்களில் போலீசு படைகளின் அடக்குமுறைகளை நினைவில் கொண்டு, மாவட்டத்தின் அனைத்துப் போக்குவரத்தையும் துண்டித்துள்ளனர். இரு சக்கர வாகனங்கள் மட்டுமே நுழையும் வண்ணம் பாதைகள் விட்டு வைக்கப்பட்டுள்ளது. "வளர்ச்சி' என்ற பெயரில் மக்களின் இரத்தத்தில் அதிகார வர்க்கமும், முதலாளிகளும் எழுப்ப முயலும் மாளிகையின் அஸ்திவாரத்தை அசைத்து, உறுதியான அடி எடுத்து வைத்திருக்கிறார்கள் ஒரிய பழங்குடி மக்கள்.

 

ஈவிரக்கமின்றி "தனியார்மயம் தாராளமயம் உலகமயம்' என்ற பெயரில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய பொருளாதாரக் கொள்கையை எதிர்த்துப் போராடும் மக்களுக்கு அரசு தரும் பதில், குரல் வளை நெறிக்கும் அடக்குமுறையாகவே உள்ளது. ஹோண்டா தொழிலாளர்கள் மீதும், ஒரியப் பழங்குடியினர் மீதும் நிகழ்த்தப்பட்ட வன்முறை அறிவிப்பது இதுதான். உரிமைகளின் பெயரால் போராட முற்பட்டால், அந்நிய முதலீட்டுக்கு கடுகளவேனும் இன்னல் விளைந்தால், வேட்டை நாய்கள் அவிழ்த்து விடப்படும். இத்தகைய சவாலுக்கு முன்பாக, நாடெங்கிலுலுள்ள புரட்சிகர, ஜனநாயக, ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள் இப்போராட்டத்திற்கான ஆதரவை தெரிவிப்பதும், தமது போராட்டங்களை கூர்மைப்படுத்தி விரைவதும்தான், ஒரிய மக்களின் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்வதற்கும், நிரந்தர விடுதலைக்கும் வழிவகுக்கும்.

 

மு பால்ராஜ்